பிழையின் படைப்பூக்கம்

RR-01

பிழை [சிறுகதை] 1

பிழை [சிறுகதை] -2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

என் வாசிப்பில் உங்கள் கதைகளில் என்னை மிகவும் ஈர்த்த கதைகளில் ஒன்று பிழை. பலகோணங்களில் அதை நான் வாசித்திருக்கிறேன். ஏனென்றால் நான் என் வாழ்க்கையிலே அனுபவித்த ஒன்று. ஒருமுறை அல்ல நான்குமுறை. அதாவது பிழை என்பதில் இருக்கும் high creativity. அது எங்கிருந்து வருகிறது? நான் டிசைனிங் துறையிலே வேலைசெய்கிறேன். ஒவ்வொரு நாளும் கிரியேட்டிவாக வேலைசெய்தாகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறேன். அதற்காகவே என் ஆபிஸ் வீடு சுற்றம் எல்லாமே அமைத்திருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஒரு கிரியேட்டிவ் ஐடியா இல்லாமல் அன்றையநாளை கடந்து சென்றதுமில்லை. ஆனால் என்ன ஆச்சரியமென்றால் நான் எப்படி இது நடந்த்து என்று ஆச்சரியப்பட்டு நினைத்துப்பார்க்கும் பெரிய விஷயம் எல்லாமே கைப்பிழையாகவும் கவனப்பிழையாகவும் நடந்ததுதான்.

அப்படியென்றால் பிழை என்றால் என்ன? இந்தப்பிரபஞ்சமே ஒரு பெரிய பிழைதான் என்று அறிவியல் சொல்லும். உயிரின் தோற்றமே ஒரு பிழைதான். பிழைகள் வழியாகத்தான் உச்சகட்டப் படைப்பு நிகழமுடியுமா? அப்படியென்றால் நாம் செய்யவேண்டியது என்ன? சரிகளை செய்துகொண்டே இருக்கவேண்டும். அசந்து மறந்து அதிலே பிழை நிகழவிடவேண்டும். தெரிந்துவிட்ட பிழை பிழைதான். நம்மை மீறி பிழை நிகழவேண்டும். அந்த உச்சகட்ட பிழை மட்டும் நிகழவேண்டும் என்றால் மற்ற பிழைகளை நாம் ஃபில்டர் செய்துவிடவேண்டும். அதற்குத்தான் நாம் பிழைகளைச் சரிபார்க்கிறோம்.பிழை நம்மைக் கடந்து செல்கிறது. அதைக்கொண்டுதான் அடுத்தகட்ட கிரியேட்டிவிட்டிக்கு நாம் செல்கிறோம்.

பிழைகளை நாம் கடவுள்செயலாக நினைக்கலாம். அல்லது நம் சப்கான்ஷியஸ் வெளிப்படுவதாக நினைக்கலாம். அல்லது ஏதோ ஒன்று தன்னை வெளிப்படுத்துவதாக நினைக்கலாம். ஆனால் அது வெளிப்படும்போது ஒன்று தெரிகிறது. அது வெளிப்பட்டே தீரும். நாம் அவ்வளவு காத்து ஃபில்டர் செய்தாலும் அது கடந்துவிடுகிறது. அதில் ஒரு hidden target ஒளிந்திருக்கிறது. அதை நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. உயிர் இங்கே பிழையால் உருவாகியிருக்கலாம். ஆனால் அது உருவாகியே தீரும். நான் இதையெல்லாம் உணர்ந்திருந்தேன். ஆனால் பிழை கதைதான் இவ்வளவு யோசிக்க வைத்தது.

அதை வாசித்தபோது முதலில் ஒரு வியப்பு. அதன்பிறகு இவ்வளவு அடிப்படையான விஷயம் இதை ஏன் இதற்குமுன் பலர் எழுதவில்லை என்ற ஆச்சரியம். பல கதைகள் ஞாபகம் வந்தன. அவை பிழையிலுள்ள அபத்தத்தையும் அதைத்தொடர்ந்து உருவாகும் பல்வேறு நிகழ்ச்சிகளையும்தான் சொல்கின்றன. பிழை என்பதில் வெளிப்படும் கிரியேட்டிவிட்டியைச் சொல்லவில்லை. பிழை கதையில் அந்தப்பிழை எப்படி மெய்யான ராமனை வெளியே கொண்டுவருகிறது என்று பார்த்தேன். பலமுறை வாசித்தேன். அது நிகழ்கிறது. பிழைதான், ஆனால் அதைவிட சிறப்பாக நிகழமுடியாது. அந்தக்கதையை வெறும் கற்பனையில் எழுதியிருக்கலாம். ஆனால் உண்மையான தரவுகளுடன் எழுதியதில்தான் மெய்யான கிரியேட்டிவிட்டி உள்ளது. அந்த பிழையை நீங்கள் கண்டுபிடித்த தருணம்தான் அந்த கிரியேட்டிவிட்டிக்கு உரியது. அந்த டாக்குமெண்டரித்தன்மைதான் அது  ‘கதை’ அல்ல என்று காட்டுவது.

நான் அந்தக்கணத்தையும் அந்தவிஷயத்தையும் இங்கே என் மும்பை நண்பர்களிடம் சொன்னேன். பெரும்பாலானவர்கள் ஆச்சரியப்பட்டு அதை அவர்களும் உணர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இதேபோன்ற கதைகள் எழுதப்பட்டுள்ளனவா, இந்தக்கதை எப்படி வாசிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன். என்ன வருத்தமென்றால் இந்தநுட்பத்தை உணர்ந்து எழுதப்பட்ட கடிதங்களோ விமர்சனங்களோ உங்கள் இணையதளத்துக்கு வெளியே ஒன்றுகூட இல்லை.

அதேசமயம் நம்பமுடியாத அளவுக்கு மொக்கையான சில விமர்சன்ங்களைப் பார்த்தேன். ஒருவர் ராமர் திரையில் தோன்றியதும் காந்தி கைகூப்பினார் என்று கதாசிரியர் சொல்கிறார் , அதுதான் கதையின்மையம் என்று புரிந்துகொண்டு காந்தியைப்புனிதப்படுத்த இந்தக்கதை எழுதப்பட்டுள்ளது என்று எழுதியிருந்தார். பிழை என்ற தலைப்புகூட அவருக்குப் புரியவில்லை. வெண்கடல் தொகுதியில் உள்ள ஒரு கதையிலும் கதையின் உண்மையான நுட்பங்கள், கதைக்குள் உள்ள விடுபட்ட ஆழம், அவருக்குத் தெரியவில்லை. ஆனால் இக்கதைகளில் வாசகனுக்கு வாசிக்க இடமில்லாமல் இருக்கிறது என்றும் சொல்கிறார். அதாவது அவருக்கு முன்னாடியே  தெரிந்த ஒருவிஷயம் கதைக்குள் ஒளிக்கப்படவில்லை என்று சொல்கிறார் என நினைக்கிறேன். உண்மையைச் சொல்கிறேனே, தலையில் ஓங்கி மடேரென்று அறைந்துகொண்டேன். இவர் தன்னை எழுத்தாளர் என்றும் சொல்லிக்கொள்கிறார். ஆனால் கதை எழுதுபவனுக்கும் கதையில் செயல்படும் subjectivity of author க்கும் வேறுபாடு தெரியவில்லை.

மீண்டும் பிழை கதையை வாசித்தபோது இதை எவரை நம்பி எழுதுகிறீர்கள், யார் இந்தக்கதைகளின் அடியிலுள்ள தேடுதலையும் கண்டுபிடிப்பையும் வாசிப்பார்கள் என்று நம்புகிறீர்கள் என்று எண்ணி ஆச்சரியப்பட்டேன். ஆகவேதான் எழுதலாமென்று எண்ணினேன். எங்கோ சிலர் இதையும் வாசிக்கிறார்கள் என நீங்கள் அறியவேண்டும் என்று நினைத்தேன். நன்றி

எஸ். ஆர்.பார்த்திபன்

***

அன்புள்ள பார்த்திபன்

ஏதேனும் கலைத்துறையில் அதன் முழுமைக்காக கண்விழித்து வேலைசெய்தவர்களால் மிக எளிதாகப் பிழை கதைக்குள் செல்லமுடியும். அது வெளிவந்த காலத்தில் அக்கதையை வியந்து பேசியவர்களில் ஒருவர் மணி ரத்னம். பொதுவாக நல்ல கதைகளில் வாசகன் அறியவேண்டிய அனைத்தும் சொல்லப்பட்டிருக்கும். தானாக உணரவேண்டிய ஒன்றுதான் வாசக இடைவெளியாக விடப்பட்டிருக்கும். வாசக இடைவெளியை நிரப்புவது என்பது கதையின் நிகழ்தகவுகளைப் பற்றி பலகோணங்களில் யோசிப்பது அல்ல. அக்கதையின் தர்க்கம் சென்று தொடாத ஒன்றாக எஞ்சுவதை நோக்கிச் செல்வது. அனைத்துத் தர்க்கத்தையும் சொல்லி அந்த இடத்தை மட்டுமே கதை சொல்லாமல் விட்டிருக்கும். பிழை கதையின் மையம் என்பது அந்தச் ’சொல்லமுடியாத’ இடம்தான். அதையே நீங்களும் சொல்ல முயல்கிறீர்கள். அந்த நுண்ணுணர்வு கொண்டவர்களால்தான் இலக்கியப்படைப்புகலை வாசிக்க முடியும். அரசியல்வாசிப்புகள், சமூகவியல் வாசிப்புகள் அங்கே செல்லவியலாது. நுண்ணுணர்வுகொண்ட வாசகர்களுக்காகவே கதைகள் எழுதப்படுகின்றன. அவர்கள் என்றுமிருப்பார்கள்.

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40
அடுத்த கட்டுரைஇலக்கிய வம்பர்கள்