எம்.எஸ். அலையும் நினைவுகள்-2

ms

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1

2. பூனையின் வழிகள்

எம்.எஸ் பூனையைப்போன்றவர் என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. பூனை நம் வீட்டிலேயே வளர்ந்தாலும் கூட அதன் வழிகள் நமக்கு தெரிந்திருப்பதில்லை. முற்றிலும் எதிர்பாராத இடத்தில் நம் வீட்டுப்பூனையை நம்மால் பார்க்க முடியும். அது அளிக்கும் துணுக்குறல் நம் உடனிருக்கும் அந்த எளிய அழகிய இனிய விலங்கு நாமறியாத பல ஆழத்து அடுக்குகள் கொண்டது என்ற எண்ணத்தை உருவாக்கும். எம்.எஸ்.குறித்து நாம் சொல்வதெல்லாம் நமக்கு அவர் மிகக் கவனமாக அளந்து அளித்த எம்.எஸ் பற்றித்தான். அவரை நாம் இன்னமும் கூட முற்றிலும் புதிய ஆளுமையாகக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

எம்.எஸ் எனக்குப்பழக்கமாகி ஏழெட்டு ஆண்டுகளுக்குப்பின் ஒருமுறை என் அப்பாவின் படத்தை அவர் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. “அய்யோ, இது தங்கப்பன் பிள்ளைல்லா? நம்ம ஃப்ரண்டாக்குமே?” என்றார். என் அப்பா எம்.எஸின் அணுக்கமான நண்பர். அவரும் பத்திரப்பதிவு நிலையத்திலேயே பணியாற்றினார். அப்பா பெயர் எம்.எஸ் மனதில் அவருடைய விளிப்பெயராகிய தங்கப்பன்பிள்ளை என்று பதிவாகியிருந்தது. பாகுலேயன்பிள்ளை என்பது மங்கலாக நினைவிருந்தது. அவர் என்னிடம் அவருடைய நண்பர்களைப்பற்றி சொல்வதில்லை என்பதனால் நண்பரின் மகன் நான் என்பது தெரியாமலேயே இருந்தது. தந்தையின் நண்பரே தனக்கும் நண்பராக தற்செயலாக அமைவது கதைகளில் வரும் திருப்பம்போல் இருப்பதாக அருண்மொழி சொன்னாள்

எம்.எஸ் பிறந்த திருப்பதிசாரம் அவருடைய ஆளுமையில் ஒரு ஆழமான பாதிப்பை உருவாக்கியிருக்கிறது என்று தோன்றியது. எழுத்தாளர் கிருத்திகா திருப்பதிசாரத்தில் பிறந்தவர் வாசவேஸ்வரம் என்ற பெயரில் அவர் சித்தரித்திருக்கும் அந்த தென்குமரி மாவட்ட கிராமம் திருப்பதிசாரமே என்று கொள்ள இடமிருக்கிறது. வாசவேஸ்வரம் ஒரு தேங்கிப்போன கோயில்மையச் சிற்றூர். கிருத்திகா காட்டுவது அக்ரஹாரத்து வாழ்க்கையை ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவு கொண்டு ஒருவரையொருவர் வேவு பார்த்து ஒருவருக்கொருவர் உதவி வாழும் ஒரு எறும்புப்புற்று வாழ்க்கை அது. ஏறத்தாழ அத்தகைய வாழ்க்கைதான் அன்று அங்கே இருந்திருக்கும்.

திருவாழிமார்பன் [ஸ்ரீனிவாசனின் தமிழ்ப்பெயர்] தொன்மையான ஆலயம். அதற்கிணையான ஊர். நம்மாழ்வாரின் அன்னை பிறந்த ஊர் என்பது தொன்மம். இவ்வூரால் இப்பகுதியில் திருவாழி என்ற பெயர் முன்பு நிறைய இருந்தது. ஊர் நடுவே  இருக்கும் எப்போதும் நீர் வற்றாத பெரிய குளம். கோயிலையும் குளத்தையும் சுற்றி அமைந்த தெருக்கள். எம்.எஸ்ஸின் வீடு மிகப்பழமையானது தாழ்ந்த ஓட்டுக்கூரையும் உள் முற்றமும் கொண்டது. நடுவில் அவ்வப்போது வெளியில் வாழ்ந்தாலும் கூட அவர் வாழ்க்கையின் பெரும்பகுதி அங்குதான் நிகழ்ந்தது. அவர் மறைந்ததும் அவருடைய பூர்விக வீட்டில்தான்.

மா.அரங்கநாதன்

எம்.எஸ்ஸின் தனிவாழ்க்கையைப்பற்றி அதிகமாக எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் அதைப்பற்றிப் பேசியதே இல்லை அதுவும் அவருடைய தலைமுறைகளின் இயல்புகளில் ஒன்று. என்னுடைய வாழ்க்கையின் அனைத்து செய்திகளையும் அவரிடம் நான் சொல்லியிருக்கிறேன் ஆனால்  என்னிடம் என்ன சொல்லவெண்டுமென்பதை அவர்தான் முடிவு செய்வார். மிகச் சுருக்கமாக, மிக அரிதாக ஆங்காங்கே அவர் சொன்ன செய்திகளைக்கொண்டு மட்டுமே அவர் தனிவாழ்க்கையை அறிந்திருக்கிறேன்.

எம்.எஸின் தம்பிதான் புகழ்பெற்ற எழுத்தாளரான மா.அரங்கநாதன். ஆனால் இளமையிலேயே அவருடன் எம்.எஸுக்கு உறவு கசந்துவிட்டது. எம்.எஸ் மா.அரங்கநாதனுடன் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மா.அரங்கநாதன் மறைந்தபோதுகூட செல்லவில்லை.மா. அரங்கநாதன் முதிய வயதில், பணி ஓய்வுபெற்றபின்னர்தான், எழுத ஆரம்பித்தார். முதல்முறையாக மா.அரங்கநாதனின் பொருளின்பொருள் கவிதை என்ற [கொஞ்சம் அசட்டுத்தனமான] விமர்சனநூலை நான் வாசித்து அதைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் பேசியபோது அவர்தான் அவர் எம்.எஸின் தம்பி என்று சொன்னார். ஆச்சரியத்துடன் நான் அதைப்பற்றி எம்.எஸிடம் கேட்டபோது “அதைப்பத்தி பேசவேண்டாம்” என்று சொன்னார். பிறகு நான் ஒரு சொல்லும் பேசவில்லை.

திருப்பதிச்சாரம் குளம்

மா.அரங்கநாதன் குறுகிய காலத்திற்குள் தனக்கென ஓர் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். கதைகளின் களம் திருப்பதிச்சாரம்தான். எம்.எஸ்ஸிடம் பலகதைகளைப்பற்றி பேசவேண்டுமென நினைப்பேன்.எம்.எஸ் அதை விரும்பமாட்டார் என அறிந்திருந்தேன். ஒரே ஒருமுறை மா.அரங்கநாதனின் ஒருகதைபற்றி அவரிடம் கேட்டேன். ராமர் வந்து தூங்குபவனை எழுப்புவது பற்றிய கதை. எதிர்பாராமல் புன்னகைத்தபடி “நல்ல கதை, இல்ல?” என்றார். அவருக்கு மா.அரங்கநாதன் நல்ல சிறுகதையாசிரியர் என்ற எண்ணம் இருந்தது என்பதை பின்னர் பலமுறை குறிப்பாலுணர்ந்துள்ளேன். ஆனால் எம்.எஸ். அதைச் பிறகெப்போதுமே சொல்லவில்லை.

எம்.எஸ். இன்னொரு திருப்பதிச்சார எழுத்தாளரான கிருத்திகாவைப்பற்றியும் உயர்ந்த கருத்து கொண்டிருக்கவில்லை. “மனசிலே ஈடுபாடில்லாம சும்மா எழுதப்பிடாது” என்று என்னிடம் வாசவேஸ்வரம் பற்றிச் சொன்னார். “திருப்பதிச்சாரம்கிற ஊர விட அவ வாசித்த வேற அக்ரஹாரங்களோட சாயலும் அவளோட கசப்புகளும்தான் அதிலே இருக்கு. அதுக்கு பெரிய மதிப்பு எப்பவுமே வரப்போறதில்லை” நான் “ஏன்?” என்றேன். “எந்த ஒருவிஷயத்தையும் வெளிய நின்னு மேலோட்டமா விமர்சனம் பண்றதுக்கு இலக்கியத்திலே எடமில்லை. உள்ளுண்மைன்னு ஒண்ணு உண்டு. உள்ளபோயி மானசீகமா வாழ்ந்தா மட்டுமே கெடைக்கிறது. அத எழுதணும்”என்றார் எம்.எஸ்.

எம்.எஸ் மிக இளமையிலேயே அவர் மணம் புரிந்துகொண்டார். அவருடைய மனைவிக்குச் சிறு செவிச்சிக்கல் உண்டு. அவருடைய ஒரே மகன் கற்றல் குறைபாடும் சிறு நரம்புச்சிக்கலும் கொண்டவர். மகனை அரசு ஊழியத்திற்கு எம்.எஸ் மிகுந்த சிரமத்திற்கிடையே கொண்டு வந்தார். கடைநிலை ஊழியராக பணியாற்றியவர் வலிப்பு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அதனால் சிறுநீரக சிக்கல்கள் உருவாகி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார்.

Krithika
கிருத்திகா

மகனின் மறைவு எம்.எஸ்ஸுக்கு ஒரு பெரிய துயரமாக இருந்தாலும் மிக விரைவிலேயே இலக்கியம் வழியாக அதிலிருந்து வெளியேறினார். இரவு பகலாக மெய்ப்பு பார்ப்பதென்பது துய்ரங்களிலிருந்து ஒரு புதிய வெளியைக்கண்டடைவதும் கூடத்தான். மகன் இறந்த செய்தியை ஒட்டி அவரை காணச்சென்றபோது மெய்ப்பு பார்த்துக்கொண்டிருந்தார்.  “நான் இப்போதுமா?” என்று கேட்டபோது  “இது ஒண்ணுதானே எல்லாததையும் கடந்து போறதுக்கான வழி?” என்று சிரித்துக்கொண்டார். சிலநாட்களுக்குப்பின் மீண்டும் சந்தித்தபோது  “ஒரு ரெண்டாயிரம் பக்கம் ப்ரூஃப் பாத்தா ரொம்ப தூரத்துக்கு வந்துர்ரோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். மகனுக்கு இரு மகள்கள். இறுதிக்காலத்தில் தன் பேத்திகளுடன் தான் அவர் குடியிருந்தார்.

எம்.எஸ்  விரிந்த நட்பு வட்டம் கொண்டவர். சுந்தர ராமசாமி அவரை பூனை என்று சொன்னது அதனால்தான். பூனையின் வழித்தடங்களில் ஓரிருமுறை நான் பயணம் செய்திருக்கிறேன். செல்லுமிடங்கள் அனைத்திலும் அவர் குழந்தைகளிடம்தான் முதன்மையாக நெருக்கமாக இருப்பார் என்பதை கவனிக்கிறேன். வடிவீஸ்வரத்தில் அவருடைய பழைய நண்பர் ஒருவருடைய வீட்டுக்கு செல்லும்போது நானும் உடன் சென்றேன். என்னை வழியில் சந்தித்ததனால் அவர் சேர்த்துக்கொண்டார். வீட்டுக்குள் நுழைந்ததுமே சின்னக்குழந்தைகள் அவரை நோக்கி ஓடிவந்தன. தன் பையைத்திறந்து அதிலிருந்து பனையோலையால் செய்யப்பட்ட சிறிய காற்றாடிகளை எடுத்து ஆளுக்கொன்றாகக் கொடுத்தார்.

திருப்பதிசாரம் நுழைவாயில்

குழந்தைகளுக்கு அத்தகைய தனிப்பரிசுகள் அளிக்கும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. ஏனெனில் வழக்கமாக நாம் இனிப்போ பரிசுகளோ வாங்கிச் செல்லும்போது அந்த குழந்தைகளைப்பற்றி எண்ணுவதில்லை, ஒரு வழக்கம் அது அவ்வளவுதான். குழந்தைகளை எண்ணி வாங்கிச்செல்லும் பொருட்கள் அவர்களை மகிழச்செய்கின்றன. அவற்றின் பண மதிப்பு குழந்தைகளுக்கு முக்கியமில்லை. அவற்றை வாங்கியவருக்குள் உள்ள உண்மையான குழந்தைத்தனம் தான் அவர்களை கவர்கிறது. அவர்களுடன் மானசீகமாக விளையாடும் ஒருவரால் வாங்கப்பட்ட பொம்மைகள் அவை என்பதனாலேயே அவை மிக முக்கியமானவையாகின்றன.

எம்.எஸின் பை மந்திரவாதியின் உபகரணப்பெட்டி போல அவர்களுக்குத் தோன்றும். ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டுக்கு அவர் வரும்போது சைதன்யா அந்தப்பெட்டியைத்தான் மிகுந்த ஆவலுடன் வரவேற்பதை கவனித்திருக்கிறேன். அதன் அருகிலேயே அவள் சப்பணம் போட்டு அமர்ந்துகொள்வாள். ஒருபோதும் அவர் அவளை ஏமாற்றியதில்லை உள்ளிருந்து அவர் எடுக்கும் ஒவ்வொன்றும் அந்த கணம் உலகத்தில் புதிதாக பிறந்து வந்தது போல இருக்கும். பலவகையான பொம்மைகள், விந்தையான கற்கள். மேலும் ஏதோ உள்ளே இருக்கிறது என்ற மர்மத்தை எம்.எஸ் தக்கவைத்துக்கொள்வார். அதை தானாகவே திறந்துபார்க்க சைதன்யாவை அனுமதித்ததே இல்லை.

இயல்பாகப் பேசிக்கொண்டே இருந்துவிட்டு திடீரென்று பையை எடுத்துக்கொண்டு ஒரு சொல் அல்லது தலையாட்டலுடன் கிளம்புவதும் அவருடைய பாணி. அன்று சென்ற இல்லம் அவருடன் பணியாற்றிய ஒருவரின் மைந்தருடையது. அப்படி பலவகையான உறவுகள் அவருக்கிருந்தது. சுந்தர ராமசாமியின் கடையில் வேலை பார்த்து பிரிந்துசென்ற ஒருவருடன் முப்பதாண்டுகள் நட்பாக இருந்தார்.அவருடன் எந்த வகையான நட்பு அத்தனை ஆண்டுகாலம் நீடித்ததென்பது மிக ஆச்சரியமானது தான் ஆனால் எம்.எஸ் இலக்கியத்திற்கு புறம்பான அத்தகைய பலவகையான உறவுகளை பேணும் தன்மை கொண்டிருந்தார்.

எங்கள் வீட்டுக்கு எம்.எஸ் வரத்தொடங்கியது 2000-ல் நான் நாகர் கோவிலில் குடியேறியபோது. அதற்கு முன்பு மூன்று முறை பத்மநாபபுரத்தில் எனது இல்லத்துக்கு வந்திருக்கிறார். பார்வதிபுரத்தில் இறங்கி பையைத்தூக்கியபடி எங்கள் வீட்டுக்கு வருவார். பெரும்பாலும் உற்சாகமாக நான் பேசிக்கொண்டிருப்பேன் அருண்மொழி அவருக்கு தோசையோ மற்றவித உணவுகளோ சமைப்பாள். வேண்டுமென்றால் சாப்பிடுவார், பிகுவெல்லாம் இல்லை. வேண்டியதைச் சொல்லி சமைக்கக் கேட்பதுமுண்டு. குழந்தைகளிடம் விளையாடிக்கொண்டிருப்பார். பெரும்பாலான தருணங்களில் என்னுடைய இலக்கிய எண்ணங்களை அவரிடம் விரிவாக, ஊக்கமாகப் பகிர்ந்துகொள்வேன். அரைப்புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பார். வேதசகாயமோ ஏ.கே.பெருமாளோ மற்ற நண்பர்களோ வருவார்களென்றால் பத்துநிமிடம் பேசிவிட்டு உடனே கிளம்பிவிடுவார். எந்த விவாதத்திலும் எம்.எஸ். கருத்து என ஒருவரி கூட சொன்னதில்லை. புன்னகைதான் அவருடைய தரப்பு.

ஆலயச்சுற்று

சைதன்யாவுக்க்கும் அஜிதனுக்கும் அவர் மிக விசேஷமான ஒரு உறவாக நீடித்தார். ஒருமுறை சைதன்யாவிடம்  “யார் வருவது பார்? எம்.எஸ்ஸா?” என்று நான் கேட்டேன். அவள் எட்டிப்பார்த்துவிட்டு “எம்.எஸ் தாத்தா இல்லை வேறொரு சாதாரண தாத்தா” என்று சொன்னாள். அவள் வாழ்க்கையில் ஒரு அசாதாரணமான தாத்தாவாகவே எம்.எஸ் நினைவில் நின்றிருக்கிறார்.

எம்.எஸின் ஈடுபாடுகளில் ஒன்று சுருக்கெழுத்து. அவர் தட்டெழுத்து நிபுணரும்கூட. நெடுங்காலம் நாகர்கோயிலிலும் திருவனந்தபுரத்திலும் நிகழ்ந்த தட்டெழுத்து ,சுருக்கெழுத்து பயிற்சி வகுப்புகளில் இலவசமாக பாடம் நடத்தியிருக்கிறார். தேர்வுகளில் நடுவராகவும் பணியாற்றிவந்தார்.தன் இல்லத்திற்குத் தேடிவருபவர்களுக்குப் பயிற்சியளித்திருக்கிறார். குறிப்பாக அதிகம் படிக்கமுடியாத பெண்கள் தட்டச்சு சுருக்கெழுத்து வழியாக வேலை ஒன்றில் அமர்ந்து பொருளியல்விடுதலை அடைவதை அவர் அவசியமான ஒன்றாக கருதினார். அதற்காக தன் பொழுதுகளைச் செலவழிப்பதை பெரிய சேவையென்றும் எண்ணினார்.

இலக்கியநண்பர்களுக்கு தெரியாத எம்.எஸின் இன்னொரு நட்புச்சுற்றம் நாகர்கோயிலில் வெவ்வேறு அரசுப்பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெற்ற அவருடைய நண்பர்களால் ஆனது. அவர்களெல்லாம் கன்யாகுமரியில் ஒவ்வொரு பௌர்ண்மியன்றும் கூடுவதென்பது 1992 முதல் வழக்கமாக ஆகியது. எம்.எஸ். உடல் உபாதைகள் இல்லாதவர் என்பதனால் பெரும்பாலும் அது தவறியதே இல்லை. நண்பர்கள் மறைந்துகொண்டே இருந்தனர். இறுதியாக கன்யாகுமரியில் தேவிகுமரி ஸ்டோர் என்ற கடைவைத்திருந்த நண்பரும் எம்.எஸும் மட்டுமே எஞ்சினர். எம்.எஸ் அதன்பின் கடற்கரைக்குச் செல்வதில்லை. அந்தக் கடையில் சென்றமர்ந்து திரும்பவந்துகொண்டிருந்தார். அந்நண்பரும் மறைந்தபின் அந்தக்கடை அவர் மைந்தரால் நடத்தப்பட்டது. பழகிய பூனை போல் எம்.எஸ் பௌர்ணமிநாளில் அந்தக் கடைக்குச் சென்று அவ்விளைஞரை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். அவரால் நடமாட முடியும் காலம் வரை.

பூனை தன் எல்லையை தானே வரையறை செய்துவைத்திருக்கும். அதன் நடமாட்டத்தடங்கள் மாறுவதில்லை. அது செல்லும்போது புல் அசைவதில்லை. ஓசை எழுவதில்லை. எங்கு எப்படித்தாவினாலும் மிகச்சரியாக நான்கு கால்களில் விழுந்துவிடும். எம்.எஸ். நடுவே சில தவறான முடிவுகளால் வீட்டை இழக்கும்நிலை ஏற்பட்டது. பின்னர் பல நண்பர்களின் உதவியுடன் அதை மீட்டுக்கொண்டார். பிறந்த ஊரிலேயே கிட்டத்தட்ட ஒருநூற்றாண்டுக்காலம் வாழ்வதென்பது ஒரு பேறு. எம்.எஸுக்கு அது வாய்த்தது.

எம்.எஸின் இறுதியூர்வலம் அவருடைய இல்லத்திலிருந்து தொடங்கி அவருடைய தெருக்களினூடாகச் சென்று அவருடைய ஊரின் சுடுகாட்டை அடைந்தபோது  மிகச்சரியாக பூனை திரும்பவும் கால்பதித்துவிட்டது என நினைத்துக்கொண்டேன்

[மேலும்] 

அஞ்சலி மா.அரங்கநாதன்

கிருத்திகா:அஞ்சலி

முந்தைய கட்டுரைபலூன் கோடாரி -விஷால் ராஜா
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்