‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34

tigகுண்டாசி வழுக்கும் பாறைகளினூடாக கால்வைத்து கைகளை ஊன்றி சிலமுறை சறுக்கியும் பாறைகளில் பற்றி நிலைகொண்டும் மெல்ல எழுந்து நடுவே ஓடிய நீரோடைகளை மிதித்து மறுபக்கம் கடந்தும் சென்றுகொண்டிருந்தான். அப்பால் ஒரு மலைப்பாறையில் பெரிய கால்களை அவன் பார்த்தான். அருகே சென்று எழுந்து சற்று மேலே தொங்கிய மேலாடையைப்பற்றி இழுத்து “மூத்தவரே, என்னை தூக்குங்கள்! என்னை தூக்குங்கள்!” என்றான். கால்களை உதைத்து சிணுங்கலாக “என்னை தூக்குங்கள்! என்னை தூக்குங்கள்!” என்று கூறி திமிறினான். இடையாடையைப்பற்றி இழுத்தான்.

மேலிருந்து பீமனின் முகம் குனிந்து அவனை பார்த்தது. அவன் அண்ணாந்து பார்த்தபோது வானிலிருந்தன என சிரிக்கும் வாயும் கனிந்த விழிகளும் தெரிந்தன. “என்னை தூக்குங்கள், மூத்தவரே! என்னை தூக்குங்கள்!” என்றான். பீமன் குனிந்து தன் பெரிய கைகளை அவன் இரு தோளுக்குக்கீழும் கொடுத்து விரைவாக மேலே தூக்கினான். தரையிலிருந்து பறவைபோல் வானிலெழுவதாகத் தோன்ற கைகளை விரித்து கால்களை ஆட்டி குண்டாசி சிரித்தான். கால்களை முன்னால் நீட்டி பீமனின் நெஞ்சில் உதைத்துக்கொண்டு கைகளால் அவன் முடியை பற்றிக்கொண்டு “இன்னும் மேலே! இன்னும் மேலே!” என்று கூவினான்.

பீமன் அவனை மேலே தூக்கி வீச காற்றிலெழுந்து மேலே சென்றான். மிக அருகிலென வானம் கீழிறங்கிவர அஞ்சி வயிறு அடைத்துக்கொள்ள மூச்சு நின்றுவிட மிக மெல்ல கீழிறங்கி வந்தான். பீமனின் கைகள் வெம்மையான மண்பரப்புபோல அவனை வாங்கிக்கொண்டன. கீழே சற்றிறக்கி மேலும் விசையுடன் மேலே எறிந்தான் பீமன். இம்முறை அவன் கைவிரித்து வானை தொட முயன்றான். மீண்டும் உயரத்தில் எழுந்தபோது கைகளை சுட்டிக்காட்டி முகிலொன்றை தொட்டான். மேலும் கீழிறங்கியபோது அங்கு கைகள் இருக்கவில்லை. “மூத்தவரே!” என்று அலறியபடி அவன் கீழே வந்துகொண்டிருந்தான். பீமன் அங்கில்லையென்று தோன்றியது. மிக ஆழத்தில் பீமனின் நகைப்பு எங்கோ கேட்டது.

“மூத்தவரே! மூத்தவரே!” என்று அலறிக்கொண்டு அவன் விழுந்துகொண்டிருந்தான். தன் கால்களை மேலிருந்து ஒரு கை வந்து பிடிப்பதை உணர்ந்தான். அந்தப் பிடியில் தொங்கியவனாக தலைகீழாக மிக ஆழத்தில் தெரிந்த இருண்ட வெளியை பார்த்தபடி அவன் கிடந்தான். பல்லாயிரம் விழிகளின் மினுக்கம் அங்கு விண்மீன்களென நிறைந்திருந்தது. அவன் அந்தப் பிடியை உதறி அந்த இருள்வெளி நோக்கி விழ விரும்பினான். கால்களை உதறியபடி “விடு… என்னை விடு!” என்று கூவினான். “இளவரசே! இளவரசே!” என்ற குரல் கேட்டு விழித்துக்கொண்டபோது தன் கால்களைப்பற்றி உலுக்கிய முதிய ஏவலனாகிய தீர்க்கனை கண்டான்.

தீர்க்கன் தலைவணங்கி “புலரி அணுகுகிறது, இளவரசே” என்றான். குண்டாசி “யார்? யார் நீ?” என்றான். அவன் முதிய குரலில் பொறுமையாக “நான் தங்கள் அணுக்கன் தீர்க்கன். தங்களை எழுப்பும்பொருட்டு வந்தவன். புலரி அணுகிவிட்டது” என்றான். குண்டாசி கையை ஊன்றி எழுந்து மெத்தைமேல் அமர்ந்தான். அவன் இரு கைகளும் நடுங்கின. வயிற்றுக்குள் குளிர்ந்த காற்று நிறைந்து நெஞ்சை அடைத்தது. மூச்சு பதைக்க நா வறண்டு தவிக்க அவன் கண்களை மூடி தலையை குனிந்தான். உடல் எடையற்று தக்கை போலிருக்க தலை இரும்பால் செய்யப்பட்டதுபோல் தரை நோக்கி தாழ்ந்தது. உடலிலிருந்து தலை பிரிந்து தரையில் உதிர்ந்துவிடும்போல் தோன்றியது. கைகளை ஊன்றி மீண்டும் ஒருக்களித்து மெத்தையில் படுத்தான். கண்களை மூடியபோது சிவந்த ஒளிக்குமிழ்களும் விந்தையான மின்னல்களும் உள்ளே சுழன்றடித்தன. சேக்கையுடன், அது பதிந்திருந்த மஞ்சத்துடன், அவ்வறையுடன் அடியிலி நோக்கி விசையுடன் விழுந்துகொண்டே இருந்தான்.

“இளவரசே, இன்று கொற்றவை அன்னைக்கு குருதிபலி அளிக்கும் விழா. தாங்கள் சென்றாகவேண்டுமென்பது அரசரின் ஆணை” என்று தீர்க்கன் சொன்னான். மிக அப்பால் என்று எங்கோ இருந்தென அக்குரலைக் கேட்டு செயலற்று படுத்திருந்தான் குண்டாசி. அத்தகைய பொழுதுகளில் தான் முன்னரே இறந்துவிட்டதாகவும் உயிருள்ளவர்களின் உலகிலிருந்து குரல்களும் மணங்களும் மட்டுமே தன்னை வந்தடைவதாகவும் அவனுக்கு தோன்றுவதுண்டு. அந்த மெலிந்து நைந்த உடலிலிருந்து அவன் உயிர் மிக அப்பால் எங்கோ தனித்து திகழ்ந்தது. மிக மெல்லிய சரடொன்றால் அது அவ்வுடலுடன் இணைக்கப்பட்டிருந்தது.

தீர்க்கன் அருகிலிருந்த மதுப்புட்டியிலிருந்து அனலென எரியும் பீதர் நாட்டு மதுவை ஊற்றி அவனருகே கொண்டு வந்தான். பளிங்குக்கோப்பையில் அது ஊற்றப்பட்டதுமே அறையெங்கும் அதன் எரிமணம் நிறைந்தது. அவன் வயிற்றிலிருந்து ஓர் அலையென விருப்பு எழுந்து நெஞ்சை அறைய வாய்க்குள் வழுவழுப்பான நீர் நிறைந்தது. இரு கைகளையும் மெத்தையில் ஊன்றி எடை மிக்க தலையை உந்தி மேலெழுப்பி அமர்ந்து கைகளை நீட்டினான். அவன் கைகள் காற்றிலாடும் கிளைபோல அசைந்தன. கோப்பையை வாங்கினால் மதுவை கீழே கொட்டிவிடுவோம் என்று அஞ்சி மீண்டும் கைகளை ஊன்றிக்கொண்டான். தீர்க்கனே கோப்பையை அவன் இதழருகே கொண்டுவர சிறுகுழந்தைபோல தலையை முன் நீட்டி கோப்பையிலிருந்து மதுவை ஒரே மூச்சில் உறிஞ்சி குடித்தான். அதன் ஆவியெழும் கடுங்கசப்பு அவன் வாயை நிறைத்து தொண்டையில் எரிந்த விடாய் அனலை அணைத்து நெஞ்சில் இறங்கியது.

சிலகணங்களுக்குப் பின் “இன்னும்” என்றான். “போதும்! தங்களால் நடக்கமுடியாமல் ஆகக்கூடும். இன்று பூசனை நெடுநேரம் நிகழுமென்றார்கள்” என்று தீர்க்கன் சொன்னான். “இன்னும்” என்று குண்டாசி சொன்னான். “போதும், இளவரசே!” என்று தீர்க்கன் சொன்னான். கைகளால் மெத்தையை அறைந்து “இன்னும் இன்னும்” என்று குண்டாசி கூவினான். மூச்சிரைக்க “இன்னும் இன்னும்” என்று கூவியபோது அவன் குரல் மேலெழுந்தது. பற்களற்ற வாயை இறுகக் கடித்து மெல்லிய கழுத்தில் நரம்புகள் துவள “இன்னும் கொண்டுவா… இப்போதே. இன்னும்…” என்றான். தீர்க்கன் குவளையில் மீண்டும் மதுவூற்றி அவன் வாயருகே கொண்டு வந்தான். கண்களை திறக்காமலேயே முகத்தை நீட்டி அன்று பிறந்த நாய்க்குட்டி பாலருந்துவதுபோல் அவன் மதுவை அருந்தினான்.

பின்னர் இரு கைகளையும் பின்னாலூன்றி தலையை அண்ணாந்து கண்களை மூடி மூச்சிரைத்தபடி மஞ்சத்தில் அமர்ந்திருந்தான். மெதுவாக அவன் உடலெங்கும் குருதியில் வெம்மையுடன் மது ஓடுவதை உணரமுடிந்தது. இறுகி நீட்டப்பட்டிருந்த உள்ளங்கால் மெல்ல இளகி பக்கவாட்டில் சரிந்தது. கைவிரல்களின் மூட்டுகள் இறுக்கமிழக்க விரல்கள் உயிர்கொண்டன. உடல் முழுக்க தசைகள் நெகிழ்ந்து உயிர்கொள்வதை அவனால் உணர முடிந்தது. கண்களுக்குள் செங்குமிழிகள் விசை குறைந்து ஒவ்வொன்றாக அமிழலாயின. நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை பூத்து சாளரத்தினூடாக வந்த காற்றில் உடல் குளிரத்தொடங்கியது. காதில் கேட்டுக்கொண்டிருந்த தேனீயின் ரீங்காரம் அணைந்தது. ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற சொற்றொடர்களாக ஓடிக்கொண்டிருந்த உள்ளம் ஓய்ந்து எங்கிருக்கிறோம் என்றும் எந்தப் பொழுதென்றும் உணர்வு கூர்கொண்டது.

கண்களை திறந்தபோது அனலருகே நிற்பதுபோல் வெண்விழி எரிந்தது. அவன் தலையும் இடக்காலும் நடுங்கிக்கொண்டிருந்தன. தீர்க்கனை நோக்கி “இது எந்தப் பொழுது?” என்றான். தீர்க்கன் “புலரி முதற்பொழுது. தாங்கள் இன்னும் சற்று நேரத்தில் நீராடி அணிகொண்டு அரண்மனை முகப்புக்கு செல்லவேண்டும். உடன்பிறந்தார் நூற்றுவரும் அங்கிருக்கவேண்டுமென்பது அரசரின் ஆணை” என்றான். அனைத்தையும் நினைவுகொண்டு “ஆம்! ஆம்!” என்று அவன் சொன்னான். “இப்போது எழுந்து நீராடத்தொடங்கினால்தான் தாங்கள் சென்று சேரமுடியும்” என்றான் தீர்க்கன். “ஆம், கிளம்ப வேண்டியதுதான்” என்று அவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

கையூன்றி எழுந்தபோது உடற்தசைகள் ஒன்றுடனொன்று இயைபு கொள்ளத் தொடங்கியிருப்பதை அவனால் உணரமுடிந்தது. எழுந்து நின்று மஞ்சத்தின் கைப்பிடியை பற்றிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். “இன்னும் சற்று ஊற்று” என்று அவன் சொன்னான். “போதும் இளவரசே, இதற்கப்பால்…” என்று அவன் சொல்ல கையமர்த்தி “சற்று” என்றான். தீர்க்கன் மேலும் சற்று மதுவூற்றி அவனுக்கு அளிக்க அதை வாங்கி தன் கண் முன் நிறுத்தி பார்த்தான். சற்று நடுங்கியபோதிலும்கூட அவனால் அதை தன் வாய் வரைக்கும் கொண்டு செல்ல முடிந்தது. வாய்க்குள் ஊற்றி விழுங்காமல் நாவிலேயே வைத்துக்கொண்டு சற்று நேரம் கண்மூடி நின்றான். துளித்துளியாக அதை உள்ளிறக்கிய பின் கண்விழித்து “இன்னும் நெடுநேரமிருக்கிறது” என்றான். “இல்லை இளவரசே, தாங்கள் அணிகொள்வதற்கு பொழுதாகும். உங்கள் உடன்பிறந்தார் அனைவரும் அங்கு வந்திருப்பார்கள். அனைவரும் அங்கு வந்து நின்றபின் தாங்கள் செல்வதென்பது அனைவரும் தங்களை பார்ப்பதற்கு வழியமைக்கும். அந்நோக்குகள் தங்களுக்கு உகந்தவையல்ல என்று எண்ணுகிறேன்” என்றான் தீர்க்கன்.

“ஆம், அங்கு எவருமில்லாதபோதும் நான் செல்ல விரும்பவில்லை. அனைவரும் வந்தபின்னும் செல்ல விரும்பவில்லை. கூட்டம் கூட்டமாக அவர்கள் சென்று முற்றத்தில் அணிநிரக்கையில் அவர்களில் ஒருவராக தலைமறைந்து செல்ல விரும்புகிறேன்” என்றபின் “இப்போதெல்லாம் எனது உடல் மெய்யாகவே இங்கு பருவடிவில் இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. பெரும்பாலானவர்கள் இப்போது என்னை பார்ப்பதே இல்லை. வெட்டவெளியிலேயே என்னால் முற்றும் மறைந்துகொள்ள முடிகிறது” என்று சிரித்து “அது எனக்கு உகந்ததாகவும் உள்ளது” என்றான். தீர்க்கன் “வருக, இளவரசே! நீராடி கிளம்பவேண்டியதுதான்” என்றான்.

“ஆம்” என்றபின் அவன் திரும்பி தன் சேக்கையை பார்த்தான். அதில் அவன் இரவில் சிறுநீர் கழித்திருந்த ஈரம் பரவியிருந்தது. அவனது ஆடையிலும் மேலாடையிலும் சிறுநீரும் இரவெல்லாம் இருமித் துப்பிய கோழையும் படிந்து உலர்ந்திருந்தன. அவன் பார்ப்பதை தீர்க்கனும் பார்த்து அவன் திரும்பியதும் நோக்கை விலக்கிக்கொண்டான். “பன்றி ஒடுங்கும் பொந்துபோல் இவ்வறை உள்ளதல்லவா?” என்றான். தீர்க்கன் “பொழுதாகிறது, இளவரசே” என்றான். குண்டாசி தன் மேலாடையை எடுத்து அப்பாலிட்டுவிட்டு “பிறிதொரு மேலாடை எனக்கு வேண்டும்” என்றான். “தாங்கள் நீராடத்தானே போகிறீர்கள்? அங்கே ஆடைகளை எடுத்து வைத்திருக்கிறேன்” என்று தீர்க்கன் சொன்னான்.

தீர்க்கனுடன் குண்டாசி அறையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக நடந்தான். அவனை எவ்வாறு அழைத்துச் செல்லவேண்டுமென்பது தீர்க்கனுக்கு தெரிந்திருந்தது. அவன் நடக்கையில் அவனிடமிருந்து அகன்று அவன் செல்வதில்லை. அணுக்கமாக வந்து அவன் தள்ளாடும்போது கைநீட்டுவதில்லை. மெய்யாகவே அவன் விழுந்துவிடக்கூடும் என்று தோன்றும் தருணத்தில் மட்டும் ஓரிரு எட்டு எடுத்துவைத்து அவன் தோளையோ கையையோ இயல்பாக பற்றிக்கொண்டு அவன் நிலைமீண்டதும் பிடியை விட்டுவிடுவான்.

குண்டாசி நடக்கையிலேயே இருமத் தொடங்கினான். முதலில் மெல்லிய இருமலாக தொடங்கியது. நெஞ்சிலிருந்து கோழையை இருமி வெளியே எடுக்க அவனால் இயலவில்லை. ஆகவே மேலும் மேலும் இருமல் மிகுந்துவந்தது. இரு இடங்களில் தூண்களை பற்றிக்கொண்டு குனிந்து நின்று அவன் இருமினான். சற்று அப்பால் நின்றிருந்த இரு காவலர்கள் அவன் துப்புவதற்காக கோளாம்பியை கொண்டுவந்து வைத்தனர். நெடுநேரம் இருமிய பின்னரும்கூட அவனால் கோழையை இருமி அதில் துப்பமுடியவில்லை. இருமலின் விசையில் அவன் குனிந்து தலையை பற்றிக்கொண்டு கண்களை மூடி மூச்சுவாங்கினான். பின்னர் கையசைத்து அவர்களை போகச் சொல்லிவிட்டு மேலும் நடந்தான்.

மீண்டும் அவன் உடலை அதிரச் செய்தபடி இருமல் இருந்தது. இம்முறை சற்றே கோழையை துப்பினான். உள்ளிருந்து பெயர்ந்த கோழை வெளியே வராமல் நெஞ்சில் நின்று அவனை நிலையழியச் செய்தது. நீராட்டறை அங்கிருந்து நெடுந்தொலைவென்று தோன்றியது. தீர்க்கன் “தாங்கள் விரும்பினால்…” என்று ஏதோ சொல்லத் தொடங்க கைவீசி அவனை தடுத்த பின் முழுவிசையும் உடலில் கூட்டி ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி விழுவதுபோல் எடுத்து வைத்து எட்டு தூண்கள் நின்றிருந்த இடைவெளியை ஒரே விசையில் தாண்டி அங்கிருந்த சிறுவாயிலின் நிலைப்படியை பற்றிக்கொண்டு நின்றான். அம்முறை இருமல் மிக உச்சத்திலும் கால் கட்டைவிரலை துடிக்கவைக்கும் அளவுக்கு விசையுடனும் எழுந்தது. ஏவலன் கொண்டு நீட்டிய கோளாம்பியில் துப்பியபோது நெஞ்சை அடைத்திருந்த கோழையில் பெரும்பகுதி வெளியே சென்றது. மூச்சுவிட்டு நிமிர்ந்து நின்றான். நெஞ்சின் எடை குறைந்து உடல் சற்று எளிதானதுபோல் தோன்றியது.

மேலும் எத்தனை தொலைவிருக்கிறதென்று பார்த்தான். இருமுறை உடலை உந்தினால் நீராட்டறைவரை சென்றுவிட முடியும். நீராட்டறை வாசலில் சென்றபோது அவன் கண்களுக்குள் இருட்டு நிறைந்திருந்தது. விழுந்துவிடுபவன்போல பக்கவாட்டில் சாய தீர்க்கன் அவன் தோளை பற்றிக்கொண்டான். சிலகணங்களுக்குப் பின் தீர்க்கனின் கையை தட்டி அதை எடுக்கச் சொன்னபிறகு அவன் கண்களைத் திறந்து நீராட்டறையை பார்த்தான். நீராட்டு ஏவலன் முன்வந்து வணங்கி “வருக, இளவரசே! அனைத்தும் சித்தமாக உள்ளன” என்றான். அவன் தன் பதறும் கால்களை எடுத்துவைத்து நீராட்டறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த நீராவி அவன் மூச்சை நிறைத்து நெஞ்சில் இறுகிய சளியை இளகவைத்தபோது அதுவரை தன்னை அழுத்திய எடை சற்று குறைவது போலுணர்ந்தான்.

சமையர் அவன் இரு கைகளையும் பற்றி இடையாடையை களைந்து வெந்நீர் தொட்டிக்குள் அமிழச் செய்தார்கள். உள்ளே உடலை நீட்டிக்கொண்டபோது அனைத்து தசைகளும் உருகி அரக்கென நீண்டு வழிந்து உடல் நீரில் கரையத் தொடங்குவதுபோல் உணர்ந்தான். முருக்குத் தடியாலான தலைமணையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டபோது சமையரின் கைகளை உடலெங்கும் உணர்ந்தான். மிக மெல்ல எங்கோ அழுந்திக்கொண்டிருந்தான். மென்மையாக மீண்டும் மீண்டும் அவனுள் எழும் கனவில் சிறு குழந்தையாக “மூத்தவரே மூத்தவரே” என்று அழைத்தபடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான். ஒவ்வொன்றும் அவனைச் சுற்றி பேருருக்கொண்டிருந்தன. தூண்கள், கதவுகள், மூத்தவர்களின் கால்கள். தலைக்குமேல் வேறொரு உலகம் மொழியாக ஓசையாக நிறைந்திருந்தது. கீழிருந்து அண்ணாந்து நோக்கி “மூத்தவரே, என்னை தூக்குங்கள். மூத்தவரே, என்னை தூக்குங்கள்” என்று தன்னை அவ்வுலகு நோக்கி கொண்டுசெல்லும்படி மன்றாடிக்கொண்டிருந்தான்.

தன் குறட்டையொலியை தானே கேட்டு விழித்துக்கொண்டான். நீராட்டறையை உணர்ந்து “முடிந்ததா?” என்றான். “ஆம், இளவரசே” என்று சொல்லி இரு சமையர் அவனை தோள்பற்றி தூக்கினர். அவன் உடலை மரவுரியால் துடைத்து நறுஞ்சுண்ணமிட்டனர். ஆடியில் தெரிந்த தன் உடலை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். எலும்புச் சட்டகத்தின் மேல் சுருங்கிய கரிய தோல் சிறு புண்களுடனும் நூற்றுக்கணக்கான தழும்புகளுடனும் தடிப்புகளுடனும் காய்ப்புகளுடனும் படர்ந்திருந்தது. சில இடங்களில் சாம்பல் பூத்து, சில இடங்களில் பூசணத்தேமல் படர்ந்து, மட்கத் தொடங்கிய சடலம் ஒன்றை பார்ப்பதுபோல் இருந்தது.

அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் நோக்கை விலக்கிக்கொண்டான். பின்னர் உளத்தை உந்தி நோக்கை திருப்பி ஆடியை பார்த்தான். தன் உடலை காலிலிருந்து தலைவரைக்கும் ஒவ்வொரு உறுப்பென்று நோக்கினான். மட்கும் சடலம்தான். நெடுங்காலமாக மெல்ல மட்கிக்கொண்டிருக்கிறது. முற்றாக உயிர் அகலவுமில்லை. அவன் தன் விழிகளை பார்த்தான். உயிர் எஞ்சியிருப்பது அங்கு மட்டும்தான். கண்களை மட்டும் அகற்றிவிட்டால் இவ்வுடலை சிதையேற்றிவிடலாம். முதல் நெருப்பிலேயே பொசுங்கி எரிந்துவிடக்கூடும். இதில் ஓடிக்கொண்டிருக்கும் குருதி என்பது பீதர்நாட்டு மதுவாலானது. யவன மது பழச்சாறு நொதித்தூற்றியது. அரிசியில் வாற்றி எடுக்கப்படும் பீதர் நாட்டு மது எக்கணமும் அனலென்று மாற ததும்பி நிற்பது. வெயில் வெம்மை மிகுந்தாலே பளிங்குப்புட்டிக்குள் அது எரிந்து பற்றிக்கொள்ளும்.

சூதன் ஒருவன் முன்பு “இளவரசே, தாங்கள் சுடர்களுக்கும் பந்தங்களுக்கும் அருகே செல்லவேண்டாம், பற்றிக்கொள்வீர்கள்” என்று நகையாடியதை அவன் நினைவுகூர்ந்தான். நிமித்திகனிடம் அன்று அவன் கேட்டான். “இதுநாள்வரை நான் உயிர் வாழ்வதற்கு உங்கள் நிமித்திக நூல் என்ன விளக்கம் சொல்கிறது?” நிமித்திகன் மும்முறை சோழிகளை இடம்மாற்றி இட்டபின் “தாங்கள் களம்படும் நல்லூழ் கொண்டவர். நோயில் இறப்பதோ வேட்டையிலோ கெடுநிகழ்வுகளிலோ உயிர் துறப்பதோ உங்கள் ஊழல்ல” என்றான்.

“அதை நானும் உணர்கிறேன்” என்றபின் அவன் அருகே நின்றிருந்த பாணனிடம் “இளஅகவையிலே எனக்கெழுந்த உள்ளுணர்வொன்று உண்டு. நான் செருகளமொன்றில் மூத்தவர் பீமனால் தலையுடைத்து கொல்லப்படுவேன். அதன் பொருட்டே இத்தலையை பாதுகாத்து வைத்திருக்கிறேன். இது உடைந்து வெளியே தெறிக்கும் அக்கணம் நான் அடையும் ஆறுதல் என்னவென்று அவ்வப்போது கனவுகளில் அறிவேன். சீழ்கட்டியென கொதித்து நெறிகொண்டு அதிர்ந்து கொண்டிருக்கிறது இது நெடுநாளாய்” என்றபின் தன் தலையை கைகளால் தட்டி “புன்தலை… இள அகவையில் பிற மைந்தரைவிட என் தலை மிகப் பெரிது என்று என் அன்னை சொன்னாள். என் தலையை தன் கைகளால் வருடி பெருங்கலம் போலிருக்கிறது என்றபின் இதற்கு குண்டான் என்று பெயரிட்டாள். அதிலிருந்துதான் இப்பெயரை நான் அடைந்தேன்” என்றான்.

அவன் நோக்கி நின்றிருக்கவே சமையர் நீலப்பட்டாடையை உடுத்தி இடையில் சிவப்புக் கச்சை கட்டி மானுட உடலென்றாக்கினர். தீர்க்கன் அறைவாயிலில் நின்று “செல்வோம், இளவரசே. ஏற்கெனவே அங்கு தங்கள் உடன்பிறந்தார் இருபது பேர் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். மீண்டும் ஒருமுறை தன்னை ஆடியில் பார்த்த பின் குண்டாசி தீர்க்கனுடன் நடந்தான். தீர்க்கன் “தாங்கள் உணவேதும் அருந்தாமல் செல்லவேண்டுமென்பது நெறி. தங்கள் மூத்தவர்கள் மூன்று நாட்களாக உண்ணாநோன்பு கொண்டு அன்னையை வழிபட சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“நான் உண்ணாநோன்பு கொள்ள இயலாது. அதை அவர்கள் அறிவார்கள்” என்றான். “ஆம், அதை எவரும் தங்களிடம் கேட்கப்போவதில்லை. ஆனால் தாங்கள் இதற்கு மேல் மதுவருந்தலாகாது. அருந்தினால் தாங்கள் சென்று நிற்கையிலேயே அக்கெடுமணத்தை அவர்கள் அறிவார்கள்” என்றான் தீர்க்கன். குண்டாசி “என் வியர்வையில் பீதர்நாட்டு மதுவின் மணமுள்ளது. குருதியில் பாதி அந்த மதுதான். ஆகவே எந்நிலையிலும் அந்த மணத்தை என்னிடமிருந்து விலக்க இயலாது” என்றான்.

tigஇடைநாழியில் அவனுக்காகக் காத்திருந்த சுஜாதன் மேலேறி வந்து “வருக, அனைவரும் தங்களை கேட்டனர்” என்றான். “என்னையா?” என்றான் குண்டாசி. “தாங்கள் நோன்பு கொண்டிருக்கிறீர்களா என்று துர்மதர் கேட்டார். ஆமென்று உரைத்தேன்” என்றான். குண்டாசி இதழ் வளைய புன்னகைத்து “என் வாழ்வே ஒரு பெருநோன்புதான் என்று அவரிடம் சொல்லவேண்டியதுதானே?” என்றான். சுஜாதன் அதிலிருந்த இடக்கை புரிந்துகொள்ளாமல் “மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்து இன்று கொற்றவை அன்னையின் பூசனைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். நூற்றுவரும் அந்நோன்பை கொண்டிருக்கிறார்கள்” என்றான். குண்டாசி “நான் சென்ற நாற்பதாண்டுகளுக்கும் மேலாகவே உண்ணா நோன்பைத்தான் கொண்டிருக்கிறேன், இளையோனே” என்றான்.

படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தான். அங்கு கௌரவர்கள் சிறுகுழுக்களாக கூடிநின்று தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். சூழ்ந்திருந்த பந்தங்களின் ஒளியில் அவர்களின் ஆடைகள் செந்தழல்போல சுடர்கொண்டிருந்தன. சுஜாதன் “தாங்கள் எனக்கு சற்று பின்னாலேயே வருக! தங்களை மூத்தவர் பார்த்தால் ஏதேனும் கேட்கக்கூடும்” என்றான். சுஜாதனைப் பார்த்து சிரித்த குண்டாசி “என்னை நோக்கி கேட்கப்படவேண்டிய அனைத்தும் முன்னரே பலமுறை கேட்கப்பட்டுவிட்டன. பலமுறை மறுமொழிகளும் சொல்லப்பட்டுவிட்டன. நீ அஞ்சவேண்டாம். மூத்தவர் எவரும் என்னை பார்ப்பதில்லை. ஏனெனில் என் உடல் முன்னரே கண்களுக்குத் தெரியாமல் ஆகிவிட்டது” என்றான்.

அவன் என்ன சொல்கிறான் என்று இருமுறை திரும்பிப்பார்த்து புரியாமல் சுஜாதன் “விரைந்து வருக!” என்று சொல்லி முற்றத்தில் இறங்கி அங்கு நின்றிருந்தவர்கள் நடுவே நின்றான். குண்டாசி இரு பெரிய உடல்கள் நடுவே தன்னை நிழலென நிறுத்திக்கொண்டான். கௌரவர்கள் ஒருவரோடொருவர் பேசாமல் நிழல்பெருகுவதுபோல வந்து முற்றத்தை நிறைக்கத் தொடங்கினர். அனைவரும் நீலநிற இடையாடையும் செந்நிறக் கச்சையும் அணிந்து அணிகளோ தலைப்பாகையோ இல்லாமலிருந்தார்கள். அருந்திய மது முழுக்க வியர்வையாக வெளியே வந்தது. தொண்டை மதுவிற்கான விடாய்கொள்ளத் தொடங்கியது. கைவிரல்கள் குளிர்ந்து நடுங்கின. கால்விரல்கள் மண்பற்றாமல் நெகிழ அகலத் தொடங்கின. திரும்பி சுஜாதனிடம் “இளையோனே, நான் சற்று மது அருந்தாமல் வரமுடியாது. விழுந்துவிடுவேன்” என்றான். “விழுந்தால் நன்று. மது அருந்தி தாங்கள் வரப்போவதில்லை” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான் சுஜாதன். “விடாய் தாங்க முடியவில்லை. என் தலை உடைந்துவிடும் போலிருக்கிறது” என்றான். “உடையட்டும்” என்று அவன் சொன்னான். “புரிந்துகொள்க! ஆலயம் வரை என்னால் நடக்க இயலாது” என்று குண்டாசி சொன்னான். “நடந்துபாருங்கள். விழுந்தால் நான் தூக்கிக்கொண்டு செல்வேன்” என்றான் சுஜாதன்.

ஒற்றைக்கொம்பின் ஒலி எழுந்தது. கனகர் முன்னால் ஓடிவந்து அங்கே நின்றிருந்த கௌரவர்களை நோக்கினார். எண்ணிநோக்குகிறார் என்று தோன்றியது. ஆனால் நெடுங்காலப் பழக்கத்தால் எண்ணாமலேயே அவர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா என்பதை அவரால் கணிக்கமுடிந்தது. அவர் திரும்பிச்சென்ற சற்றுநேரத்திலேயே கொம்பூதி முன்னால் வர அஸ்தினபுரியின் கொடியுடன் கொடிக்காவலன் வந்தான். தொடர்ந்து துச்சாதனன் உடன்வர துரியோதனன் நடந்து வந்தான். முற்றத்தை நிறைத்திருந்த தம்பியரை ஒருமுறை நோக்கிவிட்டு அவன் அவர்களின் நிரைமுகப்பில் வந்து நின்றான்.

நிமித்திகர்களும் கணிகர்களும் சிற்றமைச்சர்களும் அடங்கிய சிறுகுழு அப்பால் நின்றது. மங்கல இசையோ வாழ்த்தோ எழவில்லை. நிமித்திகன் வான்மீன் நோக்கி பொழுது கணித்ததும் கனகர் வந்து துரியோதனனைப் பணிந்து முணுமுணுக்க அவன் திரும்பி அரண்மனையை நோக்கி வணங்கிவிட்டு முன்னால் நடந்தான். கௌரவர்கள் சீராக தொடர்ந்து சென்றனர். குண்டாசி அவர்களுடன் நடந்தான். நடப்பதற்காக கால்களை எடுத்துவைத்தபோதுதான் உடலுக்குள் ஆற்றல் என ஏதுமில்லை என்று தெரிந்தது. ஒவ்வொரு காலடியையும் எண்ணத்தால் உந்தி எடுத்து வைக்கவேண்டியிருந்தது. தொடர்ந்து சென்றுகொண்டிருந்த பிறர் உடல்களுடன் அவன் முட்டிமோதினான். சினத்துடன் அவனை உந்தி “செல்க!” என்றான் சுவர்மன். குண்டாசி அக்கணம் ஒரு கை தன்னைப் பிடித்து மண்ணை நோக்கி இழுப்பதாக உணர்ந்தான். முகம் தரையை அறைந்தபோது வலியை உணர்ந்தான். கையூன்றி எழமுயன்று மீண்டும் மண்ணில் விழுந்தான்.

கௌரவர்களின் நிரை கலைந்தது. “என்ன? என்ன?” என்றான் துர்மதன். “இளையவன்” என்று ஜலகந்தன் சொன்னான். துர்விகாகனும் சுலோசனனும் அவனை அணுகி குனிந்து நோக்கினர். “என்ன?” என்று துரியோதனன் கேட்டான். பின்னர் “யாரவன்?” என்று உறுமியபடி குண்டாசியை அணுகினான். குண்டாசி தலைதூக்கி தன்னருகே நின்றிருந்த மிகப் பெரிய கால்களை கண்டான். கைநீட்டி “மூத்தவரே! மூத்தவரே” என்றான். “அறிவிலி! வீணன்!” என்று கூவியபடி துரியோதனன் அவனைத் தூக்கி மேலே வீசினான். அவன் காற்றிலெழுந்து இருண்ட வானில் மிதந்து கீழிறங்க இரு வலிய கைகள் அவனை பற்றின. அவன் கழுத்தில் துரியோதனனின் கைகள் அழுந்த உடல் அவன் பிடியில் நெரிந்து உறைந்தது.

சுபாகு “மூத்தவரே, வேண்டாம். இது நற்பொழுது” என்று கூவியபடி அருகே ஓடிவந்தான். துச்சாதனன் “தீநிமித்தம் ஆகிவிடும், மூத்தவரே” என்று துரியோதனனின் தோளை பற்றினான். குண்டாசியைத் தூக்கி அப்பால் வீசினான் துரியோதனன். காற்றில் பறந்து எலும்புகள் மண்ணில் அறைபட அவன் நிலத்தில் விழுந்தான். வலியே தெரியவில்லை. ஆனால் தன் உடல் பல துண்டுகளாக சிதறிக்கிடப்பது போலிருந்தது. துரியோதனன் மூச்சிரைத்தபடி திரும்பிச் சென்றான். கௌரவர்கள் அவனை தொடர்ந்தனர். எவரோ “தீநிமித்தம் வேறென்ன தேவை?” என்று முணுமுணுத்தனர். இறுதியாக தயங்கிநின்ற பின் சுஜாதனும் அவர்களுடன் சென்றான்.

முந்தைய கட்டுரைதென்னிந்தியக் கோயில்கள்
அடுத்த கட்டுரைமனத்திரைகளின் ஆட்டம்