பழைய நிலங்கள்

கேரளபுரம்
கேரளபுரம்

17, ஜூன் 2018 ஞாயிறன்று அஜிதன் வீட்டிலிருந்தான். சைதன்யாவுக்கு விடுமுறை. ஆகவே சும்மா ஒரு சுற்று கிளம்பிவரலாமே என்று புறப்பட்டோம்.

கன்யாகுமரி மாவட்டத்தில் விளவங்கோட்டுக்கு என்று ஒரு தனிப் பண்பாடு உண்டு. பண்பாடு என்பது தனித்தன்மைக்குள் தனித்தன்மைக்குள் தனித்தன்மை என்று சென்றுகொண்டே இருப்பது. குமரிமாவட்டம் தமிழகத்திற்குள் முற்றிலும் பண்பாட்டுத்தனித்தன்மை கொண்டது. கேரளத்திற்கும் அது ஒரு விந்தையான அயல்நிலம்தான். இரு மாநிலத்தவருமே அதைப்பற்றி ஒருவகையான மயக்கத்துடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

கேரளபுரம் சுடர்கன்னிகள்
கேரளபுரம் சுடர்கன்னிகள்

கன்யாகுமரிமாவட்டத்திலேயே அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்கள் ஒருவகையான பண்பாடு கொண்டவை. இவை பழைய நாஞ்சில்நாடு எனப்படுகின்றன. கல்குளம் விளவங்கோடு பகுதிகள் பழைய வேணாடு. வேணாடு தக்கலை அருகே வில்லுக்குறி என்ற ஊரில் தொடங்குகிறது. களியக்காவிளைகடந்து கேரளத்தில் நெய்யாற்றின்கரையுடன் முடிகிறது. அதற்கப்பால் வேறு நாடுகள். கேரளம் அப்படி ஐம்பத்தாறு நாடுகளாலானது.

அவற்றில் நாஞ்சில்நாடு பழங்காலத்தில் நாஞ்சில்குறவன் என்னும் ஆட்சியாளரால் ஆளப்பட்டதாக சங்ககாலச் செய்திகள் சொல்கின்றன. சிதறால் கல்வெட்டும் சான்று. வேணாடு என்றால் வேள் நாடு. ஆய்வேளிர் ஆட்சி செய்த நிலம். ஆய் அண்டிரன் ஆட்சிசெய்தமைக்கான கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. நடுகல் கல்வெட்டுகளை பத்மநாபபுரம் அரண்மனையில் பார்க்கலாம்.

கேரளபுரம் ஆலயம் பின்பக்கம்
கேரளபுரம் ஆலயம் பின்பக்கம்

நாஞ்சில்நாடு கொஞ்சம் தமிழகச் சாயல்கொண்டது. (கொஞ்சம் பாலக்காடுச் சாயலும் உண்டு) மலைசூழ்ந்த வயல்கள். சோழர்காலக் கோயில்கள். வேணாடு நில அமைப்பிலேயே வேறுபட்டது. வேணாட்டின் பெரும்பகுதி மலையும் மலைசார்ந்ததுமான நிலம். நாஞ்சில்நாட்டைவிட இருமடங்கு மழை. ஆகவே கண்நிறைக்கும் பசுமை. விவசாயம், உணவுப்பழக்கம், பேச்சு தொனி எல்லாமே வேறு.

குமரிமாவட்டத்தின் இரு நதிகள் இங்கே உற்பத்தியாகின்றன. இரண்டுமே ஜீவநதிகள். இவற்றில் இரண்டு பெரிய அணைக்கட்டுக்களும் இரண்டு மின்னுற்பத்திநிலைகளும் உள்ளன. சிறியதடுப்பணைகள் பத்துக்கும் மேல். இவ்வாறுகளின் நீர்தான் இன்று கூடங்குளம் உட்பட நெல்லையின் கணிசமான பகுதிகளுக்கு விடாய் தீர்க்கிறது.

7
திக்குறிச்சி ஆலய முகப்பு

வேணாட்டின் தொன்மையான ஆலயங்கள் இரண்டு. திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் சங்ககாலம் முதல் குறிப்புடையது. ’வளநீர் வாட்டாறு’ என்று எழினியாதனை மாங்குடிக் கிழார் புறநாநூறு 396 ஆம் பாட்லில் வாழ்த்துகிறார். (புறநாநூறு)

திற்பரப்பு மகாதேவர் ஆலயம் அதேயளவுக்குத் தொன்மையானது. கிராதமூர்த்தி அக்கால காபாலிக மரபினரின் தெய்வம். சமணத்தலங்களான சிதறால் மலைக்கோயில் திருநந்திக்கரை குடைவரைக் கோயில் ஆகியவை இங்குள்ளன.

5

இவற்றைத்தவிர கேரளபாணியிலான முக்கியமான ஆலயங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவை இந்நிலத்தில் உள்ளன. இங்குள்ள இரு ஆறுகளான தென் தாமிரவருணி அல்லது கோதையாறு, வள்ளியாறு இரண்டின் இரு கரைகளிலும் ஆற்றைநோக்கியபடி ஆலயங்களின் ஒரு வரிசை உண்டு. ஆலயங்களை ஆற்றால் தொடுத்து உருவாக்கிய மாலை போல.

இங்கே தமிழகத்தின் ஆகமமுறை பூசை இல்லை. அல்லது தமிழகத்திலுள்ள 16 உபச்சாரங்கள் செய்யும் பூசனைமுறை இல்லை, இவை வேறு ஆகமமுறைகள் கொண்டவை. இந்த ஆலயங்களின் பூசைகளை தாந்திரிக முறைப்படி செய்கிறார்கள். தாந்த்ரீக முறைசார்ந்த பூசைநெறிகள் உண்டு. மாத்தூர் மடத்தின் முதன்மை தாந்த்ரீகர் அவற்றுக்குப் பொறுப்பானவர்.

9[அளப்பங்கோடு முகப்பில்]

பெரும்பாலும் எல்லா ஆலயங்களும் மிக அழகிய சூழலில் தனிமையாக அமைந்தவை. ஆலயத்தைச் சுற்றி ஒரு தொன்மையான மலையாளக் கலாச்சாரம் இருந்தது. பெரிய ஓட்டுவீடுகள். பெரும்பாலும் நாயர்கள், அரிதாக வேளாளர்கள். ஆலயப்பொறுப்புள்ள போத்திகள் எனும் துளுபிராமணர்கள் ஆகியோர் அடங்கியது கோயில்வட்டம். தஞ்சாவூர் மாதிரி. ஆனால் தஞ்சாவூரில் கோயிலைச்சூழ்ந்த பகுதிகள் கைவிடப்பட்டு கிடப்பதுபோல இங்கே காணமுடியாது

ஆண்டுக்கு குறைந்தது இரு திருவிழாக்கள். திருவிழாக்களில் கண்டிப்பாக கதகளி உண்டு. மலையாள மாதந்தோறும் வெவ்வேறு பூசனைமுறைகள். பருவத்திற்கேற்ப தனித்தனியான பூசைகள்.

11

இருபது வயது வரை நான் வாழ்ந்த சூழல். பசுமை, மழை, கோயில்கலைகள், இலக்கியம். மிகசிறிய உறவு –கிராமச் சுற்றம். மொத்த வாழ்க்கையும் கோயிலுடன் பிணைந்தது. கோயில் இயற்கையுடனும் சங்ககாலம் முதல் அறுபடாதுவரும் சேரர் பண்பாட்டு மரபுடனும் தொடர்புடையது. அதை அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் காட்டவிரும்பினேன். அவற்றை நான் சொல்லிச் சொல்லி அவர்களிடம் ஒரு கனவை உருவாக்கியிருக்கிறேன்.

என் புனைவுலகில் பெரும்பகுதி இந்நிலத்தில்தான் நிகழ்ந்துள்ளது. நிலமென்றால் கதை நிகழும் களம் மட்டுமல்ல. அது உண்மையில் கதைக்கான அடிப்படைப் படிமங்களின் வெளி. கதையின் புறம் மட்டுமல்ல அகமும் நிலம்தான்.

திருவரம்பு படித்துறை
திருவரம்பு படித்துறை

காலை ஏழரை மணிக்குக் எங்கள் காரிலேயே கிளம்பி கேரளபுரம் சென்றோம். தக்கலை அருகே உள்ள கேரளபுரம் தொன்மையான ஊர். உண்மையில் கேரளம் என்ற சொல்லின் ஊற்றே இவ்வூர்தான் என்று ஒரு கூற்று உண்டு. தொனமையான தலக்குளம் அரசகுடும்பத்தின் குடும்ப ஆலயம். பின்னாளில் பெரிதாக்கிக் கட்டப்பட்டது.

திருவிதாங்கோடு ஆலயம் மிக அருகில்தான். சிவன்கோயில். வட்டவடிவமான கருவறை. 1317ல் வேணாட்டை ஆண்ட வீரகேரள வர்மனால் இவ்வாலயத்தின் முதற்கட்டுமானம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் மரத்தடியில் சிறிய பதிட்டையாக சிவக்குறி மட்டும் இருந்தது. வட்டமாக கருவறையை உள்ளிட்டு பிரகாரமும் சுற்றுமண்டபங்களும் பின்னர் அமைக்கப்பட்டன. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் மேலுமொரு பெரிய பிரகாரம் கட்டப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட சுடர்மங்கையருடன் அமைந்துள்ள இந்த பிரகாரம் இன்று பழுதின்றி ஆனால் புழக்கமில்லாமல் கிடக்கிறது.

திருவரம்பு ஆற்றங்கரை
திருவரம்பு ஆற்றங்கரை

ஆலயவளாகமே பச்சைப்பசேலென்று அமைதியில் மூழ்கியிருந்தது. மெல்லிய தூறலும் குளிர்காற்றும் இருந்தன. ஜூன் மாதத்தில் குமரிமாவட்டத்தையும், கேரளத்தையும் சுற்றிப்பார்ப்பதே நல்லது. இளந்தூறல் இருந்துகொண்டே இருக்கும்.

ஆலயவளைப்புக்குள் இன்னொரு சிறிய கோயில் உள்ளது. ஒரு மரத்தடியில் அமைந்த அதிசயவினாயகர் தட்சிணாயணத்தில் வெண்ணிறமாகவும் உத்தராயணத்தில் கருமையாகவும் இருப்பார் என்கிறார்கள். மழையால் உருவாகும் ரசாயன மாற்றம் அச்சிலை அமைந்த குறிப்பிட்ட கல்லை அப்படி மாற்றுகிறது. குமரிமாவட்டத்தின் தனிப்பண்பாட்டைப் பார்க்கவேண்டியவர்கள் தவறவிடக்கூடாத ஆலயம் இது.

16

அங்கிருந்து மார்த்தாண்டம் சென்று திரும்பி திக்குறிச்சி சென்றோம். கோதையாற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த ஊர். ஆற்றில் செந்நிற நீர் பெருகிச்சென்றுகொண்டிருந்தது. அதில் நீந்திக்குளித்துக்கொண்டிருந்தார்கள். குமரிமாவட்டத்தில் நீரில் நீந்திக்குளிப்பது வாழ்க்கையின் சுகங்களில் முக்கியமானது என்னும் எண்ணம் உண்டு. ‘முங்கிக்குளி சீவிதம்’ என்று ஒரு சொலவடை உண்டு. கவலையே இல்லாமல் ஒரு சின்ன வட்டத்திற்குள் வாழ்வது என்று அதற்கு பொருள்.

அழகிய கேரளபாணி ஆலயம். புகழ்பெற்ற மலையாள நடிகர் திக்குறிச்சி சுகுமாரன்நாயரின் சொந்த ஊர் இது. சிறிய கோயில்கிராமம். ஆலயம் நன்றாகவே பராமரிக்கப்படுகிறது. வட்டமான கருவறை. ஓர் ஆலயம் அழகாகவும் தூய்மையாகவும் ஆளரவமில்லாமலும் இருப்பதே ஊழ்கநிலையை அளிக்கிறது

திருவரம்பு ஆறு
திருவரம்பு ஆறு

அருகிலிருக்கும் அளப்பங்கோடு ஆலயத்திற்கு அங்கிருந்து சென்றுசேர்ந்தோம். அளப்பங்கோடு காளமுத்தப்பன் பூதத்தான் என்றே சொல்லப்பட்டார். இப்போது சாஸ்தாவாகவும் கருதப்படுகிறார். இது ஒரு பெரிய இலஞ்சிமரத்தடியில் அமைந்த நாட்டார் ஆலயம். சுற்றிலும் பிரகாரம். நடுவே திறந்த வெளியில் அந்த மரம். அதை உள்ளிட்டு அழியிட்ட கோயில். சிலை மிகச்சிறிது.

ஒரு காலகட்டத்தில் இந்த வழியாகத்தான்  கேரள மையநிலத்துக்கு மாடுகளைக் கொண்டு சென்றிருந்தார்கள். ஒரு முறை மாடுகளில் சில நோயுற்றபோது இந்த மரத்தின் அடியில் நிறுத்திவிட்டுச் சென்றனர். அவை இறந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால் சில மாதங்கள் கழித்து வந்தபோது அவை மிகச்சிறப்பாக நின்றிருப்பதைக் கண்டார்கள். அவற்றைக் காக்கும் தெய்வம் இந்த மரத்தடியில் உள்ளது என்று உணர்ந்து அவற்றை இங்கே நிறுவினார்கள் என பழங்கதை.

முழுக்கோடு பள்ளி
முழுக்கோடு பள்ளி

அளப்பங்கோடு பூதத்தான் பல குடும்பங்களுக்குக் குலதெய்வமும் கூட. இங்குள்ள வழிபாடு அரிசிபாயசமும் வெண்சோறும். மாடு கன்றுபோட்டால், புதிய மாடு வாங்கினால், மாடு நோயுற்றால் வேண்டுதல்கள் செய்வார்கள். குழந்தைகள் பிறந்தால் வழிபாடுகள் உண்டு. புதுமணத் தம்பதிகள் வந்தாலும் வழிபாடு உண்டு.

நாங்கள் சென்றபோது நல்ல கூட்டம். பல கூட்டுக்குடும்பங்கள் வந்திருந்தன. பந்திருநாழி வழிபாடு என்பது பன்னிரண்டு நாழி அரிசியால் பொங்குவது, வெல்லப்பாயாசமும் வெண்சோறும். அதை அங்கேயே அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள். நாங்கள் பார்த்த ஒரு பெருங்குடும்பம் கேரளத்தில் இருந்து வந்திருந்தனர்.

q

முழுக்கோடுக்குச் சென்றோம். அங்கே வந்து மிகச்சரியாக நாற்பத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு. வரக்கூடாது, என் நெஞ்சிலுள்ள சித்திரம் அழிந்துவிடும் என்று வருவதைத் தவிர்த்தேன். ஆனால் இது இன்னொரு வகை அனுபவம் என தோன்றியது.

நான் என் உள்ளத்தில் வைத்திருந்த இடம் முழுமையாகவே மாறிவிட்டிருந்தது. முழுக்கொடு ஒய் எம் சி ஏ எங்களூரின் முக்கியமான நிறுவனம். நிறைய ஆங்கில நூல்களுடன் ஒரு நல்ல நூலகம் இருந்தது. நான் எட்டாண்டுகள் அதிலேயே பழிகிடந்திருக்கிறேன். பெரிய மாற்றமில்லாமல் அப்படியே இருந்தது. நூலகம் இல்லை என்று நினைக்கிறேன்.

கோதையாறு திக்குறிச்சி ஆலயத்தருகே
கோதையாறு திக்குறிச்சி ஆலயத்தருகே

அன்று ஆரம்பப் பள்ளி ஒரு பெரிய மைதானத்தின்  எல்லையில் இருந்தது. அந்தக்காலத்தில் அந்த திறந்தவெளிதான் ஊரின் மையம். ஊரே அந்தியில் அங்கே கூடியிருக்கும். இரவுபகலாக மிகப்பெரிய கிணற்றில் தண்ணீர் சேந்திக்கொண்டிருப்பார்கள். நாலைந்து இடங்களில் கபடி, ஓணப்பந்து விளையாட்டுக்கள் நிகழும். அந்த மைதானமே ஏராளமான அரசு கட்டிடங்களாக மாறிவிட்டிருந்தது. ஆனால் பள்ளியின் பழைய கட்டிடம் அப்படியே இருந்தது.

சாலையின் இருபக்கமும் வீடுகள் செறிந்திருந்தன. நெரிசலான ஒரு நகரம் போலிருந்தது முழுக்கோடு. எல்லாமே வசதியான பெரிய வீடுகள். மாடக்குளம் வரை சென்றோம். நான் வழக்கமாக குளிக்கும் குளம். நீர் கெட்டுப்போய் கிடந்தது. ஒரு காலத்தில் அக்குளம் இருக்குமிடம் முழுக்க வயல்வெளிகள். இப்போது ரப்பர்தோட்டங்களும் வீடுகளும். அந்த இடத்தின்மேல் என் மனதிலிருந்த இடத்தை ஒட்டிவைக்க முடியவில்லை. உள்ளூர ஏதோ ஒன்று அசைவுகொண்டது. பதைப்புடன் நோக்கிக்கொண்டே இருந்தேன்.

முழுக்கோடு ஒய் எம் சி ஏ
முழுக்கோடு ஒய் எம் சி ஏ

நாங்கள் குடியிருந்த அணியாட்டுவீடை கண்டுபிடிக்கமுடியவில்லை. அது அந்தக்காலத்தில் பெரிய வீடு. வீட்டுக்கூடத்தில் பெரிய ஊஞ்சல்கட்டி ஆடுவோம். அது இருக்க வாய்ப்பில்லை. பழையபாணி நாலுகெட்டு வீடு. அப்போதே ஐம்பதாண்டு பழையது. அப்பா விசாலமான வீட்டில்தான் எப்போதும் வாழவிரும்பினார்.  பெரிய வீடு வேண்டும் என்றுதான் அருமனையில் பதிவு அலுவலகம் இருந்தபோதிலும் முழுக்கோடுக்கு வந்தார்.

அப்பா எப்போதுமே தன்பிள்ளை பிறர்பிள்ளை என்ற பேதம் அறிந்தவர் அல்ல. எங்கள் வீட்டில் சாதாரணமாக இருபது பிள்ளைகள் விளையாடுவார்கள், சாப்பிடுவார்கள், இரவு கூடத்தில் பெருங்கூட்டமாகத் தூங்குவதும் உண்டு.

 

மாடக்குளம் இன்று
மாடக்குளம் இன்று

அந்த இல்லத்தின் அறப்புரையில் [இணைப்புக் கட்டிடத்தில்] அம்மாவின் தோழி குடியிருந்தார்கள். அவர்கள் திக்குறிச்சி சுகுமாரன் நாயரின் அண்ணாவின் இரண்டாம் மனைவி. அவர் வழக்கறிஞராக குழித்துறையில் பணியாற்றினார். பின்னர் நெய்வேலிப்பக்கம் அக்குடும்பம் மாற்றலாகிச் சென்றுவிட்டது. அவர்களின் மூத்தவளுக்கு அங்கே வேலைகிடைத்தது.

இப்பகுதியில் அன்றெல்லாம் ஓலைக்கூரைவீடுகள்தான். சில வீடுகளே ஓடிட்டவை. இன்று ஒரு வீடுகூட ஓலோ ஓடோ இல்லை. எல்லாமே சிமிட்டிக்கூரை வீடுகள். பலவண்ணங்களில். மழையின் இருளிருந்தமையால் ஏதோ ஓர் அறியாத அயல்நாட்டு தெருவில் செல்வதுபோலத் தோன்றியது.

திருவரம்பு வீடிருந்த இடம்
திருவரம்பு வீடிருந்த இடம்

முழுக்கோட்டில் அன்று செயலாக இருந்த காபிரியேல் நாடாரின் சிறிய மளிகைக்கடை அப்படியே பாழடைந்து இருந்தது. அங்கே கடைநடப்பதுபோலத் தெரியவில்லை. இடித்துக் கட்டியிருக்கவுமில்லை.

அருமனைக்குச் சென்றோம்.  நான் படித்த அருமனை அரசு உயர்நிலைப்பள்ளியை காட்டினேன். நான் மிதித்து ஏறி நெல்லிக்காய் பறித்து அடிவாங்கிய, இந்திய சுதந்திரம் இருபத்தைந்து ஆண்டு நிறைவு ஸ்தூபி அப்படியே இருந்தது. பள்ளியின் முகப்புக்கட்டிடமும் மாற்றமில்லாமல் இருந்தது.  வாரம் இருமுறை நான் சென்று நின்று அடிவாங்கும் தலைமை ஆசிரியரின் அலுவலக முகப்பு. நான் கல்கோனா வாங்கும் கடை இடிந்து கைவிடப்பட்டு எஞ்சியிருந்தது.

பள்ளி முகப்பில் இருந்த கடை. கல்கோனா மிட்டாய் இங்கே பிரபலம்
பள்ளி முகப்பில் இருந்த கடை. கல்கோனா மிட்டாய் இங்கே பிரபலம்

அங்கிருந்து திருவரம்பு சென்றோம். நான் வளர்ந்த ஊர். என் பெரும்பாலான கதைகளின் களம். சென்ற முறை ஆவணப்படவேலைக்காக வந்தபோது எங்கள் வீடிருந்த இடம் முழுக்க ரப்பர் நின்றது. இப்போது மொத்த ரப்பரையும் முறித்து வெட்டவெளியாக்கி மரவள்ளி நட்டிருந்தனர். ரப்பர் தோட்டங்கள் பெரிய நஷ்டத்தை அளிக்கக்கூடியனவாக ஆகிவிட்டிருக்கின்றன. படிக்கட்டில் அமர்ந்து அக்காலகட்டத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஆறுவரை இறங்கிச்சென்றோம்

பொதுவாக நான் கண்டது இந்நிலப்பகுதியின் அழகும் சிறப்பம்சமுமான நீர்நிலைகள் அனைத்துமே அண்மைக்காலத்தில் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு அழிந்துவிட்டன என்பதே. பொதுப்பணித்துறை தூர்வாரிச் சீரமைப்பதில்லை. எல்லா நீர்நிலைகளிலும் சாக்கடைகள் கலக்கின்றன. ஊர்ப்பராமரிப்பே இல்லை.

 

aae

மழைமிகுந்த இடமாதலால் நீர் நிறையவே உள்ளது. ஆனால் நெல் ாழை என வேளாண்மை ஏதுமில்லை, ரப்பர் மட்டுமே. ஆகவே நீர்நிலைகள் எவருக்கும் தேவையில்லை. குளங்களில் மிக அரிதாகவே சிலர் நீராடுகிறார்கள். ஒருகாலத்தில் நாங்கள் நீந்தித்திளைத்த குளங்கள் எல்லாமே பாசிபடிந்து கிடக்கின்றன. ஆல்யக்குளங்கள்கூட.

வாழ்க்கையின் மையங்கள் மாறுகின்றன. அன்று ஆறுதான் கிராமத்தின் மையம். எல்லா வீடுகளில் இருந்தும் தோட்டங்களில் இருந்தும் ஆற்றுக்கு பாதைகள் உண்டு. கிராமத்தில் ஆற்றில்தான் எப்போதும் மக்கள்கூட்டம் இருக்கும். குளிப்பவர்கள், மாடு கழுவுபவர்கள், வாழைக்கு நீர் இறைப்பவர்கள். கணிசமானவர்கள் ஆற்றங்கரை மணலில் ஊற்று தோண்டித்தான் குடிநீர் எடுப்பார்கள்.சும்மா வந்து அமர்வதும் படுத்துத் தூங்குவதும்கூட ஆற்றில்தான். அன்று ஆறு மிகப்பெரிய மணல்வெளி. நடுவே இன்றிருப்பதைவிட பலமடங்கு நீர் செல்லும். நீர் எந்த பருவத்திலும் குறைவதில்லை.  ஆற்றுக்கரையில் அமைந்த மகாதேவர் ஆலயத்தில் அடுத்தபடியாக சமூகச் செயல்பாடுகள் இருக்கும்

ns

இப்போது ஆலயம் மக்கள் நடமாட்டமில்லாமல் கிடக்கிறது. ஆற்றுக்கு எவரும் செல்வதில்லை என்று தெரிந்தது. செல்வதற்குப் பாதையே இல்லை. புதர்மண்டிக் கிடந்தது. சாஸ்திரப்படி சிவலிங்கத்துக்கு இருவேளையும் கோதையாற்றின் நீரைக்கொண்டுதான் அபிஷேகம் செய்யவேண்டும். நாராயணன்போற்றி குடம் குடமாக நீர் கொண்டுவந்து ஊற்றுவார்.

ஆற்றிலிறங்கும் காலடித்தடமே தெரியவில்லை. மணல் முழுமையாகவே சுரண்டப்பட்டுவிட்ட ஆறும் பெரிய சேற்றுக்குழியாக மாறி நீர் நிறைந்து சென்றது. இருபக்கங்களையும் ஆக்ரமித்து நீர்விளிம்புவரை தோட்டங்களாக்கியிருந்தனர். புறக்கணிக்கப்பட்டு எவராலும் பார்க்கப்படாமல் கொல்லைப்புறச் சாக்கடைபோல ஓடியது ஆறு. என் வாழ்க்கையில் அம்மாவுக்கு நிகரான இடம் கொண்டது. நூறுநூறு வர்ணனைகளால் நான் எழுதி எழுதி எனக்குள் பேருருக்கொள்ளச் செய்தது. அதுதான் உண்மையில் விஷ்ணுபுரத்தின் சோனா.

na

குலசேகரம் சென்று ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். அங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் சென்று குளித்தோம். திற்பரப்பில் நானும் ராதாகிருஷ்ணனும் நடந்தே வந்து தன்னந்தனியாகக் குளிப்போம். தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். இப்போது திற்பரப்பு ஒரு பெரிய சுற்றுலா மையம்.புதிய காலத்தின் கொப்பளிப்பு

திரும்பிவரும்போது கொஞ்சம் தூங்கிவிட்டேன். அரைமயக்க நிலையில் இயல்பாக பழைய திருவரம்பில், முழுக்கோட்டில் திக்குறிச்சியில் வாழ்ந்தேன்.நான் நேற்று இரவு தூங்க நெடுநேரமாகியது. கிருஷ்ணமதுரம் திகட்டத்திகட்ட தேவைப்பட்டது உளம் ஓய்ந்து மறைய.

aa

அந்த நிலம் எங்குள்ளது? இங்கு எங்கும் அது இல்லை. அந்த மனிதர்கள், அந்த காற்று அந்த ஒளி எதுவும். அப்படியொரு நிலம் இருந்தது என்பதற்கான சான்றாக சில பாழடைந்த தடையங்களே எஞ்சியிருக்கின்றன.

அந்நிலமும் வாழ்க்கையும் என்னுள் மிகத்துல்லியமாக உள்ளன. எப்போதுவேண்டுமென்றாலும் மீட்டு எடுத்து உள்ளே நுழையமுடியும். அந்நிலம் தன் கருவடிவுக்கு சென்றுவிட்டது. பருவடிவமாக ஆவதற்கு முன்னாலும் அவ்வாறு எங்கோ இருந்திருக்கக்கூடும்.

முதற்பதிவு Jun 19, 2018/மறுபிரசுரம்

 

முந்தைய கட்டுரைஇந்து மதாபிமான சங்கம்
அடுத்த கட்டுரைசுனில் கிருஷ்ணன் இணையச் சந்திப்பு இன்று