நோயின் ஊற்று

unnamed (1)

அன்புள்ள திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு,

கடந்த இரு வாரங்களாக மீண்டும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு, அலுவல் நிமித்தமாக சென்று வந்தேன். கோடைச் சூரியனின் மிக நீண்ட நேர பகற் பயணம், ஐரோப்பிய மண்ணை சொர்க்கமாகவும் அதன் மக்களை வண்ணமயமாகவும் மாற்றும் காலமிது. இன்னும் எப்படிச் சொல்வதென்றால், பொற் சிகைக் காற்றில் தவழ, இடது மணிக்கட்டில் கறுப்பும் வெண்முத்தும் கலந்த நெகிழ்வளை பிரள, பருத்தி வெள்ளையில் நீலச்சிறு பூக்கள் பதித்த சிறிய ஸ்கர்ட் அணிந்த மடந்தைப் பெண்ணொருத்தி, கண்களும் சிரிக்கும் சிரிப்பை உதட்டில் அணிந்து கொண்டே சைக்கிள் ஓட்டுவதைக் கற்பனை செய்துகொள்ளலாம். ஆம். ஐரோப்பியர்கள் சற்று அதிக இன்பத்துடன் இருக்கும் காலமிது.

அலுவலக நண்பர்களுடன் ஒரு இரவு விருந்திற்குப் பின் எனக்கு முன்னால் வந்து விழுந்து, காய்ந்த கையில் ஒட்டிய தாறுருண்டை போல் இன்றும் நீக்க முடியாமல் கிடக்கும் வினா இது.

எங்கு நாம் தவறினோம் ??

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகம், பொருளாதாரம் சரிந்து, பல லட்சம் பேர் மடிந்த அந்நிகழ்வு நம்மனைவரும் அறிவோம். மிக முக்கியமாக, பல தொழில்நுட்ப வல்லுனர்களும் , விஞ்ஞானிகளும் அமெரிக்காவுக்கும் மற்ற நேச நாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர். கல்லூரிப் பேராசிரியர்கள் பற்றி சரியாக எனக்குத் தெரியவில்லை. கட்டிடங்கள் மற்றும் நாட்டின் சொத்துக்கள் மிகப்பெரும் சேதத்தைச் சந்தித்தது என்றறிந்திருக்கிறேன். அமெரிக்காவின் “மார்ஷல் திட்டம்” பல மில்லியன் டாலர்களை ஜெர்மனிக்கு அளித்த காரணம், கம்யூனிசத்தைப் பரவாமல் தடுக்கவே. விக்கிப்பீடியாவைப் படித்த பொழுது, 1971ம் ஆண்டு வரை ஜெர்மன் அக்கடனை கட்டி அடைத்ததாம்.

இத்தனை வீழ்ச்சிக்குப் பிறகும் ஜெர்மனி இன்று தனிப்பெரும் பொருளாதாரமாக முன் நிற்கிறது. ஜப்பானும் அப்படியே. ஆனால் ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் மிகப்பெரும் வித்தியாசமிருக்கிறது. ஜப்பானின் கடும் உழைப்பு, ஜெர்மனியில் மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளில் கிடையாது.

இன்றும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளைப் பார்த்து நான் வியப்பது, அது உருவாக்கும் தொழிற் முனைவோரைப் பார்த்து மட்டுமே. மற்றும் அது உருவாக்கும் புதிய தொழிற் வாய்ப்புகளை.

நமது தேசத்தின் கதைக்கு வருவோம்.1947க்கு பின் இந்தியாவில் நிகழ்ந்த தொழிற் வளர்ச்சி பற்றி.

காங்கிரசின் ஆகப்பெரும் தோல்வி, கல்வி மற்றும் அடிப்படை கட்டுமானம் ஆகியவற்றில் அடிப்படை அளவிலேயே பல ஆண்டுகள் வைத்திருந்தது தான். மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இன்னும் மோசம்.

தமிழ்நாடு தற்போது இருக்கும் ஓரளவு வலுவான பொருளாதார நிலைக்குக் காரணம், காமராசரின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட தொலை நோக்கு திட்டங்களினால் தான். திராவிட ஆட்சிகளில், குறிப்பாக திமுக மட்டுமே தொழிற் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.

காந்தி எனும் பேரியக்கம், அஹிம்சையையும் போராட்ட குணத்தையும் இந்தியர்களுக்கு போதித்ததை நான் உணர்கிறேன். தொட்டும் தொடாத குறையாக நமக்குள் அது இன்னும் இருக்கிறது.

ஆனால் பொருளாதார தற்சார்பு மற்றும் தன்னிறைவுக்காக அவர் வகுத்த குணம் என்ன? சாத்வீக போராட்ட முறை சரிதான், அனால் தொழிற் வளர்ச்சியில் சாத்வீக அணுகுமுறை அவரால் விதைக்கப் பட்டதா??

இத்தனைக் கோடி பேரில் விரல் விட்டு என்னும் அளவுக்கே தொழில் முனைவோர் இருந்ததற்கு காரணம், 1950 லிருந்து 1990 வரை இருந்த அந்த “சாத்வீக காதி” மனப்பான்மை காரணமா?

இந்திய அரசியல்வாதிகளின் மேல் எனக்கு எந்த அபிப்பிராயமும் கிடையாது. அடிப்படை பொருளாதார அறிவில் ஒரு விழுக்காடு கூட இல்லாதவர்கள் தாம் 99% அரசியல்வாதிகள். சுதந்திர இந்தியாவில் இன்றும் மெக்காலே கல்வி முறை கடைபிடிக்கப்படுகிறது என்பதும் “அடிமைக்கல்வி முறை” என்று அது அழைக்கப்பட்டது என்றும் கேள்வி.

அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறாமல் பொதுமக்களாகிய நமக்குள் இருக்கும் போதாமை எங்கிருந்து வந்தது எனும் கேள்வி தான் இன்னும் குடைகிறது.

தொழில் முனைவோர் என்றாலே டீக்கடை, ஹோட்டல், பஜ்ஜிக்கடை என்றாகிப் போனது கீழ்த்தட்டு மக்களின் நிலையெனின், நடுத்தட்டு மக்களில் இன்றும் அரசு வேலை அல்லது ஏதோ ஒரு இடத்தில் கை நிறைய சம்பளம் என்ற அளவிலேயே இருக்கிறது.

நம்மில் ஏன் முதலாளிகள் தோன்றுவதில்லை?? எங்கு நாம் தவறினோம் ??

அன்புடன்

சங்கர் கிருஷ்ணன்

***

அன்புள்ள சங்கர்

பல காரணங்கள். ஆனால் நான் இன்று முதன்மையாகக் கருதுவது நமது நேர்மையின்மைதான் காரணம் என்று. இன்று முனைவர் பட்ட ஆய்வுசெய்யும் ஒரு பெண் என்னிடம் பேசினார். முனைவர் ஆய்வுக்கு அரசு அளிக்கும் மொத்த உதவித்தொகையையும் அவளுடைய ஆய்வுவழிகாட்டியான பேராசிரியர் எடுத்துக்கொள்கிறார். கூடவே அவருடைய மனைவியின் கடையில் வேலைபார்க்கச் சொல்கிறார்.

 “ஆய்வுக்கான பொருட்களை எல்லாம் நான் வீட்டிலிருந்து காசு கொண்டுசென்று வாங்கவேண்டும். செலவு குறைவாகச் செய். ஒப்பேற்றினால்போதும் என்கிறார் பேராசிரியர்” என்றாள் அந்தப்பெண். நான் “எல்லா பேராசிரியர்களும் இப்படித்தானா?” என்று கேட்டேன். அப்படி அல்லாமல் உதவித்தொகையை மாணவர்களுக்கே அளிக்கும் பேராசிரியர்களைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை” என்றாள்.

இப்படி ஒரு கீழ்மையைச் செய்வதைப்பற்றி எந்தப்பேராசிரியருக்கும் எள்ளளவும் உறுத்தல் இல்லை. அவருடைய மனைவிக்கு பிள்ளைகளுக்கு அதில் ஒவ்வாமை இல்லை. அவர் இதைச்செய்வதை அறிந்தால் சொந்தக்காரர்களோ நண்பர்களோ அவரை இழிவாக நினைக்கப்போவதில்லை. நான் முன்பு அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற தமிழ்ப்பேராசிரியரின் மகனிடம் அவருடைய தந்தை இத்தகைய கீழ்மைக்கு பேர்போனவர் என்று தெரியுமா என்று கேட்டேன். அவருக்கும் எந்த உறுத்தலும் இருந்ததாகத் தெரியவில்லை.

இது எல்லாத் தளங்களிலும் நீடித்திருக்கிறது இங்கே. சமீபத்தில் கோவையில் சீன நிறுவனம் ஒன்று வாடகைச் சைக்கிள்களை அளிக்கும் சேவையைத் தொடங்கியது. சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று அந்நிறுவனத்தின் எந்தக்கிளையில் வேண்டுமென்றாலும் திருப்பி அளிக்கலாம். நூறுசைக்கிள்கள் முதல்தவணையாக கொடுக்கப்பட்டன. அனேகமாக அத்தனை சைக்கிள்களையும் வாடகைக்கு எடுத்துச்சென்றவர்கள் திருடிக்கொண்டார்கள். அதன்பூட்டை உடைத்தார்கள். உடைக்கமுடியாதபோது தூக்கி வீசினார்கள். சீனநிறுவனம் சேவையை நிறுத்திக்கொண்டு மேலதிக பாதுகாப்பு முறைகளை ஆராய்கிறது. இது நம்மை நமக்குக் காட்டுகிறது.

சராசரி இந்தியன் மோசடிக்காரன் என்பதிலிருந்தே நம் சரிவுகள் ஆரம்பமாகின்றன. ஆசிரியர்களைப் பற்றிச் சொன்னேன். இன்று கல்லூரி ஆசிரியர் பணி ஒருகோடி ரூபாய்க்கு அரசியல்வாதிகளால் விற்கப்படுகிறது. அப்படியென்றால் கல்வி எப்படி இருக்கும்? நேர்மையின்மையால் சமூக ஒப்பந்தங்கள் உருவாக முடியவில்லை. ஒரு தொழிலுத்தியை நீங்கள் எவரிடமேனும் சொன்னால் அது திருடப்படும். ஒரு தொழிலெண்ணத்தை நம்பி எங்கும் கடன் கிடைக்காது, கொடுத்தால் அதை மோசடி செய்வார்கள். மோசடி செய்பவர் மோசடியில் ஒருபகுதியை அளித்தால் எங்கும் பணம் கிடைக்கும்.

இந்தியாவின் தொழில்துறையின் மிகப்பெரிய சிக்கல் என்ன என்று விசாரித்துப்பாருங்கள், வசூல் என்பார்கள். விற்றபணத்தை திரும்பப்பெறுவதே எந்தத்தொழிலிலும் பெரும் இடர். அதற்கு கடுமையான உழைப்பு தேவை.

ஆனால் இதைப்பற்றி நம் சூழலில் எவரும் பேசுவதில்லை. பேசினால் நேர்மையின்மையே ஒரு தகுதி என்று வாதிடுவார்கள்.இங்கே பேசப்படும் புரட்சி, சமூகக்கொந்தளிப்பு எல்லாமே நேர்மையின்மையை மழுப்புவதற்காகச் செய்யப்படுவன மட்டுமே. நம் சூழலில் உரக்கச் சத்தம்போடுபவர்கள் அப்பட்டமான திருடர்களை அரசியல்தலைவர்களாகக் கொண்டாடுபவர்கள். இங்கிருந்தே நோய் தொடங்குகிறது.

ஜெ

***

முந்தைய கட்டுரைகுருவாயூரின் மேகம்
அடுத்த கட்டுரைபாண்டவதூதப் பெருமாள்