ரயில்மழை

maxresdefault

சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டேன். காலை முதலே உக்கிரமான மழை. இங்கு தென்மேற்குப்பருவமழைக்கே ஒரு கம்பீரம் உண்டு. வடகிழக்குப்பருவமழை நின்று நெடுநேரம் அறைந்து ஊற்றி மெல்ல ஓய்ந்து நெடுநேரம் இடைவெளிவிட்டு அடுத்த அறையை தொடங்கும். ஆனால் தென்மேற்குப்பருவமழை ஓய்வதேயில்லை. ஓய்ந்ததுமே எழும். அறைந்தறைந்து பொழியும். மீண்டும் கருமைமூண்டு பொதிந்து நாற்புறத்தில் இருந்தும் வீசிச்சொடுக்கும். கிளம்பியதும் மழையில். ரயில் நிலையமே முகில்கூட்டங்களால் மூடப்பட்டிருந்தது. இடி மின்னல் ஏதுமில்லை. ஒரு மாபெரும் அருவிக்கடியில் நின்றிருந்தது நகரம்.

கொஞ்சம் நனைந்துகொண்டுதான் ரயிலில் ஏறினேன். கால்வரை அணிந்திருந்த டிராக்சூட் கொஞ்சம் நனைந்துவிட்டது. தூங்குவதற்குள் காயவேண்டும்.  சாம்பல்நீலநிறமாக சூழ்ந்திருந்த காற்றுவெளியில் நீலத்தின் சாம்பலின்  கருமையின் அழுத்தமாறுபாடுகளால் சமைக்கப்பட்ட சூழ்வெளி திகைப்பூட்டும் அளவுக்கு புத்தம்புதிதாக இருந்தது. ஆகவே ரயிலின் வாயிலருகே நின்றுகொண்டேன். மழைபார்க்க ரயில் மிக வசதியானது. எந்தப்பக்கமாக மழை வீசுகிறதோ அதற்கு மறுபக்க கதவை திறந்து நின்றுகொண்டிருந்தால் மழையின் பேருரு பார்க்கக்கிடைக்கும்

rain-kerala1_0

நான் கதவைத்திறந்தபோது ரயில்வே ஊழியர் ஒருவர் “பேய்மழை சார். சனியன், நாலுநாளா சாத்திட்டிருக்கு” என்றார். திகைப்பாக இருந்தது. “நீங்க எந்த ஊரு?” என்றேன். “நமக்கு மருதப்பக்கம் சார்” என்றார். தமிழகத்தின் வரண்டநிலத்து மக்கள் வரட்சியினாலேயே மழையை விரும்புவார்கள் என்பது ஒரு தவறான நம்பிக்கை. அப்படி இல்லை. அவர்களுக்கு மழை பழக்கமில்லை. வெயிலில்தான் இயல்பாக இருக்கிறார்கள். ஆகவே ஒருநாளுக்குமேல் மழை பெய்தால் சனியன் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

நாளெல்லாம் மழையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என் சொந்த ஊர் மக்கள். நனைவது ஒரு பொருட்டே அல்ல. எனக்கும்தான். எருமை என்று அருண்மொழி சொல்வதுண்டு. எருமையைப்போல மழையை அறிவது ஒரு கொடை. எங்களுக்கு மழை சலித்திருக்கவேண்டும் , ஆகவே மழையை வெறுக்கவேண்டும் என்பது ஒரு பிழையான நம்பிக்கை. அப்படி அல்ல. எங்களூர்க்காரர்களுக்கு மழைதான் கொண்டாட்டம். நாலுநாள் சுமாரான வெயிலடித்தால் “எளவு தீயாட்டுல்லா விளுது” என பிலாக்காணம் வைப்பார்கள். மழைமிகுந்த வால்பாறை, பீர்மேடு பகுதிகளில்கூட மக்கள் மழையில்தான் மகிழ்ச்சியாக இயல்பாக இருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் பீர்மேட்டில் மிகுதியும் எங்களூரிலிருந்து குடியேறியவர்கள்தான். பிறரால் அங்குள்ள மழையைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

மழை சற்றே நின்றது. வெளியே முன்பு நான் பார்த்தேயிராத நீலம். நீலமென நினைத்தால் நீலம். கண்ணனை கரியோன் என்றும் நீலன் என்றும் பாடல்கள் சொல்கின்றன. கார்வண்ணன் என்று மேலும் பொருத்தமாக. கார் நீலமும் கருமையும் ஒன்றேயான நிறம். மரங்கள் நீலத்தில் பதிந்திருந்தன. மலை முப்புடையை இழந்து வளைந்த சுவரென எழுந்தமையால் மிக அருகே வந்து நின்று விழிதடுத்தது. மலையின் அலைகளுக்கு மேல் மேகத்தின் குவைகள். அவை ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன.  மாபெரும் நீலத்திரைச்சீலை எங்கிருந்தோ ஒளியை பெற்றிருந்தது

சட்டென்று வயல்வெளிகள் வந்தன. நீல வானொளி நிறைந்திருந்த சதுரங்களின் பரப்பு . ஒளியே நீரெனத் தேங்கியது. ஓடையின் மிதக்கும்பாசி இலைகளின் சிமிழ்களில் தேங்கிய மழைத்துளிகள் கண்ணாடி மணிகளாலான பெரும் பரப்பென நலுங்கின. தாமரையிலைத் துளிகள் கோடி கோடி மீன்களின் விழிகள் போல. சட்டென்று ஒரு காற்றில் அனைத்துத் தாமரையிலைகளும் மறிய ஆற்றுப்பரப்பு நிறம் மாறியது. மரங்கள் சுழன்று உலைந்தன. மழை ஒரே வீச்சாக வானிலிருந்து இறங்கி மூடிக்கொண்டது. இளஞ்சாம்பல் நிறமான போர்வைக்குள் தெரிந்தன அனைத்தும். வயல்கள், அவற்றின் எல்லையில் மலைகள் நீரில் நனைந்த கறைகள் போல. நீர் கழுவிவிடும் அவற்றை என எண்ணச்செய்தது மழைப்பெருக்கு.

இவற்றை எச்சொற்களால் விவரிப்பது. எழுதுவதில் உள்ளத்தைச் சொல்வது எத்தனைக் கடினமோ அதைவிடக் கடினம் புறத்தைச் சொல்வது. நிறங்களை, வடிவங்களை சொல்ல மொழியால் இயலாது. ஒன்றை பிறிதொன்றால்தான் சொல்லமுடியும். கண்டுகேட்டு அறியும் பருவுலகை உவமைகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் என்பது எவ்ளவு விந்தை. ஒவ்வொரு கணமும் உள்ளே நிகழும் உள்ளத்தை வெளியே இருக்கும் பருப்பொருட்களைக்கொண்டே சொல்லமுடியும் என்பதற்கு நிகரான விந்தை அது

ரயிலில் நின்றிருக்கையில் மாபெரும் டிராலி ஒன்றில் காமிரா அமர பான் ஷாட் ஒன்று முடிவிலாது நீளுவதுபோல. மலைகள் மெல்லத் திரும்பின. வயல்கள் சுழன்று திசைமாறின. மழைத்தாரை விழிதொடு எல்லை வரை விரிந்த வெளியில் திரைச்சீலை போல அலையடித்தது. நீர்ப்பரப்புகள் கொந்தளித்து செதுக்குக் கண்ணாடிப்பரப்பென்றாயின. செங்கல்சூளையின் அனல் மழைக்குள் சீறிக்கொண்டிருந்தது. மழைக்குள் எழுந்த புகையை நீர்த்துளிகள் அறைந்து அழித்தன. ஆரல்வாய் மொழி கடந்ததும் மழை தணியத்தொடங்கியது

சாலைகளில் கார்கள் முகவிளக்குகள் சுடர நின்றிருந்தன. அவற்றின் ஒளி மழைச்சரடுகளில் பட்டு கரைந்து வெளியில் பரவியிருந்தது. செல்லும் வண்டிகளின் பின்விளக்கொளி குருதிபோல வழிந்து ஊறியது காற்றின் பரப்பில். வீடுகள் சிறகுபூட்டி அமர்ந்து மழையை ஏற்கும் பறவைகள் போல, மழைபட்டு உடல்சிலிர்த்து நிற்கும் பசுக்களைப்போல. அவற்றின் சாளரங்கள் ஒளிவிட்டன. தொங்கவிடப்பட்ட செந்நிறமான ஓவியச் சட்டங்கள். ஒவ்வொன்றிலும் சிறுசிறு வாழ்க்கை. காத்திருக்கும் மென்மையான சோபாக்கள். சிறிய நாற்காலிகள். அமர்ந்து மழைநோக்கும் வயோதிகர். எதையோ எடுத்துச்செல்லும் பெண். மழையில் நோக்கும்போது ஒவ்வொரு இல்லத்திற்குள்ளும் இதமான வெப்பம் நிறைந்திருப்பதுபோல. அங்குள்ள வாழ்க்கையை அது இனிதாக்கிவிடுவதுபோல. ஒவ்வொருவரும் மென்மையான தூவல்களுக்குள் ஒடுங்கி சொக்கி அமர்ந்திருப்பதுபோல.

அங்கு அமைதி நிலவட்டும். மழை விடியும்வரை பெய்யட்டும். விடிந்தபின்னரும் தொடரட்டும்.

கருவிமாமழை

முதல் மழை

மழையைத்துரத்துதல்

ஆனியாடி

இடவப்பாதி

மழையில் நிற்பது….

வரம்பெற்றாள்

பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்

பருவமழைப் பயணம்

பருவமழைப்பயணம் 2012

மழைப்பயணம் 2017

மழை- கடிதங்கள்

***

முந்தைய கட்டுரைகாலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11