‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5

tigஅவையில் ஒலித்த போர்க்கூச்சல்களையும் வாழ்த்தொலிகளையும் இளைய யாதவரும் அர்ஜுனனும் செவிகொள்ளவில்லை என்று சாத்யகிக்கு தோன்றியது. முற்றிலும் பிறிதொரு உலகில் அவர்கள் தனித்திருப்பதுபோல. அவர்களுக்கு மிக அப்பால் பிறிதொரு உலகிலென திரௌபதி அமர்ந்திருந்தாள். எத்தனை விரைவில் உணர்வெழுச்சியில் இருந்து கீழிறங்கினோம் என அவன் வியந்துகொண்டான். ஒரு சிறு எண்ணம் அனைத்து உணர்வுகளையும் திசைமாற்றிவிடுகிறது. அவன் இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அங்கு எழுந்துகொண்டிருந்த அந்தப் போர்க்கூச்சல்களில் அவன் காணும் விளக்கிவிடமுடியாத குறைவை அவர் உணர்கிறாரா?

சகதேவன் குனிந்து யுதிஷ்டிரரிடம் ஏதோ சொல்ல அவர் புன்னகையுடன் தலையசைத்தார். அந்த அவையோசைப்பெருக்கால் அவர் நிறைவுற்றிருப்பது தெரிந்தது. சகதேவன் திரும்பி நோக்க அவனை நோக்கி சுரேசர் சற்றே குனிந்தபடி ஓடிவந்தார். சகதேவனிடம் ஆணைபெற்று அவர் திரும்பிச்செல்ல அவரை நோக்கி பிற துணையமைச்சர்கள் சென்றனர். சுரேசர் சௌனகரிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு வெளியே சென்றார். யுதிஷ்டிரர் கையசைக்க கொம்புகள் முழங்கி அமைந்தன. அவை அமைதிகொண்டது. யுதிஷ்டிரர் “அவை நிகழ்வுகள் தொடர்க!” என்று ஆணையிட்டார்.

சௌனகர் மீண்டும் கைகூப்பியபடி மேடையில் ஏறி நின்றார். கொம்பொலி ஒன்று அலையெழுந்து ஓய அவை அவர் சொற்களுக்காக கூர்ந்தது. சௌனகர் “இந்த அவையில் முறைப்படி போர் அறிவிப்பு எழவிருக்கிறது. அஸ்தினபுரியை நெறிமீறி ஆளும் திருதராஷ்டிரருக்கும், அவர் மைந்தர் துரியோதனருக்கும், அவர் தம்பியருக்கும், அவர்களுக்குத் துணை நிற்கும் அனைத்து அரசர்களுக்கும் எதிராக குருகுலத்தின் மெய்யான குருதிவழியினரும், பிரதீபரின் சந்துனுவின் வழி வந்தவரும், பாண்டுவின் மைந்தரும், அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் முறையான அரசருமான யுதிஷ்டிரர் போர் அறிவிப்பு செய்கிறார். இப்போரில் அவருடைய தம்பியர் நால்வரும் துவாரகையின் தலைவர் கிருஷ்ண யாதவரும், பாஞ்சாலத்து அரசர் துருபதரும் அவர் மைந்தரும் விராட அரசரும் அவர் மைந்தரும் முதல்துணையாக உடன்நிற்பார்கள். வெற்றி அன்றி பிறிதெதையும் ஏற்கமாட்டோம் என்று அரசர் தன் குடித்தெய்வங்கள் மீதும், மூதாதையர் மீதும், குலச்சின்னமாக கொண்டுள்ள அமுதகலம் மீதும் ஆணையிட்டுரைக்கிறார்.  அதை அவருடைய முதல்துணைவர்கள் ஏற்றுரைக்கிறார்கள்” என்றார்.

அவையில் அனைவரும் எழுந்து தங்கள் கோல்களைத் தூக்கி வஞ்சினக் கூச்சலெழுப்பினர். “வெல்வோம்! குருதிகொண்டு மீள்வோம்! களவெறியாட்டு நிகழ்த்துவோம்! வெற்றிவேல் வீரவேல்! வெற்றி அல்லது வீரச்சாவு!” என்று கூவிய குரல்கள் அனைத்தும் ஒன்றென இணைந்து முழங்கின. சாத்யகி தன்னையறியாமல் எழுந்து கைவீசி கூவினான். பின்னர் திரும்பி தன் மைந்தர்களை பார்த்தான். அவர்கள் என்ன செய்வதென்றறியாமல் அவனை நோக்கி அமர்ந்திருந்தனர். அவன் சினத்துடன் பற்களைக் கடித்து அசங்கனிடம் “மண்சிலைகள்போல அமர்ந்திருக்கிறீர்களே! எழுந்து வஞ்சினமுரைத்து கூச்சலிடவேண்டியதுதானே?” என்றான். “தாங்கள் சொல்லவில்லை, தந்தையே” என்று அசங்கன் சொன்னான். “அறிவிலியாக பேசாதே. நான் சொன்னால்தான் இதை செய்வாயா?” என்று சாத்யகி கூவ அசங்கன் தன் இளையவர்களுக்கு கண்ணைக்காட்டிவிட்டு எழுந்து “வெற்றிவேல் வீரவேல்! உயிர்குடிப்போம்! எதிரிகளை தலைகொள்வோம்! களம் வென்றாடுவோம்!” என்று கூச்சலிட்டான். அவர்கள் உடன்சேர்ந்து குரலெழுப்பினர். சினி சிரித்துக்கொண்டிருப்பதை சாத்யகி கண்டான். அவன் நோக்கியதை உணர்ந்த சாந்தன் சினியைத் தொட்டு விழிகளால் தந்தையை சுட்டிக்காட்டினான்.

சௌனகர் போர் அறிவிப்பை பொறித்த ஓலை ஒன்றைத் தூக்கி அவையினருக்கு காட்டினார். பின்னர் அதை சிற்றமைச்சர் சுரேசரிடம் அளித்தார். அவர் அதை கொண்டுசென்று துருபதரிடம் அளித்தார். துருபதர் அதை வாங்கி தலைக்குமேல் தூக்கி “ஆணை! ஆணை! ஆணை!” என்று கூறி திருப்பியளித்தார். விராடரும் குந்திபோஜரும் அதை வாங்கி ஆணையுரைத்தனர். ஒவ்வொரு அரசரிடமாக அவையில் அந்த ஓலை சுற்றிவந்தது. சாத்யகியின் வலப்பக்கம் அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனரும், இளையோன் நீலனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஆணையிட்டதும் ஓலை அவன் கைக்கு வந்தது. அவன் அதை நடுங்கும் கைகளால் பெற்று தலைக்குமேல் வைத்து ஆணை உரைத்து அசங்கனிடம் அளித்தான். அசங்கன் ஆணையிட்டதும் ஓலை அவனைக் கடந்து இடப்பக்கத்திலிருந்த மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் அடைந்தது. அவர்கள் நிஷாதமரபின்படி அவ்வோலையை நெஞ்சில் வைத்து கைதூக்கி ஆணையுரைத்தனர். ஓலை அதற்கப்பால் அமர்ந்திருந்த மைய நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் சென்றடைந்தது. அது ஒரு சரடுபோல அங்கிருந்த அனைவரையும் ஊடுருவிச்சென்று ஒன்றெனக் கட்டியது.

ஓலை திரும்ப அரசமேடைக்குச் சென்றதும் யுதிஷ்டிரர் அதை வாங்கி தலைமேல் வைத்து வணங்கினார். பாண்டவர்கள் அனைவரும் சேர்ந்து அவ்வோலையை சுரேசரிடம் அளிக்க அவர் அதை செம்பட்டு விரித்த தாலத்தில் வைத்து அவைமேடையில் போடப்பட்ட பீடத்தில் வைத்தார். யுதிஷ்டிரர் உடைவாளை உருவி அந்த ஓலைமுன் தாழ்த்தி வணங்கியபின் தன் இடக்கை கட்டைவிரலைக் கிழித்து குருதி எடுத்து அதன் மூன்று சொட்டுகளை அந்த ஓலைமேல் வீழ்த்தினார். அவை வெறிகொண்டு போர்க்குரல் எழுப்பியது. கொம்புகளும் முழவுகளும் சங்குகளும் மணிகளும் இணைந்து முழங்கின. அவர் வாளை அதனருகே வைத்துவிட்டு பின்னகர்ந்து தன் அரியணையில் அமர்ந்ததும் வெளியே பெருமுரசு ஓசையிட்டது. அவ்வொலி கேட்டு மேலும் மேலுமென முரசுகள் முழங்க உபப்பிலாவ்ய நகரத்திலும் அதைச் சூழ்ந்த காடுகளில் விரிந்திருந்த பாண்டவர்களின் படைப்பிரிவுகளிலும் முரசொலி எழுந்தது. படைவீரர்களும் குடிகளும் எழுப்பிய போர்க்குரல் பெருமுழக்கமென எழுந்து வந்து அவைக்கூடத்தின் அனைத்து சாளரங்களையும் அதிரவைத்து உள்ளே கார்வையை நிரப்பியது.

சௌனகர் கை தூக்க கொம்போசை எழுந்தது. அவை அமைதியடைந்ததும் அவர் மீண்டும் உரத்த குரலில் “இங்கு கூடியிருக்கும் அனைத்து அரசர்களின் சார்பாகவும் மூத்த அரசர் துருபதர் தலைமையில் அமைந்த படைசூழ்கைக் குழு நமது படைநகர்வுகளை முழுமையாக வகுத்து ஏடுகளில் பொறித்துள்ளது. இவை உரியவர்கள் அனைவருக்கும் இப்போது வழங்கப்படும். படைகளின் முதன்மைத் தலைவர்களையும் துணைப்படைத்தலைவர்களையும் பிற பொறுப்புகளையும் முறையாக இங்கு அறிவிக்கிறோம். அரசர் சார்பில் இந்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படுகின்றன. அவை இவற்றை ஏற்றுக்கொண்டதென்றால் நம் படைஎழுகை தொடங்கிவிட்டதென்றே பொருள்” என்றார்.

பெரிய மரத்தாலத்தில் வைக்கப்பட்ட ஓலைத்தொகை சௌனகரிடம் கொண்டுசெல்லப்பட்டது. சௌனகர் “அவையினரே, இந்த ஓலையின் செய்திகள் அனைத்தும் அனைவரும் அறிந்தவையே. எனினும் முறையாக இவற்றை அவையில் வைக்கிறோம். செவிகொள்க!” என்றபின் அதை படிக்கத் தொடங்கினார். சுரேசர் அருகே நின்று ஓலைகளை எடுத்தளித்தார். “நமது படை இப்போது ஏழு அக்ஷௌகிணி அளவுள்ளது என்று அறிக! 2187 யானைகளும் 2187 தேர்களும் 6561 குதிரைகளும்  109,350 காலாட்களும் கொண்டது என்று அறிந்திருப்பீர்கள். சென்றகாலங்களில் இதன் பத்துமடங்கே ஓர் அக்ஷௌகிணி என கருதப்பட்டது என்று போர்நூல்கள் சொல்கின்றன.”

“வேலோ வில்லோ ஏந்தி காலாளரான பன்னிரு பதாதிக்குகள் புரவியூரும் ஒரு அஸ்வாரோகிக்கு நிகர் என்றும் பன்னிரு அஸ்வாரோகியர் பயின்று படைக்கலம் ஏந்திய ஒரு கவச யானைக்கு நிகர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. நமது படைகளின் கணக்கு இது. சிபிநாட்டிலிருந்து வந்த படைகளுடன் தன்விருப்பால் வந்த யாதவப் படைகளும் ஏழு நிஷாதகுடியினரின் படைகளும் இணைந்து உருவானது முதல் அக்ஷௌகிணி. அதை ரிஷபவனத்தின் சத்யகரின் மைந்தரும் விருஷ்ணிகுலத்தோன்றலுமான யுயுதானர் தலைமைகொண்டு நடத்துவார்.” தன் பெயர் சொல்லப்பட்டதும் சாத்யகி மெய்ப்புகொண்டு கைகூப்பினான். அவன் கையை அருகே அமர்ந்திருந்த அசங்கன் மெல்ல தொட்டான். சாத்யகி திரும்பிப்பார்த்தான். அசங்கனின் விழிகள் ஈரமாக மின்னிக்கொண்டிருந்தன. அவன் அசங்கனின் தோளில் கையை வைத்து முகத்தை திருப்பிக்கொண்டான்.

“ஆறு கிராதர்குடிப் படைகளும் பாணாசுரரின் படைகளும் இணைந்து உருவான ஓர் அக்ஷௌகிணி படையை குந்திபோஜர் தலைமைதாங்குவார். சேதிநாட்டு திருஷ்டகேது அரை அக்ஷௌகிணி படையுடன் வந்துள்ளார். மகதத்தில் இருந்து அவர்களின் பதினெட்டு தொல்குடியினர் அடங்கிய ஓர் அக்ஷௌகிணியுடன் ஜராசந்தரின் மைந்தர் சகதேவன் வந்துள்ளார். துருபதரின் தலைமையில் பாஞ்சாலப்படை ஓர் அக்ஷௌகிணி உள்ளது. விராடரின் ஓர் அக்ஷௌகிணி படைகள் மாவீரர் உத்தரனால் கொண்டுவரப்பட்டுள்ளன. தென்னகத்தில் இருந்து மலயத்வஜபாண்டியரின் தலைமையில் வந்துள்ளது அரை அக்ஷௌகிணி. அரக்கர்குடிகளும் நாகர்குடிகளும் இணைந்தால் அது ஓர் அக்ஷௌகிணி ஆகும். நம்மிடமுள்ள இந்தப் படை பாரதவர்ஷத்தில் இன்றுவரை கூடிய பெரும்படைகளில் ஒன்று. கௌரவப்படை பதினொரு அக்ஷௌகிணி அளவுள்ளது என்கிறார்கள். ஆனால் நாம் அறத்தால் இருமடங்கு ஆற்றல்கொண்டவர்களாகிறோம்.”

“தலைமைகொண்டு நடத்தும் படைகளின் எண்ணிக்கையையும் எதிர்கொள்ளும் படைகளின் எண்ணிக்கையையும் கொண்டு போர்த்திறலோரை நூல்கள் வகுக்கின்றன. அர்த்தரதி என்பவர் 2500 படைவீரருக்கு ஒருவர். ரதி 5000 வீரருக்கு தலைவர். ஏகரதி என்பவர் 40,000 படைவீரர்களை நடத்துபவர். அதிரதி எனும் வீரர் 60,000 வீரர்களின் முதல்வர். மகாரதியாக திகழ்பவர் 720,000 வீரர்களுக்கு நிகரானவர். அதிமகாரதி 8,640,000 வீரர்களை ஆள்பவர். அவையோரே, மகாமகாரதி என்பவர் மண்ணில் அரிதாக நிகழ்பவர். 24 அதிமகாரதிகளுக்கு நிகரானவர். நம்மிடம் மகாமகாரதியாக திகழ்பவர் இளைய யாதவர். ஆனால் அவர் தன் குடியினர் மறுபக்கம் படைகொண்டு வந்திருப்பதனால் அவர்களைக் கொல்ல விழையாமல் தான் படைக்கலம் ஏந்துவதில்லை என சொல்லளித்துள்ளார். நம்மிடம் அதிமகாரதியாக இளைய பாண்டவர் அர்ஜுனன் உள்ளார். மகாரதிகளாக உபபாண்டவராகிய அபிமன்யூவும் பீமசேனனும் பாஞ்சாலராகிய திருஷ்டத்யும்னனும் வில்முனிவர் சிகண்டியும் உள்ளனர். அதிரதிகளாக விராட இளவரசர் உத்தரனும், இளைய பாண்டவர்களாகிய சகதேவனும், நகுலனும், யாதவராகிய சாத்யகியும் உள்ளனர். ஏகரதிகளாக உபபாண்டவர்கள் எண்மரும் சேதிநாட்டு இளவரசர் திருஷ்டகேதுவும் மகதநாட்டு இளவரசர் சகதேவனும் உள்ளனர்” என்று சௌனகர் சொன்னார்.

சாத்யகி அவையில் பிறிதேதோ ஒன்று உருவாகி எழுவதை கண்டான். அது என்னவென்று உணரமுடியவில்லை, ஆனால் மிக அருகே ஓர் காணா இருப்பென உணர முடிந்தது. எக்கணமும் அதை எவரேனும் எழுந்து வினவக்கூடும் என்று எண்ணினான். சௌனகர் “போர் முதல்நாளில் பாண்டவருக்கு உரிய அஸ்தினபுரியின் படைகளின் முதன்மைப் படைத்தலைவராக பாஞ்சாலத்து அரசர் துருபதரை பேரரசர் யுதிஷ்டிரர் நிறுத்துகிறார். இப்படைகளுக்கு முதன்மைப் படைத்தலைமை கொள்ளும் முதுமையும் களப்பட்டறிவும் கொண்டவர். நம் படைகளின் ஆற்றல் மிக்க ஒரு பகுதி பாஞ்சாலத்திலிருந்து வந்தது. துருபதர் இப்போரை முன்னின்று நடத்தி அளிக்கும்படி பேரரசர் யுதிஷ்டிரர் கோருகிறார்” என்றார். அவையினர் கோல்தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். துருபதர் எழுந்து பாஞ்சாலத்தின் குலக்குறி பொறித்த கோலை தலைக்குமேல் தூக்கி அவ்வழைப்பை ஏற்றார்.

உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யர் துணைப்படைத்தலைவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். அவருடைய மைந்தர் தீர்க்கதந்தர் அவருக்கு துணைவராக அமைக்கப்பட்டார். ஒவ்வொரு துணைப்படைத்தலைமையாக அறிவிக்கப்பட்டு முடிந்தபோது போர்க்கூச்சல்களும் வாழ்த்தொலிகளும் வஞ்சினவிளிகளும் முற்றாக மறைந்து வெறும் சடங்கென ஆகிவிட்டிருந்தது. ஒவ்வொரு பெயர் சொல்லப்பட்டபோதும் அக்குடியினருக்கு குருதியுறவு கொண்டவர்கள் மட்டும் உரக்க வாழ்த்துக்கூற பிறர் வெறுமனே கோல்களை மட்டும் தூக்கினர். சாத்யகி சலிப்புடன் கால்களை நீட்டிக்கொண்டான். அச்சலிப்பு முதலிலேயே உள்ளம் உச்சத்தை அடைந்ததனால்தான் எனத் தோன்றியது. பின்னர் பிறிதொன்று நிகழும் என எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதனால்தான் எனத் தோன்றியது. கைகளை நீட்டி உடலை சோம்பல்முறித்தபடி திரும்பிப்பார்த்தபோது அரசர்கள் அனைவரும் திரௌபதியையே நோக்கிக்கொண்டிருப்பதை கண்டான். அவர்கள் உள்ளத்தில் எழுவதென்ன என்பதை அவன் உணர்ந்தான். அவன் உள்ளத்தில் மெல்லிய நடுக்கு குடியேறியது.

அறிவிப்புகள் முடிந்து சௌனகர் கைகூப்பி “இந்த அரசாணைகள் அனைத்தும் உரிய முறையில் ஓலையில் பொறித்து நாளை அனைவருக்கும் அனுப்பப்படும். இருள்நிலவுக்கு மறுநாள் புலரியில் இங்கிருந்து நமது படைகள் குருஷேத்திரம் நோக்கி கிளம்பும். வெற்றி கொள்க! வீரர் எழுக! அவர்களின் கைகளில் குருதிவிடாய் மிக்க படைக்கலன்கள் எழுக! அவர்களின் தோள்களில் அன்னை ஊட்டிய முலைப்பால் எழுக! உள்ளங்களில் மண்ணிற்கும் மானத்திற்கும் அறத்திற்கும் என்று பொருதி வீழ்ந்த மூதாதையர் எழுக! அருள்க தெய்வங்கள்!” என்றார். போர்க்குரல்களும் வாழ்த்தொலிகளும் எழுந்து அமைந்தன. சௌனகர் வணங்கி திரும்பிச்சென்றார்.

கொம்புகள் முழங்கி அமைந்தன. நிமித்திகன் அரசரின் சொல் எழவிருப்பதை அறிவித்தான். யுதிஷ்டிரர் எழுந்து கைகூப்பி “அவையோரே, இந்தப் பேரவையில் இவ்வண்ணம் ஒரு போர் அறிவிப்பு ஒருபோதும் நிகழலாகாது என்று முப்பதாண்டுகளுக்கும் மேலாக விழைந்தவன் நான். இன்று இப்போர் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி எந்நிலையிலும் எவ்வழியிலும் வெற்றி ஒன்றே நமது இலக்கு. நாம் வெல்கையில் வெல்வது அறம். நாம் புகழ் கொள்கையில் நிலைகொள்வது அழிவற்ற மெய்மை. ஓம்! அவ்வாறே ஆகுக!” என்றார். அவை “ஆம்! ஆம்! ஆம்!” என ஏற்றொலித்தது.

கைகூப்பி மும்முறை வணங்கி யுதிஷ்டிரர் திரும்புவதற்குள் பின்நிரையிலிருந்து அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர் எழுந்து “பொறுத்தருள்க அஸ்தினபுரியின், இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசே, ஒன்று மட்டும் உரைக்கப்படவில்லை. அது உரைக்கப்படாமல் இந்த அவை முழுமையடையாது. இங்கு நாங்களெல்லாம் படைக்கலன் கொண்டு எழுந்திருப்பது அதன்பொருட்டே. மெய்யுரைப்பதென்றால் அதற்கு மட்டுமே எங்கள் அன்னையரும் துணைவியரும் மகளிரும் எங்களை அனுப்பியிருக்கிறார்கள். பெண்ணை அவை நிறுத்தி பெரும்பிழை செய்தனர் தார்த்தராஷ்டிரர். அவர்களின் நெஞ்சு பிளந்து குருதி குடிப்பேன் என்று உங்களின் இளையவர் வஞ்சினம் உரைத்தார். அக்குருதி பூசி தலையள்ளி முடிவேன் என்று உங்கள் அரசி ஆணையிட்டாள். அது என்ன ஆயிற்று? இங்கே அது உரைக்கப்படவில்லை” என்றார்.

“ஆம்! மெய்!” என்று கூவியபடி அசுரர்களும் அரக்கர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் எழுந்தனர். ஹிரண்யகட்கர் “நாங்கள் அறியவேண்டியது இதுவே. இப்போர் எப்போது முடியும்? அஸ்தினபுரி வெல்லப்பட்ட பின்னரா? அரியணையில் தாங்கள் அமர்ந்த பின்னரா? வேதமுடிபு நிலைநிறுத்தப்பட்ட பின்னரா? அன்றி அரசியின் அவைச்சிறுமைக்கு பழிநிகர் கொள்ளப்பட்ட பின்னரா? அதை முதலில் உரையுங்கள்” என்றார். காரூஷ நிஷாதகுடித் தலைவர் அஷ்டஹஸ்தர் “ஆம், வஞ்சினம் முடிவதுவரை போர் நிகழுமா? அதை சொல்லியாகவேண்டும்” என்று கூவ அனைவரும் சேர்ந்து “ஆம், அதற்கு விடைவேண்டும்… அதை தெளிவுசெய்யவேண்டும்!” என்று கூச்சலிட்டனர்.

சௌனகர் அந்த நேரடியான வினாவால் திகைத்து கைதூக்கி “அவை நிறைவுறுகிறது. இது முறையான அறிவிப்புக்கான அவை மட்டுமே. அரசுசூழும் சொற்களமல்ல” என்றார். அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் “அந்த வேறுபாடுகள் எதுவும் எங்கள் குலங்களில் இல்லை. நாங்கள் இங்கு ஷத்ரியர்களாகவோ யாதவர்களாகவோ வந்தமரவில்லை. நிஷாதர்களாகவும் கிராதர்களாவும் வந்து அமர்ந்திருக்கிறோம். அவைச்சிறுமை கொண்டவள் எங்கள் குடியை சேர்ந்தவள் அல்ல. அவளுக்கும் எங்களுக்கும் எந்தக் குருதி உறவுமில்லை. பெண் என்பதனால் எழுந்து வந்தோம். இந்த அவையில் இதை ஆணையிட்டுரைக்கிறேன். பெண்ணின் பொருட்டன்றி வேறெதற்காகவும் எங்கள் குடிகள் இப்போரில் இறங்காது” என்றார். “ஆம் ஆம்” என்று அவையெங்கும் குரலெழுந்தது.

ஷத்ரியர்கள் அல்லாத அரசர்களும் குடித்தலைவர்களும் ஒன்றாக எழுந்துநின்று கூவினர். அசுரர் குடித்தலைவர் காகர் “ஆம், நாங்கள் படைகொண்டெழுந்தது அதன்பொருட்டு மட்டுமே. எங்கள் அன்னையரிடமும் துணைவியரிடமும் விடைகொண்டது அதற்காகத்தான்” என்றார். பீமன் “அமருங்கள் அரசர்களே, இப்போர் அதன்பொருட்டும்தான். அவ்வஞ்சம் அவ்வாறே உள்ளது” என்றான். “அல்ல, எங்களுக்கு அரசரின் சொல் வேண்டும். ஷத்ரியர்களின் போர்கள் முற்றழிவில் முடிவதில்லை என நாங்கள் அறிவோம். அதை நாங்கள் களிற்றுப்பூசல் என்கிறோம். வெல்லும் தரப்பு எதுவென்று ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்ட உடனே மறுதரப்பு துதிக்கை வளைத்து மத்தகம் தாழ்த்தி அமர்ந்து ஆணைபெற்று அடங்கித்தொடர ஒப்புக்கொள்கிறது. பாரதவர்ஷத்தில் நடந்த அனைத்து போர்களிலும் ஷத்ரியர்கள் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு கப்பம் கட்டியிருக்கிறார்கள். முற்றழிந்த ஷத்ரியர் எவருமில்லை” என்றார் காகர்.

பாணாசுரரின் மைந்தனான அக்னிசக்ரன் “மேலும் இங்கு இரு தரப்பிலும் நின்றிருப்பது ஒரே குருதி. இரு தரப்பிலும் உள்ளனர் குலமூத்தவர்கள். போரில் களம்படுதல் நிகழத்தொடங்கியதுமே மூத்தவர்கள் திகைத்து எழுவார்கள். வெல்வது எவர் தோற்பது எவர் என்று முதலிருநாள் களமுடிவிலேயே தெரிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசர் அந்நிலத்தையும் அரியணையையும் விட்டுத்தர ஒப்பினால், இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் முன் அடிபணிந்து இளையோனாக அமர்ந்துகொள்ள சித்தமானால் இப்போர் முடியுமா? முடியாது என்றொரு சொல் அவையமர்ந்த யுதிஷ்டிரரின் நாவிலிருந்து எழவேண்டும். பெண்பழிக்கு நிகர் கொண்டபின் மட்டுமே இப்போர் முடியுமென்று அவர் எங்களுக்கு சொல்லவேண்டும். போர்முனையிலிருந்து எங்கள் குடிகளுக்கு நாங்கள் செல்லும்போது பெண்பழி தீர்த்தோமென்று நிறைவுற்று போகவேண்டும்” என்றான்.

யுதிஷ்டிரர் பதற்றத்துடன் சகதேவனையும் இளைய யாதவரையும் பார்த்தார். இருவரும் வெற்று முகத்துடன் அசைவிலாது அமர்ந்திருக்கக் கண்டு எழுந்து “எப்போரும் எங்கேனும் ஓரிடத்தில் நிறுத்தப்பட வேண்டியதுதான். முற்றழித்த பின்னரே போர் முடியவேண்டுமென்று அரக்கர் குலநெறிகள் சொல்லலாம். ஷத்ரியர்களின் போர்கள் அனைத்துமே களவிளையாட்டுகளும்கூட” என்றார். “உங்கள் களவிளையாட்டுக்கு நாங்கள் ஏன் வரவேண்டும்?” என்று சம்பராசுரரின் மைந்தர் கீர்த்திமான் கேட்டார். “இது அப்படிப்பட்ட போரல்ல என்று எங்களுக்கு உரைக்கப்பட்டது. நாங்கள் எழுந்தது பெண்பழி தீர்க்கவே. நாங்கள் கேட்பது ஒன்றே. அவை நின்று அரசியும் உங்கள் இளையோரும் உரைத்த வஞ்சினங்கள் என்ன ஆயின?” என்றான். முதிய கிராதமன்னர் கூர்மர் எழுந்து அவர் உடலுக்குப் பொருந்தாத ஓங்கிய மணிக்குரலில் “பிறிதொரு சொல்லே தேவையில்லை. துச்சாதனனின் நெஞ்சுக்குருதியும் துரியோதனனின் தொடைக்குருதியும் கொண்டு உங்கள் அரசி குழல் நீவி முடிப்பாளா இல்லையா என்பதை மட்டும் உரையுங்கள். நாங்கள் போரில் இணைகிறோமா இல்லையா என்று முடிவு செய்கிறோம்” என்றார்.

யுதிஷ்டிரர் திணறலுடன் கையைத் தூக்கி ஏதோ சொல்வதற்குள் திரௌபதி எழுந்தாள். அனைவரும் திறந்த வாயும் தூக்கிய கைகளுமாக உறைந்தனர். அரசி கைகூப்பியபடி வந்து அவைமேடைமேல் நின்று “அவையோர் அறிக, அன்று அஸ்தினபுரியில் அவைச்சிறுமை கொண்டபோது என்னில் பெண் எழுந்தாள். என் பொருட்டல்ல, இனி இங்கு பிறந்தெழும் அனைத்துப் பெண்டிர் பொருட்டும் அவ்வஞ்சினத்தை நான் உரைத்தேன். குருதி கொண்டன்றி வேறெவ்வகையிலும் அமையேன் என்று ஆணையிட்டேன். ஆனால் பதினான்கு ஆண்டுகாலம் காட்டில் அலைந்து மீண்டபின் நான் வெறும் பெண்ணல்ல. இப்புவி படைக்கும் அன்னை. என் பொருட்டு ஒரு துளிக்குருதிகூட மண்ணில் சிந்த நான் ஒப்பமாட்டேன். எனக்காக ஒரு மைந்தன்கூட உயிர் துறக்க நான் எண்ணமாட்டேன்” என்றாள்.

“எனக்கு இப்புவியில் எவர் மீதும் வஞ்சமில்லை. நான் வஞ்சம் கொள்ளுமளவுக்கு வல்லவர் என எவரும் இப்புவியில் இல்லை. இங்குள்ள ஆண்களனைவரும் என் மைந்தரே, நான் அவர்களை ஊட்டிய முலை அன்றி வேறல்ல. இந்த அவைச்சிறுமையல்ல, இன்னும் ஒரு நூறு ஆயிரம் சிறுமைகளை என் மைந்தர் பொருட்டும் அவர் கொடிவழியினர் பொருட்டும் அடைய சித்தமாக இருக்கிறேன். பலநூறு அவைகளில், பல்லாயிரம் களங்களில், நாளுக்கு ஆயிரம் என இல்லங்களில் என் மூதன்னையர் அடைந்த சிறுமைகளால் உருவானதே உங்கள் நகரங்களும் குடிகளும் குலமுறைகளும் என்று அறிக! எச்சிறுமைக்குப் பின்னரும் உளங்கனிந்து குழந்தைகளே மகிழ்ந்து வாழுங்கள், நன்று நிகழ்க என்று மட்டுமே என்னால் சொல்ல இயலும். இப்போருக்கு என் ஆணையில்லை. இங்கு நிகழ்வன என் பொருட்டுமில்லை. இந்த அவையில் இதை உரைக்கவே நான் வந்தேன்” என்றாள். அவை சொல்லவிந்து நிலைகொள்ள “போரைத் தடுக்க என்னால் இயலாதென்று அறிவேன். அன்னைசொல் கேட்கும் நிலையில் எவரும் இல்லை. செல்க, குருதிசிந்தி வீழ்க! நீங்கள் வீழுந்தோறும் பெற்றுப்பெருக்குகிறோம் என்று மட்டுமே சொல்ல விழைகிறேன்” என்றபின் திரும்பி நடந்து அவைமேடையிலிருந்து இறங்கி சிறு வாயிலினூடாக வெளியேறினாள்.

அவளுடன் சேடிகள் தொடர்ந்து செல்ல யுதிஷ்டிரர் கைகள் தளர்ந்து அரியணையில் கிடக்க அவள் செல்வதுவரை பார்த்துவிட்டு அவையை தவிப்புடன் நோக்கினார். வெண்பட்டுத்திரைக்குள் குந்தி எழுந்து செல்வதை சாத்யகி கண்டான். இளைய யாதவரும் அர்ஜுனனும் எதையும் அறியாதவர்கள் போலிருந்தனர். “அவ்வண்ணமெனில் இனியொன்றும் நாங்கள் சொல்வதற்கில்லை. ஷத்ரியரின் ஒரு சாரார் பிறிதொரு சாராரின் நிலத்தை வெல்வதோ முடியை சூடுவதோ எங்களுக்குரிய போர் அல்ல. அவர்கள் தங்கள் கொள்கைகளில் ஒன்றை பிறிதொன்றால் வெல்வது எங்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல. இப்போர் உங்களுடையது, அதை நீங்களே நிகழ்த்துங்கள்” என்றபின் கிராதமன்னர் கூர்மர் தன் குடியினருக்கு கைகாட்டிவிட்டு வெளியே சென்றார். ஒவ்வொருவராக நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் தங்கள் கோல்களுடன் அவை நீங்கலாயினர்.

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைநடிகையின் நாடகம்- கடிதங்கள்