வேட்கைகொண்ட பெண்

thija

தி.ஜானகிராமன் விக்கி

கு.ப.ராஜகோபாலன்

அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம்மாள் விதவை. கணவனின் நினைவாக அந்த வேதபாடசாலையை நடத்துகிறாள். மிக எளிய சூழல். ஊளைமோரும் புழுநெளியும் ஊறுகாயும்தான் உணவு. ஆனால் காவேரிக்கரையின் அழகிய சிற்றூரின் அக்ரஹாரம் அது. அப்பு அங்கே மனநிறைவுடன் வாழ்கிறான்.

பவானியம்மாளின் மருமகள் இந்து சிறுமிப்பருவத்திலேயே கணவனை இழந்த விதவை. கண்களில் இளமையின் குறுகுறுப்பும் காதோரம் இறங்கிய மென்மயிரும் காமம் மிக்க உதடுகளும் கொண்ட அழகி. அப்புவுக்கு இந்து பவானியம்மாளின் உறவுப்பெண் என்பதனால் மதிப்பான விலக்கம்தான் உள்ளது. ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ ஒரு காமமும் துடித்துகொண்டிருக்கக் கூடும். அவனே அறியாதது

அன்று பவானியம்மாள் அவளை தனியாக, அப்புவின் பொறுப்பில் விட்டுவிட்டு கல்யாணத்துக்குப் போயிருக்கிறாள். அந்த நாள் அப்புவுக்கு முக்கியமானது. எந்த ஆணின் மனதையும் படபடக்கச்செய்யகூடியது அந்த தருணம். ஆனால் அப்பு காவேரிக்கரையில் கிடந்து காவேரியின் அழகை, அதன் மோனத்தை ரசித்துக் கொண்டு அங்கே அவர் வந்து சேர்ந்த நாட்களை எண்ணிக் கொண்டு அவளைப்பற்றிய நினைவே இல்லாமல் இருக்கிறான். அவ்வாறு ஆரம்பிக்கிறது தி.ஜானகிராமனின் அம்மாவந்தாள் என்னும் புகழ்பெற்ற நாவல்

ஒரு கோணத்தில் இதை புனைவைதொடங்கும் சாதாரணமான முறை என்று சொல்லலாம். கதைச்சூழலையும் கதைநாயகனையும் இயல்பாக அறிமுகம் செய்வது தி.ஜானகிராமனின் நோக்கம். கதைநாயகனின் அந்தரங்க நினைவோட்டத்தில் கதையை தொடங்குவது இன்னும் வசதி- அவனுடைய குணச்சித்திரத்தை காட்டிவிடலாம். அவன் அங்கேவந்ததுதான் கதையின் தொடக்கப்புள்ளி என்பதனால் அதைப்பற்றிய நினைவோட்டமாக இருந்தால் இன்னும் நல்லது. மேலும் தி.ஜானகிராமனுக்கு காவேரிக்கரை சார்ந்தஒரு மோகம் உண்டு. காவேரியை வருணித்தால் அவருக்கு கதை சொல்லும் மனநிலை இயல்பாக படிகிறது.

ஆனால் மானுட உள்ளத்தைக் கணக்கில்கொண்டு நோக்கினால் அந்தச் சிந்தனைகளுக்கு வேறு ஒரு பொருள் வருகிறது. இந்து அங்கே தனியாக இருப்பது அப்புவுக்கு தெரியும். அதை அவன் ‘நினைக்காமல்’ இருக்க முயல்கிறான். அதனால்தான் அவன் காவேரியையும் இளமைப்பிராயத்தையும் பற்றி எண்ணிக் கொள்கிறான். முடிந்தவரை தாமதமாக வருகிறான். அதில் அவனது எதிர்பார்ப்பும் அச்சமும் கலந்திருக்கிறது.

இந்துவுக்கு அப்பு மேல் உள்ள ஈடுபாடு அதுவரை எப்படி அப்புவுக்கு தெரியாமல் இருந்தது என்ற கேள்விக்கான பதிலும் அதுவே. அவள் அங்கேயே தான் இருக்கிறாள். அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்பு அவளுடைய விருப்பத்தை அறிய விரும்பவில்லை. விரும்பாததை கடந்துவிடுவதற்குத்தான் அத்தனை பாவனைகளும்.

அன்று இந்து சற்று அத்துமீறுகிறாள். தன் காதலை, [சொல்லப்போனால் அது நேரடியான காமம்தான்] அவனுக்கு வெளிப்படையாகவே தெரிவிக்கிறாள். அப்பு ஓரிருநாளில் படிப்பு முடிந்து கிளம்பிச் செல்கிறான் என அவள் அறிந்திருக்கிறாள், அவன் வராமலிருந்துவிடக்கூடும் என்ற எண்ணத்தில் இருந்தே அந்த வேகம் இந்துவுக்கு வருகிறது.

அவள் காட்டிய விருப்பத்தை அப்பு உதறுகிறான். அவளுக்கு ஒழுக்கத்தைப்பற்றி அவன் போதனைசெய்யும்போது “சரிதான், உன் அம்மாமட்டும் என்ன?” என்று இந்து கேட்கிறாள். அம்மாவை அம்பாளின் இடத்தில் வைத்திருக்கும் அப்பு அதிர்ச்சி அடைகிறான். இந்துவை அறைய கையோங்குகிறான். பின்னர் கொந்தளிக்கும் உள்ளத்துடன் அங்கிருந்து கிளம்புகிறான்

நெடுங்காலத்திற்குப்பின் தன் வீட்டில் நுழையும் அப்பு ஊஞ்சலருகே நின்றிருக்கும் குடும்பநண்பரான சிவசுவைப்பார்த்து தன் அண்ணன் என நினைத்து “ஏன் மீசையை எடுத்துவிட்டாய்?” என்று கேட்கிறான். அந்த கேள்விக்கு சிவசுவின் முகம் மாறுவது அவனைத் துணுக்குறச்செய்கிறது. மெல்ல ஒவ்வொன்றாக இதழ்விரிந்து அம்மாவுக்கும் சிவசுவுக்குமான உறவு வெளிப்படுகிறது. அவன் அக்கா வெளியூரில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். “நாக்கைப்பிடுங்கிக்கொள்ளலாம் போலிருக்கிறது, ஊரே சிரிக்கிறது” என்கிறாள். அவள் அம்மாவைப்பார்க்க வருவதே இல்லை.

அம்மா அலங்காரம் அப்புவின் உள்ளத்தில் வாழும் பெண்மையின் பெரும்பிம்பம். அழகி. ஆண்மையின் கம்பீரமும் பெண்மையின் நளினமும் சேர்ந்தவள். உலகையே அலட்சியமாக கருதும் நிமிர்வு,எண்ணிச்சொல்லெடுக்கும் கூர்மை. அத்தனையும் அவளுடைய காமத்தின் முன் தோற்றுப்போயிருந்தன. சிவசுவுக்கு அவள் இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள்.

அப்புவின் அப்பா தண்டபாணி வேதாந்த அறிஞர். அவரிடம் வேதாந்தபாடம்கேட்க வெளியூர்களிலிருந்தெல்லாம் அறிஞர்கள் வருகிறார்கள். வேலைபார்க்கிற இடத்தில் முதலாளியாலேயே வணங்கப்படுபவர். மனைவியின் வெளித்தொடர்பு அவருக்குத்தெரியும். ஆனால் அவரால் அவளை எவ்வகையிலும் விலக்க முடியவில்லை. அவர் உள்ளத்தில் அவள் அவரை ஆளும் தேவி. அவர் அவள் உபாசகர். அது ஒரு தோற்றம். அவள்மேல் காமத்தால் கட்டப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு ஆழம்.

அதற்காக பெற்ற பிள்ளைகள்கூட அவரை வெறுக்கின்றன. “என்ன மனிதர் இவர், அறிவற்ற கிராமத்தான்கூட தாங்கிக்கொள்ளாத விஷயத்தை தெரியாதவர் போல எப்படி இவரால் இருக்கமுடிகிறது?” என்று அவர் மகளே சொல்கிறார். ஆனால் அவர் தன்னளவில் அலைகளில்லாமல் நிறைவாகவே இருக்கிறார்- அல்லது வேதாந்தத்தைக்கொண்டு அவ்வாறு நடித்துக்கொள்கிறார்.

அம்மாமீது அருவருப்பும் அப்பாமீது கசப்பும் கொள்ளும் அப்பு மீண்டும் பவானியம்மாவின் வீட்டுக்கே வந்துசேர்கிறான். தன் சொத்துக்களையும் வேதபாடசாலையையும் இந்துவையும் அவனிடம் ஒப்படைத்துவிடுகிறாள்.

அப்புவைத்தேடிவரும் அலங்காரத்தம்மாள் ”நான் நெறிமீறிவிட்டவள்தான். எனக்கு என்னை வெல்லத் தெரியவில்லை. என் கணவர் தெய்வம்போல. என்னை இத்தனைநாள் தாங்கிக்கொண்டது” என்கிறாள் “நீ வேதம்படித்து நெருப்புபோல வருவாய். உன் காலடியில் விழுந்து என் பாவத்தைப்போக்கிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். நீயும் அம்மாபிள்ளையாகவே இருக்கிறாய்” என்று சொல்லி அவனையும் இந்துவையும் வாழ்த்துகிறாள். கங்கையில்மூழ்கி பாவத்தை கழுவிக்கொள்கிறேன் என்று சொல்லி காசிக்குக் கிளம்பிச்செல்கிறாள் அலங்காரத்தம்மாள்.

காமத்தின் பல்வேறு அடுக்குகளை நுட்பமாகச் சொல்லும் இந்நாவல் 1969ல் வெளிவந்த நாள்முதல் கடும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது. நாவல் தொடங்குவதே “சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக்கூடாது என்பார்கள்.ஆனால் ஒருநாளும் இல்லாத திருநாளாக புஸ்தகத்தின்மேல் வருகிற ஆசை. கீழே கிடக்கிற பல்பொடி மடிக்கிற காகிதத்தையாவது எடுத்துப் படிக்கவேண்டும் என்கிற மோகம்” என்றுதான். விலக்கப்பட்டவற்றின்மேல் உருவாகும் வெல்லமுடியாத ஆசையே இந்நாவல்

அப்புவுக்கு இந்துவின்மேல் ஆசை இருந்ததா? ஆம், அவன் அதை தனக்குத்தானே ஒளித்துக்கொண்டிருந்தான். அம்மா மீது கசப்பு எழுந்ததுமே அவன் இந்துவிடம்தான் திரும்புகிறான். உண்மையில் அவன் இந்துவை ஏற்றுக்கொள்வதற்கு இருந்த ஆசாரத்தின் தடை அம்மாவின் நெறிமீறலால் இல்லாமலாகிவிடுகிறது. அதுவே அவனுக்கான அனுமதியாக ஆகிறது

வேதபாடசாலை நடத்தும் ஆசாரமான பவானியம்மாவுக்குக் கூட அது உள்ளூர தெரிந்திருக்கலாம். ஆகவேதான் அவள் இந்துவை அப்புவுடன் தனியாக விட்டுவிட்டுக் கிளம்பி திருமணத்திற்குச் சென்றுவிடுகிறாள். பின்னர் தெரியவரும்போது அவளுக்கு இந்துவின் காதல் சற்றும் அதிர்ச்சியை அளிக்கவில்லை. அவள் தன் வாழ்நாள் கனவான வேதபாடசாலை என்பதையே விட்டுவிட்டு இந்துவை அப்புவின் மனைவியாக ஆக்குகிறாள்.

அப்புவின் அப்பா தண்டபாணியின் குணச்சித்திரம் அதேபோல மிகவும் பூடகமானது. அவரது வேதாந்த உபன்யாசம் மூலம் நாம் அவரை முதலில் காண்கிறோம்.ஆனால் அவரது ஆளுமையில் வேதாந்த ஞானம் என்பது ஒரு மேற்பூச்சு மட்டுமே. மனைவிமீதான கட்டற்ற காமம்தான் அவரை ஆள்கிறது. அலங்காரத்தம்மாவுடன் அவர் கொள்ளும் இறுதி உடலுறவை மிகவிரிவாக சித்தரிக்கும் ஜானகிராமன் ஆண்டுகள் கடந்தும் அது அவர் உள்ளத்தில் அப்படியே நீடிப்பதை காட்டுகிறார்.

amm

அன்று முழுமையான உடலுடன் நிலவொளியில் கிடைந்தாள். அவள் மார்புகளின் நடுவே ஒரு மணிபோல அன்று அவரைச் சூடினாள். அதிலிருந்து அவருக்கு மீட்பில்லை. தண்டபாணி அப்புவிடம் அம்மாவின் தொடர்பு குறித்து பேசும்போது ‘சும்மா வேடிக்கைதான் பாக்க முடியும்’ என்று சொல்லும் வேதாந்தம் அவரே உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காப்பு ஆயுதம் மட்டுமே.

அம்மாவின் குணச்சித்திரத்தைச் செதுக்க தி.ஜானகிராமன் அதிக கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அலங்காரம் என்ற பேரில் தொடங்கி. அப்பு தண்டபாணி இருவரின் கோணத்திலும் அம்மாவை அறிமுகம் செய்கிறார். அப்புவுக்கு அம்மா ஒரு கம்பீரமான பெண். பிழம்பு.

நாவலின் உச்சமான ஒரு மௌனப்புள்ளி, இந்துவை அணைக்கையில் அப்பு அம்மாவை எண்ணுவதுதான். இதுவே இந்நாவலை சென்றகாலங்களில் ஈடிபஸ் உளச்சிக்கல் என்ற கோணத்தில் பலரை ஆராயச்செய்தது. இந்துவிடம் இருந்த அலங்காரத்தின் கூறு என்ன? அதை தி.ஜானகிராமன் சொல்வதில்லை. தோற்றத்தில் அவர் அவர்களை மிகத் தெளிவாக வேறுபடுத்துகிறார். இந்து கொடிபோல. அலங்காரம் மரம் போல.

அலங்காரம் இந்து இருவரிடமும் இருக்கும் பொது அம்சம் தாபம்தான் என்று படுகிறது. எண்ணையை எட்டித்தீண்டும் தீத்தழல் போல அவர்கள் ஆணை எட்டிப் பிடித்துக்கொள்கிறார்கள். அந்த வேகமே பொதுவான அம்சம். அப்படியானால் அம்மாவின் உள்ளே எரிந்த காமத்தை அப்பு முன்னரே அறிந்திருந்தானா? நாவலில் அபப்டி இல்லை. ஆனால் அம்மாவைப் பற்றிய அப்புவின் எண்ணங்களில் எல்லாம் அவளது வேகம் பதிவாகியிருக்கிறது. அது இச்சா சக்தியின் வேகம். அதுவே காமம். அதுவே இந்துவிலும் எரிந்தது.

அந்தக் காமம்தான் அவளிடம் வெறுமொரு ஆராதகனாக இருக்கும் தண்டபாணியை தாண்டி அவளைச் சீண்டி விளையாடும் காதலனும் அடிப்படையில் பெண்பித்தனுமாகிய சிவசுவை நோக்கிச் சென்றதா? யுதிஷ்டிரனை விட அர்ஜுனனையே திரௌபதி விரும்பினாள் என்கிறது மகாபாரதம். சிவசுவிடம் அலங்காரம் கண்டது என்ன என்ற வினா மிக முக்கியமானது. தண்டபாணியின் செயற்கைத்தனம், அவரது உலகமறுப்பு அலங்காரத்தை அவரை விட்டு விலகச் செய்ததா என்ன? சிவசு ஆழமே இல்லாத மனிதன். ஆனால் செயல்வேகமே உருவானவன். அதுதான் அவனைநோக்கி அலங்காரத்தை ஈர்த்திருக்க வேண்டும்.

தண்டபாணி மகனிடம் சொல்கிறார், பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும் சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும் புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான் என்கிறார். கல்யாணமே செய்யவேண்டியதில்லை என அப்பு சொல்கிறான். கை தப்புசெய்கிறது என்பதற்காக கையை வெட்ட முடியுமா என்கிறார் தண்டபாணி.

அலங்காரத்தை முழுமையுருவில் கண்டு கொள்வது அப்புவுக்கு ஒரு சுயதரிசனம். அவன் இந்துவிடம் மீள்கிறான். அதை நுட்பமாக புரிந்துகொண்டுதான் அலங்காரம் சொல்கிறாள் ”நீயும் அம்மா பிள்ளைதான்’ என்று.

நம் இலக்கியத்தில் காமம் எப்போதுமே இருவகையில் பேசுபொருளாக இருந்துள்ளது. ஒன்று, காமத்தை விவரிக்கும் இன்பச்சுவை இலக்கியங்கள். அவை காமத்தை ஒரு விளையாட்டாகப் பார்க்கின்றன. அணிகளும் அலங்காரங்களும் கொண்டு அழகுபடுத்துகின்றன.அ ந்த அழகுபடுத்துதல் வழியாகவே அவை நேரடியான காமத்திலிருந்து விலக்கிவிடுகின்றன. ஏராளமான நகைகளை அணிந்துநிற்கும் சிற்பத்தின் நிர்வாணம் நமக்கு தென்படாததுபோல

இன்னொரு கோணத்தில் ஒழுக்கத்தை வலியுறுத்த இலக்கியம் காமத்தைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறது. காமத்தை வெல்லவேண்டிய தீமையாகச் சித்தரிக்கிறது. இவ்விரு கோணங்களுமே ஆணின் நோக்கில் பெண்ணைச் சித்தரிப்பவை. ஆணின் காமத்தின் வழியாகவும் ஆணின் அச்சத்தின் வழியாகவும்.

இரண்டுக்கும் அப்பால் சென்று காமத்தை நேரடியாகச் சந்திக்கும் நவீன இலக்கியத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் அம்மா வந்தாள். இந்நாவல் காட்டும் பெண் வேட்கைகொண்டவளாக இருக்கிறாள். ஆண்களை வெல்பவளாகவும் ஆள்பவளாகவும் துறந்துசெல்பவளாகவும் இருக்கிறாள். ஆண் அவள் முன் வழிபடுபவனாகவும் அவளால் ஆட்டுவிக்கப்படுபவனாகவுமே எஞ்சுகிறான். இந்தப்பெண்ணை இதற்கு முன்பு தமிழிலக்கியம் சந்தித்ததே இல்லை. அலங்காரமோ இந்துவோ செய்வது தவறா சரியா, ஒழுக்கநெறிப்படி ஏற்கத்தக்கதா அல்லவா என்ற விவாதம் தமிழில் பெரிதாக நடந்துள்ளது. ஆனால் அது இந்நாவலில் இருந்து வாசகனை விலக்குவது. நாவலின் மையம் பெண்ணின் வேட்கைதான்.

இந்திய மரபில் பெண்ணின் வேட்கை இருவகைகளில் பேசப்பட்டுள்ளது. மகாபாரதம், சங்க அகப்பாடல்கள் போன்ற தொல்லிலக்கியங்களில் அது நேரடியாகவே வருகிறது. பின்னர் அதை ஒருவகை அணியலங்காரமாக ஆக்கிக் கொண்டார்கள் உதாரணம் காளிதாசன்,சீவகசிந்தாமணி, கம்பராமாயணம். அதன்பின்னர் அது பக்தியாக, உருவகமாக ஆகி இலக்கியத்தில் பேசப்பட்டது- ஆண்டாள்,ஜெயதேவர் போல. மரபிலக்கியக் காலகட்டத்திற்குப் பின் உரைநடை இலக்கியம் மீண்டும் பெண்ணின் வேட்கையைப் பேசத்தொடங்கியபோது செய்யுள், அணியலங்காரம் என்னும் இரண்டு திரைகளும் இல்லாமலாகி பேசுபொருள் அப்பட்டமாக நின்றது.

உதாரணமாக புதுமைப்பித்தன் பெண்ணின் வேட்கையை எழுதிய சில கதைகளில் [கல்யாணி, விபரீத ஆசை] அந்த அப்பட்டம் அறைந்தது. அது நுட்பத்திற்கு மாறாக அதிர்வையே உருவாக்கியது. நவீன இலக்கியம் சற்றே பூடகமாக்கி, மென்மையாக்கி, உள்மடிப்புகளாக அதைப்பேசத் தொடங்கியது கு.ப.ராஜகோபாலன் கதைகள். ஆனால் கு.ப.ராஜகோபாலன் மிகப்பலவீனமான எழுத்தாளர். அதிகபட்சம் ஆறு சிறுகதைகளுக்கு அப்பால் அவர் எழுத்துக்களில் பொருட்படுத்தத் தக்க படைப்புகள் இல்லை. அவர் ஒருபாதையை திறந்தார். அதில் சென்று குறிப்பிடும்படியான வெற்றியை அடைந்தவர் ஜானகிராமன்.

அம்மா வந்தாள் அவ்வகையில் முக்கியமான ஓர் இலக்கிய நிகழ்வு. பெண்ணின் வேட்கையைப் பேசும் வெவ்வேறு கதாபாத்திர மாதிரிகளாகவே அம்மாவந்தாளின் பெண்களை எடுக்கமுடியும். பெண்வேட்கையை ஒருவகையான அடிப்படை விசை, உக்கிரமான ஒரு தெய்வத்தன்மை எனக் காணும் கோணத்தில் அலங்காரத்தம்மாள். அது ஒரு மென்மையான ஆட்கொள்ளல் என்ற கோணத்தில் இந்து. அலங்காரத்தம்மாள் சாக்தத்தின் ஆளும் பெண். இந்து சைவத்தின் பக்தையும் பிச்சியுமான பெண். அம்பாளுடன் அலங்காரத்தம்மாள் எவ்வாறெல்லாம் இணைக்கப்படுகிறாள் இந்துவின் வேட்கை எவ்வாறெல்லாம் மென்மையான பணிவாக வெளிப்படுகிறது, எங்கு மிஞ்சுகிறது என்று பார்ப்பது அம்மாவந்தாள் மேல் ஒரு நல்ல வாசிப்பு

***

அம்மா வந்தாள் -கேசவமணி

அம்மா வந்தாள்: மூன்றாவது முறை…

==========================================================================================

  1. இலட்சியக்காதலியின் வருகை

2 ஒரு சிறு வெளி

3 கல்வியும் காதலும்

4 இரண்டு கணவர்கள்

5 யாருடைய சொத்து?

6 ரகசியப்பேய்

7 புரட்சிப்பத்தினி

8 கண்ணகியும் மாதவியும்

முந்தைய கட்டுரைசில நாவல்கள் – அரங்கசாமி
அடுத்த கட்டுரைவெண்முரசு சென்னை கலந்துரையாடல்