வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-40

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்தில் திரௌபதி இளைய யாதவரிடம் கேட்டாள் “வற்றி ஒடுங்கி மறைவதன் விடுதலை நதிகளுக்குரியதல்ல. பெருகிப் பரவி கடலென்றாவதே அவற்றின் முழுமை. ஒருமையில், இன்மையில் குவிந்து அமையும் முழுமை பெண்களுக்குரியதல்ல. பன்மையும் பெருக்கமுமே அவர்களுக்குரியது. நான் பெண்ணென்றன்றி எப்போதும் உணர்ந்ததில்லை. முக்திபெற்று விண்மீன் என வானில் நின்றாலும் பெண்ணென்றே ஆவேன். எனக்குரிய மீட்பென உன் நெறி கூறுவது என்ன?”

கடந்துபோகும் வெண்பனிப்புகை ஒவ்வொரு மலரிலும் என இவ்வுலகின் அழகுகள் இனிமைகள் அனைத்திலும் என்னைப் படிய வைத்து பரவிச்செல்கிறேன். எதையும் மறுத்துக் கடந்து செல்வதல்ல என் பாதை. கணம்தோறும் பிறப்புகளின், கோடிகோடி இருத்தல்களின் மாலை நான்.

அமைக்கவும் விரிக்கவும் விதைக்கவும் வளர்க்கவும் மட்டுமே என்னால் இயலும். ஏனென்றால் கருக்கொள்ளவும் உருவளிக்கவும் உகந்தவகையில் எழுந்தவள் நான். அறமிலாத வாழ்வை ஏற்றாலும் அன்பிலாததை ஏற்கவியலாது. நன்றிலாத உலகை ஏற்றாலும் அழகிலாத ஒன்றில் வாழமாட்டேன்.

அழகுருவாக அன்றி உன்னை நான் அறிந்ததே இல்லை. நீ சொல்லும் மெய்யுரைகள், அவையில் நீ உரைக்கும் அளவைச் சொற்கள், நீ அடையும் களவெற்றிகள், உன் நகர், கொடி எதுவும் எனக்கு பொருட்டல்ல. யாதவனே, எனக்கு நீ விழிநிறைக்கும் அழகும் உளம் நிறையும் இனிமையும் மட்டுமே. பீலியும் குழலும் அன்றி வேறல்ல.

திரௌபதி சொன்னாள். எப்போது உன்னுருவம் என்னை வந்தடைந்தது என்று எண்ணிக்கொள்கிறேன். என்னால் சென்றடைய இயலவில்லை. நான் பிறந்து விழிதிருந்தி கைகால்கள் ஒருங்கிணைந்து குப்புறக் கவிழ்ந்தபோதே அன்னையென்றே இருந்தேன் என்பார்கள். எழுந்தமர்ந்தபோதே குழந்தையை மடியிலேந்தி கொஞ்சி விளையாடத் தொடங்கினேன். அப்போதே என்னிடம் உன் குழவிப்பாவை ஒன்று இருந்தது.

எங்கள் அரண்மனைக்கு கையுறையாக கொண்டுவரப்பட்ட பலநூறு களிப்பாவைகளில் ஒன்று. மென்மரத்தில் செதுக்கி நீலவண்ணம் பூசப்பட்டது. நான் தவழ்ந்துசென்று அதை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். பின்னர் அதை பிரிய ஒப்பவேயில்லை. இன்றும் அது எங்கள் அரண்மனையில் பிறர் நுழைய ஒப்புதலில்லாத என் மஞ்சத்தறையில் இருக்கிறது.

இடக்காலைத் தூக்கி வாயில் வைத்து சப்பியபடி விழிநோக்கி நகைத்து மல்லாந்து படுத்திருக்கும் யாதவக் குழவி. விறலியரும் சேடியரும் அதன் புகழை பாடக்கேட்டு நான் வளர்ந்தேன். பின்னர் அவனை என் களித்தோழனாக ஆக்கிக்கொண்டேன். வேறு எவர் விழிகளுக்கும் தெரியாதவன். என்னிடம் மட்டுமே விளையாடுபவன். என் கண்ணெதிரே எப்போதும் நின்றிருப்பவன். நான் துயில்கையில் என் அறைக்குள் நான் கண்விழிப்பதற்காக காத்திருப்பவன்.

என்னை அவன் எப்போதும் சீண்டிக்கொண்டிருந்தான். ஒருகணமும் ஓரிடத்திலும் அமையவிடாதிருந்தான். அவன் செய்வன எதையும் நானும் செய்தாகவேண்டும் என எண்ணினேன். ஒரு நொடி பிந்தினாலும் அவன் உதடுகளில் எழும் கேலிப்புன்னகை என்னை பற்றி எரியச்செய்யும். அவன் என் எல்லைகளை ஓர் அடி, ஒரு கணம் எப்போதும் கடந்துகொண்டிருந்தான். பெருநூல்களை ஓரிரு நாளில் என்னை படிக்கச் செய்தான். வில்லும் கதையும் பயிலச் செய்தான். யானையும் புரவியும் தேறச் செய்தான். பிறர் என்னை வியந்து அஞ்சி நோக்கினர். நான் அவர்கள் எவரையும் அறியவில்லை.

எப்போதும் ஆலயங்களில் அவனுக்கும் சேர்த்தே வேண்டிக்கொண்டேன். அவனுடைய மலரையும் நானே பெற்றேன். ஒருமுறை கொற்றவை ஆலயத்தில் ஆணுக்குரிய மலரையும் நான் பெற்றுக்கொண்டேன். அன்னை என்னிடம் “அது ஆணுக்குரியது, உனக்கெதற்கு?” என்றாள். “என்னுடன் அவனும் இருக்கிறான்” என்றேன். அன்னை அதை எவ்வண்ணம் புரிந்துகொண்டாள் என்று தெரியவில்லை. அதன்பின் என்னுள் ஓர் ஆண்தெய்வமும் குடிகொள்வதாக அரண்மனைச் சேடியரும் விறலியரும் சொல்லத் தொடங்கினர். பெண்டிர் கதை பயில்வதில்லை, தேரோட்டுவதுமில்லை. அவற்றில் நான் தேர்ச்சிகொண்டபோது என் குடிகளும் அவ்வாறே சொல்லலாயினர்.

அது மெய்யென்று பின்னர் அறிந்தேன். நான் என்னுள் எப்போதும் உன்னை கொண்டிருக்கிறேன். கிருஷ்ணன் என உன்னை அழைக்கையில் கிருஷ்ணை என என்னையே சொல்லிக்கொள்கிறேன். கிருஷ்ணை என எவர் என்னை அழைத்தாலும் என்னுளிருந்து கிருஷ்ணனாக நீ விளி கொள்கிறாய். கிருஷ்ணா, நான் உன்னை பிறன் என உணர்ந்ததேயில்லை.

என்னுடன் இருந்து நீ வளர்ந்தாய். நீ என் உடன்பிறந்தான் அல்ல. என் காதலனும் அல்ல. என் தோழன். உடன்பிறந்தானைவிட காதலனைவிட அணுக்கமானவன். ஒவ்வொருநாளுமென உன் செய்திகள் என்னை வந்தடைந்தன. உன்னுடன் இணைந்து அவையனைத்தையும் நானும் நிகழ்த்தினேன்.

அந்நாளில்தான் நீ என் அரண்மனைக்கு வந்தாய். உன்னை நேரில் கண்டதுமே நீ இரண்டானாய். மண்ணில் உருக்கொண்டிருப்பவன் ஒருவன். என்னுள் நான் கொண்டிருப்பவன் பிறிதொருவன். முதலில் என்னுள் இருந்து உன்னை அள்ளி உன்மேல் பூசி உன்னை வனைந்து கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் நீ என்னை மீறிமீறிச் சென்றாய். உன்மேல் சினம் கொண்டதுண்டு. உன்னை வெல்ல எண்ணியதுண்டு. உன்னிடமிருந்து அகலவும் முயன்றதுண்டு. உன் அலகிலா ஆற்றலைக் கண்டு அஞ்சியிருக்கிறேன். உன்னிலெழும் பெருவஞ்சத்தைக் கண்டு அருவருத்திருக்கிறேன். உன்னில் பேருருக்கொள்ளும் அழிவைக் கண்டு சொல்லவிந்திருக்கிறேன்.

பின்னர் அறிந்தேன், நீ எனக்கு இனியன், அழகன் மட்டுமே என. இந்தப் பெருநதியில் நான் அள்ளிய கையளவுத் தெளிநீர். நீ எவரேனும் ஆகுக! உன்னை அறிய  நான் முயலப்போவதில்லை. உன்னை எனக்கு உகந்தவகையில் அணைகட்ட, திசைதிருப்ப எனக்கு ஆற்றலில்லை. ஆனால் என் கையளவு நீரில் வான்நோக்கி மகிழ என்னால் இயல்கிறது.

எல்லா அழகுகளையும் உன்னில் கண்டிருக்கிறேன். யாதவனே, குழவி என, சிறுவன் என, இளைஞன் என, முதிர்ந்தோன் என, கனிந்தோன் என. அழகிலாதோனாக ஒருகணமும் எண்ண என் உள்ளம் கூடவில்லை. உன்னை என்னிடமிருந்து இக்கணம் வரை பிரித்துக்கொண்டதில்லை. அதை செய்யாமல் என்னால் ஏக முடியாது என்று உணர்ந்த கணம் வாளெடுத்து என்னை இரண்டெனப் பிளந்து இறந்துவிழவேண்டுமென்றே என் அகமெழுந்தது.

ஆகவேதான் உன்னையே நாடிவந்தேன். நீ சொல்! இங்குள்ள அனைத்து மங்கலங்களும் அழகுகளும் நான் என் உளமயக்கால் அதிலிருந்து அள்ளிக்கொள்பவை மட்டும்தானா? அவை என் விழியும் செவியும் நாவும் மூக்கும் தோலும் உள்ளமும் அறிவும் கனவும் கொள்ளும் மயக்கங்கள் அன்றி பிறிதல்லவா? இவற்றினூடாகச் சென்று நான் அதன் முழுமையை அறியவியலாதா? அழகை அது என எண்ணும்போது நான் அறிவது குறைவுண்ட மெய்மையையா? இனிமையை தொடர்கையில் பிளவின் பாதையில் செல்கிறேனா?

“சொல்க யாதவனே, அழகென்பது அது அல்லவா? தன்னை அழகென வெளிப்படுத்தி நம்முடன் ஒளிந்தாடுகிறதா அது? அழகென்பது அதற்கு ஓர் அணித்திரை மட்டும்தானா?” என்று திரௌபதி கேட்டாள். “மீளமீள ஒன்றையே கேட்கிறேன். பலநூறு வழிகளினூடாக ஒரே இடத்தை சென்றடைவதுபோல. ஏனென்றால் இப்பாதைகளில் நான் நெடுந்தொலைவு சுழன்றுவிட்டேன். சொல்க யாதவனே, உன்னை அழகனென மட்டுமே காணும் நான் உன்னை அறிந்ததே இல்லையா?”

இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். “ஐந்துஆறுகளின் அரசி, இமையப்பெருமலைத் திரளில் கோணம் திகைந்து வடிவு அமைந்த பாறைகள் எவை? வெண்முகில் திரள்களில் எப்போது ஒழுங்கு உருவம் கொள்கிறது? அரசி, இமையமும் முகிலும் அழகற்றவை என எவர் கொள்வார்?”

இப்புவியில் கோடிகோடி கற்கள் சதுரமென்றும் வட்டமென்றும் அமைகின்றன. கோட்டையென்றும் இல்லமென்றும் ஆகின்றன. படிகளாகவும் தூண்களாகவும் சமைகின்றன. மலர்களாகி மென்மைகொள்கின்றன சில கற்கள். சிலைகளாகி விழிகொள்கின்றன சில. எனில் கல்லின் முழுதழகு இமையமே.

ஒவ்வொரு இலையும் அழகிய வடிவு கொண்டிருக்கிறது. தண்டுக்கும் தளிர்ச்சுருளுக்கும் வடிவம் அமைந்துள்ளது. கனிகள் சிவந்து உருண்டிருக்கின்றன. அரசமரமோ வடிவற்ற விரிதலும் கவிதலும் பசுமையும் என நின்றுள்ளது. இலையழகும் தண்டழகும் தளிரழகும் கனியழகும் அரசமரமே.

பொருள்சூடியவை சொற்கள். உணர்த்துபவை. கூறுபவை. விரிப்பவை அவை. முதற்சொல்லான ஓங்காரமோ பொருளற்றது என்பர் முனிவர். எனவே எப்பொருளையும் சூடும் விரிவுகொண்டிருக்கிறது அது.

அரசி, அது மலைகளில் இமையம். மரங்களில் அரசம். சொற்களில் ஓங்காரம். அனைத்து அழகுகளும் அதுவே. படைக்கலங்களில் மின். பசுக்களில் காமதேனு. காதலர்களில் மலரம்பன். நாகங்களில் வாசுகி. ஆறுகளில் கங்கை. அனைத்து மேன்மைகளும் அதுவே.

அழகுகளை அதுவென்று காண்பவன் அழகுருவாக அது முழுதெழுவதையே அறிகிறான். மேன்மையே அதுவென்று காண்பவனுக்கு அது மேன்மையின் முழுமை.

அனைத்து வேதச்சொல்லும் முழுமையை சுட்டுவனவே. ரிக் தவம். யஜூர் வேள்வி. அதர்வமோ படைக்களம். அரசி, இசைவடிவான சாமமோ அதன் இனிமை. நாடுவோனுக்கு அது வேதங்களில் சாமம்.

காலடி மண்முதல் கருங்குழல் குவை வரை அன்னையே என்றாலும் குழவிக்கு அவள் கனிந்து கனிந்தூறும் இனிய முலைப்பால் மட்டுமே. முகத்தின் உச்சமென்பது புன்னகையே. வேரும் கிளையும் இலைகளும் மரமே என்றாலும் கனியென அதை அறிவதே இனிது.

குழவியில் நாவுக்கும் அன்னையின் உளக்கனிவுக்கும் இடையே நிகழ்கிறது முலைப்பாலின் இனிமை. மரத்தின் அருளுக்கும் உண்பவனின் பசிக்கும் நடுவே அமைகிறது கனிச்சுவை. அறிதல்கள் அனைத்தும் அதன் திரள்தலுக்கும் அறிபவனின் குவிதலுக்கும் நிகழும் தொடுகைகள். அங்கிருந்து கனிவதும் இங்கிருந்து சுவைப்பதும் ஒன்றே. குறைவறியா கலம் நிறைவறியா கலத்திற்கு ஒழுகிக்கொண்டிருக்கிறது.

மெய்மைநோக்கி செல்லும் பாதைகள் பல. அம்பின் பாதை இலக்கன்றி எதையும் அறியாது. எதிர்ப்படும் அனைத்தையும் கிழித்துச் செல்கிறது. எரியின் பாதை உண்டு அழித்துச் செல்கிறது. எய்தும் கணம் அணைகிறது. பறவையின் பாதை வழிதொறும் கிளை தேடுகிறது. கிளைவிரித்து நின்றிருக்கின்றன தெய்வங்கள்.

நதியின் பாதை பிரிந்து பிரிந்து உணவூட்டிச் செல்கிறது. அணைகளை நிறைந்து கடக்கிறது. அனைத்து ஊற்றுகளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது. முகில்களின் பாதை பாதைகளற்றது. பிரிதலுக்கும் இணைதலுக்கும் அப்பாற்பட்டது.

அனைத்துப் பாதைகளும் சென்றடைகின்றன. அனைத்திலும் நிறைவடைந்தவர்களின் அருள் பரவியிருக்கிறது. எந்தப் பாதையையும் ஞானியர் இறுதியெனச் சொல்லமாட்டார்கள். அனைவருக்கும் உரியதென ஒரு பாதையை சொல்பவர் அப்பாதையையே அறியவில்லை.

எந்தப் பாதை ஒவ்வொரு அடியிலும் இது சரியே எனச் சொல்கிறதோ அதுவே சரியான பாதை. எதில் ஒவ்வொரு கணமும் கைவிடுகிறோமோ எதில் கைவிட்ட ஒவ்வொன்றுக்கும் நிகராக பெறுகிறோமோ அதுவே உரிய பாதை. அறிக, பாதையின் இறுதியில் அது இல்லை! பாதையென்பதும் அதுவே. எத்தனை இன்சுவைகளின் வழியாக அன்னையை அறிகிறது குழந்தை!

ஒரு துளி இனிமையைக்கூட கைவிடவேண்டியதில்லை. ஒரு கணத்து அழகைக்கூட மறுதலிக்கவேண்டியதில்லை. இங்கே சூழ்ந்திருக்கும் அனைத்து அணிகளையும் சூடுக! அனைத்து மங்கலங்களையும் கொள்க. அனைத்தையும் விழைக! ஒவ்வொருவர் மீதும் அன்பு கொள்க!

அன்பு பற்றென்றாகும்போது சிறை. அன்பு வேள்வியென்றாகும்போது சிறகு. வேள்வியென்பது பெருங்கொடை. தெய்வங்கள் வேள்விகளில் பிறந்தெழுந்து உண்டு வளர்கின்றன. வேள்விகளில் பெருகிய தெய்வங்கள் உங்கள் விண்ணை நிறைக்கட்டும்.

தன் மைந்தரை விரும்புபவள் அன்னை. மைந்தரனைவரையும் விரும்புபவள் பேரன்னை. அனைத்துயிரையும் விரும்புபவள் அன்னைத்தெய்வம். தெய்வமாகி நின்றாலொழிய அதை அறியவியலாது. தெய்வங்கள் மானுடரை தெய்வமாக்குபவை.

அழகு விழைவென்றாகும்போது தளை. வேள்வியென்றாகும் அழகு விண்ணெழுகை. கண்பெய்து அனைத்தையும் அழகென்றாக்குக! செவிபெய்து இசையென்றாக்குக! மூக்குவிரித்து நறுமணமென்றாக்குக! நாக்கு கூர்ந்து சுவையென்றாக்குக! சொல்பெருக்கி இசைவென்றாக்குக! வழிபடப்படும் அனைத்தும் தெய்வங்களே.

புவியில் உணவல்லாத உடல் ஏதுமில்லை. ஏனென்றால் உணவின் ஒரு தோற்றமே உடல். உடலை உணவாக்குதலும் உணவை உடலாக்குதலும் வேள்வியே.

தேவி, இல்லம் துறந்து கானேகி தவம்செய்யும் முனிவர் கனிந்து முழுத்து மண்நீத்து விண்செல்கையில் அவர்களின் துணைவியர் அங்கு வந்து அன்புடன் அவர்களுக்காக காத்திருக்கிறார்கள்.

எழுவதே ஆண். எனவே எழுந்து எய்துவதை அவர்கள் தெரிவுசெய்கிறார்கள். பரவுவதே பெண். எனவே பரவி நிறைகிறார்கள் அவர்கள். இரண்டையும் நிகழ்த்துவது ஒரே விழைவு. அவ்விழைவின் இலக்கென அமைந்ததே இரண்டுமாகி இங்கே காட்சியளிக்கிறது.

எண்ணம் எழுகிறது, உணர்வு பரவுகிறது. வேதம் பெருகுகிறது, கலை அலைகொள்கிறது. தவம் கூர்கொள்கிறது, அன்பு கனிவுகொள்கிறது. பாதைகளால் மெய்மை சென்றடையப்படுவதில்லை. பாதைகளாகி தன்னை அளிக்கிறது அது.

ஐங்குழல் அன்னை, இங்கு அழகென நின்றிருப்பது எது? இனிமையென அறியப்படுவது எது? நலமென்று கொள்ளப்படுவது எது? புலன்களால் அழகு. உள்ளத்தால் இனிமை. எண்ணத்தால் நலம். மூன்று கோணங்களில் அதுவே தன்னை வெளிப்படுத்துகிறது.

அது அறியவியலா இருப்பு. அறிநிலையென்றாகி தன்னை அறிவதனால் அது இருப்பு. தானே தன்னை உணரமுடியும் என்பதனால் இன்மையுமானது. அறிநிலையென்றாகி நிற்கையில் சித்தம். அறிதலெனும் பேரின்பமே அது. இருப்பதும் அறிவதும் மகிழ்வதுமாகி நின்றிருக்கும் ஒன்று அது.

அது மெய்மை. மெய்மையின் இசைவே அதன் வெளிப்பாடு. ஒழுங்கின் விரிதலே அழகு. ஒன்றென்பது ஒவ்வொரு நிலையிலும் மெய், இசைவு, அழகு எனும் மூன்றென்று தோன்றும் மாயமே இப்புடவி. மெய்யிசைவழகின் முழுமையை உணர்பவர் பிறிதொன்று கருதுவதில்லை.

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் முன் அமர்ந்திருந்த திரௌபதி கைகூப்பி அவர் சொற்களை கேட்டிருந்தாள். அவள் உள்ளத்தை பிறிதிலாது நிறைத்திருந்த அழகிய புன்னகையுடன் அருகே வருக என இளைய யாதவர் கைகாட்டினார். அவள் சற்றே முன்னகர்ந்து அவர் முன் குனிந்தாள். அவள் செவியில் தன் உதடுகள் தொட குனிந்து இரு கைகளையும் சுடர்காப்பதுபோலக் கோட்டி அவர் அவளுக்கு அணுக்கநுண்சொல்லை உரைத்தார்.

“மும்முறை ஒலியின்றி சொல்க! அச்சொற்கள் என்றும் உளத்தமைக!” என்றார் இளைய யாதவர். திரௌபதி மெல்லிய குரலில் அணுக்கநுண்சொல்லை சொன்னாள். “ஆம், ஆம், ஆம்” என்று அவர் சொன்னார். “உள்ளுவதற்குரியது இது. உணர்வதற்குரியது இச்சொல்” என அடுத்த நுண்சொல்லை சொன்னார். அவள் விழிமூடி அச்சொற்களை மும்முறை சொன்னாள்.

அவள் தன் முன் எழுந்த பேரொளிவெளியில் அனல்வண்ணச் சேவடிகளை கண்டாள். அனலிதழ்கள் விரிந்துகொண்டே இருந்த தாமரைமேல் நின்றிருந்தன. விழிமேலெழ அவள் நோக்கியபோது விண்ணிலிருந்து விண்மேவ எழுந்து நின்றிருந்த அன்னைப்பேருருவை கண்டாள்.

அணிசெறிந்த தொடைகள், இறுகிச்சிறுத்த சிற்றிடை. மலையெழுந்த முலைக்குவைகள். திரண்ட பெருந்தோள்கள். நீண்ட கொடிக்கைகள். இதழ்களென விரல்கள். கனிந்த விழிகள். அறிந்த சிரிப்பு. ஒளிமிக்க நிலவுமுகம். கதிரவன் என எழுந்த உடலொளி.

அழகிய மாலைகளும் ஒளிரும் ஆடைகளும் புனைந்தது. நறுமண மாலைகள் சூடியது. அனைத்து வியப்புகளுக்கும் உறைவிடமானது. எல்லையற்றது. எங்கும் தன் முகமே எனப் பெருகிய தெய்வப்பேருரு.

வானில் ஆயிரம் கதிரவன்கள் சேர்ந்தெழுமென்றால் அதன் ஒளிக்கு நிகர். பலநூறு பகுதிகளாக பலகோடி உறுப்புகளாக பலகோடிகோடி தோற்றப்பெருக்காக உலகென அறிந்தவை அனைத்தும் அன்னை உடலென ஒருங்குற்று நிற்பதை அவள் கண்டாள்.

ருத்ரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் எனும் பன்னிரு தூயர்களும் அவளுடலே என்று அறிந்தாள். விண்சுடர்கள் விழிகள். விண்மீன் பெருக்கே அவள் அணிகள். ஒளியும் இருளும் அவள் புனைந்த ஆடைகள்.

முடிவிலாதெழுந்த கைகளில் வடம், கொக்கி, மழு, உழலைத்தடி, வில், அம்பு, வாள், கேடயம், கதை, மும்முனைவேல், மின்படை, படையாழி, இடிபடை, வேல் என படைக்கலங்கள் கொண்டிருந்தாள். சங்கும் தாமரையும் நிறைகதிரும் அமுதகலமும் ஏந்தியிருந்தாள். நோக்க நோக்க பெருகி ஒன்றுபலவாகி அனைத்துக்கும் அப்பாலென மீண்டும் எழுந்துகொண்டிருந்தாள்.

மேலும் மேலுமென தான் பெருகிக்கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். பெருகப்பெருக இல்லாமலாகிக்கொண்டிருந்தாள். இறுதித்துளி ஒன்று நின்று நடுங்கி இருள்நோக்கி சொட்டுவதற்கு முந்தைய கணத்தில் கைநீட்டி அவரை பற்றிக்கொண்டாள். “கிருஷ்ணா!” என்றாள். “அருகுளேன்” என்று இளைய யாதவரின் குரலை கேட்டாள்.

அவள் விழித்துக்கொண்டபோது அந்தச் சிறுகுடிலில் அவர் முன் அமர்ந்திருந்தாள். மடித்து அமர்ந்திருந்த அவர் இடக்கால் கட்டைவிரலை தன் நடுங்கும் கையால் பற்றியிருந்தாள். தன்னிலை உணர்ந்து கையை எடுத்துக்கொண்டு “எங்கிருந்தேன்?” என்றாள். இளைய யாதவர் சிரித்து “ஒரு சிறு உளமழிவு” என்றார். “ஆம்” என்றாள். “இதுவே கனவென என் உள்ளம் மயங்குகிறது.”

பின்னர் ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தாள். பெருமூச்சுவிட்டு “பேருரு” என்றாள். “எண்ணற்கரியது. வானங்களும் அவற்று நடுவேயுள்ள அனைத்து வெளிகளும் திசைகளும் அதனால் நிரப்பப்பட்டிருந்தன. அச்சமும் வியப்பும் ஊட்டும் அந்த வடிவைக் கண்டு மூன்று காலங்களும் நிலைத்துவிட்டிருந்தன.”

பின்னர் இளைய யாதவரை நோக்கி “இந்த நுண்சொற்களை நான் ஓதவேண்டுமா? இன்று முதலா?” என்றாள். “நான் முன்பு காம்பில்யத்திற்கு வந்தபோது உங்களுக்கு ஒரு மயிற்பீலியை அளித்தேன், அரசி” என்றார் இளைய யாதவர். “ஆம், அது இன்றும் அடுக்கு குலையாமல் என்னிடம் உள்ளது” என்று திரௌபதி சொன்னாள். “அதனருகே இதை வைத்துக்கொள்க! இது துணையென்று தோன்றும்போது எடுத்துக்கொண்டால்போதும்” என்றார் இளைய யாதவர்.

அவள் முகம் மீண்டு “நான் கிளம்புகிறேன். இங்கிருந்து நெடுந்தொலைவு சென்று சுழன்று வந்து மீண்டும் உன்னை அடைய முடியுமெனத் தோன்றுகிறது” என்றாள். அவள் எழுந்ததும் அவரும் எழுந்துகொண்டார். “நான் எப்போதும் மிக அண்மையில் இருந்துகொண்டிருக்கிறேன், அரசி” என்றார். “ஆம், அதை நான் அனைத்து இக்கட்டுகளிலும் உணர்ந்திருக்கிறேன்” என்றாள் திரௌபதி.

“முன்பு ஒருமுறை கோதவனம் என்னும் காட்டில் என்னை கண்டீர்கள். உங்கள் கையால் அமுதுண்ண வந்தேன்” என்றார் இளைய யாதவர். திரௌபதி திடுக்கிட்டு நின்று “ஆனால் அது ஒரு கனவு” என்றாள். “ஆம்” என இளைய யாதவர் சிரித்தார். “அன்று நான் நெடுந்தொலைவு நடந்து களைத்து வந்திருந்தேன். உங்களுடன் பீமன் இல்லை. இன்மங்கல மலர்கொள்ளச் சென்றிருந்தார். அர்ஜுனன் காட்டில் உலவச் சென்றிருந்தார். அன்று உங்களிடம் உணவென இருந்தது அடகுக்கீரை மட்டுமே. அதையும் சமைத்துப் பகிர்ந்து உண்டு கலம் கவிழ்த்துவிட்டிருந்தீர்கள்.”

திரௌபதி “ஆம், ஒருபோதும் நாங்கள் அக்காட்டில் உணவில்லாமல் இருந்ததில்லை. ஆனால் பலமுறை வழிகளில் பசியையும் விடாயையும் உச்சத்தில் உணர்ந்திருக்கிறோம். அந்த அச்சத்திலிருந்து உள்ளம் விடுபட்டதேயில்லை. அனைத்துக் கனவுகளிலும் ஒழிந்த கலங்களையே காண்பேன்” என்றாள். இளைய யாதவர் “அன்று உங்கள் அடுகலத்தை எடுத்து நோக்கி ஏங்கினீர்கள். இல்லத்தில் உணவென்று ஒன்றுமில்லை. குடில்முகப்பில் என்னுடன் சொல்லாடிக்கொண்டிருந்த யுதிஷ்டிரர் உணவு பரிமாறுக என்று சொன்னார். பின்னர் உரத்த குரலில் ஏன் பிந்துகிறாய் தேவி என்றார்” என்றார்.

திரௌபதி அந்தக் கணத்தின் பதற்றத்தை மீண்டும் அடைந்து “ஆம்” என்றாள். “வெளியே சென்று நோக்கினீர்கள். நகுலனும் சகதேவனும் அங்கே இல்லை. திரும்பி வந்து அடுகலத்தை எடுத்தீர்கள். அதன் விளிம்பில் கீரைத்துணுக்கு ஒன்று ஒட்டியிருந்தது. சுட்டுவிரலால் அதை சுரண்டியெடுத்து அருகே விரிந்திருந்த வாழையிலையில் வைத்தீர்கள். ஒருகணம் விழிதிருப்பி நோக்கியபோது அது பெருகியிருப்பதை கண்டீர்கள். ஐயத்துடன் மீண்டும் விழிதிருப்பி நோக்கியபோது அது மேலும் பெருகியிருந்தது. இன்னொரு இலையை எடுத்தபோது அது நல்லுணவாக ஆகிவிட்டிருந்தது.”

திரௌபதி விழிசுரக்குமளவுக்கு மெய்ப்பு கொண்டாள். “அக்கனவில் நான் உடல் விதிர்த்து அதிர்ந்துகொண்டிருந்தேன். விழித்துக்கொண்டபோது கைகள் கூப்பியிருக்க, காதுகளில் விழிநீர் வழிய, குளிரில் என நடுங்கிக்கொண்டிருந்தேன்” என்றாள்.

“அந்த உணவை உள்கூடத்தில் பரிமாறிவிட்டு வெளியே வந்து யாதவரே அமுதுகொள்ள வருக என அழைத்தீர்கள். சுரைக்குடுவையில் இருந்த நீரைச் சரித்து கைகளை கழுவிவிட்டு நான் உள்ளே வந்தபோது சாணிமெழுகிய தரையில் மணையிடப்பட்டிருந்தது. தலைவாழை இலையில் சூடான அன்னமும், பன்னிரு காய்களாலான தொடுகறிகளும் பரிமாறப்பட்டிருந்தன. பருப்பிட்டுச் செய்த கிழங்குக்கறியும் தயிரிட்டுப் பிசைந்த புளிகறியும் சிறுசட்டிகளில் காத்திருந்தன.”

நான் மணையில் அமர யுதிஷ்டிரர் உரக்க நகைத்தபடி “நாங்கள் உண்டது வெறும் அடகுக்கீரை. யாதவனே, இதை நான் நன்கறிவேன். உனக்கென்று சொன்னால் அமுது ஊறிப் பெருகும்” என்றார். நீங்கள் “அமர்க நீலரே, இச்சிறுகுடில் அன்னம் உங்களுக்கு இனிதாகுக!” என்றீர்கள். நான் அமர்ந்து அவ்வுணவை உண்டபோது அருகே அமர்ந்து விழிகனிய புன்னகையுடன் “உண்க! உண்க!” என பரிமாறி என்னை ஊட்டினீர்கள்.

என் இலையைப் பார்த்த யுதிஷ்டிரர் நகைத்து “அக்கார அடிசிலும்கூடவா? யாதவனே, விருந்தென அன்றி எப்போதேனும் உணவுண்டிருக்கிறாயா?” என்றார். நான் “அனைத்து உணவும் விருந்தே” என்றேன். “அவரே சமைத்து அவரே பரிமாறி அவரே உண்கிறார்” என்றீர்கள். “என்ன சொல்கிறாய்?” என்றார் யுதிஷ்டிரர். நாம் கண்கள் தொட்டுக்கொண்டு புன்னகைத்தோம்.

நான் வயிறுபுடைக்க உண்டு எழுந்தபோது “கண்ணா, இன்னும் கொஞ்சம்” என்றீர்கள். “எனக்காக, இதைமட்டும்” என அள்ளினீர்கள். “நான் முழுதுண்பதில்லை, அன்னையே” என்றேன். “எப்போதும் எஞ்சுவதன் மேல் பசியை விட்டுவைக்கிறேன். உண்டபின் அதை வளர்க்கத் தொடங்குகிறேன்” என்றபடி எழுந்து கைகழுவினேன். யுதிஷ்டிரர் “ஆம், பீமனின் வயிற்றிலேயே புவியில் பெரும்பசி வாழ்கிறது என்று நான் எண்ணுவதுண்டு. அவன் வயிற்றில் எரிவது காட்டெரி என்றால் உனது வயிற்றில் அணையாதிருப்பது வடவை” என்றார். “காண்பதனைத்தும் அமுதென்று ஆக்குகிறது அது.”

“நான் கிளம்பும்போது உங்களிடம் சொன்னேன், அரசி பெரும்பசி கொண்ட குழவியருக்குச் சமைப்பது அன்னைக்கு மிக எளிது என்று. ஆம் என புன்னகை செய்தீர்கள்” என்றார் இளைய யாதவர். திரௌபதி கன்னங்களில் குழிகள் எழ இதழ்நீள விழிகள் ஒளிர புன்னகைத்து “ஆம்” என்றாள். “உங்கள் அடுகலம் ஒழிவதில்லை. ஒருதுளியென எஞ்சியிருப்பதே நான்” என்றார் இளைய யாதவர். அவள் தலையசைத்து “மீண்டுமொருமுறை காட்டில் உனக்கு சமைத்து உணவூட்டுவேன் என நினைக்கிறேன், யாதவனே” என்றாள்.

அவள் வெளியே சென்றபோது உடன் அவரும் வந்தார். சலஃபை அவளைக் கண்டதும் எழுந்து நின்றாள். அவள் மீண்டும் “சென்றுவருகிறேன்” என்றாள்.சலஃபையிடமிருந்து சால்வையை வாங்கி போர்த்திக்கொண்டு அவளிடம் வருக என கையசைத்தபின் நடந்தாள். அவள் முன் அமர்ந்திருந்த பாணன் முழவை மீட்டி “பற்றிய கால்விரல் சிறுகறை கொண்டிருந்தது. அதனூடாகவே அவன் மானுடனானான். அறிக தோழரே, அவன் அழகனைத்தும் அக்குறையால் முழுமையடைந்தது” என்றான். அவள் விழித்துக்கொண்டவள் போல அசைந்து பின் பெருமூச்சுடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள்.

முந்தைய கட்டுரைதிரை சரியும் காலம்
அடுத்த கட்டுரைகாலம்