ஒரு சிறு வெளி

b r

இளைஞன் தன் காதலியின் ஊருக்கு வருகிறான். அங்கு ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. காதலியின் வீட்டைக் கண்டுபிடித்து உள்ளே நுழைகிறான். ”குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்கிறான். காதலி தண்ணீருடன் வெளியே வருகிறாள். அவளுக்கு அவனைத் தெரியும் அவன் கண்களில் காதலையும் பார்த்திருக்கிறாள். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் அவள் தண்ணீர் குவளையை நீட்டும்போது அவன் அவள் கையைப் பற்றிவிடுகிறான். அவள் அறியாது ’அம்மா இவன் என்ன செய்கிறான் பார்!” என்று குரலெழுப்புகிறாள். சற்று அப்பால் இருக்கும் காதலியின் அன்னை ’’என்ன?’’ என்று கேட்கிறாள். ’’ஒன்றுமில்லை, தண்ணீர் குடித்தபோது இவன் விக்கினான்’’ என்று அவள் சொல்கிறாள். ’’நூறாண்டு’’ என்று காதலியின் தாய் வாழ்த்துகிறாள். அவன் அவளை நோக்கிச் சிரிக்கிறான்

கலித்தொகையில் கபிலர் பாடலாக வரும் இந்த அழகிய எதார்த்த சித்திரம் காட்டும் உண்மை ஒன்றுண்டு. அந்தக் காலத்தில் இளையோர் இயல்பாகச் சந்திப்பதற்கும் காதல் கொள்வதற்குமான ஒரு சூழல் இருந்திருக்கிறது. ஒருவீட்டுக்குள் நுழைந்து அங்கிருக்கும் இளம்பெண்ணிடம் இளைஞன் ஒருவன் தண்ணீர் கேட்பதில் எந்த தவறும் எவருக்கும் தென்படவில்லை. அவள் அன்னை கூட அதைக் கண்காணிக்கவில்லை. இந்திர விழா, புதுப்புனலாட்டு விழா முதலியவற்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் இணைந்து விளையாடும் காட்சி சங்க இலக்கியத்தில் நிறையவே வருகிறது.

சங்கம் மருவிய காலம் வரும்போது இவ்விளையாட்டுகள் பரத்தையருக்கு மட்டுமே உரியவையாக ஆவதை சிலப்பதிகாரத்தில் பார்ர்க்கலாம்.மெல்ல பெண் வீட்டுக்குள் அடைபடலானாள். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளை தமிழ் சமுதாயம் வந்தடையும்போது பெண் அனேகமாக போன்சாய் மரங்களைப்போல மாறிவிட்டிருந்தாள். வேர்கள் வெட்டப்பட்டு கிளைகள் தறிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி சிறு தொட்டிக்குள் வளர்ந்து இலைபரப்பி விழுது இறக்கி நின்றிருக்கும் ஆலமரம் .

இற்செறிப்பு என்று இலக்கியம் அதைக் குறிப்பிடுகிறது. கண்ணகியைப்பற்றி இளங்கோவடிகள் சொல்லும்போதே ’வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்கிறார். ’முற்றத்து வெயில் முகத்தில் படாமல் வளர்ந்த பெண்’ என்று நாட்டுப்புறப்பாடல்களில் வரும்.உயர்குடிப்பெண்கள் வீட்டுக்குள் வாழ்ந்து மறைபவர்கள் என்னும் எண்ணம் ஏற்பட்டது.

இது இயல்பாகவே ஆண்பெண் உறவை மிகவும் பாதித்தது. ஆணும் பெண்ணும் பொதுவெளியில் சந்திப்பதோ உரையாடிக் கொள்வதோ இயலவே இயலாது என்னும் நிலை வந்தது. ஆண்பெண் சல்லாபம் என்பதே மிக அரிதான ஒன்றாக மாறியது. சென்ற தலைமுறையில் கூட கணவனும் மனைவியும் ஒருவரோடுவர் இயல்பாக உரையாடிக் கொண்டிருக்கும் காட்சியை நாம் பார்க்க முடியாது. கணவன் முன்னால் நடந்து செல்ல குழந்தையுடன் பத்தடி தள்ளி நடந்து செல்லும் பெண்களைத்தான் கண்டிருப்போம் வீட்டுக்குள் கணவன் மனைவியிடம் நான்கு வார்த்தை சொல்லிவிட்டான் என்றால் உடனடியாக குடும்பம் முழுக்க அதை கேலி பேசுவதும் பழித்துரைப்பதும் வழக்கமாக இருந்தது.

அந்தக்காலத்தில் பெண்களின் உடலை ஆண்கள் முழுமையாகப்பார்ப்பதே நாலைந்து பிள்ளைகளைப் பெற்ற பிறகுதான் என்பார்கள். மிக  ரகசியமாக இருட்டுக்குள் ஓசையில்லாது சென்று ஓர் அறையில் ஆணும் பெண்ணும் சந்தித்து உறவு கொள்வதாகவே குடும்ப வாழ்க்கை இருந்தது. மனை என்பது நன்மக்கள் பேறுக்காக மட்டுமே என்றாயிற்று. காதல் இல்லாமல் ஆயிற்று. அதன் விளைவாகவே தமிழ் சமுதாயத்தில் பரத்தமை மிகப்பெரிய வடிவை எடுத்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் நூறு வீடுகள் இருந்த ஒரு கிராமத்தில் ஐந்து வீடுகள் தாசிகளுடையதாக இருந்தன. அதை அச்சமூகம் இயல்பாக ஏற்றுக் கொண்டது.

அந்த நிலை மாறுதலடையும் ஒரு காலகட்டம் என்று தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய ஆண்டுகளைச் சொல்லலாம். பி.ஆர்.ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் தமிழின் முன்னோடி நாவல்களில் ஒன்று. அதில் பெண்களின் நிலைமாறுவதை நாம் நுட்பமாகக் காணமுடிகிறது.  விவேக சிந்தாமணி என்னும் பத்திரிகையில் 1893 முதல் மூன்று ஆண்டுகள் கமலாம்பாள் சரித்திரத்தை ராஜம் ஐயர் தொடராக எழுதினார்.. தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் கலையம்சம் கொண்ட நாவல் இதுவே என்று ஏ.வி.சுப்ரமணிய அய்யர் போன்ற முன்னோடி விமர்சகர்கள் வகுக்க க.நா.சு போன்ற விமர்சகர்வரிசை ஏற்றுரைத்தது

இந்நாவலின் சிறப்பு இதில் உள்ள யதார்த்தவாதம் தான். லட்சிய நோக்குக்கள் பிறக்க ஆரம்பித்திருந்த காலம் அது. கற்பனாவாதத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அந்த எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். லதா மண்டபத்தில் தென்றல் வீசும் அந்தி மாலையில் பேரழகியான தலைவியுடன் தலைவன் காதல் பேசும் காட்சிகள் நாடகங்களில் வந்து கொண்டிருந்தன. கதைகளிலும் அதை எழுதியிருந்தார்கள். பாரதியின் உரைநடை எழுத்துக்களில் பகடியில் மட்டுமே யதார்த்தவாதம் வெளிப்படும். கமலாம்பாள் சரித்திரம் சற்றும் கற்பனாவாதத்தன்மை இல்லாமல் மிகையே இல்லாமல் அன்றைய யதார்த்த வாழ்க்கையை சித்தரிக்கிறது.

நாவலின் தொடக்கத்திலேயே முத்துசாமி ஐயர் தன் மனைவி கமலாம்பாளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் சித்திரம் வருகிறது. அத்தியாத்தின் தலைப்பு ஸ்திரீபுருஷ சம்வாதம். “மதுரை ஜில்லாவில் சிறுகுளம் என்றொரு கிராமம். அந்தக் கிராமத்தின் மத்தியில் பெரிய வீடு என்ற பேருள்ள ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டின் கூடத்திற்கு அடுத்த அறையில் கீழே ஒரு கோரைப் பாய் விரித்து திண்டு போட்டு அதன் மேல் சாய்ந்து கொண்டு ஒருவர் படுத்திருந்தார்” என ஆரம்பிக்கிறது கதை.

மனைவியிடம் தண்ணீர் கொண்டு வர சொல்கிறார் . அவள் தையல் வேலைசெய்துகொண்டு பேசாமலிருக்கிறாள்.“அடியே உன்னைத்தானடியே அடியே” என்று அழைக்கிறார்.  அவள் ”இங்கு அடியையும் காணோம் நுனியையும் காணோம். அடியாம். அடிக்க வேண்டியதுதான் .காசு கொடுத்து சந்தையில் வாங்கினப்போலதான். இனிமேல் அப்படி சொல்லுங்கள் வழி சொல்கிறேன்” என்று பதில் சொல்கிறாள்.

இந்த அத்தியாயத்தில் அவர்களுக்கிடையே இருக்கும் நெருக்கமும் மாறி மாறி அவர்கள் கேலி செய்து கொள்வதும் எழுதப்பட்டிருக்கிறது.அந்தக் காலத்தில் மிகுந்த மனக்கிளர்ச்சியூட்டும் ஒரு வாசிப்பனுபவமாக இருந்திருக்கும் இது. ஏனெனில் இப்படி ஒரு உரையாடல் மாமனார் ,மாமியார், தந்தை, தாய், பாட்டி போன்றவர்கள் உள்ள ஒரு வீட்டில் நடந்திருக்க வாய்ப்பே கிடையாது. இப்படி ஒரு உரையாடலுக்கு வந்துசேரும்போது கணவன் மனைவி இருவருக்கும் ஐம்பது ஆண்டுகள் தாண்டியிருக்கும்.

இருவரும் அறிவார்ந்த முறையில் கூட உரையாடிக் கொள்கிறார்கள். முத்துசாமி ஐயர் ”ஸ்த்ரீகள் தான் உலகத்தில் கலகத்துக்கெல்லாம் காரணம். சீதையில்லாவிட்டால் ராமாயணம் ஏது ?”என்கிறார். மனைவி  “ஆமாம் ஸ்த்ரீகள் பேரில் ஆசை வைத்த புருஷர்கள் கெட்டலைந்தால் அதற்கும் ஸ்த்ரீகள் தான் காரணம். ராவணன் கெட்டது சீதையினாலேயா அல்லது தன் கொழுப்பினாலேயா?” என்று கேட்கிறாள்.

இந்த சித்திரம் அன்றிருந்த ஓர் இளைஞனின் ஆசையைத்தான் இது காட்டுகிறது. முத்துசாமி ஐயரின் வீட்டில் அவரையும் கமலாம்பாளையும் தவிர வேறு எவருமில்லை. அன்று கூட்டுக்குடும்பங்கள் மட்டுமே இருந்த சூழலில் இது மிக அரிதான ஒன்று . இந்தச் சித்திரத்தை அளித்த உடனேயே அடுத்த அத்தியாயமே அந்த மொத்த அக்ரகாரமும் எப்படி ஆண் பெண் உறவு குறித்த வம்புகளில் திளைக்கிறது என்பதை தான் அவர் காட்டுகிறார். ஒரு அத்தியாயத்தின் தலைப்பே வம்பர் மகாசபை என்றிருக்கிறது

அக்காலத்து பெண்கள் மிகச்சிறிய எல்லைக்குள் வாழ்ந்து ஒருவரையொருவர் வேவு பார்த்து, வசைபாடி, அவதூறு செய்து, மனம் குறுகி ,தீமை நிறைந்தவர்களாக எப்படி மாறியிருக்கிறார்கள் என்பதை இந்த அத்தியாயம் காட்டுகிறது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த வம்புகளைப் பயந்துதான் அன்று வாழவேண்டியிருந்தது. மிகச்சிறிய வட்டங்களாக அன்று மக்கள் வாழ்ந்தார்கள். அக்ரகாரம், குலாலர் தெரு, வாணியர் தெரு, என சாதியே தெருவாக அமைந்திருந்தது. ஒரு தெருவில் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழவேண்டியவர்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரை இவ்வளவு கூர்மையாக, தீய எண்ணத்துடன் கண்காணிக்கும் ஒரு சமுதாயத்தில் சுதந்திரம் என்பதற்கே வாய்ப்பில்லை.

வளர்ந்தவருக்கே அந்த நிலை என்னும்போது இளைஞர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். அவதூறு பரப்பப்பட்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமையாக அழிந்துவிடும். அவளுக்கொரு திருமணம் நடக்கவே வாய்ப்பில்லை. இச்சூழலில் இளம்பெண்களை கற்பூரக் கட்டிகள் போல பொதிந்து காற்று படாமல் தான் வீட்டுக்குள் வளர்த்திருப்பார்கள். அங்கே இளமைக்காதலுக்கு வழியே இல்லை.

மிக இளம் வயதிலேயே ஆணுக்கு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பாலியல் சார்ந்த உணர்வுகள் உருவாவதற்கு முன்னரே திருமணம் முடிவாகிறது. ஏழு எட்டு வயதிலேயே பெண்கள் மனைவிகளாகிவிடுகிறார்கள். பதினைந்து வயதுக்குள் ஆண்கள் திருமணம் முடிந்துவிடுகிறது.

இளமைத் திருமணம் அன்றைய மக்களால் மிக இயல்பான ஒன்றாகவும் தவிர்க்கக்கூடாத ஒன்றாகவும் கருதப்பட்டது. பின்னாளில் சாரதா சட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் வழியாகத்தான் இளமைத் திருமணம் தடை செய்யப்பட்டது. இன்று நாம் திரும்பிச் சென்று பழைய நூல்களை வாசிக்கும்போது இளமைத் திருமணம் சார்ந்த சித்தரிப்பு சற்று ஒவ்வாமையையும் அளிக்கிறது. ஆனால் அன்று அது களங்கமற்ற காதலின் சித்திரம் என்றே கருதப்பட்டது.. தன் முதற்காதலைப்பற்றி பாரதி பாடும் போது ’ஒன்பதாய பிராயத்தாள்’ என்றே சொல்கிறார்

கமலாம்பாள் சரித்திரத்தில் கல்யாணத் தடபுடல் என்றொரு அத்தியாயம் இருக்கிறது. கதாநாயகனாகிய ஸ்ரீனிவாசனுக்கு பதினைந்து வயது. அன்றைய மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதவிருக்கிறான். அவனுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. மனைவி லட்சுமி எட்டுவயதான சிறுமி. திருமணமானாலும் லட்சுமி வயது வந்த பிறகுதான் இல்லாளாக கணவனிடம் வருவாள். ஸ்ரீனிவாசன் தன் மாமனார் வீட்டிற்குச் சென்று திருமணச் சடங்குகளில் பங்கு கொள்வதைச் சித்தரிக்கும் இந்த அத்தியாயம் பாலுணர்வு தோன்றும் வயதில் ஏற்படும் கூச்சங்களையும் பரவசங்களையும் தமிழில் மிகச்சிறப்பாக எழுதிக்காட்டப்பட்ட ஒரு பகுதி

சீனிவாசன் மாப்பிள்ளைக் கம்பீரத்தை செயற்கையாக நடிக்கிறான்.  “தன்னருகில் ஒரு லட்சணமான பெண் தன் மனைவியாக உட்கார்ந்திருப்பதை எண்ணி அவன் உள்ளம் பூரித்தது. புதிதாக பட்டாபிஷேகம் செய்த ராஜகுமாரனுக்குக்கூட அவ்வளவு சந்தோஷமும் கர்வமும் இருக்காது. அவன் தன் ஆசனத்தில் கம்பீரமாய் கொஞ்சம் கூட முதுகை வளைக்காமல் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான். அங்கவஸ்திரத்தை அடிக்கடி இழுத்து இழுத்து சீர்திருத்திக் கொண்டான். தன் வலது கையால் மோவாய்க்கட்டையை பலமுறை தடவினான். அடிக்கடி தொண்டையை திருத்திக் கொள்வதுபோல் கரித்து செருமினான். சில வேளை தன் இருகைகளால் முழங்காலைக் கட்டிக்கொண்டு யானை ஆடுவது போல மெதுவாக ஆடினான். சிலவேளை தன் விரல்களால் வெகு விரைவாய் இங்கிலீஷில் எழுதினான். ஒவ்வொரு வேளையும் தன் முகத்தை திருப்பி தன்னருகில் இருந்த சுப்பராயனிடம் அழகாய் சில சில வார்த்தைகள் இங்கிலீஷில் பேசினான்” என்று ராஜம் அய்யர் அவன் காட்டும் பாவனைகளைச் சொல்கிறார்

பக்கத்தில் அவனுடைய மனைவி லட்சுமி இருக்கும்நிலையை ராஜம் அய்யர் இப்படிச் சொல்கிறார் “மகாகனம் பொருந்திய சீனிவாச ஐயர் தன் ஆசனத்தில் வீற்றிருக்க குழந்தை லட்சுமி உடல் ஒடுங்கித் தலைகுனிந்து அவனிடமிருந்து ஒரு முழத்திற்கு அப்பால் தங்கத்தில் வார்த்த பதுமை போல் அசைவற்று அமர்ந்திருந்தாள். அவள் அகமுடையானை அவள் இன்னும் பார்க்கவில்லை. அவள் சபைக்கு வரும்போது சீனிவாசன் உட்கார்ந்திருந்தது ஏதோ ஒரு ஜோதி போல அவளுக்குத் தோன்றியது தவிர அவனுடைய உருவத்தையும் முகத்தையும் அவள் இன்னும் சரியாகப்பார்க்கவில்லை. ஒருவரை அறியாமல் கடைக்கண்ணால் அவனைக் கொஞ்சம் பார்த்துவிட இஷ்டம் தான் ஆனால் எல்லோரும் தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியதால் அவள் அதைச் செய்யக்கூட கூசினாள்”

“சீனிவாசனாவது அவளைப்பார்த்தானா அதுவுமில்லை. அவனுக்கு ஸ்த்ரீகளைக் காட்டிலும் பத்து பங்கு அதிக நாணம்” என்கிறார் ராஜம் அய்யர். இருவரும் திருமணம் நிச்சயிக்கப்படும்போதெல்லாம்  ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை. தாய்தந்தை முடிவுசெய்கிறார்கள், அவ்வளவுதான். மணநிகழ்வில் கண்களால் பார்க்கவில்லை. ஆனால் மொத்த புலன்களால் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு மனம் தித்திக்க அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் கண்கள் தற்செயலாகச் சந்தித்துக்கொள்ளும் கணம். “இருவர் கண்களும் ஒரு நொடி சந்தித்துவிட்டன. அப்படி சந்தித்ததவுடன் லட்சுமி தலைகுனிந்துவிட்டாள். அவள் முகம் வியர்த்தது கைகால் பதறின உடல் மயிர்க்கூசெரிந்தது. காலையில் இளஞ்சூரியனை பார்த்த கண்களுக்கு எப்படி சற்று நேரத்துக்கு எங்கே பார்த்தாலும் சூரியனாகத் தெரியுமோ அதேபோல லட்சுமியின் கண்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு தன்னுடைய புருஷனின் செந்தாமரை போல் மலர்ந்த முகமும் அழகிய கம்பீரமான பார்வையுமே தெரிந்தது” என்கிறார் ராஜம் அய்யர்.

அக்கால திருமணச் சடங்குகளில் ஆணையும் பெண்ணையும் உறவுப்பெண்டிர் கேலி செய்து சிரிக்கும் நிகழ்ச்சிகள் பல உண்டு அப்பளம் உடைப்பது, கூடை கவிழ்த்துவது, பூக்களால் மாறி மாறி அடித்துக் கொள்வது போன்ற சில விளையாட்டுகள்.  பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக ஒடுக்கிய அச்சமுதாயம் இந்த இரண்டு நாட்களை மட்டும் ஒரு சின்ன சிறிய விதி தளர்த்தலாக கட்டில்லாமல் கொண்டாட அனுமதித்திருந்தது. அங்கு பெண்கள் தங்கள் கூச்சங்களையெல்லாம் விட்டு மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளைத் தோழர்களுடன் விளையாடுகிறார்கள். கொஞ்சம் அத்துமீறியேகூட பாலியல் சீண்டல்களில் ஈட்டுபடுகிறார்கள்

இருவரையும் இழுத்து அறைக்குள் விட்டு கதவைச்சாத்திக்கொள்வதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். அங்கே என்ன செய்யவேண்டும் என்று இரட்டைப்பொருள்வர சொல்லிக்கொள்கிறார்கள். சில பெண்கள் ’ மாப்பிள்ளை மாப்பிள்ளை மண்ணாங்கட்டித் தோப்பிலே’ என்று குதித்து குதித்து பாடினார்கள். ஒரு ஸ்த்ரீ பின்புறமாக வந்து மாப்பிள்ளையின் முகத்தை பிடித்து  “மாப்பிள்ளை அழாதீர்கள் இதற்காக அழுவார்களா என்ன?’ என்று கேட்டாள். இன்னொருத்தி  “விட்டுவிடுங்களடி பாவம் அழுகிறார்” என்று சொல்லி அவன் முகத்தைப்பிடித்து “பாவம் கோந்தை!” என்றாள். இருவரையும் சேர்த்துக் கட்டிவிடுகிறார்கள் . அந்த கட்டை அவிழ்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டு அலைக்கழித்து விளையாடுகிறார்கள்.

பெண்களுக்கு அன்று பாடவோ ஆடவோ பொதுவெளியில் தோன்றவோ சுதந்திரமில்லை. ஆனால் திருமண வீட்டின் அறைகளுக்குள் இயல்பாகவே அவர்களிடமிருக்கும் துள்ளலும் களிப்பும் வெளிவருகிறது.  “அந்த அற்புத யவ்வன பருவமுள்ள பெண்கள் பாதசிலம்புகள் குலுங்க குலுங்க கலீர் கலீர் என மெட்டிகள் சப்திக்க, விற்றவிழ ,வானிமிர, மெய்யணிகள் மினுங்க ,சிற்றிடை நுடங்க, ஒளிர் சீரடி பெயர்த்து அவனைச் சுற்றி ஒடி விளையாடியது ஒரு மின்னரசை பளீர் பளீர் எனபாயும் பலமின்னல்கள் சூழ்ந்தது போல அழகான நேத்ரோற்சவமாக இருந்தது” என்று நாவலில் சொல்லப்படுகிறது

அந்தச் சித்தரிப்புகளுக்குள் பொதிந்திருக்கும் பாலியல் அர்த்தங்களும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொள்ளும் தந்திரங்களும் மிக நுட்பமானவை. புது மாப்பிள்ளையைச் சுற்றி இவ்வாறு களியாட்டில் ஈடுபடும் அத்தனை பெண்களும் ஏற்கனவே திருமணமாகி கணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொள்ளும் இந்த மரபு மீறல் ஒரு சலுகையாக அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்களும் அதை அந்த எல்லைக்குள் நின்று குதூகலமாக அனுபவிக்கிறார்கள் ஒரு அந்நிய ஆணை பாலியல் ரீதியாகச் சீண்டுவது உறுப்புகளால் அவன் உடலைத் தொடுவது எல்லாம் கூட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கனவு போல அந்த இரண்டு நாட்கள் கடந்து போகின்றன. பிறகு ஒருபோதும் பெண்களிடம் விளையாடுவதற்கான வாய்ப்பே சீனிவாசனுக்குக் அமையவில்லை. தன் வாழ்நாள் முழுக்க அந்த இரண்டு நாட்களை எண்ணி அவன் ஏங்குவதும், அவ்வப்போது கண் கசியும் அளவுக்கு மனம் உருகுவதும் இந்நாவலில் சொல்லப்படுகிறது

காதlலே இலாத ஒரு சமூகம் நுனிவிரலால் கிள்ளி அளித்த ஒரு துண்டுக் கொண்டாட்டம் என அதைச் சொல்லலாம். அந்த தித்திப்பை உள்ளத்தின் ஆழத்தில் குத்தி வைத்து ஒரு நகை போல கொண்டு சென்றான் ஆண். இன்று ஆணும் பெண்ணும் நிகராக கல்வி பயில்வதும், பழகி காதலித்து மணம் புரிவதும் நிகழ்கிறது. வெறும் நூற்றியிருபத்தைந்து வருடங்களைக் கடந்து சென்று இந்நாவலைப்படிக்கும்போது புன்னகையே எழுகிறது. ஆனால் உண்மையில் இன்று அந்த களியாட்டம்கூட அனுமதிக்கப்படுவதில்லையோ ஏன்ற எண்ணமும் ஏற்படுகிறது

——————————————————————————————————

பி ஆர் ராஜம் அய்யர்  -ரெங்கையா முருகனின் கட்டுரை
——————————————————————————————————
கமலாம்பாள் சரித்திரம்
கட்டுரை-1, இலட்சியக்காதலியின் வருகை
முந்தைய கட்டுரைசதிரும் பரதமும்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-30