இலட்சியக்காதலியின் வருகை

bharathiar1_thumb[21]

சென்னையை ஆண்ட ஆங்கிலேய கவர்னர் ஓய்வுபெற்று ஊர்திரும்புவதை ஒட்டிய பிரிவு உபச்சாரநிகழ்ச்சி ஒன்றை சென்னையின் முதன்மைக்குடிமகன்கள் ஏற்பாடுசெய்திருந்தார்கள். கவர்னருக்கும் மனைவிக்கும் தமிழ் நன்கு தெரியும். ஆகவே தமிழில் ஒரு கவிஞரை அழைத்து பிரிவு உபச்சார வாழ்த்துப்பாமாலை ஒன்றை எழுதவைக்க ஏற்பாடுசெய்தனர். மேற்படி முதன்மைக்குடிமகன்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் தெரியாத தெலுங்கர்கள்,  அன்று தமிழில் புகழ்பெற்றிருந்த  மாம்பழக் கவிச்சிங்கராயரிடம்  எழுதி வாங்கி முறையாக அச்சிட்டு சட்டமிட்டு கொண்டு வைத்தாகிவிட்டது

விழா தொடங்குவதற்கு முன்பு பண்டைய நூல்களை தமிழில் பதிப்பித்த முன்னோடியாகிய உ.வே.சாமிநாதய்யர் அங்கே வந்தார். சும்மா அந்தக்கவிதையைப் பார்த்தார். ரத்தம் எகிறிவிட்டது. மாம்பழக் கவிராயர் துரைச்சானியின் முலைகளை விரிவாக வர்ணித்து ஐந்து பாட்டு எழுதிவைத்திருந்தார். பதறிப்போன உ.வே.சாமிநாதய்யர் அந்த விஷயத்தை சென்னை வாழ் பிரபுக்களிடம் சொன்னபோது அவர்களுக்கும் குடல்பதறியது. உடனடியாக உ.வே.சாமிநாதய்யரே அமர்ந்து ஒரு பத்துச்செய்யுள் எழுதி அங்கே வாசித்து நிலைமையைச் சமாளித்தார்

இந்த நிகழ்ச்சி உ.வே.சாமிநாதய்யர் எழுதிய என் சரித்திரம் என்னும் நூலில் அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது. மாம்பழக் கவிராயர் பெரிய தவறு ஏதும் செய்யவில்லை. அன்றைய அரசர்களையோ ஜமீன்தார்களையோ புகழ்ந்துபாடுவதுதான் அவரது தொழில். அப்படிப் பாடுவதற்கு ஆயிரம் வருடமரபு ஒன்று உண்டு. அதன்படி ஆணின் போர்வெற்றி, அவனுடைய நகரச்சிறப்பு, குடிச்சிறப்பு, தோள்வல்லமை இதையெல்லாம் வர்ணித்து எழுதலாம். ஆனால் பெண்ணை புகழும்போது மட்டும் அவள் கண்கள், உதடுகள், தோள்கள் ஆகியவற்றுடன் முலைகள், பின்னழகு ஆகியவற்றைத்தான் வர்ணிக்கவேண்டும். பெண்குறி [அல்குல்]யைக்கூட புகழ்ந்து எழுதுவார்கள். ஏனென்றால் பெண் என்றாலே அதெல்லாம்தானே என அவர்கள் உளமார எண்ணினார்கள்.

பெண்களைப்பற்றி நாம் ஆயிரமாண்டுக்காலமாகக் கொண்டுள்ள பொதுவான மனநிலையை அவளை காமத்தோடு மட்டும் தொடர்புபடுத்துவதுதான். அவள் கண்ணகியாக இருக்கலாம் , அல்லது மாதவியாக இருக்கலாம். அது காதலாக இருக்கலாம், அல்லது காமமாக இருக்கலாம். என்னவானாலும் பெண்ணின் இடம் படுக்கைதான். ஏர் என்றால் வயலுடன் தொடர்புபடுத்திதானே யோசிக்கிறோம்? அதேபோலத்தான்.

இந்தமரபிலே வந்த முதல்பெரும்பாய்ச்சல் என்பது பாரதிதான். ஆகவேதான் நாம் நவீன இலக்கிய வரலாற்றை பாரதியில் இருந்து தொடங்குவது வழக்கம். பாரதிதான் தமிழில் இதழியலை ஆரம்பித்துவைத்தார். அயல்மொழிச்சொற்களை தமிழாக்கம் செய்வதிலும் அவரே முன்னோடி. எளிமையான மக்கள்கவிதைகளை எழுதினார். உரைநடைக்கவிதையை உருவாக்கினார்.  கூடவே இன்றைய நவீனக் கதைஎழுத்தையும் அவரே தொடங்கி வைத்தார்.

பாரதியின் ஆறில் ஒருபங்கு என்னும் கதை 1911ல் வெளிவந்தது. தமிழின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று இது. ‘மீனாம்பாள் வீணைவாசிப்பதில் சரஸ்வதிக்கு ஒப்பானவள்’ என்றுதான் பாரதி ஆரம்பிக்கிறார். இதுவே அவள் கதாபாத்திரத்தை வரையறைசெய்துவிடுகிறது.   கதாநாயகனாகிய கோவிந்தராஜனின் ஒன்று விட்ட தாய்மாமனாகிய ராவ்பகதூர்ர் சுந்தரராஜூலு நாயுடுவின் மகள் மீனாம்பாள். இரவு ஒன்பது மணிக்கு இரவுணவு  முடிந்ததில் இருந்து  நடுநிசி வரை  தன்  அறையில் அவள் வீணை வாசிப்பாள். அதை அவளுடைய முறைப்பையனாகிய கோவிந்தராஜன் திண்ணையில் படுத்திருந்து ரசிக்கிறான்.

ராவ்பகதூர் நாயுடு வயிற்றில் சோற்றைப்போட்டு கையைக் கழுவிக்கொண்டிருக்கும்போதே தூங்கத் தொடங்கிவிடுபவர். வீட்டிலுள்ள அத்தனைபேருமே முதலிரு சுவரங்களுக்குள் தூக்கத்தில் விழுந்துவிடுவார்கள். மீனாம்பாள் வாசிப்பது காதலனாகிய கோவிந்தராஜனுக்காத்தான். வாசித்துமுடித்தபின் மீனாம்பாள் கோவிந்தராஜனைத் தேடிவருகிறாள். இருவரும் நெருக்கமாகப் பேசிக்கொள்கிறார்கள். இது அரியசந்திப்பு என நினைக்கவேண்டாம், அடிக்கடி நிகழ்வதுதான் என்கிறான் கதாநாயகன்.

சுந்தரராஜூலு நாயுடு தன் மகளை கோவிந்தராஜனுக்குத் திருமணம் செய்துகொடுக்கத்தான் நினைத்திருக்கிறார். ஆனால் அவன் கல்கத்தாவுக்கு ஓடிப்போய் பிரம்மசமாஜத்தில் சேர்ந்து கொள்கிறான். குல ஆசாரங்களை விட்டுவிடுகிறான். அதை பாரதி இப்படி எழுதுகிறார்:

“மீனா இன்று உன்னிடத்தில் ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன் என்றேன்.

‘எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்’ என்றாள்.

‘என்னது சொல்லு..” என்றவனிடம், “நீ பிரம்மச்சரிய சங்கற்பம் செய்துகொள்ளப் போகிறாய் என்ற விசேஷம்” என்றாள்.

“ஏன், எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்? என்று கேட்டேன்”

“வந்தே மாதரம் என்றாள்

மீனாம்பாள் அதிபுத்திசாலி. அவள் உண்மையில் கோவிந்தராஜனைவிடவும் தீவிரமான தேசபக்தி உடையவள். அவளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு பிரியாவிடை பெற்று கோவிந்தராஜன் தேசப்பணியாற்றச் செல்கிறான்

வடஇந்தியாவில் பஞ்சம் பாதித்த இடங்களில் அவன் பணியாற்றுகிறான். ஆனால் மனம் மீனாம்பாளையே எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறது.   “மீனா உன்னை நான் அறியேனா? எதுவரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள், ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன! அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமோ?” என அவன் அகம் அரற்றுகிறது

அப்போது மீனாம்பாளின் கடிதம் வருகிறது. தன் தந்தை தன்னை இன்னொருவனுக்கு மணம் புரிந்துவைக்க முயல்வதாகவும் அதை ஏற்காமல் தான் தற்கொலைசெய்துகொள்வதாகவும், இந்தப்பிறவியில் நாம் சேரமுடியாது என்பது காளியின் ஆணை என்றும் அவள் அதில் சொல்லியிருக்கிறாள்.  மனம் உடைந்த கோவிந்தராஜன் துறவுபூணுகிறான். வேறு ஒரு நினைப்பு இல்லாமல் தேசசேவையில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் அவன் மனதுக்குள் மீனாம்பாளின் நினைவு பெரிய வேதனையாக இருந்துகொண்டிருக்கிறது.

கோவிந்தராஜு கல்கத்தா செல்லும்போது  ஸதீச சந்திர பாபு என்பவரைச் சந்திக்கிறான். ”நாம் நம்மில் ஆறில் ஒருபங்கினராக உள்ள பள்ளர் பறையர் போன்றவர்களை அடிமைகளாக வைத்திருப்பதனால்தான் நம்மை வெள்ளையர் அடிமையாக வைத்திருக்கிறார்கள். முதலில் நாம் அவர்களுக்குச் சேவைசெய்வோம். அவர்களை விடுவிப்போம்” என்று கோவிந்தராஜு சொன்னதும் “இதேவரியை இங்கே வந்த மந்திராஜி என்னும் பெண்துறவியும் சொன்னார். உங்கள்முகத்தில் அவள் முகம் கலந்ததுபோலத் தெரிகிறது” என்கிறார் ஸதீசசந்திர பாபு

அந்த மந்திராஜியின் கதையை அவர் சொல்கிறார். அது மீனாம்பாளேதான். அவள் திருமணத்தன்று காலையில் ஒரு யோகியைச் சந்தித்து திருமணத்திலிருந்து எப்படித் தப்புவது என்று கேட்டாள். அவர் ஒரு பச்சிலையைத் தின்னும்படிச் சொன்னார். அவள் கோவிந்தராஜனுக்குக் கடிதம் எழுதிவிட்டு அதைச் சாப்பிடுகிறாள். கடுமையான காய்ச்சல்வந்து கைகால்கள் இழுத்துக்கொண்டன. அவள் செத்துவிடுவாள் என எண்ணி மணமகன் ஓடிவிடுவதனால் திருமணம் நின்றுவிட்டது. ஆனால் அவள் சாகவில்லை. பிழைத்துக்கொண்டதும் அவளும் துறவுபூண்டு பிரம்மசமாஜத்தில் சேர்ந்து தேசசேவை ஆற்ற ஆரம்பித்துவிட்டாள்.

கோவிந்தராஜு பதற்றமடைகிறான். அவள் எங்கிருக்கிறாள் என்று பகவத்கீதைமேல் ஆணையாகக் கேட்க ஸதீசசந்திரர் அவள் காசியில் இருப்பதாகச் சொல்கிறார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நாமசூத்திரர் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவைசெய்யப்போய் கடும் காய்ச்சல் வந்து அவள் மரணப்படுக்கையில் இருக்கிறாள். அவள் கடைசியாக காசியில் சாகவிரும்பியதால் பிரம்மசமாஜத் தலைவரான அஸ்வினிபாபு அவளை காசிக்குக் கொண்டுசென்றிருக்கிறார் . ஸதீசசந்திரரிடமே வழிச்செலவுக்குக்  காசு வாங்கிக்கொண்டு கோவிந்தராஜு அழுதபடியே காசிக்கு ஓடுகிறான்

அங்கே சென்றபோது கோவிந்தராஜுவுக்கும் காய்ச்சல் வந்துவிடுகிறது. அவனும் மரணம் வரைச்சென்று மீள்கிறான். மீனாம்பாளும் உயிர் பிழைத்துவிடுகிறாள். இருவருக்கும் அஸ்வினிபாபுவே திருமணம்செய்து வைக்கிறார். மீனாம்பாளும் கோவிந்தராஜனும் உணர்ச்சிக்கொந்தளிப்பால் துறவுமேற்கொண்டாலும்கூட அவர்களுக்கு எந்த குருவும் முறையாக துறவு அளிக்கவில்லை என்பதனால் அவர்கள் இல்லறத்துக்கு மீளலாம் என்கிறார் அவர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு இல்லறத்தில் அமைந்து தேசசேவை செய்யவேண்டுமென்பதற்காகவே பாரதமாதாவே காளிவடிவில் தோன்றி ஆடிய லீலை அது என்று விளக்குகிறார்.

லதாமண்டபத்தில் காத்திருக்கும் மீனாம்பாளை கோவிந்தராஜன் சென்று சந்திக்கிறான். பாரதியின் வரிகள் இவை: “மாலைப் பொழுதாயிற்று. நான் ஸன்யாசி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்கு உரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர், ஸ்த்ரீ ரூபங் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கு இதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது”

நவீன இலக்கியம் நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்து கதைநிகழும்போது நாமும் உடனிருப்பதுபோல உணரவைக்கும். ஆரம்பகாலக் கதைகள் அப்படி இல்லாமல் நம் பழையபாணி நீதிக்கதைகள்போல நிகழ்ச்சிகளை சுருக்கமாகச் சொல்லிச்செல்வது போலிருக்கும். இந்தக்கதையும் அப்படித்தான். பெரியபெரிய நிகழ்ச்சிகள் எல்லாமே ஓரிருவரிகளில் வந்துசெல்கின்றன. உணர்ச்சிகள் எல்லாமே நாடகவசனம் போல ஒலிக்கின்றன.

உண்மையில் இது சிறுகதையே இல்லை. ஒரு பெரியநாவலின் கதைச்சுருக்கம் போலிருக்கிறது. ஏகப்பட்ட சம்பவங்கள், ஏராளமான திருப்பங்கள். அதோடு அந்தக்காலக் கதைகளில் இந்தமாதிரி தற்செயல் சார்ந்த திருப்பங்கள் நிறையவே வரும். நம்பமுடியாதவை நிகழும். பெரியவர்கள் வந்து அருளுரை புரிந்து கதையை முடித்து வைப்பார்கள்.

பாரதிக்கு துறவு என்னும் கருதுகோளின் மீதிருந்த இயல்பான மறுப்புநோக்கும் இதில் வெளிப்படுகிறது. விவேகானந்தரின் கொள்கைகளிலேயே துறவுதான் பாரதிக்கு ஒவ்வாததாக இருந்தது. காதல் இல்லாத வாழ்க்கையில் அழகு இல்லை. அது வெறும் உலர்ந்த மட்டை என்பது அவருடைய கருத்து. இக்கதையின் கருத்துச்சாரமும் அதுதான்

இக்கதையின் முக்கியமான அம்சம் மீனாம்பாளின் குணச்சித்திரம்தான். நமக்கே தெரியும் ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம்கூட பெண்கள் இப்படி இரவில் வீணைவாசிப்பதும், காதலனை நள்ளிரவில் சந்தித்து உரையாடுவதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாதவை என்று. “அய்யிரே, எந்தூர்ல வே இந்தக்கதை நடக்குது?” என்று பாரதியிடம் நெல்லைமொழியில் கேட்கத் தோன்றுகிறது. அவர் நாணத்துடன் தலைகுனிந்து “ஒண்ணுமில்லவே, சும்மா எளுதிப்பாத்ததுதான், என்ன?” என்று சொல்லக்கூடும்.

இது யதார்த்தம் அல்ல. இது பாரதியின் லட்சியக்கற்பனை மட்டுமே. அவருக்கு பிடித்த எல்லாமே இதிலிருக்கின்றன. பிரம்மசமாஜம், கல்கத்தா, தேசசேவை,காசி, காதல், வீணை எல்லாம் அன்று இளைஞர்களின் இலட்சியங்கள். ஒருபக்கம் தேசசேவைக்குச் செல்லவேண்டும் என்ற கனவு. இன்னொருபக்கம் வீணைவாசிக்கக்கூடிய ,படித்த ,அழகான பெண் மனைவியாக வேண்டும் என்னும் கனவு. இரண்டுக்கும் நடுவே போராட்டம். கடைசியில் இரண்டுமே கிடைக்கிறது கோவிந்தராஜனுக்கு. மச்சக்காரப்பயல்!

மீனாம்பாள் கலைமகள் வடிவத்தவள். அரசியல் உணர்வும் அறிவுத்திறனும் கொண்டவள். துணிச்சலுடன் ஊர்விட்டுக் கிளம்பி அறியாநிலங்களில் தேசப்பணியாற்றுபவள். அழகி.இப்படி ஒரு புதுமைப்பெண் இங்கே உருவாகவேண்டும் என்று பாரதியின் தலைமுறை எதிர்பார்த்திருக்கிறது. அப்படி ஒரு பெண்ணை கற்பனைசெய்து காதலித்து ஏங்கி உருகி திளைத்திருக்கிறது. பாரதியின் பல கதைகளில் இதே மீனாம்பாளின் வேறுவேறு வடிவங்கள் உள்ளன. உதாரணம் இன்னொரு கதையான ஸ்வர்ணகுமாரி. காதலனாகிய மனோரஞ்சன் தேசத்துக்கு எதிராக செயலாற்றுகிறான் என ஸ்வர்ணகுமாரிக்குத் தெரியவருகிறது.

“தேசத்திற்கு விரோதமிழைக்கும் ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்து போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும் வரை உன் முகத்திலே விழிக்கமாட்டேன். பெற்ற தாய்க்குச் சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ என்மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்?” என காதலனுக்குக் கடிதம் எழுதிவிட்டு பிரிந்துசென்றுவிடுகிறாள். ஆமாம், காசிக்குத்தான்!

பாரதியாரின் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களின் மானசீகக் காதலியின் வடிவதை மீனாம்பாளில் பார்க்கிறோம்.  அக்காலகட்டத்து கவிதைகள் எல்லாமே இத்தகைய பெண்களைநோக்கி கண்ணீர்மல்கி எழுதப்பட்டவைதான். நவீனத் தழிலக்கியத்தில் நிறைய மானசீகக் காதலிகள் அதன் பின்னர் வந்துகொண்டெ இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் முப்பாட்டி பாரதியாரின் மீனாம்பாள்.

முந்தைய கட்டுரைஆயுதம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-28