ஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்

Jeyamohan house

இனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு .,

நலம். நலம் அறிய ஆவல். தங்களின் வாசகன் என்ற முறையில் , நான் எழுதும் முதல் கடிதம்  இது. கட்டுரை வாயிலாக தான் அறிமுகம். தங்களுடைய  சிறுகதை, புதினம் என்று வாசித்த பிறகு, ஏதோ சரியான ஆளிடம் வந்து சேர்ந்த உணர்வு. என்னுடைய வாசிப்பு  பாலகுமாரனின் “இரும்பு குதிரை”யில்துவங்கி தற்பொழுது “விஷ்ணுபுரத்தில்  வந்து நிற்கிறது. உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என பல முறை எண்ணியபொழுது அது சாத்தியமாகவில்லை. ஆனால் , உங்களை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என கனவிலும் நினைத்து பார்க்காதபொழுது, அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது ஒரு ருசிகரமும், சுவாரஸ்யமும் நிறைந்த சம்பவம் . சற்றே விரிவாக கூற எத்தனிக்கிறேன்.

நானும், என்னுடைய நண்பர்கள் குழாமும் , கல்லாரி நண்பனின் திருமணத்திற்காக சென்ற வருட இறுதியில்,  நாகர்கோவில் வந்திருந்தோம். அப்பொழுது, உங்கள் வீட்டை மட்டும் ஒரு தடவை பார்த்து விட வேண்டும் என்று ஆவல் என் மனதிற்குள் இருந்தது. அந்த நிமிடம் கூட, உங்களை நேரில் பார்த்து உரையாட வேண்டும் என்று தோன்றவில்லை. இதை நண்பர்களிடம் சொன்ன பொழுது, அவர்களும் சரி என்றார்கள்.   டிசம்பர் 28, வியாழன் அன்று காலை 9 மணி அளவில், சர்ச்சில் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. கிறித்துவ மணத்தை முதல் முறையாக பார்க்க போகிறோம் என்ற எண்ணமும் உற்சாகத்தை வரவைத்தது . புதன் மதியம் அளவில்  நாகர்கோவில் வந்தடைந்தோம். பன்னிரெண்டு மணி நேரம் மேலாக கார் பயணம் என்பதால் , அன்று  வெறுமனே ஓய்வு எடுப்பது என்றாகிவிட்டது. அடுத்த நாள் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்த்து விட்டு, உங்கள் வீட்டையும் பார்த்து விட்டு,9 மணிக்குள்  சர்ச்சுக்கு செல்ல வேண்டும் என்று  திட்டம். பலநேரங்களில், நண்பர்கள் ஒருசேர இருக்கும்பொழுது போடுகின்ற திட்டம் எப்படி அமையும் என உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் அதிசயமாக அதிகாலையிலே அனைவரும் எழுந்து கிளம்பிவிட்டிருந்தனர். சூரியஉதயம் பார்க்கின்ற உற்சாகம் போலும். அங்கு சென்று பார்த்து விட்டு, சரியாக ஏழு மணியளவில் பார்வதிபுரம் வந்தோம். 93, சாரதா நகர், பார்வதிபுரம் என்கிற வரிகள்  மட்டும் மனதில் ஓடி கொண்டிருந்தது. விலாசத்தை தேடி அழைந்து, எந்த குறுக்குசந்திற்குள் நுழைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில், இரண்டு மூன்று ஆசாமிகள் வழியை மாற்றி சொல்லி வேறு அழைய வைத்தார்கள். கடைசியாக ஒரு மளிகைக்கடைக்காரரிடம் சென்று, எழுத்தாளர் ஜெயமோகன் வீடு எது என்று கேட்டபோது, ” அவர் பேர்லாம் எனக்கு தெரியாதுங்க , writer தானே? ரெண்டு தெரு தாண்டி போங்க” என்று குத்துமதிப்பாக கையைக் காண்பித்தார். ஒருவழியாக தங்களின் வீட்டின் முகப்பை வந்தடைந்தோம்.

நேரில் உங்கள் வீட்டை பார்த்தபொழுது, ஒருவித பயம் கலந்த பரவச உணர்வு உடலில் பரவியதை  இக்கணமும் மறக்க முடியவில்லை. வெளியில் நின்று உங்கள் வீட்டை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தேன். ஏராளமான எண்ண அலைகள் ஒரு மூலையில் முடங்கி, தியானம் பண்ணுவதைப்போல. சரி போகலாம், நேரம் ஆகிவிட்டது என்று எண்ணியபோது; ஒரு நண்பன் மட்டும் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது, இரண்டு நிமிடம் நம்மை அறிமுகம் மட்டும் செய்து கொண்டு போகலாம் என்று கூறினான். நான் மறுப்பு தெரிவித்தேன். ஏனென்றால், எனக்கு பயம் தொற்றி கொண்டுவிட்டது. அன்றளவுக்கு உங்களுடைய சிறுகதைகள் கட்டுரைகள் வலைப்பதிவுகள் தான் அதிகம் வாசித்திருந்தேன். புதினம் என்ற அளவுக்கு இரவு முடித்திருந்தேன். எழுத்தாளனை பார்க்க இதெல்லாம் ஒரு தகுதியா? என்ற உளக்  கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நண்பன் என் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் , ‘சார், சார்’ என்று  கூப்பிட ஆரம்பித்தான். இரண்டு நிமிடம் எந்த குரலும் உள்ளிருந்து வரவில்லை. இறுதியாக, அருண்மொழி அவர்கள் எட்டிப்பார்த்தார்கள். தங்களின் வாசகன் என்றும் சென்னையில் இருந்து வருவதாகவும் அறிமுகம் செய்து கொண்டோம். உள்ளே அழைத்தார்கள். நீங்கள் நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பதாக முதலில் சொன்னார்கள். பத்து நிமிடத்திற்குள்ளாக காத்து கொண்டிருந்தோம். ஒருபக்கம், திருமணத்திற்கு வேறு நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதை எப்படி சொல்லிவிட்டு கிளம்புவது என்றும் தெரியவில்லை. சற்று நேரம் கழித்து அருண்மொழி உங்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டார்கள். நீங்கள் நண்பர் தொல்லியலாளர் கே.கே.முகம்மது அவர்களை வழி அனுப்ப ரயில் நிலையம் சென்று திரும்பி கொண்டிருப்பதாகவும், அரை மணி நேரத்தில் வந்துவிடுவாரென்றும் தெரியப்படுத்தினார். உடனே, நெஞ்சுக்குள் ஒரு இருள் கவ்விக்கொண்டது. அவ்வுளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு கண்டிப்பாக தாமதம் ஆகிவிடும். இன்னொருபுறம் , ஒரு காலை பொழுதில் அழையா விருந்தாளியாக தங்களின் வீட்டில் அமர்ந்திருப்பதும் குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தியது. சற்று தாமதம் ஆனாலும், நண்பர்கள் உங்களை பார்த்துவிட்டே செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இடையிடையில், அருண்மொழி அவர்கள் எங்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார். அவை, ஒருவித மனநிம்மதியை தந்தது என்றே சொல்லவேண்டும். சற்று நேரம் கழித்து உங்களின் வருகை சத்தம் கேட்டது. புதுவித கிளர்ச்சி மனதிற்குள் தொற்றிக்  கொண்டது. தங்களை நேரில் கண்ட அந்த நொடி தொன்மம் போல நெஞ்சில் இன்றளவும் அப்பிக்கொண்டு விட்டது. சரளமாக எங்களிடம் உரையாடிய விதம், பெரும் வியப்பையும் உவகையையும் ஒரு சேர அளித்தது. மலையாள சாயலின் உங்கள் குரல், கணினி வாயிலாக பலமுறை கேட்டிருந்தாலும், நேரில் கேட்கும்பொழுது மழலையின் சொல் போல காதில் இனித்தது. வந்த நண்பர்களில் பாதிப்பேர் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம் என்ற சொன்னவுடன், உங்களுக்குள்ளும் ஒரு வித  உற்சாகம் தொற்றிக்கொண்டதை உணர முடிந்தது.

தன்னுடைய கேள்வி ஞானத்தை ஆசிரியர் எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும், என்ற அசட்டு மாணவன் பாவத்தில் கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு விரிவான பதிலிலும் ஜெயமோகன் முத்திரை. பேசிக்கொண்டு இருக்கும்பொழுது திருமணத்தை முற்றிலும் மறந்து போனோம். இடையில் கடிகாரத்தை பார்த்த பொழுது மணி பத்து தாண்டியிருந்தது. அனேகமாக திருமணம் முடிந்திருக்கும் என ஊகித்தோம். இப்போதாவது விவரத்தை சொல்லிவிட்டு  விடைபெறலாம் என நினைத்தபொழுது, அருண்மொழி அவர்கள் சிற்றுண்டி தயார் செய்து சாப்பிட அழைத்தார். நாங்கள் எவ்வுளவு மறுத்த போதும், கட்டாயப்படுத்திய உபசரணை எங்களை வெகுவாக கவர்ந்தது. சாப்பிடும்பொழுதும், உரையாடல் தொடர்ந்துகொண்டு இருந்தது. ஒருவழியாக சாப்பிட்டுமுடித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பிய பொழுது மணி பதினொன்றை தாண்டி இருந்தது. வெளியில் வந்து காரை நோக்கி நடந்த பொழுது , ஒரு நண்பன் மட்டும் அழுது விட்டான். மிக நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு வந்துவிட்டு, இப்படி அரட்டை அடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும், எங்களை கட்டாயம் அவன் திருமணத்தின்போது எதிர்பார்த்திருப்பான் என்றும் கதறினான். காரை அவன்தான் கிளப்பினான். ஒரு ராட்சத வேகத்தில் செலுத்தினான். இருந்த ஆத்திரத்தில், இரண்டு மூன்று வாகனங்களை நெருங்கிச்சென்று நூலிழையில் பிரேக் பிடித்தான். எங்களுக்குள் மரண பீதி. ஒருகட்டத்தில் அவனது அழுகை நிறுத்த முடியாமல் போய், காரை அவனிடம் இருந்து வாங்கி இன்னோரு நண்பன் ஓட்டத்துடங்கினான்.

வேகமாக தங்கியிருந்த அறைக்குச்சென்று , குளிக்காமல் கூட உடையை மாற்றிக்கொண்டு சர்ச் நோக்கி ஓடினோம். ஆச்சரியம் என்னவென்றால்,நிகழ்ச்சி அப்பொழுது முடிந்திருக்கவில்லை. பாதிரியார் மணமக்களுக்கு ஞானஆசி வழங்கி கொண்டிருந்தார். ஒருவழியாக, கடைசி நிகழ்வுக்காவது வந்து சேர்ந்ததில் அனைவருக்கும் ஒரு மனநிறைவு. ஏன் இவ்வளவு நேரம் என்ற மற்றோர் கேள்விக்கு ஆளுக்கு ஒரு பொய் சொல்லி சமாளித்தோம்.

இப்படியாக அந்த காலை பொழுது சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் நிகழ்ந்தமைக்கு இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இன்றளவும், நண்பர்களிடையே இந்த நிகழ்வை சிலாகித்து பேசிக்கொள்வதுண்டு.

அதன்பிறகு எம்.ஏ.சுசீலா அவர்களின் பாராட்டு விழாவில், உங்களை சந்திக்க நேர்ந்தது. நீங்கள் முதலில் தனி ஆளாக உள்ளே நுழைந்தீர்கள். உள்ளே வர வர, உங்களை ஒவ்வொருவராக சூழ்ந்து கொண்டார்கள். அனைவரின் முகத்திலும், எதோ குடும்ப விழாவில் பங்கேற்பது போல பூரிப்பு இருந்தது. மனம் உங்களிடம் பேசச்  சொன்னது, கால்கள் மறுத்துவிட்டன . ஒரு ஓரமாக நின்று அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் மனதிற்குள் தோன்றியது. இத்தனை நாள் கடிதம் வாயிலாக தொடர்புகொண்டிருந்தால், நானும் முன்னின்று உங்களை வரவேர்த்திருக்களெமன்று. அதற்கான முதற்சந்தர்ப்பமாக இக்கடிதத்தை அமைத்துக்கொள்கிறேன். நிகழ்வு , மொழிபெயர்ப்பை பற்றி பெரு வாயிலை திறந்துவிட்டது. செவ்வியல் தன்மை பற்றியும் விரிவாக ஒரு மனப்பதிவு உருவானது. அடுத்து கண்டிப்பாக குற்றமும் தண்டனையும் தான் என்று தோனிற்று. அந்த நிகழ்வின் புகைப்படத் தொகுப்பில் என் படமும் இருந்தது பெருமகிழ்வாக இருந்தது. அன்று உங்கள் வீட்டில் எடுத்த புகைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். மஞ்சள் நிற டி-சர்டில் , உங்கள் அருகில் நின்று கொண்டிருக்கிறேன்.

அன்புடன்

கார்த்திக் குமார்

Russian centre

அன்புள்ள கார்த்திக் குமார்

உங்களைச் சந்தித்ததும் பேசியதும் நீங்கள் ஒருவகை பதற்றத்துடனேயே இருந்ததும் எல்லாம் நினைவிலிருக்கிறது. கூட்டங்களில் சந்திப்பதிலுள்ள சிக்கல் நான் பதற்றமாக இருப்பேன் என்பது. இன்னமும்கூட எனக்கு மேடைப்பேச்சு பெரிய சுமைதான். ஒருநாளுக்கு முன்னரே பயம் தொடங்கும். மேடைப்பேச்சை மனதுக்குள் நிகழ்த்தியபடி அரைக்கவனத்துடன் இருப்பேன். மேடையில் நினைத்தவற்றில் ஒருபகுதி மறந்தும் போய்விடும். பிறிதொன்று எழுந்து வரும். ஆகவே தனிச்சந்திப்புகளே மேலும் அணுக்கமானவை. மீண்டும் சென்னை வரும்போது சந்திப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-23
அடுத்த கட்டுரைபழைய யானைக் கடை