ஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி

 

rajeev

ஸ்டெர்லைட்

அன்புள்ள ஜெ,

நலம் விழைகிறேன்.

நான் வேதாந்தா குழுமத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் Sterlite நிறுவனம் பற்றி எனது கருத்து.

பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. வேதாந்த நிறுவனம் சுற்றுப்புற சூழலை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்போது அந்த நிறுவனம் கொஞ்சம் திருந்திவருகிறது. இப்போது கடைபிடிக்கப்படும் சுற்றுசூழல் பாதுகாப்பு விதிமுறைகளை எளிதில் மீறி விடமுடியாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

NEERI போன்ற அமைப்புகள் காற்று மாசுபாடு அளவிட அமைத்திருக்கும் கருவியையோ அது அமைந்திருக்கும் இடத்தையே பார்த்தால் அது அளிக்கும் மாசு குறித்த அளவீடுகளில் நமக்கு சிறிதும் நம்பிக்கை வராது.  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துவிட்டால் அதில் எந்த ஆபத்தும் இல்லை என்பதெல்லாம் முட்டாள்தனம்.

எத்தனையோ இடத்தில் காற்று மாசு அளவீடும் கருவியை பார்த்திருக்கிறேன். 90 சதவீத கருவிகள் குப்பையில் கிடக்கும் பழைய இரும்புகளை கொண்டு அமைக்கப்பட்டது போன்றே இருக்கும். அவை அளிக்கும் Pollution Reading நமது வாகனத்திற்கு Pollution Certificate எடுப்பது மாதிரிதான். நமது தேவைக்கு ஏற்ப அளவீடுகளை மாற்றிக்கொள்ள முடியும்.

Sterlite நிறுவனம் புதிதாக அமைக்கப்போகும் நிறுவனத்தில் சுமார் 500 கோடியை சுற்றுசூழல் பாதிக்காமலிருக்க தேவையான உபகரணங்கள் அமைக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. ஒரு வகையில் அலகு-I இல் அந்த வசதிகள் இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் அது சுற்றுப்புற சூழலுக்கு கொடுத்த மரியாதையை பார்த்தால் ஒருவருக்கும் அந்த நிறுவனம் மீது நம்பிக்கை வராது.

நச்சு இல்லாத ஒரு ஆலை உலகில் ஏதேனும் உண்டா என்ன? எல்லா தொழிற்சாலையிலும் காற்றை, நிலத்தை மாசுபடுத்தும் கழிவுகள், ஆபத்துகள் இருக்கின்றன. எப்படி கழிவை சுத்திகரிப்பு செய்கிறோம், பாதுகாப்பு அளிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதற்க்காக ஒரு தொழிலை முடக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்றுகொள்ளதக்கதாய் இல்லை.

Non ferrous Metal என்று அழைக்கப்படும் Aluminum, Copper, lead, Zink, Silver உற்பத்தி அனைத்திலும் ஆபத்து மிக அதிகம். அதன் கழிவுகளை மறு சுழற்சி செய்வது எளிதான காரியம் இல்லை. எவ்வளவு பாதுகாப்பாக இயங்கினாலும் அவ்வப்போது நடக்கும் சிறு தவறுகளால் மீட்க முடியாத இழப்பு ஏற்பட்டுவிடுகிறது.

பாதுகாப்பில் சராசரி இந்தியர்களுக்கு இருக்கும் அலட்சியம் உலகில் வேறு எந்த நாட்டு தொழிலாளர்க்கு இருக்குமா என்பது சந்தேகமே?? எத்தனையோ விபத்துகளை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சிறு பாதுகாப்பு உபகரணமோ, சிறு கவனமோ  இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணமே வரும்.

போபால் விபத்து பற்றி பேசுகிறோம். வெளிநாட்டு சதி என்கிறோம். விபத்து நடக்க அங்கு வேலை செய்த தொழிலாளியின் கவன குறைவு என்பது எத்தனை பேர் அறிவார்கள். ஒரே ஒரு இரும்பு தகடை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தால் அந்த கோர விபத்து நடக்காமல் தவிர்த்திருக்கலாம். போபால் விபத்துக்கு பிறகுதான் நம் நாட்டில் ISO Standards அமலுக்கு வந்தது.
தொழில்நுட்பத்தை எப்படி பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பது வெறுமனே இயந்திரம் சார்ந்தது மட்டுமல்ல. தொழிலாளர்களின் ஈடுபாடும் மிக முக்கியம்.

தூத்துக்குடியில் தொழில் நிறுவனங்கள் அமைய காரணம் அருகில் இருக்கும் துறைமுகம். Sterlite மாதிரியான நிறுவனங்கள் Raw material இறக்குமதிக்கு தூத்துக்குடி துறைமுகத்தை நம்பியே உள்ளது. துறைமுகத்திலிருந்து நீண்ட தூரத்தில் தொழிற்சாலை அமைவதால் உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. காப்பர் உற்பத்திக்கு ஆகும் செலவு சுழியம். ஏனென்றால் அதன் அத்தனை கழிவுகளையும்(By Product) பணமாக மாற்றமுடியும். ஆகவே கொள்ளை லாபதிற்க்கு ஆசைப்பட்டு Sterlite நிறுவனம் அந்த இடத்தில் அமைப்பதைவிட வேறு இடத்திற்க்கு மாற்றுவதை அந்த நிறுவனம் யோசிக்க வேண்டும்.

Sterlite நிறுவனத்தை மூடுவதால் இந்தியாவில் காப்பர் விலை அதிகமாகும். ஆசியாவில் கூட காப்பர் விலை உயர வாய்ப்புண்டு. அந்த நிறுவனத்தை மக்கள் வசிக்காத இடத்திற்கு மாற்றவேண்டும். ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத இடத்திற்கு மாற்றலாம். தமிழ்நாட்டில்  வேறு எங்காவது அந்த நிறுவனத்தை அமைக்க கோரிக்கை வைக்கலாம். ஏற்கனவே தமிழகத்தில் வேலை வாய்ப்பு குதிரை கொம்பாக இருக்கிறது. இருக்கும் ஒன்றிரண்டு நிறுவனத்தையும் மூடிவிட்டால் என்ன செய்வது?

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் நாம் மீசையை வழித்துவிட்டு கூழை குடிக்கவேண்டிய காலத்தில் வாழ்கிறோம்.

அன்புடன்
மா.பா.இராஜீவ்

SterliteProtestMarch24MainPic (1)

அன்புள்ள இராஜீவ்

நான் ஸ்டெர்லைட்டை இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ செயல்படவிடக்கூடாது என்று சொல்லவில்லை. செம்பு தயாரிக்கக்கூடாது என்றும் சொல்லவில்லை. இங்கே அது பெரும் சூழியல் அழிவை உருவாக்குகிறது என்பது கண்கூடான உண்மை, தங்கள் வாழ்வுக்காகப் போராட மக்களுக்கு உரிமை உண்டு என்று மட்டுமே சொன்னேன்

இந்தவிவாதங்களில் வழக்கமான இணையப்பேச்சுக்களின் உச்சகட்டமான தரப்புகள் முன்வைக்கப்படுகின்றன. தொழில்வளர்ச்சி தேவை , ஏனென்றால் அதை நம்பியே நாம் வாழ்க்கையை அமைத்திருக்கிறோம். அதனை மாற்றிக்கொள்ளும் நிலையிலும் இல்லை. இது ஓர் உண்மை. மறுபக்கம் சூழியல் பாதுகாப்பு மக்கள் செறிந்துவாழும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவை என்பது இன்னொரு உண்மை.

இந்த இரு தரப்புகளுக்கும் நடுவே, ஒரு சமரசமாகவே இங்கு எதுவும் ஓரளவேனும் நன்றாக நிகழமுடியும். தொழில்வளர்ச்சிக்கான தரப்புக்கு அரசு ஆதரவு, முதலாளிகளின் ஆதரவு, ஆகவே ஊடக ஆதரவு அனைத்தும் உள்ளன. சூழலின் பொதுக்கட்டாயமும் அதற்கே ஆதரவாக உள்ளது

ஆகவேதான் சூழியல் தரப்பு தன்னை முடிந்தவரை விசையுடன் முன்வைக்கவேண்டியிருக்கிறது. தன்னை அனைத்துவகையிலும் திரட்டிக்கொள்ளவும் போராட்டத்தை முன்னெடுக்கவும் அதற்கு தீவிரமான நிலைபாடுகள் தேவையாகின்றன. இதை சற்றேனும் களத்தில் நின்று நோக்கினால் அறியலாம். அவர்கள் ஒரு தரப்பு. அவர்கள் ‘சமநிலையுடன்’ பேசவேண்டும் என்று கோருவது அறிவின்மை. அவர்கள் தங்கள் தரப்பை முடிந்தவரை வீச்சுடன் முன்வைப்பதே உகந்தது

அதற்கு எதிர்த்தரப்பு தன்னை விளக்கவேண்டும், திருத்திக்கொள்ளவேண்டும். மேம்படுத்தவேண்டும், கட்டுப்படுத்தவேண்டும். சூழியல் இயக்கங்கள் இன்றைய சூழலில் இங்குள்ள மூர்க்கமான அழிவுப்போக்கு கொண்ட முகதலாளித்துவம், நுகர்வுப்போக்கு இரண்டுக்கும் எதிர்விசையாகவே செயல்படமுடியும். அவை கட்டுப்படுத்தும் விசைகள். தறிகெட்ட குதிரையின் சேணங்கள். மக்கள் தரப்பிலிருந்து வரும் இன்றியமையாத எதிர்விசை அது

ஆகவே அவற்றுக்கு எதிர்மறைத்தன்மையே இன்றைய சூழலில் இருக்கமுடியும். அதன்பொருட்டு அவற்றை சிறுமைசெய்வது என்பது மக்களின் தரப்பாக ஒலிக்கும் குரலை இழிவுசெய்வது. மறைமுகமாக அவர்களை அழிக்கும் லாபவெறிக்குத் துணைசெல்வது.

நான் தனிப்பட்ட முறையில் இந்தியாவெங்கும் சூழியலுக்கான இயக்கங்கள் நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்றும், காவல்நாய் போலவே சூழியல் இயக்கங்கள் நிகழவேண்டும் என்றும் விரும்புகிறேன். இங்கே கட்டற்ற லாபவெறிகொண்ட முதலாளித்துவம் அரசியல் சக்திகளுடனும் அரசுடனும் கைகோத்துக்கொண்டுள்ளது. ஊழலில் மூழ்கிய அதிகாரிவர்க்கம் ஆட்சியமைப்பு அதற்கு ஏவல்பணி செய்கிறது.  ஐரோப்பாவும் அமெரிக்காவும் அங்குள்ள  சூழியல் இயக்கங்களின் எதிர்ப்புகளால் சூழியல்பாதிப்பூட்டும் உற்பத்திகளை ஆசியாவுக்கும் சீனாவுக்கும் கொண்டுசென்றுகொண்டிருக்கும் காலம் இது. இத்தகைய இயக்கங்கள் இல்லையேல் இந்தியா சோமாலியா ஆகிவிடும்

மக்களுக்குக் குரல் இல்லாத, இத்தகைய இயக்கங்கள் நிகழமுடியாத, நாடுகளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறேன். மலேசியா,சீனா,சிங்கப்பூர். சூழியல் அழிவு ஒருதலைப்போக்காக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தாளமுடியாத அளவு சென்றுவிட்டிருக்கிறது அங்கு.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-6
அடுத்த கட்டுரைஇணைப்புகளின் வலைப்பாதை