சோ.தர்மன், காலச்சுவடு

writer-dharman

எழுத்தாளனின் ரயிலடி

கண்ணனின் சங்கநாதமும் காலச்சுவடு என்கிற ஆக்டோபஸும் விமலாதித்த மாமல்லன்

திரு காலச்சுவடு கண்ணன் அவருடைய முகநூலில் உக்கிரமான எதிர்வினைகளை எழுதியிருப்பதாக அறிந்தேன். என்ன சொல்லியிருக்கிறார் என பொதுவாக கேட்டறிந்தேன். பெரிய ஆர்வம் ஏற்படவில்லை.

நான் எழுப்பியது ஒரு நடைமுறை வினா. அதற்கு அத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்புகள். காலச்சுவடு கண்ணனின் கொழிக்கும் வாழ்வை எண்ணி பொறாமையால் பொசுங்கிக் கொண்டிருக்கிறேன் நான் என அவருக்கு ஒரு நம்பிக்கை. நன்று, அது ஒரு நல்ல உணர்வுதான். நேர்நிலையாக ஏதும் எண்ணுவதற்கில்லாதபோது எதிர்மறை மகிழ்ச்சிகள் உதவிகரமானவையே.

முதல் விஷயம் நான் சுட்டிக்காட்டிய எதுவுமே பிழையாக இல்லை. ஒன்று, சோ.தருமன் என்னிடம் மட்டுமல்ல பலரிடம் காலச்சுவடு தன் உரிமைத் தொகையை பாதி பிடுங்கிக் கொள்கிறது என்று சொல்லி உதவி கோரியிருக்கிறார். காலச்சுவடு அவருடைய மலையாள மொழியாக்கத்தின் பணத்தை, மொழியாக்கத்தில் அவர்களின் எந்தப் பங்களிப்பும் இல்லாமலேயே உரிமை தன்னுடையது என்று சொல்லி பிடுங்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கில மொழியாக்கத்திற்கு சில முயற்சிகள் எடுத்தார்கள் என்கிறார்கள். அதன்பொருட்டு பாதி ராயல்டியை காலகாலமாக எடுத்துக் கொள்திறது. ஆக, சோ தர்மன் சொன்னதையே நான் எழுதினேன். அதையே கண்ணனும் சொல்கிறார். இதில் அவதூறு என்ன உள்ளது?

ஆசிரியருக்கும் பதிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பிரச்சினை என்றால் பிறருக்கு அதில் வேலையே இல்லை. ஆனால் இங்கே அந்த ஆசிரியர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். அதை அவரே சக ஆசிரியர்களிடம் சொல்கிறார். அதைப்பற்றி மட்டுமே இங்கே பேசப்பட்டுள்ளது. ஆசிரியன் குமுறலை இன்னொரு ஆசிரியனாக பதிவுசெய்கிறேன். அந்த உரிமைகூட ஆசிரியர்களுக்கு இல்லையா என்ன? அதற்கு பதிப்பாளரிடமிருந்து இந்த மொட்டைவசை.

மேலும் இது சொல்லப்பட்டு பலகாலம் ஆகிறது. அன்றே இதை பேசியிருக்கலாம், ஆனால் இது பொதுவெளிக்குரியதா என ஐயம் இருந்தது. ஆகவே பேசவில்லை. ஆனால் இப்போது இந்த மின்னூல் உரிமைச் சிக்கல்கள் போன்றவை பெரிதாக எழுந்து வந்துள்ளன. மொழியாக்க உரிமை, மின்னூல் உரிமை போன்றவற்றை எழுத்தாளர்கள் முறையாகக் கவனிக்கவேண்டும் என்ற கோரிக்கையின் ஒருபகுதியாகவே சோ.தர்மனின் பிரச்சினையைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இரண்டு தெளிவாகவே ஒன்று உள்ளது. காலச்சுவடு ஒரு நூலின் மொழியாக்கத்துக்கு சில முயற்சிகள் எடுக்கிறதென்றே கொள்வோம். அதற்கு விலையாக அந்நூலின் மொத்த மொழியாக்க உரிமையில் பாதி என்பது என்னவகையான வணிகம்? அவர்கள் மலையாள மொழியாக்கத்தில் சம்பந்தமே படவில்லை, ஆனாலும் பாதி ராயல்டியை பிடுங்கிக்கொள்வது ஒப்பந்தரீதியாகச் சரி, அறம்தானா? இதற்கெல்லாம் பதில் ‘சட்டபூர்வமாக கையெழுத்து போடப்பட்டது’ என்பது மட்டுமே. நான் பேசுவது சட்டம் அல்ல. இத்தகைய நிராதரவான நிலையைப் பயன்படுத்தி எழுத்தாளன் சுரண்டப்படுகிறான் என்று மட்டுமே. இது முன்னுதாரணமாக ஆவதன் பிரச்சினையைப்பற்றி மட்டுமே.

இதில் நான் புத்திசாலியாக நடந்துகொண்டிருக்கிறேன் என சொல்லவரவில்லை. சோ.தருமனைவிட மொக்கையாகவே நான் நடந்துகொள்கிறேன். பணவிஷயங்களில் என் இயல்பு அது. என்னால் அதையெல்லாம் கவனிக்கவும் முடியாது. என்னை ஏமாற்ற நினைப்பவர்கள் மிக எளிதாக ஏமாற்றலாம். ஆனால் இன்றுவரை சினிமாவில் எவரும் ஏமாற்றவில்லை. சினிமாவில் ஒருமுறைகூட எனக்கு பணம் கொடுங்கள் என எவரிடமும் கேட்டதுமில்லை. ஒரு மனிதரை அப்படியே நம்புவதே என் வழக்கம். ஆனால் என் திரைக்கதையைப் பயன்படுத்தாத, நின்றுபோன படங்களுக்கான பணம் கூட தேடிவந்திருக்கிறது. அவர்களுக்கு எழுத்தாளன் சரஸ்வதி அம்சம் என்னும் எண்ணம் உள்ளது.

எழுத்தாளனாக எந்தக் கவனமும் இல்லாமல் பொருளியல் விஷயங்களில் இருந்துகொண்டிருக்கிறேன். எழுத்தாளன் என்பதனால் பெரிய இழப்புகள் ஏதுமில்லை. இழந்தாலும் கவலை இல்லை. நான் சொல்வது இழப்புகளுக்காகத் துயர்கொள்ளும் நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்காக.

சினிமாவுடையது எழுத்துலகம் போல் அல்ல. அது பேரம்பேசி உருவாக்கப்படும். ஒருவருடைய புகழ், வணிகச்செல்லுபடிதான் அங்கே ஊதியமாகிறது. அதை எவ்வகையில் பெற்றுக்கொள்கிறார் என்பது அவருடைய விருப்பம்.

நான் ராயல்டியை ஒரு பிரச்சினையாகவே நினைக்கவில்லை.  தமிழினி, வம்சி, எழுத்து பதிப்பகங்களிடமிருந்து ராயல்டியே பெற்றுக்கொண்டதில்லை. மிகச்சிறப்பாக விற்கும் என் பலநூல்களை வெளியிட்டவர்கள் அவர்கள். உயிர்மை ஒருமுறை தந்துள்ளது. இவர்கள் என் நண்பர்கள், இவர்களின் பிறநூல்கள் அளிக்கும் இழப்பை என் நூல்கள் சரிசெய்யட்டும் என்பதே என் எண்ணம். நான் பேசவருவது வருங்காலத்தைப் பற்றி. அது ஒரு விவாதமாக ஆகவேண்டும் என்பதை மட்டும்தான். வசைகள் பரவாயில்லை, ஒரு தொடக்கம் நடந்தால்சரி. அதை முன்னெடுத்திருக்கும் மாமல்லனுக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைபிழைகள்
அடுத்த கட்டுரைபயணம் கடிதங்கள்