இரவு பற்றி…

iravu-jayamohan-tamiini-14127

இரவுகளின் தனிமையை கொஞ்ச காலம் ரசிக்கலாம், அதன் ஆழமான அமைதியை கொஞ்ச நேரம் அனுபவிக்கலாம், அச்சமோ அர்த்தமற்ற உணர்வோ விவரிக்க முடியாத அந்த சின்னஞ்சிறு பயங்களை கொஞ்சம் உணரலாம், யாருமற்ற வீதிகளில் சற்றே தனியாக நடந்து பார்க்கலாம், நாம் உறங்கும் வேளையில் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவ்வப்போது உளவு பார்க்கலாம்.. இப்படி இரவு குறித்த எந்த செயலானாலும் அது அவ்வப்போது என்று இருக்கிற வரை ஆனந்தம் தான் ஆனால் அதுவே வாழ்க்கை என்றாகிவிட்டால் எப்படி இருக்கும்

இரவு நேர காவலாளிகள், கொள்ளையர்கள், பாலியல் தொழிலாளிகள், இரவு நேரப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், இன்னும் சிலர்.. இப்படி இரவுகளில் வாழ்தலின் பொருட்டு விழித்து இருக்க வேண்டிய நிர்பந்தம் உடையவர்களை தவிற வேறு யாரேனும் இரவுகளில் விழித்து வாழ்க்கை நடத்துவார்களா, இரவுகளில் வேலை உள்ளிட்ட புற நிர்பந்தம் இல்லாத சூழலிலும் விழித்திருப்பவர்கள் இயல்பானவர்களை விட சற்றே வித்யாசமானவர்கள் தானே அல்லது வித்யாசமான உலகையும், வித்யாசமான உணர்வையும் தேடி அலைபவர்கள் தானே, எப்படியும் வித்யாசங்களை விரும்பி இரவுகளை ரசித்தாலும் இரவுகளில் மட்டுமே வாழ முடியாது என்கிற எதார்த்தம் எல்லோருக்கும் தெரியும் அதனால் அந்த இரவு வாழ்க்கை அன்றாடங்களின் தொடர்கதையாக அமையாது தானே, இப்படி இரவுகள் குறித்த நிறைய நிறைய எண்ணங்கள் எனக்கு உண்டு, ஊட்டியில் இருக்கும் என்னுடைய நண்பர் ஒவ்வொரு காலையிலும் அலுவலகத்தில் இரவுப்பணி முடித்த பின்னர் நாங்கள் குட்மானிங் சொல்லும் வேளையில் குட்நைட் சொல்லிக்கொண்டிருப்பார், நண்பர்கள் உறவினர்கள் என்று வாழ்வின் நிறைய அம்சங்களை அவர் இழந்திருப்பதை அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும், தன் சுற்றத்தின் நேரெதிர் திசையில் பயணித்து சின்னச்சின்ன பரிமாற்றங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் கூட தன்னுடைய இருப்பை உறுதி செய்ய முடியாத இயலாமை அவருடைய முகத்தில் சோகத்தின் ஊடாய் வெளிப்படும் இவற்றை எல்லாம் பார்த்ததாலோ என்னவோ இரவின் மீதான அத்தனை பெரிய ஈர்ப்பு எனக்கிருந்ததில்லை, இரவுகளில் வாழ்தல் என்பது ஒரு அபூர்வ கவிதை, அரிதாய் இருக்கும் வரை தான் அது அபூர்வமாய் இருக்கும், ஒரு வெளியூர் சுற்றுலாவில், ஊர்த்திருவிழாக்களில், வீட்டு விசேசங்களில், நண்பர்களின் பிறந்த நாள்களில், எல்லையே இல்லாமல் காதலில் தொடங்கி கடிகாரத்திற்கு பின்னான அறிவியல் வரையிலும், அமெரிக்காவின் ஆயுத அரசியல் தொடங்கி மதுரை நண்டு ஆம்ப்லேட் வரையிலும் என்று பேசிப்பேசி விடிகின்ற நாட்களில் என்று இரவுகளை சில பிரத்யேக தருணங்களை தாண்டி கொண்டாட முடியாது என்று வலுவான நம்பிக்கை எனக்கிருந்தது

இரவு குறித்த என்னுடைய எல்லா எண்ணங்களுக்கும் வெடி வைத்து, என் நம்பிக்கைகளை தகர்த்து தூக்கி வீசிவிட்டது ஒருநூல்

பகலையே பார்க்காமல், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னால் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்னால் தூங்கும் ஒரு கூட்டத்தையும், அதன் வாழ்வையும் அந்த மனிதர்களுக்கு இடையேயான உரையாடல்களின் மூலம் பகலில் வாழ்வதை விட இரவுகளில் வாழ்வது தான் உன்னதமானது, இயல்பானது, இயற்கையானது என்று சொல்லுவது மட்டுமல்லாமல் படிக்கின்றவர்களை அத்தகையதொரு வாழ்க்கை மீது பேராவல் கொள்ள தூண்டுகிறார் நாவலாசிரியர். சென்னையில் பிரபலமான நிதி ஆலோசகர் கணக்கு வழக்குகளை சற்றே அமைதியான சூழலில் பார்க்க வேண்டும் என்று விரும்பி கேரளாவுக்கு போகிறார், கதைச்சொல்லியாக வரும் அந்த ஆடிட்டர் கேரளாவில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் பகலெல்லாம் பூட்டிக்கிடக்கும் ஒரு வீட்டில் இரவுகளில் மனித நடமாட்டம் இருப்பது அவருக்கு திகிலை தருகிறது, என்ன நடக்கிறது என்று பார்த்துவிட எண்ணி அடுத்த நாளின் இரவில் அந்த வீட்டுக்குள் போகிறார்.. வீட்டுக்குள் மட்டுமல்ல பகலை வெறுத்து இரவுகளில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெருங்கூட்டம் கொண்ட ஆசிரமம், முன்னாள் ராணுவ வீரர், பாதிரியார், ஓவியர், இசைக்கலைஞர், கடலோடிகள் என்று வெவ்வேறு தொழிலையும் இரவு வாழ்க்கை என்ற ஒற்றை தொடர்பையும் கொண்டு கூடி வாழும் ஒரு இரவுச்சமூகத்திற்குள்ளும் நுழைகிறான்

ஆரம்பத்தில் அவன் அந்த சமூகத்திற்குள் நுழையும் போது கதைக்குள் நுழையாத நாம்.. அறிவியல், தத்துவங்கள், அரசியல், சமூகம், வரலாறு, நகைச்சுவை என்று அவர்களுக்குள்ளாக நடக்கின்ற உரையாடல்களின் வழி அந்த இரவு வாழ்க்கையை ரசிக்க தொடங்கிவிடுகிறோம், அவ்வப்போது இயற்கைக்கு எதிரான ஒரு வாழ்க்கை முறையோ என்று அஞ்சி அந்த சமூகத்தை விட்டு அவன் வெளியே வர நினைக்கும்போது ஆரம்பத்தில் அது குறித்த பெரிய கவலை இல்லாமல் இருக்கும் நாம், இரவு வாழ்க்கையை நியாயப்படுத்தி நாவலாசிரியர் முன் வைக்கும் வாதங்களின் விளைவாய், கதைச்சொல்லி தொடர்ச்சியாக அந்த சமூகத்தை விட்டு வெளியேற முடிவெடுக்கும் போது அவன் மீது கோவம் கொள்ளும் அளவிற்கு போகிறோம்.. ஒரு காதல், ஆசிரமம், அன்பான தழுவல், கடல் பயணம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணிகள் கதைச்சொல்லியின் முடிவை மாற்றி அவனை மீண்டும் இரவு வாழ்க்கைக்கே கொண்டு போய்விடுகிறது

ஒருகட்டத்தில் அந்த இரவு வாழ்க்கையை அவன் ரசிக்க தொடங்கியிருக்கும்போது.. இரவில் வாழ்வது தான் மேன்மையானது, இயற்கையானது, பகல் வாழ்வு சாபம் என்கிற வலுவான எண்ணங்கள் நமக்குள் ஆழமாக வேர்விட்டுவிடுகிறது

உடைத்துச் சொன்னால் இரவு வாழ்க்கைக்கு நாமும் தயாராகி நிற்கிறோம். நம்பவே முடியாத ஒரு கனவு உலகை நம் கண் முன் கட்டமைத்து, அந்த உலகம் தான் மேன்மையானது என்று நம்பவைத்து, இயல்புக்கு மாறான ஒரு வாழ்வு தான் உயர்வான, அறிவான வாழ்வு என்று அடித்துச்சொல்லி நாம் அதற்குள் விழப்போகும்போது அத்தனை கட்டமைப்புகளையும், “எதையுமே தெரிந்துகொள்ளாமல் கனவிலேயே இருந்துவிட்டார்கள், இப்போது எதார்த்தத்தில் நிற்க முடியவில்லை” என்ற ஒற்றை வரியில் சிதைத்து, ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்து.. இயல்பான வாழ்வே இயற்கையானது என்று நிறுவுகிறார்

தத்துவமும் இலக்கியமும் பேசிட்டா நாம ஒன்னும் பெரிய ஆள் இல்லை சாதாரண மனிதர்கள் தான், இயற்கையான வாழ்க்கைகையே வாழ்ந்துட்டு போவோம் என்று கதைச்சொல்லியை இரவு வாழ்க்கைக்குள் கொண்டு வந்த மார்சல் மூலமாகவே சொல்ல வைத்து, நாவலின் மூலம் நடத்தப்பட்ட ஒரு மாய உலக சுற்றுலாவை முடித்து வைக்கிறார்

கேரளாவிலிருந்து சென்னை வந்த பின்னரும் இரவு வாழ்க்கையையே கதைச்சொல்லி தன் காதலியோடு தொடர்வதும், சென்னையில் ஒரு இரவுச்சமூகத்தை உருவாக்கியிருப்பதுமாக கதையின் கடைசி பக்கத்தை அமைத்திருப்பது எதிர்பாராத திருப்பம் ஆக குழப்பமான முடிவுரையை எழுதியிருக்கிறாரா என்று கேட்டால். இல்லை, இரவுகளில் வாழ்தல் இனிமையானது என்பதை சொல்லி, அதில் உள்ள ஆபத்துகளையும் விளக்கிவிட்டு பின்னர் தன்னுடைய கதாபாத்திரங்கள் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாரான மனநிலையிலே அந்த வாழ்க்கையை தொடர்வதாய் முடிக்கிறார், “நான் நெடுஞ்சாலையில் நடப்பதை விட இறுகக்கட்டிய கம்பியின் மீதே நடக்க விரும்புகிறேன்” என்ற கதைச்சொல்லியின் வார்த்தைகளோடு முடிகிறது கதை

கேரள மண் சார்ந்த வாழ்க்கை, யட்சிகளின் கதைகள், மொழிகளின் வரலாறு, லங்காவதார சூத்திரம் என்ற பௌத்த நூலின் நகலே மேல் நாட்டு தத்துவாந்திகளின் தியரிகள் என்கிற தகவல், போப்பூர் துறைமுகம், பழையனூர் போல மலையாளத்தில் நீலியை கொண்டுள்ள கொடுங்கநல்லூர் கோவில், ஏராளமான உளவியல் தகவல்கள் என்று கதையை தாண்டியும் அள்ளி அள்ளி கருத்துகளை கொடுக்கிறார் நூலாசிரியர், பேசுவதற்கு இன்னும் நிறைய நிறைய இருக்கிறது நூலில்

என்னுடைய ஊட்டி நண்பர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சகாக்களோடு இப்படி ஒரு இரவுச்சமூகத்தை உருவாக்கி வாழ்ந்திருந்தால் கொண்டாட்டமானவராக இருந்திருப்பாரோ என்று எண்ண வைத்த அந்த நூல் ஜெயமோகனின், “இரவு” (தமிழினி பதிப்பகம், வெளியீடு 2010)

சூரியமூர்த்தி

***

இரவு மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைஇமையத் தனிமை – 2
அடுத்த கட்டுரைபயணம் கடிதங்கள்