காவிய வாசிப்பு -கடிதம்

Edited in Lumia Selfie

வணக்கம் திரு ஜெயமோகன்

போன  வருடம் படிக்க வேண்டும் என முடிவு  செய்து மார்ஸல் ப்ரௌஸ்ட் இன் in search of lost time படித்து முடித்தேன் அதேபோல  இந்த முறைஜேம்ஸ்  ஜாய்ஸ்   இன்  யூலிஸ்ஸஸ்  படிக்க வேண்டும் என நினைத்தேன்  அதற்காக ஹோமர் இன்  ஒடிசி மற்றும் இலியட் படித்து முடித்து பிறகு கிரேக்க  நாடகங்களையும்  படித்தேன் குறிப்பாக aeschylus oresteia பற்றி கூற வேண்டும் .

 

கொலைக்கு கொலை தான் பதில் என்பதை  போல  முதல் இரண்டு நாடகங்களில் கூறி  பிறகு வஞ்சம்  என்றும்  வஞ்சத்தையே  பெற்று தரும்  கொலை யை கூட   தேவைப்பட்டால் நீதியை கொண்டு தான்  தண்டிக்கவேண்டும் என கூறி முடித்தது என்னை மிகவும் கவர்தது  காந்தி ஒரு கண்னுக்கு பதில் மற்றொரு  கண் என்றால் இந்த உலகமே குருடாகிவிடும்என்றது  புரிந்தது.  5 BC நூற்றாண்டில்  இவ்வாறான ஒரு செறிந்த  அரசியல் கட்டமைப்பும்  அவற்றை மைய படுத்தி  வரலாற்றையும்  தொன்மங்களையும் இணைத்து  கவி நயத்தோடு கூடிய  நாடகம் அமைத்ததும்  வியப்பை அளித்தன

அதே போல் ஒடிசி மற்றும்  இலியட் ஐ  படிக்கும் போது ராமாயணம்  பற்றி  எண்ணாமல்  இருக்க  முடியவில்லை   ஹெலன் ஐபாரிஸ் கவர்ந்து செல்வது  அதற்காக போர் மூள்வது  பிறகு ஒடிஸியஸ்  வில்லை நாண் ஏற்றி  தன்னை பெனிலோப் முன்நிரூபிப்பது போன்றவை ராமாயணத்தை நினைவு  படுத்தாமல்  இல்லை.  ஒடிசி இல் வரும்  பார்வையற்ற கவி டெமோடோகாஸ் (demodocus), வெண்முரசின் தீர்கதமஸை  நினைவுபடுத்தியது பெயர்களும்  உச்சரிப்பில் சற்று ஒரே போலவே தோன்றின

 

ஜோயஸின் a portrait of the artist as a young man மற்றும் dubliners  படித்தபிறகு யூலிஸ்ஸஸ் ஐ படிக்கச்  ஆரம்பித்தேன் படிக்கச்மிகவும் கடினமான நூல்  என பல முறை கேள்விப் பட்டு இருந்த போதிலும் ப்ரௌஸ்ட் ஐ  படிக்க ஆரம்பித்த போல்  நேரஉள்ளிறங்கி படித்து கொண்டே  சென்றேன் உள்ள செல்ல செல்ல  என்னையும் அறியாமல்  நான் சுலபமாக படிக்க ஆரம்பித்துவிட்டேன்  பல இடங்களில் புரியாவிடினும் படித்து சென்று கொண்டே இருந்தேன் சோர்வடைந்து சிலஇடங்களில் நிறுத்த தோன்றியும் நிறுத்தவில்லை படித்து முடிக்கையில் ஒரு வித ஏமாற்றத்தையே அறிந்தேன்

போரும் அமைதியும் முடித்த பிறகு நிகோலாய் ரோஸ்டோவ் மேரி நடாஷா மற்றும் பியெர்ரே பேஸுக்கோவ் தோட்டத்தில் விருந்துண்ணும் காட்சியிலும் நிகோலாய் தன் நிலத்திலேயே விவசாயம் செய்து வீட்டினுள் ஒரு நூலகத்தையும் அமைத்து மகிழ்ச்சியாக இருப்பதும் மன நிறைவை அளித்தன அனால் யூலிஸ்ஸஸ் அப்படி இல்லை

இலக்கியம் பற்றி இருந்த என் சிறு புரிதல்களை கூட துச்சமாக்கி சுலபமாக சுக்கு நூறாகி உடைத்து கொண்டே சென்றார் ஜோய்ஸ் கதாபாத்திரத்தின் மூளைக்குள் சென்று எண்ண ஓட்டங்களை இவ்வளுவு விரிவாக நான் வேறு எங்கும் படித்ததில்லை ப்ரௌஸ்ட் கூட தன் கதாபாத்திரங்களை பற்றி மிக விரிவாக எழுதினாலும் ஜோயிஸிடம் இருக்கும் அந்த வலிமை வேறெங்கும் நான் படித்ததாக தோன்றவில்லை

விஷ்ணுபுரம் முகப்புரையில் தங்கள் ஆசிரியர் ராமேஸ்வரம் கோவிலை பற்றியும் அதன் தூண்களில் உள்ள சிற்பங்களை யாராலும் பார்த்து முடிக்கமுடியாது என்பதை ஒரு செவ்வியல் நூலை அணைத்து கோணங்களிலும் யாராலும் புரிந்துகொள்ள முடியாது என கூறி இருந்தீர்கள் எனினும் செவ்வியல் படைப்புகள் வந்து கொண்டே தன் இருக்கின்றன யூலிஸ்ஸஸ் ஒவ்வொரு பகுதியாக அமெரிக்கன் ஜௌர்னல் இதழில்  முதலில் வெளிவந்து பிறகு நூல் வடிவில் வந்தது இதை வெளி வந்த போது புரிந்துகொண்டவர்கள் எத்தனைபேர் பிறகு இன்று வரை எத்தனை பேர்? என்னை போன்ற ஆரம்ப நிலை வாசகனுக்கும் சரி இலக்கிய அனுபவசாலிகளுக்கும் சரி இது ஒரு சவால் ஆக இருந்துவருகிறது என நினைக்கிறன் .

நான் கேட்க விரும்புவது இதைதான் பல முறை கேட்டதாக இருந்தாலும் இன்னொரு முறை நான் இதை கேட்டே ஆக வேண்டும் இவ்வாறான சவாலான நூல்களை எழுதுவது எதற்காக வாசிப்பதும் எதற்காக போரும் அமைதியும் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் போன்ற நூல்கள் மானுட அறத்தை பற்றி பேசுகின்றன நம்முள் ஏதோ ஒரு விதத்தில் அவை ஒன்றி விடுகின்றன அனால் யூலிஸ்ஸஸ் போன்ற நூல்கள் நம் மூளையை தோண்டுகின்றனவே தவிர மனதுள் நுழைய மறுக்கின்றது முழுக்க முழுக்க செரிப்ரல்(cerebral)ஆன ஒரு அனுபவத்தை மற்றும் தருகின்றன அதனால் மட்டுமே அவை செவ்வியல் அல்ல என ஒதுக்கிவிட முடியாது அதுவும் ஒருவகையில் செவ்வியல் படைப்பு தான் என கூறலாமா

டால்ஸ்டாய் மற்றும் டொஸ்ட்டோஎவ்ஸ்க்கி, அவர்கள் கண்டடைந்தவற்றை அவர்களின் கதைகளின் மூலமாக கத்பாத்திரங்களின் மூலமாக நமக்கு தெரிவிக்கிறார்கள் அவ்வகையிலான எந்த ஒரு கண்டடைதலோ ஒரு தெளிவான அரத்தையோ முன்னிறுத்தி யூலிஸ்ஸஸ் பேச வில்லை என எனக்கு தோன்றுகிறது படித்ததனால் ஒரு உளப்பூர்வமான அனுபவத்தையோ அல்லது ஏதோ ஒரு அர்த்தத்தையோ தரிசனத்தையோ இந்நூல் தந்தது என யூலிஸ்ஸஸ் ஐ பற்றி சொல்ல என்னால் முடியவில்லை. இல்லையென்றால் என் வாசிப்பு முழுமையாகவும் சரியானதாகவும் இல்லை என நினைக்கிறன்.

விஷ்ணுபுரத்திலும் பின் தொடரும் நிழலின் குரலிலும்   அவ்வாறான ஒரு அனுபவமும் புரிதலும் தரிசனமும்  எனக்கு கிடைத்தன.

ஜோயஸின் a portrait of the artist as a young man என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது தன சமூகத்தினாலும் மத நெறிகளாலும் கட்டுண்ட ஒருவன் எப்படி அச்சூழ்நிலைகளில் வளர்ந்து அனைத்தையும் உதறி விட்டு கலையை நோக்கி செல்கிறான் என தெளிவாக பேசுகிறது உரைநடையிலும் முற்றிலும் மாறான ஒரு வகையில் அமய்திருக்கிறது

யூலிஸ்ஸஸ் போன்ற ஒரு நூலை எப்படி எழுத தோன்றியது எவ்வாறு எழுதமுடிந்தது, எழுதும் போது ஜோய்ஸ் இன் மன நிலை எவ்வாறாக இருந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறேன் ஜோய்ஸ் ஐ போல நீங்களும் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் போன்ற சவாலான நூல்களை எழுதியதால் தங்களிடம் இதே கேள்விகளை கேட்கிறேன் குறிப்பாக யூலிஸ்ஸஸ் இல் வரும் நாடகம் போல எழுத பட்ட ஒரு பகுதி எனக்கு பின் தொடரும் நிழலின் குரலின் இறுதியில் வரும் மனநல மருத்துவமனையில் நடக்கும் நாடக காட்சியை நினைவுபடுத்தியது

டால்ஸ்டாயின் அறத்தையும் ஜோய்ஸ் இன் அறிவுபூர்த்தமான செரிப்ரல் எழுத்தையும் சேர்த்து என் மொழியில் நீங்கள் எழுதுவதால் உங்களிடம் கேட்கிறேன். விஷ்ணுபுரமும் பின் தொடரும் நிழலின் குரலும் அதற்கான எடுத்துக்காட்டுகள். வெண்முரசு அதனின் உச்சம்

இவ்வாறான ஒரு நூலை எழுதும் போது எழுத்தாளனின் மன நிலை என்ன, எவ்வாறாக அதே உச்சநிலையில் இருந்து எழுத முடிகிறது இவற்றை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் ஒரு வாசகனும் இவ்வாறான நூல்களை எப்படி அணுகி வாசிக்க வேண்டும்?

இந்த கிறுக்கல்களில் நான் கேட்க வருவது புரிந்தால் பதில் கூற வேண்டுகிறேன்

ஸ்ரீராம்

அன்புள்ள ஸ்ரீராம்

 

நவீன ஆக்கங்களை, சமகாலவாழ்க்கையை, வாசிக்க்கும் வயதில் காவியங்களை நீங்கள் வாசிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்த்துக்கள். காவிய வாசிப்பில் கவனம் கொள்ளவேண்டியது ஒன்றே. மண்ணில்புதைந்து நெடுங்காலம் ஆன பொருட்கள் அனைத்தும் காலப்போக்கில் மண்ணோ கல்லோ ஆகிவிடுவதைப்போல காவியத்தில் அமைந்த வாழ்க்கைகள் காலப்போக்கில் வாழ்க்கையாக அல்ல படிமமாக ஆகித்தான் நம்மை வந்தடைகின்றன. பீமனோ ஹெர்குலிசோ படிமங்கள், கதாபாத்திரங்கள் அல்ல. அவர்களின் செய்கைகள் உருவகங்கள். அவ்வாறு வாசிக்கையிலேயே அவற்றை நாம் முழுமை செய்கிறோம்

 

விஷ்ணுபுரம் போல அவற்றை மறு ஆக்கம் செய்யும் நூல்கள் அக்காவியப் படிமங்களை நவீனப்படிமங்களாக ஆக்கி இன்றைய வாழ்க்கையுடன் தொடர்புறுத்துகின்றன. அதன் வழியாக இன்றைய வாழ்க்கையை இறந்தகாலத்தின் நீட்சியுடன் பொருத்து முழுமையாக்கி அதன் சாரத்தை அறிய முயல்கின்றன

 

இதுதான் எழுதும் படைப்பாளியின் மனநிலை. அவன் இன்றிலிருந்து நேற்றைப் பார்க்கிறான். நேற்றிலிருந்து இன்றுவரை வந்தடைந்துள்ள மாறாத கூறுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதைக்கொண்டு பெரும்படைப்புகளை மறு ஆக்கம் செய்கிறான். மனிதவாழ்க்கை மேல்தளத்தில் மாறியபடியும் ஆழத்தில் மாறாமலும் இருந்துகொண்டிருக்கும் விந்தையையே அவன் காண்கிறான்

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஜப்பானில் நாஞ்சில்நாடன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி –தகடூர் கோபி