புதுச்சேரி,கடலூர் கூடுகை -கடிதங்கள்

22

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான நிலப்பரப்பில் பயணித்த போது நான் நேரடியாக அடைந்த முக்கியமான அனுபவம் என்பது இந்த தேசம் இராமாயணத்தாலும் மகாபாரதத்தாலும் இணைக்கப்பட்டுள்ளது என்பதே. அவர்களுக்கு நான் பேசும் மொழி தெரியாது; புரியாது. ஆனால் கங்கை என்ற ஒற்றை வார்த்தை அவர்களுக்கு அனைத்தையும் உணர்த்திவிடுகிறது என்பதைக் கண்டேன். அந்த ஒற்றை வார்த்தையின் சக்தியே என் மீது அவர்கள் பரிவு கொள்ள காரணமாயிருந்தது. பயணத்தில் நான் சந்தித்த அனைவருமே எனது பயண நோக்கம் குறித்து கேட்டு அகமகிழ்ந்தனர். எனக்கான பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர். பிரியத்துடன் கவனித்துக் கொண்டனர். மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். அவர்கள் பிரியத்தின் எல்லையின்மையே என்னை ஓயாமல் மீண்டும் பயணிக்கத் தூண்டுகிறது.

 

இராமாயணமும் மகாபாரதமும் இந்திய நிலம் முழுமைக்கும் பொதுவாக இருக்கிறது. இன்னொரு கோணத்தில் பார்ப்போம் என்றால் இராமாயணமும் மகாபாரதமும் வாசிக்கப்பட்ட கொண்டாடப்பட்ட நிலப்பரப்பே இந்தியா என அறியப்படுகிறது.

 

புதுச்சேரி வாசகர்கள் வெண்முரசு கூடுகைக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளும் ஓராண்டாக அவர்கள் காட்டியிருக்கும் அர்ப்பணிப்பும் மகத்தானது. அவர்கள் வெண்முரசு வாசிப்பு கூடுகையை ஓர் அறிவுச்செயல்பாடாகத் துவங்கி  ஒரு சமூக இயக்கமாகவே மாற்றியுள்ளனர். சராசரிக்கும் கீழான தன்மையும் பொறுப்பின்மையுமே தமிழ்ச் சமூக முகமாக அறியப்படும் பின்னடைவான சூழலில் புதுச்சேரி வாசகர்களின் முயற்சி பல இடங்களில் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு அங்கே உருவானது. அவர்கள் வெண்முரசை வாசித்த விதமும் தங்கள் ரசனையை அடிப்படையாகக் கொண்டு அதனை விவாதித்த விதமும் எவர் மனத்தையும் கவரக் கூடியது.

 

ஒரு முன்னோடிச் செயல்பாட்டை முன்னெடுத்ததற்காக புதுச்சேரி வெண்முரசு வாசகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

2222

அன்புடன் ஆசிரியருக்கு

 

சனிக்கிழமை மதியம் பாண்டிச்சேரி வந்தபோது அந்த விடுதியின் கூடத்தில் இவ்வளவு கூட்டமிருக்கும் என எண்ணியிருக்கவில்லை. பெரும்பாலும் தெரிந்த முகங்கள். முகநூல் விவாதங்களின் சாரமின்மையை வெ.சாவுக்கும் பிரமிளுக்கும் நடந்த விவாதங்களின் தீவிரத்தைக் கொண்டு நகைச்சுவையாக விளக்கியது நன்றாக இருந்தது. இறுதியில் அவ்வளவு தீவிரமான விவாதங்கள் முகநூலில் நடக்கிறதா என ” சுரேஷ் தான் சொல்லணும்” என என்னை பார்த்தபோது சற்றே துணுக்குற்றுப் போனேன். அவ்வகையான எந்த பயனுள்ள விவாதங்களும் முகநூலில் நடப்பதில்லை என இப்போதும் சொல்கிறேன்.

 

மதிய உணவுக்குப் பின் அறையில் விவாதம் தொடர்ச்சியாக வெண்முரசு குறித்தே நிகழ்ந்தது. எனினும் ஒரு நவீன வாசகனாக வெண்முரசு குறித்து நடைபெறும் விவாதங்களின் போதாமையை ஏதோவொரு வகையில் தொடர்ந்து உணர்ந்தவண்ணமே இருக்கிறேன். ஒரு நவீன நாவலாக வெண்முரசு முன்னகர்ந்திருக்கும் இடமும் வடிவ ரீதியாக அது தொட்டிருக்கும் சாத்தியங்களும் பெரும்பாலும் பேசப்படுவதில்லை என்ற என் எண்ணத்தை உறுதி செய்தவதாகவே பெரும்பான்மையான கேள்விகள் அமைந்திருந்தன. இதற்கு முன்னர் வந்த மகாபாரத பிரதிகளுடன் ஒப்பிட்டே வெண்முரசு வாசிக்கப்படுகிறது. அது சரியான வாசிப்பாக எனக்குப்படவில்லை. பிரிட்டிஷ் காலத்திற்கு பிறகு இங்கு நடைபெற்ற வரலாற்று மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் தொடர்ச்சியாக அவ்வகையான ஆய்வுகள் நிரப்ப முடியாத இடைவெளிகளை புனைவாக்கத்தின் வழியே நிரப்பும் ஒரு நவீனப் பிரதியாக வெண்முரசை வாசிக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மாலை நடைபெற்ற கூடுகையில்  ராஜகோபாலன் அவர்கள் வெண்முரசு குறித்து குறிப்பிட்டிருந்தவை அந்த நிகழச்சியின் சிகரம். கூடுகையின் ஏற்பாட்டாளர்களான சிவாத்மா,மணிமாறன்,ஹரிகிருஷ்ணன், தண்டபானி துரைவேல் ஆகியோர் முதல் அமர்வில் பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அளித்த பதற்றம் அவர்களை சரியாக உரையாற்ற முடியாதபடி செய்துவிட்டது. தண்டபானி துரைவேல் பேசியவை கடைசி பகுதியான வாழிருள் வழியாக மொத்த முதற்கனலையும் தொகுத்துக் கொள்ளும் வகையில் அமைந்தது. மானசாதேவி சர்ப்பத்தையும் நஞ்சையும் கொண்டு மகனை வரவேற்கும் இடத்தினை நான் குறிப்பிட நினைத்திருந்தேன். அது நீங்கலாக அவர் நாகத்தை வைத்து மனித அகங்காரத்தை விளக்கியது புதிய திறப்புகளை அளிப்பதாக அமைந்தது.

 

மணிமாறன் என்னிடம்  நான் ஏற்கனவே எழுதியிருந்த உரையை ஒப்பிக்காகூடாது பேசியே  ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். நான் சொல்ல எண்ணியதை தெளிவாக முன்வைக்க இயலாமல் திணறினேன். ஆனால் பெரிதாக உளறிவிடவில்லை என பேசி முடித்ததும் சிலர் அது குறித்து சொன்னதில் இருந்து தெரிந்தது. சீனு அண்ணன் வெண்முரசின் ஒட்டுமொத்த சாரம் குறித்து ஒரு நல்ல உரையை வழங்கினார். உங்களிடம் கேட்கப்பட்டவை பெரும்பாலும் அடிப்படை கேள்விகள் எனினும் அதற்கு நீங்கள் அளித்த பதில்களின் வழியாக வெண்முரசினை மேலும் நெருங்கி வர முடிந்தது. மற்றொரு சிறப்பு விருந்தினரான லக்ஷுமி நாராயணன் அரசியல்வாதிகளுக்கான தோரணைகள் ஏதுமின்றி வெண்முரசின் வாசகராக மட்டும் பேசியது நிறைவளித்தது. இரவுணவுக்குப்பின் நான்,ரகு மற்றும் கணேஷ் மூவரும் விடுதி திரும்ப வழி தெரியாமல் எப்படியோ சுற்றி வளைத்து அறைக்கு வந்து சேர்ந்த போது பேய்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள். தொடர்ந்து நகைச்சுவையான பல பேய் கதைகள். இரவில் பன்னிரெண்டு மணிக்கு மேல் பேய்க்கதைகள் எவ்வளவு நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் சற்று கிலியேற்படுத்தவே செய்கின்றன. பின் நவீனத்துவவாதிகள் சுராவுடனான உரையாடல் என அன்றிரவு சிரித்தபடியே உறங்கச் சென்றோம். நானும் கணேஷும் அதன்பின்னர் ஒரு மணி நேரம் அறையில் பேசிக்கொண்டிருந்தோம். சென்னை நண்பர்கள் காலையில் தேநீர் அருந்திவிட்டு புறப்பட்டனர்.

 

காலை உணவின் போது இலக்கியவாதிகள் குறித்த வம்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். எதைச் செய்யக்கூடாது எனத் தெரிந்தது. நூறு சிம்ஹாசனங்கள் வாசித்த ஒரு மலையாள வாசகர் உங்களுடன் புகைப்படம்

எடுத்துக் கொண்டு சென்றார். ஏற்பாட்டாளர்களை விட விஜயராகவன் அவர்கள் கடலூர் செல்ல ரொம்பவும் பதறினார். கடலூருக்கு சிவாத்மா அவர்களின் வாகனத்தில் இரண்டு வழக்கறிஞர்களுடன் வர நேர்ந்தது. ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் எஞ்சும் சொற்கள் தவிர தளத்தில் வெளியான பிற சிறுகதைகளை வாசித்ததாக கூறினார். அதன் தொடர்ச்சியாக இளம் சிறுகதை ஆசிரியர்கள் மரணம்,தற்கொலை,பாலுறவு,தத்துவம்,கலைஞன் என தன்னியில்பிலேயே அழுத்தம் ஏற்றப்பட்ட கதைக்களங்களை ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்று வெளியான கதைகளை முன் வைத்துக் கேட்டார். மிக முக்கியமான திறப்பினை அக்கேள்வி எனக்களித்தது. சாதாரணமானவற்றின் வழியே சென்று அசாதாரணங்களை தொடுவதற்கு திறனின்றி அசாதாரணங்களை இளம் எழுத்தாளர்கள் தேர்கிறார்களா எனக் கேட்டுக் கொண்டேன். நான் வாசித்த தலை சிறந்த சிறுகதைகளிலும் இத்தகைய “அழுத்தம் ஏற்றப்பட்ட அசாதாரணங்கள்” இருந்ததில்லை. புதுமைப்பித்தனோ அசோகமித்திரனோ ஜெயமோகனோ சுரேஷ்குமார இந்திரஜித்தோ தேவை ஏற்பட்டால் ஒழிய கதைக்களத்தை அசாதாரணமாக மாற்றிக் கொள்வதில்லை என்பது சட்டென தெளிவாகியது. சிறந்த உதாரணம் அமியின் காந்தி. அக்கதையில் வரும் காந்தி வரலாற்றின் எந்த அழுத்தங்களும் அற்றவர். பேச்சு பின் தொடரும் குரலை நோக்கித் திரும்பியபோது திருச்சி வழக்கறிஞரான செல்வராணி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருச்சியில் தொழிலாளர்கள் மத்தியில் பேசப்பட்ட எளிமையான பொதுவுடைமை சித்தாந்தங்கள் குறித்து சொன்னார்.சிவாத்மா அவர்கள் பாண்டியில் நடந்ததாக சொன்ன சம்பவம் ஒன்றை சிறுகதையாகவே எழுதிவிடலாம். ஆ.மாதவனின் நாயனம் கதை குறித்து கடலூர் வாசகர்கள் பேசினர். திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கு மரங்களால் சூழப்பட்டு இலக்கியம் பேசுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தியிருந்தது. சீனு அண்ணன் ஒரு நல்ல அறிமுக உரையை வழங்கினார். அலைபேசிகளில் படமெடுத்துக் கொண்டிருந்தது குறுக்கும் நெடுக்குமாக சிலர் நடந்து கொண்டிருந்தது மட்டும் சற்று குறையாகத் தென்பட்டது.

 

உங்களிடமிருந்து மற்றொரு செறிவான உரை. தத்துவக் கல்வியின் தேக்கம் இலக்கிய வாசிப்புக்கான அடிப்படை என்று சென்ற உரை எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லி முடிந்தது. ஒரு தீவிர வாசகன் பயனடைய அவ்வுரையில் நிறையவே இருந்தது. அதைத்தொடர்ந்த கேள்வி பதில்கள் பொதுவானவற்றை நோக்கியே இருந்தாலும் அவற்றுக்கும் பொறுமையுடன் பதில் அளித்தீர்கள்.

 

சீனு அண்ணன் வீட்டில் மதிய உணவு. அவருடைய புத்தக அலமாரியைப் பார்த்து மலைப்பு ஏற்பட்டது. எத்தனை வகையான நூல்கள்! பஷீரை எப்படி வாசிக்க வேண்டும் என அறிந்து கொண்டது பெரும் திறப்பு. பாரி தாமரைகண்ணன் அழகிய மணவாளன் என என் வயதொத்தவர்களை அறிமுகம் செய்து கொள்வதும் இச்சந்திப்பில் வாய்த்தது. விடைபெற்றுச் செல்லும் விருப்பமேயின்றி விடைபெற்றுக் கொண்டேன் உங்களிடம்.

 

யோகேஸ்வரனுடன் வண்டியில் சென்றுவிடலாம் என்று திட்டம். ஆனால் பேருந்தில் வாசிக்கலாம் என்பதால் கடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்.

 

பாண்டிச்சேரியில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த வெண்முரசர்களுக்கும் சீனு அண்ணனுக்கும் இத்தருணத்தில் நன்றி.

 

 

அன்புடன்

 

சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39
அடுத்த கட்டுரைஞாநி,முகநூல் -கடிதங்கள்