அகாலக்காலம்

sura

முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் திரிச்சூரில் ஓர் இலக்கியக்கூட்டம். திரிச்சூர் ஒரு விந்தையான பண்பாட்டு மையம். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். வணிகத்தலைநகரம் கொச்சி. கலாச்சாரத் தலைநகரம் திரிச்சூர். அங்கே கேரள சங்கீத நாடக அக்காதமி, கேரள சாகித்ய அக்காதமி, கேரள லலிதகலா அக்காதமி போன்ற பல அமைப்புக்கள் இருப்பதனால் தெருவெங்கும் கலைஞர்கள் பகல்முழுக்க கலைப்போதையிலும் அந்திக்குப்பின் சாதாரண போதையிலும் தென்படுவார்கள். அரசியல்போதை இரண்டையும் இருகைகளில் ஏந்தியிருக்கும்.

அந்தக்கூட்டத்தில் நான் பேசினேன். திரிச்சூரைச்சேர்ந்த ஒரு கவிஞரின் நூல்வெளியீடு அது. எல்லா கவிதைகளும் இறந்தகால ஏக்கம் கொண்டவை. கவிஞருக்கு வயது முப்பதுக்குள். ஒரு தாடிக்கார புரட்சிக்கார இலக்கியக்காரர் கேள்விகேட்க எழுந்தார். உனக்கு என்ன வயது?” என்றார். கவிஞர் சொன்னதும் இந்த கவிதைத் தொகுதியில் இன்றிருக்கும் திரிச்சூரின் ஒரு சித்திரமாவது உள்ளதா?” என்றார். கவிஞரை பேசவே அவர் அனுமதிக்கவில்லை. இன்றிருக்கும் எந்தப்பிரச்சினையாவது பேசப்பட்டிருக்கிறதா? இன்றிருக்கும் ஒரு மனிதமுகமாவது உள்ளதா?”

கவிஞர் கண்ணீர் மல்கினார். என் தாத்தாவுக்கு கடைசிக்காலத்தில் பலவிதமான மனச்சிக்கல்கள். வீட்டுத்திண்ணையில் முற்றத்திற்கு முதுகுகாட்டி உள்ளே நோக்கி அமர்ந்திருப்பார். பேச்சு முழுக்க எழுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த வம்புகளைப்பற்றி. அவரைப்போலத்தான் நீயும்…கவிஞர் விக்கி திக்கி முக்கி எனக்கு மனதில் தோன்றியதை எழுதினேன்என்றார். ஏன் சமகாலம் உனக்கு மனதிலே தோன்றவில்லை? நீ சமகாலத்தைப்பற்றி எழுதவில்லை என்றால் சமகாலவாசகனாகிய நான் ஏன் அதை வாசிக்கவேண்டும்?” என்றார் தாடிப்புரட்சியெழுத்துக்காரர்.

உண்மையில் அன்று அதை ஒரு பெரிய கேள்வியாகவே நான் எண்ணினேன்.அன்றே விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்தேன். அது எனக்கும் தெரியாத தொல்பழங்காலம் பற்றிய கதை. நாவலை அப்படியே தூக்கி வைத்துவிட்டேன். சமகாலத்தைப் பற்றிய ஆர்வமே இல்லாத கனவுயிரியா நான் என என்னையே கேட்டுக்கொண்டேன். இல்லை என்றே என் மனம் கூறியது. ஏனென்றால் அன்று இடதுசாரித் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தேன். சொல்லப்போனால் கண்ணூர் முதல் காசர்கோடுவரை ஒரு ஏழுநாள் நடைபயணம் முடித்தே அங்கே சென்றிருந்தேன். சூழியல் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

அன்றே அமர்ந்து ஒரு கதை எழுதினேன். எலிகள்என ஞாபகம். நான் ஆறுமாதம் முன்பு ஒரு போராட்டத்திற்காக சாகும்வரைஉண்னாவிரதமிருந்ததைப் பற்றிய கதை. தீபம்சிற்றிதழில் வெளியானது. தொடர்ந்து சமகாலப்பிரச்சினைகளை வைத்து பலகதைகள் எழுதினேன். தீபம், கணையாழி உட்பட இதழ்களில் அவை வெளிவந்தன.அவற்றை இன்று பலரும் வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் ஏழுமாதம் கழித்து சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது என்ன செவப்புச் சட்டையக் காணும்?” என்றார். நான் குன்றிப்போய் சமகாலப் பிரச்சினைகளை எழுதலாம்னு…என முனகினேன். நானும் அதைத்தான் சொன்னேன். ரெயில்வே போர்ட்டர்கள்தான் சமகாலத்த ஒவ்வொருநாளும் ஏத்தி எறக்கிறாங்கஎன்றார்.

அவருடைய மெல்லிய நக்கலின் ஆற்றல் சாதாரணமானதல்ல. நான் இரண்டுநாட்கள் தூங்கவில்லை – அவருடைய வீட்டு மாடியில்தான். அங்கிருந்து நொந்துபோய் கிளம்பும் வரை அவர் என்னை சமாதானம் செய்யவுமில்லை. மன ஆறுதலுக்காக நேராகச் சென்று ஆ.மாதவனைப் பார்த்தேன். உண்ணாவிரதம் இருந்தியளோ?” என்றார். ஆமாஎன்றேன் தலைகவிழ்ந்து. வாசிச்சேன்… நீங்க என்ன பண்றீங்கன்னு இனிமே கதையப் படிச்சே தெரிஞ்சுக்கலாம்போலஅன்று அடைந்த அவமானத்துக்கு அளவே இல்லை. அந்தக்கதைகள் எதையும் எந்தத் தொகுதியிலும் சேர்க்கவில்லை. இன்று எண்ணும்போது அவற்றில் ரோஜா பயிரிடுகிற ஒருவர்ஒரு சுமார் கதை என தோன்றுகிறது. அதை நான் பார்த்து முப்பதாண்டுகளாகின்றன.

நேராக காசர்கோடு திரும்பி என் இருண்ட தனியறைக்குள் அமர்ந்து வன்மத்துடன் என்னை வதைத்துக்கொண்டேன். என்னால் எழுத முடியவில்லை. நான் ஒரு சுமைதூக்கி. ஒரு டைரி எழுத்தாளன். நான் எழுத எண்ணுவதே வீண். சுந்தர ராமசாமியின் சிவந்த நீண்ட உதடுகளின் புன்னகை, ஆ.மாதவனின் தடித்த கண்ணாடிக்குள் சிரித்த விழிகள். எட்டுநாள் எங்கெங்கோ இருந்தேன். வேண்டுமென்றே பட்டினி கிடந்தேன். இரவில் என் இல்லத்தின் முன்பிருந்த கடலோரம் அமர்ந்திருந்தேன். பகலில் இருண்ட அறைகளில் தூங்கினேன். சாப்பிட்டவை செரிக்காமல் வாந்தி எடுத்தேன். சுந்தர ராமசாமியை வசைபாடி ஒரு கடிதம் எழுதி கிழித்துப்போட்டேன்.

A.Madhavan

சட்டென்று ஒரு கனவிலிருந்து விழித்தெழுந்து அப்படியே அமர்ந்து ஒரு கதையை எழுதினேன். சின்னவயசில் கேட்ட கதை. பேச்சிப்பாறை அருகே உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் படுகை என்ற தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டது. 1897ல் பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் மிஞ்சின் அதன் நாயகன். மூக்கன்துரை என்றும் செம்பன்துரை என்றும் அழைக்கப்பட்ட அவர் ஒரு பூதம் என மக்களால் நம்பப்பட்டார். பேச்சிப்பாறை அணையில் மிஞ்சினின் சமாதி உள்ளது என்பதைத் தவிர அக்கதைக்கும் சமகாலத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அந்த நிலமே அன்றில்லை.

’படுகை’ என்னும் அக்கதை கோவை ஞானி நடத்திய ’நிகழ்’ இதழில் வெளிவந்தது. நிகழ் அன்று இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட மார்க்சிய இதழ். ஆனால் அக்கதை பெற்ற கவனத்தை அரிதாகவே இலக்கியச்சூழலில் கதைகள் அடைகின்றன. நான்காண்டுகள் வரை அக்கதை குறித்த பேச்சுக்கள் இருந்தன. தமிழில் மிகைபுனைவுக் கதைகளின் தொடக்கத்தை உருவாக்கிய படைப்புகளில் ஒன்று அது. அன்றிருந்த பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் அக்கதையைப் பாராட்டி எழுதினர். சுஜாதா தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்தார். கடும்விமர்சனங்களும் இருந்தன எழுத்தாளனாக நான் தமிழ் இலக்கியச்சூழலில் கால்பதித்தேன். 1986 ல் எனக்கு இருபத்துநான்கு வயது. அந்த வயதில் அது பெரிய மணிமுடி. தன்னம்பிக்கையும் என் இடம் குறித்த தெளிவும் வந்தது. அன்றிருந்த எழுத்துமுறைகளை அக்கதை வழியாகக் கடந்தேன் என நினைக்கிறேன்.

ஆனால் அந்தக்கேள்வி இருந்துகொண்டே இருந்தது, அதில் சமகாலம் எங்கே? அப்போது நிகழ் இதழின் ஆசிரியரான கோவை ஞானியை சேலத்தில் நடந்த ஒரு இலக்கியக்கூட்டத்தில் நேரில் சந்தித்தேன். அப்துல் ரகுமானும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார் என நினைவு. அப்துல் ரகுமான் என்னிடம் படுகை ஒரு திறப்பு என்று சொல்லி பாராட்டினார். நான் ஞானியிடம் அதில் சமகாலத்தன்மை இல்லை என்று ’சிலர்’ சொல்கிறார்களே என்று கேட்டேன். ஞானி மெல்லியகுரலில் “சமகாலச் செய்திகள் வேணுமானா தினத்தந்தி வாங்கி வாசிக்கலாமே” என்றார்.

சிரிப்புக்குப்பின் “அந்தக் கதையிலே இருக்கிறது இன்னிக்குள்ள பிரச்சினையோட சாராம்சமான அறச்சிக்கல். மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவை அழிக்கிற வளர்ச்சி பற்றின கேள்வி அதிலே இருக்கு. இயற்கைமேலே மனுஷன் அடைஞ்ச வெற்றிகளைப்பற்றித்தான் இதுவரை இலக்கியம் பேசிட்டிருக்கு. இயற்கையை காட்டுயானைகளை குண்டலமா போட்டுட்டு வந்து நிக்கிற பேச்சியா காட்டுது அந்தக்கதை. அவளை அவமதிச்சு சிறையில போட்டு நாம வாழ்ந்திட்டிருக்கோம். நம்ம மூதன்னை அவ” என்றார்

“அதில பேசப்பட்டிருக்கிறது நாளைக்கான அரசியலும்கூட. இன்னும் பத்துவருஷத்திலே சூழியல்தான் இங்க முக்கியமான அரசியலா இருக்கும்” என்றார். என் கைகளை தன் குளிர்ந்த விரல்களால் பிடித்தபடி “அதோட அந்தக்கதைய காலனியாதிக்கத்துக்கும் அடிமைப்பட்ட சமூகங்களுக்குமான உறவப்பத்தினதா வாசிக்கலாம். அதோட துயரக்கதை. அல்லது அறைகூவல். தமிழிலே எழுதப்பட்ட போஸ்ட்காலனிய எழுத்தா அதை வாசிக்கலாம்” என்றார் ஞானி

அன்று ஊர்திரும்பும்போது நான் ஒரு தெளிவை அடைந்திருந்தேன். இலக்கியத்தை சமகாலம் மீதான நேரடி விமர்சனமாக அணுகும் எவரும் எப்போதும் நல்ல கதையை எழுதிவிடமுடியாது. அது நாளிதழ்ச்செய்தி மட்டுமே. இலக்கியம் சமகாலத்திற்குரியது அல்ல. அது நேற்றுக்கும் நாளைக்கும் உரியது. அதற்கு பிறர் பகுக்கும் அந்த முக்காலப் பிரிவினை இல்லை. அது கிளம்பும் இடம் சமகாலம். சென்றடையும் இடம் எப்போதைக்குமுரிய மானுடச்சிக்கல்கள், மானுடதரிசனங்கள். சுகதகுமாரியின் சூழியல் இயக்கங்களில் இருந்துதான் படுகைக்கான வினாவை அடைந்தேன், சென்றடைந்த இடம் என் குலதெய்வங்களிடமிருந்து நாளைய அறிவியல்வரைக்குமான ஒரு உச்சப்புள்ளி.

சமகால வாழ்க்கையை எழுதும் எழுத்தாளன் சந்திக்கும் இடர்கள் என்ன? முதல்விஷயம் அதன்மீதான சமகால எதிர்வினையாகவே அவன் கதையும் நின்றுவிடும் என்பதே. அந்த வாழ்க்கைத்தருணத்தின் பல்வேறு முகங்களை, அது காலந்தோறும் அடைந்த வளர்சிதை மாற்றத்தை அவன் அறியமுடியாமலாகிறது. அதன் நேற்றை அவன் அறியாவிட்டால் நாளையை உணர முடியாது. சமகாலம் மீதான ஒரு எளிய பட்டுத்தெறிப்பை அவன் உருவாக்கமுடியும். எந்த வாசகனும் அதை அக்கணத்திற்கு அப்பால் நினைவுகூரமாட்டான். எவரிலும் அது நீடித்த பாதிப்பையும் உருவாக்காது.

இன்னொன்று, இலக்கியத்திற்கு புறவுலகப் பொருட்களில் இருந்து படிமங்கள் வந்துசேரவேண்டும் என்பது. ஒரு பொருள் ஆர்வத்தை ஊட்டி மெல்ல அன்றாடவாழ்க்கையின் பழக்கமாக ஆகி மெல்ல ஓர் அடையாளமாக, குறியீடாக ஆகிறது. அதன்பின்னரே அது இலக்கியத்தில் இடம்பெற முடிகிறது. எழுத்தாளனுக்கு மட்டும் அது படிமமாக மாறினால் போதாது, வாசகனுக்கும் அதே படிமம் கடத்தப்படவேண்டும். அதற்கு அச்சமூகத்தின் பொதுக்கனவில் அப்பொருள் அறியாமலேயே அப்படிமமாக ஆகிவிட்டிருக்கவேண்டும். ஆகவேதான் நம் கவிதைகளில் இன்றும் விவசாயம் சார்ந்த படிமங்கள் மிகுதி. கலப்பை படிமமாக இருக்கையில் டிராக்டர் அவ்வாறு ஆகவில்லை.

அந்தமுறை திரிச்சூரில் இறங்கினேன். அந்த தாடிப்புரட்சியாளரை நேரில் சந்திக்க விரும்பினேன். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே நேராக ஆற்றூர் ரவிவர்மா வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் ஆவேசமாக இலக்கியம் என்பது தனக்குரிய காலம் கொண்டது, புறக்காலத்தை அது தன் கச்சாப்பொருளாகவே கொண்டுள்ளது என வாதிட்டேன். ஸ்ரீதேவி வர்மா புன்னகையுடன் குளிர்ந்த சர்பத் கொண்டுவந்து தந்து “குடி” என்றார்.

முந்தைய கட்டுரைஆர்கைவ் தளம் முடக்கம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57