சிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2

pra

சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை

அன்புள்ள ஜெ,

லீலாவதி சிறுகதையில் முதலில் ராமநாதன் வீட்டின் பழக்கவழக்கங்கள் கதைசொல்லியின் பார்வையில் சித்தரிக்கப்படுகிறது. அந்த வீட்டின் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். பின்பு கதைசொல்லியின் வீட்டு மனிதர்களும் அவர்களின் குணச்சித்திரங்கள் பழக்கவழக்கங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

சைவ அசைவ உணவுப்பழக்கம், உத்யோகங்கள், வைணவம் X சைவம், கர்நாடக சங்கீதம் X திருவாசகம், தமிழ் X வடமொழி என் இருவர்களின் வாழ்க்கையும் வேறுபாடுகள் கொண்டது போல முதலில் தெரிகிறது. ஆனால் பழக்கத்தில் வரும் வேறுபாடுகள் எல்லாம்  ஒன்றும் பெரியதல்ல. மனுஷங்க சுபாவம்தான் முக்கியம் என்கிறாள் அம்மா. கதைசொல்லி ராமநாதன் குடும்பத்திலிருந்து உதவி, ஆலோசனைகள், இலக்கியம் என பெற்றுக்கொள்கிறான்.

கதை மூன்று தெளிவானப் பகுதிகளால் பின்னப்பட்டுள்ளது. முதலில் ராமநாதன் குடும்பம் அறிமுகமாகிறது. பின்னர் கதைசொல்லியின் குடும்பம். மூன்றாவது பிரகலாதன் நாடகம். இடையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒரு கதையும் உள்ளது.

ராமகிருஷ்ண பரமஹம்ஷர் சொன்ன கதையும் பிரகலாதன் நாடகமும் கதையின் இறுதி வரியும் கதையை மீண்டும் வேறு ஒரு கோணத்தில் வாசிக்க வைக்கிறது. பிரகலாதனின் அம்மாவின் பெயர்தான் கதைசொல்லியின் அம்மாவின் பெயரும். லீலாவதி. அதுதான் கதையின் தலைப்பும்.

லீலாவதி-ஹிரண்யகசிபு-பிரகலாதன் புராணகதாபாத்திரங்கள்தான் அம்மா-அப்பா-கதைசொல்லி என்ற சமன்பாடு உருவாகிறது. மேலும் முராரியின் அம்மா-அப்பா-முராரி எனவும். புராண காலம் முதல் இன்று வரை மீண்டும் மீண்டும் நிகழும் முக்குணங்களின் போராட்டங்கள் கதைசொல்லியின் நிகழ்வாழ்விலும் அந்த நாடகத்திலும் உச்சம் கொள்கின்றன. சத்வ ரஜோ தமோ குணங்களைக் கடந்த தரிசனமாக நரசிம்மர் தெரிகிறார்.

தாத்தா-அப்பா, அப்பா-கதைசொல்லி இவர்களிடையே உள்ள உறவுச்சிக்கல்கள் கதையில் குறிப்புணர்த்தப்படுகின்றன. தாத்தாவின் நிலத்தை அப்பா குத்தகைக்கு விடுகிறார். அந்த நிலங்களை மகன் விற்று வேறு நிலம் வாங்குகிறான். கணவனை தோளிலும் மகனை ஓக்கலிலும் சுமக்கும் லீலாவதிகளின் இடம் என்ன என்ற கேள்வியையும் கதை எழுப்புகிறது.

கதையில் சிலவரிகள் மிகவும் தட்டையாக இருந்தன.

/அவர்கள் அனைவருமே தங்களைச் சுற்றியிருந்த சூழலை மறந்துவிட்டனர் என்பது அவர்கள் உடல்மொழியில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் மிகக்கவனத்துடன் நாடகம் பார்த்தனர். /

 

/அவர்கள் வீணை வாசிக்கும் போது அத்தந்திகளின் அதிர்வு ஒரு குழைவான மழலைக் குரல் போல் நம் செவிகளில் ஒலித்து இதயத்தில் நெகிழும்./
/அவன் குரலின்இனிமையான மழலை மனதை உருக வைத்தது./

போன்ற கிளேஷக்களை வெட்டியிருக்கலாம்.

மயிலாடுதுறை பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா.

 

 

 

அன்பின் ஜெ,

 

வணக்கம்.

 

சிறுகதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  பிரபு மயிலாடுதுறை எழுதிய “லீலாவதி” கதை பற்றிய என்னுடைய பார்வை.

 

“கணவனுக்கும் மகனுக்கும் இடையில் உணர்ச்சிகரமான ஒரு இடத்தில் இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள்” – கடைசியில் வரும் இவ்வரியே இக்கதையின் மொத்த சாரமாக இருக்கிறது. தன்னையும் அந்தக் குட்டிப் பையன் முராரியையும் பக்த பிரகலாதனையும் ஒரே நேர்கோட்டில் இருத்தி இக்கதையை நிறுவ முயன்றிருக்கிறார்.

 

கதையின் தொடக்கத்தில் வரும் விவரிப்புகள் கதையின் ஒருமையைச் சிதைக்கின்றன. அதிலும் குறிப்பாக ராமநாதன் குடும்பம் பற்றிய விபரங்களால் ஒரு வாசக மனம் கதையின் மையத்தை அவர்களிடத்தே தேடிக்கொண்டிருக்கும் போது, கதைசொல்லி சாவதானமாய் வந்து அதை முற்றிலுமாக மாற்றிப் போகிறார். இது வாசிக்கும் போது அயர்ச்சியையே அளிக்கிறது.

 

அதே போல இசை பற்றிய குறிப்புகள், தேவாரம், இலக்கியம், பரமஹம்சர் என கதை நெடுக வரும் சங்கதிகள் எந்தவிதத்திலும் கதையின் மைய ஓட்டத்திற்கு வலுசேர்ப்பதாகத் தெரியவில்லை. கதை உணர்த்திவிடும் ஒரு விசயத்தை ஆசிரியர் வந்து விளக்குவதும் தேவையற்றது.

 

 

மிக்க அன்பும் நன்றியும்,

கார்த்திக் பாலசுப்ரமணியன்

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம்- இரு கோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -3