சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2

suneel.jpg

பேசும் பூனை

 

ஜெ

 

கைபேசி ஒரு கையாகவே நமக்கு மாறிவிட்டது அதை வைத்து ஒரு நல்ல கதை நிகழ்த்தியது சிறப்பு, எனக்கு என்னமோ முதல் பாரா கதையோடு ஒட்டாதது போல் மிக சம்பிரதாயமான காட்சி விரிப்பாக இருக்கிறது. தொடர்பு சாதனம் பெருகிவிட்டதால் உறவுகள் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது அந்த வெறுமையும் தனிமையும் செயற்கையானவற்றின் மீது மனம் செல்கிறது அது தான் பேசும் பூனை. பெரும்பாலான பெண்கள் வாழ்க்கை பிடிக்காத கணவன் பொருளாதார சிக்கல் என்று தான் போலிதனமான வாழ்வில் உளவியல் சிக்கலோடு இருக்கிறார்கள் அது நாளடைவில் இக்கதையில் வரும் இறுதி முடிவை நோக்கி தள்ளுகிறது. எதிர்பாராத கதை இறுதி, கனேசன் வழக்கம் போல் மூட்டை முடிச்சோடு வந்து மீண்டும் திரும்பி சென்றானா என்ற சொல்லபடாதவையும் கதை வடிவத்தை சிறப்பாக நிறைவு செய்கிறது. நல்ல சிறுகதை என்ற நிறைவு இருக்கிறது….

 

 

ஏழுமலை

 

 

அன்பின் ஜெ,

 

வணக்கம்.

 

சிறுகதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  நண்பர் சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை பற்றி என்னுடைய பார்வை.

 

தூரத்து உறவுநிலையையும் (Distance Relationship)அதிலிருக்கும் அக-புறவையச் சிக்கல்களையும் மையமாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமானதொரு கதையாகவே இதைப் பார்க்கிறேன். அப்படியான தொலைதூரப் பிரிவு எழுப்பும் “கசப்பு” இதில் நுட்பமாக சின்னச் சின்ன உரையாடல்களில் வெளிப்பட்டிருக்கிறது. இப்படியான தூரத்து உறவுகளைப் பிணைப்பதற்குப் பயன்பட்டிருக்க வேண்டிய தொழில்நுட்ப சாதனங்கள் பலவும் அதற்கு மாறாக புரிதற் குறைபாடுகளைத் தூண்டி அதை மேலும் சிக்கல்லாக்கவே செய்கின்றன. இதை அழகான மொழியில் குழப்பமில்லாமல் கதையில் கொண்டு வந்துள்ளார்.

 

நண்பர் சுனில் இந்தக் குறுநாவலைப் பற்றி பேச நேரிட்ட இடங்களிலெல்லாம், இதைத் தான் ‘ப்ளூவேல்’ நிகழ்வுகளுக்கு முன்னரே எழுதிவிட்டது பற்றி திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார். ஒரு வேளை ‘ப்ளூவேல்’ நிகழ்வுகளுக்குப் பின்னர் அதன் பாதிப்பில் இது எழுதப்பட்டிருந்தால் கூட அப்போதும் இது முக்கியமான கதையாகவே இருந்திருக்கும். இதே அளவு பேசவும் பட்டிருக்கும் என்பதே என் எண்ணம்.

 

பொருள்வயின் நிமித்தம் பிரிந்திருக்கும் தம்பதிகளிடம் எஞ்சியிருக்கும் வெறுமையையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் அனீஸ் அக்காவுக்கும், தேன் மொழிக்கும் இடைய நடக்கும் அந்தச் சின்ன உரையாடலுக்குள் நிறைய நுட்பமான கிளைக்கதைகளுக்கான இடமிருக்கிறது. வாசகன் இட்டு நிரப்பிக் கொள்வதற்கு!

 

உற்ற நண்பர்களிடமும் நெருங்கிய உறவுகளிடமும் கூட பகிர்ந்திராத பல உண்மைகள் யாவையும் நமது கைபேசிகளுக்குள் புதைத்து வைத்திருக்கிறோம். அப்படியான ஒன்று இக்கதையில் பேசும் பூனையுடன் நடக்கும் முதல் உரையாடல் முடியும் இடத்தில் தக்க அதிர்வுடன் வெளிப்பட்டிருக்கிறது.

 

அந்தத் தொலைபேசியை விட்டு ஒதுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் இயலாமல் தவிக்கும் தேன் மொழியின் தத்தளிப்புகளை சித்தரித்த விதம் சிறப்பு. கதையில் வரும் நுணுக்கமான விவரணைகள் ஈர்க்கின்றன .  //ஆழத்திலிருந்து நிலத்தின் குருதியெனகக் கொப்பளித்து பெருகிய செந்நீர் சிறு குளமென தேங்கி நின்றது//.

 

அவள் தன் கையை அறுத்துக் கொண்டு மரணத்தின் வாசனையை நுகரும் சமயத்தில் அவளின் நினைவுக்குள் வந்து போகும் மாண்டேஜ் காட்சிகளை மிகவும் ரசிக்கும் படியாக எழுதியிருக்கிறார்.

 

சுனிலுக்கு வாழ்த்துக்களும் அன்பும் !!

 

மிக்க அன்பும் நன்றியும்,

 

கார்த்திக் பாலசுப்ரமணியன்

 

அன்புள்ள ஜெ

 

பேசும்பூனை ஒரு சிறுகதை அல்ல. குறுநாவல். அதை அவரே சொல்லியிருக்கிறார். ஆகவே சிறுகதைக்குரிய இலக்கணங்களைக்கொண்டு அதை அணுகமுடியாது. சிறுகதை என்றால் பூனைக்கும் அவளுக்குமான உரையாடல் போன்றவை மேலதிகச் சுமைகள்தான். பூனையை தெளிவாக வரையறுத்து அவளுக்கும் அதற்குமான ஊடாட்டத்தை மட்டும் சொல்லி குறிப்புணர்த்தியிருந்தாலே போதுமானது. பூனை அவளை எப்படி அலைக்கழிகீறது எப்படி நிறைவுசெய்கிறது என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சியை மட்டும் கொண்டு சொல்லியிருந்தால்போதும்.

 

அதேபோல ஒரு புனைவுப்பிரச்சினை. இது எனக்குமட்டும்தானா எனத் தெரியவில்லை. நான் கதாபாத்திரங்களை ஆசிரியரே வர்ணித்தால் கதையே ஆசிரியர்கூற்றாக இருக்கவேண்டுமென நினைப்பேன். கதை முழுக்கவே தேன்மொழியின் வார்த்தைகளில் செல்கிறது. தேன்மொழியை வர்ணிக்கும் முதல்பகுதி அதனுடன் சரியாக பொருந்தாமலேயே இருக்கிறது

 

அருண்

முந்தைய கட்டுரைஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8
அடுத்த கட்டுரைசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3