வைரமுத்து,ஞானபீடம் -கடிதங்கள் 2

vairamuthu1xx

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

வைரமுத்து – எத்தனை பாவனைகள்!

 

சார்,

 

சமீபத்திய உங்கள் இரு கட்டுரைகள் ‘புதிய இருள்’ மற்றும் ‘வைரமுத்துவுக்கு ஞானபீடமா’ பெரும் நிறைவையும், உத்வேகத்தையும் அளித்தது. அறம் செய்ய மட்டுமல்ல, அறம் தோற்று அநீதி நடக்கும் போது அதற்கு எதிராக போராடுவது மிக மிக அவசியமான ஒன்று என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதோடு, செய்து காட்டிக்கொண்டும் வருகிறீர்கள். உங்கள் வாசகனாய் பெருமிதம் கொள்கிறேன்.

என் கோபம் தவறு செய்பவர்கள் மேல் இல்லை ஏனேனில் அவர்களின் சுயத்தை எளிதில் அடையாள படுத்திவிடலாம் மேலும் தவறு செய்வதற்கு உரிய தண்டனைகளை ஏதோ ஒரு வகையில் பெற்று விடுகிறார்கள். குறைந்தபட்சம் மோசமானவன் என்ற பட்டம் ஆனால் இந்த தவறை, குற்றத்தை கண்டும் நமக்கேன் தேவையில்லாத பிரச்சனை என்று அமைதி காக்கும் ‘நடுநிலையாளர்கள்’ தான் உண்மையாக தூற்ற படவேண்டியவர்கள். நல்லவன் என்ற போர்வைக்கு அடியில் உள்ள சுயநலவாதிகள் இவர்கள். நெப்போலியனின் கூற்று இங்கு மிக பொருந்தும்   “The world suffers a lot. Not because the violence of bad people. But because of the silence of the good people.”

 

 

T.T.V, வைரமுத்து தமிழகத்தில் பெரும் செல்வாக்கு உள்ள நபர்கள் உங்களின் இந்த கட்டுரையால் நிச்சயம் உங்களை வாய்ப்பு கிடைக்கும் போது வீழ்த்த தயாராக இருப்பார்கள் அவர்களும் அவர்களின் வகையறாக்களும்  அதை நன்கு அறிந்திருந்தும் அதை பற்றி சிறிதும் பொருப்படுத்தாமல் அநீதிக்கு எதிராக நீங்கள் கொடுக்கும் குரல் போற்றப்படவேண்டியது.

 

 

எப்பொழுதும் போல் இப்போதும் உங்கள் பின்னால் நிற்கிறோம்…. உறுதியாக.

 

செந்தில்குமார் வி.எஸ்

 

 

அன்புள்ள ஜெ,

 

வைரமுத்துவுக்கு ஞானபீடமா என்னும் உங்கள் குரல் வழக்கம்போல நம்மவர்களால் சமத்காரமாக எதிர்கொள்ளப்பட்டுவிட்டது. தங்கள் மேடைகளில் அவரை கவிப்பேரரசு என ஏற்றி நிறித்திய சிற்றிதழ்க்காரர்களால் வேறு என்ன சொல்லிவிடமுடியும்? கி.ராஜநாராயணனுக்கு ஞானபீடம் பெறுவதே நம் கௌரவம் என எழுதியிருர்ந்தீர்கள் அதையும் நுட்பமாக கடந்துசென்றார்கள். நீங்கள் சொன்ன ஒரு வரி முக்கியமானது பின் நவீனத்துவப் பகடி. சுயநலத்தையும் சில்லறைத்தனத்தையும் மறைப்பதற்கான சரியான உத்தி அது.

 

ஒரு சின்ன தகவல். வைரமுத்துவை சிபாரிசு செய்தவர்க்ளில் உங்கள் நண்பரும் புரட்சிக்கவிஞருமான சச்சிதானந்தனும் உண்டு. எல்லாம் கொடுக்கல்வாங்கல்தான்

 

ராம்குமார் செல்வன்

 

 

அன்புள்ள ஜெ,

 

வைரமுத்துவுக்கு ஞானபீடம் என்பது ஒரு தமிழ்ச்சிறுமை என்பதை எழுதியிருந்தீர்கள். எனக்கு எப்போதுமே ஓர் எண்ணம் உண்டு. உங்களுக்கு அடுத்த தலைமுறையினராக இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பலர் தமிழின் தீவிர இலக்கியம் எதையும் படித்தவர்கள் அல்ல. அவர்கள் சுஜாதா அல்லது வைரமுத்து வழியாகவே வாசிக்கவும் எழுதவும் வந்தவர்கள். அவர்களுக்கு சுந்தர ராமசாமியோ ஜானகிராமனோ மௌனியோ ப சிங்காரமோ ஆதர்சம் கிடையாது. அவர்கள் சுஜாதாவோ வைரமுத்துவோ ஆக மாறுவதே வாழ்க்கையின் வெற்றி என நினைப்பவர்கள். அந்த இலக்குநோக்கி எழுதுபவர்கள். உண்மையிலெயே சொல்லப்போனால் பலபேர் ராஜேஷ்குமாரின் பாதிப்பிலே எழுதுபவர்கள்.

 

இவர்களுடைய இலட்சியம் விகடன் குமுதம்தான்.ஆனால் உயிர்மைபோன்ற இதழ்கள் இந்த எழுத்தாளர்களை இலக்கியவாதிகளாக முன்னிறுத்தி அந்த அடையாளத்தை அளித்துவிட்டார்கள். ஆகவே இன்றைய குழப்பம். இன்று கி.ராஜநாராயணனுக்கு ஞானபீடம் கிடைத்தால் தமிழுக்குப்பெருமை,.வைரமுத்துவுக்கு என்றால் சிறுமை என நீங்கள் சொல்லும்போது இந்த சோட்டா எழுத்தாளர்களுக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஆகவே வைரமுத்துவுக்கு கொடுப்பதைப்பற்றி நீங்கள் கொதிப்பதும் புரியவில்லை. கி.ராஜநாராயணனைவிட வைரமுத்து எந்தவகையிலே குறைந்தவர் என்றே புரியவில்லை இவர்களுக்கு. இதுதான் இன்றைக்குச் சிக்கல். இலக்கியம் சார்ந்து நீங்களும், கோணங்கியும், சுந்தர ராமசாமியும் , வெங்கட் சாமிநாதனுமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த எதையுமே அறியாத ஒரு ஃபேஸ்புக் தலைமுறையிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு உகந்த முகம் வைரமுத்துதான்

 

மகேஷ்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19
அடுத்த கட்டுரைஎன்றென்றும் யானைகள்- கடலூர் சீனு