விஷ்ணுபுரம் விருதுவிழா – நிறைவு

அன்புள்ள ஜெ,

 

விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இன்று ஓர் இலக்கியக் கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. விழாவுக்கு வந்து ஒரு நிறைவையும் அதன்பிறகு அன்றாடத்தில் கலக்கும் சோர்வையும் அடைந்தேன். ஒரு பெரிய கேள்வி எழுந்துவந்தது. இந்த விழாவை ஏன் நடத்துகிறீர்கள்? இதனால் உண்மையில் என்ன நிகழுமென எதிர்பார்க்கிறீர்கள்? அது நிகழ்கிறதா? நாங்கள் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறோமா?

 

செந்தில்குமார்

 

 

அன்புள்ள செந்தில்,

 

செந்தில்களுக்கு இனிமேல் எண்களை வைப்பதாக உத்தேசம்.

 

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பை உருவாக்குவதற்கான காரணம் சில இலக்கியச் சந்திப்புகளை நடத்தலாமே என்னும் எண்ணம். முதல்சந்திப்பு கலாப்ரியாவுடன். பின்னர் அது விருது கொடுப்பதாக மாறியது. முன்னோடிகள் கௌரவிக்கப்படாது போகலாகாதென்பதற்காக. அதற்கு நண்பர்கள் வந்து கூடும்தோறும் வளர்ந்து இன்று இருநாள் இலக்கியவிழாவாக ஆகியிருக்கிறது.

 

இது முதன்மையாக வாசகர்விழாதான். இலக்கியவாதிகள் இங்கே விருந்தினர். அவர்கள் தங்கள் வாசகர்களை இங்கே சந்திக்கலாம். இங்கு வந்த அத்தனை எழுத்தாளர்களும் தங்கள் மிகச்சிறந்த வாசகர்களை இங்கே சந்தித்ததை பதிவுசெய்திருக்கிறார்கள். அவ்வாசகர்களில் சிலர் எழுத்தாளராக ஆகலாம். அது ஒரு சாத்தியக்கூறு. அவ்வாறு எழுந்தவர்கள் சிலர் இன்று அறியப்பட்டுள்ளனர். மேலும் பலர் வரலாம். அதைத் திட்டமிட முடியாது. வழிநடத்தவும் முடியாது.

 

விஷ்ணுபுரம் ஓர் இலக்கியக்குழுவோ எழுத்தாளர் குழுவோ இலக்கியக் கொள்கைமையமோ அல்ல. இதற்கென்று எந்த இலக்கியப் பிரகடனமும் இல்லை. வாசகர்குழுமம் மட்டுமாகவே இது இருக்கவேண்டுமென்பதே இதன் எண்ணம். ஆகவே இதைச்சார்ந்த எழுத்தாளர்கள் என எவருமில்லை.

 

வாசகர்கள் கூடி இலக்கியத்தை, இலக்கியவாதிகளைக் கொண்டாடும் விழா இது. இது ஏன் தேவையாகிறது என்றால் நம் சூழலில் இலக்கியவாசகர்கள் மிகமிகத் தனிமையானவர்கள் என்பதனால்தான். அவர்களின் வீட்டில், பணிச்சூழலில் அவர்கள் இன்னொரு வாசகரைக் கண்டுகொள்ளவே இயல்வதில்லை. அந்தத் தனிமையை இத்தகைய விழாக்கள் போக்குகின்றன. தாங்கள் ஒரு தனி அறிவியக்கம் என அவர்கள் உணரமுடியும்.

 

இங்கு வரும் எழுத்தாளர்களுக்கும் அந்தத் தனிமையுணர்வு உண்டு, உண்மையிலேயே வாசகர்கள் உள்ளார்களா என்னும் ஐயம். அது இங்கே நீங்கும். மிகச்சிறிய அளவிலானாலும் இங்கே  இலக்கியம் காத்திரமான ஒரு தனி இயக்கமாக எஞ்சுகிறது  என்னும் எண்ணம் உருவாகும். அது அவர்களுக்கு எழுத்துச்செயல்பாட்டின்மீதான நம்பிக்கையை நீட்டிக்கும். அது மிகமிக நிறைவளிப்பது. ஊக்கமூட்டுவது. அது இங்கே நிகழ்கிறதென்றே நான் நினைக்கிறேன்.

 

எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்கான அரங்காக மட்டுமே இது அமையவேண்டும் என்பதே எங்கள் திட்டம். அவர்களை வாசிப்பதே அவர்களை கொண்டாடுவதன் முதல்படி. அதற்கப்பால் ஏராளமான எழுத்தாளர்களுக்கு பலவகையிலும் உதவிகள் செய்திருக்கிறோம். ஒன்றைத் துணிந்துசொல்லமுடியும், சென்ற பத்தாண்டுகளில் மிக அதிகமாக இலக்கியவாதிகளுக்குத் தனிப்பட்ட உதவிகள் செய்த அமைப்பு இதுவே, எந்த பல்கலைக்கழகமும் அல்ல. எந்த அரசுசார் அமைப்பும் அல்ல. இவ்வமைப்பின் உறுப்பினர்கள்  நடுத்தரவர்க்கத்தினரே. தங்கள் எளிய வருவாயிலிருந்து இப்பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

 

நான் இளம் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் இருந்தபோது இத்தகைய சந்திப்புகள் எனக்கு பெரிதும் உதவியுள்ளன, அவை பெரும்பாலும் ஓரிரு நிகழ்ச்சிகளுடன் நின்றுவிட்டன. அவை கடைப்பிடித்த சில மென்மையான போக்குகள் காரணமாக இலக்கியம் மீதான மெய்யான ஈடுபாடில்லாதவர்களால் அவை அழிக்கப்பட்டன. அக்குறைகளை அடையாளம் கண்டு களைந்து இவ்விழா ஒருங்கிணைக்கப்படுகிறது.

 

இவற்றின் ஒட்டுமொத்த விளைவு என்ன என்று இன்று சொல்லிவிடமுடியாது. ஆக்கப்பூர்வமான ஓர் இலக்கியச்சந்திப்புநிகழ்வு நம் சூழலில் இல்லை என்று ஆகக்கூடாது, இதை இன்றைய சூழலில் அரசோ கல்விநிறுவனங்களோ நடத்தமுடியாது என்ற எண்ணத்தால் இது நடத்தப்படுகிறது

 

 

நான் இலக்கிய உலகில் நுழைந்தது 1990ல். 1993 ல் முதல் இலக்கியச்சந்திப்பை ஒருங்கிணைத்தேன். நாஞ்சில்நாடனுக்காக நான் அமைத்த கூட்டத்தில் அவர் சொன்னார், அவருக்காக அமைக்கப்பட்ட முதல் இலக்கியக்கூட்டம் அது என. அது எனக்குப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருதுவழங்கிய விழாதான் அவருக்காகக் கூட்டப்பட்ட முதல் இலக்கியக்கூட்டம் என அம்மேடையில் அவர் சொன்னார். இந்த யதார்த்தத்தில் இருந்தே இலக்கியச் சந்திப்புகளையும் கூட்டங்களையும் ஒருங்கிணைக்கத் தொடங்கினேன். நான் இன்றுவரை என் நூல்களுக்காக ஒரு கூட்டத்தையும் கூட்டியதில்லை.

 

1992 முதல் இந்த 2017 வரை கிட்டத்தட்ட கால்நூற்றாண்டாக எல்லா ஆண்டும் சக எழுத்தாளர்களுக்காக நிதி திரட்டிக்கொண்டும் இருக்கிறேன். இதுவும் தமிழ்ச்சூழலில் நானே ஏற்றுக்கொண்ட கடமைகளில் ஒன்று. என் குடும்பச்சூழல் இதற்கு ஏதுவானதாக இருக்கிறது.

 

நிறைவளிக்குமளவுக்குக் கூட்டம் இருந்தாலும் ஏறத்தாழ பாதிப்பேர் வெளியே இருந்து வந்து கலந்துகொண்டவர்கள். கோவையிலிருந்து மேலும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கலாம். பொதுமக்களுக்கு உகந்த பெரிய பேச்சாளர்களோ நட்சத்திரங்களோ இல்லை என்பது உண்மை. கோவையிலேயே அன்று இரு விழாக்கள் இருந்தன. இலக்கியவிழாக்களுக்கு மட்டுமாக வரும் கூட்டத்திற்கு ஓர் எல்லை உள்ளது. ஆனாலும் இன்னும் இருந்திருக்கலாம்.

 

செய்தியைக் கொண்டுசென்று சேர்க்காததுதான் காரணம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இந்நிலைதான் கோவைப் புத்தகக் கண்காட்சியிலும். தமிழகத்தில் அவர்கள் அளவுக்கு எவரும் புத்தகக்கண்காட்சிக்கு விளம்பரம்செய்வதில்லை. பிரச்சினை கோவை மதம்சாரா பண்பாட்டுச் செயல்பாடுகளைப் பார்க்கும் பார்வையில் இருக்கலாமென்பது என் எண்ணம். கோவையின் ‘கல்விவெறி’ இளைஞர்களை வேறெதிலும் நாட்டமில்லாதவர்களாக ஆக்குகிறதா என ஐயம்கொள்கிறேன்.

 

இம்முறை நிகழ்ந்த விழாதான் இதுவரை நிகழ்ந்த விழாக்களிலேயே மிகப்பெரியது, மிகச்சிறப்பானது. மிகச்சிறப்பான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைத்தல் வழியாக இது நிகழ்ந்தது. வழக்கமாக எப்படி என்ன செய்தாலும் எவரிடமிருந்தேனும் சிறிய குறைகள் வரும். இம்முறை அப்படி ஒரு பிறழ்வுகூட இல்லை. அதற்கு நண்பர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது. செந்தில் இல்லையேல் இவ்விழா இப்படி நிகழ்ந்திருக்காது. அவர் தொழில்முறையாகவே ஒரு மிகச்சிறந்த மேலாண்மைநிபுணர். மீனாம்பிகை, விஜய் சூரியன்,  நடராஜன், ராதாகிருஷ்ணன், செல்வேந்திரன், நரேன் என ஒரு குழு மிகச்சிறப்பாகப் பணியாற்றியது. மிகச்சிறந்த குழுப்பணி என்பது எவரும் ஆணையிடாமலேயே தன்னியல்பாக நிகழ்வது. அதை நண்பர்கள் அங்கே கண்டிருக்கலாம்.

 

கோவையில் இவ்விழா இத்தனை வெற்றிபெறுவதற்கு செந்தில் அளவுக்கே காரணமானவர் ராம்குமார் ஐ.ஏ.எஸ். அவர் மேகாலயாவிலிருந்தாலும் தொடர்ந்து தொடர்பிலிருந்தார். இடம்தேடுவது முதல் பேச்சாளர்களை ஏற்பாடு செய்வதுவரை அனைத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.தொழில்முறையான பயிற்சி என்பது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு எவ்வளவு அவசியம் என்பதை ராம்குமார். செந்தில் இருவரின் பங்களிப்பிலிருந்து அறியமுடிந்தது. என் நண்பர் மறைந்த வே அலெக்ஸ் இருந்திருந்தால் இம்முறை எந்தக்குறையும் சொல்லியிருக்கமாட்டர் என எண்ணிக்கொண்டேன்.

 

இந்தத் திட்டமிடல் ஏன் என்றால் இது இல்லாமல் இருக்கையில் நிகழும் அவலங்களை அறிந்தவர்கள் அமைப்பாளர்கள் என்பதனால்தான். உதாரணமாக, சிங்கப்பூரில் ஒருமுறை மனுஷ்யபுத்திரன் கலந்துகொள்ளும் இலக்கியக்கூட்டம் ஒன்று மூன்றாம் மாடியில் ஒருங்கமைக்கப்பட்டது. அதற்கு மின்தூக்கி கிடையாது. அங்கே சென்றபின்னரே அதை மனுஷயபுத்திரன் அறிந்தார். அமைப்பாளர்களும் கால்களில்லாத அவர் எப்படி மேலே செல்வார் என  நினைக்கவில்லை.

 

இம்முறை விஷ்ணுபுரம் நிகழ்வின் செயல்நிரல்களில் ஒரு வரியை தனியாக எழுதிவைத்திருப்பதைக் கண்டேன். நடப்பதற்குப் பிரச்சினை உடைய பங்கேற்பாளர்களுக்கு மின்தூக்கியின் அருகே அறைகள் அமையவேண்டும் என்றும், அதை தனிப்பட்ட முறையில் நோக்கிச் செய்யவேண்டிய ஒருங்கிணைப்பாளரின் பெயரும் அதிலிருந்தன. திட்டமிடல் என்பது இதுதான்.

 

என்ன சிக்கல் என்றால் இந்த விழா  எப்போதைக்கும்விட பெரிதாக ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஓர் இலக்கியத் திருவிழாவாக. இதை மேலும் முன்னால் மட்டுமே கொண்டுசெல்ல முடியும்.  இந்த பொறுப்பு ஓர் அச்சத்தை உருவாக்குகிறது என்பது உண்மை. நாம் நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்பதே அதற்கு நான் சொல்லிக்கொள்ளும் சமாதானம்

 

ஜெ

முந்தைய கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15