நத்தை -ஒரு கடிதம்

vc1

குருவியின் வால்

 

‘எழுத்தாளர்’ என்று  தன்னை அறிவித்துக்கொள்ளும் ஜெயமோகன் அவர்களுக்கு அநேக வணக்கங்கள்..

 

 

விகடன் ‘தடம்’ இதழில் நத்தையின் பாதை என்ற தலைப்பில் 6 -வது கட்டுரையாக குருவியின் வால் என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களை தந்துள்ளீர்கள்..

 

 

அந்தக் கட்டுரையில் நிறைவுப் பகுதியில் வரும் “இரட்டைவால் குருவியின் ஆட்டுவிப்பு” தர்க்கம் தங்களுக்கு பொறுத்தமானதே, என்று கருதுகிறேன்.

 

 

இலக்கியம் செய்வதே தான் எக்காலத்தாலும் நினைவுக்கூரப்பட வேண்டும், என்பதனாது, இலக்கியம் எழுதுவதை, ஒரு தொழிலாகக் கொண்டு இயங்கும் ‘கார்ப்பரேட்’ வணிக எழுத்தாளர்களின் சிந்தையில் உதித்த புத்தி என்பது இங்கே தெற்றென விளங்கிற்று.

 

 

 

“இவ்வுலகை எவரேனும் எவ்வகையிலேனும் ஆட்டுவிக்க முடியுமென்றால், அது அப்படித்தான் இயலும்”..

 

 

உண்மைதான்… ஹிட்லரும், முசோலினியும் எப்படியேனும் இவ்வுலகை ஆட்டுவிக்க நினைத்தவர்கள்தானே!

 

 

‘எப்படியேனும்’, என்ற சொல்லாடலில், வரலாற்றின் தொடக்கப்புள்ளியிலிருந்து நேற்று வரை, ஆட்டுவிப்புக்காக   ‘சிந்தப்பட்ட கடைசி மனிதனின் இரத்தமும் சதையும் கலந்த முடைநாற்றத்தின்’ மீதுதான் உங்களது ‘நான் எனும் அகங்காரம்’  (இது உங்களது வார்த்தை என்பதை நினைவில் கொள்க..) கட்டமைக்கப்பட்டது, படுகிறது, படும்..

 

 

” எந்த இலக்கிய உண்மையும், அதற்கு நிகரான பிறவற்றால் சமன்செய்யப்பட்டுத்தான் முழுமை நோக்கிச் செல்ல முடியும்” என்று ஒரு உண்மையைக்கூறி அதன் மீது புத்தி பேதலிக்க வைக்கும் அனுமானங்களை முன் வைக்கும் சாதுரியத்தை கைக்கொண்டீர்..

 

 

“உண்மைக்கு மாற்று உலகில் இல்லை”, மேன்மை பொருந்தியவரே!

 

 

“நான் என்னும் அகங்காரம் இல்லையேல் இலக்கியம் இல்லை” என்பது உங்களுக்கான உண்மை. அதை அனைவருக்குமான உண்மையாக மாற்றுவதுதான், இன்று உலகம் முழுவதும் எல்லாத் தளங்களிலும் நடத்தும் மூர்க்கத்தனமான அதிகார அரஜாகங்கள். அந்த அரஜாகங்களுக்கு பக்கபலமாக நீங்கள் கடவுளை உங்கள் பக்கம் இழுத்துக் கொள்வீர்கள்..கடவுளை புறந்தள்ளிவிட்டு, அதை உங்களால் செய்ய முடியும் என்றால், உங்களை ஆகச்சிறந்த மனிதனாக இந்த உலகில் தோள்களில் ஏற்றி கொண்டாடலாம். நீங்கள் செய்யும் ‘துருசுகளுக்கு உடனாக’ கடவுளை அழைத்துக் கொள்ளும் கோழைகள்தானே நாம்!

 

 

‘உங்களை கடவுள் குனிந்து பார்த்து புன்னகைப்பார்’ தான்…குனிந்து பார்த்து புன்னகை செய்கிறார் என்றால், அவர் மேலே விதானத்தில் தொங்கி கொண்டிருப்பாரோ!

விண் எனும் விதானத்தில்…

 

 

உலகில் படைக்கப்படும் எந்த உயிரினமும், தான் இறந்த பிறகு என்னவாக அடையாளம் காணப்பட வேண்டும், என்று சிந்திப்பதுமில்லை, செய்வதுமில்லை..

 

 

மனிதன் ஒரு அற்ப ஆசைக்காரன். தான் இறந்த பிறகும் தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும், என ஆசைப்படும் அற்பன். ‘அதுவும் எப்படியேனும்’்

 

 

இந்தப் பூமியின் விட்டம் தெரியாதவர்கள் நவில்கின்ற நப்பாசைகள் இவை.. இதுபோனெ சிந்திக்கும் எந்த ஞானசூனியமும், அந்தச் சிந்தனை எழுகின்ற தருணத்தில் மட்டும், தானும் தான் வாழும் வீடும் மட்டுமே பிரபஞ்சம் என்று நினைத்துக் கொள்வார்கள் போலும். பிரபஞ்சத்தில் ஒரே ஒரு ‘வானதி’ தான் உண்டு என்பது அவர்கள் போடும் அந்நேர வானியல் கணக்குபோலும்.

 

 

ஒளியின் மீது ஏறி ஒருநூறு ஆண்டு பயணம் செய்தாலும், இந்த ‘வெடித்த விண்வெளியை’ கடந்து விடலாமோ!அத்துணை தூரத்துக்கும் நீங்கள் அடையாளமாமோ!’என்றுமிருக்க வேண்டும்’ என்ற நினைப்பில் இலக்கியம் செய்வது எதற்கு? எப்படி முடிகிறது?

 

 

“வயிறு நிரம்பியன் வாதம் செய்கிறான்”.உங்களுக்கு மலமும், சிறுநீரும் கழிக்கும் அவசரத்தில் ஒருவன் இலக்கியத்தைச் செய்வானா?

அப்படியெனில், காலகாலத்துக்கும் நிலைத்திருக்கும் இலக்கியம் செய்பவர் யார்? எப்படி முடிகிறது?

 

 

உயிர் வாழ்வதற்கான அடிப்படை வாழ்க்கைவியக்கச் செயல்பாடுகளிலிருந்து, தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டவர்கள் தான், பொழுதுகழிய புனைந்தார்கள். அதுவே உயர்ந்தது என்று நம்ப வைத்தார்கள். அவர்கள் எப்படி அந்த வாழ்க்கை இயக்கச் செயல்பாடுகளிலிருந்து தங்களைத் துண்டித்து கொண்டார்கள் என்பதை அன்றாட வயிற்றுக்கு அல்லாடுபவர்கள் சிந்திக்கா வண்ணம் மருட்செயல் புரிந்தது தான் இலக்கியம்.

 

உலகில் உள்ள மற்ற உயிரினும்போல் “வயிறும், பாடும்” தான் வாழ்க்கை, என்ற நிலை மனிதனுக்கு இல்லை, என்பதால் தான் இலக்கியம் பிறக்கிறது. “வயிறும், பாடும்” உலகில் தோன்றிய ஒவ்வொருவரும், சார்பின்றி செய்ய வேண்டிய நிபந்தனை என்று இருந்தால் இலக்கியம் ஏது? அதில் உங்களுக்கு இடம் ஏது? உயர்வேது? தாழ்வேது?

 

 

இவற்றை தாண்டி, நமக்கு இலக்கியம் தேவைப்படுகிறது என்றால், அது இங்கிருக்கும், இடைஞ்சல்களை களைப்பதற்கு மட்டுமே. நேற்றைய அனுபவங்களை சேகரிக்கும் எல்லாத் தருணங்களிலும், நாம் இந்றைய தருணங்களை பொசுக்குகிறோம்..

மேலும், ‘நேற்றைய’ அனுபவத்தை  ‘நாளைக்கு’ தேக்குவதை மட்டும் இலக்கியம் செய்கிறதா என்ன?அது ‘நேற்றைய’ என்பதை மட்டுமே வலியுறுத்துகிறது.

 

 

அதாவது, இலக்கியத்தில், ‘இன்று’ என்பது  ‘நேற்று’ தான். இன்று என்பது இன்றாக இருப்பதே இல்லை. நேற்றில் வாழ்ந்த மனிதர்களே சிறந்தவர்கள். இன்றும், நாளையும் அந்தச் சிறந்தவர்கள் ஒருபோதும் உருவாக வாய்ப்பே இல்லை என்கிறது இலக்கியம். ‘அந்தச் சிறந்தவர்களை’ காலம்தோறும் துதிப்பவர்கள், ‘அடுத்தச் சிறந்தவர்கள்’.இதைத்தான் அவர்கள் அடையாளம் என்கிறார்கள். அதை எப்படியேனும் அடையாளம் என வாதிடுகிறார்கள்.

 

உலகில் பிறந்தது முதல் இன்றுவரை, எந்த மாற்றமும் அடையாமல் வாழ்கின்ற மனிதர்களும் இந்த உலகில் வாழ்கின்ற  னர். அவர்களுக்கு எந்த இலக்கியமும் தேவைப்படவில்லை; எந்த அடையாளமும் தேவைப்படவில்லை; அப்படித்தான் இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனுக்கும்..

 

 

நிறைவாக,

 

 

“இந்த உலகை புத்திசாலிகள் ஆள நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் கோலைகள். அவர்கள் நேரடியாக இந்த உலகிற்கு தங்களை அறிவித்துக் கொள்ளும் திராணியற்றவர்கள். தங்கள் ஆளுகையை மறைவாக ஆட்சி அதிகாரத்தின் வழியாகச் செய்பவர்கள்.  செய்ய நினைப்பவர்கள்.. அறிவியல் விஞ்ஞானியாக, கணித மேதையாக, தத்துவ வழிகாட்டலாக…….

 

அந்தக் குரூரம் தான் இன்று உலகை ஆள்கிறதே தவிர, ஆட்சியில் இருக்கும் அதிகார வர்க்கமல்ல”

 

 

இந்த உண்மையச் சொன்ன பேரறிவாளன் வாழ்க!

 

 

– ப.பிரபாகரன்.

 

அன்புள்ள பிரபாகரன்,

 

 

 

ஆழமான சிந்தனைகள்

 

 

ஆனால் இலக்கியம் தேவையில்லை என்று சொல்ல இத்தனை ஆழமாகச் சிந்திக்கவேண்டுமா என்ன?

 

 

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69
அடுத்த கட்டுரைஇருநாய்கள்