அயினிப்புளிக்கறி கடிதம்

download (1)

அன்புள்ள ஜெயமோகன்,

அயினிப்புளிக்கறி சிறுகதை மிக எளிமையான கதையாகத் தோன்றினாலும் உள்ளே விரிந்துகொண்டே செல்கிறது.

அயினி மரத்தின் பழம் காயாக இருக்கும்போது புளிப்பாக அல்லது கடுப்பாக இருக்கிறது. பழமாக முதிரும்போது நல்ல இனிப்பாக மாறிவருகிறது. யோசித்துப் பார்த்தல் ஆசானின் வாழ்க்கையும் அதுபோலவே என்றுதான் தோன்றுகிறது. அவரின் இளமைக் காலம்கொந்தளிப்பாக இருக்கிறது. திமிரும் பிடிவாதமும் நிறைந்ததாக இருக்கிறது. அதனால் முதலாவது சம்சாரத்தை இழக்க நேருகின்றது. ஆனால், அவர் வாழ்க்கை முதிர்ந்து கனிந்து ஒரு கட்டத்தை எட்டும்போது கனிந்த அயினிப்பழம் போல் இளகிவருகிறார். சாதாரணமாகவிட்ட இடத்திலிருந்து தொடர்வது போல “நேற்று அயினிப்புளிக்கறி வச்சேன். செரியா வரேல்ல கேட்டியா.” என்று உறவைத் தொடர்கிறார். செம்புமூட்டு ஆச்சியும் அவருடன் இசைந்து செல்கிறார். உண்மையில் அவர்கள் இருவர் வாழ்க்கையும் அயினிக்காயின் படிநிலை வளர்ச்சி போலவே முதிர்ந்து செல்கிறது.

ஆசானுக்கு இளமையில் பீடி புகைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது இல்லை. இப்படியே ஆசானுக்குள் நிறையவே மாற்றம். எங்கோ ஒரு புள்ளியில் பழைய ஆசானாகத் தன்னை எண்ணும்போது பீடி புகைத்து அந்த இடத்தில் தன்னை நிறுத்திப்பார்கிறார். ஆனால், அவருக்குள் இருந்த பழைய கசப்புகள் இப்போது இல்லை. முதிர்ந்துவிட்டார். அது வாழ்வின் முதிர்ச்சிக்கால் கனிந்து வருவது. இப்போதும் கோவம் வரும்போது “வெட்டி கொடல எடுத்திருவேன்… நாறப்பயலே” என்று கொந்தளிக்கத்தான் செய்கிறார். ஆனால் உள்ளடக்குகளில் இருக்கும் அதன் பலவீனம் அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. அதனாலேயே விலகி தனியே செல்ல முடிவெடுக்கிறார்.

“ருசியறிஞ்சவனுக்கு ரெண்டு குணமிருக்கும். சின்ன ருசிகள அவன் கண்டுகிடுவான். ஒவ்வொண்ணிலயும் ஒவ்வொரு ருசியுண்டுண்ணு தெரிஞ்சிருப்பான். அதனால அவனுக்கு கடவுள் படைச்ச இந்த மண்ணிலே எல்லாமே ருசியாட்டு தெரியும்… ஏலேகோடிக்கணக்கா ருசியிருக்குலே இந்தப்பூமியிலே” என்று ஆசான் சொல்லும் இந்த வரிகள்தான் கதையின் குவிமையமாகத்தோன்றுகின்றது. கோடிக்கணக்கான ருசியிருக்கிறது உலகில். அனைத்தையும் ஒரே பருவத்தில் அறிய முடியாதுதான். ஆனால் மெல்ல மெல்ல அறிய முடியும். அது வாழ்க்கையின் முதிர்ச்சியால் தரிசிக்கும் ஒன்று. இங்கே ருசி என்பது ஒரு படிமமே.

இந்தக்கதை உள்ளே விடுவிக்க முடியாத சிலந்தி வலைபோல் விரிந்துகொண்டே செல்கிறது. அற்புதம் ஜெ.

அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54
அடுத்த கட்டுரைமையநிலப்பயணம் கடிதங்கள்