மையநிலப் பயணம் – 6

ma6

 

பயணங்களில் நீண்டநேரம் காரில் அமர்ந்திருப்பது எப்போதும் சோர்வும் சலிப்பும் அளிப்பது. கார் ஒரு சிறிய புட்டி. அதற்குள் உலகம் இல்லை. உரையாடல்கள் வழியாக வெளியே விரியவேண்டும். அதோடு விழிகள் வழியாக அந்நிலத்தை நோக்கி விரியவேண்டும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளவேண்டும். நிலக்காட்சிகளை காருக்குள் அமர்ந்து நோக்கிச் செல்கையில் ஒரு மோனநிலை கூடுகிறது. பலர் உடனிருந்தாலும் தனிமை.

இத்தகைய நோக்குகள் ஒரு குறுக்குவெட்டென நாம் செல்லும் நாட்டின் சித்திரத்தை நமக்கு அளிக்கின்றன. பலசமயம் நாம் நோக்கும்போது எந்த அர்த்தமும் எழுவதில்லை. வெறுமே விழிவெறித்து அமர்ந்திருப்போம். எண்ணித்தொகுக்கும்போது காட்சிகள் விரிவடையும். நினைவில் எழுகையில் நாம் எண்ணியிராதவையும் எழும். நான் இந்தியநிலப்பரப்பில் சென்ற முப்பது ஆண்டுகளாக சுற்றிக்கொண்டிருக்கிறேன். இக்காட்சிகள் வெண்முரசில் எப்படியெல்லாம் பயின்று வந்துள்ளன என்பதை எப்போதாவது உணர்கையில் இவை எங்கே சென்று நிலைகொள்கின்றன என்னும் பெருவியப்பே எழுகிறது.

 

ma7

 

மத்தியப்பிரதேசத்தின் விரிந்த சமநிலம் அறுவடைக்குப்பின் கன்னங்கரிய மண் அலைகளாக விரிந்து கிடந்தது. பல இடங்களில் சோளம், கோதுமை தாள்களை அள்ளி திரட்டிக்கொண்டிருந்தார்கள். அரிதாகவே மரங்கள். அவையும் உயர்ந்த மரங்கள் அல்ல. கற்பாளங்களாலோ கிராமங்களில் செய்யப்பட்ட நயமற்ற ஓடுகளாலோ கூரையிடப்பட்ட தாழ்வான வீடுகள். பல இல்லங்களில் நிமிர்ந்தே நிற்க முடியாது. இங்கே திறந்த பெருநிலத்தில் காற்றின் வேகம் அதிகம் என்பதனால் கூரைகளில் பாறாங்கற்களைத் தூக்கி வைப்பது அதிகம். வீடுகள் எடைசுமந்து சோர்ந்து நின்றிருந்தன

சாலைச்சந்திப்புகளில் மிகப்பெரும்பாலும் தகரக்கூரைக் கொட்டகைகளில் சப்பாத்தியும் ஜாங்கிரியும் விற்கும் கடைகள். மிக அரிதாகவே நம்மூர் ‘ஃபேன்ஸி’ கடைகளை பார்க்கமுடியும். இடைநிலை நகரங்களில் மட்டும்தான் செருப்பு, துணி முதலியவை விற்கும் கடைகள். செல்பேசி சீர்செய்யும் கடைகளோ ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளோ நகரங்களில் மட்டும்தான். ஆச்சரியம் என்னவென்றால் அத்தனை விரிந்த வயல்வெளி இருந்தாலும் பூச்சிமருந்து உரம் விற்கும் கடைகளும் குறைவே.

 

ma1

அடிக்கும் வண்ணங்களில் சேலை அணிந்து முக்காடாக முந்தானையை போட்டுக்கொண்ட பெண்கள். பீடா மென்று துப்பும் ஆண்கள். ஆடைகள் பெரும்பாலும் மிகையான சரிகைவேலைப்பாடு கொண்டவை. எங்கும் பச்சைவாழைப்பழம் மட்டுமே கிடைக்கும். இங்கே உணவு என்பது ஒட்டுமொத்தமாகவே நாலைந்து வகையறாதான். நகரங்களில் தென்னக உணவு மோகம் நிறைந்துள்ளது. மசால்தோசை, ஊத்தப்பம் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் எங்கள் பயணத்தில் எங்குமே ஒரு திரையரங்கு கூட கண்ணில் படவில்லை. இந்தூர் போன்ற நகரங்களிலேயே திரையரங்குகள் உள்ளன. அவற்றை நாங்கள் பார்க்கவில்லை, அந்நகரங்களில் நாங்கள் இரவு தங்கியதுடன் சரி. சினிமா போஸ்டர்களும் தென்படவில்லை. ஆனால் எங்கும் தொலைக்காட்சியில் சினிமா ஓடிக்கொண்டே இருந்தது. பொது இடங்களில் செல்பேசியில் பேசிக்கொண்டிருப்பவர்களும் மிகமிக அரிது. கிராமப்புறத்தில் செல்போன் சென்று சேரவில்லையோ என ஐயம் எழுந்தது. ஆனால் அத்தனை இடங்களிலும் ஜியோ தொடர்பு கிடைத்தது.

ma3

மத்தியப்பிரதேசம் இந்தியாவின் மிகப்பிற்பட்ட மாநிலங்களில் ஒன்று. இதன் பிரம்மாண்டமே இதற்கு எதிரியாக இருந்தது. 2000 த்தில் சட்டீஸ்கர் மாநிலம் மத்தியப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதன்பின்னரே ஓரளவேனும் நிர்வாகப்பரவலாக்கம் ஆரம்பித்தது. மிகமிக மெல்ல இங்கே இப்போதுதான் நவீனமயமாக்கம் ஆரம்பம் ஆகிறது. 1950களில் தமிழகத்தில் நிகழ்ந்த கல்விப்பரவலாக்கம், தொழில்மயமாக்கம், பாசனவசதி, போக்குவரத்து வசதி ஆகியவை மத்தியப்பிரதேசத்தில் தொடங்கி இருபதாண்டுகள் மட்டுமே ஆகின்றன எனலாம்.

நான் 1981ல் முதல்முறையாக மத்தியப்பிரதேசத்திற்குள் நுழைந்தேன். அப்போது இது குண்டும் குழியுமான சாலைகள் மட்டுமே கொண்ட, நூறாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் அப்படியே உறைந்து நின்றுவிட்டிருந்த ஒரு நிலம்.1986ல் அதே நிலைதான். 2008ல் இந்தியப்பயணம் வந்தபோதும் எந்த மாற்றமும் இல்லை. அன்று புலம்பி எழுதியிருந்ததை நினைவுகூர்கிறேன்.

2010ல் வந்தபோது சில மெல்லிய மாற்றங்களை காணமுடிந்தது. இப்போது மெல்ல அம்மாற்றங்கள் கண்ணுக்குப் படுகின்றன. முதன்மையானது பல இடங்களில் கண்ணில்பட்ட விரிவான சொட்டுநீர்ப் பாசன வேளாண்மை. ஆனால் இப்போதுகூட பொதுப்போக்குவரத்து பரிதாபகரமாகவே உள்ளது மொத்தப்பயணத்திலும் பேருந்துகள் ஓரிருதடவை மட்டுமே கண்ணுக்குப் பட்டன.

ma5

பொதுவாகக் கண்ணுக்குப் பட்ட இன்னொன்று, கல்விச்சூழல். இங்கே சமீப ஆண்டுகளில் அரசுப்பள்ளிகள் மிகச்சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது. சிறிய ஊர்களில் கூட ஆங்கில ஊடகப் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. சீருடை அணிந்த பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை, பள்ளிகளின் விளம்பரங்களை, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிமையங்களின் விளம்பரங்களை சிறு நகர்களில்கூட காணமுடிந்தது.

இப்போது கான்கிரீட் கட்டிடங்கள் கிராமங்களில் உருவாகி வருகின்றன. மேல்நிலை குடிநீர்த்தொட்டிகள் கண்ணுக்குப் படுகின்றன. ஊர்கள் மின்சாரவசதி செய்யப்பட்டுள்ளன. வறுமைநிலை மாறிவருவதைக் காணமுடிகிறது. ஆனால் அது வாழ்க்கைத்தரமாக வெளிப்பட இன்னும் ஒரு தலைமுறைக்காலம் ஆகும்.

 

_MG_4112

மத்தியப்பிரதேசத்தின் தேக்கநிலைக்கு பல ஆண்டுக்காலம் அம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸையே முக்கியமாக குற்றம்சாட்டவேண்டும். இந்திய சுதந்திரத்திற்குப்பின் நிலப்பிரபுக்களே காங்கிரஸை கைப்பற்றிக்கொண்டார்கள். அவர்களே வடமாநிலங்களை அடக்கிஆண்டனர். எதுவுமே மாறவில்லை. எந்த வளர்ச்சியும் கீழ்ப்படிநிலை வரை சென்று சேராமல் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். அர்ஜுன்சிங்கும் மாதவராவ் சிந்தியாவும் ஜனநாயக அரசியல்வாதிகள் அல்ல, ஒருவகை அரசர்கள். மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்பது உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியாது.

ஆந்திரமும் இப்படித்தான் இருந்தது. என்.டி.ராமராவ்தான் ஆந்திரத்தின் ரட்சகன் என்றால் மிகையல்ல. இன்று நடிகர் நாடாளலாமா என கேட்பவர்கள் ஆந்திரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து மீட்டவர் நடிகரே என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். இதைப்பார்க்கையில்தான் தமிழகத்தை அனைத்துத் தளங்களிலும் முன்னெடுத்த கு.காமராஜும் அவருடைய தளபதிகளான ஆர்.வெங்கட்ராமனும், சி.சுப்ரமணியமும், நெ.து.சுந்தரவடிவேலும், கக்கனும் எவ்வளவுபெரிய கொடை நமக்கு என்பது தெரியவருகிறது.

சென்ற பத்தாண்டுகளாகவே பாரதிய ஜனதாவின் சிவராஜ் சௌகான் மத்தியப்பிரதேசத்தின் முதல்வர். அடுத்த ஆண்டு வரும் தேர்தலிலும் அவரே வெல்வார் என்கிறார்கள். அது அவருடைய தனிப்பட்ட சாதனை, பாரதிய ஜனதாவின் சாதனை அல்ல. ஏனென்றால் மத்தியப்பிரதேச வரலாற்றிலேயே படு கேவலமான ஆட்சியை அளித்த உமாபாரதி பாரதிய ஜனதாவின் முதல்வர்தான். பொதுவாகப் பேசியபோது தெரிந்த சித்திரம், சௌகான் மிக எளியவர், அணுகத்தக்கவர் என்பது ஒன்று. மேல்மட்ட ஊழல் பெரும்பாலும் இல்லை என்பது இன்னொன்று. வளர்ச்சித்திட்டங்கள் உள்ளன, ஆனால் மெல்ல நிகழ்கின்றன

 

sivaraj

படுமோசமாக இருப்பது சுவச் பாரத் என்னும் தூய்மைத் திட்டம். இந்திய நகரங்கள் ஏன் தூய்மையாக இல்லை என்பதைப்பற்றிய எந்த ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை. குப்பைகளை அகற்றவோ அழிக்கவோ எந்த அறிவியல் முறைமையும் காணக்கிடைக்கவில்லை. சுவச் பாரத் திட்டத்தால் நகரின் மையப்பகுதி கொஞ்சம் சுத்தமாகிறது. அத்தனை குப்பையும் புறநகர்களில் குவிகிறது.

சௌசாத் யோகினி ஆலயத்தை உச்சிப்பொழுதில் சென்றடைந்தோம். ஜபல்பூர் அருகே உள்ள இந்த ஆலயத்திற்கு நான் முப்பதாண்டுகளுக்கு முன்னர் அலைந்துதிரிந்தபோது வந்திருக்கிறேன். இந்த ஆலயத்தின் சித்திரம் வெண்முரசில் பலவகைகளில் வருவதை உணர்கிறேன். துர்க்கையின் 64 வடிவங்களை இங்கே காணலாம். இந்த ஆலயத்திற்கு இப்பெயர் வந்தது இதனால்தான்

துல்லியமான சக்கரவடிவக்கோயில் இது. மையக்கருவறையைச் சுற்றி வட்டவடிவமான பிரகாரம். அதை நோக்கியபடி 64 கருவறைகள். ஒவ்வொன்றிலும் ஐந்தடி உயரமுள்ள துர்க்கைச் சிலைகள். ஒவ்வொரு தேவியும் ஒவ்வொரு தோற்றம். இந்த சிலைகளில் சப்தமாதாக்களாக அமைந்துள்ள அன்னையர் தவிர எவரையுமே தென்னக ஆலயங்களில் காணமுடியாது. வெவ்வேறு முகங்கள். அருளல்,முனிதல்,கனிதல், ஊழ்கம், யோகம் என. ஒவ்வொரு கருவறையாக நின்று நோக்கியபடிச் செல்வது ஒரு கனவுநடை. அத்தனை முகமும் ஒன்றெனச் சேர்ந்து உருவாகும் ஒரு முகம் உளம்திரண்டால் அந்த தரிசனமே யோகமென்றாகிறது.

 

_MG_4092

சௌசாத் யோகினி ஆலயம் பத்தாம் நூற்றாண்டில் காலசூரி வம்சத்து அரசர்களால் கட்டப்பட்டது. ஷாஜகான் காலகட்டத்தில் முகலாய படையெடுப்பாளர்களால் இடித்து அழிக்கப்பட்டது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தொல்லியல்துறையால் மீட்டு ஓரளவுக்குக் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அத்தனை சிலைகளுமே உடைக்கப்பட்டவைதான். அருகே மீட்கவேமுடியாதபடி இன்னொரு ஆலயம் இடிந்துள்ளது. அதன் சிலைகளையும் உள்ளே வைத்திருக்கிறார்கள்

மைய ஆலயம் சிவனும் பார்வதியும் விடைமேல் அமர்ந்த தோற்றத்தில் கோயில்கொண்டது. மையச்சிலையாக இப்படி ஓர் அழகுரு அமைதல் அரிது. விடை நின்றுகொண்டிருக்கிறது. சிவன் திரும்பி பார்வதியை காதலுடன் நோக்குகிறார். தேவி மிகச்சிறிய பெண். நெடுங்காலம் இச்சிலை ஆலயவழிபாட்டில் இருந்திருக்கலாம். அபிஷேகம் முதலியவற்றால் நன்றாகத் தேய்ந்துபோயிருக்கிறது.

செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. அதன் கற்கள் ஒளியில் பொன்னிறம் கொள்பவை. கஜுராகோ பாணியிலான நுட்பமான சிற்பச்செறிவு கொண்ட கூம்புக்கோபுரமும் அழகிய தூண்களுக்குமேல் கவிழ்தாமரை வடிவக் கூரைகொண்ட முகமண்டபமும் கொண்டது. மொத்த ஆலயமும் ஒரு சிறு குன்றுமேல் உள்ளது நூறுபடிகளை ஏறி அங்கே சென்று சேரவேண்டும்.

 

_MG_4108

கால்கள் கொப்பளிக்க கல்தரையில் சுற்றிவந்து ஆலயத்தைப் பார்த்துவிட்டு கிளம்பினோம். சாக்தம் தனிமதமாக நெடுங்காலம் நின்றுள்ளது. ஆனால் சௌசாத் யோகினி ஆலயம் உருவான பத்தாம் நூற்றாண்டிலேயே அது சைவத்திற்குள் வந்துவிட்டது. இந்த இணைப்பு ஐந்தாம்நூற்றாண்டில் குப்தர் காலகட்டத்தில் தொடங்கியது என்கிறார்கள்.

சாக்தம் ஒரு மாபெரும் தொகுப்பு. நாடெங்கும் தொல்குடிகள் வழிபட்ட நூற்றுக்கணக்கான அன்னையர் ஒற்றைத்தெய்வமாகத் திரண்டனர். கவிதை அவ்வாறுதான் உருவாகிறது. பல்லாயிரம் நாட்டார்பாடல்களின் அழகியல்சாரம் அது. ஆகவே நல்ல கவிதை பல்லாயிரம் நாட்டார்கவிதைகளாக முகம்பெருகும் ஆற்றல்கொண்டது. இவை அன்னை எனும் கவிதையின் பொருள்பெருக்கு.

முந்தைய கட்டுரைஅயனிப்புளிக்கறி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47