கடைசிமுகம் -கடிதம்

yakshi

கடைசி முகம் – சிறுகதை

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கடைசி முகம் கதை குறித்த நந்தகுமாரின் கடிதம்[ கடைசி முகம்- கடிதம் ]படித்து பின் அக்கதையைப் படித்தபின் நேற்று பலவித எண்ணங்களில் இருந்தேன்.  இந்த கடிதம் உங்களுக்கு எழுதும் போதே எழுதாதே என்றொரு எண்ணமும் – ஒரு அச்சமும்.  கனவில் இருக்கும் வரை அது அதன் மதிப்பிழப்பதில்லை.  கனவை நனவிற்கு கொண்டு வந்து நோக்கும் போது தர்க்கம் அதை மதிப்பற்றதாக, அர்த்தமற்றதாக, நீர்த்துப்போனதாக ஆக்குகிறது.  போதையில் இருந்த போது அதை மகத்தானது என்று கருதி அதன் பொழுதைக் கடந்தபின் முட்டாள்தனம் என்று புலம்புவோர் கண்டுள்ளேன்.  கனவு போன்ற எந்த ஒரு கதையையும் அதன் கனவுக்குள் இறங்கி கண்டு தோன்றும் உணர்வை அவ்வாறே வைக்காமல் அதை நனவின் தர்க்கங்களைக் கொண்டு நோக்கி கருதியவற்றை முன்வைப்பது அதற்கு செய்யும் அநீதி என்று எண்ணுகிறேன்.  என்றாலும் அது நேரக்கூடாது என்கிற கவனத்துடன் கொஞ்சம் எழுத முற்படுகிறேன்.  சமவெளி அறிந்த ஒருவன் ஒரு பள்ளத்தின் பரப்பு கண்டு இறங்கி நடந்த பின், இப்படி ஒரு பள்ளத்தின் பரப்பு இருக்கும்போது இதன் எதிர் போலும் உயர் மலைகள் -சமவெளி நின்று நோக்க பிரமிக்கதக்க உயரங்கள் இருக்கக் கூடும் என்று ஊகித்து அறியமுடிவது போல், கனவினை பொய் என்று ஆக்கும் நனவு இருக்கும் போது கனவின் எதிர்போன்ற உச்சியாய் நனவினை பொய் என்று ஆக்கும் ஒரு நிஜம் இருக்கக் கூடும் – கைலையங்கிரி போலும் ஓர் சிகரம், கனவும் நனவும் கடந்த ஓர் நிஜம், உடலுக்குள் கனவு உண்டாக்கிய உலகு உடலின் வெளியே நனவு தந்த உலகு இவை கடந்து கனவு-நனவு உடல்-உலகு என்பதற்கப்பால் ஓர் விரிவெல்லை காணது பிறிதொன்று இருக்கக் கூடும் என்ற ஊக வாணிகத்தில் முதலீடு செய்ய சாதகமான சாத்தியக்கூறுகள் காட்டும் முக்கியத்துவம் கனவுகளுக்கு உண்டு.
பெண்களிடம் எந்த சென்டிமென்டும் எப்போதும் இல்லாத உடல் மட்டுமே என்று, காமம் ஒன்றே நோக்கு என்று கொண்டவன் சுனைக்காவில் யக்ஷியிடம் தப்பிவிட முடியும்.  மரணபயம் ஒன்றே போதும் ஒரு கூழாங்கல் கூட தேவையில்லை.  மிக முதிர்ந்த வயதிலும் காம இச்சை தவிர்த்து பெண்களை வேறு ஒருவிதத்திலும் காணமுடியாத ஒரு சிலர் மிகுந்த மரணபயம் கொண்டவர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.  உண்மையிலே ஒரு பெண்ணிடம் காதல் கொண்டால் மிக உயர்ந்த கண்ணியத்தை அதுவே கொண்டுவருகிறது, அவளது ஏற்பும் விருப்பும் வரவேற்பும் இல்லாமல் மனத்தாலும் காமம் சாத்தியமில்லை, சுயமைதுனம் என்பதெல்லாம்  கூட சாத்தியமே இல்லை அவளை அத்தனை உயர்வில் காண்கிறது மனது.  மரணபயத்தைக் கூட ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.  ஆனால் இது உண்மையிலேயே உண்மையாக காதலிப்பவர் என்றால் மட்டுமே, “இது வரைக்கும் ஏழு முடிச்சிருக்கேன் இப்ப ஓட்டிகிட்டு இருக்கிறது எட்டாவது” என்று சொல்லி அதை காதல் என்று கூறிக்கொள்ளும் காமுகர்களுக்கு அல்ல.

“தாய் மீது அதிகமான பாசம் கொண்ட எவரும் பெண்களிடமிருந்து தப்பமுடியாது” யக்ஷி சொல்கிறாள்.  தாய் மீது அறவே பாசம் இல்லாதவன் தப்பமுடியும்.  தாயின் பாசத்தை குறையே இல்லாமல் பெற்றுவிட்டவனும் தப்பமுடியும்.  அதிக பாசமும் கொண்டு முழுமையாக அதை பெற்று நிறைவடையாமலும் இருப்பவர் தப்புவது கடினம்.  என் நண்பன் ஒருவன் தற்போது துபாயில் வசிக்கிறான்.  அவன் தன் மனைவியை வியந்து புகழ்ந்து அடிக்கடி கூறுவான் இவ்வளவு அன்பான ஒரு பெண் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என் மனைவி எனக்கு கிடைத்த வரம் என்று.  உண்மையில் அச்சகோதரி அப்படிப்பட்ட ஒரு அன்பு கொண்ட பேரன்னை போலும் ஒரு பெண்தான்.  அவன் சிறுவனாக இருந்தபோது அவன் தந்தை சாலை விபத்தில் மரணம் அடைந்தார் சில நாட்களிலேயே அவனது அம்மா நெருப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  உறவினர் ஒருவரால் அவன் வளர்க்கப்பட்டான்.  அம்மாவை நினைத்து பலகாலம் ஏங்கியவன்.  இன்று அவன் மனைவியை ஒரு வரம் என்று அவன் எண்ணினாலும் நான் அதை வரம் என்பதை விட பிரபஞ்ச அன்னை ஏங்கிய ஒரு குழந்தைக்கு செய்த இழப்பீடு என்று எண்ணிக்கொள்வேன், அவனிடம் கூற மாட்டேன்.  அன்னையை நோக்கி கை நீட்டும் சிறு குழந்தை போலும் உள்ளே ஓர் ஏக்கம் எஞ்சி நின்றால் யக்ஷிடம் தோற்கத்தான் வேண்டியிருக்கும்.  என்னுடைய நிலை வேறு அம்மா 24 மணி நேரமும் பேரன்பு கொண்டவளாக அருகேயே இருக்கிறாள்.  திடீரென்று நள்ளிரவில் தோன்றும் அம்மா இறந்து விட்டால் என்ன செய்வாய்? ஒன்றும் கவலை இல்லை அம்மா இறக்கும்போது நான் அவளாகி இருப்பேன், நான் அம்மாதான் என்று (இவ்வெண்ணம் என்னிடம் தெளிவான வார்த்தைகள் அற்று இருந்தது, வெண்முரசு எனக்கு சொற்கொடை வழங்கியது).  ஏங்குவதற்கு அவசியம் துளியும் இல்லை எனக்கு.

பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு யக்ஷிகளை அடக்கி விட்டதாக நான் கருதவில்லை ஆண்களிடம் எந்த சென்டிமென்டும் இல்லாத பெண் யக்ஷிகள் விஷ்ணுக்களையும் பெண்களிடம் எந்த சென்டிமென்டும் இல்லாத ஆண் யக்ஷிகள் லட்சுமிகளையும் பலி கொண்டவாறேதான் இருக்கிறார்கள்.  பரிதாபம் என்னவென்றால் பலிகொள்ளப்படுவோரில் பெரும்பாலோர் காதலென்றும் அன்பென்றும் உடல் இச்சைகளுக்கும் அப்பால் உயர்ந்தவற்றை காணும் நோக்கு உள்ளவர்கள்தான்.

அன்புடன்
விக்ரம்
கோவை

முந்தைய கட்டுரைகுழந்தையிலக்கியம் – தொகுப்பு
அடுத்த கட்டுரைமையநிலப் பயணம் – 4