வெளியே செல்லும் வழியில்…கடிதம்

Barabas

வெளியே செல்லும் வழி – 1
வெளியே செல்லும் வழி– 2

பழுப்பேறியிருந்தன நகங்கள். இன்னும் சவப்பெட்டிக்குள் வைத்திருக்கவில்லை. நீலம் கன்றியிருந்தது உடல் முழுதும். விலா எலும்புகள் துருத்தி தென்னியிருந்தன. மேல் வயிற்றில் கிழிந்திருந்த சதை வழி ஊன் வழிந்து ஈக்கள் அரிக்க செம்மை நெளிந்தது. பொக்கை விழுந்த கன்னங்கள், பற்கள் உடைந்திருக்கக் கூடும். கோனியிருந்தது வாய். அவனது ஒளிரும் கண்கள் இன்னும் அத்துவானத்தை நோக்கியிருந்தது. எந்த சமிஞ்சையும் இல்லை. விண்மீன்களே இல்லாத வெட்ட வெளி, வெம்மை தகிக்க அந்த இரவின் நிசப்தத்தில் கூகையின் குழறல், இருள் கிழியும் சப்தத்தில், இறுதி வாதையின் துடிதுடிப்பில் அந்த இளைஞன் இன்னும் முணங்கிக் கொண்டிருப்பதாய் இருந்தது. இல்லை வெறித்திருந்த கண்களில் எந்த பாவமுமில்லை. அவன் இறந்துதான் விட்டான். ஆம்! வெறும் மனிதன். வலிகளின் பால் நம்பிக்கைகளைக் கட்டவிழ்த்ததில் பிரேதமாகக் கிடக்கிறான். அதிசயங்களில்லை. எந்த மரணக்கூச்சலுமில்லை. கல்லெறிந்தவர்களாய் என்றும் களித்திருக்கிறோம். அந்த அகாலம் சுருளும் மலையுச்சியில் அவர்கள் மட்டும் இருந்தனர் அவனுடன். அவனது உப்புக்கண்ணி பிளந்த பாதங்களை தாங்கியிருந்திருக்கிறாள் ஒருத்தி. விஷ நுனிகளால் குத்திட்ட நெற்றி வழி உறைந்த ரத்தத் தீற்றல்களைத் துடைக்க முனைகிறாள் ஒருத்தி. ஆனால் அவன்தான் இறந்து விட்டானே, அப்பங்கள் மட்டும் இறைந்து கிடக்கும் மணல் வெளியில் தன் தனிமையுடன்.

எலும்புகள் உடைந்த கால்களின் நிணத்தில் இன்னும் துரு மிச்சமிருக்கிறது. வழிக்க வழிக்க நிற்காது குருதி. தங்கள் சிலுவைகளைத் தூக்கி சுமக்க அங்கு இனி யாரும் வரப்போவதில்லை. வெறும் மனிதப் பிரேதமாக அவனது உடல். என்னுள் சகிக்க வொண்ணாது உமிழ்கிறது கசப்பு, விழுங்குகிறேன். ஒவ்வொரு முறையும் நம்ப முயற்சிக்கிறேன். இன்றிலிருந்து இரண்டாம் நாள் என்று. ஆனால் பலி கொண்ட சிலுவையில் ஊறி இருந்த ரத்தத் துணுக்குகளை ஒவ்வோர் ஜெபத்திலும் மீட்கிறேன். அன்பிலிருந்து அல்ல, தேவைகளிலிருந்தே அவன் துளிர்ப்பதை. என் அழுக்கு மூட்டைகள் சேர்ந்த வண்ணம் உள்ளன. அவனது சாக்கிடங்கில் நொதிக்க நொதிக்க எறிவதில் குற்ற உணர்வில்லை. அன்பிலிருந்து தொடங்குகையில், ஜோசிமாக் கிழவன் பிணம் புழுத்துக் கிடக்கிறது. அங்கு அல்யோசி உழல்வது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஏன்? ரக்கத்தீனாய் அவனை சபிக்கிறேன். நீயும் கரமசோவ் குருதிதான் என்று பரிகசிக்கிறேன். ஆனால், ஆனால், ஒரு நலிந்தவனாய் அவன் திரும்பி வருகையில், உள்ளூற பயம் கொண்டேன். திரும்பவும் நம்பிக்கைகளையும், அப்பத்திற்காக மட்டுமல்ல என்று அவன் பின் செல்ல. ஆனால் ஆன்மத் தேடலில், நான் பாதிரியின் பக்கம் சென்று விடுகிறேன். அந்த மீட்பன் கொடுத்த முத்தத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்பிக்கைகளை நசுக்குகிறேன். திரும்பவும் கல்லெறியும் கூட்டத்தில் சென்று விடத் துணிகிறேன்.

அங்குதான் மானுவேல் சொல்கிறான். வெளியே வா என்று. வெளியே செல்லும் வழியில், வீரியன் குட்டிகளாய் மொலுமொலுக்கிறது என் சொந்த அகம். சூழ் நிலைகளுக்கேற்றவாறு நான் தாவிச் செல்லும் வழிகள் அடைப்பட்டு கிடந்தது. அந்த ஒரு வழிப்பாதையில் செல்ல இன்னும் துணியவில்லை. ஆனால் அது நான் செல்ல வேண்டிய வழிதான். என்னுடைய வழியில் ரோகோசின் மிஷ்கினிடம் பெற்றுக் கொள்ளும் சிலுவையைத் தான் நானும் பெற முயற்சிக்கிறேன். அந்தப் பிணமாய்க் கிடக்கும் மனித குமாரனையும் கூட சுமப்பதுதான் என்னால் இயன்றது போல.

என்னைச் சுற்றிக் குழுமுகிறது

உன் நெடி

உன் காய்ச்சல் படிந்த வெம்மை உள்ளங்கைகளுக்குள்

என் நிர்வாணத்தை அடகு வைத்திருக்கிறேன்.

தோள்களிலிருந்து நழுவுகிறது உன் சிலுவை

அழுந்தப் பற்றுகையில்

உன் கைகளின் பிரத்யேகமான மொழியால் என்னை அதற்றுகிறாய்

உன்னிலிருந்து தாவித் தப்பிக்க முயல்கிறேன்

சலனங்களின் படிகளில்,

நிரந்தரமாய் படிகின்றன உன் கடலின் அலை நுரைகள்

பாசி பீடிக்க வழுகுகிறது

ஒவ்வொரு அலைமீறல்களிலும்

உன் துடுப்புகள் உயர்ந்து என்னை நோக்கி வருகின்றது

உன் உடலை நான் பார்த்திருக்கவில்லை

உன் முகம் எனக்கு பரீட்சயமுமில்லை

ஆனால் உன் அரூபக்கைகளின் வலுவை எனக்குத் தெரியும்

என் ஸ்பரிசப் பொந்துகளில் அதை சேமிக்கிறேன்

விராட ரூபமெடுக்கும் அதன் முளைகளை

வருடி வருடி பெரிதாக்குகிறேன்.

என்று என் ஆழம் பீறிடும் குழிகளை

அதில் நான் பார்க்கிறேனோ,

அன்று உன்னைப் போலவே நானும் நம்பியிருக்கிறேன்

தயை கூறு!

இன்னும் தெளிவடைந்திருக்கவில்லை. ஒரு ஆழமான பிரார்த்தனையை நான் இன்னும் நம்ப முயலவில்லை. அங்கு நான் அந்த ரத்தம் மிணுங்கும் கைகளை கண்ணாடியின் வழிக் கண்டு அழும் கிழவனிடம் செல்கிறேன். அவன் இன்னும் இன்னும் என்று வோட்காவைக் கேட்கிறான். அவன் மண்ணில் இருந்தான். அழுத கண்களுடன் கப்ரீயேலுடன் செல்லும் கிழவனுக்கு விண்ணிலுமில்லை அது என்பது தெரிந்திருக்குமா? ஆனால் பிரார்த்தனைகளை நான் கேட்கிறேன், எங்கு எங்கு என்று! விடுமாடன் கோவில் வாசலில் தன், மங்கலாய்டு பிள்ளையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முட்டுக்கன்னி போட்டு அழுது கொண்டிருந்த அம்மையிடம், சீழ் வழியும் கால்களுடன் கிறுஸ்து ராஜா கோவில் வாசலில் பிச்சையெடுக்கும் கிழவியிடம், நாகராஜா கோவிலில், நீர்க்கண்களுடன் சிமிட்ட சிமிட்ட கை கூப்பும் பெண் குழந்தையிடம் என்று. ஆனால் என்னை நானே ஏமாற்றுகிறேனோ என்று அச்சம் கொண்டேன். இந்த தொடர் வதைப்படலத்தில் என் எளிய பிரார்த்தனைகளைத் தவிர வேறென்ன நான் கேட்டிட முடியும். மகத்தானதை நான் வெறுக்க முனையும் காலக்கட்டத்தில், பாலையில் தனித்திருந்த அந்த இளைஞனைக் கூர்கிறேன். அவனது பலவீனங்களை மட்டும் பெரிதாக்கிக் கொண்டே போகிறேன். ஆனால் அது அல்ல அவன்.

ஏன்! அந்த பலவீனங்களை வைத்து அவனை உருவகித்து எளிய மானுடனாக்க முயல்கிறேனா? இல்லை. எளிய மானுடனின் ஆன்ம மீட்பை அன்பால் மட்டுமே பெற முடியும் என்று என் மூளையை பிதுக்கி உள் நுழைகிறான் அவன். என் ஆணவங்களை சமர்பிக்க சொல்கிறான். கடையேனாய் இரு என்கிறான். பித்தேறுகிறது. தேவாயலங்களில் சிலுவைகளை மட்டுமே என்னால் காண முடிகிறது. அவனது நொய்ந்த முகத்தை நான் வெறுக்கிறேன் சில நேரங்களில். ஒரு கடவுள் எப்படி இப்படி அழுது வடிவதாய் இருக்கலாம். பாவங்களின் நுகத்தடியில் அவனது தோள் பட்டை விலகியிருப்பதைப் போல மனம் பதைக்கிறது. திரும்பத் திரும்ப அவனை பரிதாபகரமான ஜீவனாய் அணுகும் என்னுடைய சொந்த தன்னுணர்வை, இரவாகும் போது வெறுக்க ஆரம்பிக்கிறேன். அப்பொழுது அதை நான் பார்த்தேன். தேவ மைந்தனாய் அவன் உருமாறுவதை. வழிதவறிய ஆட்டுக்குட்டியை அவன் அணைத்திருக்கும் ஓவியம் என்னுள் எழுகிறது.

நான் என் வழிதவறிய, சிதறிப் போன, மன்றாடியத் தருணங்களைக் கோர்க்கிறேன். என்னுடைய பிரார்த்தனைகளை அதனுள் நான் செலுத்துகிறேன். எளிய பிரார்த்தனைகள் தான். ஆனால் அவன் இருக்கிறான் ஒரு ஆயனாக. ஆனால் இது ஒரு ஊசலாட்டம் போல இரு பக்கமும் செல்கிறது. தேவனாகவும், மனிதனாகவும் மாறி மாறிச் சுழலும் பெண்டுலம் போல, என்னிடம் முகங்கள் காட்டுகிறான். மீண்டும் சபலங்களின் படிகளில் வழுகுகையிலெல்லாம் பரிதவிக்கிறது.

அப்பொழுதுதான் அப்பாவின் டைரியின் முதல் பக்கத்தை வாசிக்கிறேன், மாட்டுத்தொழுவத்தில் பிறந்தாலும் மன்னர்களின் மணி முடிகள் அவன் காலடியில் கிடந்தது. எளிமையினாலும், உண்மையினாலும், அன்பினாலும் என்று. ஆம்! அதைத்தான் நாம் பயக்கிறோம். எளிய அன்பு எல்லாவற்றையும் விழுங்கி விடுகிறது. ஆம்! ஆம்! திரும்பத் திரும்ப “இருளில்லையேல் ஒளியில்லை, ஆனால் அது இருளுக்கு என்றுமே புரிவதில்லை”.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22
அடுத்த கட்டுரைதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு