இருவர் – கடிதங்கள்

 

1

 

இருவர்

அன்புள்ள ஜெ,

 

“இருவர்” கட்டுரை http://www.jeyamohan.in/101328#.WZISQ62ZPdQ படித்து மிகவும் ரசித்தேன். தொண்ணூறு வயதுக்காரர் பேத்தியின் மகனைக் பார்க்க செல்கிறார். கூட சண்டை போட மாமி வேறு. ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று நினைத்துக் கொண்டேன்.

 

இந்த பகுதி படித்ததும் குபீர் சிரிப்பு.

 

மாமா மாமியுடன் குடும்பவிஷயமாக உரையாடுவது கேட்டது. “ஒரு குடும்பப் பொண்ணு மாதிரியா இருக்கா? கையிலே கரியால என்னமோ வரைஞ்சுகிட்டு…எப்ப பார் டான்ஸ் ஆடிக்கிட்டு… இந்தபார் நீ அவள சப்போர்ட் பண்ணக்கூடாது சொல்லிட்டேன். எனக்கு அவள சுத்தமா புடிக்கலை” என்றார் மாமா.

 

நான் எண்பது வரை இருந்தால் என்ன செய்வேன் என்று நினைத்துக் கொண்டேன். எது இருக்கிறதோ இல்லையோ, எனக்கு வெண்முரசின் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் துணையிருக்கும் என்று நிச்சயமாக கூற முடியும்.

 

என் வணக்கங்கள்

 

சிவா லட்சுமி

 

 

அன்புள்ள ஜெ

 

இருவர் ஓரு கிளாஸிக் . ஒன்றுமே நடக்கவில்லை, ஆனால் ஒரு உலகமே விரிகிறது. அந்த வயதான தம்பதிகளின் உறவு அத்தனை ஆண்டுகளில் எப்படிப் பழுத்துக் கனிந்து வந்திருக்கிறது என்பது அழகிய சித்திரமாக வந்துள்ளது. அந்த மாமியின் மென்மையான நக்கல் ‘இவா விமானத்திலேயும் எமெர்ஜென்ஸி எக்ஸிட் பக்கத்திலேதான் ஸீட் போடுவா” அவர் அவளை மக்கு என்றும் ‘அப்டியே இருந்துட்டா” என்றும் நினைப்பதிலும் உள்ள அபத்தம் என சிரிப்பதற்கு ஏகப்பட்டது. மாமா ஒருவகையில் ஜாக்ரதை என்றால் மாமி இன்னொரு வகையில் படு ஜாக்ரதை. அவர்களை நினைக்கையிலே புன்னகை வருகிறது. நன்றி ஜெ

 

எஸ்.ராமச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

அந்த எமர்ஜென்ஸி எக்ஸிட் முக்கியமான விஷயம். வாழ்க்கையில் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் எமெர்ஜென்ஸி எக்ஸிட் இருக்கா என்று பார்த்துவிடவேண்டும் என்பது மாமா சொல்லும் பாடம்

அந்த ஜோடிக்கு மனிதர்கள்மேல் உண்மையான அன்பு இருக்கிறது. ஆகவேதான் அனைவருக்கும் அவர்கள் மேல் உண்மையான அன்பு இருக்கிறது

கார்த்திக் .

முந்தைய கட்டுரைதன்னை அறியும் கலை -கடிதம்
அடுத்த கட்டுரைஇருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்