‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91

90. அலைசூடிய மணி

flowerசுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர் முருக்குமரத் தலையணைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு செல்வதை கண்டாள். சிம்ஹி அவளிடம் “அவர்கள் கதை கேட்கையில் துயில்வார்கள். பலமுறை கேட்ட கதைகள் என்பதனால் துயிலுக்குள்ளும் விறலி சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றாள்.

சிம்ஹியும் கோகிலமும் அவளை அறைநோக்கி இட்டுச்சென்றனர். பிற பெண்கள் கதை கேட்கச் சென்றனர். சவிதை “நான் எங்கே செல்ல? நாழிகைக்கு ஒருமுறை இவனுக்கு உணவூட்டவேண்டுமே? பந்தலுக்குப் பின்னால் அடுமனை ஓரமாக நின்றுதான் கதை கேட்கவேண்டும்” என்றாள். சிம்ஹி “சம்பவரை நீங்கள்தான் முன்னர் பலமுறை பார்த்திருக்கிறீர்களே, பிறகென்ன?” என்றாள். “பலமுறை பார்த்ததில்லை” என்று சுபாஷிணி சொன்னாள். அவர்கள் அவளை உள்ளே செல்லும்படி சொன்னார்கள்.

தரையில் இரண்டுஅடுக்குள்ள ஈச்சம்பாய் விரிக்கப்பட்டு மரவுரித் தலையணைகள் இரண்டு போடப்பட்டிருந்தன. சிறிய எரிகலத்தில் மட்டிப்பால் தூபம் புகைந்து அறைக்குள் மெல்லிய முகில்திரையை பரப்பியிருந்தது. “பாயில் அமர்ந்துகொள்” என்றபடி அவர்கள் கதவை மூடினார்கள். அவள் அப்போதுதான் தண்ணுமையின் ஒலியை கேட்டாள். பின்னர் முழவும் குழலும் இணைந்துகொண்டன. விறலி நாவிறைவியின் புகழை பாடலானாள்.

கதவு மெல்ல திறந்து சம்பவன் உள்ளே வந்தான். மூச்சுத்திணறுபவன்போல நின்றான். அவள் எழுந்து சுவரில் சாய்ந்து நின்றாள். அவன் பெருமூச்சுவிட்டபின் புன்னகைத்து “கடுமையான பணி… அடுமனைப்பணி ஓய்வதே இல்லை” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்றாள். அவன் அவள் குரலையும் புன்னகையையும் கண்டதும் எளிதாகி அருகே வந்தான். “இங்கே ஆசிரியர் இருந்தபோது அவரது கைகளால் உண்டு பழகியவர்கள். அவர் இல்லாத முதல் விருந்து இது. ஆகவே நானே செய்யவேண்டும் என்றார் விகிர்தர். என் கைச்சமையலை துப்பிவிட்டுப் போய்விடுவார்கள் என அஞ்சினேன். நல்லவேளை, அனைவருக்கும் பிடித்திருந்தது.” சுபாஷிணி “நீங்கள் அவரேதான்” என்றாள். அவன் மகிழ்ந்து “ஆம், அவரேதான். அவருடைய ஒரு துளி. ஒரு தொலைதூரப் பாவை. ஆனால் அவரேதான்” என்றான்.

பாயில் அமர்ந்துகொண்டு அவளிடம் “அமர்க!” என்றான். அவள் சற்று அப்பால் பாயின் ஓரமாக அமர்ந்தாள். “உண்மையை சொல்லப்போனால் உன் முகமே நினைவில் இல்லை. நீ என்னை விரும்புவதாக அந்தக் காவலர் சொன்னபோது எனக்கு அனல்தொட்டது போலிருந்தது. உன்னை அறிந்திருக்கிறேன் என்றும் தோன்றியது. எண்ணி எண்ணி நோக்கியும் முகம் தெளியவில்லை. ஆனால் உன் நீண்டகுழலை எங்கேயோ பார்த்திருந்தேன்.” சிரித்து “எங்கே என்று சொல்லவா? கனவில்” என்றான். அவள் புன்னகை செய்தாள்.

“நான் ஆசிரியரிடம்தான் சொன்னேன். அவர் நீ அவளை கரவுக்காட்டில் கண்டிருப்பாய். அவள் உன்னை விரும்புகிறாள் என்றால் சென்று அவளை பெண் கேள் என்றார். நான் எளிய அடுமனையாளன் என்றேன். அவளை இங்கே புகையிலும் கரியிலும் கொண்டுவந்து வாழவைப்பது முறையல்ல என்றபோது அவர் மூடா அவள் அன்னமிடும் தொழிலை விழைந்தே இங்கே வரவிருக்கிறாள் என்றார். என்னால் அதை நம்ப முடியவில்லை. அவரது ஆணைப்படியே என்னுடன் விகிர்தரும் சுந்தரரும் வர ஒப்புக்கொண்டார்கள்.”

சுபாஷிணி “சரியாகவே சொல்லியிருக்கிறார். என் வாழ்க்கையை அன்னமிட்டே நிறைக்க விரும்புகிறேன்” என்றாள். “உண்டு செல்பவர்களின் முகம் நிறைவதை காண்பதைப்போல இனிது பிறிதில்லை.” சம்பவன் “அது என் கைச்சமையல்… விண்ணுலகை நாவில் காட்டிவிடுவேனே” என்றான். அவள் சிரித்து “தன்னம்பிக்கை நன்று” என்றாள். அவன் அவள் கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டு “நீ என்னை விரும்புகிறாய் என்று அறிந்த அன்றுதான் நான் என்னைப்பற்றி பெருமிதமாக உணர்ந்தேன். இனி வாழ்வில் நான் அடையும் வெற்றி என ஏதுமில்லை என்று தோன்றியது” என்றான். அவள் அருகே வந்து தோள்சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

“உண்மையில் நீ இன்று என்னுடன் இருப்பதனால்தான் நான் இந்த வெறுமையை கடந்துசெல்கிறேன். என் ஆசிரியர் நேற்று பிரிந்துசென்றார். அவரைப் பிரிவேன் என்று அறிந்திருந்தேன். ஆனால் அதற்கு என் உள்ளம் சித்தமாக இருக்கவில்லை. அவர் ஒவ்வொருவரிடமாக விடைபெற்றுக் கிளம்பினார். குண்டனை எடுத்து வானில் வீசிப்பிடித்து இவனும் காற்றின் மைந்தனே என்றார். இறுதியாக என்னிடம் வந்தார். நான் கால்தொட்டு சென்னிசூடினேன். அழுகையை அடக்கமுடியாமல் காலடியிலேயே விழுந்துவிட்டேன்” என்றான் சம்பவன்.

“அவர் என்னைத் தூக்கி நெஞ்சோடணைத்து உனக்கு நான் அடையாதவையும் கிடைக்கும் மைந்தா என்றார். உன் வடிவில் நானும் அதை அடைவேன் என்று சொல்லி என்னை உச்சியில் முத்தமிட்டார். ஆம், மெய்யாகவே. என்னை என் தந்தை முத்தமிட்டு அறியேன். என்னை எவருமே முத்தமிட்டதில்லை. என் ஆசிரியர் என்னை முத்தமிட்டார். என் உள்ளங்காலில் குளிர் ஏறியது. அந்தக் கணம் அப்படியே குளிர்ந்து நின்றுவிட்டது” என்று சம்பவன் தொடர்ந்தான்.

“என் செவியில் கொல்லாதே என்று மென்மையாக சொன்னார். சமைத்தூட்டுபவன் பெறுவதெல்லாம் கொல்பவனால் இழக்கப்படுகிறது மைந்தா. அரிசிப்புழுவும் காய்வண்டும்கூட உன்னால் காக்கப்படுக! விண்ணுலகிலிருந்து கைநீட்டி என்னை மேலேற்றிக்கொள்க என்றார். என்ன சொல்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் விசும்பி அழுதுகொண்டிருந்தேன். அவர் என்னை நிறுத்தி நாம் மீண்டும் பார்க்கமாட்டோம், என்றும் உன்னுடன் நான் இருப்பேன் என்று கொள் என்றபின் திரும்பி நடந்தார். மண்ணை மிதித்துச்செல்லும் சிறிய கால்களைப் பார்த்தபடி நான் தரையில் அமர்ந்தேன். பின் மண்ணுடன் முகம் சேர்த்து படுத்துக்கொண்டேன். அவர் காலடி பட்ட மண்ணை நோக்கிக்கொண்டிருந்தேன்.”

“விடியும்போதுதான் சுந்தரர் வந்து உன்னை பெண்கேட்கச் செல்லவேண்டுமென்பது வலவரின் ஆணை என்றார். அதன் பின்னரே நான் எழுந்து நீராடச் சென்றேன்.” சுபாஷிணி புன்னகைத்து “அவர் சொன்னவை நினைவிலிருக்கட்டும். பிறிதொன்றும் நீங்கள் பெறுவதற்கில்லை” என்றாள். “ஆம்” என அவளை அவன் அணைத்துக்கொண்டான். அவளை நோக்கி குனிந்தான். அவள் அவன் விழிகளை கண்டாள். அதிலிருந்த நெகிழ்வை நோக்கியதும் மெய்ப்புகொண்டு விழிமூடிக்கொண்டாள். அவன் தோள்கள் அவளைச் சூழ்ந்தன, மலையாற்றின் வன்னீர்ச்சுழல்போல.

“ம்ம்” என்றாள். அவன் அவள் செவியில் “என்ன?” என்றான். “மரம்போலிருக்கின்றன கைகள்.” அவன் நகைத்து “அடுமனையாளனின் கைகள்” என்றான். அவள் அவன் தோளில் கையோட்டி “எத்தனை உறுதி!” என்றாள். புயங்களில் புடைத்திருந்த நரம்புகள் வழியாக விரலை ஓட்டி “யாழ்” என்றாள். “மீட்டு” என்று அவன் சொன்னான். அவள் அவன் காதுக்குள் மெல்ல சிரித்தாள்.

வெளியே விறலியின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. “என்ன பாடுகிறாள்?” என்று அவள் அவன் செவியில் கேட்டாள். “கேட்டதில்லையா? விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை அது.” அவள் “அதை ஏன் இங்கே பாடுகிறார்கள்?” என்றாள். “சமாகம பாதம் அக்காவியத்தின் இறுதிப்பகுதி. அதை மணநிகழ்வுகளின்போது சொல்லவைப்பது வழக்கம்” என்றான் சம்பவன். அவள் “நான் கேட்டிருக்கிறேன்” என்றாள். “அதை தேவி கேட்க விரும்புவாள். எப்போதும் விறலியிடம் அதைத்தான் பாடும்படி சொல்வாள்.” அவன் “அவர்கள் இப்போது நம் நாட்டு எல்லையை கடந்திருப்பார்கள்” என்றான்.

flowerசுபாஷிணி மீண்டும் விறலியின் குரலைக் கேட்டபோது அவள் தமயந்தியின் நகருலாவை பாடிக்கொண்டிருந்தாள். மரத்திலிருந்து நீரில் உதிரும் சருகு ஆழத்திலிருந்து எழுந்து வருவதுபோல அருகே வந்து சொல் துலங்கியது அவள் பாடல். அணியானை மேல் முகிலில் எழுந்த இளங்கதிரவன் என அமர்ந்து தமயந்தி குண்டினபுரியின் அரசப்பெருவீதியில் சென்றாள். அவளை வாழ்த்தியபடி அவள் குடிகள் சாலையின் இரு பக்கங்களிலும் திரண்டிருந்தனர். அந்தணர்வீதியை அவள் கடக்கையில் உப்பரிகையில் தூண்மறைவில் நின்று அவளை நோக்கிய முதிய கைம்பெண் ஒருத்தியின் சொல் அவள் காதில் விழுந்தது. “யார்பொருட்டு அக்குங்குமம்? எவருடையது அந்தக் கருமணிமாலை?”

யானைமேல் அமர்ந்து அவள் நடுங்கினாள். அதன்பின் அவளால் சூழ்ந்திருந்த மக்களின் வாழ்த்தொலியை, மங்கல இசையை, மலர்மழையை உவக்க இயலவில்லை. அரண்மனை நோக்கிச் செல்லும் பாதையில் யானையின் ஒவ்வொரு காலடியும் வில்லில்லா தேரின் சகட அதிர்வென அவள் தலையில் விழுந்தது. அரண்மனையில் இறங்கி அகத்தளம் நோக்கி ஓடிச்சென்று தன் அன்னை மடியில் விழுந்தாள். “என் மங்கலங்கள் பொருளற்றவை என்னும் சொல்லை இன்று கேட்டேன். இன்றே நான் அறியவேண்டும் இவற்றின் பொருளென்ன என்று. நிமித்திகரும் வேதியரும் வருக!”

வேதியர் மூவர் அகத்தளம் வந்தனர். தென்னெரி எழுப்பி வேதமோதி அவியிட்டனர். “அரசி, உங்கள் கையால் ஒரு மலரிதழை எடுத்து இவ்வெரியில் இடுக!” என்றார் வைதிகர். அரசி எரியிலிட்ட தாமரை மலரிதழ் வாடாமல் பளிங்குச் சிமிழென ஒளியுடன் எரிக்குள் கிடந்தது. “அரசர் உயிருடனிருக்கிறார், அரசி. உங்கள் மங்கலங்கள் பொருளுள்ளவையே” என்றார் வைதிகர். பன்னிரு களம் வரைந்து நோக்கிய நிமித்திகர் “நலமுடனிருக்கிறார். ஆனால் நாகக்குறை கொண்டிருக்கிறார்” என்றனர். “எங்கிருந்தாலும் தேடி கொண்டுவருக அவரை!” என்று பீமகர் ஆணையிட ஒற்றர்கள் நாடெங்கும் சென்றார்கள்.

பின்னொருநாள் கொற்றவை ஆலயத்திற்கு பூசெய்கைக்காகச் சென்று மீள்கையில் பல்லக்கினருகே நடந்துசென்ற பெண்களின் குரல்களில் ஒன்று “துறந்த கணவன் இறந்தவனே” என்று சொல்லிச் சென்றது. அவள் நெஞ்சைப் பற்றிக்கொண்டு உடலதிர அமர்ந்திருந்தாள். அரண்மனையை அடைந்ததும் ஓடிச்சென்று அன்னைமடியில் விழுந்து கதறி அழுதாள். “என் கொழுநனை கண்டுபிடித்து கொண்டுவருக! நூறு நாட்களுக்குள் அவரை என் முன் கொண்டுவரவில்லை என்றால் இந்த மங்கலங்களுடன் எரிபுகுவேன்” என்று சூளுரைத்தாள்.

பீமகர் அமைச்சர்களிடம் விழிநோக்கி உளமொழி கேட்கும் திறன்கொண்ட நூறு அதர்வவேத அந்தணர்களை அழைத்துவரச் சொன்னார். அவர்களுக்கு ஆளுக்கு நூறு பொன் கொடையளித்து நாடெங்கும் சென்று நளனைத் தேடிவரும்படி ஆணையிட்டார். அந்தணர்கள் கிளம்பும்பொருட்டு கூடி வேள்விநிகழ்த்தி எழுந்தபோது அவர்கள் நடுவே தோன்றிய தமயந்தி கைகூப்பியபடி “அந்தணர்களே, நீங்கள் செல்லும் நாடுகளில் அங்கிருக்கலாம் என் கணவர் என்று ஐயம் தோன்றுமிடங்களில் எல்லாம் இவ்வினாக்களை கேளுங்கள். அவற்றுக்கு அளிக்கப்பட்ட மறுமொழிகளை வந்து என்னிடம் சொல்லுங்கள்” என்றாள்.

அவள் சொன்ன மூன்று வினாக்கள் இவை. “மரம் உதிர்க்கவே முடியாத கனி எது? ஆற்றுப்பெருக்கு அடித்துச்செல்ல முடியாத கலம் எது? புரவித்திரள் சூடிய ஒரு மணி எது?” அவர்கள் அந்த வினாக்களுடன் கிளம்பி பாரதவர்ஷமெங்கும் சென்றனர். கிழக்கே காமரூபத்தைக் கடந்து மணிபூரகம் வரை சென்றது ஒரு குழு. மேற்கே காந்தாரத்தைக் கடந்து சென்றனர். வடமேற்கே உசிநாரத்தையும் வடக்கே திரிகர்த்தத்தையும் அடைந்தனர். தெற்கே திரிசாகரம் வரை சென்றனர். ஒவ்வொருவராக பறவைச்செய்திகளினூடாக தாங்கள் பெற்ற விடைகளை அனுப்பிக்கொண்டிருந்தனர். நாட்கள் குறைந்து வர தமயந்தி மேலும் மேலும் சொல்லிழந்து முகம் இறுகி மண்ணில் மெல்ல மூழ்கும் கற்சிலைபோல ஆனாள்.

அயோத்திக்குச் சென்று மீண்ட பர்ணாதர் என்னும் அந்தணர் அவளிடம் “நான் அயோத்தி அரசன் ரிதுபர்ணனின் அவைக்குச் சென்றேன், அரசி. அங்கு ஒருமுறை சென்று ஏதும் உணராமல் கடந்துசென்றேன். வடக்கே சௌவீரம் நோக்கிச் செல்லும்போது எதிரே வந்த வணிகனொருவன் புரவிகள் வாங்க அயோத்திக்குச் செல்வதாக சொன்னான். நான் என்ன விந்தை இது, காந்தாரமும் சௌவீரமும் புரவிக்குப் புகழ்மிக்கவை அல்லவா என்றேன். ஆம், எங்கள் புரவிக்குட்டிகளையே அயோத்தியினர் வாங்குகின்றனர். ஆனால் அவர்கள் பயிற்சியளித்த புரவிகள் எங்கள் புரவிகளைவிட ஏழுமடங்கு திறன்கொண்டவை. ஆகவே அவற்றை நாங்கள் திரும்ப வாங்குகிறோம் என்றான். அங்கே எனக்கு ஐயம் எழுந்தது” என்றார்.

“நான் மீண்டும் அயோத்திக்கு சென்றேன். அங்கே நகரில் உலவிய புரவிகளை தனி விழிகளுடன் நோக்கினேன். அரசி, அங்கே புரவிக்கு ஆணையிடும் குரலே ஒலிக்கவில்லை. புரவிக்காரர் கைகளில் சவுக்குகளே இல்லை. புரவிகள் அவர்களின் உள்ளமறிந்து இயங்கின.” தமயந்தி உள எழுச்சியுடன் “ஆம், நிஷதபுரியின் புரவிகள் ஊர்பவரின் உள்ளத்தை பகிர்ந்துகொள்பவை” என்றாள். “ஆகவே மீண்டும் ரிதுபர்ணன் அவைக்குச் சென்றேன். அங்கே இம்மூன்று வினாக்களையும் சொன்னேன். ரிதுபர்ணன் அவற்றுக்கு மறுமொழி சொன்னார். அம்மறுமொழி ஒன்றே நான் கேட்டவற்றில் பொருத்தமானது. அம்மொழியில் அரசிக்கு ஏதேனும் விடை கிடைக்கக்கூடும் என்பதனால் நேராக இங்கே வந்தேன்.”

பர்ணாதர் அந்த மறுமொழியை சொன்னார். “அரசி, ரிதுபர்ணன் சொன்ன மறுமொழிகள் இவை. மரம் உதிர்க்கமுடியாத கனி நிலவு. ஆற்றுப்பெருக்கு அடித்துச் செல்லமுடியாத கலமும் நிலவே. புரவிகள் எனும் கடல்அலைகள் சூடியிருக்கும் ஒரு மணி முழுநிலவேதான்.” தமயந்தி வேறெங்கோ நோக்கியபடி “நல்ல மறுமொழி” என்றாள். “பிறர் சொன்ன மறுமொழிகள் எவையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை, அரசி. நிலவை கனவு என்று சொல்லி ரிதுபர்ணன் உரைத்த மறுமொழியே அழகியது.”

தமயந்தி ஆர்வமிழந்து பெருமூச்சுடன் ஆடையை கையால் முறுக்கிக் கொண்டிருந்தாள். “அப்போது மெல்லிய விசும்பலோசையை கேட்டேன், அரசி. அரசனின் அருகே நின்றிருந்த கரிய குள்ளன் ஒருவன் கண்ணீர்விட்டவாறு திரும்பிக்கொண்டான். அவன் அழுவதை தோள்கள் காட்டின. உவகை நிறைந்திருந்த அவையில் அவன் ஏன் அழுகிறான் என்று தெரியாமல் நான் சற்று குழம்பினேன்…” என பர்ணாதர் சொல்ல தமயந்தி உளவிசையுடன் கையூன்றி சற்றே எழுந்து “அழுதவன் யார்?” என்றாள்.

“அவன் பெயர் பாகுகன். குள்ளன், ஆனால் பெருங்கையன். சூதன். அவன் அங்கே புரவிபேணுதலும் அடுமனைத்தொழிலும் இயற்றுவதாகச் சொன்னார்கள். அயோத்தியின் புரவிகளை அவனே நுண்திறன்கொண்டவையாக ஆக்குகிறான் என அறிந்தேன்” என்றார் பர்ணாதர். தமயந்தி நீள்மூச்சுடன் மெல்ல உடல் தளர்ந்து பீடத்தில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். தனக்கே என “அவர்தான்” என்றாள்.

“அரசி, அவனை நான் நன்கு நோக்கினேன். குற்றுடல் கொண்ட கரியவன். உடலெங்கும் முதுமைச் சுருக்கங்கள். அவன் அரசர் அல்ல, நான் அவரை ஏழுமுறை நேரில் கண்டவன். என் விழிகள் பொய்க்கா” என்றார் பர்ணாதர். தமயந்தி “விழிகளுக்கு அப்பால் உறைவதெப்படி என்பதை நான் நன்கறிவேன். அவர் இங்கே வரவேண்டும்” என்றாள். “அவரை நேரில்கண்டு சொல்கிறேன்” என்றார் பர்ணாதர். “இல்லை, அவர் வரமாட்டார். நாம் அவரை அறிந்துளோம் என அவர் அறியக்கூடாது” என்று தமயந்தி சொன்னாள்.

அன்று மாலை தன் தந்தையுடனும் உடன்பிறந்தாருடனும் அமர்ந்து சொல்சூழ்ந்தாள். “தந்தையே, எனக்கு மறுமணத் தூதுக்கள் வந்துள்ளன என்று அன்னையிடம் சொன்னீர்கள் அல்லவா?” என்றாள். பீமகர் முகம் மலர்ந்து எழுந்தார். “ஆம், பாரதவர்ஷத்தின் தொல்குடி ஷத்ரியர் பன்னிருவர் தூதனுப்பியிருக்கிறார்கள்” என்றார். பீமபலன் உவகையுடன் “அக்கையே, நீங்கள் அம்முடிவை எடுப்பீர்கள் என்றால் அதுவே சிறந்தது. காங்கேய நிலத்து ஷத்ரிய நாடுகள் அனைத்துமே விதர்ப்பத்தை விழைகின்றன. தென்னிலத்திற்குள் நுழையவும் தாம்ரலிப்தியையும் தண்டபுரத்தையும் நோக்கி வணிகவழிகள் திறக்கவும் விதர்ப்பமே மிகச் சிறந்த வழி என அவை அறிந்துள்ளன” என்றான்.

பீமபாகு “நமக்கு காங்கேயத்தின் ஷத்ரிய நாடுகளில் ஒன்றுடன் மணஉறவு பெரும்நன்மை பயக்கும். வடக்கே அசுரர் தலைவன் விரோசனன் ஆற்றல் பெற்றுவருகிறான். மச்சர்களும் நிஷாதர்களும் அவன் கொடிக்கீழ் ஒருங்கிணையக்கூடும். நாம் நிஷதநாட்டின்மேல் படைகொண்டு சென்றால் பெரும்எதிர்ப்பை சந்திப்போம். ஷத்ரியர்களின் கூட்டு நம்முடன் இருப்பின் நாம் வெல்லலாம்” என்றான். “அக்கையே, நிஷதநாட்டு அரியணை நம் இளவல் இந்திரசேனனுக்குரியது. எக்குருதிப்பெருக்கு எழுந்தாலும் அதை வென்று அவனுக்களிப்பது நம் கடமை” என்றான்.

தமயந்தி “இல்லை இளையோரே, நிஷதமன்னர் உயிருடன் இருக்கிறார். அவர் துறவுகொள்ளவுமில்லை” என்றாள். “அவரை இங்கு வரவழைக்க எண்ணுகிறேன். இங்கு விதர்ப்பத்தில் எனக்கு மறுமணத்தின்பொருட்டு மணத்தன்னேற்பு நிகழ்வதாக ஒரு செய்தியை அயோத்திக்கு அனுப்பவேண்டும்.” அவர்கள் விழிகள் மங்க மெல்ல அமர்ந்துகொள்ள பீமகர் “அயோத்திக்கு மட்டுமா?” என்றார். “ஆம், அங்கே செய்தி சென்று சேர்ந்த மறுநாள் அந்தியில் இங்கே மணத்தன்னேற்பு என்று சொல்லப்படவேண்டும்.” அவர்கள் உய்த்தறிந்துவிட்டிருந்தனர். பீமகர் “ஆம், அவர் தேரோட்டினால் மட்டுமே இங்கே ஒரே நாளில் வந்துசேரமுடியும்” என்றார்.

“சுதேவரையே அனுப்புவோம். அவர் சென்று பேச்சுவாக்கில் இங்கே மணத்தன்னேற்பு நிகழ்வதை சொல்லட்டும். ரிதுபர்ணன் வருவதை நான் எதிர்நோக்குவதாகவும் அதை நீங்கள் விரும்பாததனால்தான் அவருக்கு முறையான செய்தி அனுப்பப்படவில்லை என்றும் அவர் சொல்லவேண்டும்” என்றாள் தமயந்தி. பீமகர் பெருமூச்சுவிட்டு “அவ்வாறே ஆகுக!” என்றார்.

flowerபரிப்புரையில் வைக்கோல் மெத்தையில் விழிமூடிப் படுத்திருந்த பாகுகன் அருகே வந்த வார்ஷ்ணேயன் “உங்களை உடனே அழைத்துவரச் சொன்னர் அரசர்” என்றான். பாகுகன் எழுந்து அமர்ந்து “சற்றுமுன்புதானே சென்றார்?” என்றான். “அவர் அவைக்கு தென்புலத்து அந்தணர் ஒருவர் வந்திருக்கிறார். அவைச்சொல் நடுவே அவர் சொன்ன ஏதோ செய்தியால் அரசர் கிளர்ந்தெழுந்துவிட்டார். பாகுகனை அழைத்துவா என்று கூவினார். நான்கு ஏவலர் என்னை நோக்கி ஓடிவந்தனர். வரும் விரைவில் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சினேன்.”

பாகுகன் எழுந்து தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான். அவன் முற்றிலுமாக மாறிவிட்டதை வார்ஷ்ணேயன் உணர்ந்திருந்தான். அவனுக்குள் இருந்த சிறுவன் அகன்று நாழிகைக்கொரு ஆண்டு என முதிர்ந்துவிட்டிருந்தான். “நான் உடன் வரவா?” என்றான். பாகுகன் வேண்டாம் என தலையசைத்து நடந்தான். வார்ஷ்ணேயன் நோக்கி நிற்க அருகே வந்த ஜீவலன் “அவன் முதிர்ந்துவிட்டான்” என்றான். “ஆம்” என்றான் வார்ஷ்ணேயன். “துயரற்றிருந்தான். துயரத்தால் முதிர்ந்துவிட்டான்” என்ற ஜீவலன் “துயரத்தைத்தான் வாழ்வென்றும் காலமென்றும் சொல்லிக்கொள்கிறோமா?” என்றான்.

அவர்கள் பேசுவதை அவன் கேட்டான். அச்சொற்றொடர்கள் அவனுடனேயே வந்தன, ரீங்கரித்துச் சூழும் கொசுக்களைப்போல. அவன் அரண்மனை வாயிலை அடைவதற்குள்ளாகவே ரிதுபர்ணன் அவனை நோக்கி ஓடிவந்தான். உடல் குலுங்க மூச்சிரைக்க அவனருகே வந்து “எடு தேரை… தேரைப் பூட்டு! நாம் இக்கணமே இங்கிருந்தே கிளம்புகிறோம்” என்றான். அவனுடன் வந்த காவல்வீரர்கள் அப்பால் நின்று மூச்சுவாங்கினர். “நல்லவேளையாக அந்தணர் இங்கே வந்தார். பாடல் சொல்லிக்கொண்டிருந்தவர் பேச்சுவாக்கில் விதர்ப்பத்தில் நிகழ்வதென்ன என்று சொன்னார். அங்கே தமயந்திக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது.”

பாகுகன் வெறுமனே நோக்கினான். “என்ன பார்க்கிறாய்? நாளைக்கே. நாளை அந்தியில். நாம் இப்போது கிளம்பினால் சென்றுவிடமுடியுமா?” பாகுகன் “தங்களுக்கு அழைப்பில்லையா?” என்றான். “இல்லை. அவள் தனக்குகந்த ஆண்மகனை தேடித்தான் அந்தணர்களை அனுப்பியிருக்கிறாள். முன்பு இங்கு வந்த அந்தணராகிய பர்ணாதரை நினைவிருக்கிறதா? அவர் கேட்ட வினாக்களுக்கு நான் சொன்னதே உரிய விடை. அவ்வினாக்களில் இருந்தது ஓர் இளம்பெண்ணின் காதல். அதை நான் மட்டுமே தொட்டேன். அதைக் கேட்டதுமே என்னை உளமேற்றுக்கொண்டாளாம்.”

“ஆனால் அவள் தந்தை மகதனோ கூர்ஜரனோ தன் மகளை மணக்கவேண்டுமென விழைகிறார். அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. பூசலுக்குப்பின் இறுதியில் மணத்தன்னேற்பு நிகழ்த்துவதாக அவரும் உடன்பிறந்தாரும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஓலையனுப்பாமல் விட்டுவிட்டார்கள். எனக்கு ஓலை அனுப்பப்பட்டுவிட்டதாகவே தமயந்தி எண்ணுகிறாள். நாளை மணத்தன்னேற்பு அவைக்குள் வந்து நிற்பதுவரை அவள் நான் அங்கே நிற்பேன் என்றே எண்ணியிருப்பாள். நான் இல்லாதபோது திகைப்பாள். நான் அவளை மணம்கொள்ள விழையவில்லை என்று அவளிடம் சொல்லிவிடுவார்கள். அதன்பின் அவளுக்கு வேறுவழியில்லை. மணமாலையை கையிலேந்தினால் அதை எவருக்கேனும் அணிவித்தாகவேண்டும் என்பது நெறி.”

ரிதுபர்ணன் மூச்சிரைத்து “நான் விடப்போவதில்லை. பறந்தேனும் செல்வேன். அவள் முன் மணமகனாக நிற்பேன்… சொல், உன்னால் ஒருநாளில் செல்லமுடியுமா?” என்றான். பாகுகன் “பார்ப்போம்” என்றான். “முடிந்தாகவேண்டும்… வெறும்புரவியே அவ்வளவு விரைவாகச் செல்லாது என்கிறார்கள் அமைச்சர்கள். நான் உன்னை நம்புகிறேன். நீ புரவித்தொழிலறிந்தவன்… நீ செல்வாய்… சென்றாகவேண்டும்.” பாகுகன் “செல்வோம்” என்றான். “நன்று! நமக்கு வேறுவழியில்லை… அமைச்சர்களையும் பிறரையும் வரிசையும் பரிசில்களுமாக தொடர்ந்து வரச்சொல்லியிருக்கிறேன். நீ சென்று தேரைப் பூட்டி அழைத்து வா…” பாகுகன் “தாங்கள் அணிசெய்யவேண்டுமே?” என்றான். “அணிசெய்யவேண்டிய ஆடைகளை எடுத்துக்கொண்டேன்… தேர் வரட்டும். இங்கிருந்தே கிளம்புவேன்” என்றான் ரிதுபர்ணன்.

பாகுகன் ஓடி கொட்டிலுக்குச் செல்லும் வழியிலேயே கூவினான் “சுமையும் குசுமையும் சுபையும் சுதமையும் சுஷமையும் தேரில் பூட்டப்படட்டும். கருடத்தேர்.” வார்ஷ்ணேயன் “அவை…” என சொல்லத்தொடங்க “புரவிக்கொருவர் செல்க… அரசாணை” என்றான் பாகுகன். அவன் தேர்ப்பட்டைகளை எடுத்துக்கொண்டு வெளிவந்தபோது தேர் வெளியே வந்து நின்றிருந்தது. புரவிகளை கட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் அச்சாணிகளை சீர்நோக்கினான். சகடங்களின் இரும்புப்பட்டைகளை கையால் வருடிநோக்கியபின் தேர்ப்பீடத்தில் ஏறிக்கொண்டான்.

புரவிகள் நுகங்களில் பூட்டப்பட்டதும் பொறுமையிழந்து காலடிவைத்து தலைநிமிர்ந்து பிடரிகுலைத்தன. அவன் சவுக்கை காற்றில் வீசியதும் அவை ஓடத்தொடங்கின. ரிதுபர்ணன் ஓடிவந்து படிகளில் ஏறி உள்ளே அமர்ந்து “தெற்குவாயில் வழியாக செல்… சரயுவின் கரையினூடாகச் செல்வோம்… இவ்வேளையில் அங்கே எவருமிருக்கமாட்டார்கள்” என்றான். “இல்லை… அங்கே கன்றுகள் இல்லம்திரும்பத் தொடங்கும். அவை வழியறியாதவை. நகரினூடாகச் செல்வோம். முரசுமுழக்கம் வழியாக மையச்சாலையில் வந்துகொண்டிருப்பவர்களிடம் வலம்விட்டு வழியொதுங்கும்படி ஆணையிடுங்கள்… நாம் செல்லும் வழியில் எங்கும் வலப்பாதையில் எவருமிருக்கலாகாது” என்றான் பாகுகன். “இதோ, அந்தக் காவல்மாடத்தில் ஆணையை சொல்கிறேன்” என்றான் ரிதுபர்ணன்.

தேர் அரண்மனை வளைவைக் கடந்து மையச்சாலையில் ஏறி இரு பக்கமும் காற்று கிழிந்து பின்பறக்க பக்கக் காட்சிகள் நிறக்கலவையென உருகியிணைந்தொழுக பாய்ந்தோடியது. “ஒவ்வொரு எட்டு நாழிகையிலும் சாவடிகளில் மாற்றுப் புரவிகள் ஒருங்கி நிற்கவேண்டும். புரவிகளின் இலக்கணங்களை வார்ஷ்ணேயனிடம் கேட்டறியச் சொல்லுங்கள்…” ரிதுபர்ணன் காவல்கோட்டத்தை அடைவதற்கு முன்னரே கையசைக்க காவலர் புரவியில் தேருடன் விரைந்து வந்தனர். அவன் தேர்விரைவு குறையாமல் உடன்வந்த புரவிவீரர்களிடம் ஆணைகளை கூவினான்.

அவர்கள் கோட்டையை கடந்தபோது ஆணை முரசொலியாக முழங்கிக்கொண்டிருந்தது. “புறாக்கள் கிளம்பியிருக்கும்… செல்லும் வழியெங்கும் புரவிகள் ஒருங்கியிருக்கும்” என்றான் ரிதுபர்ணன். அவன் மேலாடை எழுந்து பறந்து விலகியது. அவன் திரும்பி நோக்கியபோது அது நோக்கிலிருந்து மறைந்தது. சாரைப்பாம்பென சாலை சென்று தொலைவில் நெளிந்து மறைந்தது. எதிரே அருவி என தேர் நோக்கிப் பெய்து அணுகிக்கொண்டிருந்தது.

மெல்ல விரைவுக்கு உளம் பழகியது. அவன் பீடத்தில் சாய்ந்தமர்ந்தான். அவன் உடல் தேர்விசையில் துள்ளிக்கொண்டிருந்தது. “அரசி என்னிடம் கேட்டனுப்பிய வினாக்களை நினைவுறுகிறாயா?” என்றான். “ஆம்” என்றான் பாகுகன். “அவற்றுக்கு நான் உரைத்த மறுமொழி பொருத்தம் அல்லவா?” பாகுகன் “ஆம், அரசே” என்றான். “அன்று நீ அழுதாய்… ஏன்?” என்றான். “நான் அவற்றுக்கு வேறு பொருள்கொண்டேன்” என்றான் பாகுகன். “என்ன பொருள்?” என்றான் ரிதுபர்ணன்.

“அரசே, மரம் உதிர்க்கமுடியாத கனி இனிமையும் மணமுமாக அதன் வேர்முதல் தளிர்வரை ஓடிக்கொண்டிருக்கும் சாறுதான்.” ரிதுபர்ணன் சற்று சோர்வுடன் “ஆம், உதிரும்கனி என்பது மரம்கொண்ட சுவையின் ஒரு துளியே” என்றான். “ஆற்றுப்பெருக்கு அடித்துச்செல்லாத கலம் என்பது அதிலெழும் சுழி” என்றான் பாகுகன். “ஆம்” என்றான் ரிதுபர்ணன். “புகை எனும் புரவிப்பெருந்திரள் சூடிய அருமணி அனல்” என்றான். நீண்ட இடைவேளைக்குப்பின் “ஆம், அதன் பொருளும் புரிகிறது” என்றான் ரிதுபர்ணன். “ஆனால் அதன்பொருட்டு நீ ஏன் அழுதாய்?”

பாகுகன் அதற்கு மறுமொழி என ஏதும் சொல்லவில்லை. அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று காத்திருந்த ரிதுபர்ணன் அவன் எதையும் சொல்லப்போவதில்லை என்று உணர்ந்தான்.

முந்தைய கட்டுரைமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)
அடுத்த கட்டுரைகிராதம் செம்பதிப்பு – குறிப்பு