இருவர்

1

செங்கல்பட்டுக்குச் செல்ல அனந்தபுரி எக்ஸ்பிரஸில் அமர்ந்திருந்தபோது நெல்லையில் ஒரு ஜோடி ஏறியது. ஏகப்பட்ட ஓசைகள். “பாத்து பாத்து… ஏண்டி வேட்டிய புடிக்கிறே? கை எடு… பொட்டிய எடுறீ” என்றகுரலுக்கு எதிராக பெண்குரல் “நீங்க மொதல்ல ஏறுங்கோ. ராமு பொட்டிய எடுக்கறான்ல?” என்றது. “ராமு பெரிய பொட்டிய எடுடா… அடேய்”

மாமா பெரிய விபூதிப்பட்டையில் வியர்வையுடன் ஏறி வந்தார். டிக்கெட்டை கூர்ந்து நோக்கமுயன்றார். அது எனக்கே கண்தெரியாத எழுத்து. என்னிடம் “நாப்பது நாப்பத்தொண்ணு…இதானா?” என்றார். நல்ல வளப்பமான குரல். மாமி “அடேய் பார்ரா… வண்டிய எடுத்துரப்போறான்” ராமுவுக்கு எழுபது வயதிருக்கும். கனிந்த முதுமை. கண்கள் மேல் கையைக்கொடுத்து “ஆமா மாமா, இதான்…”

மாமாவுக்கு தொண்ணூறு இருக்கலாம். மேலே கூட இருக்கலாம். மாமிக்கு பத்துவயது குறைவு எனத் தோன்றியது.”இதான் மாமா ஒக்காருங்கோ” மாமா “அப்பாடா” என அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தார். ”இதேதான்…இதப்பாத்தியா எமெர்ஜென்ஸி எக்ஸிட். நான் டிரெயினிலே டிக்கெட் போட்டா இதப்பாத்துத்தான் போடுவேன். இப்ப ரயில் கவுந்துடுத்துன்னு வச்சுக்கோ. இத ஒடைச்சு சுத்தியலே எடுத்து கண்ணாடிய ஒடச்சு இத தூக்கிட்டு அப்டியே வெளியே குதிச்சிடலாம்”

மாமி “இவா அதெல்லாம் கரெக்டா பாத்துடுவா. ஃப்ளைட்ல கூட எமர்ஜென்ஸி எக்ஸிட் பக்கத்திலேதான் ஸீட் வேணும்பா” என்றாள். ராமு என்னைப் பார்த்து “பாத்துக்குங்கோ” என்றபின் “போய்ட்டு வரேன் மாமா. ஆசீர்வாதம் பண்ணுங்கோ” என்றார். “பாத்துப்போடா… கண்ணமூடிண்டு வரானுக இப்பல்லாம்” ராமு இறங்க ரயில் கிளம்பியது.

மாமா ஆசுவாசப்படுத்திக் கொள்ளலானார். வீட்டிலிருந்து ஒரு பெரிய பை நிறைய இரண்டு பஞ்சுத்தலையணைகள் கொண்டுவந்திருந்தார். அதை இருக்கையில் பரப்பினார். “உன் தலையணையக் குடுரீ” என மாமியின் தலையணையையும் தன்னுடையதையும் வைத்துக்கொண்டார். நீட்டி அமர்ந்துகொண்டு என்னிடம் “எக்ஸ்யூஸ் மி… இந்த தலையணைய எடுத்துக்கலாமோ?” என்றார்.

“அது அப்பர் பர்த்ல வர்ரவங்களுக்குள்ளது… அவங்க இனிமே ஏறுவாங்கன்னு நினைக்கிறேன்” அவர் “அப்ப சரி…” என்றார். காலை நீட்டிக்கொண்டு அமர மாமி காலை மடித்து அமர்ந்துகொண்டு “என்னா வரத்து வர்ரான். இனிமே நான் ஆட்டோல ஏறமாட்டேன்” என்றாள். மாமா என்னிடம் “இந்த ரயில் சூப்பர் ஃபாஸ்ட் இல்லியோ?” என்றார். ஆம் என்றேன். “நான் என் பேத்தி வீட்டுக்குப்போறேன். அவ பையன் பிளஸ்டூ சேந்துட்டான்…பாத்துட்டு வரலாமேன்னு…இவ என் ஃவைப்”

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். “என்ன செய்றேள்?” என்றார். பிஎஸ்என்எல் ஊழியன் என்றேன். மாமா அவருடைய உறவினர்களில் எவரெவர் பிஎஸ்என்எல் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அல்வாக்காரர் வந்தார், ”ஏப்பா இப்டி வா” என மாமா ஆணையிட்டார். “என்ன அல்வா வச்சிருக்கே? காமி” அவர் பெட்டியைப்பிரித்து “எல்லா அல்வாவும் இருக்கு. ஒரிஜினல் இருட்டுக்கடை…” என்று ஆரம்பிக்க “ஏய் எங்க வீடே இருட்டுக்கடை பக்கத்திலேதான் பாத்துக்கோ” என்றாள் மாமி. அவர் சிரித்து “எடுத்துக்கிடுங்கோ சாமி… சூடான அல்வா”

“ஆமா சூடாத்தான் இருக்கு… கறுப்பு அல்வா இருக்கோ உங்கிட்ட?” அவர் அதை எடுத்துக்காட்டினார். “இது திண்ணவேலி அல்வாவா? அது ஜெல்லி மாதிரின்னா இருக்கும்?” அல்வாக்காரர் “சாமி இதும் அப்டித்தான். கவர்லே போட்டிருக்கு… அரைக்கிலோ இது ஒருகிலோ”. மாமா “நாங்க எங்க சாப்புடுறது? காயிதத்திலே எழுதி வாயிலே பொட்டு மெல்லவேண்டியதுதான் பாத்துக்கோ.முத்தின ஷுகர் ரெண்டுபேருக்கும். சும்மா பாக்கலாமேன்னு கூப்பிட்டேன்” என்றார். “மோந்துபாத்தாலே மாத்திர போடணும்” என்றாள் மாமி.

அல்வாக்காரர் சிரித்துக்கொண்டு “ஒரு கிள்ளு அப்பப்ப சாப்பிடலாம் சாமி…எங்கப்பா இருக்காரு. கால்கிலோ திம்பாரு” என்றார். “குடுத்துவச்ச ஜென்மம்னா…நான் கேட்டதாச் சொல்லு உங்கப்பாகிட்டே” அல்வாக்காரர் சிரித்துக்கொண்டு என்னிடம் “ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா சார், சாந்தி பேக்கரி அல்வா” என்றார். “ஏய் ஒரிஜினல்னு சொல்லப்பிடாது” என்றாள் மாமி அவருக்குப்பின்னால். அல்வாக்காரர் சிரித்துக்கொண்டே சென்றார்.

மாமா தலையணைகளை விரிவாக இடம் மாற்றி வைத்தார். மூச்சுவாங்க அமர்ந்துகொண்டு “இப்ப டிடி கிட்டே கேட்டா தலையணை குடுப்பானா? பே பண்ணிடலாம்…” என்றார். “இருந்தா குடுப்பாங்க” என்றேன். ஒரு போலீஸ்காரர் செல்ல பின்னால் ஒரு பாப்பா அழுதுகொண்டே சென்றது. மாமா உரக்க ’ஏய் இந்தாம்மா, பாப்பா இங்க வா …ஏன் அழுறே? சொல்லு” பாப்பா தயங்கி நின்று போலீஸ்காரரைப் பார்க்க அவர் “நம்ம பொண்ணுதான் சாமி. டூட்டிலே இருக்கேன்னு சொன்னா கேக்குறதில்லை.”

“எங்க கூட்டிண்டு போறே?” என்றாள் மாமி. “என் வீட்டுக்காரி எஸ் த்ரீலே இருக்கா.. ஒரு விசேஷமா மருதை போறம்.இது பின்னாடியே வந்து அடம் பண்ணுது சனியன்” பாப்பா பளபளப்பான கருமைநிறத்தில் கன்னக்குழி கொண்ட பரந்த முகத்துடன் இருந்தது. பச்சைப்பட்டுப்பாவாடை, இரட்டைச்சடை. “ஏய் இங்க வா” என்றார் மாமா. ஒரு பத்துரூபாய் எடுத்து அவளிடம் கொடுத்து “இந்தாடி” என்றார். பாப்பா அப்பாவைப்பார்க்க அவர் வாங்கிக்கொள் என்று கண்காட்டினார். மாமா பாப்பா தலையில் கைவைத்து “என்னடி பேரு?” என்றார். ‘வளர்மதி” என்றார் அவள் அப்பா. பாப்பா தலையசைத்தது. “என்ன படிக்கிறே?”. அது கம்பியைப்பிடித்தபடி வளைந்து காலை ஆட்டி முனகலாக “மூணாப்பு” என்றது.

“லட்சணமா இருக்கு. அவ அம்மாவைக் கொண்டிருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள் மாமி. போலீஸ்காரர் சிரித்து “ஆமாங்கம்மா” என்றார். “நல்லா இருடா” என்றார் மாமா. போலீஸ்காரர் முன்னால் செல்ல பாப்பா புன்னகைத்த என்னை ஐயத்துடன் நோக்கிவிட்டு துள்ளித்துள்ளி பின்னால் சென்றது. மாமா மீண்டும் விலாவரியாக தலையணைகளை அடுக்கலானார். என்னிடம் “இவா எக்ஸ்டிரா தலையணை குடுப்பாளோல்லியோ?”

அவர்கள் படுத்துக்கொண்டார்கள். மாமா ஜன்னல்பக்கம் தலைவைக்க மாமி மறுபக்கம் தலையை வைத்துக்கொண்டாள். “ஏண்டி அறிவிருக்கா? அறிவிருக்கா இல்லியா ? மனுஷன் இந்தப்பக்கம் தலைய வச்சுண்டிருக்கேன். கால மூஞ்சிமுன்னாடி நீட்டுறே” .மாமி “அந்தப்பக்கம் திருடன் வந்து கழுத்திலே கெடக்கறத அத்துக்கிட்டு போயுடுவான்” என்றாள். “இது ஏஸி கோச்சாக்கும். ஏஸி டூடயர். இங்க சன்னலத்திறக்க முடியாது. தெரிஞ்சுக்கோ” மாமி ”அந்தக் கண்ணாடியை உடைக்க எவ்ளவு நாழியாகும்?” என்றாள். “ஆமா உடைக்கிறான். சனியனே, இந்தப்பக்கம் தலைய வைடீ. அறிவே கெடையாது” என்னிடம் “அப்டியே இருந்துட்டா… ஒரு எளவும் தெரியாது” என்றார். நான் மையமாக புன்னகைத்தேன்.

டிடி வந்தார். டிக்கெட்டைக் காட்டிவிட்டு “எக்ஸ்யூஸ் மி..ஒரு தலைகாணி எக்ஸ்டிரா கெடைக்குமா?”என்றார் மாமா. டிடி “யாருக்கு?” என்றார். “எனக்குத்தான். எனக்கு பேக்பெயின்…” அவர் ஏற்கனவே இருந்த தலையணைகளைப் பீதியுடன் பார்த்துவிட்டு “கொண்டுவரச்சொல்றேன்” என்றார். அவர் சென்றபின் இருவரும் சமநிலை மீண்டனர். “தண்ணிகுடுரீ” மாமி தண்ணீர் கொடுக்க அதைக்குடித்துவிட்டு “துண்டு எங்கே?” வாயைத்துடைத்து அதையும் கொடுத்துவிட்டு “குடுத்திருவான்… சொன்னேன்ல?”

தலையணைவந்தது. பையன் இரண்டு தலையணை வைத்திருந்தான். “இந்தாப்பா அதையும் குடுத்திரு… அஞ்சுரூபா வச்சுக்கோ” அவன் என்னை நோக்கிவிட்டு “வேணாங்க” என்றான். இருதலையணைகளையும் வாங்கி படுக்கைக்குக் கீழே தரையில் வைத்தார். என்னிடம் “அப்பர் பெர்த்னா அந்த கம்பி தடுப்பு இருக்கு. லோயர்னா உருண்டு கீழே விழுந்திர சான்ஸ் இருக்கு பருங்கோ” என்றார். “விழுந்திருக்கீங்களா?” என்றேன். “சேச்சே….” என்றார். மாமி “இவா எல்லாமே யோஜனை பண்ணித்தான் பண்ணுவார்” என்றாள்.

இருவரும் படுத்துக்கொண்டார்கள். நான் வெள்ளிநிலம் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மாமா மாமியுடன் குடும்பவிஷயமாக உரையாடுவது கேட்டது. “ஒரு குடும்பப் பொண்ணு மாதிரியா இருக்கா? கையிலே கரியால என்னமோ வரைஞ்சுகிட்டு…எப்ப பார் டான்ஸ் ஆடிக்கிட்டு… இந்தபார் நீ அவள சப்போர்ட் பண்ணக்கூடாது சொல்லிட்டேன். எனக்கு அவள சுத்தமா புடிக்கலை” என்றார் மாமா.

மாமி மெல்ல “எல்லா பொண்ணுகளும் இப்டித்தான் இருக்குதுக” என்றாள். “எல்லா பொண்ணுகளுமா? எங்க சன்னிதிதெருவிலே எவ இருக்கா அப்டி? இவ ஆட்டம்போடுறா…அவளும் அவ சட்டையும்…. சரியான சண்டைக்காரி… அவ சரியில்ல அவ்ளவுதான் சொல்லுவேன்” என்றார் மாமா. மாமி “அதுக்காக இவன் கைய ஓங்கினது தப்பில்லியோ?” என்றாள். “ஓங்கினா? இவ பொம்புளப்புள்ளதானே? இப்டியா எதுத்து நிக்கிறது? இல்ல கேக்கிறேன்” என்றார் மாமா.

மாமி தாழ்ந்த குரலில் “இப்பல்லாம் பொம்புளைக” என ஆரம்பிக்க “நீ பேசாதே… எல்லாம் உன்னைமாதிரி கெழவிங்க குடுக்கிற எடம்…” என்று மாமா கத்தினார். மாமி “அவா என்னமோ எழுதறா” என்றாள். மாமா “நான் இப்ப என்ன சொன்னேன்?” என்றார். “அவதான் மூஞ்சிய எப்ப பார் கடுவன்பூனை மாதிரி வச்சுண்டு…எனக்கு அவளத்தான் புடிக்கவே இல்லை” என்று மாமி சொன்னாள்.

நான் எழுதிமுடித்தபோது மாமி குரட்டைவிட்டுக்கொண்டிருந்தாள் மாமா கழிப்பறை போய்வந்தார். என் அருகே இருக்கையில் அமர்ந்துகொண்டு “ஒக்காரலாமா?” என்றார். “தாராளமா” என்றேன். “எனக்கு புரோஸ்டிரேட் பிரச்சினை. ரயிலிலே சரியா தூக்கம் வராது” என்றார். ”சாதாரணமா வீட்ல எவ்ளவுநேரம் தூங்குவீங்க?” என்றேன். “ரயிலிலேதான் இந்தளவாவது தூக்கம். வீட்லே கொட்டகொட்ட டிவி பாக்குறதுதான். ராத்திரியிலே வேற கண்ராவியா பாட்டெல்லாம் போடுறானுக. என்ன எழுதறேள்?”

“கதை” என்றேன். “கதைன்னா?” என்றார். “கல்கி எல்லாம் எழுதற மாதிரி” அவர் “கல்கியா? கேள்விப்பட்டிருக்கேன். இவதான் மாஞ்சு மாஞ்சு படிப்பா. கல்கி தேவன் சுஜாதா எல்லாம் படிப்பா.முன்னாடில்லாம் படிச்ச கதைய சொல்லிடுவா. இப்ப படிச்சதுமே அப்டியே மறந்துடுறா. அதனாலே ஒரே புக்கையே மறுபடியும் படிக்கிறது” என்னிடம் என் குடும்பப்பின்னணியை தெரிந்துகொண்டார். “ரியல்எஸ்டேட்லே இன்வெஸ்ட் பண்ணுங்கோ. கோல்ட் வேஸ்ட். ஆனா ரியல் எஸ்டேட் நம்ம கண்ணுமுன்னாடி கெடக்கணும்..”

நான் படுத்துக்கொண்டேன். மாமா மாமியை எழுப்பினார். “ஏண்டி தண்ணி கொண்டாடீ” அவள் எழுந்து தூக்கத்திலேயே தண்ணீர் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கினாள். “முழிக்காமலே எல்லாத்தையும் செஞ்சிருவா” என்று என்னிடம் சொனனார். மீண்டும் தலையணைகளை மறுசீரமைத்தார். மாமியின் காலைப்பிடித்து அசைத்து “ஏண்டி தாம்பரத்துக்கு கார்த்திக் வந்திருவான்ல?” என்றார். “அதான் வரேன்னு சொல்லியிருக்கான்ல? வந்திருவான்” அவர் ‘வரலேன்னா?” என்றார். “வந்திருவான்” என்றாள்.. “அவன் நம்பர் இருக்காடீ?” மாமி “நம்பர் வீட்டு அட்ரஸ் எல்லாமே இருக்கு. தூங்குங்கோ” என புரண்டு படுத்தாள்..மாமா என்னிடம் “காலம்பற வரைக்கும் நல்லா தூங்குவா” என்றார்.

நான் கண்களை மூடிக்கொண்டேன். “ஏண்டி யமுனா நம்பர் வச்சிருக்கியோ?” பதில் இல்லை. பெருமூச்சு . “என்னா ஸ்பீடா போறான்” எனும் தன்னுரையாடல். மறுபக்கத்து படுக்கையில் டிடி வந்து படுக்கப்போனார். மாமா எழுந்து அவர் அருகே சென்றார். “வாங்க சார்” என்றார். மாமா “ஒக்காரலாமில்லியோ?” என்றார். “தாராளமா” என்றார் அவர். மாமா அமர்ந்துகொண்டு “இந்த டிரெயின் எப்ப மதுரை போகும்?” என்றார். ‘பத்தரைக்கு போயிரும்” என்றார் டிடி. “திருச்சிக்கு?”.

நான் புன்னகையுடன் தலையணைகள் அமைக்கப்பட்ட மெத்தையைப் பார்த்தேன். பார்க்கவே இதமாகத் தூக்கம் வந்தது. கனவில் மாமா “விழுப்புரத்துக்கு சரியா அஞ்சுமணிக்குப் போயிருவான் இல்ல?” என்றார்.

முந்தைய கட்டுரையாவர்க்குமாம்…
அடுத்த கட்டுரைநியோகா