வாசிப்பு என்பது போதையா?

writer-abilash-2
போதையில் பல வகை

எப்போதும் எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் மட்டுமே சிந்திக்க வேண்டுமென்று எண்ணுபவர்கள் சிந்திப்பதே இல்லை. சிந்திப்பது என்பது தன்னிச்சையாக ஒரு கேள்வியைச் சென்றடைவது. அதன் அனைத்து சாத்தியங்களையும் நோக்கி தன்னை விரித்துக்கொள்வதும் ஆகும். கண்டடைந்தவை பயனுள்ளவையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். செல்வது மட்டுமே சிந்தனையாளனால் செய்யப்படக்கூடியது. ஆகவே எத்தனை கோணங்களில் சிந்தித்தாலும் எவ்வழிகளில் சென்றாலும் சிந்தனை என்பது தன்னளவில் பயனுள்ளதே ஆகும்.

அபிலாஷின் இந்த கட்டுரை தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான வினாக்களை முன் வைக்கிறது. ஒவ்வொருவரையும் தனிப்பட்டமுறையில் சிந்திக்கவைத்து தங்களுக்குரிய விடைகளை நோக்கி செலுத்துகிறது ஆகவே மிக முக்கியமான கட்டுரை என்று சொல்லலாம்.

*

சில வினாக்களுக்கு மிக விரிவாகவும் சிக்கலாகவும் அன்றி குழந்தைத்தனமாகவும் பாமரத்தனமாகவும் யோசிக்கையில் தெளிவான விடையைச் சென்றடைய முடியும் என்று நான் உணர்ந்திருக்கிறேன். ஒருமுறை மதன் ஆனந்த விகடனில் கேள்விகளூக்கு பதிலளிக்கும் பகுதியில் ஒருவர் ‘நிறைய வாசிப்பதும் நிறைய தொலைக்காட்சி பார்ப்பதும் ஒன்று தானே என்று கேட்டிருந்தார். ‘நிறைய தொலைக்காட்சி பார்த்து அறிஞரான எவரையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று மதன் அதற்கு பதிலளித்திருந்தார்.

வேறு எவ்வகையிலும் அந்த வினாவுக்கு பதில் அளித்திருக்க முடியாது என்று தோன்றியது. ஒரு நாளில் சராசரியாக மூன்று மணிநேரத்தை தமிழர்கள் தொலைக்காட்சி பார்க்க செலவிடுகிறார்கள் என்பது கணக்கு. ஒரு நாள் அரை மணி நேரம் தொடர்ச்சியாக ஒருவர் வாசிப்பில் செலவிடுவாரென்றால் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே அவருடைய ஆளுமையும் சிந்தனையும் கூர்கொள்வதை நாம் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்தை தொலைக்காட்சிமுன் செலவிட்டால் கூட ஒருவரால் அவரது ஆளுமையிலேயோ சிந்தனையிலோ மாற்றத்தை நிகழ்த்திக்கொள்ள முடியுமா?

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விடுங்கள். நேஷனல்ஜியோக்ரஃபி சேனல் ஹிஸ்டரி சேனல் போன்ற தகவல்குவியலான தொலைக்காட்சிகளைப் பார்த்தாவது ஒருவர் அதை அடைய முடியுமா? அப்படி அடைந்த எவரையாவது பார்த்திருக்கிறோமா? வாசிப்பு என்பது முற்றிலும் வேறானது என்பதற்கு இந்த நடைமுறை அறிதல் ஒன்றே சரியான பதிலாகும்

வாசிப்பிலும் தொலைக்காட்சி நோக்குதலிலும் உள்ள வேறுபாடு என்ன? வாசிப்பில் ஒருவர் தன் தரப்பிலிருந்தும் தீவிரமான உழைப்பை அளித்தாகவேண்டும். வாசிப்பவற்றை அவர்தான் புனைந்துகொள்கிறார், அடுக்கிக்கொள்கிறார். பின்னர் அவர் அவற்றை விரிவாக்கிக்கொள்கிறார், விரித்தும் சுருக்கியும் தன்னுடையதென ஆக்கிக் கொள்கிறார். இந்தச் செயல்பாடு வழியாக அவர் ஒவ்வொரு வாசிப்பினூடாகவும் வளர்ந்துசெல்கிறார். தொலைக்காட்சி பார்த்தல், முகநூலில் மேய்தல் போன்றவற்றில் இந்த உழைப்பு இல்லை. ஆகவே அவர் இருந்த இடத்திலேயே நீடிக்கிறார்.

*

அபிலாஷின் கட்டுரையில் நான் முரண்படும் இடம் என்பது அவர் போதை என்பதை பொத்தாம்பொதுவாக வகுத்துக்கொள்கிறார் என்பதே. ’மிகத்தீவிரமாக, தவிர்க்க முடியாத ஈர்ப்புடன் ஒன்றில் ஈடுபடுவது போதை’ என்று அவர் வரையறுத்துக்கொள்கிறார் என நினைக்கிறேன். இத்தகைய கட்டுரைகளில் நான் எப்போதும் வலியுறுத்துவது ஒன்றுண்டு, நீங்கள் எதைப்பற்றிப் பேசுகிறீர்களோ அதை அக்கட்டுரைக்குள் வரையறுத்துச் சொல்லிவிடவேண்டும்] இந்த வரையறையால்தான் தீவிரவாசிப்பும் போதையே எனச் சொல்லமுடிகிறது

கலை, சிந்தனை ,தொழில்திறன், விளையாட்டு போன்ற எந்தத் துறையானாலும் நிபுணன் என்ற ஒருவன் உருவாக வேண்டுமென்றால் அவன் தவிர்க்க முடியாத பெரும் ஈர்ப்புடன் தன் துறையில் ஒவ்வொரு நாளும் பலமணிநேரம் என பல ஆண்டுகளைக்கடந்துவர வேண்டியிருக்கிறது. வலுக்கட்டாயமாக திட்டமிட்டு எவரும் அதைச் செய்யமுடியாது அதற்கு ;’அடிமை’ப்பட்டு தன்னை அர்ப்பணிக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும்.

எந்தத் துறையிலாயினும் சாதனையாளர்கள், வெற்றி பெற்றவர்கள் அவ்வாறு பெரும்தவத்தினூடாக கடந்து வந்தவர்களே. ஏன் குறைந்தபட்சத் திறமையை ஒன்றில் அடைவதற்கே கூட ஓரளவுக்கு அந்த அடிமைப்படுதல் தேவை. ஒரு வயலின் கலைஞன் தன் இசையை அந்த கம்பிகளில் உருவாக்குவதற்கு எத்தனை ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கவேண்டுமென்பதை நீங்கள் பார்க்கலாம். புறக்கட்டாயங்களுக்காக அதை ஆற்றத்தொடங்குபவர்கள் அதற்குள் நுழையவே முடியவில்லை . இசைக்கருவிகளை பயிலத் தொடங்கி அந்த அடிமைப்படல் நிகழாததனாலேயே சீக்கிரமே அதிலிருந்து விலகிய அனுபவம் உடையவர்களே நம்மில் பலரும்.

இசை ,விளையாட்டு போன்ற துறைகளில் உடலை அச்செயலுக்கு பழக்குவது என்பது முதற் சவால். ஒரு பேட்மின்டன் நிபுணர் தொடர்பயிற்சியினூடாக அந்த பேட்டை தன் உள்ளமென்றே மாற்றிக்கொள்ளவேண்டும். தன் எண்ணங்களையே வயலினில் தன்னிச்சையாக நிகழவிடும் இடத்திற்கு வயலின் கலைஞன் செல்லவேண்டியிருக்கிறது. ஆனால் இலக்கியத்திற்கு மேலும் அதிகமாக சில திறன்கள் தேவைப்படுகின்றன..

கலைகளுக்கு அக்கலையின் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதும் அதன் குறியீட்டமைப்பை பயின்று தன் ஆழ்மனதில் சரியான அளவில் பொருத்திக்கொள்வதும் மட்டுமே பயிற்சி எனப்படுகிறது. அதன் பிறகு உள்ளுணர்வின் தீவிரமே கலையாக இசையாக மலரும். இலக்கியத்தை பொறுத்த அளவில் இத்திறன்களுக்கு மேலதிகமாக இலக்கியவாதி ஓர் அறிஞனாகவும் இருந்தாக வேண்டியிருக்கிறது. புறவயமான வாழ்க்கை குறித்து அவனுக்குள் தெளிவான நுண்பதிவுகள் இருக்கவேண்டும். ஒரு பேருந்து நிலையத்தையோ ஒரு சிறைச்சாலையை ஒரு கழிப்பிடத்தையோ நுண்ணிய தகவல்களுடன் சொல்ல அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும். சமூகவியல் ,பொருளியல், அரசியல், பண்பாடு, வரலாறு ஆகிய தளங்களில் விரிவான வாசிப்பறி அமைந்திருக்கவேண்டும். .அதில் அவன் சென்று அடையக்கூடிய தொலைவிற்கு எல்லையே இல்லை. முதன்மையான இலக்கியவாதிகள் என்று நாம் அறியும் அனைவருமே தங்கள் அளவில் அறிஞர்களும்கூடத்தான்..

இந்த இருபாற்பட்ட தேவை காரணமாகவே மிக விரிவான ஒரு கூட்டுப்புழு பருவத்திற்கு பிறகே எழுத்தாளன் தன்னை முன்வைக்க முடிகிறது. ஓவியத்திலும் இசையிலும் குழந்தைமேதைகள் உருவாவது போல இலக்கியத்தில் நிகழ்வதில்லை என்பதற்கான காரணம் இது.

தொழில் ,வணிகத்திலும் கூட இந்த முழுஅர்ப்பணிப்பும் தீராத வெறியும் இருந்தாக வேண்டும் என்பதை நான் கவனித்திருக்கிறேன் அப்படி இருக்க அதை ஒரு போதை என்றும் தவிர்க்கவேண்டியதென்றும் கூறுவதற்கு என்ன பொருளிருக்க முடியும்? இவை அசாதாரண மனநிலைகள் என்று சொல்லலாம். ஆனால் சாதனையாளர்கள் அனைவருமே அசாதாரணர்கள்தான். சாதாரண மானுடத்திரளின் விதிகளால் அவர்கள் இயக்கப்படுவதில்லை.

சாதாரண மக்கள்திரள் தீவிரமனநிலைகளில் வாழ்வதல்ல எதிலுமே மிதமிஞ்சிப்போவதென்பது அதற்கு அச்சமூட்டுகிறது. அந்த மீறலை உடனடியாக சீரமைக்க அது துடிக்கிறது. ஏனெனில் அது சராசரிகளின் பெருந்தொகை சராசரிக்கு அப்பால் உள்ள ஒவ்வொன்றையும் இழுத்து தன்னில் வைத்துக்கொள்ளவே அது முயல்கிறது. தன்னுடைய துறையில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் ஒவ்வொருவரிடமும் அவ்வளவு செல்லாதே ,அளவோடு போதும் என்று அது சொல்லிக்கொண்டேதான் இருக்கும்.. ஒவ்வொரு பருவத்திற்கும் உரியவை உண்டு. அவற்றை ஆற்றி இயல்பாக நிறைவதே வாழ்க்கை என்று விளக்கும்.

ஆனால் பலவற்றை இழந்து ஒன்றில் மிதமிஞ்சிக் குவியும் ஆர்வத்தால்தான் நிபுணர்கள் உருவாகிறார்கள். எந்தத்துறையிலானாலும் நிபுணர்களை சராசரிச் சமூகம் கீழே இழுக்கும். அவர்களின் சாதனைக்குப்பின் அந்தச் சமூகம் கொண்டாடும். லால்குடி ஜெயராமனும், எம்.டி.ராமநாதனும் எத்தனை வெறியுடன் பயின்றிருப்பார்கள். ராமானுஜம் எப்படி எண்களன்றி பிறிதிலாது வாழ்ந்திருப்பார். அவர்களும் போதையடிமைகளே என்றால் நாம் நிராகரிப்பது எதை? எதிலும் நிபுணத்துவமே வேண்டாம் என்று சொல்ல வருகிறோமா என்ன?

சரி அது உடனடி வெற்றியாக மாறியாகவேண்டுமா? மோனியர் வில்லியம்ஸ் முப்பதாண்டுக்கால உழைப்பில் சம்ஸ்கிருத அகராதியை உருவாக்கினார். சிங்காரவேலு முதலியார் இருபதாண்டுக்காலம் அபிதானசிந்தாமணிக்காக உழைத்தார். பெ.தூரன் முப்பதாண்டுக்காலம் முதல் கலைக்களஞ்சியத்தை உருவாக்க பணியாற்றினார். இவர்கள் அடைந்த உலகியல் வெற்றி என்ன? வெறுமே புண்ணாக்குவணிகம் செய்த ஒருவர் மேலும் ’வெற்றியை’ அடைந்திருப்பார். நாம் புண்ணாக்குவணிகர்களின் சமூகமாக ஆகலாம் என்று சொல்லவருகிறோமா?

தன் கலையை தன் இலக்கியத்தை தன் சாதனையை நோக்கிச் செல்லும் ஒவ்வொருவருக்கும் இந்த சராசரிச் சமூகத்தின் மாபெரும் எதிர்விசை இருந்துகொண்டே இருக்கிறது. உண்மையில் அது தேவையும் கூட. மண்ணைப்பிளந்து வெளிவரும் திறன் இருக்கும் விதைகள் முளைத்தால் போதும் சராசரியின் எதிர்அழுத்தமே சாதனையாளர்களை தங்களை திரட்டிக்கொள்வதற்கும் ஆற்றலை முழுமையாக குவிப்பதற்கும் வழி வகுக்கிறதென்று தோன்றுகிறது.

*

போதை என்பது முற்றிலும் வேறானது. அதை நான் இப்படி வரையறை செய்வேன்.

  1. அது தன்னை அறியாமல் ஒன்றிற்கு முழுமையாக அடிமைப்படுதல்
  2. தன் பலவீனங்களால் ஒன்றில் சிக்கிக் கொள்ளுதல்
  3. அச்செயல் வழியாக எந்த ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளாதிருத்தல்

கஞ்சாவோ சூதாட்டமோ இணையமோ அது போதை என்றால் மேலே சொன்ன மூன்று விதிகளும் பொருந்தும். அறிவார்ந்த அர்ப்பணிப்பு நம்முள் உறையும் திறன் ஒன்றை நமக்குக் காட்டுகிறது. அதை ஒவ்வொரு நாளும் வளர்க்க உதவுகிறது. அதை வளர்ப்பதனூடாக நாம் நமது ஆளுமையை முழுமைப்படுத்துகிறது அது உருவாக்கும் நம்பிக்கையும் உற்சாகமுமே மீண்டும் அதில் நம்மைச் செலுத்துகின்றன

நேர்மாறாக போதை என்பது நமது பலவீனத்தால் தூண்டப்படுவது. பலவீனங்கள் பலவகையானவை .முதன்மையானது உடலே தான் காலை பத்து மணிக்கு ஒருகோப்பை வெந்நீர் அருந்தினால் ஒரு மாதத்திற்குள் அந்த வெந்நீர் இல்லாமல் உடல் அமையாது. எதையும் வழக்கப்படுத்திக்கொள்ளுதல் என்பது உடலின் இயல்புகளில் ஒன்று. அவ்வாறு வழக்கப்படுத்திக்கொள்வதினூடாகவே அது தனது செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக்கொள்ள முடியும். உடற்கடிகாரமே பெரும்பாலான போதை பழக்கத்தை உருவாக்குகிறது.

இரண்டாவது உளப்போதை. அது நம் உளக்குறைபாடுகளால் உருவாவது. தனிமையுணர்ச்சி, தாழ்வுணர்ச்சி, ஆணவம். குடியோ இணையமோ பொய்யான திரளுணர்வை அளிக்கலாம். மிகையான ஆணவத்தை நாம் நடிக்க களம் அமைக்கலாம். நாம் அங்கே விதவிதமாக தீவிரபாவனை கொள்கிறோம். அந்தக் கற்பனை உலகம் நம் மெய்யுலகுக்குள் நாம் எவரோ அதற்கு மாற்றாக இருப்பதனால் நாம் அதற்கு அடிமையாகிறோம்/.

சகமனிதர்களிடம் பழகுவதற்கான தயக்கமும் அதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான ஆர்வமின்மையும் கொண்டவர்களுக்கு இணையம் அடிமைப்படுத்தும் வெளி. துயிலின்மை உறவுகளில் பொருந்தமுடியாமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாம் அதற்கு ஆட்படுகிறோம்.

இந்த அடிமைப்படுதல் நமது பலவீனங்களிலிருந்து உருவாகி அப்பலவீனத்தை பெருக்கி நம்மை மீற முடியாது அதில் கட்டி வைக்குமென்றால் மட்டுமே அதை போதை என்று சொல்ல முடியும் உலகம் முழுக்க மக்கள் குடிக்கு எத்தனை அடிமைகளாக இருக்கிறார்கள். அதற்கிணையாகவே சூதாட்டத்திற்கும் அடிமையாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இவ்விரண்டையும் தெளிவாக வேறுபடுத்திக்கொண்டாலொழிய நடைமுறையில் மேலும் மேலும் குழப்பங்களைச் சென்றடைவோம்.

*

மித மிஞ்சிய வாசிப்பு என்று உண்டா. என்ன? அதை எவர் முடிவெடுப்பது? எவ்வளவு வாசித்தால் ஒருவன் தனக்கு தேவையான அறிவை விட மேலதிகமான அறிவை அடைந்தான் என்று சொல்ல முடியும்? நாம் பிரமிப்புடன் திரும்பிப்பார்க்கும் சிந்தனையாளர்கள் அனைவருமே மாபெரும் வாசகர்கள். என்னை நான் ஒரு மகத்தான வாசகன் என்றே சொல்லிக்கொள்வேன். ஆனால் நான் வழிபடுபவர்களின் முன் நான் மிகச்சிறிய வாசகன்.

போதைப்பழக்கமா செயலுக்கு எதிரானதா என் வளர்ச்சியை தடுக்கிறதா என்றெல்லாம் ஐயம் கொண்டு எனது வாசிப்பை நான் கட்டுப்படுத்திக் கொள்வேனென்றால் மிக வசதியான ஒரு அசட்டுத்தனத்தை தேர்வு செய்கிறேன் என்றுதான் பொருள் ஏற்கனவே பல்வேறு புறக்காரணிகளால் நல்ல வாசகனாக எழமுடியாத சூழல் இந்தியாவில் உள்ளது. நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் வாசிப்புக்கு எதிரானது. அதை மீறித்தான் வாசிக்கவேண்டியிருக்கிறது. ஒரு பொது இடத்தில் புத்தகத்தை எடுத்துப்பிரியுங்கள். சூழ்ந்திருப்பவர்களில் இருந்து ஒருவர் வாசிப்புக்கு எதிராக நம்மிடம் பேச ஆரம்பிப்பதைக் காணலாம்

வாசிப்புக்கு எதிராக எதைச் சொன்னாலும் மொத்தத் தமிழ்ச்சமூகமே பாய்ந்துவந்து ”ஆமாங்க, நெசந்தாங்க’ என்று சொல்லும். வாசிப்பதனால் சுயசிந்தனை இல்லாமலாகிறது என்ற ஒரு பொதுநம்பிக்கை இங்கே உண்டு. ’நான்லாம் வாழ்க்கையைத்தான் வாசிக்கிறேன்’ என்பார்கள்.இதெல்லாம் தமிழகத்திற்குள் மட்டும்தான் உலவுகின்றன. மெய்யாகவே சுயசிந்தனைகொண்ட மக்கள் வாழும் ஐரோப்பிய அமெரிக்கச் சமூகங்களில் வாசிப்பு நம்மைவிட நூறுமடங்கு பெரிய சமூக இயக்கமாக உள்ளது. இங்கே ,மொத்தமே ,மூன்றுநூல்களை வாசித்தபின் அதைச் சொல்கிறார்கள். இவர்களுக்கு அப்படி என்ன சுயசிந்தனை வந்துவிட்டது , அப்படி என்ன வாழ்க்கை வெற்றிபெற்றுவிட்டார்கள் என்று தெரியவுமில்லை.

உலகத்தில் எந்த மனிதனாவது தனக்குத் தேவையானவற்றுக்கு மேலதிகமான அறிவைச் சேமித்துக்கொண்டானென்று குற்றம் சொல்ல முடியுமா? நமது உளவியலாளர்கள் சற்று ஆபத்தானவர்கள். ஐன்ஸ்டீனோ டால்ஸ்டாயோ அவர்களிடம் இளமையில் ஏதேனும் மருத்துவத்திற்குச் சென்றிருந்தால் உடனடியாக வலுக்கட்டாயமாக குணப்படுத்திவிட்டிருப்பார்கள். அனைத்து மீறல்களையும் குணப்படுத்தும் இந்த ஆபத்தான மருத்துவத்தைப்பற்றி எச்சரிக்கையாக இருந்தாகவேண்டும்.

அப்படியானால் அனைத்து வாசிப்புகளும் உகந்தவையா? வாசித்துக்கொண்டே இருப்பது சிறந்ததா? அல்ல என்றே சொல்வேன். அபிலாஷ் இந்தக்கட்டுரையில் ஒரு முக்கியமான சிக்கலை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறார். என்று நான் எடுத்துக்கொள்கிறேன். மிதமிஞ்சிய வாசிப்பு என்று அவர் சொல்வதை தேவையற்ற்ற வாசிப்பு என்று எடுத்துக்கொள்ளவில்லை. பயனற்ற வாசிப்பு என்று எடுத்துக்கொள்கிறேன். கண்டிப்பாக பயனற்ற வாசிப்பு என்று உண்டு.

சமீபத்தில் ஒரு நண்பரைப் பார்த்தேன் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் பலமணிநேரம் அவர் விக்கிபீடியாவில் செலவழிக்கிறார். ஏதேனும் ஒரு விக்கிபிடியா பதிவுக்குள் சென்று அதிலிருந்து இணைவுகள் வழியாக மேலும் மேலும் பதிவுகளுக்குச் சென்றபின் வெளிவருவது அவர் வழக்கம். முற்றிலும் குழம்பிப்போனவராக எதைப்பற்றியும் எதையுமே சொல்லத் தகுதியற்றவராக அவர் இருக்கிறார் என்பதைக் கண்டேன்.

நமது ’வாசிப்ப்பு அடிமை’களில் ஒருபகுதியினர் இத்தகையவர்கள். அவர்கள் வாசிப்பது அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதற்காக அல்ல. அவர்கள் நூல்களில் இருந்து எதையுமே பெற்றுக்கொள்வதில்லை. அவர்களின் ஆணவத்தை நிறைவுபடுத்திக்கொள்வதற்காகவும் புறஉலகில் ஈடுபட முடியாத உட்சுருங்கலின் விளைவாகவும் சும்மா வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். நூல்கள் வழியாக ‘கடந்துசெல்கிறார்கள்’ இங்குதான் வாசிப்பு போதை என்றாகிறது.

முன்னரே சொன்னதுபோல ஒன்று உங்கள் பலவீனத்தை பெருக்குமென்றால் அது போதை என்று வரையறுப்போம். வாசிப்பும் இவர்களிடம் அவ்வாறு ஆகிறது. ஆகவேதான் ஏராளமாக வாசிப்பவர்களிடம் நான் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒன்று உண்டு வாசிப்பதை நாம் நினைவு கூர்வதேயில்லை. வாசிப்பவை நம்முள் எவ்வகையிலும் நீடித்திருப்பதில்லை. வாசிப்பவற்றை பற்றி என்ன எண்ணுகிறோம், நமது அகமொழியில் அவற்றை எவ்வாறு மாற்றி வைத்திருக்கிறோம் என்பதே முக்கியமானது. இவ்வாறு நாம் சிந்தித்தவையும் நம்முள் நமது சொற்களாக மாற்றி வைத்திருப்பவையும் மட்டுமே நம்மிடம் தங்கும். ஆகவேதான் வாசிப்பவற்றை பற்றி எழுதுங்கள் விவாதியுங்கள் உரையாடுங்கள் என்று என் நண்பர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஏராளமாக வாசித்து ஆனால் எப்போதும் அதை உள்வாங்காமலிருப்பவர்கள் பயனற்று வாசிப்பவர்கள் .அவர்களுக்குக் கிடைப்பது தன்னை மறந்து ஒரு நூலில் ஆழ்ந்திருக்கும் இன்பம் மட்டுமே இவர்களில் பெரும்பாலானவர்கள் கவனமற்ற வாசகர்களும்கூட. வெறுமே தகவல்களை மட்டும் தோராயமாக நினைவில் வைத்திருக்கிறார்கள். அத்தகவல்கள்கள் ஒருகட்டத்தில் மூளைக்குள் குவிந்துகொள்ள அதை தனது ஆணவத்தின் அடையாளமாக ஆக்கிக் கொள்கிறார்கள். எந்த துறை பற்றி பேசினாலும் ஐந்தாறு நூல்களை அவ்ர்கள் மேற்கோள் காட்டுவார்கள் ஓரிரு வரிகளை எடுத்து வைப்பார்கள் ஒருபோதும் நாம் எண்ணி நோக்கும் தகுதி கொண்ட நமது சிந்தனையை விரிக்கும் பார்வை கொண்ட எதையுமே அவர்களால் சொல்ல முடியாது.

இந்த பயனற்ற வாசிப்பை நாம் தவிர்த்தாகவேண்டும். வாசிக்கும் ஒவ்வொருவரும் வாசிப்பிலிருந்து எந்த அளவுக்கு பெற்றுக்கொண்டோம் என்பதை கவனிக்க வேண்டும். இணையத்தில் பார்க்கையில் மிகக்குறைவாகவே புத்தக விமர்சனங்களும் புத்தகம் சார்ந்த உரையாடல்கள் இருக்கின்றன என்பதே இங்கு வாசிப்பு உள்வாங்கப்படவே இல்லை என்பதற்கான சான்று பெரும்பாலான இலக்கிய விவாத அரங்குகளில் தெளிவாக தங்கள் கருத்தை முன்வைக்கும் ஓரிருவர் கூட இருப்பதில்லை.

*

எழுத்தாளன் எவ்வளவு வாசிக்க வேண்டும்? அது அவன் எந்த வகையான எழுத்தாளன் என்பதைப்பொறுத்து இருக்கிறது. தமிழில் மிகப்பெரும்பாலான எழுத்தாளர்கள் அவர்களுடைய அன்றாடவாழ்க்கை சார்ந்து சுயஅனுபவப் புலம் சார்ந்து ஓரிரு விஷயங்களை எழுதிய பிறகு நின்றுவிடுவதைப் பார்க்கலாம் அதற்கு அப்பால் சென்று ஒரு சமூகச் சித்திரத்தையோ ஒரு பண்பாட்டு விவாதத்தையோ ஒரு மாற்று வரலாற்று சித்திரத்தையோ உருவாக்கிய படைப்பாளிகள் இங்கு சிலரே

சுயஅனுபவம் சார்ந்து கதைகளை எழுதுபவர்களுக்கு பெரிதாக படிக்கவேண்டிய அவசியமில்லை. இலக்கியம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளும் அளவுக்கு படிப்பிருந்தால் போதுமானது. அந்த வடிவம் கைக்கு கிடைத்த பிறகு தன் வாழ்க்கை சார்ந்து தன் சூழல் சார்ந்து என்ன தெரியுமோ அதை எழுதினால் போதும் கண்மணி குணசேகரனோ தோப்பில் முகமது மீரானோ எழுதும் எழுத்துக்கள் அத்தகையவை.. ஆனால் பெரிய படைப்பாளிகள் பெரும் படிப்பாளிகளேதான். படிப்பிலிருந்து தங்கள் பார்வையையும் தங்களுக்கே உரிய மொழியையும் உருவாக்கிக்கொண்டவர்கள் அவர்கள்..

*

அபிலாஷ் முன்வைக்கும் இரு வினாக்கள். ஒன்று வாசிப்பு ஒருவனை சிறந்த தனைமனிதனாக மேம்படுத்துமா? வாழ்க்கையில் வெற்றிபெறச்செய்யுமா? இல்லை, அந்த அளவீடுகளே பிழையானவை. வாசிப்பு சாதாரணமான ‘நற்குணங்களை’ அளிக்கும் என்று ஒருபோதும் சொல்லமுடியாது. நற்குணங்கள் என்பவை நம் சமூகத்தால் வரையறைசெய்யப்பட்டு நெடுநாட்களாக நீடிப்பவை. அவற்றை சமூகத்தில் இருந்து கற்றுக்கொண்டு நம்பி ஒழுகினாலே போதும் அதற்கு வாசிப்பு தேவையில்லை.

உலகியல்வாழ்க்கையில் வெற்றிபெற வாசிப்பு இன்றியமையாததா? இல்லை. அதற்கு உரியதுறைகளில் தீவிரமான ஈடுபாடும் கூடவே நல்வாய்ப்புகளும் இருந்தால்போதுமானது.

வாசிப்பு ஒருவனை மேலும் கூர்மையான நோக்கு கொண்டவனாக, மேலும் நுண்ணுணர்வுகொண்டவனாக ஆக்குகிறது. இவ்விரு அம்சங்களுமே அவனை சராசரியிலிருந்து விலக்குகின்றன. ஆகவே அவன் தனிமைப்படுவான். பிறரிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவும் செய்வான். ஆகவே சமூகம் விரும்புபவனாக அவன் ஆகாமல்போக வாய்ப்புண்டு. கூரிய நுண்ணுணர்வு காரணமாக அவன் உணர்வுச்சமநிலை அற்றவனாக ஆகக்கூடும். ஆகவே அவன் ‘நல்லியல்பு’ எனப்படும் சமூகக் குணங்களை இழக்கவும் வாய்ப்புண்டு.

வாசிப்பு காரணமாக சில தொழில்.வணிகத்துறைகளில் வெறித்தனமான ஈடுபாட்டை அளிக்க அவனால் முடியாமல்போகலாம். ஆகவே ஆரம்பகட்டத்தில் வாழ்க்கைவெற்றிகளை அவன் ஈட்டாமல் செல்லக்கூடும். ஐயமற்ற வெறி அவனுக்கு உருவாகாமல் போகலாம். ஆனால் அடுத்தகட்டத்தில் மெய்யாகவே பெரிய தொழில் வணிகத்துறைகளை உருவாக்கி அதில் முன்நடையாளர்களாக இருப்பவர்களைப் பார்த்தால் கணிசமான வாசிப்பினூடாகவே அவர்கள் அங்கே வந்துசேர்ந்திருப்பதை காணமுடியும். அதுவே தன்னையும் தன் சூழலையும்குறித்த தர்க்கபூர்வமான புரிதல்களை அவர்களுக்கு அளிக்கிறது. அவர்களால்தான் கனவுகாணமுடியும், வழிநடத்தமுடியும்.

வாசிப்பு வழியாக மிகச்சிறந்த சராசரியாக ஒருவன் ஆவதில்லை. சராசரியிலிருந்து விலகி வெளியே செல்கிறான். சராசரிகளுடன் மோதுகிறான். அதற்கான எல்லா அல்லல்களும் சிலசமயம் சரிவுகளும் அவனுக்கு உண்டு. ஆனால் சராசரிகளால் அல்ல, அதைக் கடந்துசெல்பவர்களால்தான் ஒரு சமூகம் சிந்திக்கிறது, முன்னேறுகிறது. நான் பார்த்தவரை அமெரிக்க சமூகத்திற்கும் இந்தியச்சமூகத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். இங்கே சராசரிகள்தான் அனேகமாக அனைவரும். ‘எல்லாரையும்போல இருப்பதே’ இங்குள்ள வாழ்க்கைநோக்கு. சராசரியை மீற ஏறத்தாழ அனைவருமே முயல்வதும் கணிசமானவர்கள் மீறியவர்களாக இருப்பதும்தான் அமெரிக்கச் சமூகத்தின் இயல்பு. ஆகவேதான் அங்கே சாதனைகள் மிகுதி. இங்கே இருந்துகொண்டிருப்பதே இயல்பாக நிகழ்கிறது.

***

முந்தைய கட்டுரைவேதசகாயகுமார், இயற்கைவேளாண்மை,வசை
அடுத்த கட்டுரைவாசிப்பும் இலக்கிய வாசிப்பும்