மெய்யான பெருமிதங்கள் எவை?

pot

தாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச்சித்திரம்

ஜெமோ,

நீ ஒரு மலையாளி. மலையாளிக்குத் தமிழ் வரலாற்றுப்பெருமிதம் தெரியாது. ஆகவேதான் மட்டம் தட்டுகிறாய். உன் வரலாற்றை இப்படி மட்டம் தட்டுவாயா? வந்தேறிய நாடு பிடிக்கவில்லை என்றால் உன் மண்ணுக்கு ஓடவேண்டியதுதானே?

மருது

***

அன்புள்ள மருது

ஒரே ஒரு சின்ன விளக்கம். மலையாளமும், கேரளமும் உருவானது பதினேழாம் நூற்றாண்டில்தான். அதற்கு முன் கேரளமும் தமிழ்நாடே. சேரநாடு என்பார்கள். நான் பேசும் தொல்வரலாறு என்னுடைய தொல்வரலாறுதான். சரியா?

நான் வாழ்வது என் பூர்வீக நிலத்தில்தான். என் முன்னோர் இங்கேதான் இருந்தார்கள்.

ஜெ

***

coin
பாண்டியர் நாணயம் கிபி ஒன்றாம் நூற்றாண்டு

அன்புள்ள ஜெமோ

தமிழ் வரலாறு சார்ந்த போலிப்பெருமிதங்களைப் பற்றிச் சொன்னீர்கள். எனக்கு இரண்டு கேள்விகள். ஒன்று, தமிழர்கள் என்று எதனடிப்படையில் வகுத்துக்கொள்வது? எவரை தமிழர் அல்ல என்று சொல்வது? இன்னொன்று, நமக்கு உண்மையான பெருமிதங்கள் ஏதுமில்லையா?

சக்தி

***

அன்புள்ள சக்தி,

தமிழகத்தில் தமிழ்பேசி வாழ்பவர்கள் அனைவருமே தமிழர்கள்தான். இந்த மண்ணுக்கும் பண்பாட்டுக்கும் அவர்களும் சொந்தக்காரர்கள்தான். தொல்தமிழர் வரலாற்றைப் பற்றிப் பேசுவதனால்தான் நான் எப்போதெல்லாம் படையெடுப்பு நிகழ்ந்தது, எவரெல்லாம் வந்தனர் என்று சொல்கிறேன்.

இங்கல்ல, உலகம் முழுக்க அனைத்து நாடுகளும் வரலாற்றுக்காலம் முழுக்க தொடர்ச்சியான மக்கள் குடியேற்றம் மூலமே உருவாகி வந்துள்ளன. இங்கிலாந்தின் அரசகுடியே ஜெர்மனிய வேர் கொண்டது என நாம் அறிவோம். ஆகவே தொல்குடியை கண்டுபிடிக்க பின்னால் நகர்ந்துசெல்தும் அசல் பண்பாடு என ஒரு தொன்மையான பழங்குடி வாழ்க்கையை கற்பனையாக உருவாக்கிக்கொள்வதும் எல்லாம் பாஸிஸ்டுகள் மட்டுமே செய்யும் வேலை.

நாயக்கர்கள் இன்றைய தமிழகத்தின் சிற்பிகள். இன்றும் நம் பொருளியலை நடத்தும் ஏரிகள்.,சாலைகள், வணிகநகர்கள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. நம் ஆலயங்களில் மிகப்பெரும்பகுதி அவர்களால் கட்டப்பட்டவை, அல்லது புதுப்பிக்கப்பட்டவை. அதற்கு முன் வந்த பல்லவர்களே நம் சிற்பக்கலையின் அடித்தளத்தை அமைத்தவர்கள். தமிழகத்தின் பெருநகர்களில் பலவற்றை அமைத்த காடுவெட்டிகள். அதற்கும் முன் களப்பிரர் காலத்திலேயே தமிழகத்தின் நீதிநூல்கள் அனைத்தும் உருவாயின. திருக்குறள் உட்பட. சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. இலக்கணநூல்கள் உருவாயின. இங்கே விரிவான வணிகப்பாதைகளும், சந்தைகளும் அமைந்தன.

தமிழகம் என நாம் இன்று சொல்லும் சமூகமும், பண்பாடும் இப்படி தொடர்ச்சியாக நிகழ்ந்த குடியேற்றம் வழியாக உருவாகி வந்தவை. எந்தப் பண்பாடும் உரையாடலின் விளைவாகவே வளர்ந்தெழும். தூய்மைபேணும் மக்கள் பழங்குடிகளாகவே எஞ்சுவர். இதுவே வரலாற்றின் பரிணாமவிதி. நான் எதிர்ப்பது அந்தத் தூய்மைவாதத்தின் உள்ளீடற்ற தன்மையைத்தான்

தொல்மரபு கொண்ட தமிழர்களாகிய நாம் யார்? சோழப்பேரரசும் பின்னர் நாயக்கர் பேரரசுமே நம் மண்ணில் அமைந்த உண்மையான பேரரசுகள். பிற எவரும் மொத்த தமிழகத்தையும் ஆண்டதாக உறுதியான வரலாற்றுச் சான்று இல்லை. நாம் குறைவான மக்கள்தொகையும், குறைவான வளநிலமும் கொண்ட சிறிய நிலப்பகுதி. ஆகவே சிறிய சமூகம்

உலகைவெல்வதோ, வெல்லப்படாதிருப்பதோ அல்ல மெய்யான பெருமிதம். அப்படிப்பார்த்தால் ஜெங்கிஸ்கானும் தைமூரும்தான் மாபெரும் உலகப்பெருமிதங்கள். அந்த நோக்கே பாமரத்தனமானது. மெய்யான தமிழ்ப்பெருமிதம் என்றால் என்ன என்று அறியாதநிலையில் எழுவது

தமிழரே உலகின் தொல்குடி என்றெல்லாம் பொய்வரலாறுகளை கண்டடைவதுபோல அசட்டுத்தனம் வேறில்லை. கொஞ்சம் உலகவரலாற்று அறிவிருந்தால் நாம் அத்தகைய பேச்சுக்களை தவிர்ப்போம். உலகிலுள்ள மொழிகளில், பண்பாடுகளில் பெரும்பாலானவை மானுடகுலம் தோன்றியபோதே ஏதேனும் ஒருவடிவில் தோன்றியவைதான். தமிழ்மொழியை விடத் தொன்மையான மொழிகள். நம்மைவிட மிகமிகப்பழைமையான பண்பாடுகள் உலகில் ஏராளமாக உள்ளன. அவை வரலாற்றுரீதியாக நிறுவப்பட்டுள்ளன. .

இந்தியாவிலேயே அனைத்துப்பகுதிகளிலும் கற்காலம் முதல் தொடர்ச்சியாக தொல்லியல் தடையங்கள் கிடைத்துள்ளன. ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் ராஜஸ்தான், குஜராத், பிகார் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவரைக் கிடைத்த தமிழகத் தொல்லியல் தடையங்கள் அனைத்துமே காலத்தால் அவற்றுக்குப் பின்னால் வந்தவைதான்.

1200px-Temple_de_Mînâkshî01

தமிழர் எதன்பொருட்டு பெருமிதம் கொள்ளலாம்? இப்படித் தொகுத்துக்கொள்கிறேன்.

அ. ஈராயிரமாண்டுக்காலம் அறுபடாது தொடர்ந்த பண்பாட்டுக்காக.

இத்தகைய தொடர்ச்சியை உலக வரலாற்றில் அரிதாகவே காணமுடியும். நம்மை விடத் தொன்மையான எகிப்திய, கிரேக்க, ரோம பண்பாடுகள் அறுபட்டு தொல்தடையங்களாகவே மீட்கப்பட்டன. தமிழில் சங்க இலக்கியம் முதல் இன்றுவரை கலை- இலக்கிய- பண்பாட்டுத் தொடர்ச்சி உள்ளது.   எப்போதுமே அது அறுபட்டதில்லை.

இந்த மகத்தான தொடர்ச்சி எப்படி உருவாகி நீடிக்கிறது? அதை உணர்ந்தால் நம் மரபை நாம் உணர்ந்தவர்களாவோம். எந்த வகையான எதிர்மறைச் செயல்பாடுகள் வழியாகவும் அல்ல என்பதை நம் மரபைத் திரும்பி நோக்கினால் அறிவோம். ஒருபோதும் ஓயாத ஆக்கபூர்வமான படைப்புச்செயல் இங்கே நிகழ்ந்துள்ளது. பெருங்கவிஞர்களின் பேரறிஞர்களின் நிரை வாழையடி வாழையாக வந்துகொண்டே இருக்கிறது.

ஏனென்றால் இந்தப் பண்பாடு தன் ‘தூய்மையை’ காத்து ஒடுங்கி இறுகிக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. உலகிலுள்ள அனைத்து படைப்பூக்கம் கொண்ட பண்பாடுகளிடமும் காணும் இயல்பு உரையாடவும்,  தன் தனியியல்புக்கு ஏற்ப அனைத்தையும் செரித்து தன்னதாக்கிக்கொண்டு  மேலும் வளரவும் அவை கொண்டிருக்கும் ஆற்றல். ஈராயிரமாண்டுகளாக அது தமிழில் உள்ளது.

இந்தியாவில் நிகழ்ந்த அத்தனை தத்துவ விவாதங்களும் தமிழிலும் நடந்தன. அத்தனை இலக்கிய அலைகளும் இங்கே மேலும் தீவிரம் கொண்டன. அத்தனை கலைவடிவங்களும் இங்கு வந்து தனித்துவம் கொண்டு வளர்ந்தன. வரலாறு தொடங்கும்போதே இங்கே வைதிகமதமும் சமணமும் பௌத்தமும் வந்தன. அவை அனைத்துக்கும் முற்றிலும் தமிழ்த்தன்மைகொண்ட வடிவம் இங்கே உள்ளது.தமிழ்வைதிகம், தமிழ் சமணம், தமிழ்பௌத்தம் ஆகியவை தனக்கே உரிய அழகியலும் கொள்கைகளும் கொண்டவை.

ஆ. நம் இலக்கியப்படைப்புகளுக்காக

உலக அளவில் நோக்கினால் தமிழகம் மிகச்சிறிய நிலப்பகுதி. பலவகையான அரசியல் அலைக்கழிப்புகளுக்கு ஆளானது. ஆனால் தமிழ் மொழி அடைந்துள்ள இலக்கியச் செல்வம் உலக அறிவுத்தொகையில் முக்கியமான ஒரு பகுதி. நாட்டாரிலக்கியத்திலிருந்து நேரடியாகச் செவ்விலக்கியமாக மலர்ந்த சங்கப்பாடல்கள், காப்பியங்கள், நீதிநூல்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற பெருங்காவியங்கள், மாபெரும் பக்தி இலக்கியங்கள், மொழியழகுமிக்க சிற்றிலக்கியங்கள் என நம்மிடமிருக்கும் பெருந்தொகை அழிவற்ற செல்வம்

சமகால அரசியலுக்காக, சாதி மதம் சார்ந்த காழ்ப்புகளுக்காக இந்த மாபெரும் அறிவுத்தொகையில் ஏதேனும் பகுதியை வெறுப்பவனும் நிராகரிப்பவனும் ஒருபோதும் தமிழ்ப்பண்பாட்டுக்கு நலம்புரிபவன் அல்ல.அவன் இப்பெருமரபைக் குறுக்கி அழிக்க முயல்பவன்.

இ. நம் தத்துவங்களுக்காக

இந்தியாவின் முக்கியமான தத்துவ தரிசனங்களில் நான்கு தமிழ்நிலத்தில் தோன்றியவை. உலக தத்துவ சிந்தனையிலேயே அவற்றின் இடம் முக்கியமானது. விக்ஞானவாத பௌத்தம் காஞ்சிபுரத்தில் தோன்றிய திக்நாகர், தர்மகீர்த்தி ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்டது. அத்வைதம் சேரநாட்டில் பிறந்த சங்கரராலும் விசிஷ்டாத்வைதம் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜராலும் உருவாக்கப்பட்டது. சைவசித்தாந்தம் தமிழகத்திற்குரிய தத்துவமரபு அதன் பிறிதொரு வடிவான வள்ளலாரின் ஜோதி தரிசனம் வரை அது அழியாது தொடர்கிறது. இந்த ஒவ்வொரு தத்துவ மரபிலும் பேரறிஞர்களின் தலைமுறைத் தொடர்ச்சியை நாம் காணமுடியும்.

ஈ. நம் கட்டிட, சிற்பக்கலைக்காக.

தமிழகக் கோயில்கலை இந்தியாவின் தட்சிணக் கலைமரபின் ஒரு பகுதி. ஆனால் தமிழகத்தில்தான் அது தன் முழுமையான வளர்ச்சியை அடைந்தது. பிறபகுதிகளில் அரசியல்காரணங்களால் கட்டிடக்கலை வளர்ச்சி நிலைத்துவிட்டது. இங்கு கிடைத்த உறுதியான கருங்கல்லும், ஆயிரமாண்டுக்கால சிற்ப மரபும் இணைந்து உருவான கலை கட்டிட அமைப்பிலும் சிற்பங்களிலும் தனக்கே உரிய உச்சங்களைச் சென்றடைந்தது

நம் உலோகச்சிற்பக் கலை தமிழகத்திற்கே உரிய தனித்தன்மை கொண்டது. உலோகச்சிற்பங்களில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் சிறப்பான பலமரபுகள் இருந்தாலும் தஞ்சை உலோகக்கலை மரபு அடைந்த முழுமையை வேறெங்கும் காணமுடியாது.

hinduism

இவை நான்கும் உலகப் பண்பாட்டுப் பின்புலத்தில் வைத்து நோக்கினாலும்கூட முக்கியமானவை. சீனா, எகிப்திய, கிரேக்கப் பண்பாடுகள் நம்மைவிட மிகத் தொன்மையானவை. மிகப்பிரம்மாண்டமானவை. ஆனால் இந்தச் சிறியநிலத்தில் நாம் அடைந்த பண்பாட்டுச் சாதனைகள் ஒப்புநோக்க மகத்தானவையே.

சற்று எண்ணி நோக்குங்கள், இன்று தமிழர்களில் எத்தனைபேருக்கு மேலே சொன்ன உண்மையான பெருமிதங்கள் தெரியும்? இவற்றில் ஓரளவேனும் அறிமுகமுள்ளவர்கள், ஒரு அயலவரிடம் இவற்றைப்பற்றி சற்றேனும் சொல்லத்தெரிந்தவர்கள் எத்தனைபேர்? எதுவுமே தெரியாது என்னும் முழுஅறியாமையிலிருந்தே பொய்யான பெருமிதங்களை உருவாக்கிப் பேசிக்கொண்டிருக்கும் போக்கு ஆரம்பிக்கிறது.

இன்று தமிழர் எதன்பொருட்டெல்லாம் பெருமிதம்கொள்ளவேண்டுமோ அவையெல்லாம் அழியவிடப்பட்டுள்ளன. தமிழ்ப்பேரிலக்கியங்களை மெய்ப்பு நோக்கி அச்சிடவே ஆளில்லை என்னும் நிலை. அவற்றை பயில்பவர் மிகமிகச்சிலர். நம் தத்துவங்களையும் கலையையும் அறிந்த அறிஞர்கள் விரல்விட்டு எண்ணுமளவுக்குக்கூட இங்கில்லை. அவர்களுக்கு பொதுமக்கள் நடுவே எந்த அறிமுகமும் மதிப்பும் இல்லை. ஆனால் தமிழர்களுக்கு எதிரிகளைக் கண்டடைந்து ஓயாமல் தமிழரை உசுப்பிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ஏராளம். அவர்களை நம்பி எகிறிக்குதிக்கும் இளைஞர்களும் நிறையபேர். அவர்களால் தமிழுக்கு இழிவே அன்றி எந்த நன்மையும் இல்லை.

நமக்கு உண்மையான ஆர்வமும் பெருமிதமும் இருக்கும் என்றால் தமிழ் இலக்கியமும், கலைகளும் இவ்வாறு கைவிடப்பட்டிருக்காது. தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் இப்படி அருகியிருக்கமாட்டார்கள். நம்முடைய பெருமிதப்பிரகடனங்கள் அனைத்தும் நம் அறியாமையையும் சிறுமையையும் மறைத்துக்கொள்ளும் நாடகங்கள் மட்டுமே

நினைவறிந்தநாள் முதல் தமிழிலக்கியத்தில், தத்துவத்தில், கலைகளில் ஈடுபட்டு வருபவன் நான். அவற்றைப்பற்றி, அத்துறைகளின் அறிஞர்களைப்பற்றி எழுதி வருபவன். பல அறிஞர்களை, நூல்களை தேடினால் என் இணையதளத்திற்கே கொண்டுவிடுகிறது கூகிள். நவீனத்தமிழிலக்கியத்தில் தூயதமிழில் எழுதப்பட்ட படைப்புகள் என்றால் கொற்றவையும், வெண்முரசும்தான்

எனக்கு என் மரபைப்பற்றிய உண்மையான பெருமிதம் உண்டு. ஆகவேதான் பொய்யான பெருமிதங்களை விலக்குகிறேன். அப்பொய்களால் என் மரபின் வெற்றிகளையும் சேர்ந்த்தே ஏளனத்துக்குரியவை ஆக்குகிறார்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68