‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49

48. பொற்சுழி

flowerகஜன் ஒரு மரத்தின் கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்தான். முரசொலிகள் அமைவதற்குள்ளாகவே காட்டுக்குள் இருந்து அத்தனை ஏவலர்களும் வெளியேறிவிட்டிருந்தார்கள். இறுதியாக கீசகனின் காவலர்கள் பதற்றமில்லாமல் மெல்லிய குரலில் பேசியபடி வெளியே சென்றனர். கிரந்திகன் கையில் புரவிச்சவுக்குடன் தலைகுனிந்து தனக்குள் ஆழ்ந்தவனாக அவர்களை தொடர்ந்து சென்றான். காட்டுக்குள் ஆண்கள் என அரசரும் கீசகனும் குங்கனும் உத்தரனும் மட்டுமே இருக்கிறார்கள். வேறு எவரேனும் உண்டா என மீண்டும் கணக்கிட்டுக்கொண்டபின் புன்னகையுடன் ‘நானும்’ என்று சொல்லிக்கொண்டான்.

நிலவின் ஒளி பெருகிக்கொண்டே வந்தது. அது விழிகளுக்குள் புகுந்து அங்கிருந்த அத்தனை காட்சிநினைவுகளையும் உருமாற்றியது. கடந்தவைகூட நிலவின் தளிரொளியில் வண்ணமிழந்தவையாகவே எழுந்தன. பின்னர் இலைகளின் பூமுட்களைக்கூட நோக்குமளவுக்கு விழிக்கூர் அமைந்தது. தரையில் கிடந்த ஒவ்வொரு சிறு மணற்பருவையும் தனித்து நோக்கமுடிந்தது. அவன் பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டு நின்றிருந்தான். அவன் அறிந்த எதுவும் அங்கில்லை. மலர்கள், இலைகள், கிளைகள், அடிமரங்கள், உருளைப்பாறைகள், பூழிப்பரப்பு அனைத்தும் அப்போது பிறிதெங்கிருந்தோ கொண்டுவந்து பரப்பப்பட்டவை. முன்பு எவ்விழியாலும் நோக்கப்படாதவை.

ஓசைகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. சிள்வண்டுகளின் ஓசையின் வெள்ளிக்கொடிச்சரடில் கட்டப்பட்ட வண்ணத்தோரணங்கள் என ஒலிகள். பொன்னிறப் பறவைச் சிணுங்கல்கள், நீலநிறத்தில் காற்றைத் துழாவும் சிறகோசைகள், கருநீல கூகைக்குழறல்கள், செம்பெருக்காக ஓடைநீரொலிகள். எதிர்பாராதபடி ஒரு பறவை ரீக் ரீக் ரிப் என்றது. எங்கோ ஒரு குரல் ர்ர்ர்ர்ர்ச் என்றது. காட்டு ஆடு, அல்லது மான். அவன் மான்விழிகளை கண்டான். அவனுக்கு மிக அருகே இரு நீர்த்துளி மின்னல்களென விழிசூடிய இருள்வரைவு. பின் கொம்புகள், காதசைவுகள், கழுத்து வளைவு. பின் மென்மயிர்ப்பிசிறு, வாலாட்டல். அதற்குப் பின்னால் மேலும் மான்கள். மேலும் மேலும் மான்கள். அவை செவிகூர்ந்து அவனை நோக்கின. விலாவும் பிடரியும் சிலிர்த்தன. அவற்றை பிறர் நோக்கக்கூடும். அவர்கள் அவனை நோக்கக்கூடும்.

அப்போதுதான் அவன் அங்கிருந்து இங்குள்ள தன்னை நோக்கினான். வண்ணத் தலைப்பாகையும் மேலாடையும் நிலவொளியில் பொந்தித்தெரிந்தன. அவன் அவற்றை உருவிச் சுருட்டி அந்த மரத்தின் மேலேயே வைத்தான். மேலும் மேலேறிச்சென்று காட்டை பார்க்கவேண்டுமென்று தோன்றியது. இலைகளை கலைக்காமல் கிளைகளில் கால்வைத்து அரணைபோல மேலேறிச்சென்றான். கிளைகளுக்குள் இலைகள் காற்றில் உலைந்துகொண்டிருந்தன. அணிப்பெண்டிரின் ஆடை நலுங்கலென ஓசை. ஆனால் காற்றே இல்லை. திகைப்புக்கணம் கடந்ததும் அவன் காகங்களை பார்த்தான். கிளைகளின் இலைத்தழைப்புக்குள் அவை சிறகுகள் ஒலிக்க சுற்றிப் பறந்துகொண்டிருந்தன.

விழிமயக்கா என ஐயுற்றவனாக அவன் பார்த்துக்கொண்டே இருந்தான். காகங்களின் விழிகளைக்கூட நோக்க முடிந்தது. அவை வெறிகொண்டிருந்தன. அல்லது காகக் கண்கள் எப்போதும் அப்படித்தானா? எத்தனை காகங்கள்! அவன் நோக்க நோக்க அவை பெருகின. மேலும் எழுந்து இலைத்தழைப்புக்குள் நோக்கியபோது இலைகளுக்கு நிகராக சிறகுகள் என உள்ளம் மலைத்தது. பல்லாயிரம், பல இலக்கம் காகங்கள். அத்தனை காகங்கள் இக்காட்டில் இருந்தனவா? அவை முன்னர் ஏன் விழிகளுக்கு படவில்லை?

சூழ்ந்திருந்த இலைகள் மிளிர்ந்து அணைந்தன. மெல்லிய கனைப்பொலிபோல் ஓர் இடியோசை எழுந்தது. முரசில் தவறாக கோல் விழுந்ததுபோல. இடியோசையா? அவன் மேலேறிச் சென்று உச்சிக்கிளையில் அமர்ந்து வானை நோக்கினான். உப்புப்பரலைப் பரப்பியதுபோல விண்மீன்கள் இடைவெளியில்லாமல் செறிந்த கீழ்வானம். அதன் நடுவே நிலா. அத்தனை பெரிய நிலவை அவன் கண்டதே இல்லை. முதல் நோக்கில் அது செந்தாமரைநிறம் என்று தோன்றியது. எரிசூழ் அனல். நோக்குகையில் பொன்மஞ்சளென்றாகியது. வெண்ணிறமோ என உளம் தயங்கியதும் அப்படியே மாறியது. சுழல்கிறதா, விளிம்புகள் அலைபாய்கின்றனவா, மெல்ல எழுகிறதா, அவ்வண்ணமே நிலைகொள்கிறதா? சூழ்ந்திருந்த முகில்தீற்றல்களின் விளிம்புகள் வாள்முனைகள்போல் ஒளிகொண்டிருந்தன. அருகே நின்றிருந்த தாரை சொட்டிவிடும் துளியென ததும்பியது.

மேலைச்சரிவில் மின்னல் ஒன்று துடித்தது. நெருப்புத் துளி ஒன்றை சுழற்றி இழுத்ததுபோல. எத்தனை நூறு கிளைகள்! ஒரு கணத்தில் வானிலெழுந்தமைந்த விரிசல். காடு முழுக்க இடியோசை பெருகிப் பரவி அமைய சீவிடுகளின் ஒலி நின்றுவிட்டிருப்பதை கண்டான். முகில்திரளில் எங்கோ மெல்லிய சிம்மக்குரல் என இடியின் ஒலியெச்சம். காகங்கள் மறைந்துவிட்டிருந்தன. மெய்யாகவா? எங்கே சென்றன? கீழிறங்கி வந்து கிளைகளுக்குள் விழியூடுருவினான். அவை தென்படவில்லை. இருளை கூர்ந்து நோக்க நோக்க இலைகளின் நெளிவிளிம்புகள்கூட தெரிந்தன. காகங்கள் இல்லை.

அவன் சிறகசைவை கண்டான். முதற்கண விதிர்ப்புக்குப்பின் அவை நிலத்தில் படபடப்பதை உணர்ந்தான். மெல்ல இறங்கியபடி நிலத்தையே நோக்கினான். நிலவொளியில் இலைநிழல்கள் பரவி உயிர்கொண்டு நெளிந்து அலையடித்துக்கொண்டிருந்தது மண். இலையசைவுகளின் ஊடாக காகச் சிறகுகளும் ஓசையில்லாமல் வீசிச் சுழன்றுகொண்டிருந்தன. அவன் நீள்மூச்சுவிட்டு கண்களை மூடிக்கொண்டான். அவன் அறிந்த உலகின் அனைத்து நெறிகளும் பிறழத் தொடங்கிவிட்டன என்று உள்ளுணர்வு சொன்னது. வானையும் மண்ணையும் மெய்யாகவே ஆளும் வல்லமைகள் எழுந்து உருசூடி போர்முகம் கொண்டுவிட்டன.

அப்போது அவன் வெளியேறிச் சென்றுவிட விரும்பினான். இறங்கி புதர்களினூடாகச் சென்று காவல்முற்றத்தை அடைந்துவிடலாம். ஆனால் கரவுக்காட்டைச் சூழ்ந்து அசோகமரங்களை நெருக்கமாக நட்டு ஊடே முள்மரங்கள் வளர்த்து சேர்த்து முட்கொடிகளால் கட்டி புகமுடியா வேலி அமைத்திருந்தார்கள். பல தலைமுறைகளாக வளர்ந்து அடர்ந்த உயிருள்ள பெருங்கோட்டையென வேல்முனைகளும் அம்புமுனைகளும் செறிந்து நின்றிருந்தது. அதற்கு அப்பால் திறந்த வெற்றிடம். வேலியைக் கடக்க எவ்வுயிராலும் இயலாது. கடந்து அவ்வெற்றிடத்தை அடைந்தால் காவல்மாடத்தில் இருப்பவனுக்கு நன்றாகவே தெரியும். முதலில் நஞ்சூட்டப்பட்ட சிற்றம்புதான் பறந்து வரும்.

அவன் பெருமூச்சுடன் மீண்டும் கிளையிலேயே அமர்ந்துகொண்டான். இன்றிரவை இங்கே கழித்தாகவேண்டும். வேறு வழியே இல்லை. இன்றிரவுக்குப்பின் நான் பிறிதொருவனாக ஆகிவிடுவேன். காணும் உலகல்ல நிகழும் உலகென்று அறிந்தவனாக மாறிவிட்டிருப்பேன். காலற்ற பாம்பின் உடலுக்குள் நூறுகால்கள் அசைவதை கண்டவன்.

flowerஅடுமனை அமைக்கும் பணிகள் மிக விரைவாகவே முடிந்துவிட்டன. கொட்டகையின் நான்குபக்கமும் திறந்திருந்தமையால் அங்கே சமைப்பது கடினம் என சம்பவன் முதலில் எண்ணினான். ஏவலனை அழைத்து “இதென்ன கூரைமட்டும் இருக்கிறது? இங்கே எப்படி சமைப்பது?” என்றான். அவன் “மழைபெய்ய வாய்ப்பே இல்லை, அடுமனையாளரே” என்றான். “மழை அல்ல, எங்களுக்கு காற்றுதான் முதல் இடர். அது அடுப்புத்தழலை வெம்மைகொள்ளச் செய்யாது.” அவன் “நான் என்ன செய்ய? வேண்டுமென்றால் தட்டிகளால் சுவர்களை அமைக்கிறேன். சற்று பொழுதாகும்” என்றான்.

சம்பவன் “இரு, நான் அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என வலவனை நோக்கி சென்றான். அவன் அருகணைந்ததுமே வலவன் திரும்பி நோக்கி “அடுமனைக் காற்றுதானே? அதை மறைக்கலாம்… ஒன்றும் சிக்கலில்லை” என்றான். சம்பவன் மேலும் ஏதோ சொல்ல வர “பொருட்களை சீர் பிரித்து வைக்கச்சொல். அனைவரும் அங்கே இருந்தாகவேண்டும்… அரசகுடியினர் நிலவெழுந்ததுமே உண்ண விழைவார்கள்” என்றான். “ஆணை” என்றான் சம்பவன். முன்னரே அமைக்கப்பட்டிருந்த மண் அடுப்புகளுக்குமேல் அங்கே கிடந்த கற்பாறைகளை உருட்டிக்கொண்டுவந்து பெரிய அடுப்புகளை அமைத்தான் வலவன். சம்பவனிடம் “எரி எழுக!” என்றான்.

“நானா?” என்றான். வலவன் “ஆம், நீயேதான்… ஏன்?” என்றான். சம்பவனின் கைகள் நடுங்கத் தொடங்கின. அனலோனை வாழ்த்தும் வேதச்சொல்லை உரைத்தபடி மென்விறகை முதல் அடுப்பில் அடுக்கிவிட்டு சிக்கிமுக்கியை உரசி எரியெழச் செய்தான். எரி தயங்கியபடி கொழுந்தெழுந்து நின்றாட அதை நோக்கியபின் வலவன் ஒரு சிறிய பாளையை எடுத்து அப்பால் நாட்டினான். தீக்கொழுந்து காற்று இல்லாத அறைக்குள் என அசைவிலாது நின்று சுடர்கொண்டது. அடுத்த அடுப்பை அவன் பற்றவைத்தபோது வலவன் அத்தழலாட்டத்தை நோக்கி பிறிதொரு இடத்தில் ஒரு தட்டியை நிறுத்தினான், அந்தக் கணக்கு என்ன என்று அறிய சம்பவன் கூர்ந்து நோக்கினான். எவ்வகையிலும் அதை புரிந்துகொள்ள முடியவில்லை.

அனைத்து அடுப்புகளும் எரியத் தொடங்கியபோது அடுப்புக்கு ஒன்று என காற்றுத்தடுப்புகள் நின்றிருக்க தழல்கள் காற்றால் தொடப்படாமல் எரிந்தன. அவர்களின் ஆடைகளையும் குழல்களையும் கலைத்து அளைந்து சென்ற கானகக் காற்று அத்தழல்களை அறியவேயில்லை என்று தோன்றியது. சம்பவன் “முதல் அன்னம், ஆசிரியரே” என்றான். வலவன் வந்து முதல்பிடி அன்னத்தை எடுத்து நீரில் இட்டு வாய்க்குள் அன்னவாழ்த்தை சொன்னான். பின்னர் சம்பவனிடம் “உன் கைத்திறன் திகழ்க!” என்றான். சம்பவன் தலைவணங்கி “ஆனால் தங்கள் உள்ளமும் உடனிருக்கவேண்டும்” என்றான். வலவன் தலையசைத்தான்.

அடுமனைப்பணி தொடங்கியதும் வலவன் அப்பால் சென்று ஒரு பாறைமேல் அமர்ந்து வானை நோக்கிக்கொண்டிருந்தான். நிலவு மேலெழுந்து வந்ததை கொட்டகைக்குள் நின்றபடியே சம்பவன் கண்டான். அதன்மேல் விழிநிலைக்க சிலையென வலவன் அமர்ந்திருந்தான். பின்னர் சம்பவன் அப்பால் சாலமரத்தின் அடிக்கிளையில் ஒரு பெருங்குரங்கு நிலவை நோக்கியபடி அமர்ந்திருப்பதை கண்டான். மீண்டும் விழிகூர்ந்தபோது இன்னொரு குரங்கு தெரிந்தது. பின்னர் ஏராளமான குரங்குகள் கிளைகள் முழுக்க அசைவிலாது அமர்ந்திருக்கக் கண்டான். அவற்றின் வால்மயிர்கள் நிலவொளியில் நாணல்பூக்களின் பிசிர் என ஒளிகொண்டிருந்தன. கன்னமயிர்களில் நிலவு சுடரலாயிற்று. குரங்குவாலை அசைவிலாது முன்பு கண்டதே இல்லை என அவன் நினைத்துக்கொண்டான்.

இது என் முதற்சமையல். அச்சொல் நெஞ்சிலெழுந்ததுமே கற்ற அனைத்தும் மறந்துபோய்விட்டன என்று தோன்றியது. சில கணங்கள் வெற்றுள்ளத்துடன் தழலாட்டத்தை வெறித்தபடி நின்றான். என்ன செய்கிறோம் என தோன்றியதும் படபடப்புடன் உடல் உதறிக்கொள்ள அங்குமிங்குமென நின்ற இடத்திலேயே தத்தளித்து ஓடிச்சென்று ஒரு பிடி உப்பை அள்ளினான். என்ன அது என வியந்து திரும்பப் போட்டுவிட்டு பெருமூச்சுடன் நின்றான். இரு கைகளாலும் தலையை பற்றிக்கொண்டான். “சம்பவா, முதலில் என்ன? வழக்கம்போல ஐங்கரனுக்கான இனிப்பா?” என்றான் மேகன். “என்ன?” என்றபின் “ஆம்” என்றான். உடனே “பொறு” என்றான்.

இல்லை என்னால் இயலாது என்று தோன்றியது. மறுகணமே அலைவந்து அறைந்ததுபோல அவ்வுணர்ச்சி அவன் உடலை அதிரச்செய்ய தன்னிரக்கத்தால் விழிகசிந்து தொண்டை இறுகியது. அரசர் உண்ணப்போகும் உணவு. அன்றுவரை அவன் கையாக்கத்தை எளிய நூற்றுவன்கூட உண்டதில்லை. பிழையற்றிருக்கவேண்டும். பிழைக்காக கழுவேற நேரிடலாம். அத்துடன்… அவ்வெண்ணம் வந்ததுமே அவன் கால்கள் தளர பின்னகர்ந்து கவிழ்த்திட்ட மர உரலில் அமர்ந்துவிட்டான். அவன் சமையலை வலவன் சமையலென கொண்டு அரசர் முன் கொடுக்கப்போகிறார். கீசகனுக்குத் தெரியும் வலவனின் கைச்சுவை. எதை நம்பி இதை என்னிடம் அளித்தார்? எழுந்தோடி அவர் காலடியில் முகம் மண்பதிய விழுந்து “ஆசிரியரே, பொறுத்தருள்க! நான் எளியன். கைதிருந்தாதவன். இப்பெருஞ்சுமையை இழுக்கும் தோள்கள் எனக்கில்லை…” என்று கதறினான். ஆற்றொழுக்கில் உயிர்பதைக்க மூழ்கிச் செல்பவன் கரைவேரை என அந்தக்கால்களை கைநீட்டி பற்றிக்கொண்டான்.

அவன் உடல் மெய்ப்பு கொண்டது. அவன் வலவனின் கால்களை தன் கைகளில் மெய்யென்றே உணர்ந்தான். மிகச்சிறிய கால்கள் அவை. அப்பேருடலின் எடையை அவை தாங்குவதன் விந்தையை எண்ணி அவன் சித்தத்தின் ஆழ்மூலை ஒன்று வியந்தது. சற்றே விலகிய கட்டைவிரல்களின் நகங்கள் புலிவிழிகள்போல. மிகச்சீராக அடுக்கப்பட்ட விரல்களின் நகங்கள் இணைந்து மண்ணில் ஓர் அழகிய புன்னகை என்றாயின. உருக்குருளை என கணுக்கால் குமிழ், மேற்கால் நரம்புக்கிளைகள். பெருஞ்சிற்பி ஒருவன் வாழ்நாள் தவமென இயற்றி வெண்கலத்தில் வார்த்த முழுமை. எத்தனை பிழையற்ற ஒழுங்கு! ஒழுங்கே இவற்றின் ஆற்றல். பெருந்தசைத்திரளின் எடையை தங்கள் ஒழுங்கினாலேயே இவை தாங்குகின்றன.

விரல் மெல்ல அசைந்தபோதுதான் அக்கால்களை தன் உள்ளமே பற்றிக்கொண்டிருக்கிறது என உணர்ந்து அவன் சூழல்மீண்டான். தன் முகம் மலர்ந்திருப்பதை தசைமாறுபாட்டினூடாக அவன் அறிந்தான். “ஆம் ஆம் ஆம்” என அவன் உள்ளம் எதையோ ஒப்புக்கொண்டது. அவன் எழுந்தபோது மிக அருகே ஒரு குட்டிக்குரங்கு வந்து நின்றிருந்தது. அவன் எழுந்த அசைவில் துள்ளித்தெறித்து தூணைப்பற்றி மேலேறி தொற்றி நின்று சுழன்று தலைகீழாகி கண்சிமிட்டி “சிப் சிப்” என்றது. அவன் புன்னகைத்தான். அது கண்களை சிமிட்டியபின் மெல்ல கீழிறங்கி வந்தது. “எனக்கு வெல்லம் வேண்டும்” என்றது.

அவன் திடுக்கிட்டு நெஞ்சதிரப்பெற்றான். அதன் குரலை மெய்யாகவே கேட்டதாக உளமயக்கு கொண்டான். அவன் “சரி” என்றபோது குட்டிக்குரங்கு “இரண்டு கைகளுக்கும் வெல்லம்” என்றது. அவன் உடல் மெய்ப்பு கொண்டது. உளமயக்கல்ல. குரங்கு அவனிடம் பேசிக்கொண்டிருந்தது. “வெல்லம் இல்லையே!” என அவன் சிரித்துக்கொண்டே சொன்னான். “நீ கெட்டவன்…” என்றது குட்டி. “நீ துயில்கையில் நானே சென்று எடுத்துக்கொள்வேன்…” கைகளை விரித்துக் காட்டி “பெரிய வெல்லம்” என்றது.

அவன் குனிந்து அதை நோக்கி “அவ்வளவு வெல்லம் தின்றால் உனக்கு வயிறு வலிக்குமே?” என்றான். அது முகம் சுளித்து எண்ணிநோக்கியபின் “நான் நிறைய நீர் குடிப்பேன்” என்றது. பின்பக்கத்தை சொறிந்துகொண்டு அமர்ந்தது. “நீ எனக்கு வெல்லம் கொடுக்காவிட்டால் நான் அந்தக் கலத்தின்மேல் சிறுநீர் கழிப்பேன்.” அவன் வாய்விட்டு சிரித்து “சரி, சரி… வெல்லம்தானே?” என எழுந்து சென்று பிரம்புக்கூடையைத் திறந்து இரு வெல்ல உருண்டைகளை எடுத்தான். “இந்தா” என்றான். அது அருகே வந்து அவனை நோக்கி “நீ என்னை பிடிக்கக்கூடாது. பிடித்தால் நான் கடிப்பேன்” என்றது. “இல்லை, பிடிக்கமாட்டேன்.”

அது மேலும் அருகே வந்து வெல்ல உருளைகளை நோக்கி “பெரியவை…” என்றது. “ஆம், உன்னால் கொண்டுசெல்ல முடியாது.” அது திரும்பி ரீச் என ஒலியெழுப்பியது. அங்கிருந்து இன்னொரு குட்டிக்குரங்கு எட்டிப்பார்த்தது. “அவள் என் அக்கா. அவள்தான் இரண்டு வெல்லம் கேட்கச் சொன்னாள்.” சம்பவன் “அவள் ஏன் ஒளிந்து நிற்கிறாள்?” என்றான். “அவள் அப்படித்தான்… என்னிடம் சொல்லிவிட்டு ஒளிந்துகொள்வாள்.” “சரி இதை கொண்டுசென்று அவளிடம் கொடு.”

இரு கைகளாலும் ஒரு வெல்ல உருளையை கொண்டுசென்று அக்கையிடம் கொடுத்துவிட்டு திரும்பிவந்து இன்னொன்றை எடுத்துக்கொண்டு ஓடி நின்று திரும்பி “நீ நல்ல குரங்கு” என்றது. அவன் அக்கா “அங்கே என்ன பேச்சு? வா” என்று சீறியபின் வெல்லத்துடன் வாலைத் தூக்கியபடி ஓட குட்டியும் வாலை வளைத்துத் தூக்கியபடி துள்ளித்துள்ளி ஓடியது. இரு குரங்குகளும் காட்டின் முள்வேலிச்சூழ்கையை அடைந்து தாவியேறி மரங்களின்மேல் சென்று மறைந்தன. அங்கே சிறுகாற்று நுழைந்ததுபோல இருண்ட கிளைகள் கொப்பளித்தன.

அவன் புன்னகையுடன் திரும்பி “எட்டு நாழி உப்பு அள்ளு” என்றான். மேகன் வியப்புடன் “அவ்வளவு…” என்று தொடங்க சம்பவன் சென்று அதற்கேற்ற புளியுருளைகளை அள்ளினான். மேகன் “பீமபாகத்தை கற்றுவிட்டாய் போலிருக்கிறதே!” என்றான். சம்பவன் புன்னகைத்தான். “எனக்கென்னவோ இந்த வலவர் பீமனின் மாணவர் என்று தோன்றுகிறது” என்றான் மேகன். “அவர் மாருதியின் அருள்பெற்றவர்” என்றான் சம்பவன்.

ஒவ்வொன்றும் அவன் கைகளுக்கு முன்னரே ஐயமின்றி தெரிந்திருந்தது. அவன் தொட்ட இடத்தில் தேடிய பொருள் இருந்தது. அவன் எண்ணியவை அடுகலங்களில் நிகழ்ந்தன. அனலின் அசைவைக்கூட அவன் உள்ளம் ஆள்கிறதென்று தோன்றியது. “நீ இத்தனை ஆற்றலுடன் அடுமனையை ஆள்வாய் என அறிந்திருக்கவில்லை” என்றான் மேகன். “நான் அவரே” என்றான் சம்பவன். மேகன் திரும்பி நோக்கிவிட்டு “என்ன செய்கிறார் அங்கே? அமர்ந்து துயில்கிறாரா?” என்றான். “இல்லை, இங்கு அடுமனையை ஆள்கிறார்” என்றான் சம்பவன்.

முதல் மணம் எழுந்ததும் சம்பவன் உள்ளமெங்கும் படபடப்பை உணர்ந்தான். அறியாமல் கைகூப்பி அக்கலத்தை நோக்கியபடி நின்றான். அது புளிக்குழம்பின் மணம். ஆனால் முன்பு எங்கும் அவன் அறிந்தது அல்ல. அவன் கையில் இருந்து எழுந்தது. இனி அவனால் மட்டுமே நிகழ்த்தப்பெறுவது. அவன் அதை நீள்குழலும் அளிவிழிகளும் குறுநகையும் அமுதகலமும் அருள்கையும் என தோன்றிய தெய்வமென்றே கண்டான். “அரிய மணம்!” என்றபடி மேகன் அருகே வந்தான். “நிகழ்ந்துவிட்டது!” என அவன் தோளை தொட்டான். “ஆம்” என்றான் சம்பவன். பருப்புக்குழம்பிலிருந்து மணம் எழுந்தது. பின் பயறுக்குழம்பு. அதன்பின் வழுதுணங்காய் குழம்பு. ஒவ்வொன்றும் ஒரு மணம். அவள் உடலில் சென்றமையும் ஓர் அணி.

விழித்துக்கொண்டு முனகிய வலவன் எழுந்து கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் நிழல் பெருகி அடுமனைக்கூரைமேல் கவிந்து நீள உள்ளே வந்தான். ஒவ்வொரு கலத்தின் அருகிலும் சென்று நின்று தலையசைத்தும் ஓரிரு சொற்களில் சில ஆணைகளை இட்டும் கடந்துசென்றான். “சிறிது நீர்” என்றும் “அனல் அவிக” என்றும்தான் அவன் சொன்னான். உப்புபுளியிணைவு குறித்து ஒரு சொல்லும் சொல்லவில்லை என உணர்ந்ததும் சம்பவன் முகம் மலர்ந்து அருகே சென்று நின்றான். அவன் தோளில் தன் எடைமிக்க கையை வைத்து “நன்று… உன் தெய்வம் உடனமைகிறது” என்றான் வலவன்.

“தங்கள் காலடியால் எனக்கு அருளினீர்கள், ஆசிரியரே. இவ்வண்ணம் நான் எப்போதுமே சமைத்ததில்லை” என்றான் சம்பவன். அதைச் சொல்லும்போதே அவன் குரல் தழைந்து விழிகளில் நீர் பரவியது. அவன் தோளை மெல்லத்தட்டி “இது ஒரு படி… வானேறும் பாதையில் ஓர் அடி. அதை உணர்ந்தவனுக்கு வெற்றி என்பது இங்கு நிகழ்வதல்ல என்னும் தெளிவு கைவரும்” என்றபின் “நான் சென்று ஓய்வெடுக்கிறேன். இனி இங்கு ஒன்றும் செய்வதற்கில்லை…” என்றான். “பரிமாறுவதற்கு ஏவலர் வருவார்களா?” என்றான் சம்பவன். “ஏவலர் உள்ளே நுழைய ஒப்புதல் இல்லை. உள்ளே சேடியரும் தாசியரும் மட்டுமே. அவர்கள் வருவார்கள்” என்றபின் வலவன் நடந்து சென்றான்.

அக்கால்கள் சந்தனம் ஒற்றும் பெண்ணின் கைகள்போல மெல்ல மெல்ல மண் தொட்டு நடந்துசெல்வதை நோக்கி அவன் நின்றான். ஆம், யானைப்பாதத்தின் ஒலியைக்கூட அவன் கேட்டதே இல்லை என நினைவுகொண்டான்.

flowerகுடிலுக்குள் அரசி ஆடையணிந்துகொண்டிருக்க அருகே சைரந்திரி நின்றிருந்தாள். குடில்வாயிலில் சுபாஷிணி தயங்கி நின்றாள். சைரந்திரி தலைதிருப்பி நோக்கி “உணவுக்கலங்கள் வந்துவிட்டனவா?” என்றாள். “ஆம், தேவி. அங்கே சிறுமுற்றத்தில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்” என்றாள் சுபாஷிணி. “சிறுமுற்றத்திலா? நிலவை கிளைநிழல்கள் பாதி மறைத்திருக்குமே” என்ற சைரந்திரி ஒருகணம் எண்ணியபின் “அப்பால் ஒரு வட்டப்பாறை இருக்கிறதல்லவா?” என்றாள். அரசி “ஆம், அது நல்ல இடம். ஆனால் ஏறுவது சற்று கடினம்… வழுக்கும்” என்றாள். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன், அரசி. அங்கே நிலவு முழுமையாகத் தெரியும்” என்றாள் சைரந்திரி. சுபாஷிணியிடம் “உணவுக்கலங்களை அங்கே கொண்டுசென்று வைக்கச்சொல்” என்றாள். “ஆணை” என தலைவணங்கி சுபாஷிணி வெளியே சென்றாள்.

அவளுக்கு இனிய சோர்வு ஒன்று உளம்நிறைய செறிந்திருந்தது. அங்கு வந்தபோதிருந்த உவகைத்துள்ளல் என்னவாயிற்று? அது அந்த இளைஞனைப் பார்த்ததுமே அகன்றுவிட்டதா என்ன? அவன் விழிகளை அவள் நினைவுகூர்ந்தாள். அவை அவளை எளிய சேடி என எண்ணின. பின் ஐயம் கொண்டன. அவள் நாணியதும் பெண் என அணுகின. அவள் தீப்பற்றிக்கொண்டதுபோல ஒரு படபடப்பை அடைந்தாள். அவளை முதலில் கண்ட கணம் அவன் அழகி என உணரவில்லை, எளிய சேடி என்றே உணர்ந்தான்.

கசப்புடன் அவள் உதடுகளை கடித்துக்கொண்டாள். மறுகணம் எண்ணங்கள் பொங்கி எழுந்தன. அவன் யார்? வேலேந்தி காவல் நிற்கும் எளிய காவலன். அவள் அரசியிடம் நேரில் பேசும் இடத்தில் இருக்கிறாள். ஒரு சொல் உரைத்தால் அவள் அவனை கழுவில் அமரச்செய்ய முடியும். அதை முன்னரே உணர்ந்துதான் அவனை அச்சுறுத்தியிருக்கிறோம் என அப்போதுதான் புரிந்தது. அவனுடைய பதறிய முகத்தை எண்ணியபோது புன்னகை எழுந்தது.

அவள் தலைமைச்சேடியிடம் சென்று சைரந்திரியின் ஆணையை அறிவித்தாள். “இதை அரசி சொன்னாரா, இல்லை அந்த நெட்டைச்சிலை சொன்னாளா?” என்றாள் தலைமைச்சேடி. “அரசியின் ஆணை… யார் சொன்னால் என்ன?” என்றாள் சுபாஷிணி. “வர வர நீயும் பேசத்தொடங்கிவிட்டாய். பொழுதுகூடினால் நீர்ப்பாம்புக்கும் நச்சுப்பல் எழும்…” என்றாள் தலைமைச்சேடி. உணவுகள் அனைத்தும் பெரிய மரக்குடைவு குடுவைகளுக்குள் வெள்ளிக்கலங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி குருவிக்கூடால் ஆனதுபோன்ற நார்நுரை வைக்கப்பட்டு மரமூடியால் இறுக மூடப்பட்டிருந்தது.

குடுவைகளை தோளில் மாட்டுவதற்கு நீண்ட கயிறுகள் இருந்தன. சேடியர் அவற்றை சுமந்துகொண்டு கழிகளை ஊன்றி குனிந்து நடந்தனர். “நீ அந்தக் குடுவையை எடுத்துக்கொள்” என்றாள் தலைமைச்சேடி. “நானா?” என்றாள் சுபாஷிணி. “ஏன்? நீ என்ன அரசிளங்குமரியா?” சுபாஷிணி “இல்லை, தேவி அழைத்தார்கள் என்றால்…” என இழுக்க “செல்…” என்று அவள் கடுமையாக சொன்னாள். குடுவை எடைமிக்கதாக இருந்தது. அவளால் நடக்கமுடியவில்லை. தரையில் பின்னியிருந்த வேர்களில் கால்கள் தடுக்கின. விழுந்துவிடுவோம் எனத் தோன்றியது. மூச்சு செறிந்து குளிர்வடம்போல ஆகி மூக்குமுதல் நெஞ்சுவரை நிறைந்து நின்றிருந்தது.

வட்டப்பாறையைக் கண்டதும் அவள் அயர்ந்து நின்றுவிட்டாள். தொலைவில் அது அத்தனை உயரமற்றது எனத் தோன்றியது. அருகே சென்றபோதுதான் பனைமர உயரம் கொண்டதென்று தெளிவாகியது. அதில் ஏறிச்செல்ல ஒரே வழிதான். மேலிருந்து உருண்டு விழுந்த பாறைகள் பெரிய படிக்கட்டுபோல ஒன்றன் மேல் ஒன்றெனக் கிடந்தன. சேடியர் கழிகளை ஊன்றியபடி அதில் தொற்றி ஏறி மேலே சென்றார்கள். முதலில் சென்றவள் அங்கே நின்று ஏதோ சொன்னது குரல்விளக்கமில்லாது கேட்டது. காட்டுக்குள் ஆடு ஒன்று தும்மலோசை எழுப்பி குளம்புகள் சருகுச்சுள்ளிகளில் அழுந்தி ஒலியெழுப்ப நடந்து அகன்றது.

“செல்” என பின்னால் வந்த சேடி குரலெழுப்ப அவள் மூச்சைத் திரட்டி விசையாக்கி உடலை உந்தி முன்செலுத்தினாள். பின்னாலிருந்த குடுவையின் எடை அவளை முன்னால் தள்ளியது. விழாமலிருக்க கால்வைப்பதே நடப்பதென்றாகியது. தொடைகளிலும் கழுத்திலும் அந்த எடை தசைகளை கவ்வி கசக்கியது. அவள் மூச்சுவாங்க சற்று நின்றாள். பின்னால் வந்த ஏழு சேடியர் அவளைக் கடந்து சென்றனர். தானே இறுதியில் என உணர்ந்ததும் அவள் கிளம்புவதற்காக உடலை உந்தி முன்னெடுத்தாள். ஏதோ அசைவது விழிமுனையில் தெரிந்தது. உடனே உடல் சிலிர்த்து அசைவிழந்தது. அதன் பின்னரே அவள் அந்த நாகத்தை பார்த்தாள்.

அவள் கையளவு பெரிய நாகம். மெல்ல நெளிந்து இலைகளிலிருந்து நிலவொளி விழுந்த இடத்தைக் கடந்தபோது அதன் உடல் பொன்னிற ஒளி கொண்டது. விழிமயக்கா, அது நாகமேதானா என அவள் எண்ணி சற்று குனிந்து கூர்ந்து நோக்கினாள். வால்நுனி நெளிந்து இலைகளுக்குள் மறைந்தது. நாகம்தான். அவள் உடலைக் கட்டியிருந்த சரடுகள் அறுபட்டதுபோல மெல்லிய துடிப்பு ஏற்பட்டது. அதை கூவிச்சொல்லவேண்டும் என எண்ணி உடனே இயல்பாக அடக்கிக்கொண்டாள். அதை எவரும் நம்பப்போவதில்லை. எடைசுமக்கச் சோம்பி அவள் சொல்லும் பொய் என்றே கொள்வார்கள்.

கால்களை எடுத்துவைக்கும் ஒவ்வொரு முறையும் உடல் நாகம் நாகம் என கூசியது. அதன் உடலின் ஒளியலைவு விழியில் எஞ்சியிருந்தது. பொன்னிறமான நாகம். பொன் காய்ச்சிய கலம் கவிழ்ந்து உருகல் வழிவதுபோல. பொன்னுடல் கொள்ளுதல். அது பொன்னிறமன்றி பிறிதொன்றாக இருக்கமுடியாது.

முந்தைய கட்டுரைசுராவும் சுஜாதாவும்
அடுத்த கட்டுரைஇடதிலக்கியம் – கடிதங்கள்