மத்தகம் (குறுநாவல்) : 4

சாயங்காலம் பாறசாலைக் கோயிலுக்குப் போய்விட்டோம். யானையை கோயில் ஆனைப்புரையில் தளைத்துவிட்டு அங்கேயே மூங்கிலும் வாழையிலையும் தென்னையோலையும் வாங்கி தீனி போட்டோம். ஆசான் கோயில் குளத்தில் குளித்து விட்டு மகாதேவரை தரிசனம் செய்து வந்தார். நானும் அருணாச்சலம் அண்ணனும் குளத்தில் குளித்தபின் ஈர உடையுடன் மடப்பள்ளிக்குப் போனோம். மடப்பள்ளித் திண்ணையில் இலைபோட்டு கட்டிச்சோறும் தேங்கயாப் புளிக்கறியும் துவையலும் தந்தார்கள்.

நான் எப்போதும் வயிறு புடைக்கச் சாப்பிடுவேன். ஓரிரு வேளை சாப்பிடாமலும் என்னால் இருக்க முடியும். இலை களைந்து கைகழுவியதும் தென்னை ஓலைக்கீற்றை எடுத்து முற்றத்துப் பலாமரத்தடியில் போட்டு நானும் அருணாச்சலம் அண்ணனும் படுத்துக் கொண்டோம். ஆசான் திண்ணையில் அமர்ந்து தன் வெற்றிலைப் பொட்டலத்தைப் பிரித்தார். எனக்கு நன்றாகத் தூக்கம் சொக்கி வந்தது. ஆனால் தூங்கினால் முடியாது.  ஓலைக்குவியலைச் சாப்பிட்டு குளத்தில் நீர் குடித்ததுமே கேசவன் கிளம்பிவிடுவான். வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாகத் தெரிய ஆரம்பித்தன. நேர் எதிரில் சற்றே சிவப்பாகத் தெரிந்தது என்ன நட்சத்திரம் என்று ஆசானிடம் கேட்க நினைத்தேன். ஆனால் வெற்றிலையை மென்றபடி ஆசான் தனக்குள் மூழ்கிப் போய் இருந்தார்.

கேசவன் மெல்ல உறுமிய ஒலிகேட்டு ஆசான் எழுந்தமர்ந்தார். ”லே மக்கா, அப்பம் புறப்பெடுங்கலே… பாப்பம்” என்றார். நாகர்கோயில் திருவனந்தபுரம் அஞ்சல்வண்டி இரவு இரண்டாம் நாழிகையில் பாறசாலைக்கு வந்துவிடும். ஆசான் வழக்கமாக சற்று தூங்கிவிட்டு அந்த வண்டியில் ஏறி நேராக காலையில் திருவனந்தபுரம் வந்து விடுவார். அது இரட்டைக்குதிரை வண்டி, வேகமாகவே வரும். கரமனை ஆற்றில் நாங்கள் யானையைக் குளிப்பாட்டி நெற்றிப்பட்டமும் நகைகளும் அணிவித்து கிளப்பி ஆரியசாலையைத் தாண்டி கிழக்கே கோட்டை முகப்புக்குப் போகும்போது அவர் அங்கே தன் அச்சிவீட்டில் குளித்து புதிய வேட்டியும் மேல்முண்டும் அணிந்து வெள்ளிக் கோலுடன் தயாராக நிற்பார். ஒற்றைக்காலுடன் பகல்முழுக்க நடப்பதற்கே ஆசான் மிகவும் கஷ்டப்படுவார். திருவட்டாறில் இருந்து புறப்படும் அஞ்சல் வண்டியில் வரச்சொன்னால் கேட்கமாட்டார். ”மக்களே எங்க நமக்க சத்துருக்கள் இருப்பானுகண்ணு ஆருக்குவே தெரியும்? தலை தோளுக்கு மேலே இருக்கணுமானா பகல்வெட்டத்தில பாத்து நடக்கணும். அதாக்கும் ராஜசேவுகம்.”

பாறசாலையைத் தாண்டிச் சென்றபோது நல்ல இருட்டு. நாலுமுக்குகளில் மட்டும் கல்தூண்கள் மீது புன்னக்காயெண்ணை விட்டு தடித்திரியிட்ட விளக்குகள் கண்ணாடி அறைக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. சில்லுவிளை முக்கில் ஒரு படைநாயர் மட்டும் குந்தத்துடன் நின்று கொண்டிருந்தான். அதற்கு அப்பால் பள்ளமாக இறங்கிச் சென்றது சாலை. முன்பு அது சேறு மிதிபடும் வண்டிச்சாலையாக இருந்தது. கோடை காலத்தில் மாவுபோல புழுதி. தம்புரான் பட்டத்துக்கு வந்தபிறகுதான் கருங்கல் பாளங்களைப் போட்டு இறுக்கி வண்டிச்சாலையாக ஆக்கியது. குதிரை வண்டிகள் சடசடவென்று அதில் ஓடிச் செல்வதைக் காணவும் கேட்கவும் உற்சாகமாக இருக்கும்.

நாகர்கோயில் செட்டிகளின் குதிரைவண்டிகள் என்றால் வண்டிக்காவலன் பின்பக்கம் படியில் அமர்ந்து ஒரு மணியை கணகணவென்று அடித்துக் கொண்டிருப்பான். வலிய நாயர்களின் வண்டிகள் என்றால் வண்டிக்காவலன் எப்போதும் திமிர் பிடித்த நாயராகத்தான் இருப்பான். வண்டிக்காரனுக்கு கீழே தொங்குபடியில் அமர்ந்துகொண்டு நீண்ட பிடியுள்ள மாட்டுத் தோல் சவுக்கைக் கையில் வைத்து எட்டக்கூடிய அனைவரையும் அடித்துக்கொண்டே செல்வான். அந்த வண்டிகளின் சத்தம் கேட்டாலே வழியில் செல்பவர்கள் ஓரமாகப் பாய்ந்து வேலிகளில் ஏறிக் கொள்வார்கள். வண்டிக்கூண்டுகளுக்குள் வலிய எஜமானன்கள் செம்பட்டு வரித்த திண்டுகளில் சாய்ந்து அரைத்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஒருமுறை ஆளூர் மாடம்பியின் காவல்காரன் சாட்டையை ஆசானை நோக்கிவீசி விட்டான். ஆசான் குனிந்தாலும் அடி புறங்கழுத்தில் பட்டுவிட்டது. ஆசான் ”புலையாடி மோன்!” என்று கூவிவிட்டார். முன்னால் சென்ற வண்டியை நிறுத்தி காவல்காரன் அங்கே இருந்தபடி திரும்பி ரத்தம் போன்ற கண்களால் உறுத்து விழித்து, ”ஆரெடா? ஆரொடா அது? வாடா வாடா நாயே” என்று கூவியபடி உடைவாளை உருவி விட்டான். ஆசான் பின்னுக்கு நகர்ந்து அருணாச்சலம் அண்ணன்மீது முட்டிக்கொண்டார். நாயர் ”வாடா… வரேல்லென்னா நான் எறங்கி வந்து வெட்டுவேன்…” என்று கூச்சலிட்டான்.

கேசவன் சட்டென்று எட்டு எடுத்துவைத்து அந்தப் படைநாயரை கையைப் பிடித்து தூக்கி சுழற்றி அருகே நின்ற புளியமரத்தில் அறைந்தான். உடல் பிய்ந்து தெறிக்க கை மட்டும் கேசவனின் துதிக்கையில் எஞ்சியது. அதை தலைக்குமேல் தூக்கி ர்ராங் என்று பிளிறிய பின் கொம்பால் அந்தச் சாரட் வண்டியை அப்படியே குத்தித் தூக்கிக் கவிழ்த்து காலால் மிதிந்தான். தூரத்தில் நாயரின் கை பிய்ந்த உடல் கிடந்து துள்ளியது. சடசடவென்று வண்டியின் மரச்சட்டங்களும் இரும்புக் கம்பிகளும் நொறுங்கும் ஒலி கேட்டது. உள்ளே இருந்து மாடம்பி கதறினார். ஆசான் ”கேசவா தம்புரானே… வேண்டா. பொறுக்குக தம்புரானே….” என்று கத்தினார்.

காதுகளை அசைக்காமல் ஒரு கணம் நின்று அவர் குரலைக் கவனித்தபின் இடது காலால் வண்டியை தட்டி பாதையை விட்டு விலக்கி விட்டு கேசவன் சாதாரணமாக நடந்து முன்னால் சென்றான். நான் ஓடிப்போய் கீழே கிடந்த வண்டியின் உடைந்த கூண்டின் கதவைத் திறந்து மாடம்பியைப் பிடித்து வெளியே எடுத்தேன். கனத்த கொளகொளத்த உடல். ”அய்யோ! அய்யோ! அய்யோ!” என்று கத்திக் கொண்டிருந்தார். வண்டிக்காரனுக்கு தோள்பட்டையில் அடி. அவரை இழுத்து சாலையோரம் அமரச் செய்தேன். ஊர்க்காரர்கள் கூடிவிட்டார்கள். ஆனால் கேசவன் முன்னால் சென்றுவிட்டிருந்தான். நொண்டியபடி ஆசான் பின்னால் ஓடினார். அருணாச்சலம் ”லே வாலே, ஆனை போறதுலே” என்றார் நாங்கள் பின்னால் ஓடினோம்.

அந்தச் செய்தியைக் கேட்ட தம்புரான் உரக்கச் சிரித்தார்.  “சீ கழுவேறிட மோனே” என்று கேசவனின் துதிக்கையை ஓங்கிக் குத்தினார். “கேட்டா சீதரா, அதுதான் ராஜ லக்ஷணம். ஒரு ராஜா தன்னுடைய பிரஜைகளை மற்றொராளும் சிக்ஷிக்க விடுக இல்ல. சிக்ஷிக்கணும் எந்நால் ராஜா சிக்ஷிக்கும்…. கேசவன் மனசு கொண்டு ஒரு மகாராஜா. அவன் அநீதி கண்டால் பொறுக்க மாட்டான்…” என்று கேசவனை அறைந்தார்.

எறும்புக்காட்டு விளையை நெருங்கியபோது நல்ல இருட்டாகி விட்டது. யானை செல்வதே ஒரு காற்றசைவாகத்தான் இருந்தது. தெப்பத்தைப் பிடித்துக்கொண்டு கடலில் செல்வது போல யானையுடன் இருட்டில் சென்றோம். யானை மூன்றாவது மூத்திரம் பெய்ததும் அருணாச்சலம் அண்ணன் ”லே மக்கா, இங்கின நிப்பம்லே… கேசவன் வெள்ளம் குடிக்கட்டு” என்றார். யானையை மெல்லத் தட்டி தண்ணீர் குடிப்பதைப் பற்றி நினைவூட்டினார். கேசவன் நின்று பக்கவாட்டில் திரும்பி, சரிந்து சென்ற மண்ணில் உடல் குறுக்கி இறங்கியது. நான் முன்னால் ஓடி நின்று கீழே இருளுக்குள் உலோகம் போல பளபளத்த குளத்தைப் பார்த்தேன். கேசவன் இருட்டுக்குள் நடந்து சென்று குளத்தை அடைந்து சேறு படிந்த கரை வழியாக மெதுவாக இறங்கிச்சென்று நீரை அணுகி துதிக்கையில் நீரை அள்ளி வாய்க்குள் இறைத்துக் கொண்டது.

அருணாச்சலம் அண்ணன் என்னிடம் “லே, இங்கின ஒரு ரெண்டு நாழிக நேரம் ஆனையத் தளைப்போம்லே… சோலி இருக்கு” என்றார்.

“என்ன சோலி?”

“ஒரு ஆளைப் பாக்கணும்”

நான் சங்கிலியை எடுத்து கேசவனை தளைத்தேன். கேசவன் என்ன நடககிறது என்று சுதாரிப்பதற்குள் மற்றக்காலையும் தென்னையுடன் சேர்த்துக் கட்டிவிட்டேன். “இருலே மக்கா. அண்ணன் இப்பம் வந்திருதேன்” என்றபடி அருணாச்சலம் அண்ணா குளத்து மேட்டில் ஏறிச் சென்றார். அவர் செல்வதைப் பார்த்து நின்றேன். பிறகு நானும் குளத்து மேட்டில் ஏறி அவரை இருளுக்குள் பின் தொடர்ந்து சென்றேன். அவர் அடிக்கடி திரும்பிப்பார்த்தபோது இருட்டில் நான் அசையாமல் அப்படியே நின்றேன். அவரால் என்னைக் காண முடியவில்லை.

ஒரு மேடேறிச் சென்று முக்கு திரும்பி கூரைவீட்டுமுன் நின்று நான்கு பக்கமும் பார்த்தபின் அருணாச்சலம் அண்ணா ஆந்தைப் போலக் குரல் எழுப்பினார். மூன்று முறை அவர் அப்படிக் குரல் எழுப்பியதும் உள்ளே ஒரு விளக்கு கொளுத்தப்படும் வெளிச்சம் கூரைக்கும் சுவருக்குமான இடுக்கு வழியாகத் தெரிந்தது. பின்பு கதவு திறந்து கையில் தூக்கவிளக்குடன் ஒரு பெண் திண்ணைக்கு வருவதைக் கண்டேன். சரியாகத் தெரியாவிட்டாலும் இளம்பெண் என்ற தெரிந்தது. அருணாச்சலம் அண்ணன் அவளிடம் சென்று ஏதோ பேசினார். அவள் சிரிப்பதும் கொஞ்சிப்பேசுவதும் கேட்டது. இருவரும் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டனர்.

நான் மெல்ல நடந்து சென்று திண்ணையில் ஏறி அமர்ந்து கொண்டேன். உள்ளே அவர்கள் கொஞ்சிப் பேசுவதும் சரிப்பதும் கேட்டது. பிறகு அந்த மூச்சொலிகள் சிணுங்கல்கள். அருணாச்சலம் அண்ணா அவளிடம் மெல்லிய குரலில் விடைபெறும் ஒலி. முத்தங்களின் ஒலி. அவள் மெல்லிய குரலில் புகார் கூறும் சத்தம். பின்பு கதவு மெல்லத் திறந்தது. அருணாச்சலம் அண்ணா மட்டும் மெதுவாக வெளிவந்து கதவை மூடியபடின திண்ணைக்கு வந்தபோது என்னைப் பார்த்தார். ஒரு கணம் நடுங்கி “ஆ? ஆரு?” என்றார்.

“அண்ணா இது நான்லா?” என்றேன்.

“லே” என்றார் அருணாச்சலம் அண்ணா.

“லே நீயா?”

நான் மெல்லிய குரலில் “சத்தம் போடாதிக அண்ணா. நான் ஆளைப் பாத்தாச்சு” என்றேன். அருணாச்சலம் அண்ணா வந்து என் அருகே நின்றார்.

“செரிடே இப்பம் என்ன? இப்பிடி ஒரு காரியம் உண்டு. மனசுக்குப் பிடிச்சு போச்சுலே”

“இது ஆசானுக்குத் தெரியுமா?” அருணாச்சலம் அண்ணா இருளுக்குள் திகைத்து இல்லாதவர் போல ஆகி நின்றார். ஆசானின் சம்பந்தக்காரி இலவங்காட்டு நீலம்மைதான் அது.

அருணாச்சலம் அண்ணா பெருமூச்சு விட்டபின் “இப்பம் என்னடே வேணும்கியே?” என்றார்.

“அண்ணன் ஆனைக்கிட்ட போகணும். நான் உள்ளபோயிட்டு வாறேன்.” அருணாச்சலம் அண்ணா கோபத்துடன்  “ஏலெ மயிராண்டி, இது என்ன தேவிடியாக் குடின்னா நெனைச்சே? ஏல அவ வயித்தில உள்ள பிள்ளை எனக்கதாக்கும். நானாக்கும் அவளுக்கு சிலவுக்கு குடுக்கது… எனக்க சம்பந்தக்காரியாக்கும் அவ” என்றார்.

”விளிச்சு கூவாதீங்க அண்ணா. ஊரு கூடுகதுக்கா? அண்ணன் சம்பந்தமின்னா சம்பந்தம், புடவ கொடைண்ணா அது, என்ன மயிரோ செய்துக்கிடணும். இப்பம் நான் உள்ள கேறாம வரமாட்டேன்” என்றேன்.

அருணாச்சலம் அண்ணா தணிந்து, “மக்கா லே, நீ எனக்க தம்பியில்லா? அவ உனக்கு அம்மையப் போலாக்கும் லே” என்றார்.

“அந்தச் சோலியே வேண்டாம். நடக்குமா நடக்காதா சொல்லும்” என்றேன்.

“செரி, நீ போயி கேட்டுப் பாருலே.” என்றார்

“அது கொள்ளாம். சும்மா கேட்டா குடுப்பாளா? நீரு அவளுககு  புடவ கொடுக்கதாட்டு சொல்லியிருப்பீரு. உம்ம பிள்ளை அவ வயித்தில இருக்கு. நீரு சொல்லணும்… சொல்லிக் காரியங்களை மனசில ஏற்றணும். வேணுமானா கட்டாயப்படுத்தணும்.” என்றேன்.

“லே அவ பாவமாக்கும். நீ நெனைக்கது மாதிரி இல்ல. மானமா சீவிக்கணும்ணு நெனைக்கப்பட்டவ… அப்பிடியெல்லாம் நான் சொன்னாலும் சம்மதிக்க மாட்டா….”

“சம்மதிப்பா. நீரு சொன்னா போரும்.” என்றேன்.

“என்ன சொல்லுகதுக்கு?” என்றார் அருணாச்சலம் அண்ணா உடைந்தகுரலில்.

“எனக்கு சம்மதிக்கல்லேண்ணா நீரு அவளை விட்டுட்டுப் போயிடுவேருண்ணு சொல்லும். சம்மதிச்சா அவளை வெறுக்காம கூட வச்சிருந்து புடவ குடுத்து கெட்டினவளா சேத்து மானமா வாழவைப்பேன்னுட்டு சொல்லும். அவ பெறப்போற பிள்ளைக்கு தகப்பன்னு ஒருத்தன் வேணுமானா சம்மதிக்கணும்ணுட்டு சொல்லும்.”

அருணாச்சலம் அண்ணன் சட்டென்று என் கால்களைப் பற்றிக் கொண்டார். இருட்டில் அவரது கண்கள் பளபளவென்று ஈரமாக இருப்பதைக் கண்டேன். அவர் கைகள் என் கால்களில் சூடாகப் பதிந்தன.

“தம்பி, உன்னை என் சொந்தத் தம்பியாட்டு நெனைச்சியேம்ல… வேண்டாம்ல… மகாபாவம்ல. அவ நல்ல குட்டியாக்கும். அறியா வயசில ஆசான்கூட ஆறுமாசம் இருந்தா. இப்பம் நாங்க கெட்டியனவன் பெஞ்சாதி மாதிரியாக்கும்” என்றார். “சொன்னாக்கேளு…. பேசாம ஒரு மொழம் கயித்தில தொங்கிப்போடுவா… பெண்ணடி பாவம் சும்மாவிடாதுலே மக்கா…. சொல்லுகதைக் கேளு… வேண்டாம்”

நான் வேட்டையைக் கட்டியபடி எழுந்தேன். “செரி, அப்பம் உம்மால முடியாது. அவளாலயும் முடியாது. செரி நடக்கட்டு. ஆனா நீரு திருவந்தரத்தில இருந்து தலையோட திரும்ப மாட்டீரு பாத்துக்கிடும்” என்று இறங்கி நடந்தேன்.

“தம்பி லே…” என்று அருணாச்சலம் அண்ணா என் பின்னால் பாய்ந்து வந்தார்.

“தம்பி லே… நில்லு” என்று என் தோளைப் பற்றிக் கொண்டார்.

“முடியுமா முடியாதா?”

“செரிடே, நான் பாக்குதேன்…”

அருணாச்சலம் அண்ணா மீண்டும் கதவைத் தட்டினார். அவள் கதவைத் திறந்ததும் எங்கள் இருவரையும் பார்த்துத் திடுக்கிட்டாள். அண்ணா உள்ளே சென்றார். நான் திண்ணையில் அமர்ந்திருந்தேன். உள்ளே அண்ணா அவளிடம் தயங்கித்தயங்கி பேசுவதும் அவள் குழப்பமாக ஏதோ கேட்பதும் சட்டென்று உரத்த குரலில்  “வெட்டீப்போடுவேன். வெட்டிப்போட்டிட்டு நானும் சாவேன்” என்று வீரிடுவதும் கேட்டன. அண்ணா அவளிடம் கெஞ்சி மன்றாட அவள் “செத்திருவேன்… உசிரோட இருக்க மாட்டேன்” என்றே திரும்பத் திரும்ப சொல்லி அழுது கொண்டிருந்தாள். திடீரென்று “சண்டாளப் பாவீ, குலம் கெடுக்கவந்த பாவீ” என்று கூவியபடி ஓடி வந்து கதவைத் திறந்தாள். அவளுடைய நீட்டிய கையும் ஆவேசமான முகமும் ஒரு கணம் தெரிந்தது.

அதற்குள் அருணாச்சலம் அண்ணா அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து உள்ளே போட்டுவிட்டு கதவைச் சாத்திவிடடு படீர் படீரென்று அவளை அறைந்தார்.  “கொல்லுங்க, கொல்லுங்க. நான் சாவுதேன். பெண்ணாப் பெறந்த பாவத்துக்கு நான் செத்தொளிஞ்சு போறேன்.”

அருணாச்சலம் அண்ணாவும் வெறிகொண்டு,   “சாவுடி…செத்து தொலை… எனக்கொரு மேச்சம் அப்படி வரட்டு” என்று அவளைப் போட்டு அடிப்பதும் உதைப்பதுமாகக் கூச்சலிட்டார். அவள்கதறி அழுதப்படி வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடும் ஒலி.

“நான் சீவிக்க மாட்டேன்ன்… நான் சீவிக்க மாட்டேன்” என்று அவள் அலறிக்கொண்டே இருந்தாள்.

இது நடக்காது என்று எனக்கே தோன்றிவிட்டது. மெல்ல எழுந்து வேட்டியை மடித்துக் கட்டும்போது படீரென்று கதவைத் திறந்து அருணாச்சலம் அண்ணா உள்ளிருந்து வெளியே வந்தார். உரக்க “சாவுடீ… ஆனா உனக்க சவத்த அடக்கம் செய்யவும் நான் இந்தப் படியில கால் வக்க மாட்டேன்… உனக்க பிள்ளை அப்பனறியா நாயாட்டு அலைஞ்சு சாவட்டும்… எரப்பே அந்தளவுக்கு ஆயிட்டியா?” என்று கூவினார். அவள் தலைவிரிகோலமாக பின்னால் வந்து அருணாச்சலம் அண்ணா காலில் விழுந்து  “வேண்டாம். விட்டுட்டுப் போயிடாதீங்க… எனக்கு வேற ஆருமில்ல. சொன்னதெல்லாம் கேக்கேன்.” என்று கதறினாள்.

பெருமூச்சுடன் மெல்ல தணிந்த அருணாச்சம் அண்ணா என்னைப் பார்த்தார். “லே, உள்ள போல நீ” என்று என்னிடம் சொன்னார். அவள் தரையிலேயே கிடந்தாள். நான் அவள் கைகளைப் பற்றித் தூக்கி எடுத்தேன். வியர்த்துக் குளிர்ந்த உடம்பு நீரில் வந்த வாழை போலிருந்தது. கை பிடியிலிருந்து வழுக்கியது. அவளை உள்ளே இழுத்துச் சென்று கதவைச் சாத்திவிட்டு இடுப்பில் கைவிட்டு இழுத்து இறுகத் தழுவினேன்.

“புலையாடி மோளே, ஆட்டமா காட்டுதே?” என்று அவள் காதில் முணுமுணுத்தேன்.

”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்…. கூடப்பிறப்பா நினைக்கணும்… தம்புரானே…. உங்கள தெய்வமா கும்பிடுதேன்” என்று என்னை உந்தி நெளிந்தபடி கண்ணீர் வழியச் சொன்னாள்.

அவளைப் பேசவே விடக்கூடாது என்று இறுகப் பிடித்து இழுத்துப் பாயில் தள்ளினேன்.  “அய்யோ வயித்தில பிள்ள… பாத்து” என்று அவள் பதறிக் கெஞ்ச ஆரம்பித்தாள்.

நான் வெளியே வந்தபோது அருணாச்சலம் அண்ணன் இல்ல. யானையருகே தரையில் படுத்திருந்தார். நான் யானையின் தளையை அவிழ்த்தேன். “போலாமா அருணாச்சலம் அண்ணா?” அருணாச்சலம் அண்ணா பேசாமல் கூடவே வந்தார். இடிச்சக்கப்பிலாமூடு அருகே சென்றதும் அண்ணா “இருடே” என்று சொல்லிவிட்டு பக்கவாட்டு சாலையில் சென்றார்.

“அண்ணா சாராயம்னாக்க எனக்கும் ஒரு குப்பி வேணும்” என்றேன். அவர் கேட்டமாதிரி தெரியவில்லை. ஆனால் திரும்பி வரும்போது பெரியநீலநிறத் கண்ணாடிக்குப்பி நிறைய எனக்கும் வாங்கி வந்திருந்தார். நான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தேன்.

போதையில் இருட்டு நெளிய ஆரம்பித்தது. அருணாச்சலம் அண்ணா முழுப்போதையில் நடக்க முடியாமல் தள்ளாடி யானையின் தந்தத்தைப் பிடித்துக் கொண்டார். நான் நாலைந்துமுறை ஏப்பம் விட்டேன். இருமுறை குமட்டினேன். தீ மாதிரி எரியும் சுத்தமான சாராயம். என் உடம்பு முழுக்க அது வெப்பமாகப் பரவுவதை உணர்ந்தேன். போதும் நிறுத்திவிடலாம் என்று தோன்றியபடியே இருந்தாலும் யாரோ சூனியம் வைத்ததுபோல நான் குடித்தபடியே இருந்தேன். குப்பியில் கால்குப்பி மிஞ்சியபோது மேற்கொண்டு என்னால் குடிக்க முடியவில்லை. வாய் திறந்தாலே சாராயம் அமிலமாக தொண்டையில் இருந்து வந்தது. காதுமடல்கள் எரிந்தன. பக்கவாட்டில் திரும்பி அருணாச்சலம் அண்ணனைப் பார்த்தபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அருணாச்சலம் அண்ணன்! இதாக்கும் அருணாச்சாலம் அண்ணன்” என்று சுட்டிக்காட்டிச் சிரித்தேன். இதென்ன கிறுக்கன் போல சிரிப்பு என்று தோன்றினாலும் சிரிப்பை ஒன்றும் செய்ய முடியவில்லை.

“அண்ணனுக்க அச்சிக்க பேரு இலவங்காட்டு நீலம்மை . இலவங்காட்டு  நீலம்மைக்கு முலை இம்பிடு பெரிசு.. அவளுக்க முலையிலே….”

ஏப்பம் விட்ட போது நான் சொல்ல வந்ததை மறந்தேன். ஆனால் என் கட்டுப்பாடு இல்லாமல் மேலும் மேலும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

“நான் நினைச்ச குட்டிய நான் பிடிப்பேன். கேட்டியா அருணாச்சலம் அண்ணா… நினைச்ச குட்டி எனக்கு வேணும்… எளவு, அதுக்கு இந்த ஆனைய வித்தாலும் செரி, பெத்த அம்மைய வித்தாலும் செரி…”

என் கால்கள் கரைந்து போய் இடுப்புக்கு கீழே காற்றுதான் இருந்தது. யானையின் தந்தத்தில் நன்றாகச் சாய்ந்து பிடித்துக் கொண்டேன். யானை படகு நீரில் போவது போல எங்களை சுமந்தபடி இருட்டில் சென்றது. என்மேல்வேட்டியை எடுத்து யானைக் கொம்புடன் சேர்த்து கட்டிக் கொண்டேன். நான் பேசிக்கொண்டே இருப்பதை நானே கேட்டுக்கொண்டிருந்தேன்.

எனக்கு விழிப்பு வந்தபோது கரமனை அற்றின் கரையில் நின்று கொண்டிருந்தோம். மறுபக்கக் கொம்பில் அருணாச்சலம் அண்ணா செத்தபிணம் தொங்குவதுபோல தொங்கித் தூங்கிக் கொண்டிருந்தார். யானை காதுகளை அசைத்தபடி முன்காலை சற்று மேலே தூக்கியபடி நின்றிருந்தது. பிரம்ம முகூர்த்ததம் ஆகியிருக்கும். தூரத்தில் ஏதோ கோயிலில் மணி முழங்கியது. யானை மீண்டும் பிளிறியது. முதல் பிளிறல் கேட்டு விழித்துக் கொண்டதை அப்போது உணர்ந்தேன்.

“அண்ணா… அருணாச்சலம் அண்ணா…” என்று அவரை உசுப்பி எழுப்பினேன்.

“நாணீ” என்றபடி விழித்து என்னைப் பார்த்தான்.

“லே நீயா? நீ எப்பிடி இங்க?”

“அண்ணா கரமனை ஆறு வந்தாச்சு… எறங்குங்க.”

இருவருமாக யானையை கரமனையாற்றில் இறக்கி வேகவேகமாகக் குளிப்பாட்டினோம். அருணாச்சலம் அண்ணா மிக அமைதியாக இருந்தார். யானையைக் குளிப்பாட்டி கரையில் ஏற்றி நெற்றிப் பட்டமும், மணிமாலையும், முத்துச்சரமும், காது குண்டலமும் அணிவித்தோம். கொம்புகளுக்கு, பொன் கூம்பும், நெற்றிக்கு மணிச்சுட்டியும் பொருத்தினோம்.  முதுகில் மணிப்பட்டு விரித்தோம். இருளில் நகைகள் மட்டும் தெரிய, இருட்டுக்கே அலங்காரம் செய்து விட்டது போலிருந்தது.

நானும் அண்ணாவும் ஓடிப்போய் நீரில் இறங்கிக் குளித்தோம். அருணாச்சலம் அண்ணாவின் அமைதி எனக்குச் சங்கடமாக இருந்தது. இரண்டுமுறை பேசாமல் மூழ்கி எழுந்த பிறகு “போகட்டும் அண்ணா தம்பிதானே? ஒரு ஆசையில செய்து போட்டேன்” என்றேன். அண்ணா ஒன்றும் சொல்லவில்லை.

“தப்புதான் அண்ணா. எனக்கு அப்பிடியாக்கும் பெண்ணைக் கண்டா ஒரு வெறி… ஆனைவெறி… போட்டு அண்ணா. மாப்பாக்கணும்.”

அண்ணா முழ்கி நீரள்ளி கொப்பளித்தபடி ”செரிடே. அதுக்கு இப்பம் என்ன? பெண்ணாசை எனக்கும் உள்ளதாக்கும். நான் ஆசானுக்குச் செய்தத நீ எனக்குச் செய்தே” என்றார்.

எழுந்து நிர்வாணமாக நடந்து துண்டைப் பிழிந்து தலைதுவட்டிக்கொண்டார். நான் ஆறுதல் அடைவதற்க்குப் பதில் பதற்றம்தான் அடைந்தேன். அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்று புரிந்தது.

அண்ணாவும் நானும் யானையுடன் ஆரியசாலை வழியாகச் சென்றோம். ஆரியசாலையில் அந்த அதிவிடியல் காலையிலேயே பொதிவண்டிகளும் மூட்டை தூக்கிகளும் நெரிபட்டுக் கொண்டிருந்தார்கள். யானையைக் கண்டதும் கும்பிட்டு விலகி வழிவிட்டார்கள். கிழக்கே கோட்டை கண்ணில் பட்டதும் அருணாச்சலம் அண்ணா என்னைப் பார்க்காமல் “லே தம்பி, நீ அந்த பாதமங்கலம் குட்டிய பாத்தாச்சு இல்லலே?” என்றார்.

நான் கத்தியால் குத்தியப்பட்டவன் போல நின்றுவிட்டேன் “ஆரை?” என்றேன்.

“எனக்க கிட்ட வேண்டாம் மாயம், கேட்டியா. நேத்து ராத்திரி நீதான் சொன்னே. அம்பிளிண்ணுல்லா அவளுக்க பேரு?”

நான் என் தொண்டையை விழுங்கி விட்டு “அண்ணன் இதென்ன சொல்லுது? அது நான் குடிவெறியில ஒரு இதுக்குச் சொன்னதுல்லா?”

“செரி. ஆனா நீ போனது சத்தியம். அவளுக்கு முலையப்பத்தியில்லா சொல்லிட்டிருந்தே” நான் பேசாமலானேன்.

“பூத்த பணமில்லாம போக முடியாதே… பணத்துக்கு எங்க போனே?” என்றவர் என் கண்களைப் பார்த்ததும் சட்டென்று ஊகித்து விட்டார்.

“அப்பம் நீ கோவில் கலவறைக்குள்ள கேறிப்போட்டே இல்லலே?” என்றார்.

நான் “அண்ணா” என்றேன் பீதியுடன்.

“செரி.” என்று அவர் புன்னகைசெய்து என்னையே பார்த்தார்.

நான் அப்படியே நின்றேன். அண்ணா என்னைப் பார்த்து “வா” என்றார்.

நான் “அண்ணன் இதை யாரிட்டயும் சொல்லப்பிடாது” என்றேன்.

“பாப்பம்.”

“அண்ணனுக்கு என்ன வேணும்?” அவர் திரும்பிப் பார்த்தார். உதடுகளில் மெல்லிய புன்னகை விரிந்தது. ”என்ன கேப்பேன்? நானும் நீயும் ஒரே எனமுல்லா?”

நான் அதை ஊகித்து “அண்ணா சொன்னா கேளுங்க அவ…” என்றேன்.

“ஒருக்கா மட்டும்லே. ஒருக்கா போரும். நானும் கோவில் வட்டத்தில் ஜீவிச்சதுக்கு பலன் இருக்கட்டும் … நான் செத்தா ஆத்மாவுக்கு மோட்சம் வேணும்ல?”

“இல்லண்ணா, அது சில்லற காரியமில்ல. பூத்த பொன்னு வேணும் அதுக்கு.”

அண்ணா வேறுபக்கம் திரும்பி “பொன்னு குடுத்துத்தானே நீ போனே?”

நான்,  “அண்ணா உள்ள பணமெல்லாம் குடுத்தாச்சு. இனி நான் பொன்னுக்கு எங்க போறது?” என்றேன்.

“முன்ன என்ன செய்தியோ அதைச் செய்யி. அது எனக்க கணக்கு இல்ல… எனக்கு அவ வேணும்… இல்லேண்ணா நீ கழுவிலே கேறு….” என்றார் அருணாச்சலம் அண்ணா.

கொட்டாரம் வழியில் ஆசான் கசவு நேரியதை இடுப்பில் கட்டி தாம்பூல வாயுடன் நின்றார். காலையில் பத்மநாப தரிசனம் முடிந்ததன் அடையாளமாக நெற்றியில் சந்தனம். “ஏம்லே, நேரம் காலத்துக்கு வராட்டியளா? வலிய சர்வாதிக்காரு நாலுமட்டம் கேட்டாச்சு” என்று கூறினார். யானை அதுவே அரண்மனைக்குச் சென்று செங்கல் முற்றத்தில் அரண்மனையின் முகப்பு வாசலை நோக்கி நின்றுகொண்டது. அதன் உடம்பெங்கும் பொறுமையின்மை தெரிந்தது. துதிக்கையால் தரையை தேவையில்லாமல் துழாவியது. கூழாங்கற்களை பொறுக்கி ஒரு ஆட்டு ஆட்டி கீழே போட்டது. புஸ்ஸ் என்று மூச்சு சீறி புழுதி பறக்கச் செய்தது. கால் மாற்றி வைத்து தலையை அசைத்தது.

முன்பெல்லாம் தம்புரான் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்துவிடுவார். ஆகவே அரண்மனை தூங்குவதேயில்லை. எழுந்தவர் கண்களைத் திறக்காமல் சேவகனின் கைகளைப் பிடித்தபடி நடந்து அரண்மனை முற்றத்துக்கு வருவார். கேசவனின் மத்தகத்துக்கு முன்னால் அவரை நிறுத்தியதும் இரு கைகளையும் கூப்பியபடி ”கஜராஜ வந்தனம்” என்று மூன்று முறை கூறியபடி கண்களைத் திறப்பார். கேசவன் உடல் பரபரக்க துதிக்கை துவள நின்று ததும்பும். கதலி வாழைக்குலையும் கரும்புக்கட்டும் வெல்லச்சோறும் தன் கையாலேயே கேசவனுக்கு ஊட்டுவார். அதன் பிறகு சென்று குவித்து உடைமாற்றி ஸ்ரீபத்மநாபனுக்கு நிர்மாலிய பூஜை நடப்பதைப் பார்ப்பதற்குச் செல்வார். முன்மதியம் மந்திராலோசனைகள் முடித்து காலையுணவு உண்டபிறகு யானைக்கொட்டிலுக்கு வருவார். கேசவன் அருகே சாய்வு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பார். சிலசமயம் அவன் மீது ஏறி கொட்டிலைச் சுற்றி வருவார். நண்பனிடம் பேசுவது போலவே சிரிப்பும் விளையாட்டுமாக இருக்கும்.

ஆனால் இப்போது நாலைந்து வருடங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. சிறுவயதில் வந்த அதே நோய்தான். கடுமையான மூச்சிளைப்பு. வாயில் பெரிய பெரிய புண்கள். இரவு தூக்கமில்லை என்பதனால் நிறைய அபின் கொடுத்துத்தான் தூங்க வைப்பார்கள். ஆகவே காலையில் எழுந்திருக்க மிகவும் தாமதிக்கும். கேசவனைப் பார்த்து வணங்கியதும் துதிக்கையைத் தொட்டு தலையில் வைத்துவிட்டு பேசாமல் திரும்பிச் சென்று விடுவார். பகலில் வந்து அமர்ந்து கொஞ்சுவதும் இல்லை. எங்களை அடையாளம் கண்டு பேசியே ஒருவருடத்திற்கு மேலாகிறது.

சடசடவென்று குதிரைகள் செங்கல் பரப்புமீது குளம்படி எழ குதிரைகள் ஓடிவரும் ஒலி கேட்டது. கேசவன் ஒலிகளைப் பார்த்து அதிர்வதோ திரும்புவதோ வழக்கமில்லை. ஆனால் அவன் ஒலிகளைக் கவனிக்காமல் விடுவதுமில்லை. காது ஒரு கணம் நின்று பின்பு வீச ஆரம்பித்தது. உட்பக்கமிருந்து வந்த பாதையில் எட்டுக் குதிரைகள் வந்தன. முன்னால் வந்த கரிய குதிரையைப் போல ஒன்றை நான் பார்த்ததே இல்லை. கரும்பட்டு போல பளபளப்பு. வாயின் சிவப்பும் பற்களின் வெண்மையும் கண்களின் வெண்மையும் தவிர வேறு நிறங்களே இல்லை. குளம்புகள் மட்டும் பனங்கொட்டையின் சாம்பல் கருமை. வாயில் நுரை தொங்கி மூச்சில் அதிர, கழுத்தைத் திருப்பி, கரிய பிடரிமயிர் சிலும்ப, முன் கால்களைத் தூக்கி இருமுறை காற்றில் உதைத்து நின்று புஸ்ஸ் என்று மூச்சிரைத்தது. பிற குதிரைகளும் பலவகைகளில் கழுத்தைத் திருப்பி நின்றன.

இளமுறைத் தம்புரான் குதிரையில் இருந்து இறங்கி கடிவாளத்தை ஓடிவந்த சேவகனிடம் கொடுத்தார். பெரிய தோல் சப்பாத்துக்களை தூக்கி வைத்து நடந்து கேசவனைப் பார்த்தார். பின்பக்கம் குதிரைகளை விட்டு இறங்கியவர்கள் அனைவருமே செம்பட்டை முடி கொண்ட துரைகள். குதிரையில் பயணம் செய்ததால் அவர்கள் முகங்கள் சேவற்கோழியின் கன்னங்கள் போல சிவந்திருந்தன. இருவர் கைகளில் துப்பாக்கிகள் வைத்திருந்தார்கள். கரிய குழலும் மரத்தாலான மட்டையும் கொண்டவை.

இளந்தம்புரான், அவரை நோக்கி ஓடிவந்து பணிந்து வாய்பொத்தி நின்ற காரியக்காரரிடம் ”ஏதா ஆனை?” என்றார். அதை அவர் மிகவும் முகம் சுளித்துக் கொண்டு கேட்டது போலத் தோன்றியது. ஆசான் பணிவுடன் வாய்பொத்தி ஏதோ சொல்லப்போக இளந்தம்புரான் அவரைக் கூர்மையாகப் பார்த்து அடக்கிவிட்டு காரியக்காரரைப் பார்த்தார். அவர் முணுமுணுவென்று சொல்ல மீண்டும் யானையைப் பார்த்துவிட்டு தன் பெரிய சப்பாத்துக்களால் தரையை உதைத்து தேய்தார். சேவகர்கள் வந்து அவர் செருப்புக்களைக் கழற்ற ஆரம்பித்தார்கள். பின்னால் வந்த எல்லாத் துரைகளுக்கும் ஆளுக்கொரு சேவகர்கள் இருந்தார்கள். சப்பாத்துக்களை கழற்றவும் மேல்சட்டையை கழற்றவும் உதவினார்கள். துரைகள் வான்கோழி போலக் குழறி பேசியவாறு யானையைப் பார்த்தபடி உள்ளே சென்றார்கள். முற்றத்தில் நாங்கள் யானையுடன் காத்து நின்றிருந்தோம்.

வெயில் பரவ ஆரம்பித்தது. வெளியில் அங்கே அப்படி நிற்பது மிகவும் பொருத்தமில்லாமல் இருந்தது. எத்தனையோ வருடங்களாக வந்து நிற்கும் முற்றம். ஆனால் புதிய இடம் போலத் தோன்றியது. இரண்டுமுறை காரியக்காரர் வந்து பார்த்துப் போனார். பிறகு சர்வாதிக்காரரரே வந்தார். திவான் பேஷ்கார் யாரும் கண்ணில் படவில்லை. மேலும் சற்று நேரம் கழிந்தது. வியர்க்க ஆரம்பித்தது. மாடிப்படிகளில் இருவர் தம்புரானை தாங்கிக் கொண்டுவருவது தெரிந்தது. மிகவும் வெளிறி வெளுத்துப்போன தம்புரான் இரு சேவகர்களால் மெல்ல மெல்லப் படிகளில் இறக்கப்பட்டார். தரைக்கு வந்ததும் மூச்சிளைத்து நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு இடுப்பில் கைவைத்து நின்றார். ரோமம் நரைத்த மெலிந்த மார்பு கோடைகாலத்தில் நாய் இரைப்பது போல ஏறியிறங்கியது. ‘கொண்டுபோ’ என்று அவர் சைகை காட்டியதும் சேவகர் மீண்டும் அவரை நகர்த்தி கொண்டுவந்தார்கள்.

கேசவன் அவரைக் கண்டதும் உடல்முழுக்க அசைய ஓர் எட்டு எடுத்து வைத்து நின்றது. அவர் அருகே வந்ததும் அதன் வயிறு அதிர ஓர் உறுமல் எழுந்தது. “வந்நோடா” என்று தம்புரான் பலவீனமான குரலில் கேட்டார். மெல்ல அருகே வந்து கேசவனின் துதிக்கையைப் பற்றிக் கொண்டார். வழக்கம்போல துதிக்கையால் அவரைச்சுற்றிப் பிடிக்க கேசவன் முயலவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டபடி அப்படியே அசையாமல் நின்றார்கள். தொட்டுக்கொள்வதன் மூலமே எல்லாவற்றையும் பேசிவிட்டார்கள். பிறகு கேசவன் துருத்தி போல பெருமூச்சு விட்டான். தம்புரான் துதிக்கையை ஒரு முறை தட்டியபின்பு சேவகர்களிடம் தன்னைக் கொண்டு போகச் சொல்லி கைகாட்டினார்.

திரும்பும்போது வழக்கமாக நாங்கள் கரமனை பங்கியக்கச்சியின் சோற்றுக் கடைக்குப் போய் நுனிவாழையிலை போட்டு மூன்று கூட்டம் பிரதமன், சக்கைப்புளிக்கறி, எரிசேரி, பளிசேரி, காளன் ஒலனுடன் ஒரு சாப்பாடு எடுப்போம். இலைக்கு ஒரு சக்கரம்தான். அது எப்படியும் மகாராஜா கையால் கைநீட்டமாகக் கிடைத்திருக்கும். அன்று ஆசான் எங்களிடம்  “போங்கடே… நான் நாளைக்கு வந்துருதேன்…” என்றபடி பூஜப்பபுரையில் அவருடைய சொந்தக்காரர்கள் வீட்டுக்குப்போய்விட்டார்.

நாங்களும் எதுவும் பேசாமல் திரும்பினோம். வழக்கமாக கரமனை ஆற்றங்கரையில் கேசவன் ஓலையெடுப்பது உண்டு. அன்று அவனும் பேசாமல் நடந்தான். நான் ஓரக்கண்ணால் அருணாச்சலம் அண்ணனைப் பார்த்தபடி கூடவே சென்றேன். அவர் தனக்குள் மெல்ல பாடிக்கொண்டு தன் கையிலிருந்த பிரம்பால் தன் முழங்காலிலும் சாலையோர இலைகளிலும் மெல்லத் தட்டியபடி வந்தார்.

நான் மெல்ல கனைத்தேன். பிறகு  “அண்ணா” என்றேன்.  “என்னடே?” என்றார் அண்ணா.  “நான் அண்ணனுக்க காலு பிடிச்சு மாப்பு கேக்குதேன். இந்த விசயத்தை விட்டுப்போடணும். நான் செய்தது பெரிய தப்பாக்கும். அதுக்கு நான் என்ன வேணுமானாலும் செய்யுதேன்.” என்றேன்.

அருணாச்சலம் அண்ணா சிரித்தபடி “நீ வேற ஒண்ணும் செய்யவேண்டாமிடே. இத மட்டும் சாதிச்சு குடுத்துப் போடு. ஒருக்கா போரும். நான் பின்ன கேக்க மாட்டேன்” என்றார்.  “இல்லை அண்ணா அண்ணன் நினைக்குதமாதிரி இல்ல அது. பத்து பொன்னு இல்லாம அவளுக்க நெழலைக்கூட தொடமுடியாது. அவளுக்க அம்மை எண்ணி உரைச்சு பாக்காம படிகேற விடமாட்டா. பத்து பொன்னுன்னா இண்ணைக்கு நடக்கப்பட்ட காரியமா?”

அருணாச்சலம் அண்ணா சற்று கோபத்துடன்  “அப்ப உனக்கு நடந்ததுல்ல? உனக்கு பத்துப் பொன்னு பூவாட்டு விரிஞ்சுதுல்ல? எனக்கும் பத்துப் பொன்னு கண்டுபிடி…” என் குரல் தழைந்தது.  “அண்ணா அது எனக்கு களைஞ்சு கிட்டினதாக்கும்” அவர் சிரித்து, ”மக்களே, தாயங்களி எனக்க கிட்ட வேண்டாம் கேட்டியா? நான் பல குளங்களில் குண்டி கழுவினவனாக்கும். பத்துப் பொன்ன வல்லவனும் களைஞ்சிருந்தா இந்நேரம் கோயிலு வட்டத்தில கிளித்தட்டும் களியுமுல்லா நடந்திருக்கும். நீ கோவில் அகத்தறையில கேறிப்போட்டே. அதாக்கும் சத்தியம். ஒருக்கா கேறின வளி இருக்கும்ல, அந்த வளியே கேறு. நான் அதுவரை காத்திருக்கேன்.”

நான் அவரையே பார்த்தேன்.  “என்னல பாத்து பயப்பெடுத்துதே? நீ களி படிச்ச கள்ளன். நான் கள்ளனைப் பிடிக்குத குள்ளன்… நீ காரியங்களை செரிப்பெடுத்துவே…”

“இல்லேண்ணா…”

“இல்லேன்னா ஸ்ரீகாரியத்தப் பாத்து ஒரு சொல்லு. போரும். அந்தக் குட்டிய பிடிச்சா அவளுக்க கையில பண்டம் இருக்குமில்ல? தட்டு கிட்டினா அவ உனக்க பேர சொல்லுவா. நீ தெக்கே பறம்புல கழுவில ஏறிக் குத்தியிருப்பே. மக்கா உனக்க சரீரம் கழுவுக்கு ஒத்த சரீரமில்ல கேட்டியா?”

“செரி அண்ணா, நான் சும்மா கேட்டேன். நானும் அண்ணனும் இன்னைக்கு நேத்துள்ள சொந்தமில்ல. இப்பம் காமம் கேறி நான் ஒரு தப்பு செய்து போட்டாலும் என்னைக்கும் அண்ணன் எனக்க அண்ணனாக்கும்” என்றேன்.

“காமம் எனக்கும் உண்டுலே.”

“செரி அண்ணா, நான் பாத்துக்கிடுதேன்” என்றேன்.

“வாற அம்மாசைக்குள்ள முடிச்சிருடே… ஒருபாடு காத்திருந்தா அண்ணனுக்கு வயசாவுது பாத்துக்கோ…”

எரியும் வெளியில் பாறசாலையைத் தாண்டி நடந்தோம். அதற்குப் பிறகு நாங்கள் பேசிக் கொள்ளவேயில்லை. பாறசாலையில் சோற்றுப்புரையில் பட்டைச் சோறும் தேங்காச்சட்டினியும் பொங்கிப் பிசைந்து உண்டோம். அப்போது அருணாச்சலம் அண்ணன் “நல்ல மீனுகூடடி ஒரு வாய் சோறு தின்னணும்டே… நாக்கு கெடந்து பெடயுது” என்றார். நான் புன்னகை செய்தேன். மீண்டும் சாலையில் நடந்தோம். அருணாச்சலம் அண்ணா மிகமிக உற்சாகமாக இருந்தார். பாட்டும் தாளமும் கூடவே வந்தன. அவர் மனதுக்குள் அம்பிளி மீது அத்தனை ஆசை இருந்திக்கிறது. கோவில் வட்டத்தில் அப்படி ஆசைப்படாதவனுக்கு இடுப்புக்குக் கீழே மொண்ணை என்று அர்த்தம்.

அவளுக்கு முலை மொட்டிட்ட நாள் முதல் நான் அவளை எண்ணி மனபோகம் கரபோகம் செய்து கொண்டிருந்தேன். அவள் எதிரே வரும்போது நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்து அவள் உடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவள் என்னைப் பார்க்கவேயில்லை. எதிரே நான் வந்தால்கூட அவள் கண்களுக்கு நான் படுவதில்லை. உண்மையிலேயே ஏதாவது மந்திரமாயத்தால் அவள் என்னைப் போன்றவர்களைத் தன் பார்வையிலிருந்தே விலக்கிக் கொண்டாள் என்று தோன்றும். உதாசீனம் செய்யும் பெண் யட்சி போல ஆணை வளைத்து விடுகிறாள்.

ஒருமுறை ஊட்டுபுரை முக்கில் அவளைத் துணிந்து மறித்துவிட்டேன். கையில் உருளியில் நெய்யுடன் சென்றவள் ஒசிந்து நின்று புருவங்களைத் தூக்கி அலட்சியமாக  “ம்?” என்றாள். நான் ஏதேதோ சொல்ல நினைத்திருந்தேன். அவள் உதடு மெல்ல வளைந்தது. அலட்சியமான சிரிப்புடன் “ஆசை உண்டோ?” என்றாள். என் இதயம் முரசு போல அறைய  “ஓம்” என்றேன்

அவள் மார்புகள் அசைய மேலும் சிரித்து,  “கெட்டணுமா, கிடக்கணுமா?” என்றாள். அந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவேயில்லை. அவள் ஓங்கி அடித்திருந்தால்கூட அது நான் எதிர்பார்த்ததாகத்தான் இருந்திருக்கும். நான் என் மொத்த மூச்சையும் திரட்டிக் கொண்டு  “நான்….” என்றேன்.

அவள் மறித்து  “கெட்டணுமானா ஒரு பத்து வருஷம் கழிஞ்சு வா பாப்போம். கெடக்கணுமானா நல்ல முத்திரைப் பொன் பத்து வேணும். கொண்டு வா” என்றபின் கறாராக  “வழி” என்றாள்.  நான் விலகிவிட்டேன்.

அதன்பிறகு ஆறு மாதம் செத்த பிணம் போல நடமாடினேன். முகத்தைக் கொட்ட சுற்றிவரும் குளவிபோல அந்தச் சொற்கள் என்னுடனேயே வந்து ரீங்கரித்தன. இரவில் அவள் வீடு புகுந்து அவள் காலில் விழுந்து கதறி என் ஆசையையும் தாபத்தையும் சொன்னேன். அவள் என்னை அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள். அவள் அம்மாவைக் கண்டு காலில் விழுந்தேன். அவளை எனக்கு சம்பந்தமாகத் தந்து விட்டாள். அவளைப் பிடித்து தூக்கிக்கொண்டு பாண்டி நாட்டுக்குப்போய் தாலிகட்டிக் கொண்டேன். அவளை வெட்டிக் கொன்றுவிட்டு நானும் செத்தேன். அவளை எரித்த தீயில் நானும் குதித்து அவளைத் தழுவிக்கொண்டேன். ஆறு மாதத்தில் அவளுடள் ஆறாயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்தேன்.

அப்போதுதான் ஆறாட்டு வந்தது. கோயிலின் மங்கலபட்டம் அப்போதும் மூத்த யானையாகிய கரடிக்குளம் நாராயணன்தான். மிகவும் வயதாகி மெலிந்து கன்ன எலும்புகளும் மத்தக எலும்புகளும் துருத்தி பெரிய கொம்புகளை தூக்கவே சக்தியில்லாமல் ஆகிவிட்டிருந்தது. கோயில் வளைப்பில் இருந்து கரடிக்குளம் மாடம்பியின் அரண்மனைக்குக் கொண்டுபோய் அங்கே நான்கு பாப்பான்களையும் எட்டு ஊழியர்களையும் வைத்துப் பேணிவந்தார்கள். ஓலையும் தழையும் மெல்ல முடியாது. எல்லா பற்களும் உதிர்ந்து விட்டன. தினமும் கருப்பட்டியும் சுக்கும் போட்டு காய்ச்சிய தினையரிசிக் கஞ்சிதான். அதை தும்பிக்கையால் அள்ளி கொஞ்சம் உறிஞ்சிவிட்டு நின்று விடும். பிறகு மூங்கில் குழாய்களில் அள்ளி கடைவாயில் விடுவார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் வில்வாதி லேகிய உருண்டைகள் ஊட்டப்படும். வெகு நேரம் நிற்க முடியாது என்பதனால் பெரிய வைக்கோல் உருண்டைகளை நான்கு கால்களுக்கும் நடுவே போட்டு அதன்மீது கால் தளர்த்தி அமரச் செய்வார்கள்.

ஆறாட்டுக்கு நான்கு நாட்கள் முன்னரே கரடிக்குளம் கோரன் நாயரும் பரிவாரங்களும் யானையுடன் கோயிலை நோக்கி கிளம்பி விடுவார்கள். வரும்வழியில் நூற்றியெட்டு இடங்களில் கஜபூஜை உண்டு. வந்து சேரும்போது நாராயணன் களைத்துப் போயிருக்கும். ஆற்றில் கொண்டுபோய் கட்டி உடலில் சேறு அள்ளிப் பூசி அதன்மீது வைக்கோல்ப் பிரிகளை பரப்பி நீர் ஊற்றி குளிரச் செய்து இரவெல்லாம் ஓய்வெடுக்க வைப்பார்கள். பெரிய உருளி நிறைய ச்யவனப்பிராசம் கெட்டி உருளைகளாக ஆக்கி ஊட்டுவார்கள். காலையில் வெல்லச்சோறு மட்டும்தான் உணவு. இரவெல்லாம் யானையைச் சுற்றி கரடிக்குளம் கும்பல் கத்தி கூச்சலிட்டு அமளி செய்வார்கள். ஆற்றுக்குள் பந்த வெளிச்சமாக இருக்கும்.

ஆசான் என்னிடம் “என்னடே கரடிக்குளம் கொம்பன் சரிஞ்சுதா? இந்த ஆதாளி போடுதானுக?” என்றார்

நான்  “ஆசானே மெல்ல” என்றேன்.

“என்னடே மெல்ல? தலையச் சீவிடுவானா?” என்று ஆசான் கிசுகிசுத்தார்.

கரடிக்குளம் தம்புராக்கள் திருவட்டார் கோயிலுக்கு காராய்ம பொறுப்புள்ள பதினெட்டு மாடம்பிமாரில் மிகவும் செல்வாக்கானவர்கள் அவர்கள்தான். புலிமலையும் ஆனையடிக்காடும் எல்லாம் அவர்களின் கையில்தான் இருந்தன.

ஆனால் காலையில் நெற்றிப்பட்டம் கட்டி, முத்துப்பட்டு அணிந்து, குண்டலமும், தும்பிக்கைக் குஞ்சலமும், பித்தளைச் சங்கிலிகளும் ஒளிவிட சலாங் சலாங் என்று நாராயணன் வரும்போது கையெடுத்து கும்பிடத் தோன்றும். ஆசானே கூட  “ஆனைண்ணா அது ஆனை. அஷ்ட ஐஸ்வரியம், நூற்றெட்டு சுழி, நூற்றெட்டு அங்க லட்சணம்…. ஒரு எள்ளிடை கொறவில்லை… அவனை இந்தக் கண்ணால பாக்கிறதே ஒரு புண்ணியமாக்கும்” என்றார். பெரியதோர் பொன்வண்டு போல தூரத்தில் தெரிந்து, விரிந்து விரிந்து வந்து, வேங்கையும் புன்னையும் பூத்த கரிய பாறைக்குன்று போல நாராயணன் கண்முன் வந்து நின்றபோது ஆசான் கைகூப்பினார். நானும் கைகூப்பினேன்.

நாராயணன் கடந்து சென்றபோது “நான் ஓர்ம வச்ச நாளு முதல் கண்டுவாற ஆனையாக்கும்டே… ஒரு அபசப்தம், ஒரு கலகம் இன்னைக்குவரை கெடயாது. பரம சாத்விகன். சின்னப்பிள்ளைங்ககூட வாலைப்பிடிச்சு தொங்குவோம். அவனுக்க வாய்க்குள்ள கையவிட்டு தேங்காயப் பிடுங்கி நான் தின்னுட்டுண்டு. போன ஜென்மத்தில பெருமாளுக்கு கொஞ்சம் கடன்மிச்சம் வச்ச ஏதோ ரிஷி இந்த ஜென்மத்தில இப்பிடி கடனைக் கழிச்சிட்டுப் போறார்டே” என்றார் .

நாராயணன் திடம்பு எடுப்பதற்காக கிழக்கு வாசலில் வந்து நிற்பதைப் பார்க்கப்பெரும்கூடம் கூடிவிட்டிருந்தது. அவர்கள் அனைவருக்குமே திருவட்டார் ஆறாட்டு என்றாலே கடுவாப்பாறை நாராயணன்தான். நூறுவருஷம் முன்பு திருநல்லூர் சக்ரபாணிதான் கஜராஜன் என்று சொல்வார்கள். அவனைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. அவனும் நாராயணனும் ஒரே உயரம்தான். ஆனால் சக்ரபாணி இரண்டுமுறை மதமெடுத்து கலகம் செய்ததுண்டு. நாராயணன் குரலைக்கூட ஓங்கி எழுப்பியதில்லை.

திடம்பு ஏனை மீது ஏறி கொட்டும் குரவையும் மங்கலமுகாக ஆறாட்டு தொடங்கினால் வெயில் ஆறிய பிறகுதான் ஆற்றிலிருந்து திரும்ப திடம்பு வந்து கோயில்படி ஏறும். அத்தனை நேரம் வெளியில் நிற்பதனால் பெரும்பாலான யானைகள் சோர்ந்து போய் கால்மாற்ற ஆரம்பிக்கும். குடங்களில் நீர் மொண்டு வந்து காதுகளில் ஊற்றிக் குளிர்விப்பார்கள். போகும் வழியில் முத்தாலம்மன் கோயில் முன் நிற்கும்போது வெல்லம் போட்டுக் கரைத்த தண்ணீரை மரத்தொட்டிகளில் விட்டு குடிக்க வைப்பார்கள். மத்தகத்தில் திடம்பு ஏற்றிய அஷ்டமங்கல யானைக்கும் மேலே அமர்ந்திருக்கும் போற்றிக்கும் மட்டும்தான் அதெல்லாம் இல்லை. முழு விரதம்.

திடம்பு ஏற்றிவிட்டால் பிறகு நாராயணனுக்கு களைப்பு தளர்வு ஏதும் இல்லை. முதுமை காரணமாக எப்போதும் அவனுடைய மத்தகம் முதுகைவிட்டு கீழே தாழ்ந்து தான் இருக்கும். முதுகெலும்பு கவிழ்ந்த ஓடம் போல பெரியதாக எழுந்து தெரியும். துதிக்கை மடிந்து தரையில் இழுபடும். கொம்புகளின் எடை தாளாமல் துதிக்கையை ஊன்றுவான். கொம்புகளைக் கொஞ்சம் வெட்டிவிடலாம் என்று பழமங்கலம் நாணுக்குட்டி வைத்தியர் சொன்னபோது ”கொம்பில்லாத ஆனை கிரீடமில்லா ராஜாவாக்கும். அவன் அந்தக் கொம்புகளோடத்தான் சந்தனக் கட்டையில் ஏறுவான். அதாக்கும் அவனுக்கும் எனக்கும் கெளரவம்” என்று கடுவாகுளம் மாடம்பி சொல்லிவிட்டார்.

திடம்பு ஏற்றப்பட்டுவிட்டால் பிறகு ஒருகணம்கூட நாராயணனின் தலை தாழ்வதில்லை. மத்தகம் முதுகுக்குமேல் எழுந்துதான் நிற்கும் கடல் அலை மீது ஏறிச்செல்லும் கட்டுமரம் போல கொம்புகள் வளைந்து ஏந்தி அவன் நடக்கும்போது எம்பி எம்பிச் செல்லும். துதிக்கை நுனி தரையில் தொடவே தொடாது. தெருவெல்லாம் அவனைப் பார்க்க பக்தர்கள் முண்டியடிப்பார்கள். நிறையானை விஷ்ணுரூபம் என்பது சாஸ்திரம். நாராயணனுக்குப் பின்னால் கேசவன் உற்சவமூர்த்தியுடந் செல்லும். அதற்குப் பின்னால் உண்ணிகிருஷ்ண மூர்த்தியுடன் கணியாகுளம் மாதவனும் சாவித்ரியும் ஸ்ரீதேவியுடன் தேவகியும் பூதேவியுடன் சாவித்ரியும் செல்வார்கள்.

ஆறாட்டு எழுந்தருளல் ஆற்றுக்கு இறங்கும் எட்டாம் விலக்கை அடைந்தபோது எதிரே முத்தாலம்மன் கோயிலில் இருந்து செட்டிகள் சமூகத்து மண்டபகப்படியினர் கொட்டும் குரவையும் மங்கலப் பொருட்களுமாக வந்தார்கள். நாராயணன் நின்று லேசாக தலையை ஆடடிக் கொண்டது. வெயிலில் வியர்த்து வழிய பூஜை நடந்தது. எண்ணைப்பந்தங்கள் எரிந்து மேலும் வெக்கை கூட்டின. பின்னால் சென்ற கேசவன் ஓரமாக ஒதுங்கி நாராயணனை முந்த முயன்றபோது ஆசான் அவன்காலில் மெல்ல தட்டினார். கேசவன்  அதை பொருட்படுத்தாமல் நாராயணனை பக்கவாட்டில் ஒட்டிச் சென்றது.

கேசவன் ஒரு போதும் அப்படிச் செய்வதில்லை. அவனுக்கு என்ன ஆயிற்று என்று வியந்தபடி நான் ஆசானைப் பார்த்தேன். ஆசான் அந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் யானையிடம் ”பொறத்தே.. ஆனெ பொறத்தெ” என்று கூறி மீண்டும் தட்டினார். நாலைந்து எட்டு பின்னால் வந்தபின் கேசவன் சட்டென்று வேகம் பிடித்து தன் முழு வலிமையாலும் நாராயணனின் பின்பக்கத்தில் கொம்புகளால் முட்டியது. மத்தகம் தாழ்த்தி, கொம்புகளை ஏந்தி, துதிக்கை சுருட்டி வைத்து, முன்னங்கால் வளைத்து, கேசவன் நாராயணனைக் குத்துவதும் அவனுடைய தந்தங்கள் நாராயணனின் பின்தொடையின் கரிய பரப்பில் ஆழமாக இறங்குவதும் எல்லாம் ஒரு சில கணங்களில் முடிந்து விட்டன. ஆனால் நான் நெடுநேரம் அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

செவிகள் அடைக்கும்படி பிளிறல் முழங்கியபடி நாராயணன் திரும்பியது. அத்தனை பெரிய யானை ஒரு நொடியில் அப்படித் திரும்பும் என்று பின்னர் நினைவுகூர்ந்தபோதுகூட என்னால் நம்ப முடியவில்லை. கேசவனின் தந்தங்களை விட அரைமடங்கு பெரிய தந்தங்கள். பித்தளைக்கூர் பொருத்தி வெயிலில் ஒளிவிட்டன அவை. அந்த பெரும் பிளிறல் கேட்டு கேசவன் பிரமித்துப்போய் நின்று தன்னையறியாமலேயே மத்தகம் தாழ்த்தி, கொம்புகளை மண்ணில் ஊன்றி, முன்கால் மடித்து மண்டியிட்டுவிட்டான். அக்கணம் கேசவனின் கதை முடிந்தது என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. அந்த எண்ணம் வருத்தமோ மகிழ்ச்சியோ இல்லாமல் யாரோ சொன்ன ஒரு கதையின் வரிபோலத்தான் எனக்குள் இருந்தது. அந்தக் காட்சியையே நான் ஒரு கனவு போலக் கண்டு கொண்டிருந்தேன். நான் அங்கே இருப்பதையே நான் உணரவில்லை. அந்த இரு பெரிய யானைகளைத் தவிர எதையும் நான் பார்க்கவில்லை.

நாராயணன் ஒருமுறை உடலை உலுக்கிவிட்டு அப்படியே அசையாமல் நின்றுவிட்டது. அதன் காதுகள் மட்டும் மெல்ல அசைந்தன. துதிக்கை தளர்ந்து சரிந்து மெல்லத் துழாவி மூச்சுவிட்டு தரையில் தூசைப் பறக்கச் செய்தது. அப்போதும் அது தலையைத் தாழ்த்தவில்லை. அதன் மேல் இருந்த ஆதிகேசவனின் திடம்பும் வெண்முத்துக் குடையும் சரியவில்லை. இரு போற்றிகளும் அதன் விலாக்கயிற்றில் கால்களைச் செருகி ஒரு கையால் கயிற்றைப் பிடித்தபடி வெளிறி உறைந்து அமர்ந்திருந்தார்கள். ஸ்ரீகாரியம் உரத்தகுரலில் ”டேய் சீதரா, நாயே, கொண்டுபோடா நின்னுடெ ஆனெயெ” என்றார். ஆசான் கம்பால் கேசவனைத் தட்டி  “ம்ம்… ஆனை பொறத்தே” என்றார். கேசவன் அசையாமல் மண்டியிட்ட நிலையிலேயே இருந்தது. மீண்டும் பதற்றத்துடன் ஆசான் அதை பின்னுக்குப் போகச் சொல்லி ஆணையிட்டார். கேசவனின் துதிக்கை மலைப்பாம்பு போல புழுதியில் நெளிந்து நாராயணனை நோக்கி  தயங்கித் தயங்கி நீண்டது. அதன் மூக்குத்துளைகள் பொக்கை வாயால் ஒலியில்லாது பேசுவதுபோல அசைந்தன. நாராயணன் உடலில் காதல்லாமல் அசைவே இல்லை. வேறு எங்கோ கேட்பது போல அது  “ம்ம்ம்” என்று அமறும் ஒலி எழுந்ததும் கேசவன் சட்டென்று எழுந்து உடலைக் குலுக்கியபடி பின்வாங்கி பக்கவாட்டில் விலகி கோயிலை நோக்கி ஓடியது.

நானும் அருணாச்சலம் அண்ணனும் அதன் பின்னால் ஓடினோம். கேசவன் அதைப் போல ஓடி நான் பார்த்ததில்லை. சிறிய யானைக் குட்டிகள் பெரிய யானைகளிடம் விளையாடும்போதோ, எதையாவது பார்த்து மிகவும் பயந்துவிட்டாலோ செய்யும் உடற்பாவனை அது. சுழல, உடலைக் குறுக்கி, முதுகுத்தண்டை நன்றாக வளைத்துத் தூக்கி, தலையைத் தாழ்த்தி, துதிக்கையைச் சுழற்றியபடி ஓடி யானைக் கொட்டிலுக்குச் சென்று அதன் வழக்கமான கல்தூணருகே நின்றுகொண்டது.

நான் அருகே சென்றேன். என் தொடை மட்டும் வெடவெடவென நடுங்கியது. அருணாச்சலம் அண்ணா தூரத்திலேயே நின்று விட்டிருந்தார். நான் யானையையே உற்றுப் பார்த்தபடி மெல்ல மெல்ல முன்னகர்ந்தேன். அதன் துதிக்கை நடுநடுங்கிக் கொண்டிருப்பதையும் வாயிலிருந்து எச்சில் கோழைபோல ஒழுகிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். என் பிரம்பால் தரையை அடித்து ‘ஆனெ’ என்றேன். வெடிச்சத்தம் கேட்ட நாய் போல கேசவன் உடல் விரிர்த்து நடுங்கியபடி முதுகை மேலும் வளைத்துக் கொண்டான். நான் மேலும் கூர்ந்து நோக்கி இன்னொருமுறை அடித்தேன். கேசவன் நடுங்கியபடி  “ர்ர்ர்ம்ம்” என்றான். நான் புன்னகையுடன் உடலும் மனமும் இலகுவாகி அதை நெருங்கினேன். நான் அருகே வரவர கேசவனின் தலை மேலும் தாழ்ந்தது. அவனருகே போய் அவனை காலை கல்தூணுடன் சேர்த்துக் கட்டினேன். கேசவனின் கொம்புகள் இரண்டிலும் ஒரு முழத்துக்கு நாராயணனின் ரத்தம் பூசியிருந்தது.

திரும்பி உற்சவ வீதிக்கு வந்தேன். நாராயணனின் காயங்களில் இருந்து ரத்தம் நிணக் கட்டிகளாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தரையெங்கும் கொட்டிய ரத்தம் சூடாக குமிழிகள் உடைய பரவி வீச்சமடித்தது. நாராயணனின் வயிற்றுக்கு அடியில் வைக்கோல் மூட்டைகள் அடுக்கப்பட்டு அவன் அதன்மீது அமரச் செய்யப்பட்டான். ஆறாட்டுக்கு வந்த கூட்டம் யானை கலைந்ததுமே சிதறி ஓடியிருந்தது. பாதையெங்கும் பலவகையான பொருட்கள் சிதறிக்கிடந்தன. செண்டைகள், கொம்பு வாத்தியங்கள், தாலங்கள் உடைந்த பரவிக் கிடந்தன. பனையோலை வட்டிகள் பாளைப்பைகள் பலவகையான பூஜைப் பொருட்கள் வேட்டிகள் மேல்துண்டுகள்…

கரடிக்குளம் மாடம்பி சற்று தூரத்தில் கையில் வாளுடன் நிலை கொள்ளாமல் நின்றிருக்க அவரைச் சுற்றி அவரது வேலைக்காரர்களும் அகம்படியினரும் சூழ்ந்திருந்தனர். வைத்தியர் பழமங்கலம் நாணுக்குட்டி நாயர் வந்து சேர்ந்தார். பெரிய உருளிகள் அடுப்பில் ஏற்றப்பட்டு அவற்றில் மஞ்சணாதி குழம்பும் தேன்மெழுகும் சேர்த்துப் போட்டு உருக வைக்கப்படடன. அந்த உருகிய பாகில் வைக்கோல் பிரிகள் போடப்பட்டு நன்றாக குழைத்து எடுக்கப்பட்டன. அவற்றை காயங்கள் மீது வைத்து அப்பி இறுக்கி அதன் மீது வைக்கோல் பிரியால் கட்டுபோடப்பட்டது. நாராயணனின் முதுகின்மீது திடம்பும் வெண்கொற்றக்குடையும் இரு இளம்போற்றிகளும் அப்போதும் இருந்தார்கள். அவனுடைய தலை நிமிர்ந்துதான் இருந்தது. புண்மீது சூடான வைக்கோல் பிரிகள் வைக்கப்பட்ட போது அவன் காதசைவு ஒரு கணம் நின்று பின்பு மீண்டது.

சுப்புக்குட்டி ஓடிவந்து என்னைப் பிடித்தான்.

“அண்ணா, ஆசான் விளிச்சாரு” என்றான்.

“ஏன், கெளவனை இன்னும் கழுவில ஏத்தல்லியாக்கும்?”

“அண்ணா உடனே கூட்டிட்டு வாண்ணு சொன்னார். உள்ள செம்பகராமன் மண்டபத்தில இப்பம் ஊராய்மைக்காரங்க கூட்டம் போட்டிருக்காங்க… தெக்கெமடம் தந்திரி எஜமான் வந்தாச்சு.”

நான் படிகளருகே போனதும் உள்ளிருந்து ஆசான் நொண்டி நொண்டி வந்தார். “மக்கா லே, எனக்கு ஒண்ணும் பிடி கிட்டல்ல.. எனக்கு ஒண்ணும் தெரியல்லலே. நான்  உயிரோடே இருக்கணுமா வேண்டாமாண்ணு இப்பம் சொல்லிடுவாங்க” என்றார்.

நான்  ”என்ன காரியம்? ஆசான் சொல்லணும்…” என்றேன்.

“எனக்கு கழுமரம்தான்டே… நல்ல உறப்புள்ள கழுமரம்தான்” என்று ஆசான் அழ ஆரம்பித்தார்.

“ஆசான் கிடந்து பிடைக்காம நான் சொல்லுகத கேக்கணும். நம்மள ஆரும் ஒண்ணும் செய்யமாட்டாவ” என்றேன்.

“ஏன்?” என்றார் ஆசான் கண்ணீருடன்.

“ஆசான் சிந்திச்சுப் பாக்கணும். நம்மளை கழுவில ஏத்தினா கேசவன் தப்பு பண்ணினான்னுல்லா அர்த்தம். பின்ன அவனை சும்மா விடுவாங்களா?” குரலைத் தாழ்த்தி ”கேசவனை பெரியதம்புரான் அப்பிடி விட்டுப்போடுவாரா? சொல்லுங்க” ஆசான் என்னை பார்த்து அரைக்கணம் வாய்திறந்து நின்றார். பின்பு ”நீ சொல்லுகதிலும் காரியமுண்டுடே” என்றார்.

அப்படித்தான் ஆயிற்று. எக்காரணத்தாலும் ஆறாட்டு நிற்கக்கூடாது என்றும், அது மகராஜாவுக்கு ஆபத்து என்றும் தந்திரி சொல்லிவிட்டார். திடம்பை யானைமேலிருந்து இறக்கவே கூடாது. ஆறாட்டு தொடர்ந்து நடக்க வேண்டும். திடம்பை அஷ்ட ஐஸ்வரியமுள்ள யானைதான் ஏற்றிக்கொண்டு போகவேண்டும். ஆகவே கேசவன் ஆறாட்டு கொண்டுசெல்வது தவிர வேறு வழியில்லை. ஆனால் திரும்பவும் கேசவனை நாராயணன் அருகே கொண்டு செல்வது சரியல்ல. ஆகவே சாவித்ரியை கொண்டுபோய் அவளை நாராயணன் அருகே நிற்கவைத்து அவன் மீதிருந்த திடம்பை இறக்காமலேயே சாவித்ரி மீது ஏற்றிக் கொண்டுவந்தார்கள்.

நான் கேசவனைக் கழுவிக்கொண்டு மேலே வந்தபோது ஆசான் ஒற்றைக்கால் மீது கையை ஊன்றி பாய்ந்து ஓடி என்னருகே வந்து  “எனக்கு வய்யடே எனக்கு வய்யா… நான் சாவுதேன்” என்றார்.

“என்ன ஆசானே?”

“அஷ்டமங்கலம் வேணும்லாடே? அது நாராயணனுக்க மேலயிருந்து எடுத்தா எடுத்தவன் கைய வெட்டுவேன்னு நிக்குதான் கரடிக்கொளம் நாயரு. நான் எங்க போயி சாவ?”

“ஸ்ரீகாரியம் போயி சொல்லட்டு.”

“ஸ்ரீகாரியம் மூத்திரமுல்லா விடுகாரு?” என்றார் ஆசான். ”எனக்க கிட்ட போய் கேளுண்ணு சொல்லுகானுக…நான் அந்த கரடிக்க வாளுகொண்டு சாவப்போறேன்…” எனக்கும் ஒன்றும் தோன்றவில்லை.

தந்திரி நம்பூதிரி வேட்டி நுனியை அக்குளில் இடுக்கி வெற்றிலைச் செல்லத்துடன் வந்தார்.  “என்னடே சீதரா, என்னடே?” என்றார்.

“நான் என்ன செய்ய உடயதே? நான் பாப்பான்லா? பெரியநாயரு கையில வாளோட நின்னுல்லா துள்ளுகாரு?” என்றார் ஆசான்.

நம்பூதிரி  “அதிப்பம் சொன்னா நடக்குமாடே? கேசவன் பொன்னுதம்புரானுக்க களிக்கூட்டுகாகரனுக்கும். அவனுக்கு இல்லேன்னா பின்ன அஷ்டமங்கலியம் முத்துக்குடையும் பின்ன ஆருக்கு?” என்றார்.

ஆசான்  “உள்ளதாக்கும் உடயதே. சாவப்போற கெழட்டு ஆனைக்கு என்னத்துக்கு நகை? சொன்ன கேக்க மாட்டாரு. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றார்.

“ஹேய், நானா? நான் துஷ்டன்மார்கிட்ட பேசமாட்டேன். நீங்க பேசி என்னமாம் செய்யுங்கடே.” என்று நம்பூதிரி கிளம்பப்போனார்.

நான் குறுக்கே புகுந்து  “அடியன். தம்புரானே, எனக்க சின்ன புத்தியில ஒரு எளிய சிந்த உண்டு” என்றேன்.

“என்னடே சொல்லப்போற? சீக்கிரம் சொல்லி கழுவேறுடே மயிராண்டி” என்றார் நம்பூதிரி  நின்று, வெற்றிலைச் செல்லத்தைத் திறந்தபடி.

“பழைய திருநெல்லலூர் சக்ரபாணிக்க அஷ்மடங்கலியமும் மற்றும் கோயில் வைப்பறையில இருக்கும்லா?” நம்பூதிரி சுருட்டிய வெற்றிலையுடன் என்னைப் பார்த்து ஒரு கணம் யோசித்தபின்  “அய்ய, அது உள்ளதாக்குமே. அப்படி ஒண்ணு உண்டும்லா?” என்றார்.

நான் நம்பூதிரியின் பின்னால் ஓடினேன். நம்பூதிரி வைப்பறைமுன் சென்று நின்றார். பண்டார அதிகாரி உமையொருபாகம் பிள்ளை எழுந்து வந்து வணங்கி வாய்பொத்தி நின்றார்.  “கேட்டியாடே உமை. இப்பம் உடனே ஒரு அட்டமங்கலியம் வேணும். நாராயணனுக்குப் போட்ட நகையக் கழட்டப்பிடாதுன்னு வாளோடு நிக்குதான் அவனுக்க நாயரு. ஆறாட்டுக்கு அட்டமங்கலம் வேணும்லா?”

“உள்ளதாக்கும் ஏமானே”

 “பழைய சக்ரபாணிக்க அட்டமங்கலம் இங்க உண்டுல்லா?”

உமையொருபாகம் பிள்ளை குழப்பமாக “உண்டு…” என்றார்.

“உண்டா இல்லியா? இல்லேன்னா ஸ்ரீகாரியம் பிள்ளைய விளி. தம்புரானுக்கு உடனே காரியம் சொல்லணும். அட்டமங்கலியம்னாக்க சுத்தப் பொன்னும் முத்தும் மணியுமாக்கும்.வெளையாடுதியாடே?”

“இல்ல இல்ல…” என்றார் உமையொரு பாகம். “இல்ல தம்புரானே. இருக்கு. பெட்டியில இருக்கு. நகை உள்ள பெட்டியில உண்டு. கொஞ்சம் கிளாவும் களிம்பும் பிடிச்சு கெடக்கும்…”

நம்பூதிரி “எடுடே மயிராண்டி. நின்று வெளையுதானே… டேய், எண்ணி இருந்துக்கோ, கழு கேறப்பிடாது உள்ள” என்று சீற உமையொருபாகம்பிள்ளை தயங்கினார். நம்பூதிரி என்னிடம்  “உள்ள போடே.. போய் எடுத்திட்டுவா. இப்பம் கொண்டு வரணும். பளபளன்னு துடைச்சுக்கோ… போடே” என்றார்.

உமையொருபாகம்பிள்ளை கைவிளக்கை எண்ணைய்விட்டு கொளுத்தி எடுத்துக்கொண்டு ஒரு சிறிய சாவியை இடுப்பில் இருந்து எடுத்தவாறு அறைக்குள் சென்றார்.

கனத்த சுவர்கள் கொண்ட உள்ளறையில் சுவரில் பதிக்கப்பட்ட இழுப்பறையை அந்தச் சாவியால் திறந்தார். உள்ளே துருப்பிடித்த பழைய சாவிக் கொத்துக்கள் இருந்தன. அவற்றில் இரண்டைத் தேர்வு செய்து எடுத்துக் கொண்ட உள்ளே நடந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன். சாளரங்களே இல்லாத பெரிய அறை. உயரமான மரக்கூரை. மரக்கூரைக்கு அடியில் பெரிய இரும்புச் சட்டங்களால் காவல் அழி போடப்பட்டிருந்தது. எங்கள் நிழல்கள் சுவர்களில் எழுந்து ஆடின. தரையோடு இரும்புச் சட்டம் போட்டு பதிக்கப்பட்ட பெரிய மரப்பெட்டிகள் வரிசையாக இருந்தன. அவற்றின் எண்கள் மேலே சுண்ணாம்பால் எழுதப்பட்டிருந்தன. பல பூட்டுகள் துருப்பிடித்து மொத்தையாக தொங்கின.

ஒரு பெட்டியைத திறந்து உள்ளே எட்டிப்பார்த்தார் உமையொருபாகம்பிள்ளை. உள்ளே நெற்றிப்பட்டம், முத்துமாலை, தந்தநுனி என்று யானை அலங்காரங்கள் தூசும் ஒட்டடையும் பிடிந்து கிடந்தன. உள்ளே இருந்த சிறிய பெட்டியயை எடுத்து வெளியே வைத்து அதையும் சாவியினால் திறந்தார். உள்ளே அட்டமங்கல நகைகள் இருந்தன. ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தார். சற்று நிறம் மங்கியிருந்தாலும் அவை நன்றாகத்தான் இருந்தன. நான் பக்கவாட்டில் திறந்து கிடந்த பெட்டிக்குள் ஒரு சிறிய குமிழைப் பார்த்தேன். யானையின் கழுத்தில் போடும் கண்டமணி. அதில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. பெரிய கோழிமுட்டையளவுள்ள தங்கமணி அது.

என் இதயம் படபடத்தது. ஒரு கணத்திற்குள் எப்படி உதயமாயிற்று என்று நானே பிற்பாடு எண்ணி எண்ணி வியக்கும்படி அம்பிளியின் நினைவு எனக்குள் ஓடியது. அவளுடன் நடந்த மொத்த உரையாடலும் அவளுடைய அலட்சியமான உதட்டுச்சுழிப்பும் கண்வெட்டல்களும் இடையசைத்து சென்ற நடையும் குரலும் எல்லாம் என்னுள் நிகழ்ந்து முடிந்தன. நான் அந்த மணியை எடுத்து என்னுடைய கச்சைக்குள் வைத்துக் கொண்டேன். உமையொருபாகம் பிள்ளை பெட்டியை மூடினார்  “நல்ல வேளை இருக்கு. அதுக்கு அந்தப் பிராமணன் எதுக்குடே இப்டி கெடந்து சாடுதான். மயிராண்டி. அவனுக்கு ஒருநாள் ஆப்பு வைக்குதேன். வா உனக்க ஆசானை விளி” என்றார்.

நெய்யாற்றின் கரைக்கு மாலையானபோது தான் வந்து சேர்ந்தோம். நான் யானையைத்தட்டி ஆற்றுக்குள் இறக்கினேன். நெய்யாறில் அதிக நீர் இல்லையென்றாலும் தெளிவாக ஓடியது அள்ளி அள்ளிக் குடித்து தலைமேலும் விட்டுக் கொண்டேன். அருணாச்சலம் அண்ணா கேசவனை நீருக்குள்இறக்கிவிட்டார். கேசவன் நீரை அள்ளி அள்ளிக் குடித்தபின் முதுகுமீதும் இறைத்தான். பிறகு மெல்ல மணலில் இறங்கி மைய ஓட்டத்தை அடைந்து நீருக்குள் உடல் அமிழ்த்திப் படுத்துக் கொண்டான். துதிக்கையை நீருக்குள் இருந்து வெளியே துககி நீர்த்துளிகள் மலைவெயிலில் ஒளிவிட்டுச் சிதற மூச்சு விட்டான்.

நான் வேட்டியைக் கழற்றி வைத்துவிட்டு கோமணத்துடன் நீரில் இறங்கி மூழ்கிக் ககுளித்தேன். அருணாச்சலம் அண்ணனும் இறங்கி வந்தார். என்னருகே நீரில் பாய்ந்து மூழ்கி நீந்தி மிக அருகே எழுந்து  “உப்ப்…” என்று கூவிச் சிரித்தார். நான் புன்னகை செய்தேன். மீண்டும் மூழ்கி எழுந்து தலைமயிரைக் கையால் கோதிப் பின்னால் விட்டார். “வெயிலில வெந்து போயிட்டேம்லே… ஒஹ்… தண்ணியில வந்து விழும்ப உள்ள சுகம்வேறதான். போன சீவன் வந்ததுமாதிரில்லாடே இருக்கு?” என்றார்.

நான்  “நல்ல வெயிலு” என்றேன்.

“பின்ன? இந்த வெளியிலுக்கு நல்ல மாலைக்கள்ளை தண்ணிக்குள்ள இப்பிடி முங்கி கெடந்துட்டே மோந்தி மோந்திக் குடிக்கணும் பாத்துக்க.”

“அது செரி” என்று சிரித்தேன்.

“அதுக்கு இப்பம் கள்ளுக்கு எங்க போறது?” அருணாச்சலம் அண்ணன்

“சும்மா சொன்னேன்டே. இல்லேண்ணா நல்ல வாற்று சாராயத்த எளநீரில விட்டு குடிக்கணும் பாத்துக்க. தேவாமிர்தம்லா” என்றார்.

நான் நீந்தி பெரிய பாறைமீது ஏறிக்கொண்டேன். பாறை வெடிப்பில் கோரை வளர்ந்திருந்தது. அருணாச்சாலம் அண்ணன் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தபடி அருகே நீந்தி வந்து கீழே பாறை நிழல் விழுந்த நீரில் நின்றபடி ”எளநீர்னு சொன்னப்பம் எனக்கு உடனே அம்பிளி ஒர்மைடே. அவளுக்கு முலையிருக்கே. உன்னாணை, நான் இண்ணு பகல் முழுக்க அதைப்பத்தித்தான் நெனைச்சேன். வேற ஒரு நெனப்பு இல்ல பாத்துக்க. ஹொ” என்றார்.

துண்டை எடுத்து தலைக்குமேல் உதறிப் பிழிந்து தலைதுவட்டியபடி “நீ ஆளு கெஜகெட்டிடே. சாதிச்சுப்போட்டியே. உன்னை நான் அந்த அளவு நெனைக்கல்ல பாத்துக்க. நீ நீலம்மையை வைச்சுக்கோ. எனக்கு ஒரு தவண இவள சேர்த்து விட்டுடு” என்றார். தலை துவட்டியபோது பேச்சு குழறியது.

நான் என் விரல் முதல் தொடங்கி தொடைகளை நடுங்கச் செய்து உடலையே உதற அடித்த பதற்றம் ஒன்றை உணர்ந்தேன். கண்கள் இருட்டி வந்தன. அப்போது ஏன் அந்த எண்ணம் வந்தது என்ற பிறகு பலமுறை நினைத்திருக்கிறேன். புரிந்துகொள்ளவே முடியவில்லை. அந்தக் கணத்தில் ஒரு மலைத்தெய்வம் போல அந்த எண்ணம் வந்து என்னை மூடிக்கொண்டு என்னை அதுவே நடத்திச் சென்றது. எல்லாமே துல்லியமாக திட்டமிடப் பட்டன. சில கணங்களுக்குள் பலவாரக்காலத்து சிந்தனைகள் என்னுள் பிசிறில்லாமல் நடந்து முடிந்தன. அது ஏதோ உக்கிர தெய்வம்தான். தெய்வத்தால் மட்டுமே அத்தனை பிரம்மாண்டமன சிந்தனை செய்யமுடியும். தெய்வத்தின் திட்டங்கள் மட்டுமே அத்தனை துல்லியமாக ஒன்றோடொன்று பொருந்திச் செல்ல முடியும்.

நான் குனிந்து கீழே கிடந்த ஒரு பாறாங்கல்லைத் தூக்கி அருணாச்சலம் அண்ணன் தலையில் ஓங்கிப் போட்டேன். “ஓஹ்” என்ற ஒலி – வியப்பொலியா என்று வியப்பூட்டிய விசித்திர ஒலி அது – எழுந்தது. அண்ணன் தலையைத் துண்டோடு பற்றியபடி ஒருகணம் எம்பி என்னைப் பார்த்து விட்டு நீரில் மூழ்க அவர் மூழ்கிய இடத்தில் சிவப்பு நீர் கலங்கிக் கலங்கிக் குமிழியிட்டபடி நீரோட்டத்தில் விலகிச் சென்றது. அருணாச்சலம் அண்ணனின் அந்தக் கடைசிப் பார்வை என்னை ஒரு கணம் உறைந்து நிற்கச் செய்தது. அவரது கண்கள் மூன்று மாதம் தாண்டாத குழந்தையின் பனிபடர்ந்த விழிகளுடன் இருந்தன.  “ஓடிவாங்க ஓடி வாங்க… அண்ணனை ஆனை தூக்கிப் போட்டுட்டுது… அய்யோ” என்று கதறியபடி நான் தோப்புக்குள் நுழைந்து நெய்யாற்றின்கரை கோயிலை நோக்கிச் ஓடினேன்.

முந்தைய கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 3
அடுத்த கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 5