மத்தகம் (குறுநாவல்) : 3

கேசவனின் கனத்த பிளிறல் கேட்டு நான் கண் விழித்தேன். யானைக் கொட்டிலில் பிற யானைகளும் அந்த ஒலியைக்கேட்டு உடல் அசைத்தும் எழுந்தும் உருவாக்கிய சந்தடியைக் கேட்டபடி ஒரு சில கணங்கள் படுத்திருந்துவிட்டு எழுந்து அமர்ந்தேன். “அம்மே… பகவதீ… நீலி…” என்று கூவிவிட்டு சோம்பல் முறித்துக் கொண்டேன். கேசவன் பரபரப்பாக முன்னும் பின்னும் உடலை ஆட்டி, கழுத்து மணி குலுங்கத் தலையசைத்து, முன்கால் பின்கால் வைத்தது. எழுந்து வேட்டியை உடுத்து அதன்மீது கச்சையை இறுக்கியபடி கேசவனை அணுகினேன். யானை உடனே தன் சங்கிலியை கையில் எடுத்துக் கொண்டது. நான் அதன் கால்தளையை அவிழ்த்ததும் அதுவே ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

இரவில் யானைக்கொட்டிலுக்குப் பொறுப்பாக இரண்டு காவலர்கள் உண்டு. இருந்தாலும் கேசவனுக்குக் காவலாக நானோ அருணாசலம் அண்ணனோ படுத்துக் கொள்வோம். யானைப்பிண்டங்களில் பிறக்கும் வண்டுகளும் மணியன் ஈக்களும் இரவெல்லாம் உடலைக் கடிக்கும்போது தூங்குவதற்கு பலவருடத்துப் பழக்கமிருந்தால்தான் முடியும். சுப்புக்கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது. கேசவனுக்கு எப்போதும் ஒரே இடம். கொட்டிலுக்கு முகப்பில் பழைய விளக்குகால். அழுத்தமாக நடப்பட்ட கல்தூணில் சங்கிலி வளையத்தில் கேசவனைக் கட்டி, இரவுக்கான தென்னை ஓலை, பேய்க்கரும்பு, மூங்கில் எல்லாவற்றையும் குவித்து வைப்பதுவரை ஆசான் அவரே நின்று பார்ப்பார். பிறகு கேசவனின் துதிக்கையில் ஒரு தட்டி தட்டியபின் இரவு தங்குபவர்களிடம் “நோக்கிக்கோடா” என்று கூறிவிட்டு கிளம்பிச் செல்வார்.

கேசவன் பெரும்பாலும் நள்ளிரவு வரை ஓலை தின்னும், தொப்தொப் என்ற பிண்டம் போட்டு ஜலதாரை கொட்டுவதுபோல சிறுநீர் கழித்தும் கால்மாற்றிச் சவிட்டியும் நின்று கொண்டிருப்பான். ஓலை தீர்ந்தபிறகு கல்தூணில் நீண்டநேரம் பின்பக்கத்தை உரசுவதுண்டு. வண்டுகள் ஆடக்கூடிய நடனம் மாதிரி இருக்கும் அது. யானைக் கொட்டடியில் நிலாவெளிச்சம் இல்லாத நாட்களில் நான்கு புன்னைக்காயெண்ணை விட்டு பந்தத்திரி போட்ட கல்விளக்குகள் எரியும். விளக்கருகே செல்லமுடியாதபடி பூச்சிகள் வந்து கொட்டும். தூரத்தில் நின்று பார்த்தால் விளக்கைச் சுற்றி சுடர்த்துளிகள் போல பூச்சிகள் பறக்கும்.

நான் கேசவனுக்கு அருகே விழுந்து கிடந்த பெரிய கல்தூணின் மீது என் பாயை விரித்துப் படுத்துக் கொண்டு கேசவனையே பார்த்துக்கொண்டிருப்பேன். யானையின் உடலசைவைப் பார்ப்பது தூக்கத்துக்கு நல்லது. நிரம்பிச் செல்லும் நதி நீரோட்டம் அசைந்து நெளிவது போல அதன் கரியதோல் அசையும். சில இடங்களில் நடுநடுங்கும். யானை காதுகளையும் கால்களையும் ஆட்டுவதும் துதிக்கையால் தழை பிய்த்துச் சுருட்டி உண்பதும் எல்லாம் மிகமிக நிதானமாகவே இருக்கும். மெல்ல மெல்லத் தூக்கம் வந்து பரவி மூழ்கடிக்கும். கனவுக்குள் நான் காட்டுவேங்கை மரத்தின் அடியில் நிற்பதுபோல இதோ இந்த பெரிய காலின் அடியில் நிற்கிறேன். கனவுதான். ஆனால் கனவை உணரும் கனவு. தூக்கத்தில் அவ்வப்போது விழித்ததுமே நான் கேசவனைத்தான் பார்ப்பேன். சிலசமயம் அவன் மிக அருகே நிற்பது போலிருக்கும். சிலசமயம் மிக தூரத்தில் மிதந்து விலகிச் சென்றபடியே இருப்பான். கள்ளின் போதையில் சிலநாள் என் தலைக்குமேல் இருண்ட கற்பாறைக் கூரையைப்போல அவன் பரவியிருந்தான் என்று கண்டேன்.

பின்னங்கால் அருகே நின்று நின்று பழகிப்போய் ஆசான் இல்லாமல் நானே தனியாக போனால்கூட அந்தக்காலின் அருகேதான் என்னால் நிற்கமுடியும். அந்தக் கால் மட்டும்தான் எனக்குத் தெரியும் என்பதுபோல. யானையின் பிற மூன்று கால்களும் அங்கிருந்து பார்க்கும்போது மிகவும் தள்ளி அசைந்து கொண்டிருக்கும். ஒரு பெரிய மண்டபம் நடந்து செல்கிறது. கருங்கல் தூண்கள் கொண்ட மண்டபம். கோயில் கச்சேரி கட்டிடத்துக்குப் போனாலும் நான் அப்படித்தான் தெற்குமூலையில் உள்ள தூணருகே கையில் மேல் துண்டை எடுத்துச் சுற்றி வைத்துக்கொண்டு நின்றிருப்பேன். யாராவது என்னைப் பார்க்க மாட்டார்களா என்று எல்லாரையும் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் பெரும்பாலும் கோயில் கச்சேரி நானிருப்பதை பார்க்காமலேயே அதன் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். பெரிய ஸ்ரீகாரியம் வரும்போது மட்டும் பள்ளத்தை நெருங்கும் ஆறு போல சற்று அவசரம். பிறகு நிதானமான யானை நடைதான். அந்த யானையும் இப்படித்தான் தன் சங்கிலியைத் தானே கையில் எடுத்துக் கொண்டு நடக்கிறது…

கேசவன் படிக்கட்டை அடைந்து மீண்டும் நின்று இரண்டாம் முறையாகச் சிறுநீர் கழித்தான். முதல் சிறுநீர் நல்ல காரமணத்துடன் இருக்கும். இரண்டாம் சிறுநீரில் தழைவாசனை இருக்கும். தூங்கி விழித்த யானை தண்ணீரைக் கண்ணால் கண்ட பிறகுதான் இரண்டாம் சிறுநீரை விடும் என்பது சாஸ்திரம். இருட்டுக்குள் ஆறு செல்லும் களகள ஒலியும் கைதை ஓலைகளில் காற்று செல்லும் ஒலியும் கேட்டன.  சின்னப்பெண்கள் பேசிச்சிரித்துச்செல்வது போல.

கேசவன் நேராகப் படித்துறை நோக்கி நடந்து சென்றான். நான் வானத்தைப் பார்ததேன். நட்சத்திரங்கள் குவிந்து கிடந்த பரப்பில் எதையும் என்னால் ஊகிக்க முடியவில்லை. விடிவெள்ளி என்று ஒன்றை ஆசான் பலமுறை சுட்டிகாட்டியிருக்கிறார். அப்பகுதியில் பல நட்சத்திரங்கள் மஞ்சளாகவும் நீலமாகவும் தீச்சிவப்பாகவும் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. அவற்றில் எது விடிவெள்ளி என்று தெரியவில்லை. அது நள்ளிரவாகக்கூட இருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் கேசவனின் நேரக்கணக்குக்கு ஆதிகேசவனே திருப்பள்ளிவிட்டு எழுந்து வந்து சாட்சி சொல்லலாம். நான் அவனை அறிந்த இந்த பதினெட்டு வருடங்களில் ஒருமுறைகூட அந்தக் கணக்குத தவறியதில்லை. “டேய் மயிராண்டி, அவனுக்கு அவன் கண்ணிமைக்கிறதுக்குக்கூட கணக்குண்டுலே” என்பார் ஆசான்.

உண்மையிலேயே கண் இமைப்பதையும் தலையாட்டுவதையும் எல்லாம் மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்கிறதா என்ன? யானை மனம் மனித மனதைவிட நூறுமடங்கு பெரியது. அந்த கரும்பாறைக்குள் பத்துமனங்கள் இணைந்து செயல்படுகின்றன. ஆனால் அது பேசுவதில்லை. புலம்புவதும் அழுவதும் இல்லை. உள்ளே ஏராளமானவர்கள் அமர்ந்து வேலை செய்யும் ஒரு ஹ¤ஹ¤ர் கச்சேரியே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். யாரும் எதுவும் பேசாமல் மும்முரமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கச்சேரி நடுவே ஒரு பெரிய மணல்கடிகாரம் மண்ணை இம்மியிம்மியாக உதிர்த்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் கனகச்சிதம். ஒரு தப்பு, ஒரு பிசிறு கிடையாது.

கேசவன் சாய்மான வழியில் மெதுவாக இறங்கிச் சென்றான். அவன் காலைப் பிடித்தபடி நானும் கூடவே சென்றேன். கேசவனுடைய பாதங்கள் மணலில் அமிழும் ஒலி பப்படம் நொறுங்குவது போல இருட்டுக்குள் கேட்டது. ஆற்றங்கரையோரத்து தாழைப்புதர் கூட்டங்களுக்குள் இருந்து உக்கில் ‘லுப் லுப் லுப்’ என்றபடி சலசலத்து ஓடியது. இன்னொரு சலசலப்பு. அது பாம்பாகவும் இருக்கலாம். ஆற்றின்கரையில் இல்லாத பாம்பு இல்லை. “ஆனை போன வழியா போனா ஆபத்து இல்ல” என்பார் ஆசான். எல்லாவற்றுக்கும் அதுதான் வழி. யானையே போன வழியில் மனிதர்கள் போனால் என்ன? எந்தத் திருவிழாக் கூட்டத்திலும் நான் நெரிபட்டதில்லை. ஒரே முறை கொல்லங்கோடு தூக்கத்திற்குப் போய் கூட்டத்தில் மிதிபட்டபோதுதான் கேசவன் எனக்கு எப்போதும் விரிவான பாதையை உருவாக்கித் தந்திருக்கிறது என்ற எண்ணிக் கொண்டேன்.

கேசவன் ஆற்றுக் கரையில் சங்கிலியை வைத்துவிட்டு அவனே நீரில் இறங்கிப் படுத்துக் கொண்டான். நான் நீரை அள்ளி அவன்மீது வீசி காது மடல்களையும் உள்காதையும் தேய்க்க ஆரம்பித்தேன். இது அவசரக் குளியல்தான். இன்று பயணம் கிளம்புவதனால் கேசவன் சீக்கிரமே வந்து விட்டான். பயணத்தைப் பற்றி அவன் மறப்பதே இல்லை. அவனுக்கு மறதி என்பதே கிடையாது. யானைகளுக்கே மறதி கிடையாது. யானைக்குள் ஒவ்வொன்றுக்கும் தனி அறையும் அதற்கென்று தனி ஆளும் உண்டு. நான் கேசவனைக் குளிப்பாட்டிவிட்டு நீரில் இறங்கி இரண்டு முங்கு போட்டு அலையோரத்து மெல்லிய மணலை அள்ளி உடலில் பூசி நன்றாக நரநரவென்று தேய்த்து மூழ்கிக் குளித்து எழுந்து கச்சையைக் கழற்றி அலம்பித் தலைதுவட்டினேன். அப்போதுதான் காகம் முதற்குரல் எழுப்பியது. கரையில் மெல்ல செவிகளை ஆட்டி இருளை அளைந்தபடி கேசவன் இருளுக்குள் இருளாக நின்றிருந்தான். இருட்டுக்குள் நிற்குமபோது யானை தாயின் மடியில் ஒட்டிநிற்கும் குழந்தை போல ஆகிவிடுகிறது. இருட்டுக்குள் நின்றால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் அப்படியே நிற்க அதனால் முடியும்.

குளித்து எழுந்தபோது சற்று வெளிச்சம் வந்திருக்கிறதா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. யானைக்கும் காற்றுவெளிக்கும் இடையே உள்ள விளிம்புக்கோடு இன்னும் துல்லியப்பட்டிருந்தது. யானை படியேறிச் சென்று மணிகள் ஒலிக்க கிழக்கு வாசலுக்கு முன்பாக நின்று கொண்டது. பிரம்ம முகூர்த்தத்தில் நிர்மால்யம் தொழுவதற்காக வந்த பரதேசப் பிராமணர்கள் சிறிய குழுக்களாக ஆற்றில் இருந்து குளிரில் நடுங்கியபடி விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முணுமுணுத்துக் கொண்டு வந்தார்கள்.

இருட்டுக்குள் ஒரு கிழவர் தயங்கி என்னிடம் “ஆருடா அது?” என்றார்.

“ஸ்வாமி, இது நானாக்கும் பாப்பான்.”

“ஆனை ஏது? கேசவனா? திருவனந்தபுரம் போறானா?”

“ஆமா ஸாமி”

“அது செரி. அப்பம் நாளைக்கு துலாம் ஒண்ணாக்கும்…” என்றபடி அவர். “ஆதிகேசவா பெருமானே…” என்று படிகளில் ஏறிச் சென்றார்.

படிகளுக்கு மேல் கோயிலின் மாபெரும் கொட்டியம்பலக் கோபுரம் எழுந்து நிற்க அதற்கும் பின்னால் தெரிந்த வானத்தில் நட்சத்திரங்களின் ஒளி சற்று குறைந்திருந்தது. அல்லது வானத்தின் ஒளி சற்று கூடியிருந்தது. டிங் டாங் என்று உள்ளே பெரிய மணி ஒலித்தபின்பு சற்று நேரம் கார்வை ரீங்கரித்தது. நிர்மால்ய பூஜைக்கு நடைதிறக்கப் போகிறார்கள். உள்ளே அச்சிகள், பேசியபடி அங்குமிங்கும் அலையும் ஓசைகளும் யாரோ யாரையோ அதட்டும் ஒலியும் கேட்டன.

அருணாச்சலம் அண்ணன் ஆலமரத்தைத் தாண்டி வேகமாக வந்து கொண்டிருந்தார். மேல் முண்டை குளிருக்கு நன்றாகப் போர்த்திக் கையில் ஒரு பாளைப் பொதி வைத்திருந்தார். விரைவாக வந்தததில் மூச்சு இரைக்க என்னை நெருங்கி “பிந்திப் போட்டாலே?” என்றார்.

“இல்லண்ணா. நிர்மாலிய பூஜை இனிமேத்தான்.”

“எங்கடே ஆசான்?”

“இன்னும் வரல்லே”

“சுப்புக்கண்ணு? தாயளி இன்னைக்கு அவன் அடிவாங்கிச் சாவத்தான் போறான்.” சுப்புக்கண் விரைவாக ஓடி அருகே வந்தான்

“லே, ஓடி ஆனைமேல விழுந்திராத. உன்மேல அவனுக்கு ஒரு செறை உண்டு…” மூச்சு வாங்கியபடி “அம்மை கருப்பட்டிக்காப்பி குடிச்சிட்டு போலேண்ணு சொன்னா” என்றான். ஆசான் தூரத்தில் வருவது தெரிந்தது. ஆசானின் கெந்தி கெந்தி நடக்கும் அளசவைப் பெருங்கூட்டத்திலும் கண்டு கொள்ளமுடியும்.

ஆசான் வந்ததுமே “எல சுப்பு?” என்றார்.

“ஆசானே!”

“தாயளி, ஏம்லே மூச்சு வாங்குதே? உன்னை சமயத்துக்கு வரச்சொன்னா வரமாட்டியா? லே, இங்க வாலே…”

சுப்பு பரிதாபமாக “இல்ல ஆசானே… வந்திட்டேன் ஆசானே” என்றான்.

“அவன் வந்தான் ஆசானே. அவன்தான் ஆனையைக் குளிப்பாட்டினது” என்றேன்.

“நீ பேசாதே. உன்னை நான் நம்பமாட்டேன்… அருணாச்சலம்…” என்று ஆசான் திரும்ப, “இருந்தான்” என்றார் அருணாச்சலம்.

“ம்ம்” என்று ஆசான் அடங்கினார். அருணாச்சலம் சாதாரணமான குரலில் “ராத்திரி கேசவன் நல்லா உறங்கினான். அதனால் யாத்திரய்க்குப் பங்கம் இல்ல” என்றார்.

“ம்ம்” என்றார் ஆசான். தன் பலவீனமான காலை ஊன்றாமல் யானையின் கொம்புகளை பிடித்தவாறு சற்றே சாய்ந்து நின்றுகொண்டு வெள்ளிப்பூண்கோலை தன்மீது சாய்த்துக்கொண்டார்.

உள்ளே சங்கு முழங்கியது. தொடர்ந்து பெருமுரசும் உருட்டுக்கொட்டும் இலைத்தாளங்களும் முழவுகளும் சேர்ந்து முழங்கின. ஸ்ரீகோயிலின் முகப்பில் கட்டப்பட்டிருந்த இரண்டு பெரிய கண்டாமணிகளும் கருவறைக்கு முன்னால் உள்ள சிறிய ஓட்டுமணியும் டாங்டாங் டணால் டாணல் டிம்ம் டிம்ம் என்று ஒலித்தன. நடைதிறக்கும் ஒலி கூடக் கேட்டது.

ஆதிகேசவனின் உந்தியருகே இருந்த ஆவாஹ மூர்த்தியின் மீது நேற்றுச் சூட்டிய எல்லா மாலைகளையும் அலங்காரங்களையும் காப்புக்களையும் களைந்துவிட்டு வெறும் விக்ரஹமாக நிறுத்துவார்கள் இப்போது. உள்ளே அச்சிகள் சேர்ந்து குலவைபோடும் ஒலி கேட்டது. நிர்மால்ய மூர்த்திக்கு ஆற்றுநீர் அபிஷேகம் செய்து மந்திர உபாசனை முடித்ததும் மீண்டும் கதவு மூடப்படும்.

வெளியே நின்று ஒலிகளை மட்டும் கேட்கும்போது அதெல்லாம் மிகமிக மெதுவாக நடப்பது போலிருந்தது. சற்று நேரத்திலேயே பொறுமை போய் வேறு விஷயங்களை நினைக்க முயன்று அங்கும் கவனம் நிற்பதற்கு அந்த ஓசைகள் அனுமதிக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். இந்நேரம் அம்பிளி அங்கே கையில் தூக்குவிளக்குடன் நின்று கொண்டிருப்பாள். முன்பு அவள் எடுப்பு விளக்கு தான் வைத்திருந்தாள். அந்த விளக்குச் சுடர் அவளுடைய இடுப்புக்கு கீழாக வலதுபக்கம் இருக்கும். எலையங்காட்டு நம்பூதிரி அவளுடைய இளம் முலைகளைப் பார்த்துவிட்டு “கொள்ளாம். பொன்னும் குடத்தில் பொட்டும் உண்டு. டேய் இத்ர நல்ல முலை உள்ள குட்டியை எடுப்பு விளக்கு பிடிக்கான் நிறுத்தியோ? ச்ச்சேய் அரஸிகன்மார்! குட்டி இனி தூக்கு விளக்கு பிடிச்சால் மதி. குத்துவிளக்கில் திரியிட்டு கொளுத்தியது போலே ஆயிரிக்கும்” என்றார். அதன்பின் இருகைகளிலும் தூக்கு விளக்கை ஏந்தி நிற்கும் வேலை அவளுக்குக் கிடைத்தது. அவளுடைய முன்னால் நீட்டிய கைகள் நடுவே முலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி நிற்கும் அவற்றின் மீது தீபவெளிச்சம் பொன் உருகிவழிவது போல விழுந்து கிடக்கும். இந்நேரம் அவளுடைய முலைகளைத்தான் எல்லாரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

தடாலென்று உள்ளே கோயில் நடைமூடும் ஒலி கேட்டது. மெல்ல வாத்தியங்கள் அடங்கின. மேலேயே பார்த்து நின்றிருந்தோம். கொட்டியம்பல வாசலில் பந்தங்களின் செவ்வொளியுடன் நிழல்கள் எழுந்து இருட்டில் பரவி அசைந்தன. ஐந்துதிரி எண்ணைப் பந்தங்கள் ஏந்தி இரு பந்தக்காரர் வர, அவர்களுக்குப் பின்னால் மறைக்குடை ஏந்தியபடி ஒரு வால்யகாரன் வந்தான். குடைநிழலில் கையில் பெரிய பொற்தாம்பாளத்தில் வெள்ளிப் பெட்டியுடன் பெரியநம்பி கூனலாக நடந்துவந்தார். அவருக்குப்பின்னர் அச்சிகள் மூவர். அவர்களுக்குப் பின்னால் வாத்யக்காரர்கள். சேங்கிலையும் இடைக்காயும் குறுமுழவும் சங்கும் மட்டும்தான். ஸ்ரீகாரியமும் இரு கோயிலதிகாரிகளுடம் பட்டு மேல்வேட்டியால் உடல் முழுக்கப் போர்த்தியபடி நடந்து வந்தார்கள். படிகளின் வழியாக அவர்கள் இறங்கி வருவதைப் பார்த்தபடி நின்றேன். ஆசான் மேல்வேட்டியை இடுப்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டார்.

நம்பி தாம்பாளத்தைக் கொண்டுவந்து நீட்ட ஆசான் அதைப் பெற்றுக் கொண்டார். கேசவன் காதுகளை மட்டும் ஆட்டியபடி அசைவில்லாமல் நின்றான். நம்பி வாய்க்குள் வேகமாக மந்திரங்களைச் சொன்னபிறகு “ஐய வஞ்சீச பால வீரமார்த்தாண்ட வீரகுலசேகர காசிராமேஸ்வரம் காக்கும் பத்மநாபதாஸன் மன்னை சுல்தான் மஹாஸ்ரீ உதயமார்த்தாண்ட வர்மா பொன்னுதம்புரானுக்கு ஜெயசுபசர்வமங்களம் ·பவ! ஓம் தத் சத். ஓம் நமோ நாராயணாய” என்று உரக்கக் கூவினார். கூடிநின்றவர்கள் “ஜயவஞ்சீச பால” என்று கூட்டமாக முழக்கமிட்டார்கள்.

நம்பி தாம்பாளத்திலிருந்த சந்தனப் பேலாவைத் திறந்து அதிலிருந்த சந்தனக் குழம்பை வழித்து கேசவனின் துதிக்கையில் பூசினார். தாம்பாளத்தில் இருந்த பூக்குவியலில் இருந்து பூக்களை அள்ளி அதன் மத்தகம் மீது மும்முறை தூவினார். ஒரு வாழைப்பழத்தை எடுத்து கேசவனுக்குக் கொடுத்தார். அவன் அதை வாங்கி தின்னாமல் துதிக்கையிலேயே வைத்துக்கொண்டான்.

“எந்நால் புறப்படுகயல்லே?” என்றார் பெரிய நம்பி.

“உத்தரவு” என்று ஆசான் சொன்னார்.

“தம்புரானோடு கேட்டதாய் சொல்லுக. சப்தமிபூஜைக்கு வந்நால் நந்நு எந்நு அறிவிக்குக” என்றார்.

“உத்தரவு” என்றார் ஆசான்.

“சர்வமங்களம்” என்று நம்பி படியேறிச்சென்றார். பரிவாரங்களும் மேலேறிச் சென்றார்கள். கேசவன் மெல்ல அசைந்தான். கால்கள் அசையாமலிருக்க உடலைமட்டும் அசைக்க யானைகளால் மட்டும் முடியும்.

நான் பந்த ஒளியில் கீழே நின்ற அம்பிளியைப் பார்த்தேன். அவளுடைய சிறிய முலைக் கண்கள் குளிரில் சுருங்கி உள்ளே சென்றிருந்தன. சிவப்பு ஒளியில் அவள் முலைகள் தேய்த்த செம்புக் குவளைகள் போல பளபளத்தன. மெலிந்த கழுத்து. இடுப்பும் மெலிந்ததுதான். தோள்களும் முலைகளும் பின்பக்கமும் மட்டும் மிகப்பெரியவை. அவளுக்குப் பத்தொன்பது வயது. இன்னும் பிள்ளை பெறவில்லை.

மச்சி என்று சொல்கிறார்கள். திருவட்டாறு கோயில் வட்டத்தில் அவளைப்போல ஒரு பெண் இப்போது கிடையாது. அவளுடைய தாய்க்கிழவியைக்கூட ஏமான்கள் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு போகிறார்கள். சென்ற சித்திரையில் அவள் வீட்டமுற்றத்தில் அணமுகம் சங்குநாயருக்கும் பார்த்திவசேகரபுரம் கொச்சன் நாயருக்கும் பெரிய வாள் சண்டை. கொச்சன் நாயருக்கு வயிற்றில் பலத்த காயம். அதைப்பற்றி கவலையேபடாமல் அவள் மறுநாள் கோயிலுக்கு வந்தாள்.

நாள் அவளுடைய கண்களையே பார்த்தேன். சாதாரணமாகப் பார்த்தால் அவளுடைய உருண்டையான முகமும், மிகச்சிறிய உதகடுகளும், பூமொட்டு போன்ற மூக்கும் சேர்ந்து ஒரு குழந்தை போல அவளைக்காட்டும். ஆனால் அவள் சிரிக்கும்போது குழந்தைத்தனமே இருக்காது. ஏதோ வன்மம் அந்தச் சிரிப்பில் கலந்திருப்பது போலவும், நம்மை அவள் எள்ளி நகையாடுவது போலவும் தோன்றும். அவளுடைய கண்கள் பரல் மீன்கள் போல துடித்துத் துடித்து உலாவி என்னைச் சந்தித்தன. முற்றிலும் அறிமுகமில்லாமல் ஒருகணம் நிலைத்து விலகிக்கொண்டன. என் மனம் துணுக்குற்றது. என்னை உண்மையிலேயே மறந்துவிட்டாளா? அதெப்படி?

மூன்று மாதம் கூட ஆகவில்லை. போன மேட மாதத்தில்தான் அவளுடன் ஒரு இரவு முழுக்க இருந்தேன். அவளுடைய மென்மையான சிறு முலைகளை அள்ளி மாந்தளிர் நிற காம்புகளில் முத்தமிட்டுக் கொண்டே இருந்தேன். “போதும் முத்தி முத்தி அதை பழுக்க வைக்க வேண்டா” என்றாள். எப்போதும் அதே இளக்காரச்சிரிப்பு. “ஏன்? ஆனைக்காரன் முத்தியால் தேயுமோ?” என்றேன். “ஆனைக்காரன் அல்ல சேனைக்காரன் வந்நாலும் ஒந்நுமில்ல. ஆளு ஆறடி எந்நாலும் அவ்விடமுள்ளது ஒரு விரலு மட்டுமல்லே?” என்றாள்.

நான் அந்த இரவு முழுக்க அவளை வெல்வதற்குத்தான் முயற்சி செய்தேன். அவளை முரட்டுத்தனமாகப் புரட்டி எடுத்தேன். மீண்டும் மீண்டும். அவள் போதும் போதும் என்று கதற வேண்டும் என்று நினைத்தேன். அவள் வென்று செல்லச்செல்ல வெறியும் ஆங்காரமும் கொண்டு “தேவடியா தேவடியா… கண்ணைப்பாரு, தேவடியா” என்று மூச்சுவாங்கத் திட்டினேன்.

கடைசியில் அவள் மிதிபட்ட பாம்பு போல சீறிஎழுந்து அலறியபடி என்னை கட்டிப்படித்து என் தோளில் எட்டுப்பற்கள் அழுந்தப் பதியும் விதமாகக் கடித்து இறக்கினாள். நான் வலிதாளாமல் அலறியபடி அவள் தோள்களைப் பற்றிக்கொண்டேன். அவள் தலையைப் பிய்த்து விடுவித்தேன். அவளுடைய உப்புப்பரல் போன்ற தூய வெண்பற்களில் மெல்லிய ரத்தம் பரவியிருந்தது. என் தோள் தீபட்டதுபோல எரிய கடிவாயில் இருந்து ரத்தம் மெல்ல கசிந்து வழிந்தது.

அவளுடைய கன்னத்தை ஓங்கி அறைந்தேன். சிரித்தபடி ரத்தத்தை சப்பிக் கொண்டு “நல்ல ருசி” என்றாள். அவள் மீதிருந்து விலகிக் குந்தி அமர்ந்தேன் முலைகள் ஒன்றுமீது ஒன்று ஒசிந்து அமர ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு “நோவுண்டோ?” என்றாள்.

“போடி நாயே”

“நாய் அல்ல. சர்ப்பமாக்கும். விஷ சர்ப்பம்” என்றாள். என் உடலில் அச்சம் திடுக்கிட்டது.

“பயப்பட வேண்டா இது விஷமில்லாத கடி” என்றாள்.

சிரித்தபடி எழுந்து கைதூக்கி தலைமயிரைச் சுழற்றிக் கட்டினாள். முந்திச்செல்லமுயலும் இள வண்டிக்காளைகள் போல முலைகள் ஏந்தி அசைந்தன. மீண்டும் மீண்டும் இரவெல்லாம் வெறி கிளப்பிய முலைகள். அந்தக் கடியுடன் இரவு முடிந்துவிட்டிருந்தது. அந்த வலியில் நிகழ்ந்த உச்சத்திற்குப் பிறகு நான் அடையவும் தேடவும் எதுமில்லை. “நான் வாறேன்” என்று என் கச்சையை எடுத்தேன்.

“சும்மா வரவேண்டா. இதுபோலே கை நிறய பொன்னோடு வரிக” என்றாள். அவள் கண்களைப் பார்த்தேன். அதே சிரிப்பு.

தாம்பாளத்துப் பொருட்களை எடுத்து பெரிய மரப்பெட்டிக்குள் வைத்து மூடினார் ஆசான். இன்னொரு பெட்டியில் பானையின் நகைகளும் அலங்காரங்களும் பட்டும் இருந்தன. இரு பெட்டிகளையும் அதன் இருப்பமும் வரும்படி கயிறுகட்டி தோளில் தொங்கவிட்டார். ஆசானுக்கு மாற்று முண்டும் மேல் முண்டும் உத்தரியமும் உண்டு. அதை ஒரு ஓலைப்பெட்டியில் கட்டி சுப்புக்கண் எடுத்துக் கொண்டான். எனக்கும் அருணாசலம் அண்ணனுக்கும் இரண்டு வேட்டிகள் மட்டும்தான். அரச மரத்தடி வினாயகரை வணங்கி அருகம்புல் எடுத்து காதில் வைத்துக் கொண்டு “அப்போ போலாம்டே.. அம்மே பகவதீ…” என்றார் ஆசான். கேசவனை மெல்லத் தட்டினார். அவன் வலதுகாலை எடுத்து வைத்துக் கிளம்பிச் சென்றான். சிறிய குட்டியாக இருக்கும்போதே வந்த பழக்கம். எப்போதும் வலதுகால்தான். எந்நிலையிலும் வலதுகால்தான் முன்னால் நிற்கும்.

கேசவனின் மணியோசை கேட்டு சாலையோரத்து வீடுகளின் மாளிகைச் சாளரங்களைத் திறந்து எட்டிப்பார்த்துக் கைகூப்பினார்கள். பெரியவீடுகளில் முற்றத்தைக் கூட்டிப் பெருக்கிய முலை தொங்கிய அச்சிகள் எழுந்து கும்பிடடபடி நின்றார்கள். எதிரே வந்தவர்கள் கும்பிட்டபடி இருபக்கமும் ஒதுங்கினார்கள். கேசவன் திருவனந்தபுரம் போய்ச் சேர்வது வரை பார்ப்பது அந்த வணக்கங்களை மட்டும்தான்.
பதினேழு வருடங்களுக்கும் மேலாக நடக்கிறது இந்தச் சடங்கு. முதல் இரண்டு முறைதான் கேசவனை நாங்கள் கூட்டிவந்தோம். அதன் பிறகு கேசவனுக்கே தெரிந்துவிட்டது. இரவில் எங்கள் ஏற்பாடுகளைக் கண்டு முதலில் பயணத்தை ஊகித்துக் கொண்டிருந்தான். கேசவனின் நகைகளை கலவறையில் இருந்து மலையாளமாதம் முதல்தேதிக்கும் இரண்டு திருவிழாக்களுக்கும் மட்டும்தான் எடுப்போம்.

கேசவன் இரவெல்லாம் தூக்கமில்லாமல் மறுநாள் பயணத்துக்காகத் தவிப்பான். அதிகாலையில் ஏழுந்து நின்று பிளிறி ஊரையே எழுப்புவான். சங்கிலி தூக்கியதுமே சாலையில் பாய்ந்தோட ஆரம்பித்துவிடுவான். கூடவே ஒடுவதற்கு நானும் அருணாச்சாலம் அண்ணனும் மேல்மூச்சு வாங்கி நாக்கு தொங்கி விடுவோம். யானைக்கு களைப்பே இல்லை. நாங்கள் கீழே விழும் நிலையை அடைந்ததும் கேசவனை பிடித்து நிறுத்த ஆரம்பிப்போம். கெஞ்சி மன்றாடி நிறுத்திவிட்டு கால்களைத் தளைத்து அப்படியே விழுந்து மூச்சிரைத்த மூச்சிரைத்துத் தூங்குவோம். ஆனால் பிறகு கேசவன் அந்த நேரத்தையும் தூரத்தையும் துல்லியமாக வகுத்துக் கொண்டான். அதைவிட முக்கியமாக மலையாள மாதம் ஒன்றாம் தேதி அவனுக்கு மிகத்துல்லியமாக தெரிந்திருந்தது. முந்தையநாளே அதை அவன் தெரிவித்து விடுவான். நாங்கள் அவனுடன் போனால் மட்டும் போதும்.

பட்டமேற்பு விழா முடிந்து ஊருக்குக் கிளம்பும்போதுதான் இந்த ஏற்பாடு தொடங்கியது. விடை பெறுவதற்காக கோயில் கொட்டகையில் இருந்து அரண்மனை முற்றத்துக்கு கேசவனைக் கூட்டிச் சென்றிருந்தோம். முற்றத்தில் கேசவனின் மணியோசை கேட்டதுமே தம்புரான் பாய்ந்து கீழே இறங்கி வந்துவிட்டார். அவருடன் மந்திராலோசனையில் இருந்த திவானும் பேஷ்காரும் பின்னால் வந்தார்கள். கேசவனின் துதிக்கையை தழுவியும் வருடியும் நெடுநேரம் நின்றிருந்தார் மன்னர். சுற்றிலும் அத்தனை கூட்டம் இருந்தபோதும்கூட அவர்கள் இருவரும் தன்னந்தனியாக நின்றிருப்பது போலிருந்தது. யானையின் முகத்தில்கூட அத்தனை தீவிர உணர்ச்சிகள் வெளிப்படுமா என்று நான் ஆச்சரியத்துடன் எண்ணிக்கொண்டேன்.

தம்புரான் திரும்பி ஆசானைப் பார்த்து “கொண்டு போய் கொள்ளுக சீதரா… நாம் மாசம் தோறும் திருவட்டாறில் வந்நு கேசவனை கண்டுகொள்ளாம்” என்றார் தம்புரான். பேஷ்கார் ராமனுண்ணி மேனன் சற்றே முன்னகர்ந்து “அடியன். மாசத்தில் ஒரு தவணை திருவட்டாறில் போகுக எந்நால்… இவ்விடமுள்ள பணிகள் பலதும்…” என்றார். திவான் ராயர் “சரி, அப்டீன்னா கேசவன் மாசம்தோறும் இங்கே வரட்டும். இனிமேல்கொண்டு அதொரு சடங்காக இருக்கட்டும். டேய் ஸ்ரீதரா…”

ஆசான் “அடியன். திருமேனி” என்றார்.

திவான் “இனிமேல் எல்லா கேரளமாசமும் ஒண்ணாம் தேதி காலையில் யானைய கூட்டிட்டு திருவனந்தபுரம் வந்திடவேண்டியது. பூர்ண ஆபரண அலங்காரங்களோடே கொண்டுவரப்பட்டது… என்ன? மாசம் பொறந்தா மகாராஜா கண் வழிக்கிறதே இந்த யானையின் முகத்தில்தான். என்ன?” ஆசான் வணங்கினார்.

“சரி, அவ்விதம் ஆகட்டே” என்றார் தம்புரான். ஆசான் குனிந்து வணங்கினார்.

அதன்பின் அச்சடங்கு தவறியதே இல்லை. ஏழுவருடம் முன்பு ஒரு இடவமாதத்தில் பெருமழை கொட்டி திருவிதாங்கூரே தண்ணீர்க் காடாகக் கிடந்தது. ஆறுகள் எல்லாம் கடல் பொங்கி உருள்வது போல திமிறிப் புரண்டன. வயல்வெளிகளில் கடலலை அடித்தது. எங்கும் நீரின் ஒளியும் நிழல்களும் நிறைந்து தளதளத்தன. மேலும் மேலும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. கோயிலின் தெற்கு வாசலில் நின்ற ஆலமரம் விழுந்ததும் அப்போது தான். ஆனைக் கொட்டகையில் ஒரு கட்டிடடம் விழுந்து விட்டது.

ஆனால் வழக்கம்போல் கேசவன் இரவில் நான்குமுறை ஆசானை நோக்கிப் பிளிறினான். “என்னலே சொல்லுகான்? இந்த கொடுங்காற்றில் எங்க போறதுக்கு? குளித்துறை போகணுமானாக்கூட பத்துநாள் ஆகுமே. பதிமூணு காட்டாறு தாண்டிப் போகணுமே” என்றார் ஆசான்.

“அதை ஆனைக்கிட்ட சொல்லும். எளவு அது நிக்குத நெலையப் பாருங்க ஆசானே” என்றார் அருணாச்சலம் அண்ணன்.

“பேயாம நல்ல சங்கிலியால நாலு காலையும் தளைச்சுப்போடுவம்… கெடந்து அமறட்டு. மகாராஜா கேட்டா சொல்லுவோம். மனுஷன்தானே அவரும்?” என்றேன்.

“ஆமலே, வேற வழி இல்ல. எளவு, இப்பிடி நம்ம கெதி ஒரு ஆனைக்க வாலில கெடந்து அடிபடணும்ணு இருக்கேடே” என்றார் ஆசான். அன்றிரவு கேசவனை வேறு யானைகளின் சங்கிலிகளையும் எடுத்து தூணோடு தளைத்து விட்டோம்.

இரவு நான்தான் காவல். மழை சுழற்றி அடித்தது. யானைகள் எல்லாம் மழைத்தாரையில் பாறைக்கூட்டங்கள்போல அசையாமல் நின்றன. யானைக்கு மழை பேரின்பம். கொட்டும் மழையிலும் யானைகள் நின்றுகொண்டு தூங்கும். கேசவன் கல்தூணில் லேசாகச் சாய்ந்து ஒரு காலை லேசாகத் தூக்கியபடி நின்று தூங்கியது. கொம்பு மீது கிடந்த துதிக்கை தூக்கம் நன்றாக கனத்து அதை மூடியபோது நழுவி நழுவி வந்து கீழே விழ விழித்துக்கொண்டு கால்மாற்றி மீண்டும் தூங்கியது.

கொட்டகை வாசலில் நன்றாக சாரல் அடித்தது. நான் உள்ளே போய் வெல்லமும் பூழுக்கரிசியும் குவிக்கப்பட்ட அறைக்குள் ஒடுங்கி அமர்ந்து கொண்டேன். பதினைந்து நாட்களுக்கும் மேலாக மழை. வெயிலே தெரியவில்லை. பூமியின் ஆழத்தில் தீ என்பார்கள் அந்த தீயும் குளிந்திருக்கும் போல. உடல்நடுங்கியது. என் வேட்டியை உரிந்து போர்த்திக் கொண்டு சுருண்டு உட்கார்ந்து அப்படியே தூங்கிவிட்டேன்.

காலையில் நான் கண்விழித்தபோதும் நல்ல வெளிச்சம் இல்லை. விடிந்துவிட்டது தெரிந்தது. நேரம் தெரியவில்லை. இறங்கி வெளியே வந்தேன். மழைவிட்டு சிறிய சாரல் மட்டும் இருந்தது. யானைகள் எல்லாம் உடல் சிலிர்த்தடிபடி கரிய நீர்ப்பளபளப்புடன் நின்றிருந்தன. தேவகி ‘ப்பாய்ங்’ என்று ஒலியெழுப்பியது. எனக்கு ஏதோ தப்பாக நடந்திருப்பது புரிந்தது. என்ன ஏது என்று மனம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. தேவகியையே பார்த்தேன் தலையை அசைத்து தேவகி மீண்டும் சின்னம் விளித்தாள். அப்போதுதான் பார்த்தேன். கேசவன் இல்லை. ஓடிப்போய் கேசவன் கட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்த்தேன். சங்கிலிகள் உடைந்து கிடந்தன. உடைந்த சங்கிலியின் நுனி கருங்கல் சில்லின் நீலக்கருமையுடன் மின்னியது. யானையைக் கட்டிய கல்தூண் சரிந்திருந்தது.

அப்போது உணர்ந்தேன், நான் தூங்கி எழுந்ததும் முதலில் பார்த்ததே கேசவன் இல்லை என்பதைத்தான். ஆனால் என் மனம் அதை உள்ளே விடாமல் மூடிக்கொண்டிருந்தது. கேசவன் இரவில் அலறியதும் பிளிறியதும் என்நினைவுக்கு வந்தன. உடைந்த சங்கிலிகளின் கண்ணிகளை காலால் தொட்டு பார்த்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே சுற்றி வந்தேன். பிறகு மனச்சோர்வுடன் கல்தூணில் அமர்ந்து கதறிக்கதறி அழுதேன்.

வேறு யாரோ போய்ச் சொல்லி ஆசானும் அருணாச்சலம் அண்ணனும் ஓடிவந்தார்கள். வந்ததுமே ஆசான் எம்பி என்னை உதைத்தார். நான் பக்கவாட்டில் சரிந்து சேற்றில் விழுந்தேன். வெள்ளிப்பூணிட்ட பிரம்பால் என்னை ஓங்கி ஓங்கி அடித்தார் ஆசான். நான் அசையாமல் கிடந்து அடிகளை வாங்கிக்கொண்டேன். அருணாசலம் அண்ணா ஆசானைப் பிடித்து நிறுத்தினார். ஆசானும் அழுதபடி மறுபக்கம் கல்லில் அமர்ந்து விட்டார்.

அருணாசலம் அண்ணன் “ஆற்றில் போயிப் பார்ப்போம். ஆசானே. கைக்குள்ள நிக்கிற சாமான் இல்லல்லா, ஆனையில்லா? எங்க போவும்?” என்றார்.

நான் “அது இந்நேரம் திருவனந்தபுரம் போயிட்டிருக்கும்” என்றேன்.

ஆசான் பாய்ந்து எழுந்து “கெளம்புங்கலே… போவோம்” என்றார்.

அருணாச்சலம் “ஆசானே, அதெப்பிடி ஆறுகளில…” ஆசான்

“டேய் ஆறுகளில ஒடுதது தண்ணியில்ல. உனக்கயும் எனக்கயும் விதியாக்கும்னு வச்சுக்கோ. கெளம்புல. வாறது வரட்டு. இங்க இருந்தா மட்டும் உனக்கு தல மிஞ்சும்ணா நெனைக்கே?” என்றார்.

நாங்கள் கிளம்பவும் மீண்டும் மழை கொட்ட ஆரம்பித்தது. மழைத்தாரைக்கு இரண்டு அடிக்கு அப்பால் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மாறி மாறி கல்லில் முட்டி குப்புற விழுந்து கொண்டே இருந்தோம். ஒருவரை ஒருவர் தூக்கிவிட்டோம். அருணாச்சலம் அண்ணனின் முகம் கல்லில் விழுந்து கிழிந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. யானையின் பிண்டமோ மூத்திரமோ அடையாளம் கிடைக்குமென பார்த்தோம். ஆனால் மழை அத்தனை உக்கிரமாக பூமியையே கரைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மழைக்குள் சேற்றிலேயே படுத்து மூச்சு வாங்கினோம். வலியாற்று முகத்தில் ஆறே தெரியவில்லை. வயல்களும் ஆற்றுப் பெருக்கும் ஒன்றாகச் சிவந்த நீர் வெளியாகத் தெரிந்தன.

நான் “ஆசானே” என்றேன்.

ஆசான் கொஞ்சம்கூட யோசிக்காமல் “பகவதியே” என்று நீரில் குதித்து விட்டார். வயல்நீருக்குள் இழுப்பு இல்லை. ஆனால் மூங்கில முட்களும் தாழைப்புதர்களும் உடலைக் கீறின. பின்பு ஆற்று நீருக்குள் புகுந்ததும் நீரின் ஆவேசம் என்னை அள்ளிச் சென்றது. வானத்தின் துதிக்கை போல் இருந்தது ஆறு. ஆசான் அருணாச்சலம் அண்ணன் இருவரும் விலகித் தெறித்து சென்றனர். நீரின் கொந்தளிப்பு என்னை இழுத்து ஆழத்திற்குக் கொண்டு சென்றது. மூச்சுத் திணறி என் நுரையீரல் உடைய போகும் நேரத்தில் தூக்கி மேலே எழுப்பியது. தூரத்தில் தென்னைமர உச்சிகள், பாய்ந்து பின்னால் சென்ற கொண்டிருந்தன. நான் என் கைகளை முடிந்தவரைக்கும் வீசிப்போட்டு வாயால் காற்றை அள்ளி அள்ளிக்குடித்தபடி நீச்சலிட்டேன்.

ஆறு வளைந்த இடத்தில் வேகம் குறைந்தபோது நீரின் மறுவிளிம்புக்கு வந்துவிட்டேன். மழை சற்று விட்டிருந்தாலும் வானம் இருண்டுதான் இருந்தது. தாழை மரக்கூட்டம் ஒன்றைப் பற்றிக் கொண்டேன். அங்கிருந்து ஒரு தென்னைமரத்தின் ஓலையைப் பிடித்தேன். தவளை போல கால்களை உதைத்து உதைத்து நீந்தி நீரின் கரை நோக்கிச் சென்றேன். வலியாற்றூரின் அம்மன்கோயில் இருந்த மேடு கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் அது வெகு தூரத்தில் இருந்தது. அதைத் தவிர வேறு எண்ணமே இல்லாதவனாக அதைநோக்கி நீந்திச் சென்று கொண்டே இருந்தேன்.

வலியாற்றூர் அளகயட்சி கோயிலின் அடிக்கட்டு விளிம்புவரை தண்ணீர் ஓடியது. கோயில் திண்ணையில் ஏறி செத்தபிணம் போலப் படுத்துவிட்டேன். கோயில் கருவறைக்குள் மூங்கில் அழிகளுக்கு அப்பால் சுவரில் வரையப்பட்ட ஓவியமாக அளகயட்சி கூந்தலை விரித்துப்போட்டு வாயால் வீரப்பல் தெரிய உறுத்த ரத்தக்கண்களுடன் செம்பட்டு உடுத்தி நின்றாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழை சடசடவென்று மீண்டும் கொட்டியது.

நான் கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேன். என்னை அருணாச்சலம் அண்ணன் உசுப்பி எழுப்பினார். நான் எழுந்து அவரைத் தழுவிக் கொண்டேன். “அண்ணா…” என்றபின் ஆசானை நினைவு கூர்ந்தேன்.

“அண்ணா ஆசான்…?”

“வாடா” என்றார். இருவரும் மீண்டும் நீரில் குதித்து புதர்களைப் பற்றியபடி நீரோட்டத்திற்குள் சென்று பார்த்தோம். ஒரு தென்னை ஓலையைப் பற்றியபடி பாதி மிதந்து கிடந்த ஆசானை அருணாச்சலம் அண்ணன்தான் முதலில் பார்த்தார். அவர் சுட்டிக்காட்டியதும் நீரில் பாய்ந்து நான் நீந்தி அவரை அடைந்து பிடித்துக் கொண்டேன். அவர் தன்னினைவுடன் இல்லை.

“சப்பரம் சாமி சப்பரம்” என்று ஏதோ சொன்னார். இருகைகளையும் இருவரும் பிடித்து இழுத்துக்கொண்டு நீந்தி கோயிலுக்கு வந்தோம்.

ஓய்வுக்குப்பின் மீண்டும் கிளம்பினோம். இம்முறை மேடாக ஏறிய வண்டிப்பாதை. மலைமீதிருந்து பெரிய ஓடைகள் சுழித்து வந்து பல இடங்களில் அருவிகள் போலக் கொட்டின. மலையே மண்ணாகக் கரைந்து வழிவது போலிருந்தது. பெரிய மலைப்பாறைகள் இடம்பெயர்ந்து அமர்ந்திருக்க அவை இருந்த பள்ளங்களில் சேறு கலங்கி நுரைத்தது. சாலையே ஒரு பெரும் பாறையால் மறிக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிப் போகும்போது இரு பாறைகளால் மறைக்கப்பட்ட இடத்தில் கேசவனின் பிண்டத்தைக் கண்டேன்.

“ஆசானே” என்று நான் சுட்டிக் காட்டினேன். பிண்டம் கால் பங்குதான் இருந்தது. ஆசான் ஓடிப்போய் அதை அள்ளி முகர்ந்து பார்த்து “தாயோளி… அவன் தான். அவனைப் பிடிகெடைச்சா நின்னாணை அருணாச்சலம் அங்கவச்சு ஆக்கத்தியால வெட்டிப் போடுவேன்” என்றார்.

“வாங்க ஆசானே” என்று நான் முன்னால் ஓடினேன்.

உண்ணாமலைக்கடை அருகே மூக்குப்பீறி ஓடை நிரம்பிச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் பின் எந்த ஓடையும் எங்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இருட்டிய போது குழித்துறையை அடைந்தோம். குழித்துறை ஆறு பிரளயம் போல பொங்கிப் பரவிக் கிடந்தது. அதில் இறங்கி நீந்த முடியாது என்று தோணிக்காரனைத் தேடி ஊருக்குள் போனோம். நனைந்த கோழிக்கூட்டம் போல குடிசைகள் ஒடுங்கி அமர்ந்திருந்த ஊருக்குள் நனைந்த திண்ணைகளில் சுருண்டு மூக்கு பொத்திக் கிடந்த நாய்கள் சுருளவிழ்ந்து நாசி நீட்டி முனகிக் குரைக்க அலைந்தோம். படகுத்துடுப்பு சாத்தி வைக்கப்பட்டிருந்த குடிசையைக் கண்டுபிடித்து கதவைத் தட்டி எழுப்பினோம். அவன் ஆசானின் காலில் கதறியபடி விழுந்துவிட்டான்.

“ஆசானே பிள்ள குட்டிக்காரன் ஆசானே… ரெட்சிக்கணும் ஆசானே” என்று மன்றாடினான். “பெருவெள்ளமாக்கும்… இதிலே எறங்கினா மரணமாக்கும்…”

அவன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விட்டோம். விடியும்வரை எதுவும் செய்ய முடியாது என்பது ஒரு வகை நிம்மதியை அளித்தது. இருட்டில் ஆற்றில் நீந்துவது தற்கொலையேதான். ஓடக்காரன் மனைவி கஞ்சியும் காய்ச்சில் கிழங்கு மயக்கும் செய்து தந்தாள். சூடாக அதைச் சாப்பிட்டதும் எனக்கு தூக்கம் கைகால்கள் மீது ஏறிக் கனத்தது. விரல்களைக்கூட அசைக்கமுடியாது என்று தோன்றிவிட்டது. சாரல் அடித்த திண்ணையில் ஈரத்திலேயே படுத்துத் தூங்கிவிட்டேன். விடியற்காலையில் ஆசான் என்னை உதைத்து எழுப்பினார். “வாடா… வாடா எரப்பே… நேரம் விடிஞ்சாச்சு.”

காலை நேரம் முந்தையநாள் பகல்போலவே இருந்தது. அரையிருள். தோணிக்காரன் எங்கள் கூடவே வந்தான். “தம்புரானே நீந்திக் கடக்க முடியாது. எளயிடம் விளாகத்தில் உள்ள பாறைமேல ஏறி தண்ணியில சாடினா ஆறு வளைஞ்சு போற வழியில அந்தப் பக்கம் கோயிலு முக்கில கொண்டுபோயி தள்ளிடும். வாங்க” என்றான். தோட்டங்கள் வழியாக இளயிடம் வீட்டை நோக்கிச் சென்றோம். தோட்டங்களுக்குள் இடுப்பளவு உயரத்திற்குத் தண்ணீர் தேங்கிக் கிடக்க தவளைகள் குப்பைகளில் பற்றிக்கொண்டு அசைந்து கிடந்தன. எங்கள் சலனத்தில் சாட்டைபோல சுழன்றபடி நீர்க்கோலிப் பாம்புகள் விலகிச் சென்றன. மரங்கள் பெரும் பாம்புகள் போல நீருக்குள் நெளிந்தன.

இளயிடம் பாறைமீது ஏறிநின்றபோது தூரத்தில் குழித்துறை மகாதேவர் கோயில் நீரில் பாதிமூழ்கிக் கிடப்பது தெரிந்தது. அசைவிலாதது போலவும் நகர்ந்து செல்வது போலவும் ஆற்றின் நீர்பெருக்கு மாறிமாறித் தோன்றியது. ஆசான் என்னிடம் “பாத்தா பின்ன சாட முடியாதுலே. சாடு” என்றபின் சட்டென்று நீரில் குதித்தார். அருணாசலம் அண்ணனும் பின்னால் குதித்தார். நான் குதித்து அவர்கள் விலகிச் செல்வதைக் கண்டேன். காற்றில் சருகுகள் செல்வது போலச் சென்றோம். கைகளிலும் கால்களிலும் உயிரே இல்லை. ஆறு எங்களைச் சுழற்றிச் சென்றது. காற்று அள்ளிவீச முள்செடியில் மாட்டும் சருகுகள் போல குழித்துறை கோயிலின் படித்துறையை நோக்கிச் சென்றோம். கோயிலின் கூரை எங்களை நோக்கி மிதந்த படி நெருங்கி வந்தது. எங்கள் மீது மோதிவிடுவது போல் அதனருகே கொட்டியம்பல வாசல் தெரிந்தது கொட்டியம்பலத்தின் கழுக்கோலை நான் பற்றிக்கொண்டேன். ஆசான் சற்று தள்ளி ஒரு கட்டிட நுனியைப் பிடித்துக்கொண்டார். அருணாசலம் அண்ணா முன்னதாகவே ஏறிவிட்டிருந்தார்.

கோயிலுக்கு அப்பால் படர்ந்தாலுமூடு ஏற்றம். அதன் பின் களியக்காவிளை. பிறகு மீண்டும் செம்மண்நீர் முட்டிப்புரளும் காட்டாறுகள். பிறகு நெய்யாறின் பெரும் பிரவாகம். அதன்பின் மீண்டும் காட்டாறுகள். திருவனந்தபுரம் வரை நாங்கள் சாலையில் மனிதர்களையே பார்க்கவில்லை. மொத்த நாடும் கூரைகளுக்குக் கீழே பதுங்கிக் கிடந்தது. வானத்திலிருந்து முடிவேயில்லாத அருவி கொட்டிக் கொண்டேயிருந்தது. பாறசாலையில் சாலையில் படுத்துக் கொட்டும் மழையிலேயே தூங்கினோம். அங்கே மிதந்துவந்த ஒரு வாழையில் இருந்த செங்காய் பறித்து பிய்த்துத் தின்றுவிட்டு மீண்டும் ஓடினோம். நான்காம் நாள் நேமத்தைத் தாண்டியபோது முதல் முறையாக மனிதர்களைப் பார்த்தோம்.

குதிரைகளில் வந்த படைநாயர்கள் எங்களை தடுத்து நிறுத்தி “ஆரெடா?” என்றார்கள். ஆசான் மூச்சு வாங்க “ஞான் திருவட்டார் கேசவனுடெ பாப்பான்” என்றார். அவர்கள் பிரமித்து ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். மூத்தநாயர் “திருவட்டாறோ? அவ்விடம் நிந்நோ வந்நீர்?” என்றார். ஆசான் “கேசவனை நிங்ஙள் கண்டோ?” என்றார் ஆசான். “இல்ல ஆசானே” என்றான் படைநாயர். “கேசவன் கெட்டு பொட்டிச்சு வந்நு… இவ்விடம் வந்நிட்டுண்டு” என்றார் ஆசான்.

நாயர் சிரித்தபடி, “இவ்விடமா? ஆசான் எந்து கருதி? இந்த நாடு இப்போ மலைவெள்ளத்தின் அடியிலாணு” என்றான். மூத்த படைநாயர். “வெள்ளம் கேறி நாடே முங்ஙிப்போயி. வெள்ளம் கண்டுவரான் தம்புரான் உத்தரவு…. ஆனை இந்நேரம் தேங்காப்பட்டினம் கடலில் போயி சேர்ந்திருக்கும்” என்றான். “டேய்” என்று அருணாச்சலம் அவனை அடிக்கப்போனார். “விடுடே அருணாச்சலம், குந்தம்தூக்கி நாயரு யானைய எங்க பாத்தான்?” என்றார் ஆசான்.

அவர்களிடம் ஒரு குதிரையை வாங்கி அதில் நாங்கள் மூவரும் ஏறிக் கொண்டோம். அது இழுத்து இழுத்து நடந்தது. குதிரைமேல் அமர்ந்தபடியே நான் மீண்டும் சிறிது நேரம் தூங்கி விழித்தேன். ஐந்தாம்நாள் காலையில் கரமனை ஆற்றை அடைந்தோம். ஆற்றுக்குக் குறுக்கே பெரிய வடம் கட்டி பரிசல் இறக்கியிருந்தார்கள். பரிசல்காரன் வடத்தைப் பற்றி ஆட்களை மறுபக்கம் கொண்டு போனான். கரமனை தாண்டி ஆரியசாலைக்குள் நுழைந்தோம். எப்போதும் பெருவெள்ளம்போல மக்கள் நெரிந்தோடும் ஆரியசாலையில் யாருமே இல்லை. முழங்கால் அளவுக்கு தண்ணீர் மட்டும் ஓடியது. எல்லா பண்டகசாலைகளும் பூட்டிக்கிடந்தன. கிழக்கே கோட்டை பெருநடையில் கூட காவல் இல்லை. தூங்கி வழிந்த ஒரே ஒரு காவலன் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை.

நேராக பத்மதீர்த்தகரைக்கு வந்து இடப்பக்கம் திரும்பி அரண்மனை முற்றத்தை அடைந்தோம். தள்ளாடி நடந்து படிகளை நெருங்கி அரண்மனையைப் பார்த்ததும் அதுவரை இருந்த சக்தி முழுக்க எங்களை விட்டுச் சென்றது. செங்கல் பாவப்பட்ட முற்றத்தில் செத்த பிணங்கள் போல விழுந்து விட்டோம்.

வலிய காரியக்காரர் ஓடிவந்தார். ஆசானை எழுப்பி அமரச்செய்து “எந்து காரியம்? சீதரா எந்து காரியம்?” என்றார் “அடியன்… கேசவன் சங்கிலி பொட்டிச்சு வந்நு” என்று கைகூப்பி அழுதபடி சொன்னார் ஆசான். காரியக்காரர் சிரித்தபடி “எடே மண்டா, ஆனை ஒந்நாம் தேதி காலத்து பதிவுபோல இவ்விடம் வந்நுவல்லோ. இப்பம் அது கொட்டாரம் வளப்பில் உண்டு” என்றார். ஆசான் சட்டென்று ஆவேசமாகி “என்றெ பகவதீ, நான் என்ன பாவம் செய்தேன்னு இந்த வெளையாட்டு வெளையாடினே நாறத் தேவிடியா?” என்று வீறிட்டபடி தன் மார்பில் அறைந்து கதறி அழுதார். நானும் அருணாச்சலம் அண்ணனும் சேர்ந்து அழுதோம். கொட்டார ஊழியர்கள் எல்லாரும் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். எங்கள் அழுகையைக் கண்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

செய்திகேட்டு தம்புரான் மாடியிலிருந்து இறங்கி வந்தார். கொட்டாரம் ஊழியர்கள் பிரிந்து விலகினார்கள். “எந்தா நாராயணபிள்ளே?” என்றார் தம்புரான். “திருவட்டார் பாப்பான்மார் வந்நிட்டுண்டு… பாவங்கள், ஆனையக் காணாதே மழயில் ஆறுகள் நீந்தி எத்தியிட்டுண்டு” என்றார் காரியக்காரர். ஆச்சரியத்துடன் “ஆரு சீதரனோ… எடேய்” என்றார் தம்புரான். நாங்கள் கதறியபடி எழுந்துபோய் தம்புரானின் கால்களில் விழுந்து கதறினோம். “சீதரா சீ, எழுந்நு கொள்ளுக… எடேய்” என்றார் தம்புரான். “இப்பிரளய காலத்து எவ்விதம் வந்நீர்? அய்யய்யோ!” என்றார் தம்புரான்

ஆசான் கைகூப்பியபடி “ஆனை பத்ரமாயி வந்நுவல்லோ. அது மதி தம்புரானே” என்றார். “அவன் வரும் சீதரா. அவன் ஆனை. நூறு மனுஷரை காட்டிலும் அவன் சக்தன். ஆயிரம் மனுஷருடை ஆத்மா உள்ளவன். மலையுடெ மகனல்லே அவன்? அவன் வந்ந வழி நீ வந்நால் ஜீவன் உண்டாகுமோ? நந்நாயி. ஒந்நும் பற்றியில்ல. ஈஸ்வர அனுக்ரஹம்…” என்றார் தம்புரான்.

மழையும் புயலும் சேர்ந்து வீசியடித்துக் கொண்டிருந்த காலை நேரத்தில் கேசவனின் பிளிறல் கேட்டுத்தான் அரண்மனையே விழித்துக்கொண்டதாம். என்ன என்று கைவிளக்குடன் காரியக்கார் வந்து பார்த்தபோது வாசலில் யானை. ஏதோ யானை மதம்பிடித்து வந்து நிற்கிறது என்று அஞ்சி ஓடியிருக்கிறார். அதற்குள் கேசவனின் குரலை அடையாளம் கண்டு தம்புரான் படுக்கையில் இருந்து இறங்கி ஓடிவந்தாராம். அன்று திருவனந்தபுரத்தில் தவறாமல் நடந்த இரண்டு விஷயங்கள் ஸ்ரீபத்மநாபனுக்கு நிர்மாலிய பூஜையும் கேசவனின் புதுமாத தரிசனமும் மட்டும்தான்.

கொட்டாரம் ஆனைக்கொட்டிலில் மூங்கில் தின்று கொண்டிருந்த கேசவனைப் பார்த்ததும் ஆசான் ஒரு கணம் அசையாமல் நின்றார். சற்று அப்பால் ஒரு மண்வெட்டி கிடந்தது. “மகாபாவீ” என்று அலறியபடி அந்த மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு யானையை நோக்கிப் பாய்ந்து சென்றார். நான் “ஆசானே” என்று கூவியபடி பின்னால் ஓடினேன். ஆசான் அருகே போனதும் மண்வெட்டியை போட்டுவிட்டு அப்படியே பாய்ந்து சென்று யானையின் துதிக்கையைப் பிடித்துக் கொண்டார் “என்னை கைவிட்டுவல்லோ… தம்புரானே அடியனை கைவிட்டுவல்லோ” என்று தழுவியபடி விம்மிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். நாள் ஓடிப்போய் அவர் தோளைத் தொட்டு “ஆசானே, எந்தா இது? ஆசானே” என்று சமதானப்படுத்தினேன்.

அங்கிருந்து பதினைந்து நாள் கழித்துதான் கிளம்பினோம். தம்புரான் எங்களைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு சரிகை மேல்வேட்டியும் பத்துசக்கரம் பணமும் தந்தார். ஆசானிடம் “கேசவனும் எனிக்கும் உள்ள பந்தம் நாலு சங்கிலி கொண்டு தடுத்து நிறுத்துந்நது அல்ல சீதரா” என்றார் தம்புரான். ஆசான் “அடியன். மாப்பாக்கணும் தம்புரானே மாப்பு” என்று கைகூப்பினார்.

“பூர்வ ஜென்மத்தில் கேசவன் தம்புரானும் ஞான் தோழனுமாயிருந்நு சீதரா. அவனை அல்லால் ஞான் இப்பூமியில் ஓராளெயும் ஸ்வப்னம் கண்டிட்டில்ல” என்றார். அவரது முகம் சுருங்கி கண்களில் கண்ணீர் தளும்பியது. “போய்க் கொள்ளுக” என்றபடி எழுந்து உள்ளே சென்றுவிட்டார். நானும் ஆசானும் அருணாச்சலம் அண்ணனும் கைகூப்பியபடி அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தோம்.

முந்தைய கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 2
அடுத்த கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 4