நெய்தல் விருது

எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நாகர்கோயில் நெய்தல் அமைப்பு வருடம்தோறும் இளம்படைபபளிகளுக்கு இலக்கிய விருதுகளை அளித்து வருகிறது.சென்ற வருடம் இவ்விருதை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பெற்றார்.

இவ்வருடத்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரும் கவிஞருமான ஜெ.பிரான்ஸிஸ் கிருபா விருது பெறுகிறார். எழுத்தாலர்கள் வாசகர்கள் ஆகியோர் முன்வைத்த பரிந்துரைகளில் இருந்து பாவண்ணன், சுகுமாரன், அரவிந்தன் ஆகியோர் அடங்கிய நடுவர்குழு இவ்விருதுக்குரியவரை தேர்வுசெய்தது. பாராட்டுபத்திரமும் ரூ 10000 ரூபாயும் அடங்கியது இவ்விருது.

அக்டோபர் 19 ஆம்தேதி சுந்தர ராமசாமி நினைவுநாள் நாகர்கோயிலில் கொண்டாடப்படும்போது இந்த விருது வழங்கப்படும்.

ஜெ.பிரான்ஸிஸ் கிருபா தமிழின் இன்றைய மிக முக்கியமான இளம்படைப்பாளி. சொல்லப்போனால் தனக்கென தனி புனைவுமொழி கொண்ட சமகால இளம்தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவரே. பித்தின் வேகத்தை அபாரமான சொல்லாற்றலால் பிந்தொடரும் வல்லமை கொண்டவர் கிருபா. அவரது நாவலான ‘கன்னி’ [தமிழினி வெளியீடு] இதற்கு சிறந்த உதாரணம்.

‘வலியொடு முறியும் மின்னல்’ ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ ‘மெசியாவின் காயங்கள்’ ஆகிய கவிதைத்தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. [தமிழினி ]

மெசியாவின் காயங்கள்

உயிர்பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்

கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்திவிட்டு
தன் வயிற்றில் இறங்கி
முழுவட்டமடித்த கத்தியை
தலை தூக்கி எட்டிபார்த்தது
ஆமை.

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 18 – சாரநாத்
அடுத்த கட்டுரைதாமஸ்:குமரிமைந்தனின் கடிதம்