வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்

ஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன.  அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும் ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம் உருவாவதேயில்லை. உண்மையான சொற்கள் என்றால் எப்போதும் ஒரு துல்லியமான ஆளுமைச்சித்திரம் உருவாகி வரும் என்பதையே அளவுகோலாகக் கொள்ள முடியும்.

ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் இருவகை. ஒன்று அந்த ஆளுமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீவிரமாகவும் நேரடியாகவும் சித்தரிக்க முயல்வது. சுந்தர ராமசாமி க.நா.சு பற்றி எழுதியது [க.நாசு.நட்பும் மதிப்பும்] நான் சுந்தர ராமசாமி பற்றி எழுதியது [சு.ரா-நினைவின் நதியில்] ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை. இவை தமிழில் அதிகமும் சிற்றிதழ் சார்ந்து எழுதப்படுகின்றன. இவற்றை இன்றுகூட பெருவாரியான வாசகர்களால் ஏற்க முடிவதில்லை. இவற்றில் உள்ள விமரிசன நோக்கு நம் மரபுக்கு அன்னியமானது. சிற்றிதழ்கட்டுரைகளிலேயே உபச்சார புகழ்ச்சிகளுக்கு அதிகமான முக்கியத்துவம் இப்போது உருவாகியிருக்கிறது.

மரபான முறையில் நாம் பெரியவர்களிடமிருந்து நாம் நல்லவற்றைமட்டுமே கொள்ளவேண்டும்- நிலவிலிருந்து ஒளியை மட்டுமே பெறுவது போல. ரசனை இதழில் ம.ரா.பொ.குருசாமி போன்றவர்கள் எழுதும் கட்டுரைகள் [திரு.வி.க.நினைவுகள்] இதற்கு சிறந்த உதாரணம். அவ்வகையை சார்ந்தது வைரமுத்துவின் தீவிர ரசிகரான மரபின் மைந்தன் முத்தையா அவரைப்பற்றி எழுதிய ‘ஒருதோப்புக் குயிலாக…’என்ற நூல். வைரமுத்துவின் பன்முகப்பட்ட குணங்களை நினைவிலிருந்து சகஜமாகச் சொல்லும் தன்மையுடன் எழுதப்பட்ட ஆர்வமூட்டும் நூல் இது.

நான்குவருடங்களுக்கு முன்பு தஞ்சையில் செழியன் எனபவரை சந்தித்தேன். வைரமுத்து ரசிகர். பேரவை உறுப்பினர். அவருடன் சில நண்பர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு வைரமுத்துவிடம் உள்ள ஈடுபாடு உண்மையானதும் சுயநலம் கருதாதுமாகும் என்பதை உணர்ந்துகொண்டேன். அதற்கு அவர்களின் வாழ்க்கை காரணமாக அமைந்திருந்தது. மிகச்சாதாரணமான நிலையிலிருந்து உழைப்பால் வணிகத்தில் உயர்ந்து சமூகத்தில் ஓர் இடத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அவர்களின் இளமையில் வைரமுத்துவின் கவிதைவரிகளும் பாடல் வரிகளும் ஊக்கமூட்டும் சக்தியாக இருந்திருக்கின்றன. வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், எதிர்கால நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கின்றன. அப்படி பலரை நான் பின்னால் சந்திக்க நேர்ந்தது.

பின்னர் அதைப்பற்றி யோசித்தபோது வைரமுத்து என்ற ஆளுமையின் குறிப்பிடத்தக்க இயல்பு ஒன்று இதில் இருப்பதை உணர்ந்துகொண்டேன். முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன. இளைஞன் ஒருவன் அதிலிருந்து அளவிலா ஊக்கம் அடைவதை அப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

அந்த அம்சமே முத்தையாவையும் கவர்ந்திருக்கிறது என்பதைக் காட்டும் சிறு நூல் இது. வைரமுத்துவின் நேரடியாகப் பழகும் குணம்,நீடித்த நட்புகளை கொண்டிருக்கும் இயல்பு, அன்றாடவாழ்க்கையில் ஒவ்வொரு கணத்திலும் இருக்கும் சமநிலையான நோக்கு, லௌகீக வாழ்க்கையை துல்லியமாக திட்டமிட்டுக் கொள்ளும் தன்மை போன்றவற்றை இந்நூல் விவரிக்கிறது. ஆனால் வழக்கமாக நாம் இத்தகைய நூல்களில் காணும் புளகாங்கிதமோ உபச்சாரமோ இல்லாமல் சாதாரணமாக அவற்றைச் சொல்கிறது.

மேடை அமைப்பதற்கு முன் ஒவ்வொருமுறையும் ஒலிப்பெருக்கியை சோதனை போட்டுக்கொள்ளும் வைரமுத்து அதற்காக வரிசையாக திருக்குறள்களைச் சொல்லும் காட்சி சில சொற்களிலேயே அவரது ஆளுமையின் கோட்டுச்சித்திரத்தை அளிக்கிறது. தன் கல்யாணமண்டப மேலாளரிடம் அவரது மேஜையில் ஆம்புலன்ஸ் எண் இருக்கிறதா என்று கேட்கும் வைரமுத்துவில் உள்ள நிர்வாகியும் சரி, ‘எது சிறந்த வீடுதெரியுமா, பகலில் மின்சாரம் பயன்படுத்தாத அளவுக்கு காற்றும் ஒளியும் இருக்கும் வீடுதான்’ என்றுசொல்லும் விவேகியும் சரி, உரையாடல்களில் சிறு சிறு இடக்குகளை உடனடியாகச் சொல்லும் நண்பரும் சரி துல்லியமாக தெரியவந்திருக்கிறார்கள்.

இந்நூலில் வைரமுத்துவின் மேடைக்கூற்றுகளும்  நகைச்சுவைகளும்  நிறையவே பதிவாகியிருக்கின்றன. அவரது மொழித்திறன் மற்றும் நேரக்கணக்கு ஆகியவற்றை காட்டும் இடங்கள்.’வெண்பா போல வாழுங்கள்’ என்று மணமக்களை வாழ்த்தி ‘தன் தளை தழுவி பிற தளை தழுவாது வாழ்வது வெண்பா. நாள் மலர் காசு பிறப்பு ஆகியவை வெண்பாவின் ஈற்றசைகள். உங்களுக்கு நாட்கள் மலரட்டும். காசும் பிறப்பும் நிகழட்டும்’ என்று வாழ்த்தும் வரி உதாரணம்.

வைரமுத்துவின் ஒரு பாடலை முத்தையா உதாரணம் காட்டுகிறார்.

பட்சி உறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு
நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு
காசநோய் காரிகளும் கண்ணுறங்கும் வேளையிலே
ஆசநோய் வந்த மக அரநிமிஷம் தூங்கலியே

கல்லாடம் ஆசிரியர் ‘நொச்சி பூவுதிர் நள்ளிருள் நடுநாள்’ என்று சொலவதையும் அந்த நுட்பம் இயல்பாக வைரமுத்துவால் நாட்டுபுறப்பாட்ட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதை முத்தையா சுட்டிக்காட்டுகிறார்.

இன்னும் பொருத்தமான மரபுத் தொடர்ச்சி குறுந்தொகையில் வருகிறது. கொல்லன் அழிசியின் பாடலில் ‘என் வீட்டுக்கு அருகே உள்ள ஏழில்மலையில் மயிலின் குஞ்சி போல இலைகள் கொண்ட நொச்சிமரம் பூக்களை உதிர்த்து கொண்டிருக்கும் ஒலியை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்’ என்று தலைவனை காத்து தூங்காமலிருக்கும் தலைவி அவனிடம் சொல்கிறாள். தூங்காத மரம், இரவின் நீட்சியைக் காட்டும் மரம் என்ற பொருளில் நொச்சி இங்கே கையாளப்பட்டிருக்கிறது. நொச்சியும் தூங்கிவிட்டது என்ற சொல் இந்தபொருளில் மேலும் ஆழம் கொள்கிறது.

வைரமுத்துவின் சிறப்பாக நான் காண்பதை இங்கே முத்தையாவும் சுட்டிக்காட்டுகிறார். அவர் தமிழ் மரபின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். பாடல் [லிரிக்] என்பது எடுத்தாள்கை கவிதை [அப்ளைட் பொயட்ரி] ஒரு மரபின் சாரமான கவித்துவத்தை முழுக்க வேர்பரப்பி உறிஞ்சி தன் கவித்துவத்துடன் இணைத்து ஒன்றாக்கி இசைக்குள் பொருத்தும் கலை அது. தமிழின் பிற பாடலாசிரியர்கள் செவ்வியல் மரபில் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். நாட்டார் மரபில் இருந்தும் புதுக்கவிதை மரபில் இருந்தும் தமிழ்ச் செவ்வியல் மரபில் இருந்தும் ஒரேசமயம் பெற்றுக் கொண்ட பாடலாசிரியர் என்பதே வைரமுத்துவின் தனித்தன்மை.

ஒரு நுண்ணிய ரசிகராக அதைச் சுட்டிக்காட்டும் நோக்கு முத்தையாவிடம் இருப்பதனாலேயே இந்நூல் ஒரு உபச்சாரப்படைப்பாக இல்லாமல் நேர்த்தியான சித்தரிப்பாக ஆகியிருக்கிறது.

[ஒரு தோப்புக் குயிலாக. கவிபேரரசு வைரமுத்து அவர்களுடன். மரபின் மைந்தன் முத்தையா. விஜயா பதிப்பகம்  20, ராஜவீதி கோவை.1 பக்கம் 164 விலை 60]

ரசனை இதழ்

ஜக்கி வாசுதேவ்

முந்தைய கட்டுரைஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…
அடுத்த கட்டுரைஎன்.எச்.47- தக்கலை