தவசதாரம்

பக்கத்துவீட்டுப்பையன் அவன் குடும்பத்துடன் ‘தவசதாரம்’ என்ற படம் பார்த்துவிட்டுவந்திருப்பதாகச் சொல்லி கேட்டுக்கு வெளியே நின்று ”உங்க வீட்டு நாய் கட்டியிருக்கா? கட்டினியள்னா நான் உள்ள வந்து கத சொல்லுவேன்” என்றான். ”கட்டியிருக்கு. உள்ள வா.” என்றேன். உள்ளே வந்தவன் தாடையை தரைமேல் வைத்து படுத்து கண்களைமட்டும் மேலே தூக்கிப் பார்த்த ஹீரோ அருகே போய் ”ஈரோ! ஈரோ!” என்று கூவியபின் ”கடிக்காது”என்று என்னிடம் சொன்னான்.

”உள்ள வா” என்றேன்.”எனக்கு பிஸ்கட் வேண்டாம்”என்று உள்ளே வந்தான். ”எங்கவீட்டுல டப்பா கம்ப்யூட்டர் இருக்கே” என்று லாப்டாப்பை பார்த்துச் சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தான். பிஸ்கட் கொடுத்ததை தின்றான்.”என்ன படம் பாத்தே?” அவன் வாயை துடைத்துவிட்டு ஒரு பிஸ்கட்டை சட்டைக்குள் வைத்தான் ”இது ரூபிணிக்கு” ”அவளுக்கு நான் வேற தரேன். என்ன படம்?” ”தவசதாரம். கமல் நடிச்சபடம்” ”நல்ல படமா?”. ”சூப்பர் படம்..” பாய்ந்து கீழிறங்கி ”டிசூம் டிசூம்…·பைட்டு…” என்றான்.

”என்ன கதை?” ”கதையா?”என்றான்”படத்தில உள்ள கதை என்ன?” அவன் விரல்களை நக்கி ”படத்துல கதை சொல்லலியே”என்றான். ”பின்ன கதை சொல்றேன்னு சொன்னே?” ”அது எங்கம்மா சொன்ன கதைல்லா?” ”என்ன கதை?” ”தவசதாரம் கதை” இப்போது எனக்கே சற்று குழம்பியது.சரி, வேறு இடத்தில் ஆரம்பிப்போம் என்று யோசித்து ”படத்துல உனக்கு ரொம்ம்ப பிடிச்சது என்ன?” என்றேன்

”டான்ஸ¤” என்றான்.”என்ன டான்ஸ்?” ”அக்கா ஜட்டி போட்டுட்டு ஒரு கம்பிய பிடிச்சிட்டு இப்டியே ஆடுவாங்களே…காலெல்லாம் இப்டி இருக்குமே…” அவன் கதவை பிடித்து ஆடிக்காட்டினான்.சரிதான் , விளையும் பயிர். ”அப்றம்?” ”அந்த அக்காதான் மூணுசக்கர சைக்கிளிலே போற தாத்தாவை பென்சிலாலே குத்தி குன்னுட்டாங்க…சாகிறப்ப அந்த தாத்தா சிரிச்சார். ஏன்ன அவர் ரொம்ப நல்லவர் தெரியுமா?” ”சரி” ”அது ரூபிணி ஓட்டுகிற மூணுசக்கர சைக்கிள் கடையாது. பெரிய அங்கிஸ்ல் ஓட்டுற சைக்கிள். அப்பா எனக்கு வாங்கி குடுத்தா அதுல ஏறி நான் உங்க வீட்டுக்கு வருவேன்”

சைக்கிளை திசைதிருப்பாமல் முடியாது. ”அத தவசதாரத்திலே ·பைட் உண்டுல்ல?” ”நெறைய ·பைட் உண்டு. கையிலே ஒரு கத்தி வச்சிருக்கான்ல அத வச்சு கழுத்த அறுத்துருவான்…” ”ஆரு?” ”டாய் சோல்ஜர்…வாய இப்டி வச்சுகிட்டு பேசுவான்…பிஸ்கத்த உள்ள வச்சுட்டு பேசுவோமே அப்டி…உங்க வீட்டுல ஐஸ்கிரீம் உண்டா?”. ”கெடையாதே”என்றேன். ”டாய் சோல்ஜர் ஹெலிகாப்டரிலே வந்து ஸ்பைடர்மேன் மாதிரி கம்பிய வீசி அப்டியே கிர்ருன்னு வந்திருவான். ரொம்ப கெட்டவன். காரு ஓடுறப்ப தரையில தீ வரும் தெரியுமா? ஏன்னா அமெரிக்கால எல்லாம்  தரையில எல்லாம் தீயா போட்டு வச்சிருப்பாங்க இல்ல?”

”யாரு சொன்னாங்க? ”எங்க அப்பா?” ”நீ கேட்டியா?” ”ஆமா. அப்பா என்னை படம்பாருடாண்ணு சொன்னார்” துரத்தல் நடக்கும்போதே கேட்டிருப்பான்போல, அதுதான் அந்த அவசர விஞ்ஞானப்பதில். ”அப்றம் எவ்ளோ தண்ணி…ஜுனாமி…அந்த ஜுனாமி வரும்போது குட்டிக் குட்டி கப்பல்லாம் ஆடும்..அதெல்லாம் ஜிராபிஸ்…” ”என்னது?” ”எங்கப்பா சொன்னார். டாய் சோல்ஜர் மேலே கம்பு குத்திடும்.கொடி கட்டின கொம்பு..ஆகஸ்ட் பி·ப்டீந்து கொடி இருக்கே அது…” ”என்னதுண்ணு உங்க அப்பா சொன்னார்?” ”ஜிரா·பி…இல்ல, ஜிரா·பிஸ்… கம்ப்யூட்டரிலே செய்வாங்களே”

”பாட்டி?” என்றேன் ”பாட்டி எப்டி?” ”எந்தப் பாட்டி?” ”·போட்டோ வச்சிருப்பாங்களே?” ”படத்துலே பாட்டி கடையாது. அசின் தான் உண்டு. அவுங்க பொம்மைய வச்சுகிட்டு பெருமாளேண்ணு பாட்டு பாடி கா·பின்லே போட்டு மூடிருவாங்க… சினிமால எல்லாம் காட்டுவாங்களே டெட்பாடிய கா·பீன்ல போட்டு மூடி ப்ரேயர் பண்ணி மண்ண அள்ளி போட்டு…” . ”சரி, பாட்டி இருந்தாங்க மனோஜ்..நீ பாத்தே” அவன் ஐயத்துடன் ”அசினா?” என்றான் ”பாட்டி பாட்டி.. ” நானே நடித்து காட்டினேன். ”ஆ, ஒண்ணுக்குப்போகனும்ணு சொல்லுவாங்களே” ”ஆமா அவங்கதான்” ”அவங்க நல்ல பாட்டி”என்றான் சுருக்கமாக.

”தாடிவச்சுகிட்டு ஒருத்தர் டான்ஸெல்லாம் ஆடுவாரே” என்று எடுத்துக் கொடுத்தேன்.”ரூபிணிக்கு ரெண்டு பிஸ்கட் வேனுமாம்…அவ இல்லேண்ணா அழுவா” ”சரி குடுக்கேன்…இந்த தசாவதாரத்ல- இல்ல தவசதாரத்தில ஒரு மாமா பெரிய தொப்பிவச்சு தாடியோட வந்து டான்ஸ் ஆடுவாங்களே…” ”ஆமா..சுடிதார் போட்டிருப்பாங்களே, அவங்கதானே?” என்றான் உற்சாக வேகத்துடன். ”வெத்தில போட்டு துப்புவாங்க…அக்குத்தாத்தா மாதிரி…” எழுந்து எம்பிக்குதித்து ”அப்றம் கயித்த கட்டிகிட்டு இப்டியே ஜம்ப் பண்ணி… சூப்பர் பாட்டு..ஜுனாமியிலே ஒரு கொழந்தைசெத்துப்போச்சு. கறுப்புமாமா வந்து கால் மாட்டி.. மக்களேண்ணு கூப்பிடுவாரே”

”உசரமான ஒருத்தர் கூடவருவாரே” ”ஆமா…அவர் காலிலே கம்பு கட்டிட்டு நடக்கிறார். எங்கப்பா சொன்னார். மூஞ்சியிலே மாஸ்க் போட்டிருப்பார். எதுக்காக உடம்பிலே ஊசி குத்துறாங்க?” ”யார?” தாடி வச்சவர?” ”அவரு நல்லவருல்லா? அதனால கெட்ட ராஜா ஊசியால குத்துறார்.” ”சாமிசெலைய கடலில போட்டுட்டாங்க..போட்டுல போயி… அப்றம் ஜுனாமியிலே ஜிராபிஸ் வந்தபோது…” ”என்னது?” என்றேன், துணுக்குற்று. ”தண்ணி…நெறைய தண்ணி வந்ததுல்ல அப்ப…கார்லாம் போட்டுமாதிரி போச்சு..ஆனா கார் மிதக்காது முழுகிரும்.போட்டுதான் மிதக்கும்…ஒரு பிஸ்கெட் எனக்கா?”

”சாப்பிடு”என்றேன். ”உங்கம்மா என்ன கதை சொன்னாங்க?” ”எந்த கதை?” ”தவசதாரம் கதை?” ”சாமிசெலை ஒடைஞ்சதனால கடலில தூக்கி போட்டுட்டாங்கள்ல? அது அப்டியே ஜிரா·பிஸ்ல, இல்ல, ஜுனாமியிலே திரும்பிவந்திட்டுது. கன்யாகுமரியிலே நாம செருப்ப தூக்கி போட்டா திரும்பி வந்திரும்ல? சுகுணா அக்காவோட செருப்பு வரல்லை. அவ அழுதா…” ”அப்றம் அந்த செலையை என்ன செஞ்சாங்க?” ”மறுபடியும் கடலில ஆழமா கொண்டு போட்டிருவாங்க…அம்மா சொன்னாங்க” . என்ன ஒரு தெள்ளதெளிவான கதை.”ஒரு ·பிஷ் கூட அப்ப அங்க நீந்திட்டிருந்திச்சே?”

பிஸ்கட் தின்னப்பட்டு வாய் துடைக்கப்படும் வரை பொறுமையாக காத்திருந்தேன். அதன் பின் ”…அந்தப்படத்துல கமல் எத்தனை வேஷத்தில நடிச்சிருக்காரு தெரியுமா?”என்றேன். ”எத்தனை?” ”ப்ப்ப்பத்து!” இவ்ளவுதானா என்ற பாவனையுடன் அடுத்த பிஸ்கட்டை எடுத்தான். ”அது ரூபிணிக்குல்ல?” ”அவளுக்கு பிஸ்கட் பிடிக்காது” தின்று முடிப்பது வரை மீண்டும் காத்திருந்தேன். ”ஆனை அக்காவை தூக்கி குச்சியிலே குத்திவச்சது. டாய் சோல்ஜர் அவளை டுமீல்னு” . ”அந்த டாய் சோல்ஜர் யாரு தெரியுமா? அது கமல்தான்.அப்றம் அந்த உசரமான ஆள் அவரும் கமல்தான். அப்றம் கராத்தே சண்டை போடுவாரே அவரும் கமல்தான்…”

”தீ மேலே கார் ஓட்டிட்டு போறவர்?” என்றான். ”அவரும் கமல்தான். அந்த பாட்டிகூட கமல்தான்…” ”பாட்டி வேஷம் போடல்லை…எப்பமுமே பாட்டியாத்தான் இருக்காங்க..” என்றான். எப்படி விளக்குவது? ”…அந்த பாட்டி …அதாவது அந்த பாட்டிக்குள்ள கமல் மாமா இருக்காங்க…” சொல்லியிருக்கக் கூடாது. பீதியுடன் ”உள்ரயா ?”என்றான். ”ஆமாம்”என்றேன் பலவீனமாக. ”தின்னுட்டாங்களா?” என்னடா சிக்கலாகப்போய் விட்டது என்று எண்ணி ”கன்யாகுமரியில பயில்வான்பொம்மைக்குள்ள நீ போய் கையை ஆட்டியிருக்கேல்ல அத மாதிரி..” என்றேன். அவன் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. ”பாட்டி அழுதாங்க…நல்ல பாட்டி..கைமட்டும் அவளோ பெரிசு… வையாபுரி குச்சிமேல ஓடுறப்ப கீழ விழுந்திட்டான்”

”பத்து வேஷம் நடிச்சிருக்காங்க தெரியுமா?” ”யாரு?” ”கமல்” .”கமல் யாரு இதில?” ”அதான் பைக் ஓட்டுவாரே…அசின்கூட…அவருதான் மத்த எலலருமே…” என்றேன் ”அந்த டாய் சோல்ஜர் உசரமான ஆள் எல்லாருமே கமல்தான்” ”அப்ப கமல் யாரு?”

எனக்கே தசாவதாரத்தின் கதை கேயாஸ் ஆகிவிட்டதனால் பையனை அனுப்பிவிடலாம் என்று எண்ணினேன். அவனே ”எங்கம்மா கூப்பிடுறாங்க…”என்று கட்டிலில் இருந்து இறங்கி ”உங்க கம்பூட்டர் குடுப்பிங்களா? படம்பாத்துட்டு குடுக்கிறேன்” ”அது உடைஞ்சிரும்” என்றேன்”உங்கப்பாகிட்ட கேளு” ”எங்கப்பா கிட்ட பைசா இல்லியே. அவரு பூவர் மேன்….பூவர் மேன் ஹேஸ் நோ மனி. எங்க மிஸ் சொன்னாங்க. பூவர் மேன் இஸ் கால்ட் அ பெக்கர்!”

”சரி”என்றேன். ”அவர் கிட்ட நான் சொல்றேன்” அவன் வெளியே போய் ”ஈரோ கடிக்குமா?”என்று கேட்டபின் ”ஈரோ! ஈரோ!”என்று குரல்கொடுத்து கேட்டருகே போனான் என்னை நோக்கி திரும்பி ”நாங்க தவசதாரம் படம்பாத்தமே…”என்றான் ”சூப்பர் படம்”

முந்தைய கட்டுரைகென் வில்பர்:இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைமலையாள சினிமா ஒரு பட்டியல்