சில சினிமாப்பாடல்கள்

 பாலு மகேந்திராவின் மாணவரான நண்பர் சுரேஷ் கண்ணன் அபூர்வ திரைப்பாடல்கள் என்ற ஒரு எம்.பி3 பதிவை அளித்தார். எம்.கெ.தியாக ராஜ பாகவதர் முதல் இளையராஜா வரையிலான இசையமைப்பாளர்களின் அடிக்கடி கிடைக்காத பாடல்கள். மீண்டும் மீண்டும் அதைக் கேட்கிறேன். பல பாடல்களை தொடர்ச்சியாக பலமுறை. கேட்க ஆரம்பித்தால் இரவெல்லாம் கேட்பது என் வழக்கம்.

நான் நல்ல இசை ரசிகனல்ல. ஒலிப்பிம்பங்களை உருவாக்கிக் கொள்ள என்னால் முடியாது, இசையும் எனக்குக் காட்சிப்பிம்பங்களாகவே ஓடும். இசையைப்பற்றிய தகவல்களை நான் சேமித்துக் கொள்வதும் இல்லை. ஆனாலும் இசை எனக்கு ஒரு வகையான மனக்கிளர்ச்சிநிலையை உருவாக்கிக் கொள்ள அல்லது அமைதி அடைவதற்கு தேவைப்படுகிறது.

கேட்டுக் கொண்டிருந்தபோது பி.சுசீலா பாடிய ஒருபாடல் ‘கனி- எது- என் கன்னம்தானென்று சொல்வேனடீ’ என்னை சில மணிநேரம் இளமை நினைவுகளில் அலைக்கழித்தது. உடனே வேறு இசைவட்டுகளை எடுத்து அந்தப்பாடல் என் நினைவில் எழுப்பிய வேறு சில பாடல்களைக் கேட்டேன். ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ ‘ ஆடும் நேரம் இதுதான் இதுதான்… ‘ பின்னர் இப்பாடல்கள் நடுவே என்ன ஒற்றுமை என்ற எண்ணத்தில் மூழ்கினேன். என் பலவீனமான இசையறிவுக்கு ஒன்றும் பிடிகிடைக்கவில்லை. பொதுவான ஏதாவது ராகமோ தாளமோ ஆலாபனை முறையோ இருக்குமோ? அல்லது ஒருவேளை எனது அந்தரங்க மனநிலை ஏதேனும் இருக்குமோ?

பாடல்களுக்கு அப்படி ஒரு தன்மை உண்டு. நினைவுகளுடன் பிணைந்திருத்தல். பிரிக்கவே முடியாதபடி. ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலும் பிளாஸ்டிக் லேமினேஷனின் மணமும் என் நெஞ்சில் பிணைந்துள்ளன. காரணம் கல்லூரி நாட்களில் ஒருமுறை லேமினேஷன் போட்ட பேருந்து சலுகைச்சீட்டை வாயில் கவ்வியபடி நான் பயணம்செய்யும்போது அப்பாடலைக் கேட்டிருக்கிறேன்.

சிலசமயம் மனநெகிழ்வூட்டும் நினைவு. முதலாண்டு மாணவனாக நான் கல்லூரி வந்த காலத்தில் ‘வெள்ளிமணி ஓசையிலே’ என்ற பாடல் ஒலித்த தேனீர்கடை வாசலில் இருந்த பேருந்து நிறுத்தத்தில், பூனைமயிர் இறங்கிய கன்னங்களும் மிகச்சிறிய உதடுகளும் சிறிய நாசியும் பெரிய கண்களும் கொண்ட உருண்டமுகமுள்ள ஒரு மூத்த மாணவியை பார்த்தேன். சிவப்பான சரிதா. அக்காலத்து திரை நாயகி அவர்தான். பெயரே தெரியாமல் இரண்டுவருடங்கள் உள்ளமெனும் கோயிலில் வெள்ளிமணி ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

 ஆனால் இந்தப்பாடல்கள் அப்படி அல்ல என்றும் படுகிறது. இதேபோல மனதில் ஒரே இடத்தில் அமைந்துள்ள பாடல்கள் உண்டா? டி.ஆர்.மகாலிங்கத்தின் நாதஸ்வரக் குரல் ஒலிக்கும் ‘கண்களின் வெண்ணிலவே உல்லாச காதல் தரும் மதுவே… ‘ டி.எம்.எஸ் பாடும் ‘முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் ‘ இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே ‘ போன்ற பாடல்கள் என் மனதில் ஒரே புள்ளியில் இணைகின்றன. ஏன்?

 நண்பர் சொன்னார். ”அந்தப்பாடல்களில் பொதுவான அம்சம் என்ன என்றால் அவை மிகச்சிக்கலான தாளத்தின் மீது எளிமையான மெட்டுகளை அமைத்துள்ளன என்பதுதான். பாட்டை விட்டுவிட்டு தாளத்தை மட்டும் கேட்டால் நாம் முற்றிலும் வேறு ஒரு அனுபவத்தை அடைவோம்” ஆம் அது உண்மைதான்.

அப்படியானால் முதலில் சொன்ன பாடல்களில் என்ன பொதுத்தன்மை உள்ளது? அவற்றில் விசித்திரமான ஒரு மர்மம் உள்ளது போலப் படுகிறது. காமத்தின் விளங்கிக் கொள்ள முடியாத மர்மமா அது? ‘கனி எது’ பாடலில் ஆஹாஹா என்ற ஆலாபனையில் வெளிப்படும் தாபம் மற்ற பாடல்களில் எல்லாம் அதே வீச்சில் வெளிப்படுகிறது…  

அப்படிப்பார்த்தால் ‘மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில்வண்ணமே’ என்ற பாடலும் ‘ஊரெங்கும் மாவிலை தோரணம்’ பாடலும் அப்படியே ‘வெள்ளிமணி ஓசையிலே’ பாடலுடன் இணைகின்றன. ஏன்?

கத்தாழ கண்ணாலே

குத்துப்பாட்டு , இரு கடிதங்கள்

முந்தைய கட்டுரைமதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை
அடுத்த கட்டுரைஅன்வர் அலி கவிதைகள்