வார்த்தை

வார்த்தை மாத இதழின் இரு இலக்கங்கள் வந்துவிட்டன. முதலிதழில் அட்டை வித்தியாசமானதாக இருந்தாலும் உள்ளே தாளின் தரம் மிகச்சாதாரணமாக இருந்தது. ஜீவாவின் ஓவியங்களும் முதிர்ச்சியற்றவையாக இருந்தன. இரண்டாமிதழில் அக்குறைகள் களையப்பட்டமையால் இதழின் காட்சித்தரம் சிறப்பாக இருக்கிறது. இன்றைய சூழலில் அதுவே ஒரு முக்கியமான அம்சமாகும்.

இதழின் தளம் பற்றிய குழப்பம் இன்னும் அவர்களிடமே நீடிக்கிறது என்று படுகிறது. திண்ணைபோல எல்லா தரப்பினருக்கும் உரிய குரலாக இருக்கவேண்டும் என்ற ஆவல் ஒருபக்கம். ஜெயகாந்தனை மையமாகக் கொண்ட முற்போக்கு இலட்சியவாதம் ஒருபக்கம். தமிழ்ச்சிற்றிதழ்கள் சார்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பினால் வரும் பொதுவான சிற்றிதழ்த்தன்மை ஒருபக்கம் என கலவையாக இருக்கிறது இதழ்.

ஆனால் இவ்விதழின் முக்கியமான பங்களிப்பாக இருக்கச் சாத்தியமானது இதில் எழுதவந்திருக்கும் புதிய எழுத்தாளர்கள்தான். இணையத்தில் அங்கிங்காக எழுதிவந்த பலரை கண்டடைந்து முன்னிறுத்த முயல்கிறது வார்த்தை. ஓர் இதழைச் சூழ்ந்து ஓர் எழுத்தாளர் வட்டம் உருவாகும்போதுதான் அதன் குணமும் தளமும் நிர்ணயமாகின்றன– அதன் பங்களிப்பு அவர்கள் வழியாகவே மெல்லமெல்ல உருவாகி வருகிறது. தமிழின் தடம்பதித்த சிற்றிதழ்களுக்கெல்லாம் இது பொருந்தும். அவ்வெழுத்தாளர்கள்  எழுதி, எதிர்வினைகள் பெற்று, தங்களை மேம்படுத்திக்கொண்டு, மெல்லமெல்ல தங்கள் குரலை உருவாக்கிக் கொள்ளும்வரை அவ்விதழ் மங்கலாக ஒலிப்பதும் இயல்பே.

வார்த்தை இதழின் முக்கியமான பங்களிப்பு என்பது இரு இதழ்களிலும் எழுதியிருக்கும் ‘சுகா’ வின் கட்டுரைகள். நல்ல எழுத்து என்பது மேல்தளத்தில் சரளத்தையும் எளிமையையும் கொண்டிருக்கும். தேர்ந்த வாசகனுக்கு மட்டுமே அது இதழ்விரித்து தன்னைக் காட்டும். அத்தகைய முதிர்ச்சி ஆரம்பகாலக் கட்டுரைகளிலேயே தெரிவது ஓர் முக்கியமான அம்சம். குணச்சித்திரங்களை மிகக் குறைவான சொற்களிலேயே சொல்வது, உச்சகட்டங்களை கைதவறி விழுந்த சொற்களால் சொல்வதுபோல மிகையில்லாமல் சொல்லிச் செல்வது, நகைச்சுவைக்காக முயலாதது போன்ற நகைச்சுவை போன்றவை இக்கட்டுரைகளின் இயல்பாக உள்ளது வியப்பூட்டுகிறது.

Essay எனப்படும் குறுங்கட்டுரைகளுக்கு நம்மிடையே அதிக வகைமாதிரிகள் இல்லை. முக்கியமான காரணம் நமது சிற்றிதழ்கள் Article எனப்படும் நெடுங்கட்டுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அவையே தீவிரமானவை என்பது அவர்களின் பொதுவான மூடநம்பிக்கை. பிரபல இதழ்களில் இவற்றின் நுட்பம் புரிபடாது போகும். குறுங்கட்டுரைகள் நான்கு முக்கியமான அம்சங்களைக் கொண்டவை.

1.சுருக்கம். எதையுமே அவை விவாதிப்பதில்லை. விவரிப்பதுமில்லை. தொட்டுத் தொட்டுச் செல்கின்றன.குறிப்புணர்த்துகின்றன.

2. சரளம். அவை ஒருபோதும் அடர்த்தி செறிவு போன்றவற்றுக்காக முயல்வதில்லை. அடைய விரும்பும் அனைத்து ஆழங்களையும் சரளத்தன்மையை தக்கவைத்தபடி சொல்வது எப்படி என்பதே அவறின் சவாலாகும்

3. நகைச்சுவை. குறுங்கட்டுரைகள் இயல்பிலேயே வாழ்க்கையின் ஒரு துளியில் நின்றுகொண்டு அதைமட்டுமே பேசி பிற  அனைத்தையும் தொட்டுக்காட்ட விழைபவை. ஆகவே அவை நகைச்சுவைவை தங்கள் வழிமுறையாகக் கொண்டுள்ளன.

பொதுவாக குறுங்கட்டுரைகள் சிறுகதையின் வடிவ இலக்கணத்தைக் கொண்டுள்ளன என்பதையும் சொல்லியாக வேண்டும். பளீரென்ற தொடக்கம், எதிர்பாராத முடிவு, சற்றே புனைவுத்தன்மை என அவை அமைவது வழக்கம். தமிழின் சில நல்ல குறுங்கட்டுரைகள் அசோகமித்திரனால் எழுதப்பட்டுள்ளன. குறுங்கட்டுரைகளில் சாதனையாளர் அ.முத்துலிங்கம்தான். சுகா எழுதிய இரு கட்டுரைகளும் அவ்வியல்புக்குள் அமைந்துள்ளதைக் காணலாம். அவர் இணையக்குழுக்களுக்குள் எழுதிய கட்டுரைகளில் இவ்வடிவின் மிகச்சிறந்த எழுத்துக்கள் பல உள்ளன. பொதுவாக இணையம் குறுங்கட்டுரைகளுக்கான சிறந்த ஊடகம். இணையத்திலிருந்து அச்சுக்கு வரும் வார்த்தை அவ்வடிவை தமிழில் ஆழ நிலைநாட்டுமென்றால் அதுவே அதன் முக்கிய சாதனையாக அமையலாம்.

இரண்டாம் இதழில் ஜெயகாந்தனைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் சுகாவின் குறுங்கட்டுரை தமிழின் ஒரு புது வகைமை. மலையாளத்தில் கல்பற்றா நாராயணன் இத்தகைய இலக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனைப்பற்றிய இக்கட்டுரையில் ஜெயகாந்தனின் எழுத்து பற்றி எதுவுமே இல்லை. அவரது தீவிர வாசகரான ஒருவர் பற்றியும் அவருக்கும் தனக்குமான உறவு பற்றியும் மட்டுமே உள்ளது. ஆனால் ஜெயகாந்தனின் சமூகப்பாதிப்பு பற்றிய மிக நுண்மையான சித்திரம் இதில் உள்ளது. உதாரணம் அவ்வாசகர் பிராமணர். அனால் அவர் மகள் மயிலாப்பூரில் இருக்கமுடியவில்லை, அங்கெல்லாம் ஒரே பிராமின்ஸ் என்கிறாள். பிராமண உலகிலிருந்து வெளியே வந்த பிராமணர்களால் தங்களவராக அடையாளம் காணப்பட்டவர் ஜெயகாந்தன் என்று ஒரு ஊகம் எப்போதும் எனக்கு உண்டு.அதை அடிக்கோடிடுகிறது இந்த வரி. பிராமணர் ஒருவரின் குடும்ப உறுப்பினராக ஜெயகாந்தன் மூலம் ஆகும் கட்டுரையாளர் அதற்குக் காரணம் ‘யுகசந்தி’ என்று சொல்லிமுடிக்கும் இடம் எளிமையாக ஆனால் நுட்பமாக ஜெயகாந்தனை வரையறை செய்கிறது. இத்தகைய கட்டுரைகள் ஆயாசமில்லாமல், அதிகப்பிரசங்கித்தனமான கோட்பாட்டு குதறல்களும் இல்லாமல் தங்கள் தனியனுபவத்தின் நேர்மையைப் பேணியபடி எழுத்தாளர்களின் உள்ளே செல்லக்கூடியவை.

இரு இதழ்களில் எனக்கு முக்கியமானதாகப் பட்ட இன்னொரு கட்டுரை சேதுபதி அருணாச்சலம் பிக்மிக்களைப் பற்றி எழுதிய கட்டுரை.தகவல்களைத் தொகுத்துதெழுதும் கட்டுரைதான் இது என்றாலும் அதை முன்வைத்திருக்கும் முறையில் உள்ள பாசாங்கில்லாத சரளமான தன்மையால் அதுவொரு நல்ல கட்டுரையாக படுகிறது. அத்தகைய கட்டுரைகள் நிறைய தமிழில் தேவையாகின்றன. கொஞ்சம் தகவல்களுடன் தேவையற்ற கோட்பாட்டு கைகால் உதறல்கள் கலந்து எழுதப்படும் நெடுநீளக் கட்டுரைகளால் தமிழ் இலக்கிய உலகம் சலித்துப்போய் இருக்கிறது.

சலிப்புக்கு மாற்றாக அமைவது என வ.ஸ்ரீனிவாசனின் பத்தியையும் சொல்லலாம்.  குறுங்கட்டுரைகளைப்போலவே வணிக இதழில் இடமில்லாமல் சிற்றிதழாளர்களால் கவனிக்கப்படாமல் தேங்கிப்போன ஓரு எழுத்துத்தளம் இது.  நெடுங்காலமாக சிற்றிதழ்கள் சுவாரஸியம் என்பதை ஏதோ எதிர்மறைகூறாக கண்டுவந்தமையால் இத்தகைய எழுத்தின் முக்கியத்துவம் அவற்றுக்கு தெரியாமல் போய்விட்டது. இப்போது உயிர்மை முதலிய இதழ்களில் இத்தகைய பத்திக் கட்டுரைகள் வெளியாகின்றன. ஆயினும் பத்தி என்பதன் சிதறுண்ட வடிவமும் மொழிவிளையாட்டுகளும் நகைச்சுவையும் உயிர்மைக் கட்டுரைகளில் இல்லை. அவை தொடர்கட்டுரைகளாகவே உள்ளன– விதிவிலக்கு இப்போது தொடங்கியிருக்கும் மாயாவின் கட்டுரை

அத்தகைய பத்தி வடிவுக்குச் சரியான உதாரணம் ஸ்ரீனிவாசனின் கட்டுரை. இவை ஒருபோதும் வணிக ஊடகங்களில் வெளியாக முடியாது. இவற்றின் இடக்கரடக்கல்கள் நக்கல்கள் அவ்வாசகர்களுக்குப் புரியாது. விரிவான வாசிப்பும், வாசிக்கும்போதே புன்னகைகளைப் பொறுக்கிச் சேர்க்கும் ஒரு தனிமூளையும் உள்ளவர்களால் மட்டுமே எழுதப்படக்கூடியவை இவை. எதையுமே விரிவாக விவாதிக்காமல் கலைடாஸ்கோப் போல உடைசல்களைக் கொண்டு விதவிதமான சித்திரங்களை உருவாக்கியபடியே செல்லும் தன்மை கோண்டவை

நுட்பமான மொழித்தருணங்களை தொட்டு எடுக்கும் திறன் வ.ஸ்ரீனிவாசனுக்கு உள்ளது. இந்தவகை எழுத்திலும் வார்த்தை பலவகையான சாத்தியங்களை தொட்டு தன் பங்களிப்பை நிகழ்த்தலாம். உதாரணமாக இதே சரள மனநிலையுடன் அறிவியல் வரலாறு பற்றியும் எழுதபப்டுமென்றால் மிகச்சிறப்பாக இருக்கும். மலையாளத்தில் எம்.கிருஷ்ணன்நாயர், டி.சி.கிழக்கே முறி போன்றவர்கள் எழுதிய இத்தைகைய பத்திகள் உருவாக்கிய இலக்கிய விழிப்புணர்வும் புரிதலும் மிகப்பெரிதாகும். தமிழில் சுஜாதா மட்டுமே ஒரே முன்னுதாரணம். கணையாழி கடைசிப்பக்கம், கற்றதும் பெற்றதும்]

ஆர்தர் சி கிளார்க் பற்றிய அறிமுகமும் அஞ்சலியும் தமிழ் சூழலை வைத்து பார்க்கும்போது தெளிவாகவோ முழுமையாகவோ இல்லை. அறிவியல்புனைவுகளில் ஆர்தர் சி கிளார்க்கின் இடம் மற்றும் சாதனைகளைப்பற்றி துகாராமின் இக்கட்டுரையை வைத்து எவரும் புரிந்துகொள்ள முடியாது. இது அவரது தனிப்பட்ட எண்ணங்களாகவே உள்ளது. தமிழ் சூழலில் வாசிப்பவர்களைப்பற்றொய பிரக்ஞை இக்கட்டுரைக்குப் பின்னால் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்புக்கதை ‘கட்டியங்காரன்’ நன்றாக இருக்கிறது. இக்கதை ஏற்கனவே தமிழில் எம் கோபாலகிருஷ்ணனால் சொல் புதிது இதழில் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்டுள்ளது. கோ.ராஜாராமின் அமெரிக்கக் குறிப்புகள் பத்தி எழுத்துக்குரிய சகஜமான நடையில் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையுடன் அமைந்துள்ளன. அவை அமெரிக்கா பற்றியதாக மட்டுமல்லாமல் விரியும் என எதிர்பார்க்கலாம்.

சுகுமாரனின் இடைவெளிக்குப் பிந்தைய இரு கவிதைகள் சிறப்பாக உள்ளன.. குறிப்பாக சுகுமாரன் எழுதியிருக்கும் இரண்டாவது கவிதை– தனிமையில் நிர்வாணம் கொள்ளும் பெண்ணின் சித்திரம்– அவரது வழக்கமான பாணியில் இருந்து வெலுவாக விலகி தனித்தன்மையுடன் இருக்கிறது. அவரது மறுவருகையை கட்டிட்யம் கூறுகிறது.  ஆனால் இரு இதழ்களிலும் வெளியாகியுள்ள வேறு எந்தத் தமிழ்க் கவிதையும் அச்சில் ஏற்றும் தகுதி கொண்டதாக எனக்குப் படவில்லை–  இவ்வகைக் கவிதைகள்தான் சும்மா எழுதித்தள்ளப்படுகின்றன. எந்த இதழைப்புரட்டினாலும் ஏழெட்டு கவிதைகள் ஒரே போல கண்ணில் பட்டு விடுகின்றன. புதுமை என்ற அம்சம் கவிதையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அது இல்லாத கவிதை ஒரு மொழி இம்சை.

வழக்கறிஞர் விஜயன் சட்டம் சார்ந்து எழுதியிருக்கும் கட்டுரைகள் சுருக்கமாகவும் தகவல்செறிவுடனும் உள்ளன. நம் இதழ்களில் இத்தகைய கட்டுரைகளுக்கு மேலும் தேவை உள்ளது.

கதைகளில் அ.முத்துலிங்கம் கதை அவரது வழக்கமான நுண்மையுடன் இல்லை. நாஞ்சில்நாடனின் ஐயம் இட்டு உண் நல்ல கதையாக இருக்க வேண்டுமானால் மிகவும் வழிவிட்டுப்போகும் ஆரம்பகால நீட்சியை கைவைத்திருக்க வேண்டும். இதழில் வந்த நல்ல கதை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது.ஆனாலும் அது அவரது முக்கியமான ஆக்கம் அல்ல.பொதுவாக இதழில் வழக்கமான சிற்றிதழ்சார் எழுத்து மிகச்சாதாரணமாகவே உள்ளது. வார்த்தையில் புதிதாக எதையேனும் எதிர்பார்க்க வேண்டுமென்றால் மேலே சொல்லிய புதிய எழுத்தாளர்கள் உருவாக்கும் புதிய சாத்தியங்கள் வழியாகவே .

இரு விஷயங்களுக்காக வார்த்தையை வாழ்த்தி வரவேற்க வேன்டும். ஒன்று வழக்கமான இன்னொரு சிற்றிதழ் என்ற நோக்குடன் அல்லாமல் புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்பட்டுள்ள முயற்சிக்காக. இரண்டு அதன் தொழில் நேர்த்திக்காக. அவர்கள் எண்ணும் வானம் அவர்களுக்கு வசப்படுவதாக!

முந்தைய கட்டுரைகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’
அடுத்த கட்டுரைஇந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்:இரு கடிதங்கள்