காந்தியும் தலித் அரசியலும் – 6

6. இறந்தகாலத்தை மாற்றி எழுதுதல்

தலித்துக்கள் இன்று ஓர் அரசியல் சக்தியாக திரள்வதற்கு அச்சமூகத்தின் உள்ளே உள்ள பலநூறு சாதி ஏற்றத்தாழ்வுகளும் பேதங்களுமே காரணமாக இருக்கின்றன. அத்துடன் அரசியலில் இன்று உருவாகியிருக்கும் ஊழல் என்ற மாபெரும் தொற்றுநோய். ஆகவே அவர்கள் எண்ணும் இலக்குகள் வெகுதூரத்திலேயே உள்ளன.

தங்கள் இன்றைய நிலைக்குக் காரணமாக இறந்தகாலத்தில் வந்து நழுவிய ஒரு வாய்ப்பைச் சொல்லி ஆறுதல் செய்துகொள்வதற்காகவே பூனா ஒப்பந்தம் இன்று மிகைப்படுத்தப்படுகிறது. அந்த நோக்கத்துக்காக மொத்த இறந்தகாலமும் காலயந்திரப் பயணம் மூலம் தலைகீழாக மாற்றிக் கட்டப்படுகிறது. தங்களை பின்னிழுக்கும் ஆயிரம் சிக்கல்களை களைவதற்கான அரசியலியக்கத்துக்குப் பதிலாக இந்த  இறந்தகால நிகழ்வு குத்திக் குத்தி புண்ணாக்கபப்டுகிறது. ஒரு பொது எதிரியைக் கொண்டு தங்களை தொகுத்துக்கொள்ளலாம் என்ற திட்டமன்றி வேறல்ல.

 தங்கத்தட்டில் ஒரு விடுதலை வாக்குறுதி

ஒரு பேச்சுக்காக பூனா ஒப்பந்தம் நிறைவேறவே இல்லை என்று வைத்துக்கொள்வோம். பிரிட்டிஷ் அரசு அம்பேத்காருக்கு அளித்த வாக்குறுதியின்படி இரட்டை வாக்குரிமையை அளித்து 1932ல் தேர்தல்களை நடத்தியிருந்தது என்றால் இந்தியாவில் என்ன நடந்திருக்கும்? இன்றைய தலித் சிந்தனையாளர்களில் ஒருசாரார் சொல்வதை வைத்துப்பார்த்தால் தலித்துக்களின் வாழ்க்கை பரிபூரண விடுதலை பெற்றிருக்கும்! அதை உண்மையிலேயே ஒருவர் நம்பிச் சொல்கிறார் என்றால் அத்தகைய தலைவர்களைப் பெற்றமைக்காக தலித்துக்களை எண்ணி பரிதாபப் படுவதல்லாமல் வேறு வழி இல்லை.

1932ல் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகள் அப்போதுதான் அரசியல் பிரச்சினையாக உருமாற ஆரம்பித்தன.அன்றுவரை அது ஒரு சமூகப்பிரச்சினையே. இந்தியாவெங்கும் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளில் அரசியல் அறிமுகம் பெற்றவை மிகமிகச்சிலவே. அச்சாதிகளுக்குள் ஓர் ஒற்றுமையை உருவாக்குவதற்கான பணி ஆரம்பிக்கப்படவே இல்லை. பின்னர் அம்பேத்கார் புகழும் அதிகாரமும் பெற்ற பிறகும்கூட அவரால் தலித் ஒற்றுமையையும் அரசியல்மயமாக்கத்தையும் நிகழ்த்த முடியவில்லை. அரைநூற்றாண்டுகழிந்து எண்பதுகளில் தலித் இயக்கங்கள் மூலமும் பகுஜன் சமாஜ் போன்ற அரசியலியக்கங்கள் மூலமும் அந்த பணி உயர்வேகத்தில் ஆரம்பித்தும்கூட இன்றும் சொல்லும்படியாக ஏதும் நிகழவில்லை.

ஏனென்றால் அது அத்தனை எளிய விஷயமல்ல. இந்திய சமூகத்தின் அபாரமான பன்மைத்தன்மையை ஒருகுறிப்பிட்ட தளத்தில் ஒருங்கிணைப்பதற்கு உத்வேகமான இலட்சியவாதமும், பொதுவானதும் நடைமுறைச்சாத்தியமானதுமான ஒரு கோட்பாட்டுத்தளமும் ,அதை அடிமட்டம் வரைக் கோண்டுசெல்லக்கூடிய நெடுநாள் உழைப்பும் தேவை. படிப்படியாகவே அது நிகழமுடியும்.

ஆகவே அப்போதே இப்போதுள்ள தலித்தியர் சிலர் சொல்வதுபோல தங்கத்தட்டில் பிரிட்டிஷார் அள்ளிவழங்கிய இரட்டை வாக்குரிமையை எந்தவிதமான தடையும் இல்லாமல் அடைந்து, தேர்தல்களில் வென்று, ஒரு நூறு தலித் உறுப்பினர்கள் பிரிட்டிஷாரின் மேலதிகாரத்துக்கு கீழே இருந்த மத்தியசபையில் சென்றமர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தாழ்த்தப்பட்டவர்களிலேயே கல்வியோ நிலமோ உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பு என்ற நிலையில் தலித்துக்களுக்குள்ளேயே யார் அதிகாரத்துக்குச் சென்றிருப்பார்கள்?

அம்பேத்காரும், எம் சி ராஜாவும், ரெட்டைமலைசீனிவாசனும் சில பதவிகளை அடைந்திருப்பார்கள். மத்திய சபையில் ஆவேசமாகப் பேசியிருப்பார்கள். இவர்கள் அனைவருமே தலித்துக்களுக்குள் மேல்சாதி. தலித்துக்களுக்குள் உயர்வற்கமாகத் திகழ்ந்தவர்கள். இவர்கள் அறிவுஜீவிகளான, பார்லிமெண்டேரியன்களே ஒழிய நேரடியாக மக்களிடையே சென்று பணியாற்றிய மக்கள்தலைவர்கள் அல்ல. அதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்தே உணர முடியும்.

அவர்களின் பேச்சையும் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு மளமளவென சட்டங்கள் நிறைவேற்றி ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டவர்களையும் பொருளியல் அரசியல் தளங்களில் முழுமைபெறச்செய்யும் நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் அரசு உடனடியாக ஈடுபட ஆரம்பித்திருக்குமா என்ன? இருநூறாண்டுகள் அவர்கள் கண்களுக்குப் படாத யதார்த்ததை இவர்கள் சொன்னதுமே உணர்ந்துகொண்டு மனிதாபிமானம் பீரிட கிளம்பியிருப்பார்களா என்ன?

தங்கள் ஆட்சியின் வேர்களாக இருந்த சமஸ்தான மன்னர்களையும் ஜமீந்தார்களையும் கடைசிவரைக் கைவிட பிரிட்டிஷார் தயாராக இருக்கவில்லை என்பதே வரலாறு. அவர்கள் பெரும்பாலும் அனைவருமே சாதியில் ஊறியவர்களாக தாழ்த்தப்பட்டோருக்கான விடுதலையை கடைசிவரை தடுப்பவர்களாக இருந்தார்கள் என்பதும் உண்மை. 1947ல் அரசியல்சட்ட வரைவுக்குழுவும் அதை ஆவேசமாகப் பேசிய அம்பேத்கார் அந்த அதிகார மையங்கள் எந்த வகையிலும் நீடிக்க விடக்கூடாது என்று வாதாடியிருக்கிறார். பிரிட்டிஷாரிடம் அவர் அதற்காக கோரியிருக்கவேண்டியதுதானே?

நேர்மாறாக இரண்டாம் வட்டமேஜைமாநாட்டில் அம்பேத்கார் அந்த குறுநில மன்னர்கள் திவான்கள் மற்றும் நிலப்பிரபுக்களுடன் இணைந்து ஒரே அணியாக பிரிட்டிஷ் ஆதரவாளராகவே செயலாற்றினார். காந்தியை அங்கே தனிமைப்படுத்தினார் என்பதே வரலாறு. அந்த மன்னர்களில் பலர் வயதுவந்தோருக்கு வாக்குரிமை போன்ற கோரிக்கைகளுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைபாடு கொண்டவர்கள்.

1932ல் அளிக்கப்பட்ட இரட்டை வாக்குரிமை என்பது ஒரு போலி அதிகாரத்தை மட்டுமே உருவாக்கியிருக்கும் என்பதைக் காண நுண்ணோக்கு ஒன்றும் தேவை கிடையாது. தாழ்த்தப்பட்டோருக்கான விடுதலை என்பது அம்மக்கள் அனைவரையும் அடித்தளம் வரை ஊடுருவிச்சென்று அவர்களின் கருத்தியலில் மாற்றத்தை உண்டுபண்ணும் மக்களியக்கங்களினாலேயே சாத்தியமாகியிருக்கும். அவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் சமூகக் கட்டுமானத்தையும் எதிர்மனநிலைகளையும் பலவீனப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகியிருக்கும். ஆனால் அம்பேத்கார் அரசியலதிகாரத்தின்மூலம் மேலிருந்து அதைச் செய்யமுடியுமென எண்ணினார்.

ஒரு ஜனநாயக அமைப்பில் மேலிடஅதிகாரமேகூட மக்களியக்கம் மூலமே உண்மையில் கையில்வரும். தாழ்த்தப்பட்டவர்களுக்கான அதிகாரம் என்பது இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்தத்தை எதிர்த்தும் சமரசம் செய்தும் தாழ்த்தப்பட்டவர்கள் கைப்பற்றிக்கொள்வதாகவே இருக்க முடியும். இன்று உத்தரபிரதேசத்தில் நடப்பது கிட்டத்தட்ட அதுவே. அம்பேத்கார் அதை ஓர் அன்னிய அடக்குமுறை அமைப்பின் தயவால் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றே என்ணினார். அது ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது.

ஆம், எந்த ஒரு அரசியல் அதிகாரமும் ஒரு நீண்ட சமூக முரணியக்கம் மூலமே சாத்தியமாகும். அதிகாரச் சதிகள் மூலமோ, சம்பந்தப்படாத ஒருவர் பரிந்தளிப்பதன் மூலமோ பழுத்து மடியில் விழாது. போராட்டமும் சமரசமும் அந்த முரணியக்கத்தின் படிநிலைகளாக மாறி வரும். இந்த விஷயத்தை ஆரம்பம் முதலே இந்திய இடதுசாரிகள் சொல்லிவந்தார்கள்.மக்கள் பங்கேற்பு மூலமும் நெடுங்கால போராட்டம் மூலமும் மட்டுமே சமூகவிடுதலை சாத்தியம், அதை ஏகாதிபத்தியம் பிச்சைபோடமுடியாது என.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான உண்மையான அதிகாரத்தை அவர்கள் ஈட்டிக்கொள்வதற்கான மக்களியக்கமாக நிகழ்ந்தது காந்தியின் ஹரிஜன இயக்கமே. ஒருபக்கம் அது இந்தியா முழுக்க தாழ்த்தப்பட்ட எளிய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை அளித்தது. மறுபக்கம் அவர்களின் நிலையைப்பற்றிய பிரக்ஞையையும் அதில் பிறருக்கு உருவாகவேண்டிய பொறுப்புணர்ச்சியையும் பிற மக்களில் ஏற்படுத்தியது.அ ம்பேத்கார் செய்திருக்கவேண்டிய, காந்தி செய்த, பெரும்பணி அது.

தெலுங்கானா முதலிய பல இடங்களில் இடதுசாரி இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நேரடியாக எதிர்ப்பைத்தெரிவித்துப் போராடுவதற்கான வழிமுறையைக் காட்டின. கேரளத்திலும் தமிழகத்திலும் தலித்துகளுக்கான நில உரிமைப்போர்களை கம்யுனிஸ்டுக்கட்சி முன்னின்று நடத்தியது. இன்றுவரை தலித் அரசியலின் அடித்தளமாக இருப்பது இவைபோன்ற மக்களியக்கங்களே.

பிரிட்டிஷாரின் இலவசமாக இரட்டை வாக்குரிமையைப் பெற்று அரசியலதிகாரத்தையே தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்தார்கள் என்று கொள்வோம், அது எத்தனைநாளுக்கு நீடித்திருக்கும்? 1932ல் அப்போதே இந்தியாவின் எல்லா சமூகங்களும் அரசியல் விழிப்பு கொள்ள ஆரம்பித்துவிட்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தின் இறுதிநாட்களில் காங்கிரஸின் கட்டுமானத்தில் பிற்பட்டோரின் இடம் வலுவாக நிகழ ஆரம்பித்து விட்டிருந்தது.

எண்ணிக்கையே ஜனநாயகத்தின் முதல்பலம் என்றநிலையில் சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் உருவாக்கிய வயதுவந்தோர் ஓட்டுரிமை அதுவரையிலான அரசியல் சமநிலைகளை எல்லாமே தலகீழாகத்திருப்பிவிடவிருந்தது. விளைவாக மேலும் சில வருடங்களில் இந்தியாவின் சமூக அதிகாரம் என்பது ஒட்டுமொத்தமாகவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கைக்குச் செல்லவிருந்தது. அவர்கள் அந்த இரட்டைவாக்குரிமைச் சலுகையை தாங்களும் அங்கீகரித்து அப்படியே தூக்கிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

இந்தியசமூகத்தின் பலநூறு ஒடுக்கப்பட்ட சாதிகள் அதிகாரத்துக்காக முண்டியடிக்கும் ஒரு சூழலில் ஒரு தரப்பு மட்டும் பிரிட்டிஷாருடன் சமரசம் செய்துகொண்டு பெறும் ஓர் அரசியலதிகாரம் எந்த அளவுக்குச் செல்லுபடியாகும்? எத்தனை காலம் செல்லுபடியாகும்? அந்த சமூகப்பேரமைப்பை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், அதற்கெதிராக  இந்திய அளவிலான ஒரு சிறிய மக்களியக்கத்தைக்கூட கட்ட முடியாமல், வெறுமே அதிகாரப்பேரம் மூலமே அம்பேத்கார் அடைய முற்பட்ட அந்த இரட்டை வாக்குரிமையினால் என்ன நடைமுறைப்பயன் விளைந்திருக்கும்?

பிரிட்டிஷ் சலுகையாகிய இரட்டைவாக்குரிமை இருந்து, அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் தாழ்த்தப்பட்டோர் அடைந்திருந்து,அந்நிலையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து மெல்ல அதிகாரம் பிற்படுத்தப்பட்டோர் கைக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? பிற்பட்டோரின் அதிகாரம் அவர்கள் பிரிட்டிஷ் அரசை வென்று அடைந்தது. தாழ்த்தப்பட்டோர் அதிகாரம் அந்தப்போராட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்து அடையப்பெற்றது. அந்நிலையில் அந்த தாழ்த்தப்பட்டோர் அதிகாரம் எவ்வாறு  எதிர்கொள்ளப்பட்டிருக்கும்? ஒட்டுமொத்த தலித் அரசியலும் பிற்படுத்தப்பட்டோரின் மாபெரும் எண்ணிக்கை பலத்தால் குப்பைக்கூடைக்குத் தூக்கி வீசப்பட்டிருக்கும். இதனை இன்றைய இந்திய அரசியலைக் கொஞ்சம் கவனிக்கும் எவருமே உணர முடியும்.

அப்படி நிகழாது போனது காந்தி தலைமை வகித்த காங்கிரஸ¤டன் அம்பேத்கார் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலமே. அப்போது காங்கிரஸ் ஒத்துக்கொண்ட விஷயங்கள் மூலமே. அதுமட்டுமே தாழ்த்தப்பட்டோர் உண்மையிலேயே ஈட்டிய வெற்றி. அந்த வெற்றியை அடைய தாழ்த்தப்பட்டோர் கையில் இருந்த ஆயுதம் அவர்கள் தரப்பில் இருந்த நியாயம். அதனை பிரம்மாண்டமான வரலாற்றுப்பிரக்ஞையுடன், வன்மையான சொற்களில் தீவிரமாக முன்வைத்த அம்பேத்கார் போன்ற ஒரு மாபெரும் அறிவுஜீவி. அத்துடன் மறுமுனையில் தன் மூளைக்குப் பதில் மனசாட்சியை வைத்து விவாதிக்க வந்த ஒரு மகத்தான தலைவன்.

அவனுடைய மனசாட்சியின் வல்லமையாலேயே இந்திய சமூகம் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை அவர்களின் உரிமைகளாக புரிந்துகொண்டது.இன்று இந்தியா காங்கிரஸ¤ம் காந்தியும் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகளை அவர்கள் எவ்வகையிலும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் யார் என்ன செய்திருக்க முடியும் என்ற எளிமையான கேள்வியை கேட்க முடியும். அவர்களுக்கிருந்த மாபெரும் மக்கள்செல்வாக்கை வைத்து அந்தக்கோரிக்கைகளை அப்படியே தூக்கி வீசியிருந்தால் ஒருபாராளுமன்றத்தேர்தலில் கூட ஜெயிக்கமுடியாத இவர்கள் என்ன செய்திருப்பார்கள்?

உலகின் எத்தனையோ நாடுகளில் அன்று அதுதான் நடந்தது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்துப் போராடி மிகப்பெரிய தியாகங்களின் விலையாகத்தான் சிறிய அளவிலேனும் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அரசியலதிகாரம் என்பது ஈவிரக்கமில்லா பேரங்கள் வழியாக இம்மி இம்மியாகவே அடையப்படுகிறது. ஆனால்  இந்தியாவில் நிகழ்ந்தது அதுவல்ல. இந்தியாவின் அதிகாரத்தை அடைந்த பெரும்பான்மையின் மனசாட்சியே தலித்துக்களுக்கான அதிகாரமாக ஆகியது. அந்த அப்பட்டமான வரலாற்று உண்மைமேல்தான் இந்தப் பொய்கள் மூலம் சாயம் பூசிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

காந்தி ஏன் இரட்டை வாக்குரிமையை எதிர்த்தார்?

இந்தியாவில் தனித்தொகுதி ஒதுக்கீடு என்பது புதியவிஷயமல்ல.  1909 லேயே மிண்டோ–மார்லி இந்திய அரசினர் சட்டம் [Government of India Act 1909] மூலம் இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும்  தனித்தொகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்திருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆதரவுள்ள அரசுகள் அமைத்த மாகாண அரசுகளில் பல கோணங்களில் தேவைக்கேற்ப இட ஒதுகீடுகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இந்த இட ஒதுக்கீடுகளின் அரசியல் என்பது அக்காலச் சூழலில் வைத்து பார்க்கும்போது மிகவும் சிக்கலான ஒன்று. இரு அடிப்படைகளிலேயே அந்த இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. தங்கள் ஆதிக்கத்துடன் ஒத்துப்போகும் வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சீக்கியர்கள் என்றுமே பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பின்புலச் சக்தியாக இருந்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல பிரிட்டனின் ராணுவத்திலும், ஆஸ்திரேலிய ராணுவத்திலும்கூட அவர்கள் பெரும்பங்காற்றினர். அதற்குப் பிரதியுபகாரமாக அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதேபோல் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடும் அம்மக்களின் உயர்மட்டத்தினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவிற்குப் பதிலாகவே வழங்கப்பட்டது. 1857ல் நடந்த சிப்பாய்க்கலவரத்தில் இஸ்லாமிய உயர்குடிகள் மற்றும் பத்தானியர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அனுசரணையாக இருந்து அந்தச் சலுகைகளை பெற்றார்கள். அவர்களை இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, அன்னியர்கள் என்று அடையாளாபப்டுத்தி தனித்தேசமாக கண்டு அந்தச் சலுகைகள் அளிக்கப்பட்டன.

அன்று தாழ்த்தப்பட்டோரின் சில அமைப்புகள் உட்பட ஏராளமான சிறிய சமூகக்குழுக்கள் தாங்களும் பிரிட்டனுக்கு விசுவாசமானவர்களே என்று அறிவித்து, காங்கிரஸ¤க்கு எதிரானவர்களாக நடந்துகொண்டு, பிரிட்டிஷார் அச்சலுகைகளை தங்களுக்கும் அளிக்கவேண்டும் என்று கோரிவந்தார்கள். அக்காலத்தில் நடைபெற்ற விவாதங்களை இன்று வாசிக்கும்போது மிகவும் ஆச்சரியமும் வருத்தமும் உருவாகும். ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் சமீப காலம் வரை வெள்ளையர் செய்துவந்த அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி மட்டுமே அது. அந்த எளிய தந்திரங்களைக்கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக நம்மவர் இருந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் செயல்பாடு பல படிகள் கொண்டது. முதலில், காங்கிரஸ் அமைப்பு உயர்சாதி அமைப்பு அல்லது இந்து அமைப்பு என்றும் அவர்கள் பிறருக்கு நியாயம் வழங்க மாட்டார்கள் என்றும் ஆங்கில அரசும் அதன் அறிவுஜீவிகளும் பிரச்சாரம் செய்வார்கள். அதன் பின்னர் ஒரு சமூகத்தில் பிரிட்டிஷ் அரசுக்குச் சாதகமான மனநிலை கொண்ட உயர்மட்டத் தலைவர்கள் சிலர்  தனிச்சமூகமாக தங்களை அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பார்கள். அதை ‘ஆழமாக’ப் பரிசீலனை செய்து ஆங்கில அரசு அதை அனுமதிக்கும். அதன்மூலம் அந்த உயர்மட்டத்தவருக்கு மட்டுமே ஏதேனும் லாபம் இருக்கும்.

அந்த இட ஒதுக்கீடு பெரும்பாலான நேரங்களில் பிற சாதியினரைச் சீண்டுவதாக, அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக இருக்கும். அதற்கு எதிராக அம்மக்கள் சினம் கொள்ளும்போது சமூகம் இரண்டாகப் பிரியும். பதற்றம் தொடர்ந்து நீடிக்கும். சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடுகள் மூலம் அம்மக்களின் பெரும்பாலாரான அடித்தளத்தினருக்கு எவ்வகையான உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையில் சிறு மாற்றம்கூட நிகழவில்லை. மாறாக அவர்களுக்கும் பிற வகுப்ப்¢னருக்கும் இடையே ஆறாத கசப்புகள் உருவாயின. அக்கசப்புகள் பல தளங்களில் தொட்டுத்தொட்டு வளர்ந்தன. அவற்றை சமரசம்செய்வது சாதாரணமான செயலாக இருக்கவில்லை.

உண்மையிலேயே அம்மக்களின் அடித்தட்டுக்கு ஏதேனும் நன்மை செய்யவிரும்பியிருந்தால் பிரிட்டிஷார் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்திருப்பார்கள். அதை அவர்கள் செய்யவில்லை. அதை செய்தது காங்கிரஸ். அக்காலத்திலேயே மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் பிரிவினைஅரசியலை இந்திய மனங்களில் கூர்ந்தவை கண்டுகொண்டிருக்கின்றன. ‘களங்கமுறும் மார்லிநடம்’ என்று பாரதி அதைப்பற்றிப் பாடினார். காந்தி பின்னர் பிரிட்டிஷார் உருவாக்கிய பிரிவினைகளை கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார்.

இந்திய அரசியலில் 1915 வாக்கில் நுழையும்போதே காந்தி முஸ்லீம் சமூகமும் சீக்கிய சமூகமும் இந்திய மையஓட்டத்தில் இருந்து பெருமளவுக்கு பிரிக்கப்பட்டுவிட்டன என்று உணர்ந்தார். குறிப்பாக 1908ல் மிண்டோ-மார்லி சீர்திருத்தம் குறித்த விவாதங்களில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து நடந்த பொதுவிவாதங்களை அக்கால இதழ்களில் இன்று வாசிக்கும்போது கசப்புகள் பொங்கிவழிவதையே காணமுடிகிறது.

அந்த மனக்கசப்பு என்பது ஒரு வரலாற்றுப் பூதத்தை புட்டியில் இருந்து வெளியே திறந்து விடுகிறது என்பதைக் கண்டார். இன்று  அந்த விவாதங்களை வாசிக்கையில் 1947 ன் ரத்த ஆறுக்கான விதை போடபப்ட்டுவிட்டது என்பதை தெள்ளத்தெளிவாகவே காணமுடிகிறது. காந்தி இந்திய அரசியலில் நுழைந்த 1918 லேயே இந்த விஷயத்தைப்பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசியிருக்கிறார். அவரது அரசியலின் முதல் செயல்திட்டமே இஸ்லாமியரை மைய ஓட்டத்துக்குக் கொண்டுவருவதாகவே இருந்தது.

சீக்கியர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் அதேபோல ஒரு வரலாற்றுப்பூதம் எழுப்பப்பட்டது. சீக்கியர் இந்தியாவில்  ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்குள்ளேயே தலித்துக்கள் உண்டு. அவர்கள் கீழ்நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் ஒட்டு மொத்த சீக்கியர்களையும் ஒரு தனி வகுப்பாக கண்டு இரட்டைவாக்குரிமை சலுகை அளித்தது பிரிட்டிஷ் அரசு. அவர்களின் தனியடையாளவிருப்பு எதிர்காலத்தில் ஒரு மாபெரும் பிளவாக ஆகும் என அது கணித்தது.

ஒரு தனி வகுப்பாக கணிக்கப்பட்டு சலுகை அளிக்கப்படும் சமூகம் அந்தச் சலுகைக்காகவே தன்னை தனியாகப் பிரித்துக்கொள்ளும். பிற சமூகங்களுடன் போராடும். அதன் விளைவாக உருவாகும் கசப்புகள் ஒருபோதும் மறையாது. சீக்கியர்களின் இந்த மனநிலையை ஒரு வரலாற்றுத்தொடராகவே இன்று பார்க்கலாம். அவர்கள் தங்களை சலுகைபெற்ற தனிக்குழுவாகவே  எப்போதும் உணர்ந்தார்கள், உணர்கிறார்கள் இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்ட முப்பது வருடங்களுக்குள் அவர்கள் தங்களை ஒரு தனித்தேசமாக உணர ஆரம்பித்துவிட்டார்கள்.1942லேயே காலிஸ்தான் கோஷம் ஆரம்பித்துவிட்டது.

இந்தியவிடுதலையின்போது சீக்கியரைக் கவர பல தனி வாக்குறுதிகளை அளித்தார் நேரு. அதனால் பிற சமூகங்கள் கசப்படைந்தன. அக்கசப்பின் விளைவாக உருவான பிளவு மீண்டும் மீண்டும் பல்வேறு அதிகாரப் பகிர்வுப்பிரச்சினைகளால் , வளப்பகிர்வுப்பிரச்சினைகளால் முற்றி பஞ்சாப் பிரச்சினை வரை வந்து குருதிகொப்பளிக்கச் செய்தது.

வகுப்புபேதங்களின் வெடிமருந்து புதைக்கப்பட்ட நிலம் இந்தியா. அதை காந்தி அளவுக்கு எவரேனும் உணர்ந்திருந்தார்களா என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் பிரிவினை நோக்குக்கு எதிரான சமரசம் குறித்து காந்தி பேசியது இதற்காகவே. மிண்டோ மார்லி இட ஒதுக்கீடுகள் மூலம் உருவான வகுப்புவாத மனக்கசப்பை வெல்லவே காந்தி 1920 ல் கிலா·பத் இயக்கத்தை ஆதரிக்க முற்பட்டார்.

காந்தி கிலா·பத் இயக்கம் மூலம் முஸ்லீம்களுடன் உருவான பேதங்களை சரிசெய்ய முயன்றார். சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்த இஸ்லாமிய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக உருவாகி வந்த ஒரு மக்களியக்கமாகவே அவர் கிலா·பத் இயக்கத்தைக் கண்டார். அதன்மூலம் அன்று வலுவாக உருத்திரண்டுவந்த மனக்கசப்பை வெற்றிகொள்ள முடியும் என எண்ணினார். அவரது முயற்சிகளுக்கு எதிராக காங்கிரஸில் இருந்த மனக்கசப்புகளை வெல்ல மாபெரும் உண்ணாவிரதத்தை நிகழ்த்தினார்.

காந்தியின் கனவு சாத்தியமாகவில்லை என்பதும் கிலா·பத் இயக்கம் மெல்ல மத அடிப்படைவாதிகள் கைக்குச் சென்று அழிவுசக்தியாக ஆகியது என்பது துயரமான வரலாறே. கிலா·பத் இயக்கம் தற்காலிகமாகத்தான் ஒரு இந்து முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்கியது. முஸ்லீம்களுக்கு தனி வாக்குரிமை அளித்து பிரித்து நாட்டுக்குள் ஒருநாடாக இயங்கச்செய்த வெள்ளையர் அதை இருநாடு கோரிக்கையாக ஆக்குவதில் வெற்றி பெற்றனர். 1930ல் ‘இந்தியா இருநாடு’ என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பிதது. பாகிஸ்தான் என்ற சொல் பிறந்துவிட்டது.

அந்த வரலாற்று பேரபாயத்துக்கு எதிராக காந்தி போராடிக்கொண்டிருந்த தருணத்தில்தான் 1932ல் மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டைவாக்குரிமை மூலம் தனிப்பிரதிநிதித்துவம் என்ற திட்டம் முன்வைக்கப்படுகிறது. இந்திய சமூகத்துடன் எந்த உறவும் இல்லாமல் அவர்கள் நாட்டுக்குள் ஒருநாடு போல ஓட்டுபோட்டு தங்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கலாம் என்று உரிமை அளிக்கப்பட்டது.

எந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பிளவையும் பேரழிவையும் உருவாக்கும் என்று காந்தி எண்ணினாரோ, எதற்கு எதிராக தன் நெடும்போராட்டத்தை மேற்கொண்டிருந்தாரோ, அதற்கு எதிராக அவர் தன் உயிரையே பணயம் வைத்துப் போராடியதில் என்ன தவறிருக்க முடியும்? அப்படி அவர் செய்யவில்லை என்றால்தான் அது மாபெரும் முரண்பாடு.

இன்று காந்தியைப்பற்றி சொல்லப்படும் ஓர் அவதூறு, அவர் இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்ட தனித்தொகுதிமுறையை ஆதரித்தார், தலித்துக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையை எதிர்த்தார் என்பது. அப்பட்டமான திரிபல்லாமல் வேறல்ல இது. காந்தி சொன்னது முஸ்லீம்களுயும் சீக்கியர்களும் அவர்களின் சொந்த மத அடையாளத்தால் தனித்தவர்களாக கருதப்படுகிறார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பிறர் அவர்களை இழிவுசெய்வதனால் அப்படி கருதப்படுகிறார்கள், அதை அப்படியே நீடிக்க விடலாமா என்றே

தீண்டப்படாதார் என்ற தனி வகுப்பாக பிரிப்பதை நான் விரும்பவில்லை. சீக்கியர் சீக்கியராக நிரந்தரமாக இருக்கலாம். அப்படி முஸ்லீம்களும் கிறித்தவர்களும் இருக்கலாம். தீண்டப்படாதோரும் அப்படியே தீண்டபப்டாதாராக எக்காலமும் நீடித்திருக்க வேண்டுமா என்ன? தீண்டாமை அப்படி நிரந்தரமாக இருக்கும் என்றால் இந்துமரபே அழியட்டும் என்றே நான் சொல்வேன்” என்று வட்டமேஜை மாநாட்டுக்கான உபகுழுவில் காந்தி பேசினார்.

விவேகத்தின் உச்சத்தில் நின்ற அரசியல்ஞானியின் வினா இது. தீண்டப்படாதவர்களை தனிச்சமூகமாக்கும்போது தீண்டப்படாதவர்களாக இருத்தல் என்பதே அரசியல் அடையாளம் ஆகிறது. தீண்டப்படாதவர்களாக இருக்கும்போது மட்டுமே உரிமைகளும் சலுகைகளும் உள்ளன. அப்படியானால் என்றாவது தீண்டாமை ஒழியுமா? தீண்டாமையையும் சாதி இழிவையும் ஒழிப்பதுதான் முக்கியமே ஒழிய அவர்களை அப்படியே வைத்திருந்து தீண்டாமைக்கு விலையாக அவர்களுக்குச் சலுகைகளை அளிப்பதல்ல என்றார் காந்தி.

இதைச் சொல்பவர்கள் காந்தி இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை எதிர்த்தார், அதற்கு எதிராகச் சதி செய்தார் என்று பாகிஸ்தானிய பாடபுத்தகங்களும் இந்திய இஸ்லாமிய  இதழ்களும் எழுதுவதற்குத்தான் பதில் சொல்லவேண்டும். சீக்கியர்களின் தனியுரைமையை காந்தி அழித்தார் என்று சொல்லும் அகாலிகளுக்குப் பதில் சொல்லவேண்டும்.

தாழ்த்தப்பட்டோருகு இரட்டை வாக்குரிமை அவர்களை இந்துக்களிடமிருந்து பிரிக்கும் என்ற நோக்கில் அதை ஆதரித்த, அதேசமயம் தங்கள் மதத்துக்குள் இருந்த தாழ்த்தபப்ட்ட சாதியினருக்கு  எந்த வித தனியுரிமையும் சலுகையும் [ இன்று வரை] அளிக்காத,  முஸ்லீம்லீகிடம் இது தான் உங்கள் தீர்க்கதரிசி கூறிய அடிப்படை அறமா என்று கேட்டார் காந்தி. [முஸ்லீம் சமூகத்திற்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இல்லை என்பவர்கள் அம்பேத்காரின் ஆதாரம் மிக்க கட்டுரைகளை புரட்டிபபர்க்கலாம்]

அதேதான் சீக்கியர்களிலும். முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்குச் செய்த சேவைகளின் கூலியாக, குறிப்பாக நியூசிலாந்தில் பழங்குடிகளை ஒடுக்குவதில் உதவியதற்குக் கைமாற்றாக, இரட்டை வாக்குரிமைச் சலுகையைப் பெற்ற சீக்கியர்கள் இன்றுவரை அவர்களுக்குள் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எளிய தனிச்சலுகைகளைக்கூட அனுமதித்ததில்லை. அது சமூகத்தை பிளக்கும் என்றார்கள். அதேசமயம் இந்துதலித்துக்கள் தனித்தேசம் என்று வாதிட்டார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட இரட்டை வாக்குரிமை மூலம் என்ன நடக்கிறது என்றால் அவர்கள் தனித்துவிடப்படுகிறார்கள். அவர்கள் பிரச்சினைகளில் பிறர் ஈடுபடும் வாய்ப்பு முற்றாகத்தவிர்க்கப்படுகிறது. அன்று ஒரு முஸ்லீம் இந்துவுக்கு வாக்களிக்க முடியாது, இந்து முஸ்லீமுக்கும் வாக்களிக்கமுடியாது. சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த பிரிட்டிஷ் அரசு கண்டுபிடித்த வழிமுறை அது. அதையே தாழ்த்தப்பட்டோருக்கும் அது பரிந்துரைத்தது. காந்தி அஞ்சியது அந்த பிரிவினைப்போக்கையே.

அந்த அடிப்படையிலேயே காந்தி இரட்டை வாக்குரிமையை எதிர்த்தார்.  வட்டமேஜை மாநாட்டுக்கு போவதற்கு முன்னர் காந்தி அம்பேத்காரையும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளையும் கண்டு பேசினார்.ஆனால் இக்காலகட்டத்தில் அம்பேத்காரின் நிலைபாடுகள் கடினமடைந்தபடியே சென்றன. இரட்டை வாக்குரிமையில் இருந்து இறங்க அவர் தயாராக இல்லை.

1932 ஆகஸ்ட் 17 அன்று பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டொனால்டின் வகுப்புவாரி அளிக்கை வந்தது.  கொடிய ஒடுக்குமுறைகளை காங்கிரஸ் சந்தித்த காலம் அது. அன்றிருந்த 24 மாகாணங்களில் மொத்தமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் 71. தாழ்த்தப்பட்டவர்கள் இரட்டை வாக்குகளை அளிக்கலாம். ஒரு வாக்கு பொதுவேட்பாளருக்கு இன்னொரு வாக்கு தாழ்த்தப்பட்ட வேட்பாளாருக்கு. ஆனால் சொத்தோ கல்வியோ உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

அப்போது மீண்டும் மீண்டும் பிரிட்டிஷ் பிரதம்ருக்கு காந்தி கடிதம்  எழுதினார் ” ஒடுக்கப்பட்டோர் கூடுதல் பிரதிநிதித்துவம் பெறுவதை நான் எதிர்க்கமாட்டேன்….அவர்கள் அரசியல் சாசனரீதியாக பிரிக்கப்படுவதை மட்டும்தான் நான் எதிர்க்கிறேன். உங்கள் முடிவு அரசியல் சாசனத்தில் ஏற்றப்படுமேயானால் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் தங்கள் ஒடுக்கப்பட்ட சகோதரர்களை மேம்படுத்த இந்து சீர்திருத்தவாதிகள் செய்து வரும் அற்புதமான பணியை தடுத்துவிடும் என்று நீங்கள் உணர்கிறீர்களா?”

அந்த யதார்த்தத்தைப் பற்றி எவருமே இங்கு பேசுவதில்லை. காந்தி அதைச் சொல்லும்போது இந்தியாவில் ராமகிருஷண மடம், ஆரியசமாஜத்தைச் சேர்ந்த பல ஆயிரம் தொண்டர்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். நாராயணகுருவின் இயக்கத்தைச்சேர்ந்த ஆயிரம் பேர் சேரிகளில் சேவைசெய்தனர், அவர்களில் அத்வைத மடம் சார்ந்து சென்னையில் பணீயாற்றிய நடராஜகுருவும் ஒருவர். அவர்கள் அனைவரையுமே அன்னியர்களாக ஆக்குகிறது அந்த இரட்டை வாக்குரிமை என்றார் காந்தி.

காந்தி அந்த பிளவுபடுத்தும் போக்குக்கு எதிராகவே உண்ணாவிரதம் இருந்தார். தான் தன்னை தாழ்த்தப்பட்டோரின் ஒருவராகவே உணர்கிறேன் என்று காந்தி எரவாடா சிறையில் இருந்து அரசாங்கத்துக்கு எழுதினார் ”சட்டச்சபைகளில் அவர்களது பிரதிந்தித்துவத்தை நான் எதிர்க்கவில்லை. அவர்களில் வயது வந்த ஆண் பெண் இருபாலரும் கல்வி மற்றும் சொத்துத் தகுதி இன்றியே வாக்காளர்களாக பதிவுசெய்யப்படவேண்டும். பிறருக்குக் கூட வாக்குரிமை கட்டுப்படுத்தப்படலாம். அவர்களுக்குக் கூடாது” என்று எழுதி ஆனால் இந்துக்களில் உள்ள ஒவ்வொரு சாதியும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒரே இடங்களில் வாழக்கூடியவர்கள் என்றும் பிரிவினை போக்கு பேராபத்தை விளைவிக்கும் என்றும் வாதாடினார்.

தன்னுடைய உண்ணாவிரதம் இந்து சமூகத்தை பிளக்கும் பிரிட்டிஷ் சூழ்ச்சிக்கு எதிரானது மட்டுமல்ல இந்துசமூகத்தின் ஆறிலொருபங்கு மக்களை தாழ்த்தப்பட்டோராக எண்ணும் தன் கட்சியைச்சேர்ந்த உயர்சாதியினருக்கும் கூடத்தான் என்று காந்தி அறிவித்தார். உண்ணாவிரதம் முடிந்தபின்  இரட்டை வாக்குரிமையை ரத்துசெய்துவிட்டதாக எண்ணி காங்கிரசார் தங்கள் கடமையில் இருந்து வழுவி தூஙகப்போய்விடக்கூடாது என்றும் அந்தக் கடமை தாழ்த்தப்பட்ட மகக்ளுடன் இணைந்து அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதே என்றும் சொன்னார்.

விளைவாகவே பூனா ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பூனா ஒப்பந்தம் அம்பேத்காரின் கோரிக்கைகள் அனைத்தையும் ஒத்துக்கொண்டது, காந்தியின் கோரிக்கை இந்துசமூகம் பிளவுபடலாகாது என்பது மட்டுமே. மெக்டொனால்டின் வகுப்புவாரி அளிக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்தது 71 இடங்கள். பூனா ஒப்பந்தம் அளித்தது 148 இடங்கள்.

அதன்பின் வெளியேவந்த காந்தி தன் ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்டோருக்கான பணிகளை அதற்கு முன்னரும் காங்கிரஸ் செய்துவந்தது. ஜமுனாலால் பஜாஜ் தலைமையில் அதற்கான கமிட்டியும் இருந்தது. காந்தியின் முதல் திட்டமாக இருந்தது தேச சுதந்திரமே. ஆனால் அந்த முதல் திட்டத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சேவையாக ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார்.

கடும் பொருளியல் மந்தம் நிலவிய சூழலில் எட்டு லட்ச ரூபாயை அவர் அதற்காக வசூல் செய்தார். ஹரிஜன சேரிகளில் மட்டும் ஏறத்தாழ முப்பதாயிரம் கதர்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்பப்ளிக்கப்பட்டது. கோயில்களையும் பொதுஇடங்களையும் தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்துவிடும் இயக்கங்கள் நாடெங்கும் தொடங்கின. இந்த மாற்றங்களை எதிர்ப்பியக்கங்களாக காந்தி நடத்தவில்லை. மாறாக இந்து சமூகத்தின் சுய சுத்தீகரிப்பு இயக்கமாகவே நடத்தினார்.

அம்பேத்காரின் தரப்பைச் சேர்ந்த ஒருவர் சற்றே சமநிலையுடன் காந்தியின் தரப்பையும் பார்த்தார் என்றால் அது எத்தனை பெரிய தீர்க்கதரிசனம் என்று தெரியும். சீக்கியர் என்றுமே இந்தியாவில் மதிக்கப்படும் சமூகம். இஸ்லாமியர்கள் மீது ஒரு வரலாற்றுக் கசப்பு இந்துக்கள் மத்தியில் இருந்தது என்றாலும் அவர்கள் இந்தியாவில் அஞ்சப்பட்டவர்களும்கூட. அவ்ர்கள் மீதான கசப்புகளே இந்திய சமூகத்தில் ஆபத்தான பிளவை உருவாக்கின

ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் அப்போது இந்திய சமூகத்தால் மதிக்கப்படவில்லை. வெறுத்து கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். மேலும் சீக்கியர்களையும் இஸ்லாமியர்களையும்போல தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியாவில் சில பகுதிகளில் பெரும்பான்மை கொண்டு வாழவில்லை. இந்திய சமூகத்திற்கு உள்ளே வாழ்ந்தார்கள் அவர்கள். அவர்களின் வாழ்க்கையும் பிற சாதியினரின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. அவர்கள் அதிகாரப்பகிர்வின் பூசல் மூலம் அன்னியப்படுத்தப்பட்டு கசப்புகளுக்கு ஆளாகியிருந்தால் அதன் விளைவுகள் சாதாரணமானவை அல்ல.எத்தனை முறை காந்தி அவருக்கே உரித்தான நாசுக்குடன் அதைச் சொல்கிறார் என்றுபாருங்கள்

அம்பேத்காரே அவரது கட்டுரைகளில் பல இடங்களில் சொல்வதுபோல இரட்டை வாக்குரிமைக்கு எதிராக இருந்தவர்கள் காங்கிரஸ¤ம் காந்தியும் மட்டுமல்ல. உண்மையிலேயே எதிர்த்தவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிக்குழுவினர், இஸ்லாமிய மேட்டிமைவாதிகள், சீக்கியர்கள் அனைவரும்தான். அத்தனைபேரையும் எதிர்த்து தான் இரட்டைவாக்குரிமையை அடைந்ததாக அம்பேதார் சொல்கிறார். தன் செல்வாக்கான ஆதரவாளர்களான அத்தனைபேரையும் பகைத்துக்கொண்டு அதை பிரிட்டிஷ் ஆதிக்க அரசு ஏன் வழங்கவேண்டும் என்ற வினாவே எஞ்சி நிற்கிறது.

ஆகவேதான் இன்னொரு பிளவுக்கும் கசப்புக்கும் இடம்தர முடியாது என்று காந்தி உறுதியாக இருந்தார். அப்படி நிகழுமென்றால் அது தன் மரணத்துக்குச் சமம் என எண்ணினார்.  அம்பேத்காருடன் அவர் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளிலும் பிற்பாடு நிகழ்ந்த உரையாடல்களிலும் காந்தி அதை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

அத்தனை எதிர்ப்புக்கும் உள்ளான அந்த சலுகைகளில் இரட்டைவாக்குரிமை என்ற பிளவுபடுத்தும் அம்சத்தை தவிர பிற அனைத்துக்கோரிக்கைகளையும் காங்கிரஸ் சார்பாக காந்தி ஏற்றுக்கொள்கிறார். அவ்வெதிர்ப்புகளை முழுக்க தன்னுடைய இணையற்ற மக்கள்செல்வாக்கைக்கொண்டே அவர் மழுங்கடித்து தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைப்போராட்டத்தின் பாதையை சுமுகமாக்கினார். சலுகைகள் பெறும் மக்கள் மேல் பிறருக்கு உருவாகும் கசப்புகளை காந்தி இல்லையேல் தடுத்திருக்க முடியுமா என்ன?

ஆகவேதான் தாழ்த்தப்பட்ட மக்களை இந்திய மையச் சமூகத்திற்குள்ளேயே நிறுத்திக்கொண்டு அவர்களுக்கான சலுகைகளை அவர்கள் அடையவேண்டும் என அவர் சொன்னார். தாழ்த்தப்பட்டோரால் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்லும் ஒரு தாழ்த்தப்பட்டவர்களின்பிரதிநிதி அந்த தொகுதியின் அனைத்து மக்களின் பிரதிநிதியாகச் செல்லட்டுமே என்றார். அதற்கான மனநிலைகளை உருவாக்க பிற சமூகத்தினரின் மனசாட்சியைத் தீண்டி அவர்களையும் அந்தப்போராட்டத்தில் ஈடுபடுத்த அவர் ஹரிஜன் இயக்கம் மூலம் முயன்றார். அவர் கண்முன்னால் கண்ட ஒரு மாபெரும் சமூகப் பிளவை தவிர்க்க அவர் கண்டடைந்த ஆகச்சிறந்த வழி அதுவே.

 

என்ன நடந்தது இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில்?

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்காரை பிரிட்டிஷார் திறம்பட பயன்படுத்திக்கொண்டு அதற்கு ஊதியமாகவே இரட்டை வாக்குரிமை என்ற போலிச்சலுகையை அளித்தார்கள் என்று ஏற்கனவே சொன்னேன். அந்த மாநாட்டின் விரிவான சித்திரத்தை இதுவரை பேசியவற்றின் வெளிச்சத்தில் விரிவாகவே பார்க்கவேண்டும்.

அந்த வட்டமேஜை மாநாட்டில் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவம் செய்பவராக, ஒரு மாபெரும் போராட்டத்துக்குப் பின்னர் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி சென்றிருந்தார். ஆனால் அந்த மாநாட்டுக்கு பிரிட்டிஷ் அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி அழைப்பதாகச் சொல்லி பல்வேறு சமூகங்களில் இருந்து பிரிட்டிஷ் அரசை ஆதரிப்பவர்களை அழைத்திருந்தது. அம்பேத்காரும் அவர்களில் ஒருவர்.

மிக மிக ஆச்சரியகரமான விஷயம் அந்த மாநாட்டில் பிரிட்டிஷாரை எதிர்த்துப்போராடிய அமைப்பைச்சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்தார், அவர்தான் காந்தி. பிற அத்தனைபேருமே பிரிட்டிஷாரை ஆதரித்தவர்கள். இந்தியாவின் இயல்பான ஆட்சியாளர்களாக பிரிட்டிஷாரைக் கண்டவர்கள். ஜின்னா உட்பட முஸ்லீம்லீக் பிரதிநிதிகள். இந்துமகாசபையின் பிரதிநிதியான டாக்டர் மூஞ்சே.சீக்கியப் பிரதிநிதியான சர்தார் உஜ்ஜல்சிங். மகாராஜாக்கள், திவான்கள்.

இதில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றுண்டு. இந்துமகாசபையின் ஆரம்பத்தலைவரான டாக்டர் மூஞ்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிதாமகர்களில் ஒருவரும்கூட. முதல் வட்டமேஜைமாநாட்டில் அவர் இந்துக்களின் பிரதிநிதியாக பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்டார். அவர் பிரிட்டிஷாருக்கு ஆதரவானவராக இருந்தார், காங்கிரஸ் எதிர்பாளர் என்பது மட்டுமே ஒரே காரணம். இரண்டாம் வட்டமேஜைமாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். உப்புசத்யாக்கிரகம் உட்பட எல்லா தேசிய போராட்டத்துக்கும் எதிர்நிலை எடுத்த அவர், மகாராஷ்டிரத்துக்கு வெளியெ பெயர்கூட தெரியாத அவர், இந்தியாவின் கோடானுகோடி இந்துக்களின் பிரதிநிதி எனப்பட்டார்.

அதாவது அம்பேத்கார் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதி . ஜின்னா முஸ்லீம்கலின் பிரதிநிதி. உஜ்ஜல்சிங் சீக்கியர் பித்திநிதி. மூஞ்சே இந்துக்களின் பிரதிநிதி. காந்தி? அவர் காங்கிரஸின்  பிரதிநிதி மட்டுமே. இதுதான் வட்டமேஜைமாநாட்டில் பிரிட்டிஷாரின் நிலைபாடு. வட்டமேஜைமாநாட்டில் டாக்டர் மூஞ்சேயும் அம்பேத்காரும் இணைந்தே காந்திக்கு எதிராகச் செயல்பட்டார்கள் ஒருவரை ஒருவர் ஆதரித்தார்கள். மாநாட்டின் விரிவான ஆவணப்பதிவை இன்று எவரும் ஆராயலாம். மேலும் பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ¤க்கு எதிரான அரசியலில் இந்துமகாசபையும் அம்பேத்காரும் ஒத்துப்போனார்கள், பேரம்பேசிக்கொண்டு சேர்ந்து செயல்பட்டார்கள்!அவையெல்லாமே வெளிபப்டையான வரலாறுகள்.

அந்த மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அம்பேத்கார் மட்டும் இரட்டை வாக்குரிமை கோரவில்லை. பார்ஸிகள், கூர்க்காக்கள் உட்பட எட்டு ‘தேசிய சிறுபான்மையின’ருக்கும் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்டதைப்போல தனிவாக்குரிமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அத்தனை பேரும் சூழ்ந்துகொண்டு காந்தியை தாக்கினார்கள் என்று பிரிட்டிஷ் நிருபர்கள் அன்று எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராகவே அங்கே அம்பேத்காரின் குரல் ஒலித்தது

அந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான சாதிகளைச்சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரதிநிதியான, இந்தியாவைவே இணைத்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவரான காந்தியின் குரலே ஒலிக்கவிடவில்லை. அவரது தரப்பை அவர் சொல்லவே முடியவில்லை. அவரது காங்கிரஸ் இந்தியாவை பிரதிநிதிகரிக்கவில்லை என்றும், தங்கள் சாதிகளையும் வகுப்புகளையும் பிரதிநிதிகரிப்பவர்கள் தாங்கள்தான் என்றும், அங்கே வந்திருந்தவர்கள் வாதாடினார்கள். அவர்களில் ஜின்னா தவிர எவருக்குமே எந்தவிதமான மக்களியக்கத்தின் பின்புலமும் இருக்கவில்லை. பிரிட்டிஷாரின் நல்லெண்ணம் மட்டுமே அவர்கள் அங்கே வருவதற்கான தகுதியை அளித்திருந்தது. அன்று, அம்பேத்காரும் அப்படிப்பட்டவராகவே இருந்தார்.

வட்டமேஜை மாநாட்டில் பெரும்பாலான நேரங்களில் காந்தி சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டு இருந்தார். அவர் தூங்குவதுபோலக்கூட தோன்றியது என லண்டன் டைம்ஸ் நிருபர் எழுதினார். மாநாட்டில் காந்தி திரும்பத்திரும்ப ஒன்றைச் சொனனர், கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரதிநிதியாக, ஒரு மாபெரும் மக்களியக்கத்தின் விளைவாக, தான் வந்திருப்பதை வலியுறுத்தினார். சாதிமதபேதமில்லாத அந்த இந்தியாவின் பிரதிநிதியாகிய தன் குரலையே இந்தியாவின் குரலாக ஏற்கவேண்டும் என்றார். அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடும் இந்திய தேசியத்தின் குரல் என்றார்.

அதற்கு மாறாக பிரிட்டிஷார் அழைத்து அங்கே அமரச்செய்திருக்கும் பிரதிநிதிகள் உண்மையில் இந்திய மக்களை ஜனநாயக அடிப்படையில் பிரதிநிநிதிகரிக்கவில்லை என்றார் காந்தி . அவர்கள் சமூகத்தின் உயர்மட்டத்தில் வாழ்பவர்கள். தங்கள் சமூகத்தின் ஏழைகளைக்கூட அவர்கள் பிரதிநிதிகரிக்கவில்லை. அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவை துண்டுபோடவேண்டாம் என்றார். இன்று எந்த நடுநிலையாளனும் உணரும் அந்த மாநாட்டின் அப்பட்டமான யதார்த்தம் அதுவே.

அதை காந்தி பிதற்றினார் என்றும், காழ்ப்பைக் கொட்டினார் என்றும் அம்பேத்கார் கசப்புடன் எழுதி வைத்திருக்கிறார். அதையே இன்றும் சிலர் சொல்கிறார்கள். ஜின்னாவும் ஆகாகானும் எந்த இஸ்லாமிய ஏழையின் பிரதிநிதிகள்? அவர்கள் இஸ்லாமியர்களுள் உள்ள எளிய, தாழ்த்தபட்டோரை பொருட்படுத்தியவர்களே அல்ல என்று அம்பேத்காரே பின்னர் எழுதியிருக்கிறார்.

வட்டமேஜைக்குழு சொன்னதுபோல தென்னக மக்களை ‘ரைட் ஆனரபில்’ சீனிவாச சாஸ்திரி பிரதிநிதிகரித்தாரா என்ன? மகாராஷ்டிரர்களை மூஞ்சே பிரதிநிதிகரித்தாரா? ஏதாவது ஒரு தேர்தலில் அடுத்த முப்பது வருடங்களிலாவது இவர்கள் சொல்லும்படியான ஏதேனும் மக்களாதவைப் பெற்றார்களா? ஏன், ஜின்னாவின் முஸ்லீம்லீக் ஒருமுறைகூட மொத்த பாகிஸ்தானிலும் ஒட்டுமொத்த பெரும்பான்மை பெற்றதில்லை என்ற எளிய உண்மையே வரலாற்றில் இருக்கிறது.

ஒரு மக்கள் அமைப்பு போராடி அதன் உரிமைகளுக்காக பேச்சுவார்த்தைமேஜையில் அமர்ந்திருக்கும்போது அந்த உரிமைகளைப் பங்குபோட வந்தவர்களின் குரலாகவே அவர்கள் அந்த மாநாட்டில் ஒலித்தார்கள். அதைத்தான் வருத்தத்துடன் காந்தி சுட்டிக்காட்டினார். இதுவே  வரலாற்று யதார்த்தம்.

காந்தி காட்டிய வழி

இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தி கடைசியாக கேட்ட எளிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. காந்தி ஏமாற்றத்துடன் திரும்பியதுமே பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டொனால்ட் வகுப்புவாரிஅளிக்கையை [communal award]அறிவித்தார். தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியாவின் சிறுபான்மை சமூகமாகவும் இந்துக்களோடு தொடர்பற்றவர்களாகவும் அது சொன்னது. அவர்களுக்கு இரட்டை வாக்குரிமையை அளித்தது

அன்று ஏற்கனவே இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்ட இஸ்லாமியரும் சீக்கியரும் மிகவிரைவிலேயே தனிநாடு கோரிக்கைக்கு வந்துசேர்ந்தார்கள். பலரும் அறியாத ஒன்று, 1945 லேயே காலிஸ்தான் கோரிக்கையும் உருவாகிவிட்டது என்பது. இவ்விரு ‘தேச’ உருவகங்களே இந்தியப்பிரிவினையின்போது ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ரத்த ஆற்றை ஓடவிட்டார்கள். காந்தியின் உண்ணாவிரதம் மூலம் வங்கத்தில் அமைதி திரும்பியபோதுகூட சீக்கியர் அவர் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை.

இதில் மேலும் திட்டவட்டமாகச் சொல்லவேண்டிய விஷயம் காந்தி உயர்சாதியின் பிரதிநிதியாக அப்போது இருந்தார் என்ற அப்பட்டமான பொய்யைப் பற்றித்தான். காங்கிரஸ் அன்று இந்தியாவின் பல்லாயிரம் சாதியைசேர்ந்த பலகோடி மக்களின் கட்சி.  இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள்‘தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த உரிமையைக்கண்டு தாழ்த்தப்பட்டவர்கள்மேல் கொண்ட காழ்ப்பால்’காந்தியுடன் இருந்தார்கள் என்று அம்பேத்காரே சொல்கிறார். ஏன், இந்திய தாழ்த்தப்பட்டவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அன்று காங்கிரஸ¤டனும் காந்தியுடனும்தான் இருந்தார்கள். இன்றும்கூட அப்படித்தான்.

மிக எளிமையாகவே இதைக் காணலாம். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்புகளில் மிகச்சிலவே அம்பேத்காருடன் இருந்தன. தமிழகத்தில் சில அமைப்புகளைக் குறிப்பாகச் சொல்லல்லாம். ஆனால் தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடிய சுவாமி சகஜானந்தா, சுவாமி ஆத்மானந்தா கேரளத்தின் அய்யன் காளி போன்ற எத்தனையோபேர் காந்தியின் காங்கிரஸ் சார்பாகவே இருந்தார்கள்.

ஆகவே தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என அம்பேத்கார் எவ்வாறு தன்னைச்சொல்லிக்கொண்டாரோ அதைவிட அதிகமாகவே காந்தி தன்னை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று சொல்லிக்கொள்ள முடியும். தன்னை தலைவராக ஏற்ற அந்த எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாகவும் காந்தி அம்பேத்காருடனான உரையாடலில் பேசுகிறார்.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை அங்கேயே நிற்காது என காந்தி அறிவார். மேலும் ஏழு கோரிக்கைகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கோரிக்கைமேஜைமேல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றான கூர்க்கா கோரிக்கை, பின்னர் வன்முறையை உருவாக்கியது என்றும் பார்க்கும்போது காந்தியின் தீர்க்கதரிசனம் வியப்பூட்டுகிறது. அவை ஏற்கப்பட்டிருந்தால் இந்தியாவின் மற்ற சாதிகள் சும்மா இருக்குமா என்ன? இந்தியாவில் அப்படியானால் எத்தனை தனி வாக்குரிமை இருக்கும்?

எண்ணிப்பாருங்கள், இன்றிருக்கும் தேர்தல் முறைக்குப் பதிலாக நாடார் நாடார்பிரதிநிதிகளையும் கவுண்டர்கள் கவுண்டர் பிரதிநிதிகளையும் தேர்வுசெய்யவேண்டுமென நீங்கள் சொல்வீர்களா என்ன? கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு சாதிகள் தங்கள் பிரதிநிதிகளை பிறருடன் சம்பந்தமில்லாமல் தாங்களே தேர்வுசெய்தால் எத்தனை பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வருவார்கள்? அவர்கள் கூடி எப்படி பிரதமரைத் தேர்வுசெய்வார்கள்?

சரி, அப்படியே சாதிக்கொரு தேர்தல் என்றாலும்கூட இந்திய சாதிகளைப்பற்றி தெரிந்தவர்கள் அதில் எத்தனை உபசாதிகளை, குலக்குழுக்களைக் காண்பார்கள். தேவருக்கு தனி இருக்கை என்றால் அதில் மறவருக்கும் கள்ளருக்கும் அகமுடையாருக்கும் பிறமலைக்கள்ளருக்கும் தனியாகப் பிரிப்பார்களா என்ன? என்ன வகையான ஜனநாயகம் அது? இந்தியாவின் எந்த ஒரு பிரிவினையும் ரத்த ஆறாக ஆகக்கூடும் என்னும்போது என்ன வகையான எதிர்காலத்தை அது நமக்கு அளிக்கவிருந்தது?

போகட்டும், இந்திய தலித்துக்களேகூட ஒரே சாதியா என்ன? இக்கணம் வரை பறையர்களும், பள்ளர்களும், சக்கிலியரும் சேர்ந்து அமர்ந்து பேசும்நிலை உருவாகவில்லையே. ஆக, வகுப்புவாரிபிரதிநிதித்துவம் பின்னர் சாதிவாரி பிரதிநிதித்துவமாகி, உபசாதி பிரதிநிதித்துவமாகி, உள்சண்டையாகி சீரழியும் ஒரு ஜனநாயகத்தையல்லவா நம்மில் சிலர் பிரிட்டிஷாரின் மகத்தான வாக்குறுதி என்று இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!

அனைத்துகும் அப்பால் ஒரு கேள்வி உள்ளது. இந்த வினாவை இன்றுவரை எவருமே விவாதித்ததாகத் தெரியவில்லை. பிரிட்டிஷார் அளித்த இந்த ‘சலுகை’கள் அனைத்துமே அவரகள் நேரடியாக ஆண்ட நிலப்பகுதிக்கு மட்டுமே.சம்ஸ்தானங்களில் இவை எதுவும் இதேவடிவில் அமலாக்கபப்டவில்லை. குறிப்பாக திருவிதாங்கூரையே எடுத்துக்கொள்வோம். இந்திய சம்ஸ்தானங்களில் மிக முற்போக்கானது என்று சொல்லபப்ட்ட திருவிதாங்கூர் மன்னருக்கான ஆலோசனைச் சபையில் தாழ்த்தபப்ட்டவர்களுக்கு சில நியமன இடங்களை அளிப்பதற்கு மட்டுமே ஒத்துக்கொண்டது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்துச்செல்லும்போது பிரிட்டிஷார் இந்திய சமஸ்தானங்களுக்குத்தான் சுதந்திரம் கொடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு சம்ஸ்தானத்துக்கு தனியாக போகவேன்டுமென விரும்பினால் அவ்வாறே செய்ய உரிமை உண்டு என்றார்கள்.  அந்த மன்னர்கள் எலலருமே பழைமையில் ஊறிய, சாதிவெறி கொண்ட, ஆசாரமான ஆட்சியாளர்கள் என்னும்போது அம்பேத்கார் ‘பெற்ற’ சலுகைகளுக்கு என்ன மதிப்பு இருந்திருக்க முடியும்?  அப்படியானால் பிரிட்டிஷாரின் சலுகைகளுக்குப் பின்னால் உள்ள நல்லெண்ணம் என்ன?

ஆனால் காந்தி பூனா ஒப்பந்தம் மூலம் அலித்த சலுகை அப்படிபப்ட்டதல்ல. முக்கால் நூற்றாண்டுக்குமேல் இன்றுவரை காங்கிரஸைக் அக்ட்டுபப்டுத்தும் வாக்குறுதி அது. இந்திய அரசியல் நிர்ணய சபை வயதுவந்தோர் வாக்குரிமை வழங்கியபோது பிரிட்டிஷார் வயதுவந்தோர் வாக்குரிமைக்குப் பதிலாக வழங்கிய எல்லா தேர்தல் சலுகைகலும் ரத்தாயின, ஆனால் காந்தி கொடுத்த வாக்குறுதி என்பதற்காக மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தேர்தல் சலுகைகல் நிலைநிறுத்தப்பட்டன. அச்சொல் அழியலாகாது என நேரு என்ணினார். அதை எதிர்த்த காங்கிரஸாரிடம் அது காந்தியின் வாக்கு என்று சொல்லி அதை நிலைநாட்டினார்.

எந்த ஒரு காழ்ப்பும் உடனடி வன்முறையாக வெடிக்கும் தன்மை கொண்டது இந்தியப்பெருநிலம். அதிக மக்கள்தொகையும் குறைவான வளங்களும் கொண்ட எந்த நாட்டிலும் இருக்கும் நிலைமைதான் இது. ஆனால் இந்திய சமூகத்தில் இஸ்லாமியர் மேல் நிகழ்ந்தது போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட சமூக வன்முறை என்பது தலித்துக்கள்மேல் நிகழவேயில்லை — எண்பதுகளில் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் வலுப்பெறும் வரை. அதற்குக் காரணம் காந்தியின் ஹரிஜன் இயக்கம் உருவாக்கிய கருத்துப்பதிவே.

பிளவுபடுத்தும் உரிமை அரசியலுக்குப் பதிலாக ஒன்றுபடுத்தும் ஜனநாயகத்தைக் கோரியதுதானா காந்திசெய்த மாபெரும் துரோகம்? ஆதிக்க அரசிடம் கெஞ்சிவாங்கும் சலுகைக்குப் பதிலாக சகசமூகத்தினரிடம் பேசிப் பெறும் உரிமையை அளித்ததுதானா காந்திசெய்த அநீதி? என்ன வகையான ஜனநாயக மனப்பான்மையில் இருந்து உதிக்கின்றன இந்த வரலாற்றுக் காழ்ப்புகள்?

காந்தி சொன்ன வழியே நவீன ஜனநாயகத்தின் வழி. அனைத்து மக்களுக்கும் குரல் இருக்கக்கூடிய அமைப்புள். ஒவ்வொரு அமைப்புக்குள்ளும் முரண்படும் தரப்புகள் நடுவே இணக்கமான முரணியக்கம். ஒவ்வொரு அமைப்புகள் நடுவேயும் இணக்கமான முரணியக்கம். வன்முறையும் அழிவும் தேவையில்லை என்றால் இதைத்தவிர வேறு வழியே இல்லை.

முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தின் பல்வேறு தரப்புப்பேச்சுகளும் சில தரவுகளும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. அன்றைய உணர்ச்சிகளை இன்று உணர்வதே கடினமானது. இது காங்கிரஸில் நடந்த எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். பகத்சிங் தூக்கு, சுபாஷ் சந்திர போஸின் வெளியேற்றம் என எத்தனையோ விஷயங்களில் இக்குழப்பம் நீடிக்கிறது.

இத்தகைய சூழலில் வரலாற்றுக்குள் இன்றைய உணர்ச்சிகளை செலுத்தாமல் அது அதிகாரசக்திகளின் முரணியக்கத்தால், உரிமைக்கோரிகைகளின் முரணியக்கத்தால் நிகழும் சிக்கலான ஒரு கூட்டு நகர்வு என்று புரிந்துகொள்ளும் ஆய்வாளனால் மட்டுமே ஏதேனும் ஓர் உண்மைக்குள் செல்லமுடியும். பூனா ஒப்பந்தம் குறித்த விஷயத்தில் மட்டும் பலருடைய தரப்புகளும் உணர்ச்சிகளும் பத்துவருடங்களுக்கு ஒருமுறை மாறியிருக்கின்றன.

இன்றைய அரசியல் தேவைக்காக கால யந்திரத்தில் புகுந்து நேற்றைய யதார்த்தத்தையும் நேற்றைய உணர்ச்சிகளையும் விருப்பப்படி மாற்றும் செயல் என்பது மிகமிக அபாயகரமானது. ஒரு தேசத்துக்கு  வரலாறு என வெறும் பரஸ்பர அவதூறுகள் மட்டுமே இருக்கும் என்றால் அந்த சமூகம் வெடிமருந்துமீது நின்றுகொண்டிருக்கிறது என்றே பொருள். அதை உருவாக்குவதைத்தான் காழ்ப்பையே சிந்திப்பதற்கான விசையாகக் கொண்ட நம் அறிவுஜீவிகள் செய்துவருகிறார்கள்.

தலித்துகளுக்குள் இருந்து வரலாற்றுரீதியாக, மனசாட்சியின் அடிப்படையில்  எண்ணிப்பார்க்கும் சிலராவது இனியேனும் வரவேண்டும். இந்திய தேசத்துக்குள் இஸ்லாமியர் போல சீக்கியர் போல ஒரு சமுகப் பிளவு நிகழாமல் தடுத்தமைக்காக ஒவ்வொரு இந்தியனும் காந்திக்குக் கடமைப்பட்டிருக்கிறார். வன்முறை இல்லாமல் தங்கள் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தந்தமைக்காக காந்திக்கு ஒவ்வொரு தலித்தும் சிறப்பாக கடமைப்பட்டிருக்கிறார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைக்ரியாவின் ‘தாவோ தே ஜிங்’
அடுத்த கட்டுரைஆஸ்துமா, ஒரு கடிதம்