காந்தியும் தலித் அரசியலும் 1

திருவாளர் செயமோகன் அவர்களே,

நீங்கள் காந்தியாரைப்பற்றி எழுதிய சப்பைக்கட்டுகளையும் மோடிமஸ்தான் வேலைகளையும் கவனித்து வருகிறேன். காந்தியார் இந்திய தலித்துக்களுக்கு இழைத்த அவமானத்தை வரலாறு குறித்து வைத்திருக்கிறது. இந்த பேராசான்,சட்டமாமேதை அம்பேத்கர் அவர்கள் விரிவாக பதிவுசெய்திருக்கிறார்கள். அதையெல்லாம் எந்த சக்தியாலும் மறைத்துவிட முடியாது.

காந்தியார் தலித்துக்களுக்குச் செய்த கொடுமைகள் என்னென்ன?  அவர் தலித் ஒற்றுமை உருவாகிவந்ததை சீரழித்து தலித்துக்கள் ஒருகுடைக்கீழ் ஒரே சக்தியாகத் திரள்வதை தடுத்தார். அவரது முயற்சி இல்லாவிட்டால் தலித்துக்கள் இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஆகியிருப்பார்கள். தலித் பிரச்சினைகளை அவர் திசை திருப்பினார்.

காந்தியார் தலித்துக்களுக்கு ஹரிஜனங்கள் என்ற கேவலமான பெயரைச் சூட்டினார். ஹரிஜனங்கள் என்றால் அப்பன் பெயர் தெரியாத கூட்டம் என்று பொருள். சாதி இந்துக்களின் கருணையில் தலித்துக்கள் வாழவேண்டும் என்றார் காந்தியார். தலித்துக்களுக்கு உரிமைகளை சாதி இந்துக்கள் கொடுத்தால்தான் உண்டு என்று சொன்னார்.

அம்பேத்கார் அவர்களின் முயற்சியினால் தலித்துக்களுக்கு தனித்தொகுதி முறைகொண்டுவரப்பட்டது. அது தலித்துக்கள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக மாறி அரசாங்கத்தில் செல்வாக்கு பெறுவதற்கு உதவியிருக்கும். அந்த முறை வந்திருந்தால் இன்று தலித்துக்கள் இருந்திருக்கக் கூடிய முறையே வேறு. அதை தன் உயிரைக்கொடுத்து போராடி காந்தியார் தடுத்தார். காந்தியார்  உண்ணாவிரதம் இருந்து  ஏழை தலித்துக்கள் மேல் வன்முறை உருவாகும் என்று மிரட்டியதனால் போராட்டத்தை கைவிட்டார் அண்ணல் அம்பேத்கார்.

காந்தியார் தலித்துக்களுக்குச் செய்தது எல்லாம் அவர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டிய சதிகளைத்தான். பார்ப்பன பனியா கூட்டுச்சதியின் ஒரு சிரித்த முகம்தான் காந்தியார். சாதிவெறிதான் அவருக்குத்தெரிந்த ஒரே கொள்கை.

இந்திய தலித்துக்கள் அண்ணல் அம்பேத்கார் வழி நின்று காந்தியாருக்கு எதிராகப் போராடினார்கள். நாளையும் போராடுவார்கள்

அன்பழகன் கந்தசாமி

*

 

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல்வேறு கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் கருத்துக்களை முன்வைக்கும் முறை எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்த்தியான வாதங்கள். நல்ல நடை. உங்கள் கதைகள் எனக்கு பிடிக்கும். உங்களிடம் நான் நேரடியாக விவாதிக்கவே விரும்புகிறேன்.

நான் துபாயில் பணியாற்றுகிறேன். தலித் சாதியைச் சேர்ந்தவன். மிகவும் கடுமையாக போராடி படித்து பொறியியலாளன் ஆகி இப்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன். எங்களுக்கெல்லாம் அம்பேத்கர்தான் தலைவரும் வழிகாட்டியும் ஆக இருக்கிறார். என்னுடைய முழுப்பேரே ராஜேந்திரன் அம்பேத்கர்தான்

அம்பேத்கர் காந்தியை சதிகாரன் என்றும் சூழ்ச்சிக்காரன் என்றும்தான் சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் சொல்லிய வரலாற்றின்படி காந்தி தலித்துக்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய ஒரு பெரிய உரிமையை உண்ணாவிரதம் மூலம் போராடி தடுத்தார். பூனா ஒப்பந்தம் தலித்துக்களுக்கு காந்தி இழைத்த துரோகம். இதற்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

ராஜேந்திரன்
[தமிழாக்கம்]

*

அன்புள்ள அன்பழகன், ராஜேந்திரன்,

உங்கள் குரல் வழக்கமாக எழும் ஒன்றுதான். இதே கேள்வியுடன் இருபத்தேழு கடிதங்கள் எனக்கு வந்துள்ளன.  எல்லாவற்றுக்குமாக ஒரே பதிலை அனுப்புகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக இக்குரல் அரசியல் நோக்குடன் வளர்த்தெடுக்கப்படுகிறது. பெரும் பிரச்சார வல்லமை கொண்ட இந்த அரசியல் கருத்துருவத்துடன் தனிக்குரலாக நின்று நான் வாதிட முடியாது. அத்துடன் பொதுவாக அரசியல் நம்பிக்கை என்பது ஒருவகை மத நம்பிக்கைதான். நம்பிக்கைகள் முதலில் முடிவெடுத்தபின் அதற்கான ஆதாரங்களைச் சேர்க்கின்றன. ஆகவே அவற்றை மாற்று ஆதாரங்களைக் கொண்டு தகர்க்க முடியாது. நம்பிக்கைகளுடன் வாதிடுவது வீண்

ஆனால் இந்தக்குரலுக்கு பதிலைச் சொல்லத்தெரியாத பொதுவான வாசகர்கள் பலர் உண்டு. ஏனென்றால் காந்திக்காக பேச மிகக் குறைவானவர்களே இன்று உள்ளனர். அவரை அதிகாரத்தின் முத்திரையாக ஆக்கியபின் காங்கிரஸ் கல்லாவில் அமர்ந்திருக்கிறது. உண்மையான காந்தியவாதிகள் சூழலியல் போன்ற சில துறைகளில் தங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்துகிறார்கள். வாதிடுவது காந்தியவாதிகளின் வழியும் அல்ல. ஆகவே இந்தச் சிறிய விளக்கம். இதில் பெரும்பகுதி மேலே படிப்பதற்கான குறிப்புகளே

இன்று ஒரு பொதுவாசகன் அம்பேத்கார்- காந்தி முரண்பாட்டைப்பற்றி வாசிக்கப்போனால் அவன் வாழ்நாளெல்லாம் வாசிக்கக் கூடிய நூல்கள் குவிந்து கிடப்பதைப் பார்க்கலாம். அவற்றின் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் பல்லாயிரம் ஆவணங்கள், மேற்கோள்கள் உள்ளன. பலநூறு கோட்பாடுகள். ஒன்றோடொன்று முரண்பட்டு மயிர்பிளக்கும் வாதகதிகள்.

ஒருவர் ஏற்கனவே தன் சாதி சார்ந்து, மதம் சார்ந்து ஒரு முடிவை எடுத்துவிட்டு இவற்றுக்குள் புகுந்தார் என்றால் பிரச்சினையில்லை. அவருக்கு உகந்த ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு அதன் தகவல்களை மனப்பாடம்செய்துகொண்டு மேலே பேசிக்கொண்டே செல்லலாம். அந்த தர்க்கங்களை தன் குரலாக சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் உண்மையைத்தேடும் ஒருவனுக்கு இந்நூல்களைக் கடந்துவருவதே சாத்தியமில்லை.

ஒரே வழிதான் உள்ளது. அவனுடைய சொந்த மனசாட்சியை நம்புவது. இனம், மதம், சாதிக்கு அப்பால் தன்னை ஒரு மனிதனாக நிறுத்திக்கொண்டு வாசிப்பது.ஆழ்மனம் உண்மையையே நாடும் இயல்புள்ளது, ஆகவே அது எளிதில் உண்மையை அடையாளம் காணும். அப்படி உண்மைபேசும் ஒருசில ஆய்வாளர்களின் வழியாக அச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்வது, அதில் இருந்து தன் சொந்த சிந்தனையால் மேலே சென்று சிந்திப்பது, அதுதான் சாத்தியமான வழி.

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன், உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவை நாம் எடுத்துக்கொண்டுவிட்டோம் என்றால் வரலாற்றை நமக்கான கோணத்தில் சித்தரித்துக்கொள்வது மிக மிக எளிது. தங்களுக்குப் பிடிக்காத வரலாற்று மனிதர்களின் நோக்கங்களை ஐயபப்டுவது, எங்கும் தங்களுக்கு எதிரான சதியை மட்டுமே காண்பது என்பது வரலாற்று ஆய்வின் மிகப்பெரிய படுகுழி. அதில் நாம் விழுந்தோம் என்றால் அந்தக் கோணத்திலேயே நமக்கு அனைத்துமே தெரியும். ஒரு செயலுக்கு ,சொல்லுக்கு உள்நோக்கம் கற்பிப்பது என்பது மிக மிக எளிய ஒரு செயல்.

ஆனால் நம் மறுதரப்பும் செய்யும் என்பதை நாம் உணரவேண்டும். அந்நிலையில் எந்த விவாதமும் சாத்தியமில்லாமல் இருபக்கமும் வாசல்களைச் சாத்திக்கொள்கிறோம். விவாதம் வழியாக தெளிந்து வரும் பொதுவரலாறு வெளிவராமலே போகிறது. தரப்புகள் மட்டுமே சூழலில் காணக்கிடைக்கின்றன. அது வரலாறே அல்ல. வழக்கம்போல அன்னியன் வந்து நம் வரலாறை எழுதுவது வரை நாம் காத்திருக்க நேர்கிறது.

என்னைப்பொறுத்தவரை நான் செய்தது இதுவே. நான் இந்த நூல்களின் கடலில் சிலவற்றையே வாசித்திருக்கிறேன். எனக்கு அரசியல் ஆவணங்களை நாள்கணக்காக மாதக்கணக்காக கூர்ந்து வாசிக்கும் வழக்கமோ அவற்றைக்கொண்டு நுண்ணிய வாதங்களை உருவாக்கும் ஆர்வமோ இருப்பதில்லை. நான் என் மனசாட்சியை, நீதியுணர்வை, உண்மைநாடும் தன்மையை நம்பியே என் கருத்துக்களை உருவாக்குகிறேன். அதையே பிறரும் செய்ய வலியுறுத்துவேன். ஆகவே அரசியல்வாதிகளிடம் எனக்கு விவாதம் இல்லை, இலக்கிய வாசகர்களிடமே நான் பேசுகிறேன்

இருபக்கமும் தாழிட்டுக்கொள்ளுதல்

இந்தத்தளத்தில் பரவலாக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு உதாரணமாக இரு நூல்களைச் சொல்வேன். இரு நண்பர்கள் உணர்ச்சிகரமான உத்வேகத்துடன் எனக்கு வாங்கி அனுப்பிய நூல்கள் அவை. ஒன்று காஞ்சா இளையா [Kancha Illiah] எழுதிய ‘நான் ஏன் இந்து இல்லை’  [Why I am Not a Hindu ] இன்னொன்று அருண் ஷ¥ரி [Arun Shourie]  எழுதிய ‘பொய்தெய்வங்களை வழிபடுதல்’  [Worshipping False Gods] இருபக்கத்து மட்டையடிகள் அவை.

முதல் நூலில் காஞ்சா இளையா காந்தியை தலித்துக்களை சிரித்துக்கொண்டே கழுத்தறுத்த உயர்சாதிச் சதிகாரனாக சித்தரிக்கிறார். அம்பேத்காரை அந்த வில்லனுக்கு எதிராகப் போராடிய தார்மீகப் போராட்டக்காரராக. இந்திய தேசிய காங்கிரஸை ஓர் உயர்சாதிக் கட்சி என்று முத்திரைகுத்தி ஒட்டு மொத்த இந்திய சுதந்திரப்போராட்டத்தையே ஒரு உயர்சாதி எழுச்சியாக சித்தரிக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸ் ஓர் சாதிவெறிகொண்ட அநீதியான அமைப்பு என்று சொல்லும் இளையா பிரிட்டிஷ் அரசை ஏழை தலித் மக்களை விடுவிக்கவந்த தார்மீக சக்தியாக அடையாளம் காண்கிறார்.

காஞ்சா இளையா அவரது நூலில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்சாதியினரே என்கிறார். உயர்சாதியினர் ஒருங்கு திரண்டு காங்கிரஸின் எல்லா நடவடிக்கைக¨ளையும் தீர்மானித்ததாகவும் அவர்களின் கைப்பாவையாகவும், வெளியே காட்டப்பட்ட முகமாகவும்தான் காந்தி இருந்தார் என்றும் சொல்கிறார். நவீன சாதியாதிக்க அமைப்பு ஒன்றை உருவாக்குவதே காந்தியின் ஒரே நோக்கம் என்று வாதிடுகிறார். காந்தி ஒரு தந்திரமான பனியா அன்றி வேறெவருமே அல்ல  என்கிறார் காஞ்சா இளையா.

இரண்டாம் நூலில் அருண் ஷ¥ரி இந்திய தேசிய எழுச்சியை ஒரு மாபெரும் அரசியல் கலாச்சாரப்புரட்சி என்று வரையறை செய்கிறார். அந்த சக்திக்கு எதிராக ஆங்கில அரசு உருவாக்கிய பிரிவினைச் சதிகளே முஸ்லீம்லீக்கும், அம்பேத்காரின் தலித் இயக்கமும் என்கிறார். அம்பேத்கார் இந்திய எழுச்சிக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவானவராகவும், ரகசியமாக பிரிட்டிஷ் அரசின் கையாளாகவும் பணியாற்றினார் என்கிறார்.அம்பேத்காரை இந்தியாவின் தலித் அமைப்புகளே நம்பியதில்லை பல கட்டுரைகளைக் காட்டி என்று வாதிடுகிறார்.

அம்பேத்காரின் ஆளுமையை மிக எதிர்மறையாகச் சித்தரிக்கும் இந்நூலில் அருண் ஷ¥ரி அம்பேத்காருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த ஏராளமான கடிதப்போக்குவரத்தை ஆதாரமாக பதிப்பித்திருக்கிறார். அம்பேத்கார் 1946 வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆதரித்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக காரணமாக அமைந்த போர்களில் பிரிட்டிஷாருக்கு நேரடியாக உதவிசெய்தவர்கள் தலித்துக்களே என்று சொல்லி, இனிமேலும் இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை ஒடுக்க தலித்துக்கள் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பார்கள் என்று வாக்குறுதி அளித்து, ஆகவே பிரிட்டிஷார் தலித்துக்களுக்கு ஆதரவாகவே இருக்கவேண்டும் என்று கடிதம் எழுதினார் அம்பேத்கார் என்று அக்கடிதங்களை மேற்கோள் காட்டுகிறார் ஷ¥ரி

மேலும் 1946ல் கடைசியாக இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் மனநிலையை பிரிட்டிஷார் அடைந்தபோது அவர்கள் தன்னைக் கைவிட்டுவிட்டதாக உணரும் அம்பேத்கார் பிரிட்டிஷார் அதிகாரக் கைமாற்றத்தை செய்யக்கூடாது என்று வாதிட்டார் என்று ஆதாரம் காட்டுகிறார் ஷ¥ரி.  இந்தியச்சுதந்திரப்போராட்டத்தில் பிரிட்டிஷாரின் சட்ட ஆலோசகராகவும், அவர்களின் ஆள்தூக்கிச் சட்டங்களையும் அடக்குமுறையையும் ஆதரிப்பவராகவும்  அம்பேத்கார் இருந்தார் என்கிறார். காந்தியின் போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்தபோது தன் கடுமையான எதிர்பிரச்சாரம் மூலம் அந்த இயக்கத்தை சிறுமைப்படுத்த முயன்றார் என்கிறார்.

ஆனால் இந்திய சுதந்திரத்துக்குப் பின் சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்ட வரைவிலும் அமைச்சகத்திலும் சேர எந்த தயக்கமும் இல்லாமல், எந்த விளக்கமும் இல்லாமல், அவர் முடிவெடுக்கிறார். 1946ல் தேர்தலில் பரிதாபகரமாக தோல்வியடைந்த அவரை காங்கிரஸ் அழைத்தபோது அவர் மறுக்கவில்லை. கடைசிவரை அவர் காங்கிரஸ¤டன் தான் இருந்தார். ஆகவே அம்பேத்கார் பதவிப்பசி கொண்ட ஒரு அரசியல்வாதி அல்லாமல் வேறு எவருமே இல்லை என்று வாதிடுகிறார்.

அம்பேத்கார் ஒருபோதும் அன்றைய இந்திய தலித்துக்களால் அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.  இந்தியா முழுக்க பயணம்செய்தவரோ தலித்துக்களின் நிலைமையை நேரில் அவதானித்தவரோ அல்ல அவர். அவரது அரசியல் செயல்பாடு மகாராஷ்டிரத்துக்கு வெளியே பரவவில்லை. அவர் கடைசியில் ஆரம்பித்த இயக்கம் அவர் இருக்கும்போதும், இறந்தபின்னும், இன்றும் இந்திய தலித்துக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அது அவரை ஆதரித்த பிரிட்டிஷார் இருந்த காலகட்டத்திலேயே தலித்துக்கள் நிறைந்த பிராந்திய சபைத்தேர்தல்களில்கூட  வெல்ல முடியவில்லை என்று சொல்கிறார் ஷ¥ரி.

இரட்டை உறுப்பினர் திட்டம் என்பது அம்பேத்காரை முன்னிறுத்தி காங்கிரஸின் அரசியல் செல்வாக்கைப்பிளக்க ஆங்கில அரசு முன்வைத்த திட்டம் என்றும், அதை காந்தி எதிர்த்தபோது அம்பேத்கார் கடுமையான பிடிவாதத்துக்குப் பின்னர் அவருக்கு மக்கள் ஆதரவே இல்லை என்று தெரிந்த பின்னர்தான் இறங்கி வந்தார் என்றும் ஷ¥ரி வாதிடுகிறார். அம்பேத்காருக்கு ஆதரவாக எங்கும் மக்கள் எழுச்சி இருக்கவில்லை என்றும் காந்தியையே தலித்துக்கள் தங்கள் தலைவராகக் கண்டார்கள் என்றும் சொல்கிறார்.

பூனா ஒப்பந்தம் என்றழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் காந்தியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தபின் தன் அதிகாரக்கனவுகள் முடக்கப்பட்டமையால் கடுப்பான அம்பேத்கார் மிகவும் தரமிறங்கி காந்தியை வசைபாடினார் என்றும் அரசியல் நாகரீகத்தின் எல்லைகளை தாண்டிசென்று காந்தியின் சாதியைச் சொல்லி இழிவுசெய்தார் என்றும் ஷ¥ரி சொல்கிறார்.

இதில் ஒரு சில சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. ஷ¥ரியின் நூலை எனக்கு பரிந்துரை செய்து அனுப்பியவர் ஒரு சிரியன் கிறித்தவ நண்பர்.ஷ¥ரியின் பக்கம் பக்கமான ஆவணங்கள் அவரை திருப்தி செய்திருந்தன. ஆனால் ஷ¥ரி கடைசிவரை அம்பேத்காரைப்பற்றி காந்தி என்ன நினைத்தார் என்ற கோணத்தை திறப்பதே இல்லை என்பதை நண்பர் சிந்திக்கவில்லை.

உண்மையில் காந்தி அம்பேத்காரை நேர்மையான ஆனால் உணர்ச்சிவசப்படுகிற ஒரு மக்கள் தலைவராகவும் முக்கியமான அரசியல் சமூக சிந்தனையாளராகவுமே எண்ணினார். அவர் தன்னை கடுமையாகத் தாக்கியபோது கூட உயர்சாதியினர் அவர் சாதிக்கு இழைத்த கொடுமைகளுக்காக அப்படி தாக்குவதற்கான தார்மீக அருகதை அவருக்கு உண்டு என்றுதான் சொன்னார். ஒருபோதும் அம்பேத்காரை காந்தி நிராகரிக்கவில்லை. ஆகவேதான் நேருவின் காங்கிரஸ் அவரை அழைத்து முதல் அரசில் பங்கெடுக்க வைத்தது.அதை ஷ¥ரி மறைத்துவிடுகிறார்.

காஞ்சா இளையாவின் நூலை அனுப்பியவர் ஒரு கேரள தலித் செயல்வீரர். அவருக்கு காஞ்சா இளையா ஒரு தலித் அல்ல என்ற தகவல் தெரிந்திருக்கவில்லை. வடநாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் தலித்துக்கள் மேல் செலுத்தும் அன்றாட வன்முறை குறித்து காஞ்சா இளையாவுக்கு சொல்வதற்கேதும் இல்லை என்பதும், எல்லாம் பிராமணச்சதி என்றும் ஆகவே தலித்துக்கள் பிற்படுத்தப்பட்டவர்களுடன் ஒத்துழைத்து அவர்களை அதிகாரத்தில் இருத்த உழைக்கவேண்டும் என்பதும்தான் அவரது நியாயங்கள் என்றும் தெரிந்திருக்கவில்லை.

அருண்ஷ¥ரி முன்வைக்கும் ஆவண ஆதாரங்களை அம்பேத்காரின் ஆதரவாளர்கள் ஆவணங்கள் அல்ல என்று மறுக்க முடியாது.  அவர்கள் மறுப்பதற்கான கோணம் ஒன்றே. அம்பேத்கார் பிரிட்டிஷாருடன் சமரசம்செய்யவும் ஒத்துப்போகவும் முற்பட்டது தலித் சமூகத்தினரின் நலனுக்காக மட்டுமே என்றும், அவரது சுயநலத்துக்காக அவர் பதவிகளை நாடவில்லை என்றும், பிரிட்டிஷ் ஆட்சியிலும் பின் காங்கிரஸ் ஆட்சியிலும் அவர் பதவியை நாடியது தன்னுடைய மக்களின் விடுதலைக்காகவே என்றும், உயர்சாதி ஆதரவாளரான அருண் ஷ¥ரி அம்பேத்காரின் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் அவரை பழிசாற்றுகிறார் என்றும் அவர்கள் வாதாடலாம். அதுவே உண்மையும் கூட.

ஆனால் இங்கே அம்பேத்காரை நியாயப்படுத்த அவரது நல்ல நோக்கங்களைத்தான் ஆதாரமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது ஆளுமையை நம்பினால் ஆதாரங்களை அதற்கேற்ப புரிந்துகொள்ளலாம். ஆனால் தங்கள் தலைவரைப்பற்றிப் பேசும்போது அவரது நல்ல நோக்கங்களை முன்வைத்து வாதாடுபவர்கள் காந்தியின் செயல்களை மதிப்பிடும்போது அந்த நல்ல நோக்கம் அவருக்கும் இருந்திருக்கும் என்று நம்புவதில்லை. அவரது நோக்கம் தீயதே என முன்னரே முடிவுக்கு வந்துவிட்டபின் அந்தக் கோணத்தில் காந்தியின் எல்லா செயல்களையும் மதிப்பிடுகிறார்கள்.

ஆக, பிரச்சினை தரவுகளில் இல்லை, உண்மை என்ன என்பதில் இல்லை, நம்பிக்கை வைக்க மறுப்பதில்தான் உள்ளது. அம்பேத்காரை உயர்சாதியினரில் அவரை எதிர்க்கும் சாராரும் காந்தியை தலித்துக்களில் அவரை எதிருக்கு சாராரும் எப்படி நோக்குகிறார்கள் என்பதிலேயே உள்ளது. காழ்ப்பில்தான் அந்த நோக்கின் சாராம்சம் உள்ளது.

ஒரு வரலாற்று மாணவன் இந்த அவநம்பிக்கைகளையும் காழ்ப்புகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. காழ்ப்பையே ஆற்றலாகக் கொண்டு இயங்கும் அரசியல் விமரிசகர்களின் கொள்கைகளை அவன் தன் சாதி ,மத, மொழிச் சார்புநிலை காரணமாக ஏற்றுக்கொண்டால் என்றால் காலப்போக்கில் தன் சொந்த சிந்தனைத்திறனையே மழுங்கடித்துக்கொண்டவன் ஆவான்.

அருண்ஷ¥ரியின் நூலை இந்திய இந்துத்துவர்கள் கொண்டாடுகிறார்கள். அதைப்பற்றி இணையதளங்களில் எழுதித்தள்ளுகிறார்கள். காஞ்சா இளையாவை மேலைநாட்டு பல்கலை கழகங்கள் கொண்டாடுகின்றன. கிறிஸ்தவ அமைப்புகளில் அவர் கௌரவிக்கபப்டுகிறார். நிதி பெறுகிறார்.அவர் மதிப்புமிக்க கருத்தரங்களுக்குச் சென்றபடியே இருக்கிறார். பெரும் பரிசுகளும் பட்டங்களும் அவருக்கு வந்துகொண்டே இருக்கின்றன.

இந்த இரு நூல்களும் எப்படிப்பட்டவை? இரண்டுமே காழ்ப்பு கொண்ட வரலாற்றுத் திரிபுகள் என்பதுதான் உண்மை.  ஆனால் ஒப்புநோக்க காஞ்சா இளையாவின் நூல் வெறும் காழ்ப்புகளை அப்படியே கொட்டுகையில் அருண் ஷ¥ரி தன் காழ்ப்புகளுக்கும் திரிபுகளுக்கும் விரிவான தகவலாதாரங்களை அளிக்கிறார். ஒரு பொதுவாசகன் ஷ¥ரியின் நூலால் பெரிதும் திருப்தி அடைய வாய்ப்பிருக்கிறது.ஆகவே அது இன்னும் ஆபத்தானது.

முரணியக்கத்தின் பாதை.

காந்தியையும் அம்பேத்காரையும் குறித்த நடுநிலையான, பக்குவமான அணுகுமுறையைக் கொண்ட இருவர் என் கவனத்துக்கு வந்திருக்கிறார்கள். ஒருவர் மறைந்த டாக்டர் டி.ஆர்.நாகராஜ். கன்னட தலித் — பண்டாயா இயக்கத்தின் சிந்தனையாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான நாகராஜ் காந்திக்கும் அம்பேத்காருக்குமான உறவை மிகவிரிவான தளத்தில் வைத்து ஒரு முரணியக்கமாக ஆராய்ந்திருக்கிறார். இந்திய எழுத்தாளர்களில் அவரே இவ்வகையில் முன்னோடி. நாகராஜின் ‘எரியும் பாதங்கள்– இந்திய தலித் இயக்கம் குறித்த ஓர் ஆய்வு’ [The flaming feet: A study of the dalit movement in India by D.R.Nagaraj ] என்ற நூல் முக்கியமானது.

நாகராஜை நான் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறேன். அவரை நான் எடுத்த பேட்டி ஒன்று காலச்சுவடு இதழில் 1995ல் வெளியாகியிருக்கிறது. கேரள நண்பர் ஒருவர் ராமச்சந்திர குகாவின் காந்தி குறித்த கட்டுரைகளை தொகுத்து அனுப்பியிருந்தார்.  பெங்களூரைச் சேர்ந்த அரசியல்-சமூகவியல் ஆய்வாளரான ராமச்சந்திர குகா இன்று  இந்திய அளவில் பெரிதும் கவனிக்கப்படும் சிந்தனையாளர். ஒப்புநோக்க என் கருத்துக்களுடன் மிக நெருக்கமாக வருகிறார் என்று குகாவை எண்ணிக்கொண்டேன். தமிழில் ராமச்சந்திர குகாவின் ‘காந்திக்குப் பின் இந்திய வரலாறு’ என்றநூல் மொழியாக்கம் செய்யபப்ட்டு வந்துள்ளது [கிழக்கு பதிப்பகம்]

ராமச்சந்திர குகா

குகாவின் இந்த வரிகளை பொன்மொழிபோலவே சொல்ல விரும்புகிறேன். திரைக்கதை எழுத்தாளருக்கும் ஐதீகம் சமைப்பவருக்கும் வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். வரலாற்றாசிரியனுக்கு அத்தகைய கட்டுப்பாடுகளேதும் இல்லை. தலித் சுதந்திரப்போராட்ட வரலாறென்பது இன்னமும் முடிவடையாததும் பெரும்பாலான பகுதிகள் இன்னும் எழுதப்படாததுமான ஒன்றே. ஒன்றுக்கும் மேல் கதாநாயகர்களுக்கு அதில் இடமுள்ளது. அம்பேத்காரும் காந்தியும் மிகச்சிறப்பான தொடக்கமாக அமைவார்கள்” [ Ramachandra Guha : An Anthropologist Among The Marxists And Other Essays]

‘கதாநாயகன் X வில்லன்’ என்ற வணிகசினிமா மனநிலையில் நின்று இதை அணுகும் இரு தரப்புக்கும் என்னிடம் சொல்ல ஏதுமில்லை. நான் பேசவிரும்பும் முன்னிலை  என்பது வரலாற்றை பல்வேறு கருத்துக்களின், பல்வேறு சக்திகளின் முரணியக்கமாக அணுகும் நவீன மனங்களிடம் மட்டுமே. அவர்கள் மட்டுமே சிந்திக்கும் தகுதி படைத்தவர்கள். பிறர் என்ன தலையணைகளை எழுதி அடுக்கினாலும் அரசியல் பெருங்கூட்டங்களில் அமர்ந்து கோஷம்போடவே லாயக்கானவர்கள்

[மேலும்]

முந்தைய கட்டுரைகலாப்ரியா கருத்தரங்கம்
அடுத்த கட்டுரைவிக்கி- கடிதம்