ஊட்டி கவிதையரங்கம்:பி.ராமன்

முதல் அமர்வில் பி.ராமனின் கவிதைகளைப்பற்றிய விவாதம் ஆரம்பித்தது. பி.ராமன் தன் முதல் கவிதை ‘வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு’  இருமுறை வாசித்தார். தொடர்ந்து அதன் தமிழாக்கத்தை சுகுமாரன்,யுவன் சந்திரசேகர் ஆகியோர் வாசித்தார்கள். தொடர்ந்து நிகழ்ந்த விவாதங்களை ஜெயமோகன் இருமொழிகளிலும் மாறி மாறி மொழியாக்கம் செய்தார்.[கவிதைகளை இணைப்பில் காண்க http://jeyamohan.in/?p=409 ]

முதலில் யுவன் அக்கவிதை எளிமையாக இருந்தாலும் அதை புரிந்துகொள்வதில் தனக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன என்று சொன்னார். ‘வாசகர்கள் இல்லாத கவிஞன்- என்ற தலைப்பு முதலில் வேறு வாசிப்புகளை நோக்கி திருப்பி விட்டுவிடுகிறது. அதன் வழியாக வரும்போது ‘என் மக்கள்’ என்று குறிப்பிடப்படும் வாசகர்கள் தன் கவிதையைவிட்டு ‘வெளியே’ சென்றுவிடுவதை எப்படி புரிந்துகொள்வதென தெரியவில்லை. கவிதையை கடந்து செல்வது என்பது எப்போதும் சிறந்த பொருளிலேயே நம்மால் சொல்லப்பட்டுள்ளது. இங்கே அது எதிர்மறைப்பொருள் அளிக்கும் விதமாகப் பேசப்படுகிறது. அம்மக்கள் கவிதையை எப்படிக் கடந்துசென்றார்கள்? உதாசீனம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் அதனுள்தானே இருக்கிறார்கள்’ என்றார்.

ஜெயமோகன் இக்கவிதையின் சாரத்தை இவ்வாறு சொல்லலாம். ஒரு மொழியினர் தங்கள் மொழியையே வாசிக்கவில்லை என்றாலும் அந்த மக்களைப்பற்றித்தான் அம்மொழியில் எழுதப்பட முடியும். கவிதை அதைப்புறக்கணிக்கும் மக்களைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது. மேலதிக நுண்வாசிப்புகள் அனைத்துமே இந்த வரியிலிருந்துதான் நீட்சி பெற முடியும் என்றார்.

யுவன், ‘அது கவிதையிலிருந்து எளிதாகவே பெறக்கூடிய வாசிப்புதான். என் மனம் அம்மக்கள் எங்கே வெளியேறுகிறார்கள் என்று கவிதை சொல்கிறது என்பதிலேயே தங்கி நிற்கிறது. அதை வாசிப்பதற்கான படைப்பு சார்ந்த குறிப்பு எதுவும் இக்கவிதைக்குள் அளிக்கப்படவில்லை’ என்றார். ‘அம்மக்கள் கவிதைக்குள் அடைபட்டிருக்கிறார்கள் என்றால், கவிதையிலிருந்து வெளியேறத் துடிக்கிறார்கள் என்றால் அதைப்புரிந்துகொள்ள முடிகிறது’ என்றார்.

க.மோகனரங்கன் ‘இக்கவிதையில் இரு நுண்ணிய குறிப்புகள் உள்ளன. ஒன்று வெளியே மக்கள் மொழியை உதறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது. உள்ளே மக்கள் கவிதையை உதறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதுவே இக்கவிதையின் முரண்பாடாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள்,எல்லைகள் இல்லாதவர்கள்,எங்கள் காலடிபட்டு சுயநிறைவடைந்தது உன் கவிதை’ என்றவரியில் உள்ளது மென்மையான பகடிதான்’ என்றார். ‘அவர்கள் வெளியேறிச் சென்று சேரப்போகும்  ‘சுதந்திர இடம்’ பற்றிய பகடியே இக்கவிதையின் சாரம்’ என்றார்.

யுவன், ‘அந்த பகடி இயல்பாக வெளிப்படவில்லை இக்கவிதையில். அதை கவிஞரும் அறிவார்.ஆகவேதான் அவர் அதை கனவாக மாற்றுகிறார். பொதுவாக ‘..என்று கனவுகண்டேன்’ என்பது போல முடியும் கவிதைகள் தங்கள் தளங்களை பெரிதும் இழந்துவிடுகின்றன’ என்றார்.

ராஜ சுந்தரராஜன் ,’இக்கவிதையில் இரு சொற்களை நான் கவனமான வாசிப்புக்கு உட்படுத்துவேன் என்றார்.’மொழி’ முதல் சொல். அதை உதறிச் செல்கிறார்கள். அதன் சாரமாக உள்ள கவிதையிலிருந்து வெளியேறுகிறார்கள் .அடுத்த சொல் ‘இரைச்சல்’. மொழி இரைச்சலாக ஆகி அழியும் ஒரு தருணத்தின் சித்திரமே இக்கவிதை’ என்றார்.

பி.ராமன் இக்கவிதைக்கு தன்னைப்பொறுத்தவரை ஒரு சந்தர்ப்ப முக்கியத்துவம் உண்டு. கேரள அரசு இனிமேல் இரண்டாம் மொழி என்று ஒன்றை கற்பிக்க வேண்டியதில்லை, பதிலுக்கு அந்நேரத்தை தொழிற்கல்விக்கு அளிக்கலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. அதற்கு எதிரான கிளர்ச்சியில் மலையாள ஆர்வலர்கள் ஈடுபட்டார்கள். அந்த தருணத்தை ஒட்டி எழுதப்பட்ட வரிகள் இவை என்றார்.

வீரான்குட்டி ‘மொழியில் இருந்து வெளியேறுவது என்பது ஒரு மக்கள்கூட்டம் தங்கள் மரபு பண்பாடு வரலாறு அனைத்திலிருந்தும் வெளியேறுவதாகும். அந்த வெளியேற்றத்தின் கீழ்த்தரமான சுதந்திரத்தை விமரிசிக்கும் ஆக்கம் இது’ என்றார். கல்பற்றா நாராயணன், ‘ஆனால் யுவன் சொன்னதுபோல இதன் கனவு உத்தி இதை பலமிழக்கச்செய்கிறது என்பது ஓர் உண்மையே’ என்றார்.

அடுத்த கவிதை ‘மொழியும் குழந்தையும்’. பி.ராமன் சமீபமாக அப்பா ஆகியிருப்பதன் விளைவு அக்கவிதை என்றார் கல்பற்றா நாராயணன். குழந்தைக்கும் மொழிக்கும் இடையேயான உறவைச் சொல்ல முயலும்போது எப்படியும் கவித்துவம் நிகழ்ந்துவிடும் என்றார் ராஜ சுந்தரராஜன். இக்கவிதையிலும் தனக்கு சில நெருடல்கள் உள்ளன என்றார் யுவன்.’…உன் கரையில் முடிவிலாது இருக்கும் என்றால் அல்லது முடிவிலியை நினைவூட்டும்படியாவது இருக்கும் என்றால்’ என்ற வரிகளில் நேரடியாக தத்துவ விசாரம்செய்யும் ஒரு மனம் வந்து பேச ஆரம்பிக்கிறது. இத்தகைய கவிதைகளுக்கு இருக்கக் கூடிய புன்னகை ஒளிரும் ஆன்மிகத்தன்மையை இவ்வரிகள் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.

ஜெயமோகன், ‘மூலத்தில் ‘தீரம்’ என்ற சொல்லை[கரை] ராமன் கையாண்டிருக்கிறார். அது தேய்வழக்காகவே ஆகிவிட்டிருக்கிறது. உனது கரை என்பது கிட்டத்தட்ட மலையாள திரைப்படப்பாடல் சார்ந்த சொல்லாட்சி. கவிதையை பெருமளவுக்கு அது குறைக்கிறது ‘ என்றார்.

‘அப்படி அல்ல’ என்றார் பி.பி.ராமசந்திரன். ‘ஒரு குழந்தையின் கடற்கரை என்பதில் கண்டிப்பாக ஆழமான பொருள் உள்ளது. மொழியின் கடற்கரையில் ஒரு குழந்தை இருக்கும் சித்திரம் உள்ளது ‘என்றார். ஜெயமோகன் தான் சொல்வது அந்த மனச்சித்திரம் உருவாக அச்சொல் அளிக்கும் தடையைப்பற்றியே என்றார்.

‘ஒரு குழந்தை மொழியின் கரையில் தற்செயலாக அல்லது ஏதோ விதியால் பொறுக்கி எடுத்த சொற்கள் ஒருவேளை அதன் வாழ்க்கையில் ஆழ்ந்த பொருள் உள்ளனவா என்று எண்ணும் ஒரு மனம் இக்கவிதையில் உள்ளது என்றார் செபாஸ்டின். தேவதச்சன் அந்த அளவில் அக்கவிதை நன்றாகவே உள்ளது’ என்றார். ‘ஆனால் அச்சொற்களை குறித்து வைக்கிறேன் என கவிதை சாதாரணமாக முடிந்துவிட்டது.  அச்சொற்களுக்கும் அவற்றைக் குறிப்பவனுக்குமான உறவு கவிதையை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கும்’ என்றார் கல்பற்றா நாராயணன்.

‘ஒரு கவிஞனின் நீண்ட மௌனம்’ கவிதை பற்றிய விவாதத்தில் பி.ராமனின் தனிப்பட்ட இடைவெளி பற்றிய விவாதம் மீண்டும் எழுந்தது. தேவதச்சன். ‘இதில் கவிஞர் தன் மௌனத்துக்கான காரணத்தை சொல்லிப்பார்க்கிறார்’ என்றார். ‘சொல்லும்போது கண்டடையப்படும் காரணங்கள் இவை. மௌனம் அதற்க்கு அப்பாற்பட்டது.’

யுவன் ‘ஒரு தாளைப் புரட்டுவது போல ஒரு மனிதக் கூட்டத்தை விட்டு நான் விலகி, பிறகு அதைப்பற்றி எழுதினால்-ஒரு மனிதக்கூட்டத்தைப் பிரிந்து செல்லும் இதயத்துடன் மனிதர்கள் அந்த தாளைப் புரட்டினால்’ என்ற சொலலட்சியில் தேவையில்லாத குழப்பம் உள்ளது’ என்றார்.

‘ஒரு மனிதக் கூட்டத்தை விட்டு விலகுவது எனக்கு ஒரு தாளைப்புரட்டுவது- ஒரு தாளைப்புரட்டுவது அதன் வாசகர்களுக்கு ஒரு மனிதக்கூட்டத்தை விட்டு விலகுவது- என்ற எதிரீட்டிலேயே கவிஞர் தன் சிக்கலை முன்வைக்கிறார். எளிதாக நான் விலகிச் செல்கிறேன், ஆனால் பிறருக்கு அதன் மொத்த துயரையும் தந்துவிடுகிறேன், ஆகவே எழுதவில்லை என்று அதை வாசிக்கலாம்’ என்றார் ஜெயமோகன். ‘ஆனால் அந்த சொல்லாட்சி நுண்ணிய தத்துவவெளிப்பாட்டுக்கு உரியதான பாவனையில் எளிமையான ஒரு விஷயத்தைச் சொல்வதாக உள்ளதே தன் நோக்கில் தெரியும் சிக்கல்’ என்றார் யுவன்.

க.மோகனரங்கன் ‘நதி தன் போக்கில் சென்றபடியே இருக்கிறது. படித்துறைகளில் காலம்தோறும் ஏராளமான மனிதர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். அவர்களுக்கு நதி ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக தோற்றம் அளித்தபடியே இருக்கிறது. தன்னை கவனிக்கும் வாசகருலகில் இருந்து விலகிச் செல்வதைப்பற்றிய கவிஞனின் இவ்வரிகள் அழகானவை’ என்றார்.

ராஜ.சுந்தர ராஜன்  ‘நதி இலக்கற்று செல்வதில்லை, கடல் என்ற இலக்கு அதற்கு உள்ளது. மேலும் விலகிச் செல்வதென்பது அதனால் மீற முடியாத விதியும் கூட. இவ்விரு விஷயங்களையும் கணக்கில் கொண்டாகவேண்டும்’ என்றார்.

தேவதச்சன்’அந்தக் கடைசிப் படிமம் ஒரு செவ்வியல்தன்மை கொண்டது. புராதனமான, எப்போதுமுள்ள சித்திரம் அது. அந்த செவ்வியல்தன்மையுடன் முதலில் உள்ள நவீனத்தன்மை கொண்ட வரிகள் இணைவதில்லை. நதி விலகிச் செல்வதில் உள்ளது இயற்கையின் விதி. அது தனிப்பட்ட சோகமல்ல’ என்றார்.

‘இப்போதும் உயிர்’ கவிதை ராமன் எழுதிய பிற கவிதைகளில் உள்ள சிக்கலையே பேசுகிறது என்பதை பி.பி.ராமசந்திரன் நினைவுகூர்ந்தார். ‘ஒரு தடையை விட்டு உதறிக் கொண்டு விடுபடுதலுக்கான துடிப்பு இவற்றில் உள்ளது’ என்றார். ஜெயமோகன் ‘மூன்று தனிப்படிமங்கள் இக்கவிதையில் உள்ளன.காற்று மரத்தை உலுக்குகிறது, மரம் உயிர் கொள்கிறது. பேனா உதறப்படுகிறது, அதுவும் உயிர் கொள்கிறது. மனித உடல் மூச்சுக்கு உதறுகிறது, உயிர் பிரியாமல்,பிரியக்கூடும் என்ற நிலையில் நீடிக்கிறது’ இதுவே கவிதையின் சுருக்கமான வடிவம். இதிலிருந்தே மேலதிக வாசிப்பை நிகழ்த்த முடியும்’ என்றார்.

க.மோகனரங்கன் ‘இம்மூன்று படிமங்களில் முதலிரண்டிலும் வெளியே இருந்து அந்த உலுக்கல் வருகிறது. மூன்றாவது படிமத்தில் அது உள்ளிருந்தே நிகழ்கிறது என்பதை கவனிக்கலாம்’ என்றார்.’வேறெதுவும் நிகழாமல் நள்ளிரவாகிறது என்றவரியில் உள்ள நீடித்த வதை இக்கவிதையை வலிமையானதாக ஆக்குகிறது’ என்றார் சுகுமாரன்.

‘ஒரு தருணத்தை படிமம் மூலம் தொடக்கூடிய முயற்சி என்ற வகையில் நன்றாக இருக்கிறது என்பதற்கு அப்பால் இக்கவிதைபற்றி சொல்வதற்கு இல்லை’ என்றார் யுவன். கல்பற்றா நாராயணன்,’ படிமங்கள் வழியாக மேலதிக விவேகம் அல்லது ஞானம் ஒன்று வெளிப்பட்டிருக்க்கும் வாய்ப்புள்ள இக்கவிதை முழுமைபெறவில்லை ‘என்றார். தேவதச்சன்.’ மூன்று படிமங்களும் ஒரே இரவின் ஒரே கணத்தின் மூன்று முகங்கள் என எடுத்துக் கொண்டால் இதை ஒரு அழகிய கவிதையாக எண்ணமுடியும்’ என்றார்.

‘இமையம்’ பி.ராமனின் ஐந்தாவது கவிதை. இதன் சந்தர்ப்பம் குறித்து பி.பி.ராமசந்திரன் சொன்னார்.’கேரளத்தில் உள்ள கவிஞர்கள் பலர் தொடர்ச்சியாக இமையமலைக்குப் போய்விட்டு வந்த பின்னணியில் இது எழுதப்பட்டிருக்கிறது. இக்கவிதையில் உள்ள  அந்த நேரடியான குறிப்பு கவிதையை பலமடங்கு கீழிறக்குகிறது’ என்றார்.

யுவன் அதை ஏற்றுக் கொண்டு கவிதையின் முதலிரு பத்திகள் இக்கவிதையின் அனுபவத்துக்கு எவ்வகையிலும் பங்களிப்பு ஆற்றுவதில்லை என்றார். ஆனால் இரண்டு இறுதிப்படிமங்கள் இக்கவிதையை வலிமையான அனுபவமாக ஆக்குகின்றன. இமையத்தை தாங்கி நிற்கும் இரு வெட்டுண்ட கால்கள். இமையமுடிகளையே வலியின் முத்திரையாக ஆக்கிய அந்த வெட்டுண்ட கைகள். ‘அந்தக் கைமுத்திரைகளுடன்
ஏகாந்தமான இமயத்தின் சரிவுகள் நெடுங்காலத்துக்குப் பின் சற்றே ஒளிவிட்டன’ என்ற வரியில் அக்கவிதை அழகாக உச்சம் கொள்கிறது என்றார்.

சுகுமாரனும் இக்கவிதை அசாதாரணமான ஒரு அனுபவத்தை அளிக்கிறது என்றார்.ளாமானுடமான அனுபவத்தை அளிக்கும் இமயமுடிகளை இவ்வரிகள் மனித துயரத்தின் சித்திரமாக ஆக்கி விடுகின்றன என்றார். ஜெயமோகன், தான் இமயமலையில் அலைந்திருப்பதாகவும் அப்போது பெற்ற அனுபவம் என்பது பிரம்மாண்டத்தின் முன் தனித்துவிடப்பட்ட அனுபவம், மனம் தன்னிலை இழந்து விரியும் அனுபவம் ஆகியவையே என்றும் சொல்லி மலையாளக் கவிஞர்கள் எழுதுவது வேறுவகையாக உள்ளது, இமையத்தையே மனித துயரமாக மாற்றுகிறது இக்கவிதை என்றார்.

சுவாமி வினயசைதன்யா ‘இது இமய அனுபவமல்ல, இமயம் சார்ந்த நேரடியான அனுபவம் இதில் இல்லை. இமையத்தை ஒரு கருதுகோளாகவே கவிஞர் அறிந்திருக்கிறார். அதை தன்வயபப்டுத்துவதற்கான முயற்சி இது’ என்றார்.

ஜெயமோகன்’ஆனால் ஆற்றூர் ரவிவர்மாவும் இதேபோல எழுதியிருக்கிறார், இமயம் மீதான நேரடி அனுபவத்தை. கைலாச முடியை அவர் தோல் உரிக்கப்பட்ட சிவ வாகனமாகிய வெள்ளைக்காளை என்கிறார்’ என்றார்.

‘அது நவீனத்துவ அனுபவம். அவர்களுக்கு இமையமும் மனித துக்கமே’ என்றார் வினய சைதன்யா.’இன்றுமுழுக்கக் கண்டேன்’ என்ற வரியில் தெரியும் தனிப்பட்ட துயரம் அந்த படிமங்களின் தீவிரத்தை நியாயப்படுத்திவிடுகிறது என்றார் ராஜ சுந்தர ராஜன்.

பி.ராமன் ,உண்மையில் இக்கவிதைகள் தான் எழுத உத்தேசிப்பவை அல்ல என்றார். எழுதும் முயற்சிகளே இவை. நான் எழுத விரும்பும் வரிகள் மொழியனுபவமாக எஞ்சக்கூடியவையாக இருக்க வேண்டும், இவையெல்லாம் கருத்தனுபவமாகவே உள்ளன என்றார். ஜெயமோகன், ‘பொதுவாக மலையாளக் கவிஞர்கள் இசைத்தன்மை கொண்ட வரிகளை மட்டுமே மொழியனுபவமாக எண்ணுகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மொழி நுட்பமாக, கச்சிதமாக, உட்குறிப்புகள் மிகக்கதாகக் கையாளப்பட்டிருக்கையில் கிடைப்பதும் மொழியனுபவமே’ என்றார். ‘ஒரு படிமம் மிக அழகாக சொல்லபப்ட்டிருப்பது மொழி அனுபவம் அல்லவா?’ என்றார்.

பி.பி.ராமச்சந்திரன் ‘தமிழ் கவிஞர்கள் ஏன் எப்போதும் இசைத்தன்மைக்கு எதிரான நிலைப்பாட்டு எடுக்கிறார்கள்?’ என்றார். ‘அது ஒரு முக்கியமான மொழி அனுபவம் அல்லவா?’ என்று வாதிட்டார். சுகுமாரன் இசைத்தன்மை நுண்மையாக சொற்களில் ஊடுருவியிருப்பது சிறந்த விஷயம்தான், அது கவிதைக்கு உணர்ச்சிகரமான வலிமையாக அமையும் என்றார். யுவன் ஆனால் அப்படி நேரடியாக ஓர் உணர்ச்சி வெளிப்பட்டால் அதன் நுண்மையான வாசிப்புச்சாத்தியங்கள் இல்லாமல் போய்விடுகின்றன என்றார்.

கவிதை மொழியனுபவமாக அமைவது பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்து, மதிய இடைவேளை வரை நீடித்தது .

காண்க:
http://jeyamohan.in/?p=409
http://jeyamohan.in/?p=416

முந்தைய கட்டுரைஜூவியின் பதினாறாம் பக்கம்.
அடுத்த கட்டுரைமன்மோகன்சிங்:ஒரு கடிதம்