காந்தி கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெ.
காந்தி கிராமங்களை இணைப்பதற்காக , தேசிய ஒற்றுமைக்காக இந்தி கற்றுக்கொள்ளச் சொன்னார் என்றால் ஏன் இந்திக்காரர்கள் பிற மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை? அதுவும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமல்லவா? இந்தி மட்டும் பரவினால் தேசிய “ஒருமை” மட்டுமே சாத்தியம் என்பது ஏன் அவருக்கு தோன்றவில்லை?

ஆயிரக்கணக்கில் இந்தி பிரச்சார சபாக்களை வைத்து தென்னவர்களை இந்தி கற்றுக்கொள்ளச் செய்த காந்திக்கு அதே அளவு முயற்சிகளால் ஆங்கிலத்தையோ அல்லது பிறதென்மொழிகளையோ எளிதில் பரப்ப முடியும் என்று ஏன் தோன்றவில்லை? ஆங்கிலம் (அதுவும் இங்கிலாந்தில்!)படித்த காந்திக்கு ஆங்கிலம் இப்படி வளரும்,ஆங்கிலத்தில் உள்ள அறிவியல்ச் செல்வங்கள் இந்தியிலோ/பிற இந்திய மொழிகளிலோ மாற்றுவது கடினம் என்று தோன்றாதது வியப்பளிக்கிறது.

அவ்வளவாகப் படிக்காத (எங்கள்!) பெரியாருக்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது. தாங்கள் சொன்னதுபோல் “எங்க ஆள்” மட்டையடி வீரர்தான்! அவர் சொன்னதில் பாதிகூட எனக்கு பிடிக்கவில்லைதான்.ஆனால் தமிழ் மொழிவெறி உச்சத்தில் இருந்த காலத்திலும் “தமிழைத் தூக்கியெறி” என்று கூறும் துணிச்சல் யாருக்கு வரும்?! என் மனதுக்கு பெரியார் நெருக்கமாக இந்த ஒரு “மட்டையடி வீரம்”தான் காரணம். ஒருவேளை எங்கள் தாத்தாக்களின் (நாங்கள் அய்யன் என்போம்) குணமும் இதுதானோ என்னவோ?
(கொங்கு மண்டலத்தில் சில பாட்டிகளின் [ஆத்தா] குணமும் இதுதான். “பொம்பள பன்னாட்டு” என்று கேட்டிருப்பீர்கள்!)
மற்றபடி, பெரியாரின் மனதுக்கு இந்தி படிப்பது ஒரு பெரிய “மேட்டராக” இருந்திருக்காது. அவர் இந்தியை பிராமணர்களை எதிர்ப்பதற்கு ஒரு ஆயதமாகவே பயன்படுத்தியிருப்பார் என்று தோன்றுகிறது.பெரியாரின் “கட்டப் பஞ்சாயத்து மட்டையடி” கருத்துப் பரிமாற்றத்துக்கோ சமரசத்திற்கோ உகந்ததல்ல.பெரியார் வயதான காலத்தில் சற்று நெகிழ்ந்திருந்தால்க்கூட திராவிட இயக்கம் ஆக்கப்பூர்வமான மனம் கொண்ட சிலரையாவது உருவாக்கியிருக்கும். நமக்கு மிஞ்சியதெல்லாம் வெறும் அரசியல் வணிகர்கள்தான். மொழி அவர்களுக்கு ஒரு முதலீடு. அவ்வளவே. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு விவேகானந்தர் கிடைத்ததுபோல பெரியாருக்கு யாரும் கிடைக்கவில்லை.அல்லது பெரியாருக்கு அத்தகைய தேடல் இருக்கவில்லை! (இந்த தொடர்புப்படுத்தல் தங்களுக்கு கசப்பாக இருக்கலாம்.மன்னிக்கவும்!)

மீண்டும் காந்திக்கு.எனக்கு ஒரு காரணம் தோன்றுகிறது. அது தவறாகக்கூட இருக்கலாம்.
காந்திக்கு வடக்கில் உள்ள சிக்கல்கள் மட்டுமே சிக்கல்களாகத் தெரிந்தன. அல்லது அவருக்கு அப்படிக் காட்டப்பட்டன! எனவே அவருக்கு இந்து-முஸ்லிம் பூசலைத் தீர்த்துவிட்டால் இந்தியாவில் பிரச்சனைகளே இருக்காது என்று தோன்றியிருக்கலாம்.அவர் முஸ்லிம்களுக்கு (வட இந்திய முஸ்லிம்களுக்கு) கொடுத்த முக்கியத்துவத்தில் பாதிகூட தென்னவர்களுக்கோ, தலித்துகளுக்கோ தரவில்லை என்று தோன்றுகிறது.

மற்றொன்று, நேர்மையான காந்தி பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார் என்று தெரிந்தவுடன் ஏன் தலைவர் பதவி தருகிறேன் என்று “பேரம்” பேசவேண்டும்? (தகவல்ப்பிழையிருந்தால் மன்னிக்கவும்.)
ஓஷோ காந்தியை “தந்திரப் பேர்வழி” என்றது நினைவுக்கு வருகிறது.

என்னைப் பொருத்தவரை(இன்றைய மனநிலையில்) பெரியார் காந்தியைவிட நேர்மையானவர்.ஆனால் காந்தி பெரியாரைவிட நல்ல அரசியல்வாதி.அரசியல்வாதி மட்டுமே.

காந்தியும் இந்தியும்

வெங்கடேஷ்

அன்புள்ள வெங்கடேஷ்,
நல்லது. புரிந்துகொள்ள பிடிவாதமாக மறுக்கும்போது விவாதத்தால் பயனில்லை. உங்கள் கருத்துக்கள் உங்களுடன் இருக்கட்டும்

இந்தியாவின் பெருவாரியான மக்களால் ஏற்கனவே புரிந்துகொள்ளப்பட்ட ஒருமொழியை
இணைப்புமொழியாக ஒருவர் உருவகித்ததில் உள்ள நடைமுறைவாதம்கூட உங்களுக்கு
புரியவில்லை என்றால், ஏன் பிற பிராந்திய மொழிகளை அல்லது அன்னிய மொழியை
அந்த இடத்துக்கு வலிந்து கொண்டுசெல்லவில்லை என்று கேட்டீர்கள் என்றால்
–நல்லது நீங்கள் உங்கள் ‘பெரியாருக்கு’ உகந்த சீடர்தான்.

உங்கள் வாதங்களில் உள்ள பிடிவாதத்தை எப்போதாவது நீங்களே புரிந்துகொண்டால்
உங்களுக்கு நல்லது. இந்திய கிராமங்களுக்கான தேசிய இணைப்புமொழியாக ஏற்கனவே
பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த இந்தி இருக்க வேண்டும் என்னும்போது அத்தனை
கிராமவாசிகளும் ஏன் இந்தியாவின் அத்தனை பிராந்திய மொழிகளையும் படிக்கக்
கூடாது என்கிறீர்கள்!

காந்தி மைய அதிகாரத்தை வலியுறுத்த இந்தியை முன்வைத்தார் என்றீர்கள். அதை
நான் விளக்கியதும் சரி அபப்டியானால் இது என்ன என்று அடுத்த
குற்றச்சாட்டுக்குச் செல்கிறீர்கள். அதை மறுத்தால் அடுத்தது. கடைசியில்
நீ என்ன சொன்னாலும் என் நம்பிக்கை இது என்கிறீர்கள். இதுவே மதம்சார்ந்த
மனப்பான்மை.ஈவேரா வளார்த்தது இதைத்தான்

என் வரிகள் பிறருக்கு உதவிகரமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

காந்தியும் இந்தியும் என்ற கட்டுரையை வாசித்தேன். சிறப்பான கட்டுரை. காந்திஜியின் நோக்கத்தில் இருந்த நடைமுறைத்தன்மையை நன்றாகச் சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.  அவர் ஆங்கிலத்தைப் பற்றி கொண்டிருந்த சந்தேகம் மிகவும் முக்கியமானது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதைப்பற்றித்தான் சிந்தனை செய்துகொண்டிருந்தேன். ஆங்கிலம் இந்த அளவுக்கு வளராம இருந்திருந்தால் இந்தியாவில் ஏழை மக்கள் இந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று கூட நான் நினைத்துக்கொண்டேன்

மொழியை காந்தி உணர்ச்சிரீதியாக பார்க்கவில்லை. அதை ஒரு வசதியாக, தொடர்பு மொழியாக மட்டுமே எண்ணினார். உணர்ச்சி ரீதியான ஈடுபாடு என்பது அவருக்கு தாய்மொழியில் தான் இருந்தது என்று சொல்லியிருந்தீர்கள் .ஆழமாக சிந்தனை செய்யவேண்டிய உண்மை

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

தாய்மொழியுடன் இருந்தாகவேண்டிய உறவை காந்தி அளவுக்கு தீவிரமாகப் பேசியவர்கள் குறைவே. தமிழை கற்க காந்தி விரும்பியிருக்கிறார். தமிழில் கையெழுத்துகூட போட்டிருக்கிறார். அன்புள்ள மோ. க. காந்தி என தமிழிலேயே முதலெழுத்து போட்டு!

ஜெ

அன்புள்ள ஜெ

பெரியாரைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தீர்கள். பெரியார் காந்தியை விட வெளிப்படையாகவும் நேரடியாகவும் கருத்துக்களை முன்வைத்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விஸ்வாஸ்

அன்புள்ள விஸ்வாஸ்,

காந்தி ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைமையில் இருந்து அதை நடத்தினார். அவரை நம்பி கோடிக்கணக்கானவர்கள் பின்னால் இருந்தார்கள். பல்வேரு சாதி இன மத மொழிப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள். அவர்களை திரட்டி ஒருங்கிணைத்து முன்னால்கொண்டுசெல்ல முயன்றவர் அவர். ஆகவே சமரசமே அவரது வழி

ஈவேராவுக்கு எப்போதுமே சிலநூறு ஆதரவாளர்களுக்குமேல் இருந்ததில்லை. அந்த ஆதரவாளார்கள் கூட அவ்வப்போது முரண்பட்டு விலகிச்சென்றபடி இருந்தார்கள். தோன்றுவதை அப்படியே சொன்னவர் அவர். அவற்றுக்கு இடையே தர்க்கரீதியான ஒத்திசைவைப்பற்றிக்கூட  கவலைபப்ட்டவரல்ல.

 

 

அன்புள்ள ஜெ
காந்தி மொழிச்சிறுபான்மையினரை Nuisance of these minority”  என்று சொன்னாரா என்ன? அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?

சரவணன்

அன்புள்ள சரவணன்,

அது ஒரு மேடைப்பொய். காந்தி அபப்டி சொல்லவில்லை.

அதர்கிணையான வரி நேருவால் மொழிவாரி மாநிலப்பிரிவினைக் கோரிக்கையின்போது சொல்லப்பட்டது.நம் சிந்தனைகலை வெற்றிகொண்டான்கள்தானே தீர்மானித்து வருகிறார்கள்

ஜெ

  1. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் காந்தி அடைந்த நடைமுறை விவேகத்தால் தான் இந்தியை முன்மொழிந்தார் என்றே வைத்துக்கொள்வோம். எனது சொந்த ஊர் பழனியின் அருகே உள்ள பாலசமுத்திரத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்தியைக் கற்றுக்கொள்வதற்கும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கும் என்ன வித்தியாசம் தெரியப்போகிறது? காந்தியின் நடைமுறை விவேகம் வட இந்தியர்களுக்கும் தேவநாகிரி பரிச்சயமான பகுதிகளுக்கும் வேண்டுமானால் எளிதாக இருந்திருக்கலாம்.
  2. நீங்கள் சொல்வது போல் கணிப்பொறியின் உதவியால் கனநேரத்தில் தமிழில் வாசிக்க முடியும் காலத்தில் இணைப்பு மொழி தேவை இல்லை தான். ஆனால் இந்த கணிப்பொறியும் நவீனமும் எதனால் முடிந்தது? இன்றைய கணிப்பொறிஉலகில் தமிழர்கள் அடைந்த முன்னேற்றம் (மொழியாக்க மென்பொருள் உட்பட) எதனால் முடிந்தது? ஆங்கிலத்தால் தான் என்பேன் நான். வரும் காலத்தில் ஆங்கிலம் தேவை இல்லை என்றால் அது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமே! ஆங்கிலம் வேண்டாம் என்றால் நாம் இந்த வளர்ச்சியின் பாதையில் இருக்க முடியாதே?!
  3. நடைமுறை விவேகத்திற்கு ஆங்கிலத்தை அல்லவா முன்மொழிந்திருக்க வேண்டும்?
தங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கும்….
-செந்தில்
அன்புள்ள செந்தில்

நான் சொல்லியிருந்த கருத்துக்களை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

1. காந்தி அவர் உத்தேசித்த ஒரு கிராமசுயராஜ்ய அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று
தொடர்புகொள்வதற்கான மொழியாகவே இந்தியை முன்வைத்தார். அது ஆங்கிலமாக ஏன்
இருக்க முடியாதென்பதை மிக விரிவாக நான் என் கட்டுரையில்
சொல்லியிருக்கிறேன்.

2. ஆங்கிலம் நவீனத் தொழில் நுட்பத்தின் மொழி. காந்தி அந்த  ஐரோப்பியத்
தொழில்நுட்பத்தை எதிர்த்தவர். அதற்கு மாற்றுகள் உண்டாகவேண்டும் என
வாதிட்டவர்.

3 அதேசமயம் அவர் ஆங்கிலத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவில்லை.அதன்
பயன்பாட்டை அவர் உறுதியாக்வே எப்போதும் முன்வைத்தார்

மற்றபடி நீங்கள் கேட்டிருப்பதற்கும் நான் காந்தி குறித்து
சொன்னவற்றுக்கும் என்ன சம்பந்தம் என்றே எனக்கு புரியவில்லை.

ஆங்கிலம் தேவை இல்லை என்று யார் சொன்னது? ஒரு நிபுணன் ஆங்கிலம்
கற்றுக்கொள்ளக் கூடாதென யார் சொன்னது?

எல்லாவற்றையும் விட மேலாக ஆங்கிலம் வழியாகத்தான் கணிப்பொறியைக் கற்க
முடியும் என எவர் முடிவெடுத்தது? ஆங்கிலம் தெரிதுதான் உலகம் முழுக்க
கணிப்பொறி கற்கிறார்களா என்ன?

காந்தி சொன்னது ஒன்றே. இந்தியாவில் கோடிக்கணக்கானபேருக்கு ஏற்கனவே
தெரிந்த மொழி இந்தி. ஆகவே ஓர் இணைப்புமொழியாக அது இயல்பாகவே இருக்கிறது –
அதை வைத்துக்கொள்ளலாம்.

இன்றும் இந்தியாவில் அகில இந்தியத்தன்மை கொண்ட எந்த ஒரு அமைப்பிலும்
இணைப்புமொழி இந்தியே. தொழிற்சங்கங்கள் வினியோக அமைப்புகள் போக்குவரத்து
அமைப்புகள் அனைத்திலும். பாலசமுத்திரத்தில் ஒரு லாரி டிரைவர் அகில இந்திய
லைசன்ஸ் உள்ள லாரி ஓட்டினால் இந்திதான் தெரிந்திருக்கும். அவனிடம்
நீங்கள் போய் உனக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்வதுதான் எளிது என்று சொல்ல
முடியுமா என்ன?

நான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என நினைப்பவன். இந்திக்கு
அந்த இடம் தேவையில்லை என நினைப்பவன். அதற்கான காரணங்களே வேறு. அது மைய
அதிகார மொழியாக வற்புறுத்தப்படக்கூடாது என்பதனால்தான்

நடைமுறையில் இந்திதான் இந்திய இணைப்புமொழி. அது அவ்வாறே
இருந்துகொண்டிருக்கிறது. அதைத்தான் நடைமுறைவாதியான காந்தி சொன்னார்.

எதற்கும் கட்டுரையை மீண்டும் படியுங்கள்.

ஜெ

காந்தியும் இந்தியும்

முந்தைய கட்டுரைதோள்சீலை
அடுத்த கட்டுரைவெள்ளைமலை, கடிதம்