சென்னையில்…

சான் ஃப்ரான்சிஸ்கோ விமானநிலையத்தில் என்னை நண்பர்கள் வந்து வழியனுப்பி வைத்தார்கள். திருமலைராஜன், ஆர்வி , பகவதிப்பெருமாள், திருமலைராஜனின் மனைவி ஆகியோர். அருணா வருவதாக இருந்தது  சாலைநெரிசலில் சிக்கிக் கொண்டார்.

விமானநிலையத்தில் இவ்வாறு கிளம்ப நிற்கும்போது பொதுவாக ஒரு உணர்வெழுச்சி ஏற்பட்டு நெஞ்சை அடைக்கும் . அவ்வறெல்லாம் அடைக்கக் கூடாது என்பதெல்லாமே எனக்கு நன்றாகவே தெரியும். நான் மிகவும் தருக்கபூர்வமான மனிதன். ஆனால் இந்த தகவலை என்னால் என் மனதுக்கு புரியவைக்க நாற்பது வருடங்களாக முயன்றும் முடியவில்லை.

ஆகவே நான் எப்போதும் உற்சாகமாக பேசி சிரித்து கவலை இல்லாமல் இருப்பதுபோல பாவனை செய்வேன். அந்த கணத்தை தாண்டிவிட்டால் பின்னர் அதிகாரிகள் முன் பாஸ்போர்ட்டுடன் நிற்பதன் பதற்றத்தில் எல்லாம் மறந்துபோகும். விமானத்தில் ஏறுவது வரை ஒன்றும் சிக்கல் இல்லை. விமானம் ஏறும்போது மீண்டும் நெஞ்சடைப்பு. ஆனால் இம்முறை நாம் மட்டும் தானே இருக்கிறோம்…

பாதுகாப்பு பிரிவில் பெல்ட்டையும் செருப்புகளையும் கழட்டி வைத்து மடிகக்ணினியை நிர்வாணமாக்கி பரத்தி கைதூக்கி மறுபக்கம் செல்லும் சடங்கை அமெரிக்காவில் பலமுறை செய்துவிட்டமையால் ஒரு தொழில்முறை நாடக நடிகனைப்போல சாதாரணமாக அந்த பகுதியை நடித்துக்கொண்டு மறுபக்கம் சென்றேன்.

மீண்டும் ஆள்கூட்டம் வழியாக கையாட்டும் நண்பர்களை எட்டிப்பார்த்தபோது மனம் பொங்கியது. ஒரு சிறு கூட்டம் அல்ல அவர்கள். என்னை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வரவேற்று உபசரித்து இலக்கியம்பேசி சுற்றிக்காட்டி அனுப்பிவைத்த பலநூறு நண்பர்களின் பிரதிநிதிகள். இத்தனை வாசகர்கள் எனக்கு இருக்கிறார்கள் என நான் எண்ணியதே இல்லை.

ஒரு சராசரித் தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒருவகை சிறுமையுணர்வு எனக்கு எப்போதும் உண்டு. என்னை அடையாளம் கண்டுகொள்ளும் வாசகர்கள் மிகக் குறைவே. என் கூட்டங்களுக்கு வருபவர்களும் தெரிவுசெய்யபப்ட்ட சிலரே.

நான் அருண்மொழிக்கு என் காதலைச் சொல்லி முதல் கடிதம் எழுதிய போது அதில் சொல்லியிருந்தேன். ‘ ஒரு தமிழ் எழுத்தாளனாக எனக்கு பணம் கிடைக்கப்போவதில்லை. புகழ் அறவே கிடைக்கப்போவதில்லை. ஒருநாளும் எளிய அங்கீகாரம்கூட கிடைக்காது. ஆனால் நான் இதைத்தான் செய்யப்போகிறேன். இதற்காக என் வாழ்க்கையை நான் முன்வைக்கப்போகிறேன். மேலும் அதிக ஊதியமுள்ள வேலைக்கு நான் செல்லப்போவதில்லை. லௌகீகமாக என்னை நிலைநாட்ட எதையுமே செய்யப்போவதில்லை. ஓர் அறியப்படாத ஏழை எழுத்தாளனின்  எளியமனைவியாகவே நீ வாழ்ந்து மறையவேண்டும். அதற்கு சம்மதமிருந்தால் நான் உன்னை மணக்கிறேன்….. முடிவில்லாத காதலை மட்டுமே நான் உனக்கு வாக்களிக்கிறேன்’ என. அதை நம்பி அவள் வந்தது ஓர் ஆச்சரியமே. அதையே நான் எழுத்தாளன் என்பதற்கான ஆகப்பெரிய அங்கீகாரம் என நினைக்கிறேன்- அதற்குப்பின் வந்த எந்த அங்கீகாரத்தைவிடவும் அது மேலானது

 

அமெரிக்காவில் மிகச்சிலரையே நான் எதிர்பார்த்தேன். ஒவ்வொரு ஊரிலும் நான் சந்தித்த அதி தீவிர வாசகர்கள் இதற்குமேல் தமிழில் என்ன எதிர்பார்க்கமுடியும் என்ற எண்ணத்தையே உருவாக்கின. ஆம் ஒருவகையில் இது ஒரு வெற்றியே

விமானத்தில் ஏறி அமர்ந்தபோது ஒருசில கணக்கள் முகங்களும் காட்சிகளும் கலந்த ஒரு உணர்ச்சி சித்திரம் என்னை சுழற்றியடித்தது. எங்கிருக்கிறேன் என்ற பிரக்ஞையே இல்லாதது போல. நீரில் மூழ்கி கடல்புதர்கள் பவளபாறைகள் நடுவே வண்ணமீன்களை பார்த்ததும் சரி திமிங்கலங்களைப் பின் தொடர்ந்ததும் சரி கிரான்ட் கான்யனின் செம்மலைகலும் சரி சாஸ்தா மலையின் பனிச்சரிவும் சரி எல்லாமே எனக்குள் கனவுகளாக ஆகிவிடிருந்தன

நான் முந்தையநாள் முழுக்க தூங்கவில்லை. ஏராளமான மின்னஞ்சல்கள் வந்திருந்தன. அனேகமாக தினமும் மின்னஞ்சல்களுக்கு பதில்போட்டும்கூட 500க்கு மேல் தேங்கிவிட்டன. இரவெல்லாம் அமர்ந்து 350 மின்னஜ்சல்களுக்கு பதில் போட்டேன். ஆகவே விமானம் மேலே கிளம்பியதுமே நன்றாகவே தூங்கிவிட்டேன். லண்டன் வரை

லண்டனில் இரண்டுமணிநேர இடைவெளி. அதன்பின் மீண்டும் சென்னை. இம்முறை தூங்கவில்லை. போஸ்ட்மாடர்ன் காந்தி என்ற நூலை வாசித்து முடித்த பின் கணிப்பொறியில் அதைப்பற்றிய குறிப்புகள் எடுத்தேன். தி ஸ்டிரீட் கார் நேம்ட் டிசையர் என்ற படம் பார்த்தேன். பொதுவாக படங்களை தேர்வுசெய்ய நேரும்போது நான் பழைய படங்களைய்டே தெர்வுசெய்கிறேன். எனக்கு வயதாகி வருவதன் அடையாளம் போலும். அதற்கு ஓர் இலக்கிய அடையாளம் இல்லாவிட்டால் என்னால் உள்ளே புகவே முடிவதில்லை

காலை மூன்றரைக்கு சென்னை வந்தேன். சென்னை விமான நிலையம் முழுக்க முகமூடிகள். ஆபரேஷன் செய்ய அட்டென்டர்கள் கிளம்பியதுபோல ஒரு பிரமை. பன்றிக்காய்ச்சலுக்கு பாதுகாப்பாம். ஒரு அட்டென்டர் ஒரு கருவியை  கொஞம் கூட கவனமே இல்லாமல் நம் நெற்றிக்கு அரை கிலோமீட்டர் அருகே பிடித்து போ போ என்றான். ‘சோதனை’ முடிந்து உள்ளே விட்டுவிட்டார்கள்

விமானநிலையத்துக்கு ஷாஜி வந்திருந்தார்., மற்ற நண்பர்கள் வர முடியாமல் போய்விட்டது. ஷாஜி வீட்டுக்குப்போய் பேசிக்கொண்டிருந்தேன். இன்று மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் நாகர்கோயில் பயணம். நாளை வீடு…அருண்மொழி…

 

இணைவைத்தல்

முந்தைய கட்டுரைபாலகுமாரன் மேலும் ….
அடுத்த கட்டுரைசொல்வனம், பதில் கடிதம்