ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

37858581_2129870427336375_3935955309054394368_n

அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு

வணக்கம். நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம்

பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றன என்று நம்புகிறேன்.

முதலாவது, பாலகுமாரனின் எழுத்துக்கள் வாழ்க்கையில் உதவின; அதனால் அவர் எழுத்து இலக்கியம் என்ற கருத்து. இது எப்படி இருக்கிறதென்றால் MGR படங்களை பார்த்து நான் தாய் பாசத்தை கற்று கொண்டேன். எனவே MGR மகா நடிகர் என்று சொல்வதை போல. இந்த வாதத்தில் உள்ள குழந்தை தனத்தை தாங்கள் சுட்டி காட்டாமல் விட்டுருப்பது ஏன் என்று புரியவில்லை.

இரணடாவது, பாலகுமாரன் ஆன்மீகவாதி. எனவே அவர் எழுத்துக்கள் மேலானவை என்ற வாதம்.என்னை பொறுத்தவரையில் அவர் எழுத்துக்களில் எனக்கு மிகவும் எரிச்சலூடுபவை அவரது “ஆன்மீக” எழுத்துக்கள் தாம். அவரது ஆன்மீகம் என்பது ரஜினியின் பாபா படத்தில் வெளிப்படும் ஆன்மிகம் போன்றது தான். ஆன்மீகத்தை வெறும் கண்கட்டு வித்தை என காட்டுபவை அவரது எழுத்துக்கள். இதில் இன்னொரு வெறுப்பூட்டும் அம்சமும் உள்ளது. அது பாலகுமாரன் தன்னை ஒரு பெரும் ஆன்மீகவாதியாக, ஒரு சித்தராக நம்புவது அல்லது மற்றவர்கள் அப்படி நம்ப வேண்டும் என்று எண்ணுவது. சந்தேகம் இருந்தால் http://balakumaranpesukirar.blogspot.com வலைத்தளத்தை பார்க்கலாம். அதன் முகப்பிலேயே ராம் சுரத் குமாரின் முகமும் பாலகுமாரன் முகமும் அருகருகே ஒரே அளவில் ஒரே தோற்றத்தில் இருப்பதை காணலாம். அதாவது இவரும் அவரை போல ஒரு மகான் என்பது போல. அவரது எழுத்துக்களிலும் இந்த தொ னி அவ்வப்போது ஒலிப்பதை கவனிக்கலாம். ஒரே ஒரு எடுத்துக்காட்டு: சீனாவில் நில நடுக்கம் வந்த போது வெளியிடப்பட்ட ஒரு கேள்வி பதில். அதன் உட்கருத்து அல்லது நோக்கம் என்னவென்றால் சீனாவில் நிலநடுக்கம் அல்லது அது போன்ற பேரழிவு வரும் என்று பாலகுமாரனுக்கு முன் கூட்டியே தெரிந்து இருந்தது. இது நடக்கும் என்று அவர் முன்பே சொன்னார். அது நடந்து விட்டது. எப்பேர்பட்ட ஞானி இவர் என்று காட்டுவது. அவரது ஆன்மீகத்தில் உள்ள குழந்தை தனத்தையும் , நடவடிக்கைகளில் உள்ள போலித்தனத்தையும் இன்னும் வெளிப்படையாக தாங்கள் விமரிசிக்காதது எனக்கு ஏமாற்றமே.

பின் குறிப்புகள்  :
இந்த கடிதத்தில் உள்ள தொனி உங்களுக்கு கோபமூட்டலாம். அதற்காக என்னை கண்டித்து நீங்கள் பதில் அளிக்கலாம். அப்படி  நேர்ந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாரான மன நிலையில் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

சுஜாதாவையும் பாலகுமாரனையும் தாங்கள் ஒரே பட்டியலில் சேர்த்திருப்பதை எப்படி எடுத்து கொள்வது என்றே புரியவில்லை. சரி விடுங்கள். தனியாக பேசப்பட வேண்டிய விஷயம் அது.

 

ராஜேந்திரன்

 

 

 

அன்புள்ள ராஜேந்திரன்

பாலகுமாரனைப்பற்றிய அக்கடிதம் ஓர் இளம் வாசகர் எழுதியது. அவ்வயதில் ஓர் எழுத்தாளர் மேல் தோன்றும் பற்றும் அதன் விளைவான தீவிர நிலைபாடுகளும் இயல்பானவை. தேடல் இருந்தால் அடுத்தடுத்த இடங்களுக்கு கொண்டுசெல்லக்கூடியவை. அதைத்தான் நான் சொன்னேன்.

பாலகுமாரன் சொல்லிக்கொண்டிருக்க்கும் ஆன்மீகத்தைப் பற்றி என்னுடைய கருத்தையும் அக்கடிதத்தில் பதிவுசெய்திருந்தேன். அதற்கு மேல் நான் அவ்விஷயத்தில் சொல்ல ஏதுமில்லை. அவரது படைப்புகளைப் பற்றிய இலக்கிய விமரிசனம் என்றால் விரிவாக எழுதலாம். தனிப்பட்ட விமரிசனங்களுக்கு என் எழுத்தில் இடமில்லை.

ஆகவே நீங்கள் எழுதியதிலும் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. அது உங்கள் கருத்து அவ்வளவே. நான் அதை ஒட்டி பேசவிரும்பும் விஷயம் உங்கள் கருத்துடன் ஒட்டிய சில விஷயங்களைத்தான். அது நம் நாட்டில் பரவியிருக்கும் , பரவிக்கொண்டிருக்கும் ஒரு புதுவிதமான மனநிலையை பற்றியது. அதை அனேகமாக தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்

கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள். இது பாலகுமாரனின் இணையதளத்தில் இருந்ந்து நான் எடுத்தது.

 

”இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் கட்டிய அமண்குடி கோவிலில் நடந்த நிகழ்ச்சி இன்னும் புதிராகவே உள்ளது.

துர்க்கை அம்மனை வழிபட்டு கோவிலைச் சுற்றி வந்த சமயம் கோவிலின் ஒரு மூலையில், இருளில், கிட்டதட்ட தொண்ணூறு வயதுடைய அந்தணர் ஒருவர் அமர்ந்திருந்தது தெரிந்தது. இருளில் அந்த இடத்தில் அவர் ஏன் அமர்ந்திருக்கிறார் என்று நான் அறிந்து கொள்ள டார்ச் லைட் வீசி பார்த்த போது, அவர் அதை விரும்பாமல் கோயிலின் சுவர் நோக்கி சென்று மறைந்தார். மறுபடியும் பார்க்கும் போது அங்கு வெறும் லிங்கம் மட்டுமே இருந்தது. வெடவெடவென்று பயந்து நடுங்கிக் கொண்டு உங்களைப் பார்த்த போது உங்கள் முகமும் தீர்க்கமாக இருந்தது. ‘இங்கு இப்படித்தான்’ என்று எந்த பதட்டமும் இல்லாமல் நீங்கள் கூறிவிட்டு சென்று விட்டீர்கள்.

‘இது சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் மிகக் காதலாகக் கட்டிய துர்க்கை அம்மன் கோவில். பிரம்மராயர் ஒரு அந்தணர். இந்த கோவிலை விட்டு அவர் வேறு எங்கும் போக மாட்டார்’ என்று எப்போதோ நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது.

சோழர்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், இடங்கள், கல்வெட்டுகள், சோழ சரித்திரம் மீது மிகப் பெரிய காதல் கொண்ட நண்பர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற பல உதவிகளோடு, சோழ தேசத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து வேறு ரூபத்தில் இருக்கும் சக்திகளும் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கின்றன என்பது புரிய, உடையார் வெறும் நாவலல்ல என்பது விளங்கியது.

உங்கள் படைப்புகளில் மகுடமாகத் திகழும் உடையாரை நீங்கள் எழுதவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, நீங்களும் சோழர்களோடு வாழ்ந்திருக்கிறீர்கள்; அவர்களோடு இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்ந்ததை, பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை ”

 

இந்தக் கடிதத்தை எழுதிய மனநிலை என்ன? இதை புராணம்சார்ந்த மனநிலை என்று சொல்லலாம். ஒரு சராசரி இந்துவின் மனநிலை இம்மாதிரியான புராண ஆக்கங்களினால் ஆனது. இது பல நூற்றாண்டுகளாக நம் சூழலில் நீடிப்பது. இதற்கு ஒரு வரலாற்று பின்புலம் உண்டு. ஒரு தத்துவப் பின்புலமும் உண்டு.

இந்த மனநிலை நாம் மெய்மையை அறிவதற்கான ஒரு வழிமுறையாகவே நெடுங்காலமாகக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு உள் தர்க்கம், அல்லது ஒரு இலக்கண அமைப்பும் நமக்குள்ளது. இந்த மனநிலையின் மிகக்கீழான தளங்களையும் மிக உச்சநிலைகளையும் நம் மதத்தில் காணலாம்.

வரலாற்று ரீதியாக புராண மனநிலை உருவான விதம் இவ்வாறு. இந்திய நிலப்பகுதியில் பல ஆயிரம் பழங்குடிகள் வாழ்ந்தன. அவர்களின் பல்லாயிரம் நம்பிக்கைகளும் குலக்கதைகளும் குறியீடுகளும் இறை உருவகங்களும் இருந்தன. பிரம்மம் என்ற தூய தத்துவக் கருத்துருவத்தால் அவை கோக்கபப்ட்டன. அவ்வாறாக இந்திய நிலத்தில் பெருமதங்கள் உருவாயின. இவ்வாறு கோர்க்கப்பட்டபோது அந்த தொகுப்புக்காக உருவானதே புராணமரபு என்பது. புராணங்களின் பணியே பல்வேறு நம்பிக்கைகளையும் படிமங்களையும் இறைவடிவங்களையும் ஒன்றாகச்சேர்ப்பதே. இந்து ஞானமரபின் முக்கியமான புராணங்கள் அனைத்தும் இவ்வாறு உருவானவையே.

பின்னர் இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [மெட்டா லாங்வேஜ்] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.

இப்படிச் சொல்கிறேன். ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம். அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன்  நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.

நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்

இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.

விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.

இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.

இந்து ஞானமரபின் அனைத்து தத்துவ ஆழங்களையும் இவர்கள் மறைத்து விடுகிறார்கள். இன்றைய பிரபல இந்து மரபில் ராமகிருஷ்ண பரமாகம்சருக்கோ ரமணருக்கோ விவேகானந்தருக்கோ நாராயணகுருவுக்கோ இடமில்லை.  அவர்கள் அற்புதங்கள் செய்தவர்கள் அல்ல. அவர்கள் செய்யாத அற்புதங்களை அவர்கள் தலைமேல் போட்டு அவர்களை அற்புத புருஷர்களாக ஆக்கி அவர்களின் அற்புதங்களின் வாரிசுகளாக தங்களைச் சொல்பவர்கள்தான் அதிகம்.

நான் யோகி ராம் சுரத் குமாரைக் கண்டிருக்கிறேன். பேட்டியும் எடுத்திருக்கிறேன். எனக்கு அவரை தெரியும் என்றே சொல்வேந்- எல்லா வகையிலும்.  அவர் மீது இன்று இந்த மனிதர்கள் ஏற்றிவைக்கும் அற்புதக் கதைகள் அவரது மெய்ஞான இருப்பை கேவலப்படுத்துவன. அவர் மோடி மஸ்தான் அல்ல. அவர் ஞானி.

மிகச் சமீபகாலமாக இத்துடன் இன்னும் பல விஷயங்கள் கலக்க ஆரம்பித்துவிட்டிருக்கின்றன. யோகம் நம் நாட்டில் மிகமிக தொன்மையான காலம் முதலே இருந்துவரக்கூடிய ஒரு ஞான வழி. அதன் மூல நூல் பதஞ்சலி யோக சூத்திரம். அது ஒரு கறாரான அறிவியலையே முன்வைக்கிறது. அது ஆன்மீக நூல் கூட அல்ல. பொருள்முதல்வாத தரிசனமாகிய சாங்கியத்தின் துணை தரிசனம்தான் யோகம்.

சாங்கியம் இப்பிரபஞ்சம் ஒரே பேரிருபபக இருந்தது என்கிறது. அது முக்குணங்களின் சமநிலை இழப்பால் இன்று தோன்றும் இந்த பன்மையை பெற்றது. பிரபஞ்சத்தின் சாட்சியான புருஷன் அதேபோல பன்மையடைந்திருக்கிறான். அந்த பன்மைநிலையை அவன் உதறி தன் ஒருமை நிலையை அடையும்போது அவன் பிரபஞ்சத்தை அதன் முழுமை- ஒருமை நிலையில் அறிகிறான். இதுவே யோகம் சொல்லும் முக்தி. முழுமைநிலை. அல்லது விடுதலை நிலை. இதை தூயநிலை அதாவது கைவல்யம் என்கிறது யோகம்.

இதற்கான வழிமுறைகளை யோகம் பேசுகிறது. பின்னர் யோகம் சமணர்களாலும் பௌத்தர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. பின்னர் இந்த முறை பல்வேறு தாந்த்ரீகர்களால் விளக்கபப்ட்டது. உண்மையில் இவையெல்லாம் பல்வேறு வழிமுறைகள் அல்லது விளக்க முறைகள் மட்டுமே. தாந்த்ரீகர்கள் எதையுமே குறியீடுகள் மூலம் விளக்குபவர்கள். அவர்களிடம் பல்வேறு குறியீட்டு அமைப்புகள் இருந்தனா. அவற்றை அவர்கள் யோகத்துக்கும் போட்டுப்பார்த்தார்கள்

அவைதான் மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை செல்லும் ஒன்பது சக்தி மையங்கள். யோகத்துக்கு முன்னர் இச்சக்கர மையங்களை தந்த்ரீகர்கள் பிரபஞ்ச உருவகத்துக்கும் போட்டு பார்த்திருக்கிறார்கள். உதாரணமாக மூலாதாரம் என்பது என்ன? காமம்  என்னும் ஆற்றலைத்தான் அபப்டிச் சொல்கிறார்கள். உயிர்கள் அனைத்திலும் உறையும் ஆற்றல் அது. அது குறிக்கு பின்னால் ஓர் புள்ளியில் மையம் கொள்வதாக உருவகித்தார்கள். அதன் பின் பசி என்ற மையம். அதன் பின் மூச்சு…இப்படி ஒன்பது.

இந்த ஆற்றல்மையங்களை தியானித்து இவற்றை அடக்கி வென்று முழுமையை அடைவதுதான் தாந்த்ரீகர்களின் யோக மார்க்கம். அவர்கள் சொல்லும் சித்தி அல்லது முக்தி அல்லது முழுமை என்பதும் பதஞ்சலி சொல்வதும் ஒன்றே. ‘சித்த விருத்தி நிரோதம்’ மனச்செயலை தடுத்தல். அதன்மூலம் அடையப்பெறும் பிரபஞ்ச ஞானம். அல்லது ஞானமே அதுவாதல். ராமகிருஷ்ணரும் ரமணரும் நாராயண குருவும் மீண்டும் மீண்டும் அதை விளக்க முயல்வதைக் காணலாம். ‘தூய அறிவே சிவம்’ என்று பாரதி சொன்ன அதைத்தான் அவர்கள் அவ்வரிகளில் சொல்கிறார்கள். அறிவில் அறிவாய் அமர்தல் என்கிறார் நாராயணகுரு. உப்புப்பொம்மை கடலை அறிவது போல என்கிறார் ராமகிருஷ்ணர்.

குறியீடுகள் மூலம் ஞானத்தையும் அதன் வழிமுறைகளையும் விளக்க எண்ணிய தாந்த்ரீகர்களும் அவர்கள் வழிவந்த சித்தர்களும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். அவர்கள் குறியீடுகளாகச் சொன்ன பலவற்றை பாமரர் நேரடியாக எடுத்துக் கொண்டார்கள். உடலில் ஒன்பது தாமரைகள் இருப்பதாகவும் மூலாதாரத்தில் விரியும் குண்டலினி என்ற ஆற்றலை கையால் தொடமுடியும் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்படி ‘ஞானம் ‘ பெற்றவர்கள் அற்புதங்களைச் செய்வார்கள் என்றும் முக்காலங்களையும் அறிந்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

நம் காலத்து ஞானிகள் எவருமே அற்புதங்கள் செய்தவர்கள் அல்ல என்ற அப்பட்டமான உண்மைகூட இவர்களுக்கு உறைப்பதில்லை. அவர்கள் மேலும் அற்புதங்களை சாத்தித்தான் இவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. மெய்ஞானம் என்பது தலையில் கைவத்து வேலை மாற்றம் வாங்கித்தருவது என்று நம்பும் ஒருவரிடம் என்ன பேச முடியும்?

இத்தகையவர்களால் திடீரென நம் சூழல் நிறைந்திருக்கிறது. இவர்களை பயன்படுத்துபவர்கள் பிலுபிலுவென கிளம்பி வருகிறார்கள். நம் சூழலில் இப்போது யோகம் தியானம் பற்றிய பேச்சுகள் அதிகம் கேட்கின்றன. அவற்றை செவிவழியாக கேட்டு குத்து மதிப்பாக சித்தர் குறித்த புராணக்கதைகளுடன் இணைத்து தங்களுக்கு சித்தி கிடைத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஒருவரையேனும் நான் தினமும் சந்திக்கிறேன். தியானம் செய்தேன் கண் நடுவே ஒளி தெரிந்தது என்கிறார்கள். கைவிரல்களில் மின்சாரம் வந்தது என்கிறார்கள். ஆகாயத்தில் மிதந்தேன் என்கிறார்கள். சிலர் உண்மையாகவே அந்த பிரமை கொண்டு அதை சொல்கிறார்கள்

தியானம், யோகம் என்பதற்கும் இந்த மோடிமஸ்தான் வேலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அணிமா முதலிய சித்திகளுக்கும் ஞானம் என்பதற்கும் சம்பந்தமில்லை– அவையெல்லாம் வெற்று தந்திரங்கள் அல்லதுசவடால்கள். மெய்ஞானம் என்பது ‘அதுவாதால்’ அதை சாட்சாத்காரம் என்கிறன நூல்கள். அதற்கான பாதை எளிதல்ல. அதை ஷுரஸ்யதாரா என்கிறது உபநிடதம். சவரக்கத்தியின் நுனிக்கூர்மை மேல் நடப்பது போன்றது அது.

அதை உணர்பவனுக்கு ஒருபோதும் இந்த உலகத்தின் இயற்பியல் விதிகளை மீற முடியும் என்ற பிரமையோ அதற்கான ஆர்வமோ எழாது. இவ்விதிகளுக்கு விதியாக உள்ள ஒன்றைநோக்கி அவன் குவிவான். அதுவே அவனாவான்

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 27, 2009

முந்தைய கட்டுரைவீரப்பன், அன்புராஜ் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்பற்றா நாராயணன் – மேலும் நான்கு கவிதைகள்