கல்வியழிதல்:ஒருகடிதம்

மதிப்பிற்குறிய ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் கல்வியழித்தல் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு செய்தி என்னுள் குழப்பத்தை உருவாக்கியது.நான் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளும் முறையைக் கேள்விக்குள்ளாக்கியது.நான் ஒரு புதிய விஷயத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது அதற்கு முன் எனக்கு பரிச்சயமான ஒரு விஷயத்துடன் ஒப்பிட்டு அதை புரிந்துகொள்கிறேன்.அது எனக்கு எளிதாக இருக்கிறது.அந்த விஷயத்தை எதனுடனும் ஒப்பிடாமல் புரிந்துகொள்ள முயலும் வேளையில் அதே விஷயம் சற்று கடினமாகக் காட்சியளிக்கிறது.உங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றிகளுடன்

பாலாஜி

 

அன்புள்ள பாலாஜி

நீங்கள் புரிந்துகொள்ளும் விதமே இயல்பானது. அனைவரும் செய்வது. நாம் அனைவருமே தெரிந்த விஷயங்களை வைத்தே தெரியாத விஷயங்களை புரிந்துகொள்கிறோம். அதன்பொருட்டே உவமை என்ற முறையை மனிதன் கண்டுபிடித்தான். ஒன்றை நாம் அறியும் முறை முன்று படிகள் கொண்டது என்பது இந்திய ஞான மரபு. 1. பிரத்தியட்சம் [ புலன் சார் அறிவு] 2. அனுமானம் [ஊகித்தல்] 3. சுருதி [முன்னரே இருக்கும் அறிவுடன் இணைத்துக்கொள்ளுதல்] நான்காவதாக உவமையையும் சேர்த்துக்கொள்ளும் சிந்தனை மரபுகள் இந்தியாவில் உள்ளன

இந்த வழிமுறையை நான் தவிர்ப்பது அனேகமாக சாத்தியமல்ல.

ஆனால் மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் இவ்வியல்பே பெரிய தடையாக அமையும் என்று சொல்லப்படுகிறது. புதிய அறிதல் எதையும டையாமல் பழைய அறிதலின் நீட்சியாக எல்லாவற்றையும் அது ஆக்கிவிடும். ஆகவே ஏற்கனவே கற்றவற்றை அழித்தபின் கற்றல் என்ற வழிமுறை முன் வைக்கப்படுகிறது

நாம் மிக அடிப்படையான ஒன்றைக் கற்கும்போது அது நாம் ஏற்கனவே கற்ற ஒன்றை அழித்திருப்பதை கொஞ்சம் கழித்து புரிந்துகொள்ள முடியும். ஆகவே கல்வியழிதல் எப்போதுமே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதே என் தரப்பாகும்
ஜெ

 கல்வியழித்தல்

On 5/7/09, பாலாஜி <[email protected]> wrote:

முந்தைய கட்டுரைபாலகுமாரன்
அடுத்த கட்டுரைஅயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்