யாப்பு

[நகைச்சுவை]

 

images

ந்நாட்களில் குழந்தைகள்மேல் பெரியவர்களின் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லையாதலால் எட்டாம் வகுப்பிலேயே யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். துடிப்பான பையன்களாக இருந்தோம். தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு புன்னகையுடன் வகுப்புக்கு வந்து சாக்குக்கட்டியால் கரும்பலகையில் “யாப்பு” என்று எழுதி அடிக்கோடிட்டதுமே சிரிப்பு ஆரம்பம். எங்கள் பள்ளியில் இயல்பாகப் புழங்கி வந்த ஒரு சொல்லுக்கும் அதற்கும் அரைக்கணமே வேறுபாடு.

“லேய் என்னலே சிரிப்பு, மயிராண்டி. செருப்பால அடிச்சி தோல உரிச்சிருவேன்.சிரிப்பு… சிரிக்கப்பட்ட மோரைகளைப் பாரு…ஏலே உனக்க அம்மைக்க ஆமக்கன் இஞ்ச துணியில்லாம நிக்கானேலே? வாய மூடுங்கலே நாறப்பயக்கலே… வெவரமும் கூறும்கெட்ட இந்த ஊருல என்னைய வேலைக்குப்போட்ட தாயளிய மொதல்ல போயி மண்டையில அடிக்கணும்…காலையில எந்திரிச்சு வந்திருதானுக வாயையும் களுவாம…” என்று ஏசுஞானமரியதாசன் முன்னுரை வழங்கிவிட்டு நேராகப் பாடத்திற்குள் புகுந்தார்.

“ஓரோ பயக்களும் கண்டிப்பாட்டு யாப்பு அறிஞ்சிருக்கணும்…” என்றார் ஏசுஞானமரியதாசன்.

“ஓம் சார்!” என்றான் தங்கச்சன்.

“என்னலே ஓமு?”

“சார் சொன்னது உள்ளதாக்கும்”

ஏசுஞானமரியதாசன் தலைசரித்து அவனைப்பார்த்தபின் “என்னத்துக்கு?”

“நாளைய தலைமுறைக்கு சார்!”

தங்கச்சன் எஸ்எஃப்ஐ உறுப்பினர். சகாவு ஹேமச்சந்திரன் நாயராலேயே பெயர்சொல்லி அழைக்கப்படும் தகுதி கொண்டவன்.

“இரிடே தங்கச்சா…அப்பம் சங்கதி அதாக்கும். நாளைய தலைமுறையை உருவாக்குததுக்கு யாப்பு அத்தியாவிசியமாக்கும்.கேட்டுதால மயிராண்டிமாரே…இருந்து பாக்கானுக பாரு…இவனுக கண்ணைக்கண்டாலே எனக்கு ஒருமாதிரி கேறிவருதே…”

அடுத்த சொல்லாக “அசை” என்று எழுதியதுமே நான் அதை என் நோட்டில் அவசரமாக எழுதினேன்.

“…ஆகா எளுதிப்போட்டாம்லே…கரடிக்க மகன் எளுதிப்போட்டாம்லே..என்னலே எளுதினே… ?”

“அசை”

“அசைண்ணா என்னலே அர்த்தம்?”

“துணி காயப்போடுத கயிறு சார்”

“அய்யட, உடுத்தா வேட்டி கிளிச்சா கௌபீனம்னு சொல்லுத மாதிரி…. வந்து சேருதானுக…ஏல மலையாளத்து மயிரான்லாம் வந்து தமிளு படிக்கல்லேண்ணு இஞ்ச எவன்லே கேட்டான்? இங்கிணயுள்ளவன் படிச்ச தமிளுக்கே நாடு நாறிட்டு கெடக்கு… ஏலே அசைண்ணா….”

“மாடு அச போடுகது சார்” என்றான் ஸ்டீபன்.

வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஏசுஞானமரியதாசன் ஸ்டீபனை உற்றுப்பார்த்து சில நிமிடங்கள் நின்ற பின் மென்மையான குரலில் “லே மக்கா, உனக்க அப்பன் ஞானதாஸு கள்ளுக்கடையில வடைண்ணு நெனைச்சு வேதக்கண்ணுக்க மூக்குபொடிக்குப்பிய எடுத்துக் கடிச்சவனாக்கும். நீ அதைச் சொல்லல்லேண்ணாத்தான் நான் நிண்ணு பாக்கணும். வித்தில உள்ளதுல்லா கொத்துல நிக்கும்?…”

பெருமூச்சுவிட்டு “ஆரும் தோக்குக்கு உள்ள கேறி வெடி வைச்ச வேண்டாம். பூர்வஜென்ம பாவத்தினாலே ஒருத்தன் இஞ்ச கெடந்து மூச்சறுக்குத எளவ கேட்டு மனசிலாக்கிப் படிச்சாப்போரும்…” என்றபின் “அசைண்ணா வார்த்தைக்க ஒரு துண்டாக்கும்.இப்பம் இந்த ஆயிரங்காலட்டய நாம நாலஞ்சா வெட்டினாக்க ஓரோ துண்டும் ஒத்தைக்கு ஊர்ந்து போவும்லலே, அதைமாதிரி ஒரு வார்த்தைய நாம வெட்டினாக்க தனியாட்டுபோற துண்டுகளாக்கும் அசைண்ணு சொல்லுதது…”

எனக்குப் பளீரென்று மின்னியது.

ஏசுஞானமரியதாசன் “… ஆனா போற போக்குல பீடிக்கடையில தடம் போயில நறுக்குதது மாதிரி போட்டு வெட்டப்பிடாது. அதுக்கொரு கணக்கு இருக்கு. அந்தக் கணக்கயெல்லாம் அந்தக்காலத்தில சோலிமயிருகெட்ட பண்டிதனுங்க தேமா புளிமாண்ணு வாயி புளிச்சா மாங்கா புளிச்சாண்ணு தெரியாம எளுதி வச்சிருக்கானுக. அத இப்பம் உங்ககிட்ட சொன்னா அதவச்சுகிட்டு புதிசாட்டு நாலஞ்சு கெட்டவார்த்தைய உருட்டி வைப்பிய…அதனால நான் ஒரு கணக்காட்டு சொல்லுதேன்…லே சாம்ராஜு அங்க என்னலே முளிக்கே…முளி செரியில்லியே..”

சட்டென்று ஒரே வகுப்பில் பாடல்களை அசைபிரிக்கும் கணக்கை இலகுவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார் ஏசுஞானமரியதாசன். அந்த ஒரு மணிநேரத்தில் கற்ற கணக்கு இந்தநாள் வரை செய்யுட்களைப் படிப்பதற்குக் கை கொடுக்கிறது. யாப்பை முதலில் அசைபிரிக்கக் கற்றுக்கொடுத்தபடி தொடங்கவேண்டும் என்பது பழைய கவிராய மரபின் வழிமுறை. அசைபிரிக்கத் தெரிந்ததுமே பழந்தமிழ்ப் பாடல்கள் பிசுக்கு நீக்கப்பட்ட கண்ணாடி வழியாகத் தெரிவதுபோலத் தெளிவடைகின்றன. கண்ணில் பட்ட அனைத்துச் சொற்சேர்க்கைகளையும் பாடல்களையும் அசைபிரிக்க ஆரம்பித்தோம். ‘ஐந்து கரத்தனை யானைமுகத்தனை’ முதல் ‘சும்மா இருந்தா அம்மைதாலி அறுப்பேன்..’ போன்ற நாட்டுப்புற இலக்கியங்கள் வரை.

நாலாம் நாள் ஏசுஞானமரியதாசன் மீண்டும் வகுப்பில் யாப்பு தொடங்கியபோது பலரும் பிரகாசமாக அதை எதிர்கொண்டோம். “ஏம்லெ எல்லா கெட்டவார்த்தைக்கும் அசைபிரிச்சாச்சாலே….இல்ல இனி வல்லதும் பாக்கி உண்டா?”.

முனகல் ரீங்கரிக்க “என்னலே சத்தம்?”.

“பிரிச்சாச்சு சார்…”

“லே ஜெயமோகன் எந்திரி, பேரு வச்சிருக்கான் பாரு கரடிநாயரு, லே உனக்கு வல்ல சிண்டன் கோரன் கடுத்தாண்ணு நல்ல நாயருக்க பெர வச்சா என்னலே..? செரி அதுபோட்டு, தலையெளுத்துல்லா பேரா வந்து சேருது…நீ சொல்லுலே… தேமாங்காய்ண்ணா என்ன வார்த்தையாக்கும்?”

நான் வெட்க,”சார் அவன் நல்ல பயலாக்கும், கெட்ட வார்த்தை சொல்ல மாட்டான்…” என்றான் ஜெபக்குமார்.

“கெட்டவார்த்தை சொல்லாத நாயரா? என்னலே புதிய கதயாட்டிருக்கு?”.

“நான் சொல்லுகேன் சார்”

“ஆமா. நீ வெளைவே. நீ டீக்கனாருக்க பயல்லா..அவரு சிலுவையிட்டு கும்பிடுத சமயத்திலயும் வாயில கெட்டவார்த்தையில்லா சொல்லுவாரு… நீ அதைச் சொல்லணும். நான் அதை நிண்ணு கேக்கணும்…செரி,சகல தேமாங்காக்களும் கேளுங்க, இண்ணைக்கு அடுத்த பாடம். சீர்!”

நான் சீர் என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டேன்.

“ஒரு பாட்டில இருக்கப்பட்ட ஒரு வரிய நாம ஒரு மூங்கில்னுட்டு வைப்போம். என்னலே?”

“முளை சார்”

“ஆமா. முளை. அதில இருக்கப்பட்ட ஒரு கணுவாக்கும் சீருங்கியது. வல்லதும் மனசிலாச்சாடே புளிமாங்கா?”

“ஆமா சார்”

“என்ன புளிமா மனசிலாச்சுது?”

“திருக்குறளிலே ஏழு கணு இருக்கும் சார்!”

“அடிச்சான்பாரு லக்கி பிரைஸ்…உனக்க அப்பன் கரடி பாகுலேயன்பிள்ள கோமணம் அவுத்த நேரம் கொள்ளாம், கேட்டியாலே? சீராத்தான் இருக்கு…”

ஏசுஞானமரியதாசன் கரும்பலகையில் “மங்காத சீரகத்தைத் தந்தீரேல் வேண்டாம் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே” என்று எழுதி அதை என்னிடம் சீர் வகுத்து அசைபிரித்து எழுதச்சொன்னார்.

நான் எழுதி முடித்ததும் “அம்பிடுதான்லே யாப்பு. இனி காசுள்ளவனைப்பற்றிப் பாட்டெளுதிக் கும்பி நனைச்சலாம். கோப்பு இருந்தாப் பெண்ணடிகளைப்பத்தி பாட்டெளுதி அவளுகளை வளைச்சும் எடுக்கலாம்…என்னலே? ஆனா பாதிக் கவிஞனுங்க கூவிளங்காய்களையாக்கும் எளுதுகது…”

பையன்கள் சிரித்தார்கள்.

“நாலு இல்லேண்ணா எட்டு இல்லேண்ணா பதினாறு சீரு சேந்தா ஒரு அடி…” என்றார் ஏசுஞானமரியதாசன். “அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ணுட்டு அம்மி நகருததுவரை பாடிட்டிருக்கப்பிடாது. வெண்பாவுக்கும் விருத்தப்பாவுக்கும் எல்லாம் நாலு அடியோட நிறுத்தணும். அதிலயும் வெண்பாண்ணாக்க இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க சமைஞ்ச குட்டி தண்ணிக்குப் போறாமாதிரி ஒரு இதுவாட்டு இருக்கணும் கேட்டியாலே?”

பிறகு தனக்குத்தானே ஒரு சிரிப்பு “பின்ன, சைவசித்தாந்தம் வல்லதும் பாடணுமானா கையில கழி வச்சிருக்கது நல்லது. ஒரு காட்டுவழி பயணமுல்லா? நாய்நரி குரைச்சு வரும்லா? அதுக்காக்கும் கழிநெடிலடிண்ணு ஒரு எனம் வச்சிருக்கு…அது பிறவு பாக்கிலாம்…”

அடுத்தது தொடை “தொடைண்ணா என்னலே?” திரும்பி எங்களைப்பார்த்து “சிரிக்கானுக பாரு…லே உன்னையெல்லாம்..இல்ல எனக்க வாயால அதைச் சொல்லமாட்டேன். குருசாபம் என்னத்துக்கு?” என்ற பின் “தொடுக்குதது தொடை. ஏல,தொட்டுக்கிட்டிருந்தா அது தொடை. ரெண்டும் போயித் தொடுத எடம் முக்கியம்லே… என்னலே?”

“ஆமா சார்”

“நீ கண்டே…செரி போட்டு. அப்பிடித் தொடுகதுக்கு ஒரு கணக்கு இருக்கு. சும்மால்ல.. ஏன் அப்பிடி ஒரு கணக்கு வச்சிருக்கான்?”

வகுப்பை உற்று நோக்கிய பின் ஏசுஞானமரியதாசன் “லே குட்டப்பன் ஆசாரி சொல்லுலே. எதுக்குலே கணக்கு?”

“கணக்கு இல்லேண்ணா கோணலா இருக்கும் சார்”

“பாத்தியா ஆசாரிண்ணா ஆசாரிதான். அவன் மூளை, அது வேற… அதாக்கும்லே காரியம். அழகுண்ணா என்னாண்ணு நெனைக்கே? அழகுண்னா கணக்குலே.. இந்த மேசைக்க நாலு காலும் அளவோட கணக்கா இருந்தா அது மேச. இல்லேண்ணா அது வெறகு… கணக்குகள் செரியா இருந்தா கண்ணுக்கு அளகு. காதுக்கு அளகு. நாக்குக்கு அளகு. மனசுக்கு அளகு. எரிசேரிக்கு ஒரு உப்புண்ணா புளிசேரிக்கு உப்பு வேற கணக்கு. ஏல, எத்தன வருசம் இருந்து திண்ணுபாத்து நாயம்மாரு அதை கண்டுபிடிச்சிருப்பானுக? சிந்திச்சுப் பாக்கணும். மூப்பிலான்மாரு சொல்லித்தாற கணக்குகளில இருக்கப்பட்டது அவனுக தலைமுறை தலைமுறையா அனுபவிச்சு அறிஞ்ச அழகுகளாக்கும்….”

ஏசுஞானமரியதாசன் உற்சாகமாகத் தொடர்ந்தார். “எந்த ஒரு உருப்படிக்கும் ரெண்டு கணக்குகள் உண்டு. ஒண்ணு அளவுக்கணக்கு இன்னொண்ணு தொடுப்புக் கணக்கு…ஏம்லே ஆசாரி?”

“ஆமா சார்”

“அதுதான்லே மக்கா கவிதைக்கும். இதுவரை அசை சீரு அப்டீண்ணு நாம படிச்சதெல்லாம் அளவுக்கணக்கு. இப்பம் தொடைண்ணு படிக்கப்பட்டது தொடுப்புக் கணக்கு. ரெண்டு கணக்கும் சேந்தா அதுக்குண்டான ரூபம் வந்துபோட்டு… இப்டி ஓரோ பாட்டுமுறைக்கும் ஓரோ கணக்கு இருக்கு கேட்டியளாலே?”

ஏசுஞானமரியதாசன் கவிதைமுறைகளுக்குள் புகுந்தார். “பண்டுகாலத்திலே வாத்தியான்மாரு பாடப்பட்டது ஆசிரியப்பாண்ணு ஆரும் நெனைச்சுக்கிடப்பிடாது. அது, சும்மா வெறும் வாயோட இருக்கதுக்கு பாடிப்பாப்பமேண்ணு பொதுவான விசயங்கள நீட்டிச் சொல்லுகதுக்குண்டான வடிவமாக்கும். கூறுகெட்ட ஆசாரி கலப்பை செய்யுகது மாதிரிண்ணு வையி. செத்தி நீட்டினாப்போரும், கலப்பை வந்திரும். இழுக்கப்பட்டது மாடுதானே. உப்பு-புளிக்கு ஆசாரிச்சி அகப்பை செய்யுகது மாதிரியாக்கும் வெண்பா. மூணுவரி சிரட்டை. முக்காவரி கோலு, அம்பிடுதான்லே… இது ரெண்டுக்கும் நல்ல ராகம் கெடையாது பாத்துக்க. ஆசிரியப்பாவுக்கு சும்மா சொல்லப்பட்ட சத்தம். அகவலோசைண்ணு சொல்லுவாக. கேட்டுப்பாத்தா ஒருமாதிரி ஒப்பாரிச் சத்தம் காதில விழும் பாத்துக்கோ..வெண்பாவுக்கு அறைதல் ஓசை. என்னத்த அறைதல்? வண்ணாத்தி துணி வெளுக்குத சத்தம் இல்லலே மக்கா….உறப்பிச்சு சொல்லுத சத்தம். இந்நா பிடிலே மயிராண்டி வெண்பா–ண்ணு எடுத்து வச்சா அது வெண்பா..”

ஒரே நாளில் சரசரவெனப் பாடல் வகைகளுக்குள் போய் முடித்தே விட்டார். எதிலும் குழப்பமே இல்லை. அவரது மிகச்சிறந்த அறிவுரை யாப்புக்காக மனக்கணக்கு போடக்கூடாது. வகைக்கொன்றிரண்டாகப் பாடல்களை மனப்பாடம் செய்து வைத்து வேகமாக அவற்றை வாய்க்குள் சொல்லிப் பார்க்க வேண்டும். அதே மெட்டில் சரசரவென எழுதினால் பெரும்பாலும அந்தப் பாடல் வகை வந்துவிடும். பாடலை நேரடியாக எழுதக்கூடாது. சொல்லியபின் எழுதினால் யாப்பு சீராக வரும். அதாவது நம் கவிதை நம் காதுக்குக் கேட்க வேண்டும். யாப்பைக் காதுதான் நன்றாக உணரும். எழுதியபிறகு மெதுவாகத் தளைதட்டுகிறதா என்று சரிபார்த்தால் போதும்.

எங்கள் வகுப்பிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பீரிட்டுக் கிளம்பினோம். எதற்கும் வெண்பா, ஆசிரியப்பா. கார்பன் டையாக்சைட் தயாரிப்பது பற்றி நான் எழுதிய எட்டு விருத்தப்பாக்களைக் கேட்டு அறிவியல் ஆசிரியர் வில்லியம் என்னை பெஞ்சுமேல் ஏறி நிற்கவைத்து முன் இருக்கை கார்த்தியாயினியின் உருவாகிவந்த முலையிடைவெளியை பார்க்கவைத்தார். தங்கச்சன் தனித்தமிழில் எழுதிய “தாயோளி என்றாலும்…” எனத் தொடங்கும் வெண்பா பலகாலம் அப்பிராந்தியத்தில் புகழ்பெற்றிருந்தது.

வண்ணார்காவு கண்டன் சாஸ்தாவைப்பற்றி ஒரு காவியம் எழுதவேண்டுமென ஆசைகொண்டு நான் இருநூறுபக்க நோட்டு வாங்கி முந்நூறு விருத்தங்களும் நாற்பது வெண்பாக்களும் எழுதினேன். அதைத் திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் அரங்கேற்றுவதைப்பற்றி விரிவாகக் கற்பனைசெய்தேன். அக்கற்பனை எளிதாகவும் சுகமாகவும் இருந்ததனால் காவியம் எழுதுவது நின்று போனது.

“யாப்புண்ணாக்க ஒரு சுக்கும் இல்ல கேட்டுக்கோ. அஞ்சாம்கிளாஸ் கணக்கக் காட்டிலும் சுளுவாக்கும். அப்பம் எல்லாவனும் கவித எளுதீர முடியுமாலே? எல்லா ஆசாரியும் எல்லாம் செய்யுதான். நூற்றில ஒருத்தனாக்கும் உளிக்க ஒப்பம் மனசையும் ஆத்மாவையும் கொண்டு வாறவன்… அப்பிடிச் செய்த ஓரோ உருப்படியிலயும் செய்த ஆசாரிக்க ஆத்மாவு நிக்குதுலே… உருப்படியத் தொட்டா மண்ணடிஞ்ச அந்த ஆசாரியைத் தொட்டது போலயாக்கும். பாறசாலையிலே ஒரு நாயரு வீட்டிலே காலம் கழிஞ்ச அச்சு மூத்தாசாரிக்க உருப்படி ஒண்ணு இருக்குண்ணு சொல்லிக்கேட்டு நானும் பாகுலேயன் பிள்ளயும் நாராயணன் போத்தியும் குமாரசாமியுமாட்டு பாக்கப்போனோம். அச்சு மூத்தாசாரிய கேட்டிருக்கியளாலே?”

“ஆமா சார்”

“ஆருலே?”

“திருவட்டார் கோவில் மண்டபத்தக் கெட்டின ஆசாரி சார்…”

“ஆமா….அதைக்கண்டு மார்த்தாண்ட வர்மா மகாராஜா நீரே பெருந்தச்சன்னு சொல்லி அப்டியே காலில விளுந்து கும்பிட்டு தெட்சிணை வச்சாருண்ணு சொல்லு வழக்கு. பெருந்தச்சன் இந்த பாறசாலைத் தறவாட்டுக்கு ஒருக்கா வந்திருக்காரு. காட்டிலே ஒரு மூத்த பிலாமரத்தைப் பாக்கதுக்கு. சாய்ப்புவீட்டிலே அன்னாகாரம் கழிஞ்சு கிடந்து உறக்கத்திலே இருக்கிறப்ப அந்தவீட்டுக் கொளந்தை ஒண்ணு அங்கிண வந்து ஆசாரி மேலே கேறிக் களிச்சிருக்கு. ஒருவயசுப் பெண்குழந்தை. அத எடுத்து முத்தினவரு உளிய எடுத்து அங்க கிடந்த மரத்தில ஒரு களிப்பெட்டி செய்து குடுத்திட்டு போனாரு…அந்த குழந்தை வளந்து நூறுவயசு இருந்து செத்து அவளுக்க வழிப்பேரன்மாராக்கும் இப்பம் அந்தப் பெட்டிய வச்சிருக்கியது…”

“நீங்க பாத்தியளா சார்?”

“எவன்லே இவன்? பாக்காம பின்ன? பத்துசக்கறம் பணமிறக்கி பஸ்ஸு பிடிச்சு பின்ன மயித்துகதுக்கா போவானுக?” மந்தகாசத்துடன் மேஜைமேல் அமர்ந்து”பன்னிரண்டு கண்ணால பாத்தேன்லே… பத்து வெரலுக்க கண்ணும் ரெண்டு முகத்துக் கண்ணுமாட்டு… பெருந்தச்சன் சும்மா ஒரு அர நாழிகையிலே செத்திக் குடுத்திட்டுப்போன களிப்பெட்டி. ஆனா அதுபோல ஒண்ணு இன்னொருத்தன் செய்யமுடியாது. அத அப்பிடியே அளந்து எல்லா அளவும் கணக்கும் செரியாக் குறிச்செடுத்து அதே மரத்தில இன்னொருத்தன் செஞ்சாக்கூட அது இந்த களிப்பெட்டி மாதிரி இருக்காது’ என்றார்

‘லே, இது வேறலே…இதுக்க கணக்கு வேற. ஏலே கணக்கு நிக்கது ஜடத்திலே… கையில நிக்கும், மெய்யில நிக்கும், கல்லிலயும் மரத்திலயும் நிக்கும். கல்லும் மண்ணுமாலே ஒலகம்? பரலோகத்தில இருக்கப்பட்ட பரமபிதா கண்ட சொப்பனமுல்லாலே இந்த ஒலகம்? சொப்பனத்துலே ஏதுலே கணக்கு? ஆனா பாரதி சொல்லுகான், மண்ணைக் கட்டினா விண்ணைக் கட்டலாம்ணுட்டு. அதாக்கும் மக்கா சூச்சுமம். மண்ணைக் கட்டுத கலை தெரிஞ்சவனாக்கும் பெருந்தச்சன், தாயளி விண்ணையும் கட்டிப்போட்டான். கணக்கறிஞ்சவன் ஆசாரி. கணக்கு நெறைஞ்சவனாக்கும்லே பெருந்தச்சன்…”

“செரிலே மக்கா…இண்ணையோட நாம யாப்பு நிறுத்துகோம். பெரிய பரிச்சை வரப்போவுது. பாடம் கொறே கெடக்கு பாத்துக்கிடுங்க. பின்ன, இப்பம் ஒண்ணு சொல்லுகேன். நம்ம பாஷையிலயும் பல பெருந்தச்சனுங்க உண்டுலே… தேவசில்பி மயன் கண்டாலும் கையெடுத்துக் கும்பிடுத தச்சனுக. ஆனாக்க தச்சனுக்கெல்லாம் தச்சன்னா அவன் கம்பனாக்கும். கம்பராமாயணத்த நீங்க படிக்கணும்லே மக்கா.. இப்பம் சொன்னா உங்களுக்கு மனசிலாவாது. இடுப்புக்குக் கீழயாக்கும் சந்தோசம் இருக்குண்ணு நெனைச்சிட்டு அலையுத பிராயம்… லே மக்கா அதெல்லாம் எண்ணை தீந்து அணையுத வெளக்குலே… நெஞ்சுக்குள்ள உள்ள வெளக்குக்கு ஆத்மாவாக்கும் எண்ணை கேட்டுக்கிடுங்க. கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்துவுக்க மெய்யான வசனங்களைப் படியுங்க, அது ஆத்மாவுக்குப் பிரகாசம். கம்பனுக்க பாட்ட படியுங்க, அது ஆத்மாவுக்கு மதுரம்….லே இப்பம் ஒண்ணு சொல்லுதேன், கம்பனைப் படிச்சவனுக்கு பின்ன ஜீவிதத்திலே துக்கம்ணு ஒண்ணு இல்லலே…”

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Aug 8, 2012 @ 0:00

முந்தைய கட்டுரைசித்தாந்தம்
அடுத்த கட்டுரைசுஷீல்குமாரின் சுந்தரவனம்- கா.சிவா