பின் தூறல்:கடிதங்கள்

subbulatchoumi r 
to me
show details
 Apr 21 
அன்புள்ள ஜெமோ,

இதோ இப்போதுதான் “பின் தூறல்” கடிதத்தி்ல் உங்கள் பதிலை வாசித்தேன். கீழ்கண்ட வரிகளை விட்டு மனம் நகரவேயில்லை..

//

நம் ஆசைகளுடன் எப்போதுமே அகங்காரமும் இணைந்து கொள்கிறது. நீங்கள் மறுத்த வேலையை இன்னொருவன் செய்தால் அவன் சரியாகச்செய்யக் கூடாதென உங்கள் மனம் விழையும். அது தீய எண்ணத்தால் அல்ல. மாறாக அவ்வேலையை இன்னொருவன் திறம்படச்செய்வதென்பது உங்கள் இருப்பை மறுப்பதாகும். மனிதர்கள் ஒவ்வொரு கணமும் விழைவது தங்கள் இருப்பை. தங்கள் இருப்பின் இன்றியமையாமையை.//
கடந்த சில நாட்களாக என் மனதில் நடக்கும் போராட்டத்தின் சாரத்தை அப்பட்டமாக படம் பிடித்துள்ளீர்கள். அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவர் நான் செய்யவே இயலாது[infeasible] என மறுத்த வேலையை சுலபமாக செய்து விட்டார். அவர் செய்து முடிக்கும் வரை அது சரியாக வரக்கூடாது என உண்மையாகவே எண்ணினேன். பின் அப்படி எண்ணியதை எண்ணி கூசிகுறுகினேன். எனக்கு திறமை குறைந்து விட்டதா? இனி எனக்கு அதே போல் வேலைகள் செய்ய தரமாட்டார்களா? என் மேல் நம்பிக்கை குறைந்து விடுமா? என

மனதில் என்னன்னவோ எண்ணங்கள்.
இது மனித இயல்பே, இருப்பை

தக்க வைக்கும் வேட்கையே என புத்திக்கு புரிந்தாலும் மனம் அரித்து கொண்டே இருந்தது. ஏனோ உங்கள் வரிகளை படித்தபின், மனம் சாந்தமடைகின்றது.
இப்போது இவ்வரிகளே மனம் முழுவதும் நிரம்பியிருக்கிறது.
கண்ணாடி வரிகளுக்கு மிக்க நன்றி!
ரா.சுப்புலட்சுமி
 
 

 

 

அன்புள்ள ரா.சுப்புலட்சுமி

தாமதமான கடிதம். பயணங்கள். பின்னர் ஈழப்பிரச்சினை உருவாக்கிய சோர்வு. கடிதங்கள் கிட்டத்தட்ட 1000 சேர்ந்துவிட்டன. மெல்லமெல்ல பதில் அனுப்புகிறேன்

ஒன்றை கவனித்திருப்பீர்கள், நம்முடைய மன சஞ்சலங்களில் பெரும்பகுதி நாம் சற்றே கடந்து சிந்திப்பதனால் வருவது. ஓடுகிறநாய்க்கு நாலைந்து முழம் தள்ளி எறிகிறோம். பெரும்பாலான கவலைகள் நாம் அக்காலகட்டத்தைக் கடந்ததும் எவ்வளவு அபத்தமானவை என்ற எண்ணம் ஏற்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்தும்

கவலைப்படுவது என்பது ஒரு மனப்பழக்கம். கவலைப்படாமல் இருக்க திட்டமிட்டே கற்றுக்கொள்ள முடியும். கட்டணம் வைத்து கற்றுக்கொடுக்க முடியும். ஆனால் நம் ஆட்களுக்கு கவலைப்படாமல் வாழ்வது அவ்வளவாக பிடிக்காது என்று நினைக்கிரேன். கவலயுடன் இருப்பது என்ற நிலையை நிறையபேர் உள்ளூர ரசிக்கிறார்கள்

ஜெ

 

வணக்கம் ஜெயமோகன் சார்,
தங்களுடைய பின் தூறல் கட்டுரை படித்தேன். ஒரு நட்பின் இழப்பின் காரணமாக நான் அப்படிப்பட்ட ஒரு தன்னிரக்க நிலையில் இருந்தேன்.  இழப்பு என்னால் மட்டும் சரி செய்யப்பட முடியாதது என்பதை உணர ஆரம்பித்த பொழுது அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை நிறுத்தினேன். என்னுடைய அந்த போக்கை உயர்வான உணர்ச்சி என்று நினைக்கிறேன் என்றும், என்னுடைய இருப்பின் இன்றியமையாமையை உணர்த்த நான் விரும்பினேன் என்று நீங்கள் சொல்வதை படித்தபின் உணர்ந்து கொள்ள முடிகிறது.

தனிப்பட்ட முறையில் அதை விட்டு வெளியில் வந்தாலும் உறவுகளை பற்றிய பொதுவான கேள்விகள் என்னை சுற்றி இருக்கின்றன. என்னால் நிராகரிப்பின் வலியை முற்றிலுமாக வெறும் அகங்காரம்தான் என்று ஒதுக்கிவிட முடியவில்லை. (நீங்கள் சொன்ன நாவலில் ஜீவன் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. தேவையில்லாமல் அது தன் உயர்வை காட்ட இன்னொருவரை பலி கொடுப்பது.)
பல சமயங்களில் முறிவுகள் பரஸ்பரம் விரும்பப்படுவதில்லை.  முறிவின் காரணமே ஒரு தரப்பின் அகங்காரமாக  இருக்கலாம்.  (அப்படி நினைப்பதே மறு தரப்பின் அகங்காரமா?? ) அந்த வேளையில் மறு தரப்பின் துன்பம் தவிர்க்க முடியாதது. முறிவுகள் முழுமையாக மறக்கப்பட வேண்டியவைதான் என்றால் நான் உறவுகளே அர்த்தம் இழப்பதாக நினைக்கிறேன்.  அது வெறும் தற்கால  சமரசம் தான் என்றும்,  நீண்ட கால அளவில் சம நிலையில் ஏற்படும் மாற்றமே முறிவு என்றும் பொருளாகிறது. என்னதான் வாழ்கை நிரந்தரம் இல்லாதது என்றாலும், வாழும் வரை சில நிரந்தரங்கள் எதிர் பார்க்கப்படுகின்றன. நான் பொதுவான கேள்விகள் என்று சொன்னாலும் இதன் அடிப்படைகள் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது என்பதை அறிவேன்.

நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. தோல்வியை ஏற்கமுடியாத வெறும் அகங்காரத்தின் வெளிப்பாடு என்று பதில் அளிக்காமல் இருக்கமாட்டீர்கள் என்று எதிர் பார்க்கிறேன். பதில் அளிக்கும் பட்சத்தில் பெயர் வெளியிட வேண்டாம்.

தி  -ன்

 

அன்புள்ள   தி  -ன்

தாமதமான கடிதம். மன்னிக்கவும்.

உங்கள் மனநிலையை நீங்களே ஆராய்வதே அதைப்பற்றிய தெளிவை மெல்லமெல்ல உருவாக்கிவிடும். பொதுவாக நம் மனநிலையை நாமே விலகி நின்று நோக்க முடியாத நிலையில்தான் நாம் அதில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். உங்கள் வரிகளின் தெளிவே உங்கள் ஆயுதம்.

பொதுவாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உறவுகள் என்பவை எங்கோ ஏதோ ஒரு புள்ளியில் முறிய வேண்டியவை, முறியாமல் தடுக்க முடியாதவை. இது குரூரமானதாக இருக்கலாம். ஆனால் உண்மை. எண்பது தொண்ணூறுக்கு மேல் வயதானவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் உறவுகளை விட்டு விலகிக்கொண்டே இருந்திருப்பதைச் சொல்வார்கள். பின்னுக்கு சென்று கொண்டே இருப்ப்வையே உறவுகள் நட்புகள்.ஒரு  தவிர்க்க முடியாத தன்மையை கடைசியில் சென்றடைகிறோம்

உறவுகள் பல வகையில் முறிகின்றன. பலவகைகளில் தேய்ந்தழிகின்றன. பலவகைகளில் காணாமல் போகின்றன. உறவுகள் முறிவதற்கான காரணங்களை நாம் பலவகைகளில் கற்பனைசெய்து கொள்கிறோம். நம் தவறு, பிறர் தவறு, சூழல், என்றெல்லாம். உண்மையில் அப்படி அல்ல. உறவுகள் காலத்தில் ஓடும் நீரில் மிதக்கும் சருகுகள் போலச் செல்கின்றன. சருகுகள் விலகுவதும் நெருங்குவதும் அவற்றின் கையில் இல்லை

காலத்தில் இருப்பதை உள்ளூர உணர்ந்திருந்தாலே போதும்.
ஜெ

 

வணக்கம் ஜெயமோகன் சார்,

காலமே எனக்கான பதிலை கொடுத்துவிடும் என்று நினைத்துதான் நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இருப்பினும் நீங்கள் தவிர்க்காமல் மறக்காமல் பதில் அனுப்பியதற்கு நன்றி.

உறவுகள் குறித்த என்னுடைய அளவுகோலை நான் மாற்றியாக வேண்டும் என்று நினைக்கிறேன். காலனைத் தவிர வேறு எதனாலும் உறவு முறிக்கப்படுவது அந்த உறவை அர்த்தம் இழக்க செய்யும் என்றே நான் நினைத்திருந்தேன். முறிவுகளை முற்றிலும் மறந்து விடுவதன் மூலம் அந்த உறவை வெறும் தற்கால சுயநல காரணத்துக்காக, ஏதேனும் ஒரு ஆதாயத்துக்காகவே வைத்திருந்ததாக எண்ணிக்கொண்டிருந்தேன். இனி தோற்றத்துக்கும் ஏதோ ஒரு காரணத்தால் வரும் முறிவுக்கும் இடையில் இருக்கும் பரஸ்பர அன்பையே உறவின் ஆதாரமாக கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். (என் வசதிக்காக அன்பை ஆதாயம் என்று கருதாமல் விட்டுவிடுகிறேன். )

மரணம் குறித்த எண்ணம் வாழ்க்கையை அர்த்தம் இழக்கச் செய்வதை எப்படி அனுமதிப்பது இல்லையோ, அது போல் முறிவு குறித்த எண்ணம் இருக்கும் வரை நட்பை பொருள் இழக்கச் செய்யாமல் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எந்தவித மனமுறிவும் இல்லாமலும் கூட காலத்தால் தேய்ந்தழிந்த உறவுகளை என் வாழ்க்கையிலேயே கூட நினைவு கூற முடிகிறது.  உங்களுடைய ‘நீர் மேல் சருகுகள்’ உவமை மிகவும் பொருத்தமானது. உண்மையை உணர்ந்து கொள்ள உதவுகிறது. இனிமேல் வரும் மனச்சோர்வுகளை அதுவே தீர்த்துவிடும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் கூறியது போல என் மனநிலையை வெளியில் இருந்து பார்த்ததன் மூலம்தான் குறைந்த பட்ச தெளிவை என்னால் பெற முடிந்தது. உங்களுடைய ஆத்மா பற்றிய கட்டுரைகள் அந்த பார்வையை எனக்கு தந்ததில் முக்கிய பங்காற்றின. அதற்கும் உங்களுக்கு நன்றி.

இன்னும் சில வரிகள்…
 
நான் உறவுகளை உருவாக்கிக்கொள்ளும் முறையே முறிவை பற்றி பேசும் தகுதி இல்லாதவனாக என்னை ஆக்குவதாக கூட உணர்ந்தது உண்டு.

சமீபத்தில் Citizen Kane என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் வரும் Kane -ஐ நோக்கி அவர் நண்பர் சொல்லுவதாக வரும் வசனம் இது … “You don’t care about anything except you. You just want to persuade people that you love ’em so much that they ought to love you back. Only you want love on your own terms. Something to be played your way, according to your rules. “

இந்த வசனம் எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. நான் ஏறத்தாழ இது போன்ற மன நிலையில் இருந்தேன். இதுதான் அகங்காரம் என்பதே ஒரு முறை ஜக்கி வாசுதேவ் கட்டுரை ஒன்றை படித்தபோதுதான் உணர்ந்தேன்.  ஏனென்றால் பொதுவாக நான்-எனது என்று சொல்வதே அகங்காரம் என்றும் முடிந்தவரை பேசும் போது அந்த வார்த்தைகளை தவிர்த்தாலே அகங்காரம் நீங்கி விட்டது என்றே புரிந்து வைத்திருந்தேன். பின்பு என்னுடைய ஒவ்வொரு செயலையும் கவனிக்க ஆரம்பித்தேன்.  அன்பு என்ற பெயரில் அடுத்தவர் மேல் என்னுடைய அதிகாரத்தை செலுத்துவதை கட்டுப்படுத்த ஆரம்பித்தேன். ஆனால் என்ன செய்ய இது ஏதோ தேர்வு எழுதி பெரும் பட்டம் இல்லையே. தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. 

கீதையில் வரும் இந்த எளிமையான அதே சமயம் சத்தியமான வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. (நான் ஆழ்ந்து படித்ததில்லை. படிக்க வேண்டும். விவேகானந்தர் மற்றும் உங்களுடைய விளக்கங்களை படித்திருக்கிறேன். பாரதியாரின் உரையை படித்திருக்கிறேன். ). “குந்தியின் மகனே! மனம் கட்டுவதற்கு அறியதுதான்  சலனமுடையதுதான். ஆனால் அதை பழக்கத்தாலும் விருப்பின்மையாலும் கட்டுப்படுத்திவிடலாம்.”

கடிதம் திசை மாறிவிட்டது என்று நினைக்கிறேன். உங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு வாசிப்போ திறமையோ இல்லாவிட்டாலும், உங்களுடைய பல கட்டுரைகளை ஏற்றோ முரண்பட்டோ கேள்விகள் பல எழும். நேரமும் தனிமையும் தயக்கமின்மையும் ஒருங்கே சேராததால் எழுதுவதில்லை. இனி தொடர்ந்து உங்களுக்கு எழுத முயற்சிக்கிறேன்.

தி  -ன்

பின் தூறல்

முந்தைய கட்டுரைநாகர்கோயில் மழை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைவரலாற்றை வாசிக்க…