அண்ணாச்சி:கடிதங்கள்

அன்புள்ள மோகன்,

எந்த ஒரு கதையிலும், கட்டுரையிலும் ஏதோ ஒரு வரி நம்மைப் பாடாய்ப் படுத்தும். உங்களின் எழுத்து அதில் கொஞ்சம் ஸ்பெஷல். ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் மனம் லயித்து கிடக்கும். ‘அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன்’ பற்றி தாங்கள் எழுதியுள்ள வர்ணனையில் ‘உயர் அழுத்த மின்சாரம் ஓடும் மெல்லிய கம்பி போன்றவர்’ என்னும் வரி ஒன்று போதும், அவரது சுபாவத்தைச் சொல்ல.  ‘வித்தியாசமான தோற்றமும் ஆளுமையும் கொண்ட ஆண்களை பெண்கள் சட்டென்று விரும்புவார்கள். கைவிட்டதிலும் ஆச்சரியமில்லை, அபப்டிப்பட்ட ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்வதில்லை’. இது போனஸ்.

நன்றி.

சுகா


அன்புள்ள ஜெ
அண்ணச்சியைப்பற்றிய உங்கள் சித்தரிப்பு அற்புதமாக வந்துகொண்டிருக்கிறது. அண்ணாச்சியை நேரில் சந்தித்து பேசியதுபோல இருக்கிறது. ஒரு மனிதரை அவரது முகம்,பேச்சு, தோரணையுடன் அப்படியே கண்முன்னாடி கொண்டுவந்து நிறுத்துவதற்கு தமிழில் உங்களுக்கு நிகராக எவரையுமே பார்க்க முடியவில்லை. சுந்தர ராமசாமி நினைவின் நதியில், நாஞ்சில்நாடனைப்பற்றி ‘கமண்டலநதி’ போன்ற நூல்கள் அந்த எழுத்தாளர்களை சந்தித்த அனுபவத்தையே அளிக்கின்றன. இந்த நினைவுக்குறிப்பில் பல வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருந்தேன். அண்ணாச்சி ‘யானை மேல்’ வரக்கூடிய காட்சியை பார்த்து சிரித்தேன். அண்ணாச்சியின் குணாதிசயத்தை வளர்த்திச் சொல்லாமல் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதேபோல பிற எழுத்தாளர்கள் சிந்தனையாளர்களைப்பற்றியெல்லாம் நீங்கள் நினைவுக்குறிப்புகள் எழுதினால் மிகச்சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன்

சண்முகம்

முந்தைய கட்டுரைஒருங்கிணைதல் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉயிர் எழுத்து விழா